93. தத்ரூபம் (சிசீ6) #ganeshamarkalam
மின்னாடி மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ். இப்ப கவர்ன்மென்ட் காலேஜ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ். 1852இல் ஆரம்பிச்சது. “ஓவியக் கண்காட்சி நடத்தரம். கலந்துக்க விரும்பரவா சமீபத்தில் வரைந்ததின் நகலை அனுப்பினா தேர்வு செய்வம். குறைந்த பட்சம் 5 ஓவியங்கள் காட்சியில் வைக்க அனுமதி, 15 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களுக்கு பரிசு. வியாபாரமும் செய்யலாம்.” நானும் அனுப்பிவச்சேன்.
என் பேர் ராகவன். கும்மோணம் ஆர்ட்ஸ் காலேஜ், சுவாமிமலை ரோட்டில் இருக்கே அதில் படிச்சு தேர்ந்தவனாக்கும். உருப்படியா படிப்பு வரலை, வரதை கத்துக்கட்டும்னு அப்பா விட்டூட்டர். இருட்டு கட்டிடமா, காவேரிக் கரையில் யாருமே போமாட்டா, நான் போனேனே. மனசில் இருந்த ஆசை அபிலாஷையெல்லாம் அங்கேதான் தீத்துக்க முடிஞ்சது. என்னெல்லாம் கத்துத் தந்தாங்கரேள்? தூரிகை பிடிச்சு வர்ணங்களை குழைச்சு ஓவியம் வரைவது, பென்சில் ஆன் பேப்பர், க்ளே சிற்பங்கள், இன்வெஸ்ட்மென்ட் கேஸ்டிங்க் முறையில் லோகசிற்பங்கள், இப்படி எல்லாத்துக்கும் பாடம். ஏதாவது 2இல் மேஜர் செஞ்சுக்கலாம். நான் ஓவியமும் உலோக பயிற்சியும்.
ஒருமுறை சென்னைலேந்து பேராசிரியர் வந்து எங்கள் படைப்புகளைப் பாத்து பாராட்டிட்டுப் போனது இன்னும் மனசில். பாஸார வரைக்கும் கவலையே இல்லாம இருந்துட்டு திடீர்னு வெளீலே வந்ததும் சம்பாத்தியத்துக்கு என்னனு நினைக்கரச்சே அப்பா தவறிப் போனர். அம்மாவும் ஒரு தங்கையும். அப்பா விட்டூட்டுப் போயிருந்த சொத்து வேணப்பட்டது, பத்திடும். ஆனா ஆம்பிளப் பிள்ளை ஆத்தில் சும்மாவா? “தங்கைக்கு வரன் பாக்கணும், நீயும் எதாவது உத்யோகத்தில் இருக்காய்னு சொன்னாத்தான் சம்பந்திப் பேர் நம்பளை மதிப்பாடா”. தங்கைக்கு கோவம்., “அண்ணா ஒண்ணும் வெட்டியா இல்லையாக்கும். வரவாளாத்தில் யாராவது ஒருத்தர் ஸ்லேட்ட எடுத்து பலப்பத்தால் ஒரு படம் போட்டுக் காமிக்கச் சொல்லு பாப்பம்?” என் பக்கம் பேசுவள்.
நல்ல வரன் கிடெச்சு அழகா குடுத்தனம் வைக்க விஜயவாடா போனா. உடனே போயும் போயும் தெலுங்கனுக்கா பண்ணி வச்சேள்னு கேக்கப்பிடாது. தெலுங்கான்னா மோசமா என்ன? நம்ப தியாகய்யர் கீர்த்தனை எ;ல்லாம் தெலுங்கில்தானே! எத்தனை சுந்தரமான பாஷை! அங்கேதான் நல்ல ஊறுகாய் தெரியுமோன்னோ? தமிழ் பிராம்ணா வேத்து மொழி பிராம்ணாள மட்டமா பெசப் பிடாது. மாப்பிள்ளைக்கு அங்கே போஸ்டிங்க். ரெயில்வேய்ஸில், “இத்தனை பெரீய வீடுடா”ன்னு அவர் குவார்டர்ஸ பத்தி சிலாகிச்சு சொன்னா தங்கை. “நீயும் அம்மாவும் வந்து எங்களோட 2 மாசம் தங்கிட்டுப் போணம்”. அப்பரம் மாப்பிள்ளை பெசரப்போ “அவசியம் வாங்கோ 4நா இருக்கா மாதிரி வாங்கோ!” 2 மாசம் ரெண்டே நிமிஷத்தில் 4நாளானதை கவனிச்சம். அப்பரமா அம்மா சொல்ரா, “ஆசையாக் கூப்பிட்டர்னு உடனே போய் நிக்கப் பிடாது. நீ மட்டும் வேணும்னா போயிட்டு வாடா.”
