போலீஸ் சாவடி (சிறுகதைகள் சீ2 – 56)
#ganeshamarkalam
தஞ்சாவூர்லேயோ, இல்லை கும்பகோணத்துலேயோ போஸ்டிங்க் கிடெச்சிருந்தா கொஞ்சம் கையில் காசு பாக்கலாம். ஆனால் என்னைத் தூக்கி இந்த போலீஸ் சாவடியில் போட்டாச்சு. பணிஷ்மென்ட் மாதிரி.
நான் போலீஸுலே சேர்ந்ததே நிறைய சம்பாதிக்கணும்னு. இது என்ன பிராம்ணனா பொறந்துட்டு இப்ப்படியா வேலையைத் தேடிக்கரதுன்னு கேக்கலாம். உங்களுக்குத் தெரியாது. போலீஸில் நம்படவா நிறையபேர் இருக்கா. இருந்தாலும் அடிதடி, குத்துவெட்டுன்னு போகணுமான்னா, போனா என்னன்னு கேப்பேன்.
கூத்தனூர் கிட்டே பூந்தோட்டம் எங்க ஊர். எங்கூரைவிட கூத்தனூர் ஃபேமஸ், அதான் அப்படி சொன்னேன். கும்பகோணம் எங்காத்துலேந்து 35 கிமீதான். சந்துமாதிரி ரோட், பஸ்ஸும் லாரியுமா ஆகிப்போச்சு. போக 1 மணிநேரம் ஆகும். வேலையில் சேர்ந்ததும் சென்னையில்தான் ட்ரைனிங்க். அதுமுடிஞ்சு எங்கே போஸ்டிங்க்னா முதல்ல ட்ராஃபிக் விங்கில் சேர்ந்துக்கோ அப்புரம் பாத்துக்கலாம்னு சொந்த ஊருக்கே போன்னுட்டா.
சித்தே நாள் கும்பகோணத்திலேயே இருந்தேன். அம்மா கல்யாணம் பன்ணிண்டுடுன்னு நச்சரிக்க ஆரம்பிச்சா. கொஞ்சம் கையில் காசு புறளட்டும் அப்போதான் சமாளிக்க முடியும்னு சொன்னா கேக்கலை. தூரத்து சொந்தம்னு சீதையை பார்த்து பண்ணிவச்சா. ராமமூர்த்தின்னு எனக்கு பேர் பொருத்தம் சகாசக்குன்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்ல எல்லாம் நன்னாவே நடந்தது.
ஆனால் என் சீதைக்கு நன்னா வாழ்ந்துடணும். நன்னா ட்ரெஸ் செஞ்சுக்கணும், சினிமா ஷாப்பிங்க் மால்னு போகணும். அதுக்கெல்லாம் என் சம்பாத்தியம் பத்தலை. தமிழ்நாட்டில் இருக்கிர பெரீய ஜவுளிக்கடை, நகைக்கடையெல்லாம் இப்போ கும்பகோணத்துக்கே வந்தாச்சு. ஜாடை மாடயா நம்ம வருமானத்துக்குள்ளே சிலவை பாத்துக்கணும்னு சொல்வேன். 10ஆம் தேதி ஆச்சுன்னா சம்பளப் பணம் பூரா காலி.
எங்கப்பா உயிரோட இருந்தப்போ ரொம்ப சிக்கனமா சந்தோஷமா இருந்தோம். பணத்தை பத்தின கவலையே இல்லாம வளர்த்தா. இப்போ இவள் அடிக்கர கூத்தை அவர் பார்த்தார்னா ரத்தக் கண்ணீர் விடுவர்.
வேலைக்கு சேர்ந்த புதுசில் ஸ்கூட்டரில் போன ஒருத்தனை ஹெல்மெட் இல்லைன்னு நிறுத்தி விசாரிச்சேன். ஒரு அம்பது ரூபாய் நீட்டினான். அதோபாரு போலீஸ் வேனில் ஜட்ஜ் உக்காந்திருக்கர், அங்கே போய் 2000ரூபாய் ஃபைன் கட்டிட்டு ஸ்கூட்டரை எடுத்துண்டு போன்னு அனுப்பிச்சுட்டேன். துளீயும் விட்டுக்கொடுக்கலை. இது கல்யாணத்துக்கு முன்னாடியாக்கும். இப்போல்லாம் கதையே வேர.
