Saturday, August 15, 2020

பாட்டி

88. பாட்டி (சிசீ6) #ganeshamarkalam

கருப்பிதான் என்னை வளர்த்து ஆளாக்கினா. கருப்பாயீன்னு பேர். என் பாட்டி. அப்பா ஆர்மீலே சண்டைலே சாமி கிட்டே போயிட்டாரு. அப்ப அம்மா வயித்துக்குள்ள இருந்தேனாம். ஒரே புள்ளைய பார்டருக்கு அனுப்பிச்ச தாய்னு அப்பரமா அரசாங்கம் இவரக் கூப்பிட்டு கவுரவிச்சாங்க. அப்பாக்கு கிடெச்ச மெடல் முகம் பாக்கர கண்ணாடி பக்கத்தில். அப்பப்ப எடுத்து புளி போட்டு தேய்ச்சு வைக்கும். தேய்க்கரப்ப என்னை கூப்டு கட்டிப் பிடிச்சிக்கும்.

என்ன பெத்துப் போட்ட அன்னிக்கே அம்மா மகமாயி கிட்டே போயிடிச்சாம். அப்பப்ப சொல்லி அளும். முடியாம படுத்துக் கிடக்கப்ப நான் பசியோட ஸ்கூல் விட்டு வரப்ப அலட்டிக்கும். “இம்புட்டு பெரீய பொறுப்ப இந்த வயசான காலத்தில் மடீலே போட்டிட்டு மகராசி போய்ட்டா!” கேட்டே புட்டேன். “பாட்டி, மகராசின்னா என்ன?” “அட போடா!” ஸ்கூல கேட்டப்ப லிஸ்ஸி மிஸ் சொன்னாங்க “புண்யம் செஞ்சவங்க”. “செத்துட்டா அப்படிச் சொல்லுவாங்களா மிஸ்?” “ஒரு வழீலெ அப்படித்தான்”.

பாட்டிகிட்ட 3 பசு மாடு. தாத்தா காலத்துலேயே பால் வியாவாரந்தான். அப்பவும் மாடு வச்சிருந்தாங்களாம். இப்ப 3. அதுகளை பாத்துகிடவே பாட்டிக்கு நாள்பூரா வேலை. தினம் பால் கறந்து அதை கலந்து சின்னதா மெஷீன்ல போட்டு ஓட்டி அப்பரம் வந்து கேக்கரவங்களுக்கு வித்துபுட்டு, அதில் கிடைக்கும் காசில் ரேஷன் அரிசி வாங்கியாரும். ஏதாவது மாட்டுக்கு சீக்குன்னா எங்களுக்கு ஒருவேளை சோறு கட். மாடுங்களை பாத்துக்கிட, தீவனம் வாங்கிப் போட்டு சிலவு ரெம்பன்னு சொல்லும். ஆனா நட்டமானாலும் அதுங்கள பட்டினி போட மாட்டேன்னு பிடிவாதமா. வயக்காட்டில் மேய்க்க கூட்டிப்போகும். கயிறு கட்ட வேண்டாம். 3 மாடும் பாட்டி சொல்பேச்சு கேட்டு கூடவே போயிட்டு வந்திடும்.

அன்னைக்கு டாக்டர் வர நேரம். மத்தியானமா. வரப்ப கூட நிக்கோணம். பாத்து ஏதுனாச்சியும் தடுப்பூசி போட்டிட்டு போவாரு. பாட்டி கிட்ட காசு வாங்க மாட்டாரு. “மருந்துக்கு மட்டும் தாங்கம்மா”. அப்பப்ப அவர் வூட்டுக்கு மீந்த பால கொடுத்திட்டு வரும். வரப்ப அவர் தந்தாருன்னு எனக்கு ப்ரிட்டான்யா பிஸ்கட். முழுப் பேக்கட்டை அப்படியே தந்திடும். 3 பிஸ்கெட் மாட்டுக்கு தந்திடுவேன். அதுங்க திங்காது. ஏன்னு கேப்பேன். பாட்டி சொல்லும் “அட்டையில் மாட்டுப் படம் போட்டு மில்க் பிஸ்கட்டுன்னு எளிதிருக்கு பாத்திருக்கும்.” நிஜமா சொல்லுதா விளையாடுதான்னு புரியாது.

