Monday, August 24, 2020

திருக்கடன் மல்லை (மாமல்லபுரம்)

🙏  நமஸ்காரம்    

63. திருக்கடன் மல்லை (மாமல்லபுரம்)

மூலவர் - தலசயனப் பெருமாள்
தாயார் - நிலமங்கை தாயார்
உற்சவர் - உலகுய்ய நின்ற பெருமாள்
விமானம் - ககநாக்ருதி விமானம்
தீர்த்தம் - புண்டரீக புட்கரணி, கருட நதி
நாமாவளி - ஸ்ரீ நிலமங்கைநாச்சியார் ஸமேத ஸ்ரீ ஸ்தலசயனத்துறைவான் ஸ்வாமிநே நமஹ.

வழித்தடம்:

சென்னையிலிருந்து ஏராளமான பேருந்துகள் உண்டு. சென்னையிலிருந்து கோவளம் வழியாகச் செல்லும் போது வழியில் உள்ள திருவடந்தை திவ்ய தேசத்தை சேவித்து விட்டும் செல்லலாம். மாமல்லபுரம் பேருந்து நிலையத்தின் நேர் எதிரில் அமைந்துள்ளது.

பாசுரம்:

பாராய துண்டு மிழ்ந்த பவளத் தூனை படுகடலி லமுதத்தைப் பர்வாய்க்கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புனர் மருதமிற நடந்த பொற்குன்றினை
காரானை யிடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே 
- பெரியதிருமொழி (1088)

இப்பூமியை உண்டுமிழ்ந்த பவளத்தானை தேவர்கட்கும் அசுரர்கட்கும் பாற்கடலின் அமுதத்தைப் பகிர்ந்து கொடுத்த சீராளனை தொண்டர்களின் உள்ளத்தில் முளைக்கின்ற தீங்கரும்பினை, யானையின் மருப்பையொடித்து மருத மரத்தைச், சாய்த்த பொற்குன்றினை, மழை மேகம் போன்ற நிறத்தானை, துன்பங் களைகின்ற கற்பகத்தை, நான் கடல் மல்லையில் கண்டேன் என்று திருமங்கையாழ்வாரால் சேவிக்கப்படும் இத்தலம் பல்லவ வேந்தர்களின் கலைக்களஞ்சியமான மகாபலிபுரத்தில் இருக்கிறது.

பூதத்தாழ்வார் - 1, திருமங்கையாழ்வார் - 26 என இருவரும் பாசுரங்கள் பாடியருளிய திவ்யதேசம்.

பாசுரம் பதவுரை:

பார் ஆயது - உலகமாக வுள்ளவற்றை யெல்லாம்
உண்டு - (பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து
உமிழ்ந்த - (பிரளயம் கழிந்தபிறகு) வெளிப்படுத்தினவனும்
பவளம் துணை - பவழத்தூண் போலே விரும்பத்தக்கவனும்
படு கடலில் அமுதத்தை - ஆழ்ந்த கடலிலுண்டான அமுதம்போலே போக்யனானவனும்
பரி வாய் கீண்ட சீரானை - குதிரை வடிவுடன் வந்த கேசியென்னுமஸூரனுடைய வாயைக் கிழித்தெறிந்த வீரலக்ஷ்மியையுடையவனும்
எம்மானை - எனக்கு ஸ்வாமியானவனும்
தொண்டர் தங்கள் சிந்தை உள்ளே - அடியவர்களுடைய நெஞ்சினுள்ளே
முளைத்து - தோன்றி
எழுந்த - அபிவிருத்தியடைகின்ற
தீம் கரும்பினை - இனிய கரும்பு போன்றவனும்
போர் ஆனை - போர் செய்யவந்த குவலயாபீடமென்னும் யானையினுடைய
கொம்பு - தந்தங்களை
ஒசித்த - முறித்தெறித்த
போர் ஏற்றினை - யுத்தஸாமர்த்திய முள்ளவனும்
புணர் மருதம் இற நடந்த - இரட்டை மருதமரங்கள் முறியும்படி தவழ்ந்தவனும்
பொன் குன்றினை - பொன்மலை போல் அழகியவனும்
கார் ஆனை இடர் கடிந்த - பெரிய கஜேந்தராழவானுடைய துன்பத்தைத் தொலைத்தவனும்
கற்பகத்தை - கல்பவருக்ஷம்; போல ஸர்வ ஸ்வதானம் செய்பவனுமான எம்பெருமானை
நான் கண்டது - அடியேன் ஸேவிக்கப்பெற்றது (எவ்விடத்திலென்றால்)
கடல்மல்லை தலசயனத்து - ஸ்தலசாயிப் பெருமாளுடையதான திருக்கடல் மல்லையிலே