நூறு ரூபாய் இங்கே கட்டரையா இல்லை கோர்ட்டில் 2000 தருவியான்னு கேக்க கத்துண்டாச்சு. அப்படியும் ஒருத்தன் கோர்டுலேயே கட்டிக்கரேன் சலான் போட்டு வீட்டுக்கு நோடிஸ் அனுப்பிடுன்னு அட்ரெஸ் கொடுத்துட்டு போயிட்டன். அப்படி போட்டு இவன் வரலைன்னா நான்தான் இவன் விட்டுக்குபோய் சம்மன் தரவேண்டியிருக்கும். தலையெழுத்துன்னு விட்டுட்டேன். ஆனால் பலரும் காசை எடுத்து கொடுத்துடுவா. நன்னாத்தான் போயிண்டிருந்தது. ஆறே மாசத்தில் இங்கே தூக்கியடிச்சாச்சு. இங்கேன்னா எங்கே?
கும்பகோணத்துலேந்து திருநள்ளாறு போரத்துக்கு காரைக்கால் மெயின் ரோடில் போனால் பாண்டிச்சேரி செக்போஸ்ட் தாண்டிப் போலாம். பஸ் போர ரூட். ஆனால் டோல் அவாய்ட் செய்ய அரசலாறு பக்கத்திலேயே போர ரோட்டில் போய் ஏதாவது கிராமத்துப் பாதையில் போலாம். அங்கும் பார்டெர் செக்போஸ்ட் உண்டு ஆனால் போய்க்கோன்னு விட்டுடுவா. டோல் வாங்கரதைவிட அங்கேந்து விஸ்கி ரம் இந்தப்பக்கம் வந்துடப்பிடாது. அதில்தான் கவனம். அந்தமாதிரி தமிழ்நாட்டுப்பகுதியில் பேட்டைன்னு ஒரு குக்கிராமத்தில் பார்டரில் என் செக் போஸ்ட். நான் மட்டும்தான்.
கார்த்தாலே 7 மணிக்குப் போயிடணும். வயர்லெஸ்ஸில் கூப்பிட்டு எங்கே இருக்கேன்னு தெரிஞ்சுப்பா. சாயங்காலம் 7 வரைக்கும் டியூடி. அப்புரம்? கும்பகோணம் வரதுன்னா ஒண்ணரை மணிநேரம் ஆகும். இங்கேயே படுத்துண்டுடுவேன். வெளிக்கு வாசலுக்கு வயல். பக்கத்திலேயே ஒரு விவசாயி வீட்டில் தங்கிக்கோன்னு சொன்னா. வேண்டாம்னுட்டேன். ஊருக்குப்போனாத்தான் குளியல். 3 கிமீயில் டீக்கடை. கிடைக்கரதை சாப்புட்டுக்கறது. ஆத்தில் யாரும் ஏன் தினம் படுத்துக்க வரதில்லைன்னு கேக்கலை. நானும் சொல்லலை. பாக்கலாம் எத்தனை நாளுக்கு இப்படி வனவாஸம்னு!
நான் இருந்த ரோட்டில் பூப்பூத்தாமாதிரி டூரிஸ்ட் கார் போகும். முக்காவாசிப்பேர் திருநள்ளாத்துக்கு இப்படி போகலாமான்னு வண்டியை நிறுத்திக் கேப்பா. இல்லைன்னா ஆத்துமணல் அள்ளிண்டு மாட்டுவண்டி, இல்லைன்னா சைக்கிளில் உரம் ஏத்திண்டு எவனாவது. எப்பவாவது ஸ்கூலில் படிக்கர குழந்தைகள். யாராவது இந்த வழியா போக மாட்டாளான்னு மனசு ஏங்கும். யாராவது வசம்மா சிக்கமாட்டாளான்னு. கையில் காசு சேராம டக்குன்னு வரட்சி கண்டு உள்ளங்கை நம நமன்னு. இந்த வாரம் கைய்யில் கொஞ்சம் எடுத்துண்டு போலைன்னா ஆத்தில் யாரும் மதிக்கமாட்டா. பண்டிகைகள் வரது.