விஜயவாடாவில் எனக்கு என்ன வேலை? ஒண்ணுமில்லை. ஆசையா வளர்த்துட்ட தங்கை வாக்கப்பட்டுப் போன இடமெப்படீன்னு நேரில் போய் பாத்து தகவல் தெரிஞ்சுக்கணும்னு அம்மாவுக்கு ஆசை. “இங்கே வந்தாய்னா சுத்திப்பாக்க நிறைய. கிருஷ்ணா நதிக் கரையில் ஏகாந்தமான இடங்கள் ஓவியம் வரைய தோதா இருக்கு”. சரின்னு கிளம்பிப் போய் 1 வாரம் இருந்துட்டு சிலவுக்கு பணமும் தந்துட்டு வந்துட்டேன். அப்பரம் என் தங்கை ஒரு மருமாள பெத்துத் தந்தான்னும் அப்படி ஒரு குழந்தை என் மடியில் தவழப் பாத்ததும் நாமளும் கல்யாணம் செஞ்சுக்கலாம்னு அம்மாகிட்டே ஆசைய சொல்ல எனக்கும் பக்கத்துலேயே திருவாரூர் சம்பந்தமாப் போச்சு. பிள்ளை என்ன பண்ரார்னு கேட்டவா பதில் கேட்டுட்டு சொத்து எவ்வளவு இருக்குன்னு அடுத்த கேள்வி கேட்டு அதுக்கு சம்மதம் சொல்லிட்டா.
நான் படிச்ச ஆர்ட் ஸ்கூலிலேயே வாத்தியாரா அப்பரம் ஆனதும் அதில் வந்த சம்பளமும் கவுரவத்தை தந்துடுத்து. தங்கைக்கு நடந்து 4 ஆவது வருஷத்தில் எனக்கும் ஆனதில் அம்மாக்கு ரெம்பவே சந்தோஷம். அந்த மகிழ்சி பெருக்கா இல்லை மஞ்சக் காமாலையா தெரியலை அவளையும் சாரங்கபாணி அழைசிண்டுட்டர். நானும் தங்கை மாப்பிள்ளையும் ஒத்துமையா வந்துண்டும் போயிண்டும் அப்பரமா எனக்குப் பிறந்த பையனும் அவள் பொண்ணும் சந்தோஷமா விளையாடிண்டு. வந்தா சொல்லுவள். “உனக்கு பையன் பிறப்பான்னு தெரிஞ்சிருந்தால் என் குழந்தையை தள்ளிப் போட்டிருப்பேன்”. கதை படிக்கரவா உடனே அடுத்தது ட்ரை செய்யேண்டியது தானேன்னு கிளம்புவேள்.
வர வாரம் சென்னை போணம். என் ஓவியம் செலெக்ட் ஆகும்னு சந்தேகமே இல்லை. நாலு நகல்கள் அனுப்பியிருந்தேன். ஒண்ணில் கும்மோணம் மஹாமகக் குளமும் சுத்துவட்டார தெருக்களும். தத்ரூபமா இருக்கும். அடுத்தது காவேரி சக்கரப் படித்துரை. மூணாவது சாரங்கபாணி கோவில் ராஜகோபுரம். பாத்தா போட்டோம்பா. இல்லை ஓவியம்னு கீழே என் கையெழுத்தை காமிப்பேன். என் ஓவியங்களின் தனிச் சிறப்பு வரைஞ்சதா, கேமராவில் க்ளிக்கியதானு சண்டையே வரும். கடைசீயா வாரநாஸி காட். எல்லாம் ஹிந்து ஸ்தலங்களாவே இருக்கேம்பேள். நிறை பெண்ணோவியங்கள், அரசரவை காட்சிகள், பூக்கள் இயற்கை காட்சிகளும் இருக்கு. செலெக்ட் செஞ்சவா “நீங்க அனுப்பிச்சதைத்தான் கண்காட்சிக்கு கொண்டு வரணு,ம்னு இல்லை, உங்களுக்குப் பிடிச்ச 5 ஓவியங்களை அனுமதிக்கரோம், மேலும் கொண்டுவந்தா வியாபாரம் செய்யலாம். விலை நீங்க நிர்ணயித்து, விப்பதில் எங்கள் நங்கொடை நிதிக்கு 10% தந்துடணும்னு கண்டிஷன்.
