Wednesday, August 12, 2020

மழை

83. மழை (சிசீ6) #ganeshamarkalam

பூனாவில் டெக்கான் ஜிம்கானா ஃபேமஸ். வந்தது பொழுதைப் போக்கத்தான். ஆர்மீலே 10 வருஷமா. உதாம்பூரில் போஸ்டிங்க். 3 வருஷம் போக லீவு கிடச்சு வந்திருக்கேன். சொந்தம், குடும்பம்னு ஒண்ணுமில்லை. இந்த லீவுக்கு பூனே பாக்கலாமே! வந்தேன். ஒவ்வொரு தடவையும் திருநெல்வேலி வரைக்கும் எதுக்கு?

இந்தியா பூரா பாக்க ஆசை. ராப் பகலா கண் விழிச்சு நாங்க காக்கும் நாடு எப்படிப் பட்டதுன்னு தெரிஞ்சுக்க. பொறந்து வளர்ந்தது அம்பாசமுத்திரம். இருந்தாலும் இந்நாட்டில் வாழும் சனம் எம்புட்டு விதம்? இவுங்க நாங்க உசுர பணயம் வச்சு காக்கப் படவேண்டிய தகுதி உடையவங்களா அப்படீன்னு தெரிஞ்சுக்கவும் ஆசைன்னு வச்சிக்கிடலாம்

ஸ்டேஷங்கிட்டே சீப்பா ரூம் எடுத்து படுக்கையும் பொட்டியும் போட்டாச்சு. தினம் கால் வலிக்கர வரைக்கும் சுத்தீட்டு திரும்பப் போரப்போ ஆட்டோவில் போய் படுத்து தூங்கிடரது. இப்படித்தான் வந்த 2நாளா செய்ரேன். எனக்கு உடம்பை ஃபிட்டா வச்சுக்கிட ரெம்ப இஷ்டம். ஆர்மீக் காராளுக்கு கொடுக்கப்படும் ரொட்டீனில் வெயிட் போட சான்ஸே இல்ல. இருந்தாலும் நேத்தைக்கு ரமாமணி ஐயங்கார் மெமோரியல் யோகா ஆஸ்ரமத்துக்கு போயிருந்தேன். ஆர்மீக்காரன் இத்தனை தூரம் வந்திருக்கான்னு பிகேஎஸ் அவரோட “லைட் ஆன் யோகா” பேப்பர்பேக் ஒண்ணு சும்மாவே கொடுத்தா. பழகணும். சிலது முடியாதுபோல. முதுகில் மண் மூட்டை வச்சிண்டு நாலு மலை ஏறி இறங்கிடலாம், உடம்பை ரெண்டா மடிச்சு நுணிக்கையால் பாதத்தை பிடிச்சு மூக்கால் முழங்காலில் எப்படி? இவரால் முடிஞ்சது!

ஜிம்கானா காபி ஹவுஸில் ஆர்டெர் செஞ்சாச்சு. அவசரப் படாம இருந்து குடிச்சிட்டு சுத்தலாம். 11க்கு ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு கிளம்பி இங்கேயும் அங்கேயுமா போயிட்டு இப்ப மணி 4. இப்போ இருக்கும் கார்வே ரோட்லேந்து அப்படியே நடந்து லக்ஷ்மி ரோட் வழியா வேடிக்கை பாத்துகிட்டே ரெயில்வே ஸ்டேஷன் போகணும். வழீலே நாகேஷ்வர் டெம்பிள். அசதியா படுத்து தூங்கிடலாம். நாளைக்கு? வேற திஷாவில். மேப்பில் பாத்து.

மும்பைக்கு போன லீவில் போயிருந்தேன். ஒவ்வொரு சதுர அடீயிலும் 2 பேர். இது வேற. பூனே அத்தனை மனுஷா இல்லாத மாதிரி படும். கூல் சிடின்னு காமிச்சுக்கும். அடீலே இருக்கும் சந்தடியும் இரைச்சலும் வெளீல வராம பாத்துக்கும். மஹராஷ்ட்ராவில் தொழில் பெருகிய ஊர். அடுத்த லீவுக்கு கிழக்கே போலாம்னு ஆசை. கொல்கத்தா. இன்னும் 2 வருஷம் பொறுத்து. அருணாச்சல் போஸ்டிங் வரலாம். சைனாக்காரன் சும்மா லந்து பண்ணிட்டு.

