Saturday, August 15, 2020

கள்ளழகர்

77.  கள்ளழகர் (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam 

இந்த கள்ளழகர் பட்டு உடுத்திண்டு ஆத்தில் இறங்கிட்டு கடக்காம போனதுக்கு பின்னாடிப் பல கதைகள் உண்டு. தங்கை மீனாக்ஷி கல்யாணத்துக்குப் போணம்னு அழகர்கோவில்லேந்து கிளம்பி வந்தவர், ஒருநா மின்னாடியே கல்யாணம் முடிஞ்சிடுத்துன்னு கோவிச்சிண்டு ஆத்தைக் கடக்காம அதன் போக்கிலேயே சித்தே போயிட்டு திரும்பப் போயிடரா ஐதீகம். 

மீனாக்ஷி திருக்கல்யாணம் மாதிரியே அழகர் ஆத்தில் இறங்குவது அத்தனை பிரஸித்தம். கூட்டம் அலைமோதும். “இவர் ஏன் லேட்டா வரர்? என்னைக்கு கல்யாணம்னு பத்திரிகையை சரியாப் படிக்கலையா? நேரத்தோட கிளம்பலையா? இல்லை வழீலே லேட்டாகித்தா? குதிரை மக்கர் செஞ்சுதா? ராஜூ அப்பா, ஏன்னு சொல்லு?” என் பொண் பூமா 7 வயசு, தோளில் உக்காந்திண்டு வருஷா வருஷம் கேப்பா நானும் சுவாரஸ்யமா சொன்னதையே திரும்ப சொல்லுவேன். சிரிப்பா. இவள் அம்மா கல்யாணி “ஒரே கதை. உங்களுக்கு அலுக்கலையா?” கேப்பா 

எப்பவும் காமராஜநகரில் ஆத்துகிட்டே இருக்கும் தல்லாகுளம் பெருமாள் கோவிலை அழகர் கிராஸ் செய்யரச்சே தரிசனம் செய்வது வழக்கம். இந்த தடவை இன்னும் நடந்துபோய் அழகரோடவே தல்லாகுளம் வந்து வைகையாத்தங்கரை வரைக்கும் அவரை கொண்டுபோய் விட்டுட்டு வரலாம்னு பூமா ஆசைப்பட, “அப்பாவும் பொண்ணும் போங்கோ, நான் இங்கேயே பாத்துக்கரேன்.” கல்யாணி வரலை.

மதுரை சித்திரை திருவிழா பிரசித்தமானது, விமரிசையா நடக்கும். தமுக்கம் மைதானத்தில் சர்க்கஸ் இல்லைன்னா பொருட்காட்சி வைப்பன். களை கட்டும். ஊரில் எல்லாக் கோவில்களும் சுத்தப்படுத்தப் பட்டு மதில் சுவத்தில் சிவப்பு பட்டை பளிச்சுன்னு அடிப்பா. எப்பேர்பட்ட கூட்டம் வரும் தெரியுமா? சித்திரை வெய்யில் தகிக்கும் ஆனாலும் கூட்டம் குறைஞ்சு பாத்ததில்லை. சுத்தி இருக்கும் கிராமத்துலேந்தெல்லாம் குடும்பத்தோட விவசாயி ஒருத்தர் விடாம வண்டி கட்டிண்டு வரதும் ஊரெல்லாம் அவர்களால் நிறம்பி வழியறதும் பாக்கவே அத்தனை அழகு. 

தல்லாகுளம் பெருமாளுக்கு தெப்பக்குளம் ஒண்ணு அழகர் கோவில் ரோட்டுக்கு இந்தப்பக்கம், கோகலே ரோட்டை ஒட்டி. நன்னா மெயின்டைன் பண்ணுவா. அதைச்சுத்தி ரெட்டை மாட்டு வாண்டிகள் – திருவிழாவுக்கு வந்தது நிறுத்தி வச்சுட்டு மாட்டை அவுத்து பக்கத்தில் கட்டியிருப்பா. 4 நாளைக்கு அங்கேயே சுத்தி சுத்தி சாணி போட்டுண்டு அதுக்குமேலேயே படுத்துண்டு. இப்போ குறஞ்சுடுத்து. கால் டேக்ஸீதான்!