போலீஸ்காராளுக்கு நல்ல சம்பளம் இல்லையான்னு கேக்கலாம். உண்டு. அத்தனை மோசமில்லை. டயத்துக்கு வந்தா தேவலை. இருந்தாலும் மத்தவாளோட வாழ்க்கைத் தரத்தை பாக்கரச்சே மனசு கஷ்டப்படும். நானும் டிக்ரீ வச்சிருக்கேன். BSc கணக்கு. அதுக்கு வேலை கிடைக்காது. கும்பகோணத்தில் இருந்தப்போ கையில் எக்ஸ்ட்ராவா 20ஆயிரம் கிடெச்சது. இப்போ 3 வாரமா ஒண்ணுமேயில்லை. சிலசமயம் டீக்கடையில் காசு வேண்டாம்னுடுவான். இருந்தாலும் இங்கே நிறைய நாள் தாக்குப்பிடிக்க முடியாதுன்னு தோணும்.
ஒரே நாட்டில் ரெண்டு ஸ்டேட்டுக்கு நடுவுலே ஏன் இப்படி செக் போஸ்ட்? நீங்க கேக்கலாம்.
முன்னாடி சுங்கவரி அது இதுன்னு வண்டிகளை நிறுத்தி பிடிக்கரத்துக்கு நிறைய உண்டு. இப்போ GST வந்ததுலேந்து அதெல்லாம் காணாமப் போயிடுத்து. சிலசமையம் ரவுடீஸ், தப்பு செஞ்சவா ஸ்டேட் விட்டு ஸ்டேட் ஓடிப்போயிடரான்னு அப்படி யாராவது வரச்சே மடக்கணும்னு செக்போஸ்ட். மோஸ்ட் வான்டெட் இந்தப் பக்கமா தப்பிக்கலாம்னு சந்தேகப்பட்டா மெச்சேஜ் வரும், உஷாரா இருன்னு, நான் என்ன பண்ணுவேன்னா தடுப்புக்கட்டையை குறுக்கே இறக்கி வச்சு கட்டிட்டு குடிசைமாதிரி நிழலா ஒரு இடத்தில் மர நாற்காலியில் உக்காந்துப்பேன்.
100கஜம் தள்ளி இருக்கிர ஓட்டு விட்டுலேந்து எடுத்துப் போட்டுண்டது. அவா திருப்பி கேக்கர வரைக்கும்தான். சுத்து வட்டாரத்தில் யார் வீட்டிலேயாவது சாவு விழுந்தா இந்த நாற்காலி போயிடும். பொணத்தை உக்காத்தி வச்சு குளிப்பாட்ட!
நான் இங்கே வந்து 10நாள் ஆனதில் நான் சந்திச்ச எல்லார் கிட்டேயும் என் பேரைச் சொல்லி வச்சேன். ஒரு பத்துப்பேரை நானும் பேர் சொல்லிக்கூப்பிடர அளவுக்கு பரிச்சயம். இந்த மாதிரி இடத்துலேயும் காசு பண்ண என்ன செய்யலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். யாரவது சின்னதா தப்பு செய்யராமாதிரி தெரிஞ்சாப்போதும். இல்லை ஏதாவது லம்ப்பா கிடைக்கரா மாதிரி வரணும்.
எங்கப்பா சொல்லுவர். மின்னெல்லாம் சைக்கிளில் லைட் இல்லாமப்போனாலே போலீஸ் பிடிச்சுடுவானாம். போலீசைப்பார்த்தா இறங்கித் தள்ளிண்டு போவாராம். ஆத்தில் லைசன்ஸ் இல்லாம ரேடியோ பெட்டிவச்சிருந்தால் போச்சு.
இப்போ பிடிக்கரத்துக்கு நிறைய வழி இருக்கு. என் ஜாதகம் இங்கே நான் இருக்கிர இடத்துக்கு யாரும் வரவே மாட்டேங்கரா. அதான் பிர்ச்சனை.
