Wednesday, August 19, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 16

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி16
(sujatha&venkatesan)6381369319
இன்னும் மதுரை பகுதி திருப்பதிகளில் இரண்டு பாக்கி. முதலில்.  ஶ்ரீவில்லிப்புத்தூர் மதுரையிலிருந்து 79 கிமீ. மறுநாள் விடிகாலம் கிளம்பி ஶ்ரீவில்லிப்புத்தூர் இரண்டு மணி நேரத்தில் போய்விடலாம். ஒரு ஆட்டோகாரரிடம் லாட்ஜ் காட்ட சொன்னதில் கோயிலிலிருந்து சற்று தொலைவில் கொண்டு விடுகிறார். ஆனால் கோயில் உள்ள தெருவிலேயே நிறைய வீடுகளில் தங்க இடம் தருகிறார்கள். ஆனால் கோடை மாதங்களில் தண்ணீர் ப்ரச்னை இருக்கும்
இனி இவர்…..
ஒவ்வொரு பெண்ணும்  தந்தைதாய் வீட்டிலிருந்து புக்ககம் சென்று அந்த வீட்டில் விளக்கேற்றி,  புகுந்த இடம் சரியான இடம்தான் என்று ஒரு தீர்மானம் வரும் வரையில்,  பெத்த தகப்பனுக்கு மனம் கனத்துத்தான் இருக்கும். பெண்ணும் மாப்பிள்ளையும் மனமகிழ்ச்சியோடு குடும்பம் நடத்துவதைப் பார்த்த பின்னர் ஒரு நிம்மதி ஏற்படும்

என்னதான் இருந்தாலும் தான் செல்லமாக வளர்த்த பெண்ணைத்  தன் மடியில் வைத்துத் தாரை வார்த்துக்கொடுக்கும் போது அவரையறியாமல்  அடிவயிற்றிலிருந்து விம்மி ஆனந்தம் கண்ணீராக அவர் கண்ணில்  ஊற்றாகப் பெருக்கெடுக்கும். இது ஒரு ஆனந்த நிலை; அனுபவித்தவர்க்கே புரியும் அற்புத உணர்வு.

அப்படிப்பட்ட  அனுபவத்தை  அனுபவித்த பெற்றவர் பலரைப் பார்த்திருக்கிறேன்’  நானும் அந்த சுகத்தை  அனுபவித்திருக்கிறேன். அந்த ஆனந்தக் கண்ணீருக்கு  என்ன பொருள் என்று யோசித்திருக்கிறேன். பெண்ணிற்கு ஒரு நல்ல வாழ்வைத் தேடித்தரவேண்டும் என்னும் பொறுப்புடைய  தகப்பன்,   தன்  பொறுப்பென்ற  கனம்  சரியான முறையில் சரியான  இடத்தில் இறக்கி வைத்த  ஒரு நிம்மதி, ஆனந்தம் என்றே தோன்றுகிறது,  சாதாரணமான  மானுடப் பெண்களுக்கே  இப்படிப்பட்ட  நெகிழ்வு ஏற்படுகிறது ஒவ்வொரு தகப்பனுக்கும் என்றால்  லோக மாதாவான ஆண்டாளை  மகளாகப் பெற்ற பெரியாழ்வாரின் நிலை  சொல்லவும் கூடுமோ! மஹாலக்‌ஷ்மி ஆண்டாளை மகளாக மனதார ரசித்து வாழ்ந்த பெரியாழ்வாரின் நிலை சொல்லவும் கூடுமோ?

* தமிழக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த மிகவும் பழைமைவாய்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்குள்ள வடபத்ரசாயி திருக்கோயில் 1,300 ஆண்டுகள் பழைமையானது. திருப்பாவை என்னும் தெய்விகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்தக் கோயில் நகரம்தான்.

* ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குவது, ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாள் கோயில்.

* இந்தக் கோயில் கோபுரம் 196 அடி உயரமும் 11 நிலைகளையும் 11 கலசங்களையும் கொண்டது. இந்தக் கோபுரத்தில் சிலைகள் எதுவும் கிடையாது. தமிழக அரசின் சின்னமாக இந்தக் கோயிலின் கோபுரம் விளங்குகிறது.