காபிக்கு காசு கொடுத்தாச்சு. கிளம்பிட்டேன். நேர வந்து ரைட்லே திரும்பினா ஷாம்பாஜிபாலம். அந்தப் பக்கம் அல்கா சவுக். அதுலேந்து 5 ரோடு பிரியும். அதில் ஒண்ணு லக்ஷ்மி ரோட். ஃபெஸ்டிவல் ஷாப்பிங்க்கு ரெம்ப ஃபேமஸாம். 3 கிமீக்கு போயிடே இருக்கும். அதுலேந்து இன்னொரு ஃபேமஸ் திலக் ரோட். கொஞ்ச தூரம் வந்திருப்பேன் சட சடன்னு மழை. எங்கே ஒளிஞ்சிண்டிருந்ததோ தெரியலை. ஆரம்பிச்சது வலுத்துப்போய் எல்லாரும் ஓடி ஒளிய ஆரம்பிக்கவே நானும் ஒரு கடை முகப்பில் பலபேரோட ஒதுங்கி நின்னுக்கரேன். பக்கத்தில் நின்னவன் பாத்துட்டு நகந்து நின்னுக்கரான்.

தலையை குளோஸா வெட்டிண்டிருப்பது ஒரு காரணம். முறுக்கி விட்ட மீசை. சாதாரண உடை, இருந்தாலும் ஆர்மீ பூட்ஸ் காட்டித் தந்தது சோல்ஜர்னு. பயத்திலா, மரியாதையா இல்லை இவன் செளக்கர்யமா நின்னுக்கட்டுமா? தெரிஞ்சிக்க முடியாது. நாங்க போகும் பல இடத்தில் இப்படித்தான் ரியேக்ஷன். சிலது ஆச்சர்யமா சிலது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாவும். முக பாவத்தில் ஸ்நேகம் இருக்கும், நெறுங்கி வந்து பெசத் தயங்குவா. பெச ஆரம்பிச்சா விடமாட்டா. மதிப்பான வேலைதான். சேர்ந்துட்டா நம்மளோட இளமைக் காலத்தை தெசத்துக்காக முழுசா கொடுக்க தயாரா இருக்கணும்.

மழை எங்களுக்கு புதிசில்லை. இப்ப ஒதுங்கிடலாம்னு நின்னாச்சு. ரோந்துப்பணீலே இருகப்போ என்ன நடந்தாலும் ரோந்து நிக்காது. மழையோ, வெய்யலோ, பனியோ, சீற்றத்தோட மலைப் பிரதேசங்களில் அப்பப்போ அடிக்கும் காத்தோ, அதுபாட்டுக்கு அது. ஒதுங்குவது பதுங்கத்தான், பதுங்குவது அதி சீக்கிரம் பாயத்தான். கமேண்டிங்க் ஆபீஸர் போஸ் பெங்காலி. “ஒரு நிமிஷம் கவனம் தப்பித்துன்னா நம்ம பேர் எழுதின புல்லட் நம்பளை தேடி பிடிச்சுடும்”.

லீவில் கிளம்ப ரெண்டு நாள் முன்னாடி ஷூவுக்கு அடீலே ஒரு ஆணி குத்திண்டு. உள்பக்கம் நீட்டலைன்னு விட்ரலாம், நடக்கப்போ கீச் கீச்சுன்னு சத்தம். ஞாபகம் வந்தது. அக்கம் பக்கத்தில் காப்ளர் இருந்தா பிடிங்கித் தரச் சொல்லலாம். தூரக்க ஒரு பஸ் ஸ்டாப் பக்கத்தில் மரப்போட்டி மாதிரி தரைலேந்து 4 அடி உசரத்துக்கு தகர ரூஃப் வச்சு மேலே நிறைய சாக்கு விரிச்சு, அதுக்குள் நிச்சயமா செருப்பு தெய்பவன் இருக்கலாம். மழை நின்னதும் போய் பாக்கலாம். ஆணிய இன்னைக்கே பிடுங்கணும்னு இல்ல. எதுத்தாப்போல் ஹோர்டிங்க். அத்தனை அழகா தீபிகா சிரிக்கரா.