ஒரு 20 படங்கள் சேஃபா கட்டி, சேதமில்லாம ரயிலில் கொண்டு போணம். செஞ்சுடலாம். கிளம்பியாச்சு. ஆத்தில் வரலை. “நீங்க போயிட்டு ஜெயமா வாங்கோ.” பொட்டு இட்டு விட்டு அனுப்பிச்சா திருவாருர்காரி.
20 ஓவியர்களே இறுதியா கலந்துண்டா. இந்தக் காலத்தில் ஓவியர்கள்னு சொல்லிக்க எத்தனை பெர்? சென்னை கல்லுரியிலியே மாணவர்கள் சேர்க்கை அபூர்வமா இருக்குன்னு பெசிண்டா. இப்படி கண்காட்சி நடத்தி எல்லாரும் பாத்தா ஆர்வம் வளரும்னு அரசாங்கமே மான்யம் தரதாவும். கண்காட்சி பத்தி வெளிநாட்டிலும் பிரகடனப் படுத்தியிருப்பா போலேருக்கு. ஜனவரியானதால் வந்த வெளிநாட்டு ட்யூரிஸ்டும் வந்தது ஆச்சர்யம். ஒவ்வொரு படத்துக்கும் ஓஹோ போட்டுட்டு படம் பிடிச்சிண்டா.
முக்கியமா என் ஓவியங்களில் அதிகமா பெசப் பட்டது ஆத்து வெள்ளத்துக்கு நடூலே சின்ன குழந்தையுடன் இடுப்பளவு தண்ணீரில் நிக்கும் அந்த பெண் ஓவியம்தான். முதல் வாரம் கண்காட்சி முடிஞ்சதும் அந்த ஓவியமே எல்லாராலும் பெசப் படவே அதை விவாதத்துக்கு எடுத்துண்டுட்டா, விவாதம்னா பக்கத்திலே இருக்கும் ஆடிட்டோரியத்தில் மேடையில் வச்சு 30-40பேர் உக்காந்துண்டு ஒவ்வொருத்தரா வந்து அதைப் பத்தி கருத்து தெரிவிச்சுட்டு அப்பரமா ஓவியக் கலையில் சிறந்த ஆர்ட்ஸ் காலேஜ் மாணவர்கள் 2 பேர் அதைப் பத்திப் பேசினதும் வரைஞ்ச நானும் ரெண்டு வார்த்தை அந்த ஓவியம் உருவான கதையச் சொல்லணும்.
என் ஓவியம் தேர்வானது பெருமைதானே! எல்லாரும் அதை எப்படி விவரிப்பா அதுலேந்து அவா என்னத்தை புரிஞ்சிண்டா, என்ன பாராட்டுகள் கிடைக்கும்னெல்லாம் மனசு அசைபோட ஆரம்பிச்சது. 11 மணிக்கு இந்த உரையாடல் ஏற்பாடு செஞ்சிருக்கவே, நான் வரத்துக்கு மின்னாடியே காலேஜில் ஓவியத்தை உள்ளே எடுத்துண்டு போய் ப்ராமினென்டா வெளிச்சம் போட்டு மேடையில் உசக்க வச்சிட்டு காமரா ஃபோகஸ் பண்ணி பெரீய ஸ்க்ரீனில் ப்ரொஜெக்ட் பண்ணிட்டா. ஆடிட்டோரியத்தில் எங்கேன்னாலும் படம் ஸ்பஷ்டமா தெரியும்.
அன்னைக்கு 80பேர் குழுமிட்டான்ன பாருங்கோ! நிறைய பேசினா, சிலதை இங்கே சொல்ரேன். ஓவியம் சிறுகதை மாதிரி இல்லை. கதையப் படிச்சுட்டு ஒவ்வொருத்தரும் வித விதமா புரிஞ்சிண்டு பேசுவது ஒரு வகைன்னா எதுக்காப்போல் முழு ஓவியமும் வச்சிருக்கப்போ எல்லாரும் பாப்பான்னு மறக்காம கண்ணுக்கு தெரிஞ்ச பரிமாணத்தை சொல்லணும். இல்லாத்தை இருப்பதா சொல்ரப்போ மத்தவா ஒத்துக்கணுமே!
