பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் பகுதி..21
(சுஜாதா&வெங்கடேசன்6381369319)
ராமநாதபுரம் 3,மதுரை பக்கம் இருக்கற ஐந்து திவ்யதேசம் சேவிச்சிட்டோம். இனி திருநெல்வேலி போய்ட்டா விடுபட்ட 10 ஐயும் சேவிக்கலாம்கறார். ஆனா நேரா திருநெல்வேலி அழைச்சுண்டு போமாட்டேன் வழில கழுகுமலைங்கற இடத்தில் புராதன ஆர்க்கியலாஜிகல் கோயில் இருக்குன்னு அதுபத்தி சொல்றார் .....
தமிழகத்திலிருக்கும் பழைமையான கோயில்களில் மிகப்பெரியது எது' என்று கேள்வி எழுப்பினால் உடனே ‘ திருவரங்கம் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில்’ என்று ஒரு பதில் சொல்வீர்கள். ஆனால், தமிழகத்திலிருக்கும் பழைமையான கோயில்களில் மிகச் சிறிய கோயில் எதுவென்று கேட்டால்..?
சற்று யோசிக்கத்தான் வேண்டும்.
தூத்துக்குடி அருகே, கழுகுமலையில் இருக்கும் வெட்டுவான் கோயில்தான் மிகச் சிறிய கோயில். கருவறை, கோபுரம், அர்த்தமண்டபம் என்று கோயிலுக்குரிய அனைத்து அம்சங்களுடன் 1200 ஆண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்ட மிகச் சிறிய கோயில் இது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கழுகுமலை பேரூராட்சி. இந்த ஊரிலிருந்து சுமார் ஒரு கி.மீ பயணித்தால் கழுகுமலை என்று அழைக்கப்படும் 'அரைமலை'யை அடையலாம். இந்த மலைமீதுதான் மலைக் குடைவரைக் கோயிலாக ஒற்றைப் பாறையில் (Monolithic rock temple) வெட்டுவான் கோயில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரேபாறையில் வெட்டப்பட்டுள்ளதால் இது ‘வெட்டுவான் கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோயில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் எனும் பாண்டிய மன்னன் காலத்தில், திராவிடக் கட்டுமானக் கலையமைப்பில் வெட்டப்பட்டது. தமிழகத்தின் 'எல்லோரா' என்று இந்தக் கோயிலை அழைக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு தனிக் கோயில் எப்படியெல்லாம் கருவறை, அர்த்தமண்டபம் என்று அமைக்கப்படுமோ, அதேபோன்று ஒற்றைப் பாறையிலே எழுப்பப்பட்ட அதிசயம் இந்தக் கோயில்.
மலைமீதிருந்து பார்த்தால் இந்தக் கோயில் கண்ணுக்கே தெரியாது. கிடைமட்டத்திலிருந்து 7.5 மீட்டர் ஆழத்தில் பாறையைச் செதுக்கி உருவாக்கியிருக்கிறார்கள். கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோயில் மேலிருந்து கீழ் நோக்கி வெட்டப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்காக எழுப்பப்பட்ட இக்கோயிலின் அடிப்பகுதி மட்டும் முழுமை பெறாமல் இருக்கிறது. முற்றுப்பெறவிட்டாலும்கூட, தெய்விகத் தன்மையுடன் பிரம்மா, திருமால், தேவகன்னியர்கள், பூத கணங்கள் என்று பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. சிம்மங்களின் சிற்பங்கள் அவ்வளவு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் கோயில் முகப்பில் சிவபெருமானும், உமையவளும் அருகருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் சிற்பம் பேரெழில் வாய்ந்தது. நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம்
இப்போது கோயில் கருவறைக்குள் சிவலிங்கத்துக்குப் பதில் பிள்ளையார் சிலை வைத்து வணங்குகிறார்கள். திருமலை வீரர், பராந்தக வீரர் எனும் பெயர் பெற்ற பாண்டிய நாட்டுப் படைகள் இந்த ஊரில் தங்கியிருந்தது பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.
இவர் சொல்லி முடிக்கவும் பஸ் வந்து நிற்கவும் சரியாக ...
கொளுத்தும் வெயில். தோ தெரியறது நடந்தே போயிடலாம்னு நடக்கறார்.
ரெண்டு பர்லாங் போனதும் கொதிக்கற பாறையில ஏற ஆரம்பிக்கறோம்.
சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலி ஏற்படுகிறது...
கல்லால் ஆன நாதஸ்வரம்
இத்திருக்கோவிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது.
எங்க அதிர்ஷ்டம் அன்னிக்கு பார்த்து வெட்டுவாங்கோயில் பூட்டி இருக்கு. எங்களைத்தவிர ஈ காக்கா இல்லை. தூஊஊரத்துல் ரெண்டு காதலர்கள். சுத்தி கம்பி வேலி கொஞ்சம் பிஞ்சு இருந்தது. அதுக்குள்ள நுழைஞ்சு எட்டி பார்க்கறோம். அருமையான சிற்ப வேலைகள்.
மறுபடி வெளியே வந்து சமணர் கோயில் மலைல ஏறச்சொல்றார். ஏன் ஒரு வைஷ்ணவப்பொண்ணை இங்கலாம் இந்த வெயில்ல கூப்பிடறீங்க...பெருமாளப்பார்க்கறதுன்னா வரேன்கறேன். அவர் கோச்சுண்டு செங்குத்தான பாறையில் மூச்சு வாங்க ஏறரார். மனசு கேக்காம நானும் போறேன்.
தீர்தங்கரர் சிலைகள் இருக்கு. ஒரு பாறை நிழலில் உட்கார்ந்து மாதுளம் பழம் சாப்பிடறோம்.
கீழே
கழுகுமலையின் அடிவாரத்தில் ஆறுமுகக்கடவுளான முருகப்பெருமானுக்கு குடவரைக்கோயில் உள்ளது. மூலவரான கழுகாசலமூர்த்தியின் கருவறையும் மலையை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு, மூலவரான கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானை சமேதராக மேற்கு நோக்கி பார்த்தபடி அருள்புரிகிறார். முருகன் கோவில்களில் மேற்கு நோக்கிய அமைந்துள்ள மூன்று கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலின் தெப்பக்குளத்தில், பால் போன்ற நிறத்தில் குடிநீர் கிடைப்பதால், சுற்றுப்புற கிராம மக்கள் அனைவருமே இந்த நீரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
படங்கள் கழுகுமலை வெட்டுவான் கோயில்.
தொடர்வது திருநெல்வேலி...
No comments:
Post a Comment