பாசுரம் விளக்க உரை:

இத்திருமொழியாலும் மேல்திருமொழியாலும் திருக்கடல்மல்லைத் திருப்பதியை மங்களா சாஸநம் செய்தருளுகிறார்.  அத்திருப்பதியி லெழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு ‘ஸ்தலசாயீ’ என்று வடமொழித் திருநாமம்.  ஸ்ரீ புண்டரீக மஹர்ஷியின் கைகபினால் பூ விடுவித்துக் கொண்டு இன்னும் இப்படிப்பட்ட பக்தர்கள் கிடைக்கக்கூடுமோ வென்றெதிர்  பார்த்துக்கொண்டு தரைக்கிடை கிடக்கிறபடி.  அது தோன்ற இத்திருப்பதியின் திருநாமத்தைக் கடன்; மலலைத்; தலசயனம் என்று ஆழ்வார் அநுஸந்திக்கிறார்.

“பாரையுண்டு” என்னாது “பாராணதுண்டு” என்றது-அமுது செய்யாமல் மிச்சப்பட்ட வுலகம் எதுவுமில்லை என்றதைக் காட்டும்.  பாரென்று பேர் பெற்றவை எல்லாவற்றையும் உண்டு என்கை. பார் என்னுஞ் சொல் பூமிக்கு மாத்திரம்; வாசகமாயினும் இங்கு இலக்கணையால் உலகமென்று ஸாமாந்யப் பொருள் பெற்றிருக்கும்.

படுகடல் ஸ்ரீ ரத்னங்கள் படுகிற (உண்டாகிற) கடல் என்றும், ஆழ்ந்த கடல் என்றும் பொருள்.

கடன்மல்லைத்தலசயனத்து  ஸ்ரீ  தலசாயிப்பெருமா ளெழுந்தருளி யிருப்பதனால் தலசயனமென்று பேர் பெற்றதும் கடற்கரையிலே யுள்ளதுமான மல்லாபுரியிலே - என்று பொருள் விரித்துக்கொள்க. புண்டரீகர் என்கிற ஒரு பரமபக்தர், கடலின் இக்கரையிலே ஒரு பெரிய தோட்டம் ஏற்படுத்தி அதில் சிறந்த புஷ்பங்களை யுண்டாக்கி அவற்றைத் தொடுத்தெடுத்துக் கொண்டுபோய் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேணுமென்று பாரித்தார்;  கடலைக் கடந்து செல்லவேண்டி யிருந்தமையால் இக்கடலைக் கையால் இறைத்துவிட்டு வெறுந்தரையாக்கி நடந்தே செல்லுவொமென்று துணிந்து கடலை இறைக்கத் தொடங்கவே, எம்பெருமான் அவருடைய ஆதராதிசயத்தைக்கண்டு வியந்து உவந்து, தானே கடற்கரையிலே ஓடிவந்து அவரது தோப்பிலே தரைக்கிடை கிடந்து அவருடைய வழிபாடுகளை ஸ்வீகரித்தருளினன் என்பது புராணவரலாறு.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

ஸ்தல வரலாறு:

ஒரு காலத்தில் மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் ஏராளமான பறவை இனங்கள் கானம் பாட, மயிலினங்கள் ஆட, மலர்செடிகளும், மரங்களும், பூத்துக்குலுங்கும் அழகு ததும்பும் சோலைகளாக இருந்தன. அச்சமயத்தில் பாற்கடல் பரந்தாமன் மீது அளவற்ற பக்தி கொண்ட புண்டரீக முனிவர், பக்தி பெருக்கால் பித்தாகிப் போனார். அவர் அருகிலுள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை பறித்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் திருவடிகளில் சமர்ப்பிக்க நினைத்தார். பறித்த பூக்களை கூடையில் இட்டு, கிழக்கு நோக்கி கொண்டு செல்லும் போது, குறுக்கே கடல் வந்தது. பக்திப் பெருக்கால் கடலில் வழி ஏற்படுத்த தன் கைகளால் கடல் நீரை இரவு பகலாக வெளியே இறைத்தார்.  பல ஆண்டுகளாக இதைச் செய்தார். "பரந்தாமா நான் கொண்ட பக்தி உண்மையானால் கடல் நீர் வற்றட்டும். எனக்கு பாதை கிடைக்கட்டும். அதுவரை இந்தப் பூக்கள் வாடாமல் இருக்கட்டும்" என்றார். கடல் நீரை இறைப்பதென்ன சாத்தியமா?? ஒரே இரவில் சோர்ந்து விட்டார். பின் சோர்ந்தாலும் பரவாயில்லை, இறைவனின் பாதத்தில் பூக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இறைவனை நினைத்து நீரை வெளியேற்ற ஆரம்பித்தார். அப்போது அவர் முன்பு ஒரு முதியவர் வடிவில் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன்வந்து நின்றார். எம்பெருமான் தன் பக்தனிடம் விளையாடாமல் இருப்பாரா? அவர் தான் குரும்புக்காரராயிற்றே!! இப்போது அவர் புண்டரீக மகரிசியை மேலும் சோதிக்கும் வகையில், "கடல் நீரை இறைக்கிறீரே! இது சாத்தியமா? உருப்படியாக ஏதேனும் செய்யலாம் அல்லவா? எனக்கு பசிக்கிறது. சோறு கொடும்", என்றார் குரும்புக்கார பரந்தாமன். புண்டரீக மகரிஷி "முனிவரே! உமக்கு சோறு அளிக்கிறேன். அப்பணி முடிந்ததும், இப்பணியினை நான் தொடர்வேன். பெருமாளை நான் பார்த்தே தீர வேண்டும். என் பெருமாளைப் பார்ப்பதற்காக இந்த கடல் நீர் வற்றியே தீரும்", என்றார். மலர்க்கூடையை முதியவரிடம் கொடுத்து, "இதை வைத்திருங்கள். நான் சென்று உணவு கொண்டு வருகிறேன்" என்று கூறிவிட்டுச் சென்றார். மகரிஷி வருவதற்குள் இந்த பெருமாள் தரையில் சயனித்து காட்சி கொடுத்தார். தரையில் சயனித்திருக்கும் கோலத்தில் காட்சியைக் கண்டதும், ஆதிசேஷன் மேல் காட்சி தரும் எம்பெருமான் பரந்தாமன் ஸ்ரீமந்நாராயணன் இப்படி தரையில் காட்சி கொடுக்கிறாரே என்றெண்ணி தான் பறித்து வைத்திருந்த தாமரை மலரை இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து ஆனந்தமடைந்தார் புண்டரீக மகரிஷி. பின்பு "பெருமாளே! இந்த சிறியேனின் பக்திக்காக தாங்களே நேரில் வந்தீர்களா! உங்களையா பூக்கூடையைச் சுமக்கச் செய்தேன். என்னை மன்னித்து, நான் என்றென்றும் தங்கள் பாதத்தின் அருகில் அமரும் பாக்கியம் தந்தருள வேண்டும்" என்றும் வேண்டினார். பெருமாளும் அவ்வாறே வரம் தந்தார். சயனத் திருக்கோலத்தில் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் காட்சி கொடுத்ததால் "தலசயனப் பெருமாள்" என அழைக்கப்படுகிறார். தற்போதுள்ள கோவிலும் வெறுந்தரையிலே (ஆதிசேடன் மீது) எம்பெருமான் சயனித்திருக்க புண்டரீக மஹரிஷி கை கூப்பிய வண்ணம் அருகில் உள்ளார். 

சிறப்பு:

தாயாரும் தாமரை இன்றி நிலத்திலேயே அமர்ந்திருக்கும் ஒரே திவ்யதேசம். 