மாட்டயே அம்புட்டு நல்லா கவனிச்சுக்கர பாட்டி பேரனை பாத்துக்காதா? இந்த வயசுலெயும் அது தன் தேவைகள குறைச்சிட்டு எனக்கு எல்லாம் நல்லா நடக்கோணம்னு செய்வத புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு யூனிஃபாரம் வாங்கன்னு தனக்கு சீலையே வாங்கிக்காது. பளசுதான். “எனக்கெதுக்குடா மவனே, சாணீலயும் மண்லேயும் கிடக்கேன், புதுசு போட்டுகிட்டா செய்வாக?” யூனிஃபார்ம் தவிர புதுச் சட்டைன்னு எனக்கும் இல்லை. வெள்ளச் சட்டை, சிவப்பு ட்ராயர். 3 ஜோடி. மாத்தி மாத்தி போட்டுக்கிடிவென். ரெண்டு நாளக்கு ஒருக்கா நல்லா துவச்சு காயப் போட்டு தலகாணிக்கடீலே அமுக்கித் வச்சிரும்.

பொறந்த நாளைக்கும் அதுதான். “மத்த பிள்ளைங்க கலர் சட்டை போட்டிட்டு வராங்க பாட்டி”. “வர பொறந்த நாளுக்கி உங்கப்பா வாங்கின மெடலை களுத்தில் யூனிபாரத்துக்கு மேல மாட்டிட்டு போ. ஒரு பய கிட்டே இருக்குதா கேளு?”

கொட்டாயில மாட்டுக்கு புல்லு போட்டிட்டு குந்திட்டு உக்காந்து பாட்டி பால் கறக்கர அளகு பாத்திட்டே இருக்கலாம். கறக்க முன்னாடி ஒவ்வொரு மாட்டு கிட்டேயும் பேசும். லக்ஷ்மி, சரஸ்வதி, கோமதின்னு பேரச் சொல்லும். பேர் கேட்டதும் அதுங்க தலய சிலுப்பிக்கும். கழுத்தில் கட்டின மணிச் சத்தம் என் காதில் விளும். ஓடிப் போய் பால் கறப்பதை பாக்கலாம்னு நின்னுக்கிடுவேன். மணிச் சத்தம் வச்சு மாட்டுப் பேர் சொல்லிடலாம். தகர டப்பாவில் குண்டுதான், ஒவ்வொண்ணும் வெவ்வேற கதை சொல்லும். பாத்தரத்தை காலிக்கிடுக்குலே வச்சிட்டு மொள்ள பேசிட்டே காம்ப நீவிட்டே இருக்கும். எண்ணை தடவி. மாடு பாட்டுக்கு பில்லத் திங்க சட்டுன்னு ரெவ்வெண்டு காம்பா ஆரம்பத்துலே நல்லா இழுத்து பாத்திரத்துக்கு நட்ட நடூலே பாலை பீச்சிக்கும். அந்த சத்தம் காதில் விளப்பதான் மாட்டுக்கு இவ ஆரம்பிச்சுடுச்சது தெரியும். ஆனா போட்டம் பாவம்னு விட்ரும். மடியில் பால் தீரப்ப ஒவ்வொரு காம்பா இளுத்து கொஞ்சம் மிச்சம் வச்சிடும்.

பால் பிடிச்ச பாத்திரத்தில் நுரை கும்பாச்சியா நிக்கும்.

கோமதிதான் கடைசீல கன்னு போட்டுச்சு. காளைக்கன்னா பொச்சு. “என்ன செய்யப்போர?” கேட்டேன். “நீ வச்சுக்கிடு”. “நான் என்ன செய்ய?” அது பெரீசானதும் கடாவுக்கு விட்டு காசு சம்பாதிக்கலாம். உன் இஷ்டம்”. “கடான்னா?” “அப்பிரவு சொல்லுதேன்.” மளுப்பிச்சு. அடுத்தநா லிஸ்ஸி மிஸ் சயன்ஸ் முடிச்சதும் “ஏதுநாக்காச்சியும் டவுட் இருக்கா?” கேட்டிச்சி. நான் இடனே “கடா விடரதுன்னா என்ன மிஸ்?” ஸ்கேலால அடிக்க வந்திச்சு. “கேக்கர டவுட்டப் பாரு!” எல்லாப் பயளுவளும் சிரிச்சாவ. ஆனா யாருக்கும் என்னன்னு சொல்லத் தெரியலை.

