Thursday, August 27, 2020

ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 1

ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 1


ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், ஶ்ரீ மஹா பாரதம், ஶ்ரீமத் பகவத்கீதை மாதிரி மஹா பெரியவாளுடைய திவ்யமான சரித்ரத்தை எத்தனை தடவை படித்தாலும் இப்போதுதான் முதல்முதலாக படிப்பது போல் புதிதாக, ஆனந்தமாக இருக்கும். நம்மை அப்படியே அல்லாக்காக பெரியவா வாழ்ந்த அந்தக் காலத்துக்கு தூக்கிக்கொண்டு போய்விடும்.

எத்தனை ஸதஸ்! எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பாத யாத்ரைகள்! எத்தனை அஸௌகர்யமான பொட்டைகாடுகள், க்ராமங்களில் முகாம், அதுவும் யானை, குதிரை, பஶுக்கள் பரிவாரங்களோடு! அதோடு மூன்று காலமும், துக்கிணியூண்டு கூட compromise பண்ணிக்கொள்ளாத ஶ்ரீ த்ருபுரஸுந்தரீ ஸமேத ஶ்ரீ சந்த்ரமௌளீஶ்வர பூஜை! கோடிக்கணக்கில் அன்னதானம்!

பகவானால் மட்டுமே இது ஸாத்யம்! மஹான்கள், பகவானின் மறு ரூபம் என்பதற்கு இந்த மாதிரி கார்யங்களே ப்ரமாணம்!

இந்த சரித்ரம், மஹாத்மா ஸ்ரீ ஸாம்பமூர்த்தி ஶாஸ்த்ரிகள் பெரியவாளோடேயே கூட இருந்து, குறித்து வைத்திருந்த தொகுப்புகளின் உதவியோடும் எழுதப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஸாம்பமூர்த்தி ஶாஸ்த்ரிகள் வேறு யாருமில்லை, ஸாக்ஷாத் பெரியவாளின் பூர்வாஶ்ரம இளைய ஸஹோதரர்.

இதில் ஶ்ரீ ரா. கணபதி, ஶ்ரீ பரணீதரன், இன்னும் பல பக்தர்களுடன், பெரியவாளே பகிர்ந்து கொண்ட, சில முக்யமான, ஸ்வாரஸ்யமான விஷயங்களையும் சேர்த்திருக்கிறேன்.

ஸ்ரீ ஆதிஶங்கரர் ஸ்தாபித்தருளிய ஸ்ரீ காமகோடி பீடத்தின் பரம்பரையில் 68-வது ஆச்சார்ய ஸ்வாமிகளாக எழுந்தருளிய ஜகத்குரு ஸ்ரீ ஶங்கராச்சார்யார் ஸ்ரீமத் சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ என்ற நம்முடைய மஹா பெரியவா, ஜயவருஷம், வைகாஸி மாஸம், 8-ம் தேதி [1894, மே மாஸம் 20-ம் தேதி] ஞாயிற்றுக்கிழமை, அனுஷ நக்ஷத்ரம் கூடிய புண்ய தினத்தில், பகல் நாழிகை 19-க்கு திருவவதாரம் செய்தருளினார். தென்னார்க்காடு மாவட்டம், விழுப்புரத்தில் நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தின் கீழ்ப் பகுதியில், அக்காலத்தில் ‘கோவிந்தராயர் வீடு’ என்னும் பெயருடன் விளங்கி வந்த க்ருஹத்தில், இந்த மங்கல நிகழ்ச்சி ஏற்பட்டது.

ஸ்ரீ ஸுப்ரமண்ய ஶாஸ்த்ரிகள் எனும் மஹா பாக்யவானும், அவருடைய தர்மபத்னி ஸ்ரீமதி மஹாலக்ஷ்மி அம்மையாரும், தங்களுடைய இரண்டாவது குமாரனாக இந்த புண்ய புருஷரை, நம்மைப் போல் கோடானுகோடி ஜீவராஸிகளை கடைத்தேற்ற வேண்டி, இந்த உலகுக்கு கருணையோடு அளிக்கும் மஹா பேறு பெற்றார்கள்.

பெரியவா, தன் பூர்வாஶ்ரமத்தில், கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட ஹோஸைல கர்நாடக ஸ்மார்த்த ப்ராஹ்மண வகுப்பை சேர்ந்தவர்.

இந்த ப்ராஹ்மண வகுப்பைச் சேர்ந்த சில குடும்பங்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன், கர்நாடக ராஜ்யத்திலிருந்து காவிரி பாயும் சோழ நாட்டில் குடியேறினார்கள். அவர்களில் ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதர் என்னும் மஹான், தஞ்சாவூர் நாயக்க மன்னர்களிடம் அமைச்சராக இருந்தார்.