கடற்கரைக் கோவிலின் மூலவர் தலசயனத் துறைவார். உற்சவரின் திருநாமம் உலகுய்ய நின்றான் என்பதாகும். இங்கு உற்சவர் தம் கையில் ஒரு சிறு தாமரை மொக்குடன் திகழ்கிறார் இதை அவரே மூலவரின் பாதங்களில் சேர்ப்பிப்பதாகவும் ஐதீஹம். பார்ப்பதற்கு மிக்க ரம்மியமானவர் இவர். கையில் தாமரை மொட்டுடன் இருக்கும் உற்சவர் 108 இல் இவர் ஒருவர்தான். 

பன்னிரு ஆழ்வார்களில் இரண்டாவதான பூதத்தாழ்வார் அவதாரம் செய்த திருத்தலம் இதுவாகும்.

இப்போதுள்ள கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்படவில்லையென்றும், அக்கோவில் கடலுக்குள் மூழ்கிவிட்டதென்றும், கடலுள் கிடந்த இக் கருமாணிக்கம் (பெருமாள்) தன் பக்தரின் கனவில் தான் இருப்பதையுணர்த்த அந்த திவ்ய விக்ரஹத்தை எடுத்து வந்து இப்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தனர் என்றும் மரபுவழிக் கதைகள் உள்ளன.

இங்குள்ள ஆதிவராகர் கோவில், மும்மூர்த்தி மண்டபம், பாண்டவர் ரதங்கள், அர்ஜூனன் தவம், கண்ணபிரானின் கவின்மிகு லீலா விநோதக் காட்சிகள், தசாவதாரக் காட்சிகள், இராமானுஜர் மண்டபம், திரௌபதி தேர், திருமாலின் சயன திருக்கோலங்கள் நின்ற, அமர்ந்த திருக்கோலங்கள் என்று எங்கு காணினும் விஷ்ணுவின் காட்சிகளும், இலட்சினைகளும், வைணவம் எத்துனை யாழமாக வேரூன்றி தழைத்துப் பரவி விரவியிருந்ததை எண்ணிப் பார்க்கும்போது நெஞ்சு விம்முகிறது.

பல்லவ மன்னர்கள் வைணவர்கள், வைணவம் பரப்பும் வீரர்களாகவும் இவர்கள் திகழ்ந்தனர். இங்கு சிம்ம விஷ்ணு என்னும் பல்லவமன்னன் தனது பக்தியின் அடையாளமாக ஆதிவராகர் குகைக் கோவில் அமைத்தான். இக்கோவிலின் உட்புறத்தில் ஸ்ரீசிம்மவிஷ்ணு போத்தாதி ராஜன் என்று பல்லவ கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. சிம்ம விஷ்ணுவுக்கு எதிரே அவனது மகன் மகேந்திர வர்மனுக்கும் இங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வராக மண்டபம் மும்மூர்த்தி மண்டபம் போன்றன சிம்ம விஷ்ணுவால் கட்டப்பட்டதாகும். பல்லவ மன்னர்கள் தங்களுக்கு தூய வைணவ பெயர்களையே வைத்துக்கொண்டனர் என்பதற்கு இதுவே சான்று.

ஆதிவராக மண்டபம் என்றும் ஒரு மண்டபம் இங்குள்ளது. இது இங்குள்ள மகிசாசுர மர்த்தினிக் குகையிலிருந்து தெற்கே உள்ளது. குகை மேற்கு நோக்கிய அமைப்பு. இதன் நடுவில் உள்ள கருவறையில் வராக மூர்த்தி உள்ளார். கல்வெட்டுக்களில் இக்கோவில் (ஆதிவராக மண்டபம்) பரமேச்சுர மகா வராஹ விஷ்ணுக் கிரஹம் எனக் குறிக்கப்பட்டுள்ளது. திருமாலின் 10 அவதாரங்களைக் குறிக்கும் கல்வெட்டும் இங்குள்ளது.

