*ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 29*in
[பஜகோவிந்தம்-கர்வபங்கம், காஸி பண்டிதர், லலிதா ஸஹஸ்ரநாமம், ஏகதண்டி ஸன்யாஸி, நீங்கதான் ஶங்கராச்சாரியாரா?, பெரியவாதான் பேசறாளா?, ஆத்துல சொல்லாம… நாங்க ரெண்டு பேரும் ஓடிட்டோம்!]
ஒருநாள் பெருமுக்கல் க்ராமத்தில், பாலன் ஸ்வாமிநாதன், அன்றைய ஆச்சார்யாளை தர்ஶனம் செய்யப் போனபோது, ஸ்ரீமடத்துக்கு ஒரு மஹா பணக்கார ப்ரபு ஒருவர் வந்தார். வந்ததிலிருந்தே ஒரே ஆர்ப்பாட்டம்! பணம் கொழுத்த தன்னை, ஆச்சார்யாள் விஸேஷமாக கௌரவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
உத்தமமான ஸன்யாஸியிடம் அல்பமான பண ஆர்ப்பாட்டம் செல்லுபடியாகுமா?
ஸ்வாமிகளோ… இவரை கவனிக்காமல், ஶிஷ்யர்களுடன் தன் உரையாடலைத் தொடர்ந்தார். பணக்காரரும் கொஞ்ச நேரம் காத்திருந்தார். மஹா கோபம் வந்துவிட்டது…!
பூஜிக்க வேண்டிய ஆச்சார்யாளை, ஆதி ஆச்சார்யளுடைய ஸ்லோகத்தை சொல்லியே ‘தாக்க’ வேண்டும் என்ற ‘திவ்யமான’ எண்ணத்தில்,
“காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
உதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:….
என்று பஜகோவிந்த-த்திலிருந்து ஒரு ஸ்லோகத்தை பாணம் போல் எய்தார்!
இதன் அர்த்தம், “வயிற்றை போஷிக்க, மாந்தர் போடும் பல வித வேஷங்களில், காஷாயம் தரித்த வேஷதாரி ஸன்யாஸிகளும் உண்டு” என்பதே!
ஆச்சார்ய பீடத்துக்கே களங்கத்தை கல்பிக்க… அந்த பணக்காரர், ஆச்சார்யாள் பாடிய மணியான பஜகோவிந்தத்தை, தவறாக பயன்படுத்திவிட்டார்..!
அப்படியே 66-வது பீடாதிபதியான ஸ்வாமிகள், வயிறை வளர்க்கும் வேஷதாரி என்றால், இந்தப் பணக்காரரைத்தானே முதலில் கவனித்திருப்பார்!
பணக்காரரோ… லவலேஸமும் பொருந்தாத ஒன்றை லஜ்ஜையின்றி ஸபையில் கூறிவிட்டார்!
உத்தமமான ஸன்யாஸிகள், தங்களுக்கு மற்றவர்கள் செய்யும் மான-அவமானமோ, ஸ்தோத்ரமோ-நிந்தனையோ எதையுமே மனஸில் போட்டுக் கொள்ளவே மாட்டார்கள். ஶாந்த ஸ்வரூபமான ஸ்வாமிகளோ, அந்த பணக்காரரையே சட்டை செய்யவில்லை எனும்போது, அவருடைய உளறலுக்கா முக்யத்வம் குடுக்கப் போகிறார்? அவர் பாட்டுக்கு ஶிஷ்யர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.
அங்கே அமர்ந்திருந்த ஶ்ரீமடத்தின் வித்வான் ஒருவருக்கு, “நம்ம ஆச்சார்யாளை, எவனோ ஒத்தன், பணம் இருக்கற திமிருல, எதவேணாலும் சொல்றதா?..” என்று கோபம் வந்துவிட்டது.
ஆனால், ஆச்சார்யாள் முன்னால், தன்னுடைய கோபத்தை காட்டுவது அவமர்யாதை என்பதால், மிகவும் நயமாக அடக்கத்துடன், அதே பஜகோவிந்தத்திலிருந்து வேறொரு அடியை எடுத்து எதிர் பாணம் விட்டார்……
மா குரு தன-ஜன-யௌவன கர்வம்;
ஹரதி நிமேஷாத்- கால: ஸர்வம்..
இதன் அர்த்தம், பணத்தாலும், ஆள்கட்டாலும், இளமையாலும் கர்வம் கொள்ளாதே! காலன் என்ற யமன், நிமிஷத்தில், இந்த அத்தனையையும் கவர்ந்து சென்று விடுவான்.. என்பதே!
பணக்காரர் இதைக் கேட்டதும், ‘ப்ராரப்த கர்மா’ விடாததால், கோபத்துடன் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
இந்த மேற்படி ஸம்பவம் நடந்த போது, ஸ்வாமிநாதன் அங்கு இருந்தான். அவனுடைய photographic நினைவில் அது அப்படியே பதிவாகி, பின்னாளில் பல பக்தர்களுக்கு அதிலிருந்து photo ப்ரதிகள் கிடைத்தன!
சின்னஞ்சிறு பாலனாக தான் இருந்தபோது பரமகுரு ஸ்வாமிகளின் ஸன்னதியில் முதல் பாடமாக, தன்னுள் பதிவு செய்த இந்த ஸம்பவத்திலிருந்து, பின்னாளில் ஏறக்குறைய அதே போன்ற ஒரு பண்டிதரை எத்தனை அழகாக ஸமாளித்தார் என்பதை பார்ப்போம்.
காஸியிலிருந்து ஒரு மஹா மஹா பண்டிதர் நம் பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார். பார்த்தாலே மஹா ஆர்பாட்டமாக… தோடா என்ன! மகரகண்டி என்ன! காஸிப்பட்டு ஸால்வை என்ன! என்று அத்தனை பேரையும் ப்ரமிக்க வைத்தது.!
எத்தனையோ வித்வத் ஸதஸ்களில், பெரிய பெரிய பண்டிதர்களைக் கூட, விவாத மேடைகளில் வென்று பெறப்பட்டவைதான் அவை… என்று தெரிந்தது. ஆனால், வித்தைக்கு அடித்தளமான விநயம் இல்லாததால், வித்யைகளுக்கெல்லாம் வித்யையான, ஶ்ரீமஹாவித்யையின் காஷாய ரூப மஹத்வத்தை அறிய முடியாதபடி மனஸில் திரை போட்டிருந்தது.
அந்த மங்கள ரூபத்தை ஸாதாரண ஸன்யாஸியாக எண்ணியதோடு, அவரையே ஒரு கை பார்த்துவிட வேண்டும் ! என்று ஆழ்மனஸில் திட்டமும் வகுத்தது!
வித்வத் இல்லாத பாமரனுக்கு கூட , நொடியில் தன்னை புரிய வைக்கும் தெய்வம், வித்வானோடு விளையாடி, தன்னை புரியவைக்க காலம் தாழ்த்தியது போலும்.
பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தார். பெரியவா அவரிடம் ஏதோ குஶலப்ரஶ்னங்கள் செய்தார்.
அவ்வளவுதான்! ஆரம்பித்தார் தன் ப்ரபாவத்தை!
கொழுந்துவிட்டெரியும் காலாக்னி முன் ஒரு சிறு தீப்பொறி போல் இருந்தது…!
“எனக்கு…. பகவத் கீதை-ல ஒரே ஒரு ஸந்தேஹம்…..!”
‘பெரியவாளால் முடிந்தால்….!!!. அதை தீர்த்து வைக்கலாம்’ என்ற ஸவால் தோரணை, அவர் பேச்சில் தொனித்தது]
பெரியவா கொஞ்சங்கூட தாமதிக்காமல், ஒரு புன்னகையோடு ஸைகை காட்டி அவரை உட்காரச் சொன்னார். அவர் உட்கார்ந்ததும் பக்கத்திலிருந்த பாரிஷதர்களை அழைத்தார்…..
” டேய்! எல்லாரும் அவர…. மூணு ப்ரதக்ஷிணம் பண்ணுங்கோடா…”
எதிர்பாராத உத்தரவு ! பண்டிதர் குழம்பி முழித்தார்! பாரிஷதர்களுக்கும், பக்தர்களுக்கும் ஒரே திகைப்பு!
“பெரியவா…… இது என்ன? இப்டி ஒரு ஆக்ஞை ?”
பண்டிதருக்கு நாக்கெல்லாம் குழறியது.