இன்னைக்கு யார் மூஞ்சியில் முழிச்சேன்னு தெரியலை, சித்தே பிஸியா இருப்பேன்னு அடிமனசில் தோணித்து. அதுக்கேத்தாப்புலே ஒருத்தன் சைக்கிளில் பின்னாடி பெரீய மூட்டையொட. இதுக்கு முன்னாடி இவனை இந்த பாதையில் பார்க்கலை. அவன் தூரக்கே வரச்சேயே தடுப்பை இறக்கினேன். கிட்டே வந்ததும் “ஏய் நில்லு”ன்னேன். ஒரு மெல்லிய அதட்டலோட. சைக்கிளை ப்ரேக் போட்டு காலை ஊணரத்துக்கு சித்தே தடுமாறி எப்படியோ நின்னான். இறங்கலை.
“மூட்டைலே என்ன?” “சாணி சாமி”ன்னான். காய்ஞ்ச சாணியாம். “எங்கே காமி?” “நாறும் சாமி, அப்புரம் திரும்ப கட்டணும்”. “நான் கட்டரேன், சொன்னா மூட்டையை அவு”. சாணிதான். சாணி கொண்டு போக லஞ்சம் எப்படி கேப்பது. “கொஞ்சம் வெளீலெ எடுத்தப்போடு”. அவன் “என்ன சாமி சாணியிலும் பங்கு கேக்கரீங்க?” “டேய் உன்சாணி எனக்கு வேண்டாம், சாணிக்குள் என்ன ஒளிச்சுவச்சு எடுத்திண்டுபோராய்? தெரியணும் கீழே கொட்டு!” பார்த்தான், ஒரு காலை கீழே வச்சுண்டே வேஷ்டியை மேலே தூக்கரான். “என்ன? இவனே சாணி போடப்போரானான்னு சித்தே நகந்துண்டேன். உள்ளே நிக்கர் பையில் கையை வுட்டு ஒரு நூறுரூபாய் தாளை எடுத்து நீட்டினான்.
உடனே சந்தேகம் வந்தது. “இறங்குடா நாயே!” நூறை கையில் வாங்ககிண்டே. அப்புரம்தான் “பெரீயவீட்டு சமாச்சாரம், இன்னும் வேணும்னா கேளுங்க கொடுக்கரேன்” 500ரூபாயை நீட்டினான். வாங்கிண்டு போய்க்கோன்னுட்டேன். அத்தனை கொடுத்து என்னை சரிக்கட்டினா என்ன இருக்கும் மூட்டையில்? தெரிஞ்சுக்காம விட்டுட்டோமே? சரி இன்னைக்கு போணீன்னு நினெச்சுண்டேன்.
ஒரு டாக்ஸி உள்ளே நிறையபேரை அடைச்சிண்டு திருநள்ளாறு போரா. தடுப்பு போட்டதுனால் நின்னான். கிட்டக்கே போய் உள்ளே பார்த்தால், 3 மாமி, 2 ஆம்பிள்ளை, 2 குழந்தைகள்னு இண்டிகா காரில். அதைத்தவிர ட்ரைவரும். பெர்மிட் இல்லை. அவன் 200 கொடுக்க ஒவர்லோடிங்க், வண்டிக்கு FC வேணும்னு காரணம் காட்டி 300 வாங்கிண்டேன். “திரும்பப்போரச்சே இந்த பக்கமாவே போ மத்த ரோட்டில் இன்னும் கேப்பானுவ” அனுப்பிச்சேன்.
இப்படி வரவா எல்லாரையும் கூர்ந்து கவனிச்சு சிலதை ஒண்ணும் கேக்காம விட்டுட்டு சிலதை சந்தேகமா நிருத்திவச்சு கேள்வி கேட்டு மத்ததை தரோவா செக் செஞ்சுன்னு பண்ரச்சே பொழுதும் போச்சு சாயங்காலத்துக்குள்ளே 1300 கிடெச்சது. அப்படீன்னா மாசத்துக்கு 30ஆயிரத்துக்கும் அதிகமான்னா வரும்! கும்பகோணத்தில் 20ஆயிரம்தான். கூடவே 3 பேர் வருவானுவ – பங்கு போடணும். இங்கே நான் தனிகாட்டு ராஜா. ராஜாவோ இல்லையோ காடுதான்.
அடுத்த நாள் ஒண்ணுமே கிடைக்கலை. சரிதான் கிடைக்கரச்சே அள்ளிக்கணும்னு பட்டது.
