Wednesday, August 12, 2020

மழை

82. மழை (சிசீ6) #ganeshamarkalam

மழைன்னு பெய்யாதான்னு ஏங்குவம். பெய்ய ஆரம்பிச்சுட்டா ஓடி ஒளிவம். இன்னைக்கும் அதான் ஆச்சு.

மதுரையில் நல்ல மழை. இங்கே ஒரு வேலையா வந்தவன் லாக்டவுனாம், 3 மாசமா மாட்டிண்டாச்சு. உத்யோகம் சென்னையில். கார் தொழிற்சாலை. “அங்கேந்தே வேலை பாருங்கோ, அதிக்கபடியான பொறுப்பு தரம். எதுக்குப் போனேளோ அதையும் கன்டின்யு செய்யலாம். இங்கே வரேண்டாம்”. போஸ்ட் கோவிட் உலகத்துக்கு தோதா புது சப்ளையர்ஸ், நாங்க கேட்பதை துரிதமா தயார் செஞ்சு தர தகுதி உள்ளவாளா தேடிப் பிடிச்சு தகவல் பரிமாற்றம் செஞ்சு அவாளுக்கு ட்ராயிங்க் தந்து டெவெலப் செய்யும் வேலை. செய்யரத்துக்குன்னு ஒண்ணு இருப்பதும் வருமானம்னு வரதும் சந்தோஷம்தானே. என்ன ஒண்ணு அம்மா சென்னையில் தனியா.

தினம் நாலு தடவை கூப்பிட்டு ஒண்ணும் பிர்ச்சனையில்லாம இருக்கோனோன்னு ஒருத்தர ஒருத்தர் கேட்டுப்பம். இல்லைன்னா பைத்தியம்தான். நேத்து சொல்ரா, “கம்பேனிக்கு சப்ளையரைத் தேடிப் பொரப்போ எனக்கு ஒரு மாட்டுப் பொண்ணை தேடிப் பிடிச்சுத்தா”. வாஸ்த்தவம்தான். அவளுக்கு உடம்பு முடியலை. எனக்கும் வயசு 34. ஆனா என்னால் மேக்னாவ மறக்கவே முடியலை. என் வாழ்க்கையில் இனிமேல் அவளைத் தவிர்த்து இன்னொரு பெண் சாத்தியமில்லைன்னு ஆகிப்போச்சு. அம்மாகிட்டே எப்படி சொல்ல?

நேத்து அம்மா அப்படிச் சொன்னதும் மேக்னாவுக்கு கால் போட்டேன். எடுத்தது அவள் கணவன். வேறு ஒரு பேரைச் சொல்லி கேட்டு ராங்க் நம்பர் மாதிரி வச்சாச்சு. அவளோட பேசி 4 மாசமாச்சு. மார்ச் கடைசீலே பெசினது. அதுக்கப்புரம் லாக்டவுன். அவள் கணவன் வொர்க் ஃப்ரம் ஹோம். ஆத்துலேயே பழியாக் கிடக்கான். பெச முடியலை. இப்படி ஒருத்திகிட்டே மனசைப் பறி கொடுத்துட்டு லோலுப்படாதே! மனசு எச்சரிக்கும். அவள் இன்னொருத்தனுக்கு சொந்தமானவள், அவளோட என்ன சங்காத்யம்? பேசாம அம்மா சொல்படி நல்ல பொண்ணா பாத்து செட்டில் ஆயிடு! அதட்டிப் பெசும். யாருக்கும் சொல்ல முடியாத சில விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்துட்டது என் துர்பாக்கியமா பாக்கியமான்னு தெரியலை.

நின்னிண்டிருந்த கடைலேந்து கைய வெளீல நீட்டினா இன்னும் பெருந்தூரலா விழுந்திண்டிருக்கு. இப்பத்தான் சாயங்காலம் 5:30. வடக்கு சித்திரை வீதி முனையில் கோபு ஐயங்கார் டிப்பன் ஹவுஸில் டேக்கவே எடுத்துண்டு வடக்கு மாசீ வீதீலே ஒருத்தராத்து மாடீலே எடுத்துண்ட ரூமில் போய் சாப்ட்டு படுத்துக்கலாம்னு. அங்கேதான் பட்ஜெட் ஜாகை கிடச்சது. மாசக் கணக்குல் இப்படி தங்கிக்கரா மாதிரி மாட்டிப்பேன்னு நினைக்கலை. வெளிச்சமா இருந்த வானம் சட்டுன்னு கறுத்து கொட்டித் தீத்துட்டு இன்னும் நின்ன பாடில்லை. தூரல் விடலைன்னா நடந்து போரத்துக்குள் டிப்பன் பை தொப்பலா நனைஞ்சிடும். இந்த டயத்தில் ஆட்டோ கிடைக்காது. சைக்கிள் ரிக்ஷா ஏறமாட்டேன்.

