நெல்லை சுற்றுலா 3
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோவில் இதுவாகும். இரண்டு கோவில்களும், 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் கோபுரங்களும் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். புராணங்களின்படி, சிவபெருமான் தமது தாண்டவ நடனத்தை ஆடிய பல்வேறு தலங்களில் நெல்லையும் ஒன்றாகும். இதனால், பரத நாட்டியம் போன்ற பழமையான நடனக்கலைகளுக்கும் இதர கலைகளுக்கும் முக்கியமான இடமாக திருநெல்வேலி கருதப்படுகிறது. இப்படிப்பட்ட இடத்தில் குடி கொண்டு உள்ள தெய்வமான சிவபெருமான், பார்வதியுடன் நெல்லையப்பராக காட்சி தருகிறார். இந்த கோயிலில் இப்போதுதான் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. வாருங்கள் நெல்லையப்பரை தரிசித்துவிட்டு வரலாம். அதனுடன் நெல்லையப்பர் கோயிலின் அருகே என்னென்ன இடங்கள் இருக்கின்றன, அவற்றிற்கு போகும் வழி, தூரம், நேரம் ஆகியவற்றையும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தாமிர அம்பலம்
பொதுவாக சிவன் கோயில்களில் இல்லாத சில சிறப்புகள் இந்த கோயிலில் இருக்கும். நெல்லையப்பருக்கும், காந்திமதியம்மனுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் உள்ளே, தாமிரத்தினால் ஆன மேடை என்னும் பொருள் படும் தாமிர அம்பலம்/தாமிர சபை அமைக்கப்பட்டு உள்ளது. திருக்கல்யாணம், நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற சிறப்பான விழா நாட்களில் இக்கோவிலைத்தரிசனம் செய்வது இனிமையான அனுபவமாகும்.
விழாக்கள்
அக்டோபர் மாதம் 15 முதல் நவம்பர் மாதம் 15 வரை அதாவது தமிழ் மாதமான ஐப்பசி திங்களில் மேலே கூறிய விழாக்கள் நடைபெறும். தைப்பூச திருவிழாவானது இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் மற்றொரு திருவிழாவாகும். நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் இக்கோவிலை கண்டுபிடித்து வந்து சேருவதில் சுற்றுலாப்பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இருக்காது.
கோயிலின் அமைப்பு:
கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி இருக்கிறது. அதனைக் கடந்து சென்றால் கொடிமரம் இருக்கிறது. கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். அதற்கு முன்பு மிகப்பெரிய விநாயகர் வீற்றிருப்பார். சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சிலைகளும் இருக்கிறது. கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார்.
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. இதன் துவக்கத்தில் “இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஏழு ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் போன்ற சிலைகளும் இருக்கின்றன.
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சன்னதிகள் உண்டு. கோயிலின் மிகப்பெரிய உள் தெப்பம் இங்கு உள்ளது. கோயிலுக்கு வெளியே 50 மீட்டர் தொலைவில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.
இரண்டு கோயில்களுக்கும் கிழக்குப் பக்கத்தில் தனித்தனியே பெரிய கோபுரம் உள்ளது. அம்மன் கோயிலுக்குத் தென்பகுதியில் ஒரு வாசலும், வடக்குப் பகுதியில் சங்கிலி மண்டபத்தின் மூலையில் ஒரு வாசலும் உள்ளது. இதைப் போலவே சுவாமி கோயிலுக்கு வடபுறமும், மேற்குப் புறமும் தனித்தனியாக இரு வாசல்கள் இருக்கின்றன.
காந்திமதியம்மன்:
இத்திருத்தலத்தில் நெல்லையப்பருக்கு இருப்பது போன்றே காந்திமதியம்மனுக்கும் சமமானப் பிரிவுகளுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மன் வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.
கோயில்களில் சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும். ஆனால், இங்கு காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால் காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்கு காமீக ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.
காந்திமதியம்மனுக்கு வெள்ளிக் கிழமைகளில் “தங்கப் பாவாடை” அலங்காரம் செய்யப்படுகிறது.
தன்னில் நீராடும் தாமிரபரணி :இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணி தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளை தாமிரபரணிக்கு பவனியாகஎடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர். தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள். இதன் முக்கியத்து வத்தை உணர்த்துவதற்காக தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக சொல்வதுண்டு. அம்பிகை சன்னதி முன்பாக கங்கை, யமுனை இருவரையும் துவாரபாலகிகளாகவும் காணலாம். கங்கையும், யமுனை யும் தாமிரபரணி நகர் நாயகிக்கு பாதுகாவல் செய்வதில் இருந்தே, காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.
படங்கள் கோயில் கோபுரம்,தெப்பக்குளம்,சங்கிலி மண்டபம்,நந்தி
No comments:
Post a Comment