ஜெயலலிதா அரசாங்கம் ஏள பாளைங்களுக்கு சர்கார் சிலவுல ஆடு கொடுத்தாங்க. அதுங்களும் கொஞ்சநா எங்ககூட வந்து வாள்ந்தது நல்லா இருந்திச்சு. ஆனா பாட்டி மாட்டைத்தான் அன்பா பாத்துகிடிச்சு. ஒருநா கேக்கரேன். “பாட்டி நாம ஏன் பசுமாட்ட வளக்கம்? பால் தரும் சரி. ஆடு மேய்ச்சா ஆட்டுப் பாலும் கிடைக்குதே. பாக்கெட்லேயே பால் விக்கராங்க, இன்னும் மாட்டோட ஏனிம்புட்டு கஷ்டப் படுரே. நான் சின்னப் பையன், உனக்கு வயசாகிச்சு, எம்புட்டு நா இப்படி செஞ்சுகிட்டே இருப்ப? அன்னைக்கு சாணி அள்ளுதே இருமிகிட்டே. நான் வந்ததும் அடக்கிட்ட. கொட்டாய கூட்டிக் களுவி மாட்ட குளிப்பாட்டி, மேய்ச்சலுக்கு விட்டு அம்புட்டு சிலவி செஞ்சு வெக்கல், புல், புண்ணாக்கு, டாக்டர் சிலவுன்னு எல்லாம் போக பால் வித்த காசு எம்புட்டு வரும்? அப்பா சம்பளம் மிஞ்சினது அப்பரம் அரசாங்கம் தந்ததுன்னு பேங்கில் இருக்கும் பணத்துக்கு வரும் வட்டீலேதான் நாம வாளரம் தெரியும். இவ்ளோ கஷ்டம் பட்டு பால் வியாவாரம் செய்யணுமா?”

“என்னடா இம்புட்டு பேசுதே! இதெல்லாம் கேட்டுத் தெரிஞ்சிக் கிடணும்னு உனக்கு யார் சொல்லித் தந்தாக?” “யாருமில்ல பாட்டி. பசு மாட்டப் பத்தி ஸ்கூல பாடம் எடுக்கராங்க. நீ மாட்டொடவே கிடக்கியே உங்கிட்டே கேட்டா புஸ்த்தகத்துலே இல்லாத விசயம் சொல்லுவீயே! அதான் கேட்டேன். தெரிஞ்சதைச் சொல்லு. நாளைக்கு டீச்சர் எதுநாச்சியும் கேட்டா மொதல்ல கையத் தூக்கி நல்லபேர் எடுப்பேன்”. “சரி உக்காந்துக்க சொல்ரேன்”.

உக்காந்தது நாங்க இருந்த ரெட்டை ரூம்பு ஓட்டு வீட்டின் பின்கட்டில். எதுக்கால மாட்டிக் கொட்டாய். ஜீயாபுரம். காவேரிக்கரையில். தூரக்க ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம். மாடுங்க அசை பொட்டிட்டே நிக்க. லக்ஷ்மி மட்டும் எங்கள பாத்திட்டு காத நிமுத்திக் காட்டுது. என்ன பேசுவாங்கன்னு ஆர்வமோ? அவிங்களப் பத்தித்தே பெசப்போரம்னு தெரிஞ்சிடிச்சா?

“கோமதிய, பாத்தா உனக்கு என்ன தெரியிது?” பாக்கரேன். பின்பக்கத்தை எனக்கு காமிச்சிட்டு இருந்த அது வாலை ஒரு சுளட்டு சுளட்டிட்டு அது பாட்டுக்கு வெக்கல மேயுது. பாட்டி திரும்பவும் கேக்குதா, “என்ன தெரியுது சொல்லு?” “கோமதிக்கு பின் பக்கம்.” “விவரமா சொல்லுடே”. “அது சாணி போடும் இடம், காலுக்கிடுக்குலே பெரீய மடியும்”. “கரெக்ட்டு! மாட்டின் பின் பகுதி என்ன சொல்லுதுன்னா மாட்டை பராமரிச்சு வளர்த்தம்னா அது கொடுக்கும் பாலும், அது போடும் சாணியும் தரும் வருமானத்தில் ஒரு குடும்பம் வாள்ந்திடலாம்னு. சீரங்கம் ரங்கநாதசாமி கூட இருக்கும் லக்ஷ்மிய குறிப்பது மாட்டின் பின் பக்கம். நம்ப கிருஷ்ண பரமாத்மா கோபாலன்னு ஏன் சொல்ரம்னா அவர் நிறைய மாடு வச்சிருந்தாரு. அவர் வாள்ந்த இடம் கோகுலம். சிவனுக்கு பாலபிசேகமும் விச்ணுக்கு வெண்ணையும் அந்த பசுவுலேந்துதான் வரும்”. சொல்லீட்டு வெத்தலை மடிச்சு வாயில் இடுக்கிகிட்ட கருப்பி மென்னுகிட்டே இன்னும் சொல்லுது