பக்கத்தில் கடைக் கண்ணாடியில் முகத்தை பாத்தா பழைய ஹாங்காங்க் சினிமாவில் சைனீஸ் உளவாளி ஜப்பானோட ஆக்குபேஷணை முறியடிக்க சதி செய்ய கிளம்பினாப்போல். நீ தமிழ் பிராம்ணனாச்சே சைனாக்காரன் ரோலில் பொருந்துவாயானா? லூஸுத்தனமா கேப்பாளா? மாஸ்க் போட்டுண்டுட்டா எதுவா வேணும்னாலும் நடிக்கலாம். கண்ண இடுக்கி வச்சிக்கணும்.

மேக்னாவோட ஒரு தடவயாவது பெசிடணும். அம்மா கல்யாணத்துக்கு ப்ரெஷர் போடரா என்ன செய்யன்னு. அவள் என்ன சொல்வான்னு தெரிஞ்சுக்கணும். என்னாச்சு பினாத்தராய், ஏற்கனவே கல்யாணம் ஆனவள், எங்கேயோ தூரத்தில் இருக்கா. உன் கல்யாணத்துக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்? அவளை ஏன் உன்னால் மறக்க முடியலை? ஏதாவது பெரும்படியா உதவினாளா? இல்லை முன்னாள் காதலியா? தெரிஞ்சுக்கணும்னு ஆசையா இருக்கும். இது விவகாரமான மேட்டர், இவனே சொல்லுவான்னு காதைத் தீட்டிண்டு உக்காந்திண்டிருப்பேள். ஆரம்பத்துலேந்து சொல்லணும்.

நான் IIT சென்னையில் ஆடோமொபைல் எஞ்சினீரிங்க் படிச்சுட்டு ஹ்யுந்தாய் கம்பேனீலே ஆபரேஷன்ஸ் எக்ஸிக்யுடிவா போயாச்சு. ஸ்ரீபுதும்பூரில் இருக்கே! நல்ல சம்பளம் தந்தான். படிப்புக்கு ஏத்த ஜாப். எத்தனை பேருக்குக் கிட்டும்? 25 வயசில் உத்யோக முறையில் செட்டில் ஆனது பிரத்தியார் கண்படும்னு அம்மா சுத்திப் போட்டா. உனக்கு ஒண்ணு பண்ணிப் பாத்துடணும்னு அடுத்தது ஆரம்பிச்சா. “சித்தே போட்டம், சம்பாதிக்கரேன், கையில் கொஞ்சம் சேத்துக்கரேன்” “அப்பா வச்சிட்டுப் போன வீடிருக்குடா, சமாளிச்சுடலாம், இப்பவே ஆரம்பிச்சாத்தான் மொள்ள நடக்கும்.”

கஸ்டமர் மீட்டுன்னு தில்லியில் ஒண்ணு வச்சா. எல்லா ஸ்டேட்லேயும் வாடிக்கையாளர்களை சந்திச்சு ஃபீட்பேக் சேத்துண்டு அடுத்த வருஷ டிசைன் வேலை இப்பவே ஆரம்பிச்சாத்தான். ரெண்டு நா கான்ஃபரென்ஸ் நன்னா போச்சு. ரெண்டாம்நா மேக்னாவ சந்திச்சேன். NCR கார் ஓனர்ஸ் ஃபெடெரேஷன் செக்ரடரியாம். கான்ஃபெரன்ஸ் முடிஞ்சி எல்லாரும் கிளம்ப இவள் “சோ”ன்னு மழை பெய்யவே லாபீலே. நின்னதும் கிளம்பலாம்னு. நானும் என் கம்ப்யூடரை மூடிட்டு மேலே அதே ஹோட்டல்ல தங்கியிருக்கும் ரூமுக்குப் போலாம்னு வரச்சே இவளை சோபாவில் பாக்கரேன். மழையினால் ஒரு 100 பேர் ஸ்ட்ரேண்டட். இவ மட்டும் அத்தனை பேருக்கு நடூலே புதுசா பூத்த ஷெண்பகப்பூ மாதிரி.

