🙏 நமஸ்காரம்
67. திருகாட்கரை
மூலவர் - காட்கரையப்பான்,அப்பன்
தாயார் - பெருஞ்செல்வநாயகி, வாத்சல்யவல்லி
உற்சவர் - காட்கரையப்பான்
விமானம் - புட்கல விமானம்
தீர்த்தம் - கபில தீர்த்தம்
நாமாவளி - ஸ்ரீ பெருஞ்செல்வநாயகீ (வாத்சல்யவல்லி) ஸமேத ஸ்ரீ காட்கரையப்பன் ஸ்வாமிநே நமஹ
வழித்தடம்:
இத்தலம் ஷோரனூர் - எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் உள்ள இடைப்பள்ளி என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே 2 மைல் தொலைவில் உள்ளது.
பாசுரம்:
உருகுமால்நெஞ்சம் உயிரின்பரமன்றி *
பெருகுமால்வேட்கையும் என்செய்கேன்தொண்டனேன்? *
தெருவெல்லாம்காவிகமழ் திருக்காட்கரை *
மருவியமாயன்தன் மாயம்நினைதொறே.
திருவாய்மொழி (3612)
நம்மாழ்வார் மட்டும் பதினொன்று பாக்களில் மங்களாசாசனம்
பாசுரம் பதவுரை:
தெரு எல்லாம் காலி கமழ் – தெருவுகள் தோறும் செங்கழு நீர்ப்பூ வாஸிக்கப்பெற்ற
திருக் காட்கரை – திருக்காட்கரையென்னுந் திருப்பதியிலே
மருவிய – பொருந்திவர்த்திக்கிற
மாயன் தன் மாயம் – எம்பெருமானுடைய ஆச்சரியமான ஸெளந்தர்யசீலாதிகளை
நினைதொறு – நினைக்கிறபோதெல்லாம்
நெஞ்சம் உருகும் – நெஞ்சு சுட்டுக்குலைந்து உருகாநின்றது
உயிரின் பரம் அன்றி – ஆத்மாவுக்குத் தாங்கக்கூடிய அளவல்லாமல்
வேட்கை பெருகும் – ஆசை கரைபுரண்டு செல்லா நின்றது
தொண்டனேன் என் செய்கேன் – சபலனான நான் என்ன செய்யக் கடவேன்?
பாசுரம் விளக்க உரை:
திருக்காட்கரை யெம்பெருமானுடைய ஆச்சரியமான பரிமாற்றங்களை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு நீர்ப்பண்டமாகின்றதே யென்கிறார். நெஞ்சம் உருகுமால்=அநுபவத் திற்கு முதன்மையான சருவி நெஞ்சன்றோ: அதுவாயிற்று சிதிலமாகின்றது. அநுபவிக்கைக்கும் அநுபவித்துக் களிக்கைக்கும் முந்துறுமுன்னம் நெஞ்சுவேணுமே; அது சிதில்மா யொழிந்தால் என்ன வுண்டு? பெருக்காற்றிலே நீஞ்சப் புகுந்தவனுக்கு முதலடியிலேயே தெப்பம் ஒழுகத் தொடங்கினால் என்செய்வது? ப்ரதாநோபசுரணமான நெஞ்சு அழிகின்றதே வேட்கையும் உயிரின் பரமன்றிப் பெருகுமால்–ஆத்மாவால் தாங்க வொண்ணாதபடி அபிநிவேசம் பெருகுகின்றதே. ஆற்றுப் பெருக்குப்போலே மேன்மேலும் பெருகி வருகின்ற காதல் அணுபரிமாணமான ஆத்ம வஸ்துவின் அளவதன்றே! அடிதோறும் ஆல்! அல்! என்று விஷாதஸீசனம்.