திருவிடைமருதூரில் அக்குடும்பம் குடியேறியது. அதுதான் நம் பெரியவாளின் முன்னோர்களின் பரம பாக்யம் பண்ணிய குடும்பம். அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் சிலர், அப்போது திருவிடைமருதூரை அரஸாண்ட மஹாராஷ்டிர மன்னனான அமரஸிம்ஹ மஹாராஜா வின் [தஞ்சாவூர் ஸரபோஜி ராஜாவின் சித்தப்பா] தர்பாரில் கௌரவமான பதவிகளை வஹித்து வந்தார்கள்.

ஶ்ரீ கோவிந்த தீக்ஷிதரின் வழியில் வந்த ஸ்ரீ கணபதி ஶாஸ்த்ரிகள் என்பவர்தான் ஸ்ரீ ஸுப்ரமண்ய ஶாஸ்த்ரிகளின் தகப்பனார். அதாவது நம் பெரியவாளுடைய தாத்தா.

[இன்றைக்கும் கும்பகோணம் பக்கம் அமரேந்த்ரபுரம் என்று அழைக்கப்படும் இடம் உள்ளது. ஸமீப காலத்தில் வாழ்ந்த மஹா பெரிய தபஸ்வினி அம்மாளு அம்மாள், அந்த அமரேந்த்ரபுரத்தில் உள்ள தன்னுடைய குருவான ஶ்ரீ ராமச்சந்த்ர தீர்த்தரின் ஸமாதியை தன் யோகமஹிமையால் கண்டு பிடித்து, கீழே தோண்டிப் பார்க்க, ஶிவலிங்கம், அம்பாள், விஷ்ணு சிலைகள் கிடைக்க, அங்கே ஒரு அழகான கோவிலும் எழும்பியிருக்கிறது]

பெரியவாளின் தாத்தா ஸ்ரீ கணபதி ஶாஸ்த்ரிகள் இளவயதிலேயே ஶாஸ்த்ரங்களில் விற்பன்னராகவும், ரிக்வேதத்தில் நல்ல பயிற்சியும் பெற்றிருந்தார். தமிழ்,தெலுங்கு, கன்னடம், மராட்டி முதலான மொழிகளையும் நன்றாக அறிந்திருந்தார்.

அப்போது காமகோடி பீடத்தின் 64-வது ஆச்சார்யாளாக இருந்த ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் [பெரியவாளுக்கும் இதே நாமம்தான்] சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட ஶ்ரீ கணபதி ஶாஸ்த்ரிகளை, 1835-ல் ஸ்ரீமடத்தின் ஸர்வாதிகாரியாக நியமித்தார்.

64, 65-வது பீடாதிபதிகளின் காலத்திலும், ஸுமார் 50 வர்ஷங்களுக்கு மேலாக மடத்தின் ஸர்வாதிகாரியாக இருந்தார்.

ஸ்ரீ கணபதி ஶாஸ்த்ரிகளின் அண்ணாவின் புதல்வர்தான் ஸ்ரீமடத்தின் 65-வது ஆச்சார்யாளான ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.

ஶ்ரீகாஞ்சி காமகோடி மடத்தின் 62, 64, 65, 67-வது ஆச்சார்யர்களும், 68-வது ஆச்சார்யாளான நம் பெரியவா வரை, பெரியவாளின் குடும்பத்தை சேர்ந்தவர்களைத்தான் அம்பிகை தேர்ந்தெடுத்தாள்.

1840-ல் காஞ்சீபுரத்தில் காமாக்ஷி கோவில் கும்பாபிஷேகமும், 1848-ல் திருவானைக்கா அகிலாண்டேஶ்வரி அம்மனின் தாடங்கப்ரதிஷ்டையும் 64-வது ஆச்சார்யாளான ஶ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளால் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது.

இந்த இரண்டு மஹா வைபவங்களிலும் ஶ்ரீ கணபதி ஶாஸ்த்ரிகளுடைய திறமையும், பங்கும் அபரிமிதமாக இருந்ததால், ஸ்வாமிகள் அவரை அமோஹமாக ஆஸிர்வதித்தார். அக்காலத்தில், ஶ்ரீமடத்துக்கு பல நிரந்தரமான நன்மைகள் ஶாஸ்த்ரிகளால் செய்து வைக்கப்பட்டது. அவற்றில் முக்யமான ஒன்றை பார்ப்போம்…….

No comments:

Post a Comment