கிட்டக்கே போய் “ஏதாவது உதவி தேவையா, கிளம்பலை?” “நோ தேங்க்ஸ். கான்ஃப்ரன்ஸில் யூ ஸ்போக் வெல். யுர் கார்ஸ் ஆர் பாபுலர் ஹியர். ஹோப் யூ ஹேவ் அ குட் இயர் அஹெட்”. “வாட் கார் டு யூ ஓன்”. “சேன்ட்ரோ ஆஃப் கோர்ஸ்! 5இயர் ஓல்ட் தோ. பட் ஐ டிட்ன்ட் கம் பை கார். நேரமாகித்து, லெட் மி ட்ரை லீவிங்க்”. “எப்படி போவீங்க?” ஆட்டோ. டிஃபிகல்ட் நௌ.” பின்னாடியே போர்டிகோ வரைக்கும் போனவன் இவள் பை சொல்லீட்டு நனைஞ்சிண்டே போனதும் வந்திருக்கணும். ஆனா போவதை பாத்துண்டே நின்னுண்டு. புடவையில் அவள் அத்தனை அழகு. யூபீக்காரி. ஆனா பாத்தா கர்நாடகானு சொல்லலாம். இந்த புடவையும்தான் எப்படிப்பட்ட சமாச்சாரம்? இந்தியாவின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. உடம்பில் குறைபாட்ட மறைச்சு காட்ட வேண்டியதை மட்டும் அப்பப்போ விலகி காமிச்சுக் கொடுக்கும். ஆனா ஹோட்டல் “OUT” கேட் வரைக்கும் போனவள் திரும்ப என்னைப் பாத்து ஓடி வர, மழை சட்டுன்னு வலுத்துட்டது காரணம். தொப்பல். என் முகத்தை பாத்து “இப்போ என்ன செய்ய?” அதே இந்தியக் கண்டுபிடிப்பான புடவை என் மனசில் மாயாஜாலங்களை செஞ்சுண்டு.

தில்லீலே இப்படி நிலமையில் ஒரு பெண் ஆட்டோவில் ஏறிப் போவது பாதுகாப்பில்லை. “என் ரூமுக்கு வந்து இருந்துக்கோ, துணியை ஸ்பின் போட்டு அயர்ன் பண்ணித்தர சொல்லலாம், அப்பரம் டாக்ஸி கூப்பிட்டு போலாம்”. தயங்கிட்டு வந்தா. லிஃப்டெல்லாம் ஈரமாக்கிண்டே 7ஆவது மாடிக்கு. பாத்ரோப் புதுசு இருந்தது. அதை போட்டுண்டு எல்லாத்தையும் தர, ரூம் செர்வீஸ் 40நிமிஷத்தில் தரேன்னு கொண்டு போனான்.

உக்காந்து பேசிண்டிருக்கலாம்னுதான் பிளான். ஆனா என்னென்னமோ நடந்துடுத்து. தன்னைப் பத்தி ஒண்ணூம் சொல்லாமலே இந்தா வச்சுக்கோன்னு தன்னையே அவள் தர, அப்பரமா விவரம் கேட்டுத் தெரிஞ்சிண்டா போச்சுன்னு நான் எல்லாத்தையும் வாங்கிண்டதும் ஒத்துக் கொள்ள முடியாததுதான். ட்ரெஸ் திரும்பி வந்து 1 மணி கழிச்சு மழை நன்னா விட்டதும்தான் போனா. கிளம்பிப் போனதும்தான் அவளைப் பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்கலைன்னு.

அப்பரம் அடிக்கடி பெசிப்பம். “நீ சென்னை வர சாத்தியமா?” “அதெப்படி, ஐ ஏம் மேரீட், நினைச்சா கிளம்பிட முடியாது. ஹேவ் டு கிவ் ஸோ மெனி எக்ஸ்ப்ளநேஷன்ஸ் அட் ஹோம். உங்க கம்பேனி இன்னொரு கஸ்டமர்ஸ் மீட் அங்கே வச்சு எங்க சிலவை ஏத்துண்டா வருவேன்”. “வேர் யூ மேரீட் வென் வி மெட்?” “யெஸ்”. அதிர்ந்து போனேன். 2 வருஷமா. “யூ டிட்ன்ட் ஆஸ்க், ஸொ, ஐ டிட்ன்ட் டெல்.” என்னால் அதை ஒத்துக்க முடியலை. அதெ சமயத்தில் மனசுலேந்து விலக்கவும் முடியலை. சர்வ சாதாரணமா சொல்லிட்டு போனை வச்சுட்டா.