மழை நின்னாப்புலே. ஒண்டின சனம் கலைய ஆரம்பிக்க பாக்கரேன். ஓரமா நிறுத்தி வச்ச பைக்ஸ் உதச்சு கிளப்பர சத்தம் காதில். நானும் ரோட்டக் கிராஸ் செஞ்சு பஸ் ஸ்டாப் கொட்டாயிக்கு போயாச்சு. அதுக்குள்ளே தெரு வெளிச்சம் படாத மூலையில் 50 வயசு மதிக்கத்தக்க ஆள் ஒடுங்கி உக்காந்திருக்கான். “ஷூ டீக் கர்னாஹே”. கைய நீட்டரான். கொட்டாய கையில் பிடிச்சிண்டு காலைத் தூக்கி ஷூவை கழட்டி தந்து என்ன செய்யணும்னு சொல்ரேன். திரும்பவும் மழை வலுக்க, ஒதுங்க இடமில்லை. அவனோட கொட்டாய்க்குள் நுளஞ்சு அவனோடவே நெருக்கமா. அவனும் நகந்து இடம் தரான். “ஆர்மீயா?” “ஆமாம்”. “மதராஸியா?” “எப்படித் தெரியும்?” “நடந்து வரப்போ கண்டுகிட்டேன்”. அவன் பின்னாடி ஒரு பெண்ணின் படம். பூவச்சிருக்கு. அவன் மனைவியோ! பாவம், இறந்து விட்டாளா? இரவு இங்கேயே தூங்குவானா? மொள்ள பேச்சுக் கொடுக்கரேன்.

ஷூவில் இருந்த தலை தேய்ஞ்சுபோன ஆணிய ரெண்டு செகண்டில் பிடுங்கி எடுத்துட்டு குழிய சமன் பண்ணி பிசின் தடவி, சொல்லாமலே பாலீஷ் போட ஆரம்பிச்சுட்டான். சேலமாம். பிழைக்க வந்து 30 வருஷமாச்சாம். இங்கேயே ஒருத்திய பிடிச்சுப் போய் கட்டிகிட்டானாம். அவதான் படத்தில். “எப்படி இறந்தாங்க?” “ராத்திரீ இங்கே பிளாட்பாரத்தில் தூங்கரப்ப காரேத்தி கொன்னுட்டாங்க சார்”. “அதெப்படி?” 2 வருஷம் ஆச்சு. தூங்கிட்டிருந்தம். நான் டாய்லெட் களிக்க அந்த பக்கம் போனவன் வரப்ப சிவப்பு கலர் கார் ஒண்ணு இவமேல் ஏறிப் போக, ஐயோன்னு பின்னாடி ஓடரேன் நிக்காம போயிடுச்சு சார். இவள் ரத்தம் பூராவும் போகுது. போலீஸ் வந்திச்சு. இருட்டில் சிவப்பு கார்னு எப்படி சொல்லுவாய்னு கேஸை போட்டும் ஒண்ணுமே நடக்கலை. படமா தொங்கரா. என்னையும் கிளம்பிப் போக வற்புருத்தினாங்க. போலை. கார்பரேஷன் லைசென்ஸ் இருக்கு. எங்கேன்னு போவேன்”.

“ஓட்டினவங்க யார்னு பாத்தியா? வேற எதாய்ச்சியும் அடையாளம்?” ட்ரைவர் தெரியல. ஆனா வண்டி சிவப்பு. அடிச்சுச் சொல்வேன்.” “நம்பர் பாத்தியா?” “இல்லீங்க. ஆன இந்தூர் காரெல்லாம் MH இருக்கும், இதுலே CD. வேறொண்ணும் படிக்க முடியலை” “இதை போலீஸுகிட்டே சொன்னியா?” “சொன்னேங்க. பேசாம இருன்னுட்டாங்க.” “அப்பரம், இன்னொரு அடையாளம் தெரியும். இவிங்க கிட்டே எதுக்கு சொல்லன்னு.” “என்னது?” “மளபெஞ்சா கண்ணாடி துடைக்கர விசிறி பின்னாடியும் இருந்திச்சு.”

“வேற சேஃபா நல்ல இடமா பாத்துகிட்டு போனா உனக்கும் நல்லதுதானே?” “நல்லதுதான். ஆனா எனக்குத் தெரியும் அந்த சிகப்பு கார் திரும்ப வரும்னு. பிடிச்சிடணும். தண்டனை வாங்கித் தந்துடணும்”. இதெப்படி இவனால் சாத்தியம்னு நினைச்சுக்கரேன். என் நினைப்பை கலைக்க, “பாருங்க சார், நல்ல காளமாட்டுத் தோலில் செஞ்ச ஷூ, ஆர்மிக்காரவங்களுக்கு நல்லா உளைக்கணும்னு. உலகத்தில் மனுஷனை தவிர மத்த ஜீவராசிங்க பல செத்தப்பரமும் உபயோகமா இருக்கு”. எத்தனை பெரீய விஷயம்? நான் இந்த ஷூவை போட்டுக்கரப்ப தோணலையே. “ஆமாம், மனுஷன் செத்தா உடனே புதெச்சிடணும், இல்லை எரிச்சுடணும், இல்ல ஊரே நாறிப் போகும்”.