மூணாம்நாள் ஆத்துலேந்து போன். என் சீதைதான். “என்ன பேச்சு மூச்சே காணோம், எப்போ ஆத்துக்கு வரேள்? என் தம்பி வந்திருக்கான், அத்திம்பேர் ஆத்துலே இருப்பார் பாத்துட்டு போலாம்னு வந்தானாம். ஞாயித்துக்கிழமையும் நீங்க பிஸின்னு சொல்லி அனுப்பிச்சேன். கும்பேஸ்வரர் கோவில்கிட்டேயே GRT வந்திருக்கு. என் தோட்டை போட்டுட்டு கல்வச்சதா ஒன்ணு வாங்கிக்கணும். வர சனிக்கிழமை வந்துடுங்கோ”. நான் வந்து செலெக்ட் செஞ்சாத்தான் வாங்குவான்னு நினைச்சேளா?. நான் காசை அள்ளிண்டு வந்து தந்தால்தான் வாங்க முடியும்னு அர்த்தம்.
சரிதான் அந்த சாணிமூட்டை சைக்கிளில் வருதான்னு பார்க்கரேன். வந்தது ஒரு சின்ன வேன். பின்னாடி 6 மூட்டை. ஓட்டிண்டு வந்தது அவன் மாதிரி இருக்கு. தாடியை நன்னா ட்ரிம் செஞ்சுண்டு. சட்டுன்னு அடையாளம் தெரியலை.
என்னை பாத்துட்டு வண்டியை ஓரம் கட்டிட்டு கீழே இறங்கி வந்தான். “ராமநாதன் சார், எப்படி இருக்கீங்க?” இவனுக்கும் என் பேர் தெரியுமா? கண்டு பிடிச்சிருப்பான். நானும் சிரிச்சு “நீங்க எப்படி? வண்டீ வாங்கிட்டீங்களா?” “என்னுது இல்லை, பெரிய இடத்து வண்டி”. இந்தாங்கன்னு ஒரு கவரைத் தந்தான். என்னதுன்னு கேட்டா “நீங்களே பாருங்க”. உள்ளே 2000 நோட்டு 3 இருந்தது. வந்தவனுக்கு சலாம் போடணும்போல தோணித்து. “மூட்டையில் என்ன”ன்னு கேட்டேன். “அதெல்லாம் கண்டுக்காதீங்க”ன்னுட்டு கிளம்பிட்டான். “வந்துட்டு போயிட்டு இருப்பேன்.” “அப்படியே செய்யுடா என் செல்லம்”னு சொல்லணும்னு தோணித்து. இன்னும் மூட்டையில் என்னன்னு தெரியலை
சனிக்கிழமைக்குள் எப்படியும் ஒரு 10ஆயிரம் சேர்ந்துடும்னு தோணித்து. கல்லு வச்ச தோடு வாங்கிடலாம்.
இன்னைக்கு சனி. கிளம்பலாம்னு ஓட்டுவீட்டில் திங்கட்கிழமை வருவேன்னு சொல்லிடலாம்னு கிளம்பரச்சே எதுத்தாப்புலே ஒரு லாரி. அவன்தான். “ராமநாதன், தடுப்பை எடுங்க, நேரமாவுது”ன்னு எங்ஜினை ஆப் செய்யாமலேயே கூப்பிடரான். போனால் உக்காந்த இடத்துலேந்து ஒருகனமான கவரை நீட்டரான். வாங்கிக்கரேன். அவன் போனதும் பார்த்தா லம்பா 20 ஆயிரம். போர லாரியில் நிறைய மூட்டை அடுக்கியிருக்கு. அவ்வளவும் சாணியா?
ஊருக்கு வந்ததும் சீதை ஆசையா ஓடிவருவான்னு நினெச்சிண்டே கதவைத் தட்டரேன். யாரும் தொறக்கலை. பக்கத்தாத்து பையன், கும்பேஸ்வரன் 4ஆவது படிக்கரான் வந்து சாவியைத்தரான். “எங்கேடா எல்லாரும்?” உங்க பொஞ்சாதியை நேத்து கடைத்தெருவில் காளைமாடு முட்டிடுத்து. ஆவத்தான நிலைமையில் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க. போய்ப்பாருங்க” விவரம் சொல்ரான்.
அவசரப்படாம, நிதானமா போரேன்.
No comments:
Post a Comment