பாவம் உதவலாம்னு ரெம்பவே ஸ்ட்ரெச் செஞ்சு ரூமுக்கெல்லாம் அழைச்சிண்டு பொயிருக்கப் பிடாதோ? அவளும், திருமணமானவள் எப்படி சுவாதீனமா வரா? வந்தவள் அப்படியோரு நிலமையில் அன்னியன் ஹோட்டல் ரூமுக்குப் போணமான்னு யோசிக்க மாட்டா? தொப்பலா நனைஞ்சவளை அப்படியே அனுப்புவதும் தப்பு. ரூமில் இருந்துக்கோன்னு கீழே வந்திருக்கணும். நெறுப்பையும் பஞ்சையும் பக்கத்துலே வச்சா? யார் பஞ்சு? யார் நெறுப்பு?

இப்படி நடந்தா ஆண்களுக்கு ஒண்ணும் பாதிப்பில்லைன்னு நினைக்கலாம். ஆனா உள்ளத்தளவில் ஏற்படும் பாதிப்பு காயமா மாறி ஆயுசுபூரா வருத்தும். இத சகஜமா எடுத்துண்டு “சல்தா ஹே”ன்னு போக என்னை எங்காத்தில் வளக்கலை. அதான் பிர்ச்சனை. ரெம்பத்தான் கட்டுப் பெட்டியா. இவள் தனிக்கட்டையா இருப்பா, கல்யாணம் செஞ்சுக்க விருப்பமான்னு கேக்கலாம்னா ஏற்கனவே ஆகிடுத்துன்னா? பின்னே அன்னைக்கு அத்தனை சுவாதீனமா நடந்துண்டது? அவாத்து வளர்ப்பு அப்படியோன்னா அதையும் ஒத்துக்க முடியலை.

நடந்ததை எப்படி மறக்க? நமக்குன்னு ஒரு கடந்த காலம் ஆய்ப்போச்சு. மனசு கனத்தது. மழை நிக்கவே மேகம் விலகி வெளிச்சம் காட்டினாலும் மணி 6:15ஆக இருட்டும் கவ்வவே மொள்ள என் ரூம் பக்கமா நடக்கரேன். எப்படியாவது மனம் விட்டுப் பேசிடணும். நான் கல்யாணம் செஞ்சுக்கப் போரேன்னு சொல்லிடணும். கான்ஷியன்ஸ் க்ளியராகும். பெண் என்றால் என்னன்னு உணர வச்ச மேக்னாவை மறந்தாத்தான், மணந்து கொள்ளப் போவது யாராக இருந்தாலும் அவளோட புது மனுஷனா மேக்னாவின் நினைவுகள் மனதை அழுத்தாமல் புது வாழ்க்கைய ஆரம்பிக்கணும்னு. 3வருஷமாச்சு. நினைச்சிண்டே வாங்கிண்டு வந்ததை சாப்பிடாமலே தூங்கியாச்சு.

ஆகஸ்ட் இறுதி வரை கட்டுப்பாட்ட தளர விடலை. எப்படியோ சென்னைக்கு 25ஆம் தேதி வந்து சேர்ந்தாச்சு. செப்டம்பர்லேந்து ஓரளவுக்கு எல்லாம் சகஜமாகவே அம்மா சொல்ரா “டேய்! மதுரைலேந்து நல்ல வரன் வந்திருக்கு. அங்கே இருக்கப்போ வந்திருந்தா அப்பவே நேரில் பாத்திருக்கலாம். இப்போ அழைச்சிண்டு போரியா? நல்ல குடும்பம், நம்படவா வடமா பஜமா, பொண் நன்னா படிச்சிருக்கா, சென்னையில் குட்டுத்தனம் வச்சதும் வேலைக்குப் போணம்னு ஆசைப் படரா. அதெல்லாம் உங்க இஷ்டம். மொதல்ல கல்யாணம் நல்லபடியா நடக்கணும். எப்பப் போலாம்?”