வாக்தேவதை இல்லையா? புன்னகை மாறாமல் தன் வாக்காலேயே அவருடைய கர்வத்தை வேரோடு கெல்லி எறிந்தார்….
“அது ஒண்ணுமில்ல..! பகவத் கீதைல, பதத்துக்கு பதம்… ஆ…யிரம் ஸந்தேஹம் எனக்கு…! ஆனா.. ஒங்களுக்கோ, கீதைல ஒரே ஒரு ஸந்தேஹம்-ன்னு சொன்னேளே ! ஒங்களோட பாண்டித்யம் என்ன! ஞானம் என்ன ! அடாடா!…. அதுனாலதான் என் ஶிஷ்யாளை விட்டு, ஒங்கள… ப்ரதக்ஷிணம் பண்ணச் சொன்னேன்“.
பணிவில் தோய்த்தெடுத்த வார்த்தைகளால், பண்டிதருடைய கர்வத்துக்கு விழுந்த அடியால், தொங்கப் போட்ட தலையை அவரால் தூக்க முடியவில்லை. கர்வம் வேரோடு அறுந்தது. வினயத்தோடு இப்போது பெரியவாளிடம் விளக்கம் கேட்டார். ரொம்ப பொறுமையாக விளக்கமான அர்த்தங்கள் சொன்னார் பெரியவா. பண்டிதர் அப்படியே சொக்கிப் போனார்.
மதுரைக்கு இறுமாப்புடன் வந்த ஸங்கீத மேதையின் கர்வத்தை பங்கம் செய்ய, விறகுவெட்டியாக வந்து திருவிளையாடல் புரிந்த சொக்கன் இல்லையா?
தன்யோஸ்மி என்று அஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிய பண்டிதருக்கு உரிய மர்யாதை செய்து, கௌரவித்து ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார்.
அதுமட்டுமில்லாமல், மற்றொரு ஸம்பவத்தில், ஒருவர் கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே, முத்து தெரித்து விழுந்தது போல் பெரியவாளின் பதில் வந்த அழகும் உண்டே!
அதிகமாக படித்தாலும் ஆபத்து! ஏனென்றால், படிப்பதால் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். நாலு பேரிடம் நமக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்ளலாம். அவ்வளவுதான். அதிலும் அந்த படிப்பு நல்லதுக்கு ஆகாமல், விதண்டாவாதம் பண்ணுவதற்கும், மற்றவரைப் புண்படுத்துவதற்கும் உதவும் என்று கருதினால், இன்னும் ஆபத்துதான்…!
யாருக்கு?
படித்தவர்களுக்கு!
ஒருவர், பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார். பெரியவா எழுந்து உள்ளே போக இருந்தார்.
“எனக்கு ஒரு விஷயம் விளங்கல….”
பெரியவா சற்று நின்று “என்ன?” என்பது போல் பார்த்தார்.
“லலிதா ஸஹஸ்ரநாமத்ல… அம்பாளை “ஆப்ரஹ்மகீட ஜனனீ” ன்னு சொல்லியிருக்கே! அதாவுது, ப்ரஹ்மாலேர்ந்து ஒரு புழுவுக்கும் கூட அவதான் அம்மா-ன்னா…. நீங்கள்ளாம் ஏன் யாரையும் தொடாம மடி, ஆசாரம், ஒஸந்த ஜாதி, ப்ராஹ்மணா, குடியானவா ஜாதி அப்டி இப்டீ-ன்னெல்லாம் பேதம் பாக்கறேள்?…”
இதற்கு பதில் சொல்ல அரை க்ஷணம் கூட பெரியவா எடுத்துக் கொள்ளவில்லை…..
“அதே லலிதா ஸஹஸ்ரநாமத்லதான் அடுத்தாப்ல “வர்ணாஶ்ரம விதாயினி”ன்னு அதே அம்பாள்தான் இந்த வர்ணாஶ்ரம தர்மத்தையும் வகுத்துக் குடுத்திருக்கான்னு சொல்லியிருக்கு.….” என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்று விட்டார்.
வஶின்யாதி வாக்தேவதா ருஷய:… என்று வாக்தேவதைகளே ஸ்துதி செய்த அம்பிகையின் நாமங்களில் தவறிக்கூட, தவறு இருக்குமா!!
ஏகதண்டி ஸன்யாஸியை பார்ப்பதே தோஷம் என்று நம் அத்வைத ரூபத்தை தர்ஶனமே பண்ணக்கூடாது என்று கர்வமில்லாமல் ஆனால் பிடிவாதமாக இருந்த ஒரு பெரிய வைஷ்ணவ வித்வானை, தானே வலியச் சென்று ஆட்கொண்ட அழகைப் பார்போம்.
“கற்றாரை கற்றாரே காமுறுவர்” என்ற வசனப்படி, அபாரமான ஶாஸ்த்ர புலமை, பாண்டித்யம் பெற்ற ஒரு மஹா வித்வானைப் பற்றி நம் பெரியவா கேள்விப்பட்டார். ஆனால் அந்த வித்வானோ, பெரியவாளின் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூட ப்ரியப்படவில்லை!
காரணம்?
அவர் ஒரு வீர வைஷ்ணவர்!
வெறும், வீர வைஷ்ணவர் இல்லை…கடும் வீர வைஷ்ணவர்!
அவரைப் பொறுத்தமட்டில், “ஸித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் ஶைவக் கோலத்தையும் மேற்கொண்டு, கையில் ஏக தண்டத்தை கொண்டுள்ள ஒரு ஸன்யாஸியை பார்ப்பதே பெரிய தோஷம்!”
பெரியவா.. பரிபூர்ண ஶிவமோ, பராஶக்தியோ, ப்ரஹ்மமோ எதுவாக வேண்டுமானாலும் இருந்தாலும், அவரிடம் அந்த யாதவ ஶிரோன்மணியின் குஸும்பு கலந்த ப்ரேமை அவ்வப்போது, எட்டிப்பார்த்துவிடும்! ஆனால், அதிலும் ஆட்கொள்ளும் அன்பே பரிமளிக்கும்.
“நீ வராட்டா போ!…. நா…..வரேன்” என்பது போல், அந்தப் பண்டிதர் இருந்த ஊருக்கு யாத்ரையாகச் சென்று, பெரியவா தங்கினார்.
அன்பு என்னும் வலையை வாகாக விரித்து வைத்துக் கொண்டார், இந்த பண்டிதர் மாதிரி நல்ல [பக்ஷிகளுக்காக] பக்தர்களுக்காக!
ஊரே தினமும் திரண்டு வந்து பெரியவாளை தர்ஶனம் செய்தபோதும், அவர் மட்டும் வரவேயில்லை!
‘எப்டியோ போ!’ என்று அவரை விட்டு-விடுவதற்காகவா வந்திருக்கிறார்?
வருவோர் போவோரிடமெல்லாம் இந்தப் பண்டிதரைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார். அந்த பண்டிதரின் காதுகளிலும், பெரியவாளின் தேஜஸ்ஸையும், வித்வத் பெருமையையும் பற்றி பலபேர் புகழ்ந்து பேசுவது எல்லாமே விழுந்தது. ஆனாலும் கமுக்கமாக இருந்து விட்டார்.
பெரியவா அவரை ஆட்கொள்ளும் தருணம் வந்தது !
ஸ்ரீமடத்தின் மஹா வித்வான் ஒருவரை அந்த வீர வைஷ்ணவரிடம் தகுந்த மர்யாதைகளுடன் அனுப்பி, முறைப்படி பெரியவா அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அவர் வீர வைஷ்ணவர் என்றாலும், உண்மையான வைஷ்ணவ லக்ஷணம் கொண்டவர். ஒரு பெரிய பீடாதிபதி, இத்தனை தூரம் நம்மை அழைத்திருக்கும்போது, நாம் அதை மதிக்காமல் இருப்பது அழகல்ல என்று தோன்றியது. எனவே மடத்து வித்வானிடம் வெளிப்படையாக பேசினார்.
“பெரியவா… இவ்ளோ தூரம் கூப்டு அனுப்பியிருக்கா…! மாட்டேன்னு சொல்லப்டா…துதான்! ஆனாலும், எனக்குன்னு செல ப்ரதிக்ஞைகள் இருக்கு. அதை மீறரதுக்கில்ல! அது ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் ஸம்மதப்படாம இருக்கலாம்… அதான் யோஜனையா இருக்கு…”
“ஒங்களோட ப்ரதிக்ஞைகள் என்னன்னு, சொன்னேள்-ன்னா… பெரியவாகிட்ட சொல்றேன்…”
பணிவோடு கேட்டார் ஸ்ரீமடத்து வித்வான்.
