🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மீண்டும் ஸ்ரீ அகத்திய முனிவரின் நாடி சொல்லும் கதைகள் ஆரம்பம் பாகம் 2
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பகுதி – 1 இறைவன் இருக்கின்றான்
இந்த நாடி சொல்லும் கதைகள் என்பது ஸ்ரீ அகத்திய முனிவர் ஜீவநாடியில் தோன்றி சிலரது வாழ்வில் நடந்த கதைகளை சொல்ல சொல்ல தெய்வத்திரு அனுமந்தன் தாசன் ஐயா எழுதினார். இதேபோல் இப்போது மற்றொருவர் அந்த பாக்கியத்தை பெற்றுள்ளார். இந்தக் கதையும் இனிவரும் கதைகளையும் இன்னும் நிறைய செய்திகளையும் ஐயனின் அனுமதியோடு சொல்ல உள்ளார். அவர் சொல்வது போலவே மேலே படியுங்கள்.
நான் கடந்த 2 மாதத்தில் மூன்றாவது முறையாக திருப்பதி சென்று இருந்தேன். அப்போது சில அரசியல்வாதிகள் திருப்பதியில், “இங்கு அமர்ந்து ஜீவ நாடியை படிக்க வேண்டும்.” என்று சொன்னார்கள் அது போலவே நானும் படித்தேன். அனைவருக்கும் படித்தேன். கடைசியில் நண்பருக்கும் படித்தேன். அப்பொழுது யாரோ முன்பின் தெரியாத இரண்டு வயதான முதிய தம்பதிகள் வந்து, “எங்களுக்குத் தமிழ் தெரியாது. இதை நாங்களும் படித்துக் கேட்க ஆர்வமாக உள்ளோம். எங்களிடத்தில் ஏதுமில்லை. எங்களுக்குப் படியுங்கள்” என்று கேட்டனர். அதற்கு நானும் நண்பரும், “பரவாயில்லை. படித்து விடுவோம். அமருங்கள் என்றோம்.” அப்போது நிறைய விஷயங்கள் அகத்தியர் அவர்களுக்குச் சொன்னார். “அனைத்து விதமான தகுதிகளும் உங்கள் இடத்தில் இருக்கிறது” என்று ஒரு வார்த்தை அகத்தியர் சொன்னார். நிறைய விஷயங்களைச் சொன்னார். நான் ஆச்சரியப்பட்டேன். நான் படித்துக் கொண்டிருக்க நானும் நண்பரும் “ஒன்றுமில்லாதவர்கள் என்று சொன்னார்கள், இவ்வளவு விஷயங்கள் அடங்கி இருக்கிறது” என்றோம். படித்த முடித்தவுடன் அவர்கள் தெலுங்கில் நன்றி சொன்னார்கள். அப்பொழுது அவர் தெலுங்கிலே “எப்பொழுதும் செலவு செய்யாதே” என்று சொல்லி அவர்களிருவரும் 50 ரூபாய் என்னிடத்திலே கொடுத்தனர். நானும், ”நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்று சொன்னீர்கள். எனக்கு காசு வேண்டாம்.” என்று சொல்லிவிட்டேன். இருப்பினும். “இதை அப்படியே வைத்துக்கொள். இதன் சக்தி என்னவென்று நீயே உணர்வாய்.” என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள். நானும் 50 ரூபாயை எடுத்து என் ஓலைச்சுவடி அடியில் வைத்துவிட்டேன். திரும்பவும் அவர்கள் வந்து தெலுங்கில், “நீ போகும் பாதையில் ஒரு வீட்டை கட்டி விட்டுச் செல்.” என்றனர். அப்பொழுது எனக்கு புரியவில்லை. இருப்பினும் நானும் நண்பரும் தரிசனம் பார்த்துவிட்டு காரில் கீழே இறங்கினோம். அப்பொழுது காரை நிறுத்தி அவர்கள் சொன்ன மாதிரி வீடு கட்டினோம். ( குழந்தைகள் கற்களை அடுக்கி வீடு கட்டுவார்களே அது மாதிரி).
பின்பு நாட்கள் கழிந்தன. ஒருநாள் நான் பெங்களூருக்கு வேலை விசயமாக செல்லும்பொழுது எனது நண்பர், “ஓலைச்சுவடி எடுத்து கோயிலில் படித்துவிட்டு போ.” என்று சொன்னார். நானும் எடுத்துச்சென்று அங்கே அமர்ந்து படித்தேன். அப்பொழுது ஒரு வியப்பு... அகத்தியர் ஜீவ நாடியில் உரைக்கிறார், “அப்பனே நீங்கள் ஏழுமலையான் இடம் சுவடியை பார்த்தீர்கள். அப்பொழுது இரண்டு முதியவர்கள் வந்தார்களே அவர்கள் யார் தெரியுமா? அவர்கள்தான் அப்பா பெருமாளும் லட்சுமியும்.” அப்படியே ஓலைச்சுவடி படிப்பது நிறுத்திவிட்டேன். என் கண் கலங்க, நண்பரும் கண் கலங்க அங்கு இருப்பவர்கள் அனைவரும் கண் கலங்க ஒரு நிமிடம் யாருமே பேசவில்லை.....
--ஜீவ நாடி படிக்கும் ஸ்ரீ அகத்திய சீடர்
தொடரும்
No comments:
Post a Comment