“உங்க ஆத்தா உன்னப் பெத்துப் போட்டிட்டு அவ பாட்டுக்கு கிளம்பிட்டா மவராசி. பச்சப்பிள்ள நீ. என்னத்தன்னு கொடுக்க? பசும்பால்தான் உன்ன வளத்து இந்த வயசு வரைக்கும் காப்பாத்திச்சு. நோவு நொடியில்லாம பாத்துகிட்டது இந்த பசுங்கதான். உங்கம்மா இருந்தாக்கூட இப்படி வளர்ந்திருப்பியா? சந்தேகந்தேன். உன்னப்போல எத்தனை குளந்தைங்களுக்கு பசு மாடுங்க தாயா இருக்குன்னு தெரியாது. பாக்கெட் பால் வாங்கிக் குடிக்கராகளே. அதுல என்னத்தையெல்லாம் கலக்கராங்க தெரியுமா. ஜனத்தொகை பெருகிச்சு. மாட்டை அடிச்சு துன்ன ஆரம்பிச்சாச்சி, சீக்கான மாட்ட கோவிலுக்கு தானத்துக்கு தந்திடாராக இல்லை அடிமாட்டா அனுப்பி. இப்படியே போனா உலகம் அளிஞ்சிடும். அது தெரிஞ்சநா என்ன சிலவானாலும் கஸ்டம்னாலும் என்னால் முடிஞ்சது இந்த மூணையும் கட்டிட்டு அல்லாடரேன்”. “அப்ப பாலுக்காத்தேன் வளக்கரம் இல்லையா?”

“இல்லை. பசுவ பாத்துகிட்டா சொர்கத்துக்கு போலாம். பசு வளர்க்கர வீட்டில் பாவம் நுளயாது”. “அதெப்படி பாட்டி? பின்னாடி இல்ல கட்டி வச்ருக்கம்!” “ஒவ்வொரு பசுமாட்லேயும் 33 கோடி தேவதைங்கள் இருக்காய்ங்க. பசுவ காப்பாத்தினா நம்ப நாட்டு கலாச்சாரத்தை காப்பாத்தினதுக்கு சமம். மாட்டுச் சாணம் போல் கிருமி நாசினி இன்னும் கண்டுபிடிக்கல்ல. சிடீலெ எல்லாரும் வீட்டுக்கு புதுசா பெயின்ட் அடிப்பாய்ங்க, நாம வீட்டுச் சுவத்தில் புது மாட்டுச் சானம் பூசிப்பம். வாசத் தெளிக்க இன்னும் நம்மூரில் எங்கிட்ட சாணம் வாங்கிட்டு போரவுக இருக்காங்கடா. வெக்கலோட பிசைஞ்சு எருவாட்டி தட்டினா அடுப்பெரிக்க ஆவும். இப்ப சாணீலிருந்து கேஸுமில்ல எடுக்காக?” “சொல்லிட்டே போகிரே! அம்புட்டு இருக்குதா பாட்டி?” “இந்த ஒரு சீவன் மட்டும் மனுஷங்களுக்கு எம்புட்டு உதவ முடியுமோ அம்புட்டு உதவிட்டு செத்துப் போகும். செத்தப்பரமும் அதன் தோலை பதப்படுத்தி செருப்பா தெய்ச்சிகிடுவம், எலும்பில் உரம் பண்ணி வயலில் போட்டுக்கிடலாம். கன்னுக்குட்டியா பொறந்ததுலேந்து கடைசீ வரைக்கும் கேக்காம தந்துட்டேயிருக்கும் சீவன் இது”.