ஒத்தரைப் போல் எல்லாரும் சொன்னது இந்த ஓவியம் தத்ரூபம் என்பதைத்தான். திரும்பத் திரும்ப அழுத்தமா அந்த வார்த்தை பிரயோகிக்கப் பட்டது. ஒருத்தர் “ஓவியரும் இந்த கலேஜும் மின்னாடி இல்லைன்னா இதை புகைப்படம்னு நினைச்சு விமர்சிக்காம போயிருப்பேன்”. இன்னொருத்தர் “புகைப்படம் கூட மிக நேர்த்தியான கேமராவ பயன்படுத்தி கைதேர்ந்த புகைப்படக் கலைஞர் எடுத்தாலொழிய இப்படி வந்திருக்காது!” அப்பரமாத்தான் ஓவியத்தில் உள்ள பிரஜைகளைப் பத்திப் பேச்சு ஆரம்பிச்சது.
“பெண், அவள் தாய், இடுப்பில் இருப்பது அவள் குழந்தை. இவளுக்கு 25ம் அவனுக்கு 3வயதும். நன்றாக வாழ்ந்தவர்கள் இப்பொழுது ஏனோ முகத்தில் அத்துணை விசனமும் ஏன் பயமும் தூக்கலா. அந்தப் பெண் முகம் சொல்லும் அவள் தீராத வேதனையில் இருக்கா என சொல்லலாம். அந்த பையனோ பயப்பட்டாலும் அம்மா இருக்கா பாத்துப்பா, என்ன நடக்கிரதுன்னு தெரியாத சலனம் முகத்தில் ஸ்பஷ்டமா வந்திருக்கு.” ஒருத்தர் “இந்த பிரஜைகளை மட்டும் பாத்தால் தவறு. அதை மீறி ஒண்ணை ஓவியர் படத்தில் வைத்துள்ளார். பேக்ரவுண்ட். இந்த ஓவியத்தில் முன் இருப்பவர்களைவிட பின்னூட்டமா பிரவாகமா ஓடும் நதி இங்கே நடக்கும் காட்சியின் வீரியத்தை அடித்துச் சொல்லவேயென நம்புகிரேன். இது ஏரியா இல்லை ஓடும் நதியா? எதுவானாலும் அகண்ட பெரீய நீர் நிலை வைத்து எதையோ சொல்ல விழைகிரார் நம் ஓவியர். இடுப்பளவு தண்ணீரில் குளிக்க இரங்கினாப்போல் தெரியவில்லை, இந்த பெண்ணின் முகத்தில் உள்ள சோகத்துக்கு பின்னால் கதை நிச்சயம் உண்டு”.
“எந்துர் பெண் இவள்? தமிழா தெலுங்கா கன்னடமா? நீர் நிலையை வைத்துப் பார்த்தா ஆந்திரநாடோ?” கடைசீயாக இன்னொருவர் எழுந்து சொல்கிரார் “கடந்துவிட்ட கதையை விட இந்த ஓவியத்தை பார்த்ததும் எனக்குத் தோன்றுவது என்னெவென்றால் இனிமேல் அடுத்ததாக என்ன நடக்கப் போகிரது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமெழும்படி ஓவியத்தை படைத்திருக்கும் அந்த கலைஞன் பாராட்டப்பட வேண்டியவன்”.
அதுக்கப்பரம் ஆர்ட்ஸ் ஸ்கூல் மாணவர்கள் ஓவியத்தில் பயன்படுத்தப் பட்ட வரைகலை டெக்னீக்குகளை விவரிக்க, உபயோகப்படுத்தின பொருட்களையும் சொன்னதும் அடுத்ததா என்னைப் பெச கூப்பிட்டா.