ரெண்டு ஷூவுக்கும் பாலீஷ் போட்டு ஆணிய எடுத்திருக்கான். “எத்தனை கொடுக்கணும்?” கேக்கரேன். கோபமா முறைச்சான். “ஆர்மீக் காரங்களுக்கு ஃப்ரீ செர்வீஸ். மழை நிக்கட்டும், தண்ணீலே முக்கிடாம கொண்டு போங்க!” சொல்லி ரெண்டு ஷூவையும் ந்யூஸ் பேப்பரில் சுத்தி நீட்டரான். வாங்கி வச்சுக்கரேன். மழை நிக்கட்டும் மாட்டிக்கலாம், இல்லை வெறுங்காலோட ரூமுக்குப் போலாம். மழை இப்படி கொட்டிச்சுன்னா என்னத்தை கடைத் தெருவ சுத்திப் பாக்க? அறை நா லீவு வேஸ்ட்.

மத்தாநா வானம் வெளிச்சமா நல்லா ஆகிடுச்சு. இன்னக்கி சதுர்ஷ்ரிங்கி மந்திர் போயிட்டு வரலாம்னு. 8கிமீயாம். பொழுது போகும். சிவாஜி நகர் வளியா போய்டு வரப்ப சேனாபதி போப்பட் ரோட்டில் வந்துகிடலாம்னு. நடக்க ஆரம்பிக்ரேன். எந்த ஒரு ஊருக்கும் போனாலும் நடந்தே சுத்தரப்போ ஊரின் பல்ஸ் பிடிச்சுப் பாத்திரலாம். சனங்களோட நடை உடை பாவனை, அவிங்க குணம் கூட தென்பட்ரும். நேத்து அந்த காப்ளர் கிட்டே கேட்டுத் தெரிஞ்ச விசயம் ஊர் எப்படி இருந்தாலும், அரசாங்கம் என்னத்தைத் தான் சட்டம் போட்டாலும் போலீஸ்காரங்க மனசு சுத்தமாயில்லன்னு. ஏழையின் சாவு சாவில்லையா? ஏத்திக் கொன்ன காரப் பத்தி அம்பிட்டு அடையாளம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கலைன்னா? CD நெம்பர் ப்ளேட் அடையாளம் ஒண்ணு போதுமே. வெளிநாட்டு கான்சலேட்டை சேர்ந்த கார். மடக்கிப் பிடிக்க 10 நிமிசம் ஆகுமா? செய்யலை. பெரீய இடம்னு விட்ருப்பாங்க. நாம உயிரக் கொடுத்து நாட்டை காக்க வெய்யில் மழைனு பாக்காம நிக்கம், இவிங்க அசால்டா நாட்டுக்குள்ளேயே இருந்திட்டு உசிர எடுத்திட்டாய்ங்க.

சிவாஜி நகர் பெரேட் க்ரவுண்ட் தாண்டியாச்சு. ஐயங்கார் யோகாஸ்ரம் இங்கேதான் பக்கத்தில். கணேஷ்கிண்ட் ரோடாம். இடது கைப்பக்கம் கவெர்மென்ட் பாலிடெக்னீக். பெரீசா காம்பவுண்டோட. கொஞ்சம் தள்ளீ வந்தா கட்டார் எம்பஸி. பாத்திட்டே இருக்கன் பெரீய கேட்டத் தொறந்திட்டு சிவப்புக் கார். நம்பர் ப்ளேட் பாத்ததும் அவன் சொன்ன காரோனு நினைச்சுகிடுதேன். கொஞ்சதூரம் நான் வந்திட்டிருந்த திசையில் போய் யூடெர்ன் எடுத்து என்னைப் பாத்து வருது. சமர்நாத் ஆஸ்பத்ரீன்னு தூரக்க கட்டடம். அதுகிட்டே நாலஞ்சு பெரீய ரோட்டுங்க பிரியும் எதில் போகுமோ? அப்பத்தான் என்னைக் கடந்து போக பாக்கரேன் பின்னாடியும் வைப்பர் வச்ச கார்.