“மொத்தம் மூணு ! ஒண்ணு… அத்வைத மடத்து ஏகதண்டியான ஒங்க பெரியவாளை, நா…. நமஸ்காரம் பண்றதுக்கில்ல;
ரெண்டாவுது… அவர் ப்ரஸாதம் எதுவும் குடுத்தா…. அத… ஸ்வீகரிச்சுக்கறதுக்கில்ல;
மூணாவுது… வித்வத் ஸம்பாவனை-னு ஸால்வை போத்தறது, அது இதுன்னு எதாவுது ஒங்க பெரியவா செஞ்சா, அதையுங்கூட ஏத்துக்கறதுக்கில்ல!…”
“கெட்டுது போ! நம்ம பெரியவாளோட ஐஶ்வர்யம் தெரியாம, அவரை அவமர்யாதை பண்ற மாதிரி, இப்டி கடுமையா கண்டிஷன் போடற… இவரப்போயி, பெரியவா… எதுக்கு வரிஞ்சு வரிஞ்சு அழைக்கணும்?…”
அந்த மஹா ஸாத்வீகமான ஸ்ரீமடம் வித்வானுக்கே இப்படித் தோன்றியது.!
“ரொம்ப ஸந்தோஷம். தேவரீர் சொன்னதை, எங்க பெரியவாகிட்ட தெரியப்படுத்தறேன்”
மர்யாதையோடு அங்கிருந்து கிளம்பி, நேராக பெரியவாளிடம் வந்தார்.
முகத்தில் ஸுரத்தில்லாமல் வந்தவரிடம், புன்னகையோடு குடைந்தார்…. கோவர்த்தனத்தை குடையாக பிடித்த நம் கோவிந்தன்!
“என்ன சொன்னார்?…”
“ஒண்ணும் ஸெரியா படல…. பெரியவா”
பண்டிதரின் ஸுரத்தில்லாத முகத்தைப் பார்த்தார்……
“என்ன? ஸ்ருதி கொறஞ்சு போச்சு?…”
“ஒண்ணும் ஸ்வாரஸ்யப்படல பெரியவா…..! அவர் ரொம்ப நிர்தாக்ஷிண்யமா கண்டிஷன் போடறார்!…”
“ஓஹோ! அப்டியா? ஸ்வாரஸ்யமாத்தானே.. இருக்கு! நீ நல்ல ஸேதின்னா கொணூந்திருக்கே!…”
“நல்ல ஸேதியா! அவர் ரொம்ப கறாரா கண்டிஷன் போடறார் பெரியவா…!”
“கண்டிஷன் போடறார்-ன்னா, அவர் முடிஞ்ச முடிவா….. வரவே மாட்டேன்னு சொல்லல! அவரோட ஏதோ கண்டிஷனுக்கு நாம ஒத்துண்டா…. வரேன்னு சொல்றார்-ன்னுதானே ஆறது? அந்த மட்டுல, நல்ல ந்யூஸ்தானே?….. ஸெரி….. என்ன கண்டிஷன் போட்டார்?…”
“சொல்றதுக்கே மனஸ் எடம் குடுக்கல…..”
“பரவாயில்ல…. சொல்லு! …”
“மொத ப்ரதிக்ஞை, அவர் பெரியவாளை நமஸ்காரம் பண்ண மாட்டாராம்…..”
“பேஷா..!..அப்டியே இருக்கட்டும்….ம்ம்…மேல”
“ரெண்டாவுது…பெரியவா, எதாவுது ப்ரஸாதம் குடுத்தா, அவர் ஸ்வீகரிச்சுக்க மாட்டாராம்!….”
”அவ்ளோதானே!…ம்….”
“மூணாவுது… பெரியவா அவருக்கு வித்வத் ஸம்பாவனை-ன்னு ஸால்வை போத்தறது… அதெல்லாம் பண்ணினா, அதையும் ஸ்வீகரிச்சுக்க மாட்டாராம்”
பெரியவாளோ…. ஸஹஜமாக சிரித்துக் கொண்டே…
” இவ்ளோதானே? பேஷா அவரோட இஷ்டப்படியே இருந்துட்டுப் போகட்டுமே!…”
“எப்டி பெரியவா….? பெரியவாளை மதிக்கற மாதிரி தெரியல, அவர் இப்டீல்லாம் கண்டிஷன் போடறது…”
“பாரு! எனக்குத்தானே அவரைப் பாக்கணும்-ன்னு இருக்கு? அவருக்கு இல்லியே? அப்டி இருக்கச்சே, அவர் கண்டிஷன் போடறதுல என்ன தப்பு? எனக்கு, அவர் நெஜமாவே ஒரு பெரிய வித்வத் ஶ்ரேஷ்டர், அவர்ட்ட புதூஸா ஏதோ கொஞ்சமாவுது க்ரஹிச்சுக்கலாம்-ன்னு இருந்தா, அவர் போடற கண்டிஷனை பொருட்படுத்தாம ஏத்துக்கத்தானே வேணும்?...”
அனைத்தும் அறியும் அறிவிற்கு அறிவாய் இருக்கும் ஆச்சார்ய ஶிரோ-ரத்னத்துக்கு, வேறொருவரிடம் க்ரஹித்துக் கொள்ள என்ன இருக்கிறது?
விநயம், விநயம் என்ற ஒன்றை நமக்கெல்லாம் கற்றுத் தரவே, இந்த ப்ராக்டிகல் க்ளாஸ்!
உண்மையில் பெரியவாளே அந்த ஸ்ரீ வைஷ்ணவரின் க்ருஹத்துக்கு ஸ்வாதீனமாக, தானே விறுவிறுவென்று சென்றிருப்பார். ஆனால், விபூதி-ருத்ராக்ஷம் அணிந்த, ஏகதண்டியான ஒரு ஸன்யாஸியை, அவர் தன்னுடைய க்ருஹத்துக்குள், மனஸார வரவேற்காமல் போயிருக்கலாம்! என்பதாலேயே, அவரை அப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் வைக்கக் கூடாதென்பதற்காகவே, பெரியவா அங்கே செல்லாமல், அவரைத் தன்னிடம் அழைத்திருக்கலாம்.
”போ! போயி அவரோட ப்ரதிக்ஞைக்கு எந்த பங்கமும் இல்லாத, இங்க வரலாம்-ன்னு சொல்லி, அழைச்சிண்டு வா…”
பண்டிதர் என்னவோ.. அரை மனஸோடு போய், அந்த வைஷ்ணவரை அழைத்து வந்தார், பெரியவாளுடைய ஸந்தேஶத்தை கூறி!
வைஷ்ணவருக்கு ஏக பெருமை!
ஸம்ஸ்க்ருத பாஷை…. கேட்கவும், பேசவும் மிகவும் அழகாக இருக்கும், அந்த அழகு இன்னும் கோடி மடங்கு அழகாக ஒலித்தது, நம் பெரியவா பேசியபோது!
அவர் உள்ளே நுழைந்ததும், பெரியவா அவரிடம், அழகான ஸம்ஸ்க்ருதத்தில், வைஷ்ணவர்களுக்கே உரிய பரிபாஷைகள் கலந்து, அவரை மிகவும் கௌரவமான முறையில் வரவேற்று, அவருக்கென போடப்பட்டிருந்த ஆஸனத்தில் அமரச் சொன்னார்.
வாக்தேவதையின் முன்னால் போடப்பட்டிருந்த மணையில், அவளுடைய அழகான வரவேற்பால் உண்டான ஒருவித நெகிழ்வும் ஒருசேர, அமர்ந்தார்…….!
அழகான வரவேற்பிலேயே லவலேஸம்…. வைஷ்ணவரின் மனஸ் உருகியது.
“நமஹ நமஹ” என்று ருத்ரமும், சமகமும், வேதங்களும் போட்டி போட்டுக்கொண்டு நமஸ்கரிக்கும் நம் பெரியவாளை, நமஸ்காரம் பண்ணாமலேயேதான் அமர்ந்தார்!