அன்னைக்கு விஜயவாடா போயிட்டு கும்மோணம் திரும்பி வந்ததும் 1 மாசம் பூரா மனசு எதிலும் ஈடுபாடில்லாம தவிச்சப்பரம் இந்த ஓவியத்தை நான் வரைந்தது எனக்கு மட்டுமே தெரியும். எல்லாத்தையும், இவா கிட்டே சொல்லியே ஆணமான்னு ஒரு கேள்வி மனசில் வந்துடுத்து. ஏன்னா இது கற்பனை ஓவியம் இல்லை. இது இத்தனை தத்ரூபமா அமைந்ததுக்கு பிண்ணணியில் நடந்த ஒரு சம்பவம் என் கண்ணால் பாத்தது. அதை மையப்படுத்தி வரையப்பட்டதுன்னு எனக்கு மட்டுமே தெரியும். வரையரப்போ எங்காத்து மித்தத்தில் தனியா நின்னது வாஸ்த்தவம், சம்பவம் நடந்தப்போ 6 பேர் கத்தியும் கம்புமா நிக்க நான் மட்டும் மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சிண்டு எதுவும் செய்ய முடியாதவனா வேடிக்கை பாத்திண்டிருந்தேனே.
விஜயவாடாக்கு தென்கிழக்கே தொட்லவெல்லூரு என்ற இடம். ஓவியம் வரைய இடம் தேடிண்டு மாப்பிள்ள பைக்கில் போயாச்சு. ஆத்துலேந்து 20கிமீ தள்ளி வந்துட்டேன். கிரிஷ்ணா நதி பிராவாகமா, அழகா பாக்கராவாள பயமுறுத்திண்டு. அதை வரையலாமான்னு யோசிக்கரச்சே என்னைத் தாண்டி இந்த பெண்ணும் இடுப்பில் குழந்தையுமா என்னத் தாண்டி ஓடிப்போய் தயங்காம நதியில் இறங்கரா. நிச்சயம் விபரீதம்னு புரிஞ்சிண்டவன், சித்தே என்னவாயிருக்கும்னு யோசிக்கரத்துக்கு மின்னாடி 6பேர் கம்பும் கத்தியுமா தொறத்திண்டு. இவளோ இடுப்பு முட்டிம் தண்ணீலே நின்னுண்டு விட்டுடும்படி கெஞ்சரா. வந்தவாளில் ஒருத்தன் அவனும் வீச்சரிவாளோட நீரில் இறங்க அவள் இன்னும் ஆழமான இடத்துக்குப் போய் அப்படியே நதியிலடிச்சிண்டு போக தாயும் குழந்தையும் மூழ்கி கொஞ்ச நாழீலே கண்ணில் தென்படவேயில்லை.
திரும்பி வரப்போ மரத்துக்குப் பின்னால் என்னை பாத்தவன் “இக்கடரா” கூப்பிட பயந்துண்டே போரேன். “தமிழா?” “ஆமாம்”. “எந்தூர்?” “கும்பகோணம்” “இங்கே பாத்ததை யாருக்கும் செப்பலேது. இவ ஒரு சூனியக்காரி. கண்டு பிடிச்சு தொரத்திட்டு வந்தம். கையில் மாட்டாம மூழ்கி செத்துப் பொச்சு. சிக்கியிருந்தா வெட்டிப் போட்டிருப்பம்.”
ஓவியம் தத்ரூபமா வந்ததுக்கு என் திறமை காரணம்தான். ஆனா இந்த கண்காட்சியில் இதை எப்படிச் சொல்ல? அன்னைக்கு ஒண்ணுமே செய்யாம தங்கைகிட்டே சொல்லிண்டு ஊருக்கு வந்துட்டதும் இந்த நினைவுகள் இன்னும் என்னை துங்க விடாம அலைக்கழிக்கும் பாரத்தை இறக்கி வைக்கவே இதை வரைஞ்சதை இவாளுக்கு சொல்லி என்னாப் போரது?
பிராம்ணாளுக்கு உடல் பலம் இல்லைதான். ஆனா அத்தனை புத்தியத் தந்திருக்காரே ஈஸ்வரன்? அதைப் பயன்படுத்தி அந்த சம்பவத்தை தடுத்து ரெண்டு உயிரைக் காப்பாத்தாத நான் இந்த ஓவியத் திறமைய வச்சிண்டு என்னத்தை செய்ய?
எல்லாத்தையும் இப்ப மேடையேறி சொன்னா என் கையாலாகாதத்தனமும் தத்ரூபமா வெளிப்படும்.
No comments:
Post a Comment