ஒண்ணு சொல்லியே ஆகணும், வரவா மொத்தமா 8 அல்லது 12 மீட்டர் துணி ஒட்டுக்க ஒரே கலரில் டிஜைனில் வாங்கி குடிம்பத்தில் ஆம்பிள்ளை, பொம்பளை குழந்தைகள்னு பாக்காம அதை தெச்சுப் போட்டுண்டு வரது ஆச்சர்யமா இருக்கும். யாராவது கூட்டத்தில் தொலைஞ்சு போயிட்டா ஈஸியா கண்டுபிடிச்சு சரியான குடும்பத்தோட சேர்த்து வச்சுடலாம். 

இந்த வருஷம் நானும் என் பொண்ணும் அந்த மாதிரி ஒரே கலரில் மேல் சட்டை போட்டுக்காலாம்னு பண்ணிண்டோம். “சகிக்கலை.” கல்யாணி திட்டினா. கழுதைக்கு தெரியுமா அந்த வாசனைன்னு சொல்லிண்டே கிளம்பிட்டோம்.

அழகர் கோவில்லேந்து தல்லாகுளம் வரைக்கும் 19கிமீ. இங்கேந்து வைகை 1.5 கிமீதான். அழகரை எங்கே மறிச்சுப் பிடிக்கலாம்னு யோசிச்சேன். மின்னாடி யாராவது வந்து சொல்லுவா, அழகர் இங்கே இருக்கர், இந்த மண்டபத்துலே ஏளப்பண்ணீயிருக்கா, இப்போ கிளம்பியாச்சுன்னு, இப்போ “மதுரை காவலன்”னு ஒரு ஆப்ஸ் டவுன்லோட் செஞ்சுட்டா, அழகர்மலைலேந்து வண்டியூர்வரைக்கும் அப்புரம் திரும்பப் போரவரைக்கும் “ட்ரேக் அழகர்” லிங்க் மூலம் பாத்துடலாம். நம்பூர் சுந்தர் பிச்சையோட கூகிள் ஸ்டோர்ஸில் கிடைக்கும்னு பால்ய நண்பன் சிவசங்கர் சொன்னான். 

“நடராஜா! உன் போனைக் கொடு டவுன்லோட் செஞ்சுத் தரேன்”. தந்தான்.

குழந்தையை கூட்டிண்டு போனை ஃபுல் சார்ஜில் வச்சிண்டாச்சு. கையப் பிடிச்சிண்டு நடந்தவள் “கூட்டம்னா தோளில் தூக்கிக்கணும்”னுட்டா. அதான் டீல்.

அதிகதூரம் குழந்தையை நடத்தி அழைச்சிண்ட்டு போமுடியாது. தோளில் தூக்கிண்டாலும் அதே பிர்ச்சனை. குழந்தை கேட்டுட்டான்னு எங்கே போய் சுவாமி பல்லக்கை பிடிக்கலாம்னு யோசிச்சிண்டே கோகலே ரோடில் நடக்க ஆரம்பிச்சாச்சு.

மலையிலேந்து பல்லக்கில் ஏறிவருவர் பெருமாள். ஆத்தில் இறங்கரப்போ குதிரை வாகனம். வழீலெ நிறைய மண்டபங்கள். சம்பிரதாயப்படி நின்னுட்டு போர மண்டபங்களைத் தவிர பணம் செலுத்தி பெருமாள் 3 நிமிஷமாவது நின்னாத்தான் ஆச்சுன்னு பிரார்த்தனை பண்ணிக்கர்வா அதிகம். அதில் ஒரு மண்டபத்தில் பிடிச்சுடணும்னு வேகமா நடந்தோம். மேலூர் மெயின் ரோட் தாண்டி கிட்டத்தட்ட ரேஸ்கோர்ஸ் ரோட்கிட்டே தண்ணீர் பந்தல் பாத்துட்டு நின்னுண்டோம். அரைக் கிமீ தள்ளி அழகர் வந்திண்டிருக்கர்னு போனில் பாத்தேனே! 