“நீ பால் கறக்கப்போ அத்தோட பெசர, நீ சொல்ல அதுக புரிஞ்சிக்குமா?” “அது எனக்கும் அதுகளுக்கும் மட்டும் புரியர விசயம். பசிச்சா அம்மான்னு கத்தும் கேட்டிருக்கயா?” “ஆமாம், நீ ஓடிவந்து புல்லு போடிவே”. “ஆமாம். சில சமையம் அம்மான்னு கத்தப்ப பசியில்லைன்னு தெரியும், அப்ப சொல்ர அம்மாவுக்கு அர்த்தம் வேற. மடி கனக்குது உன் அம்மா காத்திட்டிருக்கேன், வந்து பால கறந்துக்கன்னு என்னை கூப்பிடுதுடா! அதெல்லாம் இப்ப விளங்காது”. “மாட்ட எங்கே பாட்டி மேய்ச்சலுக்கு கூட்டிப்போரே?” “வயகாட்டுப் பக்கம்தே, வரப்புலே, ரோட்டோரத்துலே புல் கிடைக்கும். அது தன்னிச்சையா வேணும்கிட புல்லை பிடிச்சு திங்கோணும் எப்பவும் நாம போட்ட வெக்கலை தின்னா நல்ல இருக்காது. ஹோட்டல் பூரி வாங்கித் தாம்பியே அதுபோல். அப்படி கூட்டிப் போப்ப அது சுதந்திரமா சுத்த விரும்பர ஆசையும் நடந்துடுது இல்லையா? அதான்.”

“ஓடிப் போயிடாதா பாட்டி?” “வளர்த்த பசு எங்கேயும் போவாது. கூட இல்லைன்னாலிம் தானா நம் வீட்டுக்கு வந்திடும்”. “அதெப்படி?” “அப்படித்தே! எனக்கும் அதுக்கும் உள்ள பந்தம் அப்படி ஆய்ப் போச்சுது. அப்படியே வரலைன்னாலும் மாட்டப் பாத்து என்னுதுன்னு யாராச்சியும் உம்மாட்ட பாத்தேன்னு சொல்லிடுவாக”. “என்னதான் இருந்தாலும் மிருகம்தானே பாட்டி முட்டாதா?” “இதெப்பாரு!” அப்பத்தான் கருப்பாயி பாட்டி கன்னத்தில் இருந்த தளும்பை காமிச்சி இது சரஸ்வதி கொம்பு பட்டு ஆனது”. “அச்சச்சோ! ரத்தம் வந்திச்சா?” “ஆமாம். 4 தெய்யல் பொட்டாக. போட்டப்ப வலி தாங்கலை”. “அடிச்சியா?” “யார? டாக்டரையா?” “இல்லை சரஸ்வதிய” “உஹூம். அது தெரியாம செஞ்சிருச்சுடா. பசுவ மட்டும் அடிக்கவே கூடாது. அது கோவிச்சுட்டு முட்ட வந்தா நாமதான் ஏதுநாச்சியம் தப்பு செஞ்சிருப்பம்”.

“அம்மாங்குடி கணேசய்யர் தெரியுமா?” “ஆமாம்”. “அவர் வீட்டுக்கு நாந்தே பால் ஊத்தரேன். ஒருக்கா சொன்னாரு. “நீ பசு பராமரிச்சு பால் வியாபாரம் செய்யரே. உனக்கு கிடைக்கும் புண்யத்தில் பாதிகூட நான் சொல்ர மந்திரத்துக்கு கிடைக்காது”. “அப்படியா சொன்னாரு?” “ஆமாம். 5000 வருசம் மின்னாடி பசுக் கூட்டத்தை வச்சித்தான் மனுசங்களை அவிங்க குடும்பத்தை அடையாளம் சொல்லுவாய்ங்களாம். பசுதே எல்லாம், பசு மனுசங்களை வளர்த்திச்சாம். இப்ப தலைகீளே!”

இதெல்லாம் 20 வருஷத்துக்கு மின்னே பாட்டி சொன்னது. இப்ப 300 மாடு வச்சிருக்கேன். எல்லாத்திக்கும் பேர் உண்டு. எல்லாம் அத்துப்படி. 30 பேர் பண்ணையில் வேலை. ஊருல கருப்பாயி கோசாலா கோவிந்து போரான்னுதான் சொல்ராங்க. பெருமதான் எனக்கு. 

கருப்பி செத்துப் போச்சு. அது சொன்ன சொல்ல நான் சாகவிடலை.

No comments:

Post a Comment