* தமிழகத்திலேயே பெரியாழ்வார், பெரிய கோயில், பெரிய குளம், பெரிய பெருமாள், பெரிய கோபுரம், பெரிய விமானம், ஆகியவற்றைக் கொண்ட ஸ்தலம். இங்குள்ள மாரியம்மன் கோயில்கூடப் பெரிய மாரியம்மன் கோயில் என்றுதான் அழைக்கப்படுகிறது. பெரிய கூரை வேயப்பட்ட கோயில் இது.
எல்லா பெருமாள் கோயில்களிலும் கருடாழ்வார் பெருமாளுக்கு எதிர்ப்புறம் இருப்பார். இங்கு பெருமாள், தாயார், கருடாழ்வார், மூவருமாக இருக்கிறார்கள். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்ற தத்துவத்தின் அடிப்படையாக இது பார்க்கப்படுகிறது.

* எல்லா கோயில்களிலும் ஒரு விமானம்தான் உண்டு. இந்தக் கோயிலில்தான் கருவறையில் இரண்டு விமானங்கள் இருக்கும்.

* கள்ளழகரிடம் ஆண்டாள், திருவரங்கம் ரங்கநாதனை எனக்குத் திருமணம் செய்து வைத்தால் நூறு தடா வெண்ணெய்யும் நூறு தடா அக்கார அடிசிலும் உனக்குப் படையலிடுகிறேன் என்று சொல்லி வேண்டிக்கொள்வார்.

* ஆண்டாள் அவதரித்து சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய ராமாநுஜர் அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றி வைக்கிறார். அதனால்தான் ராமாநுஜரை 'வாங்கண்ணா கோயில் அண்ணா' எனச்சொல்லி ஆண்டாளே எழுந்து வந்து வரவேற்றதாக ஐதிகம். அதனால்தான் மூலவரிடமிருந்து ஏழாவது அடியில் ராமாநுஜருக்கு தங்கச்சிலை வைத்திருப்பார்கள்.
108 திவ்யதேசங்களில் 56 வது திவ்ய தேசமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலின் தெய்வம் வடபத்ரசாயி ஆலமரத்தில் சாய்ந்து இருப்பார்.

* ராமாநுஜர், வேதாந்த தேசிகர், மணவாளமாமுனிகள் இவர்கள் மூவருடனும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தொடர்பு உண்டு. வேதாந்த தேசிகர், ஶ்ரீவில்லிபுத்தூர் குறித்து 29 பாசுரங்கள் பாடியுள்ளார். மணவாளமாமுனிகளுக்காக மார்கழி மாதம் முடிந்ததும் 'எண்ணெய்க்காப்பு உற்சவம்' என்று ஒரு உற்சவம் இங்கு சிறப்பாக நடைபெறும்.

* இங்குள்ள ஆண்டாள் கிளி மிகவும் விசேஷமானது. ஆண்டாள் ரங்கனை மணப்பதற்காக மூன்று பேரைத் தனித்தனியாக தூது அனுப்புகிறார். முதலில் மழையைத் தூதாக அனுப்புகிறார். மழை பெருமாளின் பேரழகைப் பார்த்ததும் பொழிந்து சொல்ல வந்த விஷயத்தை மறந்துவிடுகிறது.

ஆழிமழைக் கண்ணா... மழையின் அறிவியலை விளக்கும் ஆண்டாளின் பாசுரம்... திருப்பாவை 4
அடுத்ததாக வண்டைத் தூது அனுப்புகிறார். வண்டு, பெருமாளின் மாலையில் இருக்கும் தேனை அருந்திவிட்டு, அங்கேயே மயங்கிக் கிடந்து விடுகிறது. அடுத்ததாகத்தான் கிளியைத் தூது அனுப்புகிறார். 'சொன்னதைச் சொல்லுமாம் கிளி.' கிளி தவறாமல் ஆண்டாள் சொன்னதைச் சொல்ல ரங்கமன்னர் ஆண்டாளின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கிறார். அதனால்தான் இங்குள்ள 'ஆண்டாள் கிளி' மிகவும் விசேஷம்…..
             தொடரும்.




No comments:

Post a Comment