இதுக்குமேலே பூமாவால் நடக்கமுடியாது. இதுவரைக்கும்மே ஏதோ ஒரு உற்சாகத்தில் நடந்துட்டாளே தவிர ஆத்துக்குப் போனதும் கால் வலிக்கறதுன்னு அழுவா. ஒரு தண்ணீர் பந்தல் விடாம வாங்கிக் குடிச்சிருக்கா. ஆத்துக்கு போய் தும்மினாலோ இருமினாலோ வாங்கிக் கட்டிப்பேன்.

சொன்ன[படி அழகர் ஆடி அசைஞ்சிண்டு ஆனா ஏதோ அவசரமா போரா மாதிரி வரர். கூடவே அவர் எத்தனை மண்டபத்துக்குள் போனாலும் உள்ளெ போயிட்டு 3 அல்லது அதிகபக்ஷம் 4 நிமிஷத்தில் வெளீலே வரவரைக்கும், சுவாமியை டக்குன்னு கொண்டுபோய் சட்டுன்னுதிருப்பி ஒரு தீபம் காமிச்சு தீர்த்தம் தந்துட்டு வெளீலே வர அழகை கண்கொட்டாம பாத்துண்டு. தல்லாகுளம் வரச்சே நன்னாவே இருட்டிடுத்து. கோவில்கிட்டே திரும்பரச்சே கல்யாணியும் வரேன்னாளேன்னு கண் தேடித்து.

அத்தனை கூட்டத்திலேயும் அவளைப் பாத்துட்டேன். காஞ்சனாவை. சிவசங்கர் தங்கை. அவள் மாதிரித்தான் இருக்கு. அவளேதான். முகம் மாறலை. பூசினாப்போலே சதை போட்டிருக்கு. பளிச்சுன்னு புடவை. இவள் எப்படி இங்கே? 

கல்யாணம் செஞ்சுண்டு மும்பைக்கு போயிட்டது தெரியும். அதுக்கப்புரம் மதுரைக்கு வந்ததாவே தகவல் இல்லை. நேத்து என் போனை நோண்டரச்சே கூட இவள் வந்திருக்கான்னு அவன் சொல்லலையே! காரணம் இருக்கு.

நானும் காஞ்சனாவும் அத்தனை காதலிச்சோம். 10 வருஷம் மின்னாடி. ரெண்டு குடும்பமும் சிநேகிதா. நாங்க 4ஆவது மெயின் ரொட், அவா 2ண்ட். சிவசங்கர் என் கிளாஸ். சென் மேரீஸில் +2 படிக்கரச்சே ஒருநா உடம்பு சரியில்லாம லீவ்போட்டதில் பாடம் விட்டுப் போச்சுன்னு இவாத்துக்கு சயின்ஸ் நோட்ஸ் வாங்கப்போக முதத் தடவையா காஞ்சனாவைப் பாத்தேன். 

இவள் சென் ஜோஸப்பில் 8ஆவது. அப்பவே கண்ணில் அத்தனை விஷமம். வாட்ட சாட்டமா அண்ணாகூடப் படிக்கர பையன் வந்தது அந்த வயசில் அவளை என்னமோ செய்ய, “அண்ணா இல்லை. ஆனா அவன் ஸ்கூல் பேக் எங்கே இருக்குன்னு எனக்குத் தெரியும், கொண்டுவரேன்.” தந்தள். தரச்சே அவள் நிஜமாவே கண் அடிச்சாளா இல்லை பிரமையான்னு தெரியலை.