ஸ்ரீ ராமானுஜருடைய [ப்ரஹ்மஸூத்ர] ஸ்ரீபாஷ்யம் பற்றியே அந்த வைஷ்ணவரிடம், நம் பெரியவா நிறைய கேட்டுக் கொள்ள!! ஆரம்பித்தார்!
ஆம்! முதலில், பெரியவா அவரிடம் கேட்டுக் கொள்வது போல் இருந்தது. அப்புறம் போகப் போக, அந்த வைஷ்ணவர் கேட்கக் கேட்க, ப்ரஹ்ம ஸூத்ரத்தை எழுதிய அந்த வேத வ்யாஸரே, பதில் சொல்வதாக மாறியிருந்தது!
வைஷ்ணவரின் முகம் பெரியவாளிடம் பேசப் பேச, ப்ரகாஶமாக ஆனது! ஏனென்றால், வாஸ்தவத்தில் அவரிடம் வித்யா கர்வம் இல்லை; நல்ல உயர்ந்த வித்யை இருந்தது. அதனால், பெரியவாளிடமிருந்து கல்பூரம் போல், நிறைய க்ரஹித்துக் கொண்டார்.
பண்பின் ஶிகரமான பெரியவாளும், அவரை நிறைய ஊக்குவித்து, அவருடைய அறிவு ஸுரங்கத்திலிருந்து பாளம் பாளமாக பாண்டித்யத்தை வெளிக் கொண்டு வந்தார்.
வைஷ்ணவரும் கூட, இப்போது, “தான்…. ஒரு விபூதி-ருத்ராக்ஷம் அணிந்த, ஏகதண்டியான ஒரு ஸன்யாஸியிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை; ஒரு ஞான ஹிமாத்ரியிடமிருந்து பொங்கியோடும், ஞான கங்கையில் மூழ்கி, குளித்து, குடித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறோம்“, என்று அனுபவபூர்வமாக உணர்ந்தார்!
அவருடைய வைஷ்ணவ ஸித்தாந்தத்திலிருந்து, அத்வைதம் எப்படி மாறுபடுகிறது என்பதை, உயர்வு-தாழ்வு வித்யாஸம் காட்டாமல், ஸ்ரீ ஆச்சார்யாள் பாஷ்யத்தில் சொல்லியிருப்பதை அங்கங்கே லேஸாக கோடிட்டு காட்டியதும், அந்த வைஷ்ணவரும் பரந்த மனஸோடு அதை ஸ்லாகித்துக் கொண்டார்.
இப்படியாக ரொம்ப நேரம், இந்த அழகான வித்வத் ஸம்பாஷணை நடந்து, மிக மிக இனிதாக, நன்றாகவே முடிந்தது.
“ஒங்களோட ஶ்ரமத்தை பாராட்டாம, நா… அழைச்சதை ஏத்துண்டு, இத்தன நேரம்…. என்னை வித்வத் கடல்ல மூழ்கடிச்சுட்டேள் ! ரொம்ப ஸந்தோஷம்!…..”
மஹா ஸரஸ்வதி வீணையை மறைத்துவிட்டு, தண்டத்தை சுமந்து கொண்டு, தன் முன் “விநயத்தின்” ரூபமாக நிற்பதை, இப்போது அந்த வைஷ்ணவர் நன்றாக உணர்ந்திருந்தார்.
“பெரியவாளுக்கு தெரியாத ஶாஸ்த்ர ஞானம்….. தாஸனுக்கு இல்ல! ஆனா… தாஸனுக்கு தெரியாத கருணை, பெரியவாளுக்கு இருந்தததுனாலதான், கூப்டு அனுப்பி, அனுக்ரஹம் பண்ணியிருக்கா!…….”
இதைச் சொல்லி முடிக்கும் போதே, அந்த வைஷ்ணவரின் ஹ்ருதயமும், கண்களும், குரலும் தழுதழுத்து….!
அப்படியே “தண்டம்” போல் கீழே விழுந்து பெரியவாளை நமஸ்காரம் செய்ய முற்பட்டவரை……
“வேணாம்! ஒங்களுக்கு ப்ரதிக்ஞா பங்கமாய்டும்!……”
விநய ஸம்பன்னர் தடுத்தார்! அதில், நாமெல்லாம் பண்ணுவது போல், குத்திக் காட்டும் எகத்தாளம் கிஞ்சித்தும் இல்லை!
“ப்ரதிக்ஞை-ல்லாம் மனுஷ்யாளை முன்னிட்டு பண்ணினதுதானே? ஸன்னிதானத்ல…அதுக்கு ப்ரஶக்தியில்ல [தெய்வத்துக்கு அது பொருந்தாது!]…..”
கண்ணீர் துளிர்க்க, பெரியவாளை விழுந்து விழுந்து ஸேவித்துத் தீர்த்தார்!
கல்பனையிலேயே நம்மால் அந்த காட்சியில் ஒன்றி, அந்த வைஷ்ணவரை நமஸ்கரிக்க தோன்றுகிறது!
ஸாக்ஷாத் ஸ்ரீமன் நாராயண ஸ்வரூபமாகவே நின்று, தன் பக்தனின் நமஸ்காரத்தை ஏற்றுக் கொண்டார்… “நாராயண! நாராயண!” என்ற நாமத்துடன்!
“பெரியவாளை நமஸ்காரம் செய்ய மாட்டேன்!” என்றவர், தானே… தன் நிபந்தனையை தகர்த்து எறிந்தார்!
அன்று, அங்கு சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் பரமபதமான ஸ்ரீவைகுந்தத்திற்கு மானஸீகமாக நிஶ்சயம் போயிருப்பார்கள்! ஏனென்றால், பகவானும் அப்படி! பக்தனும் அப்படி!
“பெரியவா….. தாஸனுக்கு, மந்த்ராக்ஷதை அனுக்ரஹிக்கணும்…”
தன்னையே ப்ரஸாதமாக தந்துவிட்ட நம் பெரியவா…. அவருக்கு மந்த்ராக்ஷதையையும் அனுக்ரஹித்தார்!
“பெரியவா கையால… மந்த்ராக்ஷதை எதுவும் வாங்கிக்க மாட்டேன்..”
வைஷ்ணவரின் ரெண்டாவது நிபந்தனையும் “ஃபணால்!!”
குழைந்து போய் நின்று கொண்டிருந்த அந்த வைஷ்ணவ பக்தரிடம் இப்போது பகவானே குழைந்து போனான்!
“என்னோட ஆசைக்காக, ஒங்களோட மூணாவுது ப்ரதிக்ஞையையும் விடலாம்-ன்னு தோணித்துன்னா.. ஒரு மஹா வித்வான் வந்தும் கூட, நம்ம மடத்ல அவருக்கு ஸம்பாவனை பண்ணல-ங்கற கொறை… எனக்கு இல்லாம இருக்கும்….”
அம்மாடீ! அம்மாடீ! வருமா… இந்த பரந்த ஹ்ருதயம்!
ஸ்ரீ வைஷ்ணவர் ரொம்பவே நெகிழ்ந்து போய்விட்டார்!……. கண்ணீர் பொங்க, தழுதழுக்கும் குரலில்……
“பெரியவா எது பண்ணினாலும்… என்னோட பரம பாக்யமா ஏத்துக்கறேன்”
உடனே மிகவும் உயர்ந்த ஸால்வை ஒன்றை கொண்டு வரச்சொல்லி, ஸ்ரீமடத்திலிருந்து அளிக்கும் இந்த உயர்ந்த ஸம்பாவனையை, யாரை விட்டுக் குடுக்கச் செய்தார் தெரியுமா?…….
“கண்டிஷன் போடறார்.. பெரியவா!…” என்று பெரியவாளுடைய தூதராக ஸ்ரீ வைஷ்ணவரிடம் தூதாக நடந்த, அந்த மஹா வித்வானைக் கொண்டே, அந்த ஸம்பாவனையை செய்யச் சொன்னார்…
நம்முடைய மனஸிலும், “மங்களம் ஶுப மங்களம்” என்று ஒரு கண்ணீர் கலந்த ஸந்தோஷம் பரவி நிறைவதை அனுபவிக்கலாம்!
அறியாமையால் அஹம்பாவம் கொண்ட ஒருவனை, விநயமான ஒரே ஒரு பதிலால், தன்னுடைய பக்தனாக ஆட்கொண்ட அதிஸயமும் உண்டு.