ரோந்துப் பணீலே ஒருக்கா பாகிஸ்தான் பார்டர்லே இருந்தம். உத்தாம்பூர்லேந்து 100 கிமீ. ஜம்மூ தாண்டி ரண்பீர்சிங்கபுரா கிராமம். அங்கே கேம்ப். அதுலேந்து ராத்திரி 9மணிக்கு நாங்க 12பேர் கிளம்பி சியல்கோட் ரோட்டில் போனா இந்திய பாகிஸ்தான் பார்டெர் வரும். அதை ஒட்டினாப்போல் 2 டீமா பிரிஞ்சு இங்கிட்டு 20கிமீ, அங்கிட்டு 20ன்னு சூரியன் உதிக்கக்குள்ள ரோந்துப் பணி. நல்லா ஞாபகம் இருக்கு. எங்க டீம் வடக்கே. 15கிமீ வந்ததும்தான் பாக்கரேன் ரெண்டு பெர் ஒரு கிராமத்துக்குப் பக்கத்தில் உக்காந்திருக்காய்ங்க. குளிர்ல, உடம்பைச் சுத்தி கம்பளி. ஆனா தோளுக்கிட்ட இரும்புக் கணக்கா துருத்திட்டு. சந்தேகம் வந்திச்சு.

முன்னாடி போனவங்ககிட்டே மொள்ள சொல்ரேன். “காவுலோக். சோடுதோ.” வீட்டுக்குள் தூங்காம நடுநிசி 1 மணிக்கு வெளீலே என்ன செய்வாங்க? யோசிக்கப்பவே மழை ஆரம்பிக்க, அதில் ஒருத்தன் கம்பளியை விரிச்சு உதறி நல்லா போத்திக்கிடுதான். நிலா வெளிச்சத்தில் பெரீய துப்பாக்கி தெரிஞ்சிடிச்சு. “சாவ்தான்!” கத்திட்டே என் துப்பாக்கிய அவனை நோக்கிப் பிடிக்க, எங்கூட வந்தவங்க சுதாரிச்சு இந்தப் பக்கமா ஓடி வர. ஒருத்தன் எளுந்து எங்களய நோக்கி எயிம் செய்ய, சட்டுன்னு ரெண்டு ரவுண்ட் அவிங்க மேலே இறக்கி 3 விநாடீலே 2 பேரையும் கொன்னுபிடுதேன். லந்து செய்யன்னு பார்டெருக்கு அப்பாலேந்து இங்கே வந்தவங்க, விட்ருந்தா என்னெல்லாம் செஞ்சிருப்பாங்களோ?

இன்னைக்கு அந்த சிவப்புக் கார் பாத்ததும் எதிரி தென்பட்டாப்லதான் தோணிச்சு. எப்படி தொறத்திப் போக? சுத்தி முத்தும் பாக்கரேன். புல்லெட்லே ஒரு போலீஸ்காரன் வர, கையக் காட்டி “ஓ லால் காடி பக்கட்னா ஹே. சூட்ன நஹீ தேனா, மதத் கரேங்கே?” “க்யா கியா?” “ஹிட் எண்ட் ரன். ஐ ஏம் ஆர்மீ!” அடையாள அட்டை காட்ட “ஏறிக்க!” விரட்ட ஆரம்பிக்கரம். அப்பன்னு பாத்து மழை தூரல் ஆரம்பிக்க, ரோட்டில் ஈரம். பைக்கெப்படி வேகமா? ஆனா காரை கண் பார்வையிலேந்து அகட்டலை.

நினைச்சுகிட்டேன், எப்படியும் பிடிச்சிடலாம்னு. சிப்பாய்னா பார்டெரில் மட்டுமா? ஊருக்குள்ளும் சிப்பாய்தான். ட்யூடீலே, லீவுலே, ரெண்டுத்லேயும். நான் இருக்கு முட்டும் ஒரு உசுரு நம்ப சைடில் போக விட்ருவமா? அப்படி நடந்துட்டா செஞ்சது எந்தக் கொம்பனா இருந்தாலும் என் கடமைய அதாவ்து பிடிச்சு தண்டிச்சுட்டுத்தான் மறு ஜோலி.

No comments:

Post a Comment