என் செய்கேன் தோண்டனேன்! = நெஞ்சு உருகாதபடி செய்யவும் வேட்கை பெருகாதபடி செய்யவும் ஒரு பாயமறி கின்றிலேன். அவனுடைய திருக்குணங்களைத் தவித்தாலன்றோ இவை செய்யலாவது. நெஞ்சு உருகைக்கும் வேட்கை பெருகுகைக்கும் ஹேது சொல்லுகிறது மேல் தெருவெல்லாங் காவிகமழென்று தொடங்கி, குறுந்தெருவோடு நெடுந் தெருவோடு வாசியற எங்கும் நெங்கழுநீரின் நறுமணம் கமழப்பெற்றது திருக்காட்கரை வெளியே இப்பரிமளமானால் உள்ளே ஸர்வகந்தா என்னும் படியானவனுடைய பரிமளம் ஸாசாமகோசரம். அவனோ மாயன்–ஸெளந்தர்யம் ஸெளசீல்யம் முதலிய குணங்களினால் பிறரைப் பிச்சேற்றவல்லவன். அப்படிப் பட்டவனுடைய மாயம்–கிட்டடினபோது தாழநின்று பரிமாறின சீல குணம்; அதனை நிதொறும் உருகுமால் நெஞ்சம்–என்று முதலடியோடே அந்வயிப்பது.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்
ஸ்தல வரலாறு:
இப்பெருமானை மலையாளத்தில் வாமன மூர்த்தி என்று அழைத்து வழிபடுகின்றனர். இந்த வாமன மூர்த்தி திருக்கோயில் கொண்டுள்ள இடமே திருக்காக்கரா. திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலிக்கு நற்கதி வழங்கிய திருவோணத் திருநாளை தீபாவளியைப் போல் புத்தாடை அணிந்து குதூகலமாய் கொண்டாடுகின்றனர். மஹாவிஷ்ணு சங்கு, சக்கர, கதா, பத்ம ஹஸ்தங்களோடு மகாபலிக்கு காட்சி கொடுத்த திருக்கோலத்தில் இங்கு எழுந்தருளியுள்ளார். திருமால் மூவடிமண் வேண்டி ஈரடியால் மண்ணும், விண்ணும் அளந்து மூன்றாவதடியை மாவலியின் தலையில் வைக்க எத்தணித்ததும் வந்திருப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவே என்றறிந்த மாவலி எம்பெருமானைத் துதித்து ஒரு வரம் கேட்டான். அதாவது நான் ஆண்டுக்கு ஒரு முறை உலக மக்களைச் சந்திக்க விரும்புகிறேன். அதற்கு அருள்புரிய வேண்டுமெனக் கேட்டான். அவ்வாறாயின் இன்றைய தினத்தை மக்கள் விழாவாக எடுத்துக் கொண்டாடும் நாளில் உனக்கு அந்த நிலை உண்டாகுமென்றார். இத்தலத்தில் அந்த திருநாளான ஆவணி மாதம் திருவோணத்தன்று வாமன அவதாரத்தை நினைவு கூர்ந்து மக்கள் விழாவெடுக்கின்றனர். இக்கோவிலில் நடைபெறும் மிகப்பெரும் திருவிழாவான இதை ஓணத் திருவிழா என்றழைக்கின்றனர். ஓணம் பண்டிகை மலையாளத்தில் மிகப்பிரசித்தி பெற்ற திருவிழாவாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் மகாபலியும் திருவிழாவிற்கு வருவதாக ஐதீஹம். கேரள தேசத்தின் மிகப் பெருந்திருவிழா இது ஒன்றுதான்.
சிறப்பு:
தற்காலத்தில் புகழ்பெற்றுத் திகழும் கொச்சிப் பல்கலைக்கழகத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இயற்கை எழில் கொஞ்சும் செழுமை மிக்க சோலைகளின் மத்தியில் சீர்மை பெற்றுத் திகழ்கிறது இத்தலம்.
இத்தலத்தில் ஒரு தனிகன் வாழை மரங்களை நட்டுப் பயிர் செய்ததாகவும், அவைகள் குலை தள்ளாமல் தொடர்ந்து அழிந்து பட்டே போக அத்தனிகன் பொன் வாழைக்குலைகள் செய்து அப்பனுக்குச் சமர்ப்பிக்க எம்பெருமானின் திருவருளால் வாழை மரங்கள் வளர்ந்து வாழைகள் குலை தள்ளியதாகவும், எம்பெருமானிடம் நேர்ந்து இந்த வாழைப்பழங்கள் உருவானமையால் இதற்கு நேத்திரம் வாழைப்பழம் என்ற பெயருண்டாயிற்றென்றும் கூறுவர். இந்த தனிகன் சமர்ப்பித்த பொன் வாழைக்குலை ஒரு சமயம் காணாமல் போய்விட்டது. மன்னன் பலரையும் பிடித்து விசாரித்தார். அவ்வாறு விசாரித்து வருகையில் ஒரு யோகியைத் தீர விசாரிக்காமல் மிகவும் துன்புறுத்தியதாகவும், அந்நிலையில் அந்தப் பொன் வாழைக்குலை கர்ப்பக் கிரஹத்திற்குள்ளேயே இருந்ததாகவும், கண்டறியப்பட்டது. இதைத் தெரிந்து கொண்ட பிறகு, தன்னை மிகவும் இம்சை படுத்தியதைப் பொறுக்க முடியாத அந்தத் துறவி, சாபம் இட்டு விட்டுத் தற்கொலை செய்து கொண்டு உயிர்துறக்க, அந்தச் சாபம் நீங்குவதற்காக, பல முனிவர்களின் கருத்துப்படி மூங்கில் கூரை ஒன்றை உருவாக்கி, அதனுள் கோரைப் புற்களையிட்டுத் தீயை உண்டாக்கி பலநாள் எரித்து வெளிச்சத்தை உண்டாக்கி சாபம் தீர்க்கப்பட்டதாக வரலாறுண்டு.
உபன்யாசம் வீடியோ இணைப்பு:
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/WF152rNP5jc
ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:
அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
https://www.facebook.com/102047988262304/posts/128457805621322/?sfnsn=wiwspmo&extid=ZNEHMABAhYNJCMQI
No comments:
Post a Comment