அடுத்த நாளே லன்ச் பிரியடில் ஸ்கூல் வாசலில் கோலா வாங்கி சப்பரச்சே எதுத்தாப்புலே ரோடைக் கிராஸ் செஞ்சுண்டு இவ வரா. “எனக்கும் ஒண்ணு வாங்கித்தா. இல்லைன்னா சங்கர் அண்ணா கிட்டே நீ நேத்து கண் அடிச்சதை சொல்லிடுவேன்” இப்படி மிரட்டித்தான் மசிய வச்சான்னா பாத்துக்கோங்கோ.

நான் அமேரிக்கன் காலேஜில் சயின்ஸ் க்ரூப். அவள் சிலவருஷங்கள் கழிச்சு லெடி டோக்கில். ஆனா நாங்க சந்திச்சுக்கறது தெரு முனைகளில். முட்டுச் சந்துக்களில். சைக்கிளில் வருவா, நான் மின்னாடியே போய் நிக்கணும். லீவுனா திருமலைநாயக்கர் மஹாலில். எத்தனை தூண் இருக்கு! இல்லைன்னா பொற்றாமரைக் குளம், திருப்பரங்குன்றம், வண்டியூர் தெப்பக்குளம், பழமுதிர்ச்சோலை.

“கல்யாணம் பண்ணிக்கராயா?” ஒருநா கேட்டா. “அதுக்கு முதல்ல ஆத்தில் நம்ம மேட்டரை சொல்லணும். அடுத்த வருஷம் படிப்பை முடிச்சதும் எனக்கு ஒரு வேலை கிடைக்கணும்.” “சரீ, வேலை கிடெச்சதும் சொல்லு, ஆத்தில் சொல்ரதை நான் பாத்துக்கரேன். போனவாட்டி உங்காத்துக்கு வந்தப்போ உங்கம்மா என்னை ஒரு தினுசா பாத்து என்னடீ உங்காத்தில் உனக்கு ஏதாவது வரன் பாக்கராளான்னு சூசகமா கேட்டா. அதுக்கென்ன அர்த்தம்?” “உன்னை அவளுக்கு மாட்டுப்பொண்ணா ஆக்கிக்கணும்னு ஆசையோ?” இப்படி அடிக்கடி பேசிப்போம். கிளுகிளுப்பா போகும்.

ஒருநா எங்களை இவள் காலேஜ் இருக்கும் ரோடில் ஜேஸி ரெஸிடென்சீ காஃபீ ஷாப்பில் பாத்துட்ட தெரிஞ்சவர் ஒருத்தர் எங்கப்பாகிட்டே போட்டுத்தந்தர். அவருக்கு எங்கே அரிச்சதோ தெரியலை. 

ஆத்துக்கு வந்ததும் அப்பா கோவமா இருக்காப்போலே நடிச்சர். “எதுவானாலும் முதல்ல படிப்பை முடி, நல்ல வேலையாப் பாத்துண்டு அப்புரமா இதெல்லாம்.” நான் அந்தண்டை போனதும் அம்மாகிட்டே “உன் பையன் நல்லா பொண்ணாத்தான் பிடிச்சிருக்கான்” காதில் விழுந்துடுத்து. சரீ இனிமேல் அவாத்தில் சரீன்னுட்டா ஆச்சுன்னு பட்டது.

ஆனா பாருங்கோ இவள் படிப்பை முடிக்கலை, கடைசீ வருஷம், இவாத்தில் இவளுக்கு நிச்சயம் செய்யரான்னு தகவல் வந்தது. நிச்சயதார்த்தத்துக்கு அழைச்சுட்டுன்னா போயிருக்கா! 

அப்பா அம்மாவுக்கு அதிர்ச்சியாப் போச்சுது. வீட்டுக்கு வந்ததும் “நடராஜா, அந்தப் பொண் உன்னை உண்மையிலேயே விரும்பலையா?” இப்போ அதிர்ச்சி எனக்கு. விவரம் சொல்லி “இப்போ என்ன பண்ரது?” கேட்டா. நிச்சயம் பண்ரான்னா, இதுக்கு மின்னாடி குறைஞ்சது 3 மாசமா கல்யாணப் பேச்சு அவாத்தில் நடந்திருக்கணுமே! இவள் என்கிட்டே சொல்லலையே? வேலைக்குப் போரேன் அதனால் அடிக்கடி சந்திச்சுக்கறது இல்லையே தவிர போனில் பேசறது அதுபாட்டுக்கு போயிண்டுதானே இருக்கு? யோச்சிச்சதில் போன ரெண்டு ஞாயித்துக்கிழமை இவள் உடம்பு சரியில்லை அடுத்த வாரம் பாக்கலாம்னு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