ஒரு காலத்தில் இங்கு ஏழு கோயில்கள் இருந்ததாகவும் அவைகள் கடல் கோளால் அழிக்கப்பட்டுவிட்டன வென்றும் அப்போது இந்நகரத்திற்கு 7 கோயில் நகரம் என்னும் பெயர் விளங்கியதாகவும் அறிய முடிகிறது. இதன்பின் பல்லவ மன்னன் ராஜ சிம்மன் காலத்தில் கடற்கரையில் 3 கோவில்கள் எழுப்பப்பட்டன. இக் கோயில்களின் அமைப்பைக் கண்டு சோழமன்னன் ராஜராஜ சோழன் வியந்து போற்றியுள்ளான். இதிலும் 2 கோவில்கள் கடல் வெள்ளத்தில் அழிந்து விட்டன. அக்கோயில் குறித்து இரண்டு பலி பீடங்களும் ஒரு கொடி மரமும் இன்றும் இருக்கின்றன. அழியாத ஒரு கோவில் இன்றும் கடல்வயப்பட்டே உள்ளது. சுற்றிலும் கடல் நீரால் சூழப்பட்டு கடல் அலைகள் கோவிலின் மதிற்சுவர்களில் அலைமோதிக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் சலசயனப் பெருமாளாகக் கொள்ளும் ஒரு கருத்தும் உண்டு. இந்தக் கோவிலில் தற்போது திருவாராதன வழிபாடுகள் இல்லை. இப்பெருமானைச் சேவிக்கும் போது இக்கோவில் அமைந்துள்ள சூழ்நிலையும் அலைமுழங்கும் திருப்பாற்கடல் நாதனையே சேவிக்கும் உணர்வைத் தரும். கடலுக்குள் அமிழ்ந்த கோவிலில் இருந்த பெருமாளைக் கொணர்ந்து கடற்கரைக்குச் சற்றுத் தொலைவில் ஊருக்குள் அமைத்துள்ளனர். இங்கு பள்ளி கொண்ட நிலையில் உள்ள பெருமாளுக்கே ஸ்தல சயனத் துறைவார் என்பது திருநாமம். இக்கோவில் தான் மங்களாசாசனம் செய்யப்படட திவ்யதேசமாகும். இதுதான் தல சயனமாகும். சிலர் இரண்டு கோவில்களும் (அதாவது சலசயனம், தலசயனம்) மங்களாசாசனம் என்று கூறுவர். இருப்பினும் தற்போது பெயர் பெற்றிருப்பது ஊருக்குள் அமைந்திருக்கும் தலசயனப் பெருமாள் கோவில் மட்டுமே.  இங்கு வழங்கப்படும் சலசயனம், தலசயனம் என்னும் இரண்டு சொற்களும், இரண்டு கோவில்களும் விரிவாக ஆராயத்தக்கது ஆகும்.