சுகந்தி திருப்பரங்குன்றம். ஒரு குறையும் இல்லை. ஆனா மேக்னாவோட கம்பேரிசன் தவிர்க்க முடியலை. மொட்டை மாடிக்கு அனுப்பிச்சுட்டா, கட்டிக்கப் போரவா சித்தே பேசிக்கட்டுமேன்னு. மலையும் முருகன் கோவில் கோபுரமும் தெரிஞ்சது. சரளமா ஆங்கிலம் வெளுத்துக் கட்டரா. சித்தே தயங்கித் தயங்கித்தான் பதில் சொல்ரேன். கல்யாணத்துக்கு அப்பரம் எப்படி எல்லாத்தையும் பிளான் செஞ்சு வாழ்க்கைய நகத்தணும்னு ஒரு தீசீஸே எழுதியிருப்பா போலேருக்கு. கண்பூரா கனவு. “நீதான் எனக்குன்னு போடோ பாத்து தீர்மானம் செஞ்சுட்டேன்.” அப்படீங்கரா! நாம விரும்புபவளை விட நம்மை ஒருத்தி விரும்பரான்னா அவளை வாழ்க்கைத் துணையா ஏத்துப்பது சிறந்ததுன்னு தோணித்து.

பேசிண்டே இருந்ததில் தூரல் போடுவதைக்கூட கவனிக்காம, “என்ன பிடிச்சிண்டு நிக்க கொடை அனுப்பட்டுமான்னு அப்பா கேக்கரா.” இவள் குட்டித் தங்கை வந்து சொன்னதும்தான் மழை பத்தின பிரஞையே வந்தது. அசடு வழிஞ்சிண்டு கீழே வந்தம்.

அடுத்த மாசம் முஹூர்த்தம் வச்சுட்டு கோவிலில் வச்சு நிச்சயம் செஞ்சுட்டு வந்துட்டம். அடுத்த வாரம் மதுரைக்கு போரம். எங்க சைடிலேந்து பெரீய கும்பல் இல்லை. ட்ரெய்னில் 15 டிக்கெட் அவ்ளோதான். அவா சைடில் 15. கட்டுப்பாட்டு வேற இருக்கே. திருப்பரங்குன்றத்தில் எங்களுக்கு தங்கிக்க பெரீய வீடு வாடகைக்கு எடுத்து வேலைக்கு 4 பேரைப் போட்டு பாத்துண்டர் சுகந்தி அப்பா. நாலு தெரு தள்ளி கல்யாணச் சத்திரம். இந்தண்டை பக்கத்துத் தேரு சுகந்தியாம். எங்களுக்கு டவர் கிடைக்கலைன்னு, வாட்ஸப் முடியாதுன்னு பொய்யைச் சொல்லி உங்காத்துக்கு வரட்டுமான்னு கேக்க அவள் “அப்பா விடமாட்டா, நாளைக்கு மாப்பிள்ளை அழைப்பில் பாத்துக்கலாம்”.

டேடா போட்டதும் அதிசயமா மேக்னாகிட்டேந்து வாட்ஸப் வீடியோ கால். எடுத்து ஆன் பண்ணி முகத்துக்கு நேர வச்சுக்கரேன். “சாரி, ஒன்லி டுடே ஐ ஏம் அலோன் ஸோ ஐ கால்ட். ஹௌ ஆர் யூ?” கிடைச்ச வாய்ப்பை சட்டுனு பயன்படுத்திக்கலாம்னு நான் “ஐ வான்டெட் டு டெல் யூ சம்திங்க் இம்ப்பார்டென்ட். பட் குட் நாட் ரீச் யூ”. அப்போன்னு பாத்து “மம்மீ”ன்னு இவள் கழுத்தை கட்டீண்டு ஒரு பொண் குழந்தை வ்யூவில் வர, அட இவளுக்கு கல்யாணம் ஆனதை அப்ப மறைச்சவள் இப்போ 2 வயசில் குழந்தை இருப்பதையும்னா சொல்லாம வச்சிருக்கானு பட்டது.

குழந்தை அப்படியே என் ஜாடை. இடியும் மின்னலுமா ஹ்ரிதயத்துக்குள் கேக்காம வந்து பெய்தது மாமழை.

No comments:

Post a Comment