ஒருநாள் விடியும் நேரத்தில், மாம்பலம் ஶிவா-விஷ்ணு கோவிலிலிருந்து திருவான்மியூருக்கு பெரியவா பாதயாத்திரையாக போய்கொண்டிருந்தார்.
அப்போது முதல்வராயிருந்தவர் ஶ்ரீ பக்தவத்ஸலமும், சில போலீஸ் அன்பர்களும் அவருடன் நடந்து வந்தனர்.
திடீரென்று எதிர் திசையிலிருந்து ஒருவன் பெரியவாளை நெருங்கினான். பெரியவாளை பற்றி நன்கு அறிந்தவனாக இருந்தாலும், செருப்பைக் கூட கழற்றாமல், அவரை நோக்கி வந்தான். கண்களில் அலக்ஷ்யமும், அவமர்யாதையும் தாண்டவமாடியது!
எங்கேயாவது பெரியவாளை அவன் தொட்டுவிடப் போகிறானே! என்று விரைந்த பக்தர்களும், போலீஸாரும் கைகளால் அரண் அமைத்தனர்.
“எதுக்கு இப்போ இதெல்லாம்?”
அவர்களை விலக சொல்லிவிட்டு கனிவோடு அவனிடம் கேட்டார்.
“ஒனக்கு என்னப்பா வேணும்?”
“எனக்கொண்ணும் வேணாம்…. ஆமா..! ஶங்கராச்சாரியாரு, பெரியவரு-ன்னு பேசிக்கறாங்களே! அது நீங்கதானே?”
திமிரோடு விஜாரித்தான்.
சந்தனக் குழம்பாக அவனைப் பார்த்தார்…
“அதிருக்கட்டும். ஒம்பேரென்ன? இந்த விடியக்காத்தால எங்க போய்ண்டிருக்க…?”
பரிவாக விஜாரித்தார்.
அவன் தன் பெயரை சொன்னதோடு, “ஏன்? எனக்கு ஜோலியில்லியா? வேலைக்குத்தான் போய்க்கினு இருக்கேன்”
அஸ்த்ரம் போடுவது போல் வெடுக்கென கூறினான்.
“நீங்கல்லாம் மடாதிபதிங்க..! சோம்பேறிங்க..! உருப்படியா காரியம் எதுவும் செய்யாதவங்க..!”
ஏளனம், கண்டனம் தொனித்தது…!
அவனுடைய திமிரை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை…!
“ஆமா….. ஒனக்கு எங்க வேலை?”
“கிண்டியில. ஸரி…. ஒங்ககிட்ட ஒண்ணு கேக்கறேன்…! இந்த…. இந்து மதத்தை யாரு உண்டாக்கினாங்க?”
வினாவில்…. ஞானம் தேடும் விநயமோ, அறிவுப்பசியோ கொஞ்சமும் இல்லை…!
ஞானமேருவோ…..”தெரியாதேப்பா” என்று சொன்னதும், அவரை வெற்றி கொண்ட இறுமாப்பில் அவன் மேலும் தொடர்ந்தான் ஒரு ஏளனமான சிரிப்புடன்…
“ஹெஹ்ஹெஹ்ஹே ! தெரியாதுங்கறீங்க! அப்புறம் சாத்திரம் அப்பிடி சொல்லுது, இப்பிடி சொல்லுது-ன்னு சொல்லி, கல்லு சிலை மேல பாலை ஊத்து, நெருப்புல நெய்யை ஊத்து-ன்னு சொல்றீங்களே? இதெல்லாம் நல்லதுக்குன்னு எப்பிடி நம்பறதாம்?”
மிகவும் ஶாந்தமாக ஸம்பாஷித்தார்….
“அதிருக்கட்டும்… கிண்டிக்கி போகணும்னியே, இந்த ரோடுல போனா கிண்டி வந்துடுமா?”
மெல்லிய குரலில் “ஸந்தேஹம்” கேட்டார்…..
“அட! அதான… நா… போய்க்கிட்டிருக்கேன்!”
அவன் கேள்வியில்….. “இதென்ன அனாவஶ்ய கேள்வி?” என்ற கோபம் தொனித்தது.
“ஆமா…. இந்த ரோடு, யார் போட்டது?”
அவனுடைய “புத்திஶாலிதனத்தை” கிளறி விட்டார் அறிவிற்கு அறிவான தயாபரன்.
“இதுவா? இது என்னோட பாட்டன், முப்பாட்டன் அவுங்களோட முப்பாட்டன் காலத்துலேந்து இருக்குற ரோடு…! இத…. யார் போட்டா என்ன? அதுக்கு… இப்ப.. இன்னா வந்திச்சு? இது, கிண்டிக்கு போவுது; அம்புட்டுதானே வேணும்?”
“இது கிண்டிக்கு போற ரோடுன்னு நிச்சியமா சொல்றியா?”
“இதுல இன்னா ஸந்தேகம்? தெனோமுந்தான் நா…. போய்கினு இருக்கேனே…! மேலாலும் ஒஸர பாருங்க..! எந்தெந்த ரோடு எங்க போவுதுன்னு கைகாட்டி போர்டு போட்டிருக்காங்கல்ல… நம்ம ஸர்க்காருல..?”
திமிங்கிலமாக தன்னை நினைத்து ஆடிக் கொண்டிருந்த சிறு மீன், இப்போது மெதுவாக மீட்பு வலையில் சிக்கிக்கொண்டிருந்தது..!
“பாத்தியா! நானும் ஒன்னைபோலத்தாம்ப்பா….! இந்த ரோடு யார் போட்டதுன்னு அலட்டிக்காம, மேல இருக்கற கைகாட்டி போர்டை நம்பி நீ போற மாதிரி, நானும், இந்த இந்து மதம் யாரு உண்டாக்கினான்னு விசாரப்படாம போறேன். நீ… இந்த கைகாட்டிய நம்பற. ஆனா, இதுகூட காத்துலயோ மழைலயோ தெசை மாறலாம்; கீழ கூட விழலாம்….! நா… இந்த ஶாஸ்த்ரம், வேதங்கறதை அப்டியே நம்பி போறேன்…! அதெல்லாம், என்னைவிட எவ்ளவோ பெரியவா, முப்பாட்டன்னு ஆயிரம் ஆயிரம் வர்ஷங்களா நெலைச்சு இருக்கறத நம்பறேன்… நம்ப சொல்றேன்”
குரலில் பரிவு ததும்பியது.
“ஸெரிப்பா..! ஒனக்கு ஜோலியிருக்குன்னு சொன்னியே? என்னப்போலவா என்ன? ஜாக்ரதையா போய்ட்டு வாப்பா”
அபயகரம் உயர்த்தினார்.
அடுத்த க்ஷணம், பெரியவா எதிரில் நின்று கொண்டிருந்தவன், செருக்கென்னும் செருப்புகளை உதறிவிட்டு, நெடுஞ்சாண்கிடையாக பெரியவா பாதத்தில் விழுந்தான்.
“என்ன மன்னிச்சுடுங்க ஸாமீ!”
கன்னங்களை கண்ணீர் நனைத்தது, நா தழுதழுத்தது.
அவனிடம் இருந்தது, உண்மை தெரியாத அறியாமை! உண்மையான திறந்த மனஸுடன் உண்மையை உள்வாங்கிக் கொண்டான். அதன்பின் பலமுறை பல முகாம்களில் பெரியவாளை வந்து தர்ஶித்தான் அந்த பரம பக்தன்.
Those who came to scoff, remained to pray!…….
நிறைகுடமோ, காலிக்குடமோ ரெண்டுமே கூத்தாடாது! ஆட்டமெல்லாம் அரைகுறையாக இருப்பதால்தான்! அப்படி அரைகுறையாக நிரம்பி கூத்தாடிய குடம் ஒன்றை, தன் கிடுக்கிப்பிடியால் ஆடாமல் நிறுத்தியதோடு, அதை நிரப்பவும் செய்த அழகுதான் என்னே!
வெளியூரிலிருந்து வந்து, பெரியவாளை தர்ஶனம் பண்ணிவிட்டு, மறுநாள் காலையில் ஊருக்குக் கிளம்ப உத்தரவு கேட்டார்…. ஒரு பக்தர்.
“நாளைக்கி விடிகாலமே ஊருக்குப் போறியா? நாளக்கி… ஸ்ரீராமநவமியாச்சேப்பா! ...”
மௌனமாக இருந்தார்……மறுபடியும் பேச ஆரம்பித்தார்…..