இங்கு ஸ்தல சயனப்பெருமாள் கோவில் அமைவதற்கு முன்பே சுமார் ஒரு யுகத்திற்கு முன்பிருந்தே ஆதிவராஹப் பெருமாள் கோவில் என்று ஒரு கோவில் இருந்தது. இப்போதும் அந்தத் தலம் இங்குள்ள கலங்கரை விளக்கத்திற்குச் செல்லும் பாதையின் ஓர் பால் அமைந்துள்ளது. ஏனத்துருவில் என்று திருமங்கையாழ்வார் இந்தப் பெருமாளையும் மங்களாசாசனம் செய்துள்ளார். இந்தக் கடன் மல்லையில் ஹரி கேசவர்மன் என்னும் ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் தினந்தோறும் இங்கிருந்து சுமார் 12 மைல் தூரமுள்ள திருஇடவெந்தை (திருவடந்தை) சென்று நித்ய கல்யாணப்பெருமாள் ஆதிவராக மூர்த்தியை சேவித்துவிட்டு ஊருக்குத் திரும்பி திருவாராதனம் முடித்துவிட்டு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இவனது பக்தியை மெச்சிய பெருமாள் இவன் பெருமையை உலகுக்கு உணர்த்த எண்ணி ஒரு நாள் திருவடந்தை பூமிப் பிராட்டியைச் சிறுபெண்ணாக்கி அழைத்துக் கொண்டு ஒரு முதியவர் வேடத்தில் மாமல்லைக்கு வந்தார். அப்போது திருவடந்தை நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்த ஹரி கேசவர்ம மன்னனிடம் பசிக்கு உணவு கேட்க, மன்னனோ தான் திருவடந்தை சென்று எம்பெருமானைச் சேவித்து விட்டுத் தான் உமது பசி தீர்க்க இயலும் என்று சொல்ல அதுவரை பசி பொறுக்க இயலாது என் பசிப்பிணி தீர்த்துப் போ என்று பெருமாள் சொல்ல, சற்றே யோசித்த மன்னன் இந்தக் கிழவனையே திருவடந்தைப் பெருமாளாக நினைத்துக் கொண்டு திருவாராதனைக் கிரமத்தில் ஈடுபட்டு உணவு எடுத்து வரும் வேளையில் முதியவரான இந்த வராகப் பெருமாள் தேவியை தனது வலப்பாகத்தில் வைத்து (வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையையும் பல்லாண்டு என்னுமாப் போலே) ஹரிகேச வர்மனுக்கு காட்சி கொடுத்தார். திருவடந்தையில் 365 கன்னியரை ஒரு கன்னிகையாக்கித் தன் இடபாகத்தி லேற்றார் இங்கோ தன் வலப் பாகத்தே வைத்து காட்சி கொடுத்து ஞான உபதேசம் செய்தார். எம்பெருமான் எப்போதும் தனது வலமார்பினைப் பிராட்டிக்குத் தந்திருப்பர். அதுபோன்று இவ்விடத்தில் காட்சியளித்தமையால் இத்தலம் திருவடந்தையிலும் சிறப்பும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும். மேலும் திருவடந்தையில் திருமணக்கோலத்தில் நித்ய கல்யாணப் பெருமாளாகக் காட்சியளித்தார். இவ்விடத்தில் ஏனப்பிரானுக்கு ஹரிகேச வர்மனால் ஒரு கோவில் எழுப்பப்பட்டது. ஏனத்தின் உருவாகி நிலமங்கை யெழில் கொண்டான் வானத்திலவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ளக் கானத்தின் கடல் மல்லைத் தலசயனத் துறைகின்ற ஞானத்தின் ஒளியுருவை நினைவார் என்னாயகரே பிராட்டியின் பெயரான நிலமங்கை நாச்சியார் என்பதையும் திருமங்கையாழ்வார் இப்பாடலில் குறித்துள்ளார்.

மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள சிவன், திருமால் தலத்தையே திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ததாகத் தெரிகிறது. ஆழ்வார் தமது பாசுரங்களில் சிவபெருமானையும் சேர்த்து பாடியுள்ளமையையும் நம்மால் அறியமுடிகிறது.

பிணங்களிடுகாடதனுள் நடமாடுபிஞ்ஞகனோடு * 
இணங்குதிருச்சக்கரத்து எம்பெருமானார்க்குஇடம் *விசும்பில் 
கணங்களியங்கும்மல்லைக் கடல்மல்லைத்தலசயனம் * 
வணங்குமனத்தாரவரை வணங்குஎன்தன் மடநெஞ்சே!

இப்பாடலின் முதல் வரியில் "இடுகாட்டில் நடமாடும் இறைவனோடு இணங்கும் இறைவன்" என்னும் பொருளில் பாடியுள்ளமையால் கடற்கரை கோவில் என்பது உறுதியாகிறது. ஆனால் அக்கோவில் தற்போது மத்திய தொல்பொருள் இலாக்கா வசம் உள்ளது. இதில் பூஜைகள் எதுவும் நடைபெறுவதில்லை. சுற்றுலாத் தலமாகவே இயங்குகிறது. ஆனால் தற்போது திவ்யதேசமாகக் கூறப்படும் இத்லத்தில் சிவபெருமான் சன்னதி இல்லை. மேலும் கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்க்கையில், கடல் சீற்றத்தின் காரணமாக கி.பி 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர வம்சத்தில் வந்த பராங்குச மன்னரால் தற்போதுள்ள அருள்மிகு தலசயனப்பெருமாள் கோவில்
அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/1X_6eJh3keU

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

https://www.facebook.com/102047988262304/posts/126631989137237/?sfnsn=wiwspmo&extid=skKnCQhckZaJTwzS

No comments:

Post a Comment