சிவசங்கரை விஷால் டி மாலில் பாத்துட்டு “என்ன ஆத்தில் விசேஷமா?” “ஆமாண்டா! உங்காத்திலேயும் அழைச்சிருப்பாளே! காஞ்சனாவுக்கு நிச்சயம் பண்ரோம். மும்பையில் L&Tயில் பெரீய பொசிஷணில் மாப்பிள்ளை. பணக்காரா. நம்பளை மாதிரி இல்லை. ஜாதகம் பொருந்தி இவளும் பிடிச்சிருக்குன்னு சொன்னதும் அப்பா சட்டுமுட்டுன்னு பேசி முடிச்சுட்டர். அகலக்கால்தான், எதிர்பாக்கரா, ஒரே பொண்ணு சரீன்னுட்டோம். அவசியம் வந்துடுடா” 

அம்மாவும் அப்பாவும் மட்டும் போயிட்டு வந்தா.

இன்னைக்கு எதுத்தசாரீலே பளிச்சுன்னு புடவை கட்டிண்டு கள்ளழகரை பாத்து கன்னத்தில் போட்டுண்டு நிக்கர இவள் அன்னைக்கு அதுக்கு அப்புரமும் நான் போனில் கூப்பிட்டப்போ எடுக்கவேயில்லை. நூறுதடவை ட்ரை செஞ்சிருப்பேன். பேசலை. சரி போகட்டும்னு விட்டுட்டேன். இப்போ இத்தனை வருஷம் கழிச்சு.
குழந்தை இருந்தா பூமாவைவிட ரெண்டு வயசு கூட இருக்கும். பக்கத்தில் காணலை. ஆத்துக்காரர் மாதிரி யாரும் நிக்கலை. இத்தனை வருஷம் மதுரைக்கு வராமலா இருந்திருப்பாள். பிரசவத்துக்குன்னு வந்திருந்தா அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கும். சொல்லியிருப்பாளே. இவள் இப்படி பண்ணிட்டான்னதும் எனக்கும் பாக்க ரெண்டு வருஷத்தில் கல்யாணி வாய்ச்சாள். 

சிலது மறந்தது. சிலது முடியலை. பூமா பொறந்ததும் இன்னும் சிலது மறக்க முடிஞ்சதே! 

பூமாவை தோள்லேந்து இறக்கி “வாடீ செல்லம், ஆத்துக்கு போலாம், கார்த்தாலே வந்தா அழகரோட ஆத்தங்கரைக்குப் போலாம்” வந்துட்டேன். மறுநா சீக்கிரம் எழுந்து குளிச்சுட்டு போனோம்.

சம்பிரதாயப்படி பெருமாள் கூடவே வந்த மரப்பொட்டீலேந்து கண்ணை மூடிண்டு அர்ச்சகர் கையை உள்ளே விட்டு பட்டு வஸ்திரத்தை எடுக்கரர். இன்னைக்கு பச்சை வர்ணம் வந்தது. இந்த வருஷம் மழை கொட்டும், விவசாயம் செழிக்கும்
குழந்தையை திரும்பவும் தோளில் ஏத்திண்டு குதிரை மேல் இருக்கும் கள்ளழகர் வழிகாட்ட பின்னாடியே போன நான் காஞ்சனாவை மறந்தே போனேன். 

அத்தனை இரைச்சலிலும் தோளில் இருந்த பூமா காலில் இருந்த கொலுசு சத்தம் என் காதில் ரம்யமா. வைகையில் தண்ணீர்! திவ்யமா இருந்தது.

No comments:

Post a Comment