“வந்ததுதான் வந்தே…. ஒண்ணு… இங்க மடத்ல ராமநவமி பூஜைக்கு இருக்கணும்! இல்லாட்டா… இன்னி ஸாயங்காலம் ரயிலுக்காவது போயிருக்கணும்.! அப்போ, ஊருக்குப் போய்ச் சேந்து, at least ஆத்துலயாவது பூஜை பண்ண முடிஞ்சிருக்கும்…! ஆத்தையும் கோட்டை விட்டுட்டு, இங்கயும் இல்லாம, நாளைக்கி காலம்பற பஸ்ல போறேங்கறியே!…..”
பக்தர்களின் பணிவான பக்தியைக் கண்டும் மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ளலாம்; அஹம்பாவம் அதிகமாகிப் போன பக்தர்கள் மூலமாகவும், குருவோ, பகவானோ எல்லாருக்கும் பாடம் கற்றுக்கொடுப்பார்கள்.
நாம் எல்லாருமே பகவானுடைய பொம்மைகள்தானே !
அந்த பக்தர், ரெண்டாவது ரகம் ! விதண்டாவாதி! மர்யாதை முறை பார்க்காமல், பெரியவாளிடமே விதண்டாவாதம் செய்வார்.
அவரை வ்யாஜ்யமாக வைத்து, உலகுக்கு பாடம் புகட்ட, பக்குவமான நேரத்தை பெரியவா இப்போது உண்டாக்கினார்.
“இல்ல….பெரியவா…! நா….வேதத்ல ஸ்பஷ்டமா சொல்லியிருக்கறதுகளைத்தான் follow பண்றது…! வேதந்தானே நமக்கு எல்லாம்! [ யாரிடம் கதையளக்கிறார் ?வேதவேத்யனிடமேவா!!] அதுல இல்லாதது, நமக்கெதுக்கு?…..”
பெரியவா மௌனமாக இருந்தார்….
அடைப்பு இன்னும் இருக்கே! ஸரிதான்…. குத்தி எடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு!
பெரியவாளிடம் மிகவும் ஸரியாகத்தான் பேசுகிறோம் என்ற எண்ணத்தில், ப்ரஸங்கமே பண்ண ஆரம்பித்தார், அந்த பக்தர்….
“வேதத்ல… ராமனை, க்ருஷ்ணனைப் பத்தியெல்லாம் எங்க இருக்கு? வேதம் உண்டாகி, அப்றம் எத்தனையோ காலம் கழிச்சுப் பொறந்து, அதப் பின்பத்தினவாதானே அவாளும்? அதுனால, ராமர், க்ருஷ்ணர் ஸமாச்சாரமெல்லாம் எதுவும் நா…. எடுத்துக்கறதேயில்ல பெரியவா! ஶ்ரீராமநவமியும் பண்றதில்ல!…ஏன்? ராமர் படங்கூட ஆத்துல கெடையாது!……”
பெரியவாளையே மடக்கிவிட்டாராம்! சுற்றி இருந்தவர்களை நோட்டம் விட்டபடி ஒரு கர்வம் பொங்கும் பார்வையும், லேஸான புன்னகையுமாக, பெரியவாளைப் பார்த்தார்…. அந்த ‘வேததர்ம ரக்ஷகர்’!
அப்படியென்றால் அவர் வேதோக்த கர்மாக்களை மட்டுமே செய்பவரா? என்றால், அதுவும் இல்லை !
பெரியவாளுக்கா இது தெரியாது? அப்பாலுக்கப்பால் இருப்பது போல் தெரிந்தாலும், அருகிலும் அருகாக இருக்கும் ஆத்மநாதன் இல்லையா?
“பெரியவாதான் பேசறாளா?” என்று அத்தனை பேரையும் ஆஶ்சர்யத்துக்கும், ஒருவித அச்சத்துக்கும் உள்ளாக்கி, புறுபுறுபுறு-வென்று கம்பீரமான ஒரு வேகம் பெரியவாளின் உள்ளிருந்து, பயங்கர வார்த்தைப் புயலாக வெளியே வந்ததும், அந்த பக்தரை விளாசு விளாசென்று விளாசினார்!
“ஓஹோ! வேதத்துல இல்லாத எந்த ஒண்ணும்…. ஒனக்குத் தள்ளுபடியாடாப்பா? ஸெரி, அப்போ காலங்கார்த்தால ஏந்துண்டவொடனே tooth paste, அப்றம் coffee.. மூஞ்சில முழிக்கறியே! டூத்பேஸ்டும், காபியும் வேதத்ல சொல்லியிருக்கோ?…
அப்றம்… soap தேச்சிண்டு குளிக்கறியே, அந்த ஸோப்பு, அப்றம் ஒன் ஆம்படையா…. grinder-ல அரைச்சு, Prestige cooker-ல ஸமைச்சதை ஸாப்டறியே, அந்த க்ரைண்டரும், குக்கரும் வேதத்ல சொன்னதுதானாடாப்பா?….
எல்லாத்தையும் விட, office-ன்னு போறியே, அதத்தான், ஜீவனோபாயத்துக்கே வழியா வெச்சிண்டு போறியே, suit மாட்டிண்டு! ஸூட் வேதத்ல இல்லேங்கறது இருக்கட்டும்; மொதலுக்கே மோஸமா, வேதத்ல… ப்ராஹ்மண ஜாதிக்காரனை, ஆஃபீஸ் உத்யோஹம் பாக்கச் சொல்லியிருக்கோ?….
ஆஃபிஸுக்கு scooter-ரோ, bus-ஸோ, electric Train-னோ எதுலயோ ஒண்ணுல போறியே! அந்த வாஹனாதிகள்ளாம்… எந்த வேதத்ல சொல்லியிருக்கு?…..
ஆத்துல…. ரூம் ரூமா bulb போட்டு எரிக்கறியே, வெய்யிலுக்கு ஸொகம்மா fan போட்டுக்கறியே…. அது எந்த வேதத்ல சொல்லியிருக்குடாப்பா?….
cinema, cricket-ல்லாம் பாக்கறியே…. அதுவும் வேதத்ல சொல்லியிருக்கோ?….”…
பக்தர் முகத்தில் ஈயாடவில்லை!
“இன்னூண்ணும் சொல்றேன்…. கேட்டுக்கோ! வேதத்ல எங்கியுமே direct-டா…இந்த மாதிரி ஒரு அத்வைத ஸன்யாஸி, மடம்-ன்னு ஒண்ணை வெச்சிண்டு, public-கா பூஜை பண்ணிண்டு, பூஜை ப்ரஸாதம் குடுக்கலாம்-ன்னு இருக்கறதாத் தெரியல..ன்னுகூட, ஒன்ன மாதிரி மேதைகளோட ஆராய்ச்சில வந்தாலும் வரலாம்! அதுனால, நீ இப்போ எங்கிட்ட கேக்கற ப்ரஸாதமே கூட, வேதத்ல சொல்லாததுதான்..ன்னு ஆறது…போயிட்டு வா!....” என்றாரே பார்க்கலாம்!
மாஜி விதண்டாவாதி ஆடியே போய்விட்டார்!
அழுது கொண்டே….தடாலென்று தண்ட நமஸ்காரம் பண்ணினார்…
“பெரியவா! க்ஷமிக்கணும்…..அஞ்ஞானத்ல பேசிட்டேன்…மன்னிச்சிடுங்கோ!…..
ஸூர்யனையும், அக்னியையும், ஹாலாஹலத்தையும் தன்னுள் கொண்டும், ஸதா ஶாந்தமாய் வெண்பனி மலையில் தன்னுள் லயித்திருக்கும், ஶுத்த ஸ்படிகஶங்காஶமான ஸதாஶிவம், பனியாய்க் குளிர்ந்தது.
“பாருப்பா……வேதவ்ருக்ஷத்ல, புதுஸு புதுஸா கெளைகள், எலைகள்-னு…. நெறையா தோணிண்டே இருக்கா..! அதுனால, அதெல்லாத்தையும் வேதமாத்தான் மதிச்சு, நாம அநுஸரிக்கணும். மூலமா… ஒரு theory இருந்து, அப்றம் காலத்துக்கு காலம் அதை adapt பண்ணி, புதுஸு புதுஸா discovery பண்ணினா, அதுகளையும் செய்யறோம்?…
இது ஒரு அம்ஸம். இன்னொரு அம்ஸம்… வேதத்துல என்னென்ன கார்யம் சொல்லியிருக்கோ…. அனுமதிச்சிருக்கோ.. அந்த கார்யங்களுக்காகவே, ஆனா வேதத்துல சொல்லாத உபகரணங்களை பிற்காலத்துல கண்டுபிடிச்சிண்டே வந்திருக்கா. வேதத்ல, அத்யயனம்-யஜ்ஞம்-பூஜை-ஜபம்- த்யானம்..ன்னு மட்டும் சொல்லி நிறுத்திடல ! எழுந்ததும் தந்த-தாவனம்னு பல் தேச்சுக்கறது, அப்றம் ஸ்நானம் பண்றது, ஸாப்டறது, பானம் பண்றது, ஸ்வதர்ம-கர்மா பண்ணி ஸம்பாதிக்கறது, வாழ்க்கைன்னு உண்டாகியிருக்கறதுல, அங்க-இங்க ஓடறது, ப்ரயாணம், recreation-னு கொஞ்சம் உல்லாஸமாயிருக்கறது… இப்டி எல்லாமே, வேதத்ல அனுமதிச்சிருக்கற கார்யந்தான்!…
ஆனா, அந்தக் கார்யங்கள் பண்றதுக்கு, அன்னிக்கி இருந்த உபகரணங்கள், இன்னிக்கி வேற மாதிரி இருக்கலாம். அன்னிக்கி குதிரை மேலேயோ, மாட்டுவண்டிலேயோ ப்ரயாணம் பண்ணினா, இன்னிக்கி ஸ்கூட்டர், எலக்ட்ரிக் ட்ரெயின், பஸ் அது இதுன்னு வந்திருக்கலாம்.
இதுகளை, ‘வேதத்ல சொன்னபடியே இருந்தாத்தான் ஏத்துப்பேன்!’-ன்னு ஒரு பாலிஸியா வெச்சிண்டு… தள்ளுபடி பண்ண வேண்டியதில்ல!…
இந்த உபகரணங்கள்ள, எதெது வேதத்தோட Spirit-க்கு விருத்தமா[விரோதமா] இருக்கோ, அனாசாரத்த உண்டாக்கறதோ, அதையெல்லாந்தான் தள்ளுபடி பண்ணணும்.
டூத்பேஸ்ட்லேர்ந்து, காபிலேர்ந்து ஆரம்பிச்சு, அனாசாரம் கலந்ததை எல்லாம், நிஷேதிக்கணும் [விலக்கணும்]. சிலது, ஸந்தர்ப்பக் கொடுமைனால வந்த அனாசாரமாயிருக்கு! ப்ராஹ்மணன் வைதிக வ்ருத்தியை விட்டுட்டு, ஆஃபீஸ், கம்பெனி-ன்னு உத்யோஹம் பாக்கறது-ங்கறது… இப்டி உண்டானதுதான்! இது பெரிய்…ய்ய அனாசாரந்தான்! பெரிய்…ய்ய அபசாரந்தான்! ஆனாலும் என்ன பண்ணலாம்? avoid பண்ண முடியாததா இருக்கே!….
அதுனால, ரொம்ப பெருமை, பெருமையா “நாமாக்கும் பெரிய உத்யோஹம் பண்ணி, வாரி வாரிக் குவிக்கறோமே ! இன்னும் பெருஸ்…ஸ்ஸா பண்ணி, ஜாஸ்தியாக் குவிச்சுடணும்”-னு பறக்காம, பகவான்ட்ட மன்னிப்புக் கேட்டுண்டு, ‘இப்டி இருக்கே!‘-ன்னு தாபப்பட்டுண்டுதான், வாழ்க்கையோட அத்யாவஸ்ய தேவைக்கானதை மட்டும், ஸம்பாதிச்சுக்கணும்…..
நெறைய time ஒழியும்படி பண்ணிண்டு, அந்தத் டயத்ல, வேதாத்யானாதிகள், அனுஷ்டானாதிகள் பண்ண ஆரம்பிக்கணும்.
ரிடையர் ஆனாவுட்டு, வேற எங்கியாவது வேலைக்கு போயி ஸம்பாதிக்க ஆசைப்படாம, வேதத்துக்கு-ன்னே…. வாழ்க்கைய… அர்ப்பணம் பண்ணணும். அப்டி பண்றதா… இப்போவே ஸங்கல்பம் பண்ணிக்கணும்…..
ராமநவமி, கோகுலாஷ்டமி… இன்னும் இப்போ இருக்கற ரூபத்ல ஹரிகதை, பஜனை-ன்னெல்லாம் வேதத்துல இல்லாததுகளும், வேதவழில நாமெல்லாம் சேரறதுக்கு ஒத்தாஸை பண்ற ஸாதனங்கள்தான்! வேதகாலத்து புருஷஸிம்ஹங்களா இல்லாம, பூஞ்சையா வந்திருக்கற பின்தலைமுறைக்காராளை, அவாளோட மனஸுக்கு ரஞ்சகமான மொறைலயே வேதவழிக்கு கொண்டுபோய் சேத்து, பரமோபகாரம் பண்ணிண்டு வந்திருக்கறது….. இந்த பண்டிகைகளும், கதாகாலக்ஷேபங்களும், பஜனைகளும்தான்!
ஸங்கீத கச்சேரி-ல, பல்லவி பாடறது-ன்னு சன்னபின்னலா…. தாளத்தை வித்யாஸப்படுத்தி பாடறதை, ரொம்ப தேர்ந்த விதவான்கள்தான் ரொம்பவுமே ரஸிச்சு, அதுல தாங்களும் பங்கு எடுத்துப்பா!
மத்தவாளுக்கு அது என்னிக்குமே….. கடபுடாதான்!
அது மாதிரிதான், வைதீகாநுஷ்டானங்கள்ளாம், பூஞ்சையான நமக்கு கடபுடாதான்!
பல்லவிக்கு முன்னாடி….. ஸர்வஜனரஞ்சகமா அநேக கீர்த்தனைகள், பல்லவிலேயே ராகமாலிகை, ஸ்வரம், அப்றம் துக்கடா-ன்னு கச்சேரி பத்ததில நன்னா எளக்கி குடுத்து, லேசு பண்ணி, எல்லாரையும் please பண்ணிட்டா…. அதனாலேயே அவாளும், “இந்த பல்லவி ஸமாசாரம் என்னன்னு நாமளும்தான் தெரிஞ்சுப்போமே!-ன்னு interest எடுத்துக்கறாளோல்லியோ?……
அதே மாதிரிதான்… ராமநவமியும், ஜன்மாஷ்டமியும், பஜனையும்….. நமக்கெல்லாம் ரஞ்சகமாவும் இருந்ததுண்டு, அதோட…. ‘இதுக்கெல்லாம் கூட, வேதந்தானே மூலம்-ங்கறா?…. அதுலயுந்தான் நமக்கு பரிச்சயம் வேணும்’..ன்னு நம்மளை உத்ஸாஹப்படுத்தற incentive-கள்!
பல்லவின்னாலும், துக்கடான்னாலும் எல்லாமே ஸங்கீதம்தானே?
அந்த மாதிரி, வாஜபேய யாகத்துலேந்து….. ‘ஹரி [bol]போல்‘ வரைக்கும் எல்லாமே ஒரே ஸநாதன தர்மத்தோட spirit-ல உண்டானதுதான்! துக்கடா கேக்கறதுலயே ஆரம்பிச்சவா…. அப்றம் கொஞ்சங்கொஞ்சமா… ஈடுபாடு ஜாஸ்தியாயிண்டே….. போயி, ராகம் கண்டுபிடிக்கறது, தாங்களே பாட்டு கத்துக்கறதுன்னு போயி, பல்லவி பாடறதுலயே…. expert-ஆ ஆனதாகக்கூட ஒண்ணு ரெண்டு கேஸ்… நானே பாத்திருக்கேன்.
கச்சேரி-ன்னா, அதுக்கு நடுநாயகம் பல்லவிதான். “இன்னிக்கி என்ன main?“..ன்னு அதைத்தான் மெயின்-னாவே வெச்சிருக்கறதா தெரியறது!
அப்டிதான்….. வேத ஸம்ப்ரதாய பத்ததி-ன்னா, அதுக்கு… வேத யஜ்ஞாதிகள்தான் மெயின். அதுதான் நமக்கு பூர்த்தி ஸ்தானம்.
அந்த யஜ்ஞாதிகளை பண்ணணுமே தவிர, அதுதான் எல்லாம்-ன்னு சும்மா வாயால சொல்லிண்டு, ஆனா….. அதையும் பண்ணாம, அதுகிட்ட அழைச்சிண்டு போறதுகள்…… எந்த லக்ஷ்யத்துல கொண்டுபோய் சேக்கறதோ, அந்த லக்ஷ்யத்தோட spirit-லியே பொறந்ததுதான். அதுனால, யஜ்ஞாதிகள் பண்றவாகூட, இதுகளையும் தள்ளாமை அநுஷ்டிக்கத்தான் வேணும். மத்த ஸமூஹத்துக்கும் அப்பத்தான் தடுமாறாம வழிகாட்ட முடியும். இன்னிவரைக்கும்….. நல்ல சிஷ்டாசாரத்தோட இருக்கறவா…. அப்டித்தான் ரெண்டையுமே அனுஷ்டிச்சிண்டும் வரா..!
நீயும்….. ஸ்ரீ ராமநவமி பூஜை மாதிரி சின்னதா….. ஒரு பூஜை-ல ஆரம்பிச்சு, வாஜபேயி ஆற வரைக்கும் மேல மேல அபிவ்ருத்தியாகணும்! நாளைக்கி…… இங்கியே வழக்கமான மடத்து பூஜையோட.. ராமர் பூஜையையும் பாரு! ரெட்டை ப்ரஸாதமும் தரேன்! ஸந்தோஷமா போய்ட்டு வா!……”
“கட்டாயம்…. பெரியவா சொன்னபடி follow பண்ணி, பெரியவா ஸந்தோஷப்படும்படியா இருக்கேன்! இன்னிக்கி…. மடத்லேயே தங்கிட்டு, நாளக்கி ஶ்ரீராமநவமி பூஜைய பாத்துட்டு கெளம்பறேன்…”
சிரித்துக் கொண்டே ஆஶிர்வதித்து….. வேதம்!
அள்ள அள்ள குறையாத்து அன்பும், கல்வியும். அதே போலத்தான் பெரியவாளின் மஹிமையும்! இப்போதைக்கு, பாலன் ஸ்வாமிநாதனுடன் ஸாரம் க்ராமத்துக்குச் செல்வோம்…..
சாதுர்மாஸ்யம் முடிந்து பரமகுரு ஸ்வாமிகள் “ஸாரம்” என்ற க்ராமத்துக்கு மேனாவில் கிளம்பிவிட்டார். இனி ஸ்வாமிநாதனின் மனநிலையை அப்படியே தத்ரூபமாக.. அனுபவிப்போம்……
“பெருமுக்கல்-ல அப்போ பரமகுருவை அடிக்கடி தர்ஶனம் பண்ணினேன். நெறைய தடவை போவேன். சாதுர்மாஸ்ய வ்ரதம் முடிஞ்சு அவர் அந்த ஊர் கோவிலுக்கு போனார். அப்போ நா…. எட்ட நின்னுண்டு அவரை பார்த்தேன். அப்போ… இன்னது-ன்னு சொல்ல தெரியாத ஏதோ ஒண்ணு…. என் மனஸ்ல ஆழமா பதிஞ்சுது…! அப்போ… எனக்கு பன்னண்டு வயஸ்தான்னாலும், பல விஷயங்களை ஆச்சார்யாள் எங்கிட்ட அந்தரங்கமா சொல்லியிருக்கார். அப்போதிக்கி…. அம்மா அப்பாவோட ஆத்துக்கு போனாலும், ஆச்சார்யாள், இங்க பக்கத்ல ஸாரம்-ங்கற க்ராமத்துக்கு வந்திருக்கார்-ன்னு தெரிஞ்சதும் “அந்த ஏதோ ஒண்ணு” என்னை வீட்டை விட்டு கெளப்பித்து!
ஒருநா…. விடியறதுக்கு முன்னாடியே என்னோட க்ளாஸ்மேட் க்ருஷ்ணஸ்வாமியாத்துக்கு போனேன். அவனோட அப்பா வெங்கட்ராமய்யர் ஒரு பெரிய வக்கீல்…! அவாத்து கூடத்ல [living room] அவனோட பாட்டி கொறட்டை விட்டுத் தூங்கிண்டிருந்தா! க்ருஷ்ணஸ்வாமியும், அவனோட அத்தை பஸங்க ரெண்டு பேரும்…. பாய் ஒரு பக்கம், தலாணி ஒரு பக்கம்னு கும்பகர்ண உபாஸனை பண்ணிண்டிருந்தா!
க்ருஷ்ணஸ்வாமியத் தட்டி எழுப்பினேன்…! அவன் எந்திருக்கற மாதிரி தெரியல…! சட்னு அவனோட அத்தை பிள்ளை ஒத்தனை மெதுவா தட்டி, “மொள்ள வெளில வா” ன்னு கூப்டேன்.
“இத்தன விடியகாலேல எங்கடா கூப்படற?…”-ன்னான்.
“ஸத்தம் போடாத எங்கூட வா” ன்னு என்னோட கூட்டிண்டு போய்ட்டேன். [ஆஹா! பாக்ஶாலி! நம்முடைய மனஸின் சத்தம் அடங்கினால், ஸ்வாமிநாதன் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றுவிடுவான்!!]
ரொம்ப தூரம்… நடந்தே… போனோம்.! போறவழில கால் ரொம்ப வலிச்சுது. அப்போப் பாத்து… மடத்து வண்டி ஒண்ணு, ஸாரம் க்ராமத்துக்கு போறதை பார்த்தோம்.
ஸெரி…. அதுல ஏறி போய்டலாம்னு பார்த்தா……!! எனக்கு ஒரே ஆனந்தம்!! அந்த வண்டிக்கு முன்னால ஆச்சார்யாளோட மேனா போய்ண்டிருக்கு!!
மேனா தூக்கற போயிகள் ரொம்ப வேகமா போய்ண்டிருந்தாளா….. ஸெரி, பின்னால போற வண்டில போய்ட வேண்டியது-தான்னு ஓடிப்போய் வண்டியை பிடிச்சுட்டோம்! ஏன்னா… மேனாவைத்தான் பாக்க முடிஞ்சுதே தவிர, மேனாரூடரை பாக்க முடியாதுன்னு தெரிஞ்சுது…!
இந்த வண்டில “கார்வார்” வெங்கட்ராமய்யர் இருந்தார். அவர் ரொம்ப கறார் பேர்வழியாக்கும்! அந்த கறாரை…. எங்கிட்டயும் காட்டினார்!
“மடத்தை சேர்ந்தவாளுக்குத்தான் மடத்து வண்டி“…….ன்னுட்டார்!
அப்றம் என்ன? நடராஜா ஸர்வீஸ்தான்!
ரெண்டு பேருமா ஒரு வழியா மடத்து முகாமுக்கு போனோம். என்னோட பரமகுரு “தனியா ரெண்டு சின்ன பஸங்க எப்டி வந்தான்னு?” கேக்காம, ரொம்ப ப்ரேமையோட எங்களை பாத்தார்……..
அதைவிட ஸர்வ ஸஹஜமா “ஸ்வாமிநாதா, இங்கியே இருந்துடேன்!“……..ன்னார்…!
எனக்கும் அவரோடேயே இருந்துடமாட்டோமான்னு தோணினாலும், இப்போ அவர் அப்டி கேட்டதும், ஆத்தை விட்டு சொல்லிக்காம கொள்ளாம வந்துட்டோமா, அம்மா அப்பா எல்லாரும் தவிப்பாளேன்னு இருந்துதா? குரு-ட்ட நெஜத்த சொல்லிட்டோம்.
ஆனா பெரியவாளோ, “வந்ததுதான் வந்தே! ரெண்டு நாளாவுது இருந்துட்டு போ! ஆத்துக்கு இப்போவே தகவல் சொல்லிடச் சொல்றேன்”…ன்னு சொல்லிட்டார்.
ரெண்டு நாள் கழிச்சு, மடத்து வண்டிலியே எங்களை ஆத்துக்கு அனுப்பிச்சும் வெச்சார்”
தன் நடராஜா ஸர்வீஸ், குருநாதரின் ப்ரேமை எல்லாவற்றையும் நினைத்து அழகாகச் சிரித்தார்.
No comments:
Post a Comment