18. இயலாமை (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam
பலபேருக்கு நடக்கரது நன்மைக்குத்தான்னு தெரியாம போகும். அதுலேயும், இந்த பிராம்ணாளுக்கு வந்தது நல்ல ஆப்பர்ச்யூனிடி, பகவானா அனுப்பியிருக்கார், கையில் பிடிச்சுக்கணும்னு தோணாது. அப்புரமா காலம் கடந்து புலம்பித் தீத்துடுவா. அப்படி என்ன நடந்து போச்சு, எல்லா பிராம்ணாளையும் குத்தம் சொல்ராய்னு கேக்கலாம். சொல்ரேன்.
என் பேர் சீனுவாசன். ஆனால் ஐயர். உடனே உங்க ஊர் செம்மங்குடியான்னு கேக்கப்பிடாது. எங்காத்து மாமிக்குத்தான் செம்மங்குடி. மாமி பேர் பர்வதம்.
எங்களுக்கு ஒரே பையன், தலச்சன் குழந்தை பிள்ளையா பிறந்ததும், “அதான் ஆண் குழந்தை பிராப்தம் ஆகிடுத்தே, தைரியமா இன்னொண்ணு பெத்துக்கோடா”ன்னு எங்கம்மா சொன்னா. “உங்கம்மா சொல்லிட்டா நாம உடனே செஞ்சுடணுமாக்கும்?” பர்வதம் கமென்ட் அடிச்சா. மஹாமகக் குளத்து படிக்கட்டில் உக்காந்திருக்கரச்சே “அம்மா இப்படி அப்பிப்பிராயப் படராடீ”ன்னு நான்தான் சொன்னேன்.
நாங்க வாரம் ரெண்டு மூணு தடவை கோவிலுக்குப் போரோம்னுட்டு இங்கே வந்துடுவம். இவள்தான் இப்படி ஒரு ஐடியா தந்தது. “உங்கம்மா ஒட்டுக் கேக்காம நாம நிம்மதியா சித்தே அன்னியோன்யமா மனசு விட்டு பேசிண்டிருந்துட்டு வரலாம் வாங்கோ.” ஒருநா என் காதுக்கு மட்டும் கேக்கரா மாதிரி இப்படி சொல்லி இங்கே கூட்டிண்டு வந்தா. அட, இது நல்ல ஐடியாவா வொர்க் அவுட் ஆக அடிக்கடி வந்துடுவோம். “என்னடா சீமாச்சு! கிட்டக்க இருக்கர காசி விஸ்வனாதரைப் பாத்துட்டு வரத்துக்கு இத்தனை நேரமா”ன்னு அம்மா கேப்பா.
கும்பகோணத்தில் கோவிலுக்கா பஞ்சம்? லேட்டானதுக்கு தகுந்தா மாதிரி தூரக்க இருக்கும் ஒரு கோவிலை இவள் சொல்ல நான் வெறுமனே தலையை பூம்பூம் மாடு மாதிரி ஆட்டிட்டு உள்ளே போயிடுவேன். சினிமாவுக்குப் போனா சரஸ்வதி கோவில் போனோம்பா! கூத்தனூர் போயிட்டு வர 3 மணி நேரம் ஆகும். இல்லை திருவையாறு.
இதெல்லாம் நடந்து ரொம்ப நாளாச்சு. இப்போ அம்மா இல்லை. நாங்க குளக்கரைக்கும் போரதில்லை. வேண்டாம்னுட்டா. ஏண்டி போனா ஜாலியாத்தானே இருந்ததுன்னா, அதான் ஒட்டுக்கேக்கன்னு ஆத்தில் யாரும் இப்போ கிடையாதே, ஏன் தெருத்தெருவா அலையணும்?
அன்னைக்கு என்னோட பால்ய ஸ்நேகிதன், மும்பையில் இருக்கான் “தெரிஞ்சவர் ஒருத்தர் கோடாவில் பெரீய வேலையிலிருக்கர், கும்மோணம் வந்து கோவிலெல்லாம் பாக்கணும்னு ஆசைப்படரர், ராஜஸ்த்தான்காரர், நம்மாத்தில் தங்கவச்சு சுத்திக்காமி.” லெட்டர் போட்டிருந்தான். இவளோ, “ஊரில் ஹோட்டலா இல்லை, அங்கே தங்கிக்கப் பிடாதா”ன்னு கேக்க, “இப்படி ஷேத்ராடணம்னு வரவாளுக்கு, நாம ஒத்தாசை செஞ்சா நமக்குத்தான் புண்யம், அவருக்கு நல்ல வசதி, இருந்தாலும் சாத்வீகமா ஒரு பீராம்ணாவாத்தில் தங்கிண்டு கோவிலுக்குப் போணம்னு பிரியப்படராராம்.” கன்வின்ஸ் பண்ணி ஒத்துக்க வச்சேன்.
வந்தவர் தங்கமானவர். எல்லாக் கும்மோணம் கோவிலையும் நடந்து போயே பார்த்தர். சிலதுக்கு கூடப் போனேன். அப்புரம் கடைசீ நாளைக்கு கார் ஏற்பாடு செஞ்சு தந்தேன், சுத்து வட்டாரத்திலிருக்கும் சில கோவிலைப் பாத்துட்டு வரச்சொன்னேன்.
3 நாள் விருந்தினர்தான். வரச்சே எங்களுக்கு வஸ்திரம் வாங்கிண்டு வந்து ப்ரெஸென்ட் செஞ்சர். கோடா காட்டன் புடவை பிரசித்தம்னு. “அய்யே! பருத்திப் புடவையா?” இவள் உள்ளே எடுத்துண்டு போய் முகத்தை சுளிச்சா. நல்லவேளை அவர் பாக்கலை. ஆத்தில் கார்த்தாலே பலகாரம், ராத்திரி மட்டும் சாப்பாடு. மத்ததை வெளீலே பாத்துண்டர். ஃபில்டர் காபி ரொம்ப அருமையா இருக்குன்னும் இவள் சமைச்சதையெல்லாம் ருசிச்சு பாராட்டி சாப்பிட்டர். எனக்கே ஆச்சர்யமா இருந்தது.
வெத்தல் குழம்பு வச்சிருந்தா. உளுந்து அப்பளத்தை தானாப் போட்டு. சித்தே புளி ஜாஸ்தின்னு எனக்குத் தெரியும். இன்னும் கொதிச்சிருக்கலாம். சொன்னா வள்ளுன்னு விழுவள். ஆனா அந்த மனுஷன் என்னமோ இன்னும் கொஞ்சம் ஊத்துங்கோன்னு கேட்டு வாங்கிச் சாப்பிட்டர். “இது என்ன காய்?” மிதக்கறது அப்பளம்னு தெரியலை.
ஆனால் டயம் கிடைக்கரச்சே இவளை புகழ்ந்து பேசி, புடவையும் தந்து, அங்கங்கே கலெக்ட் செஞ்ச கோவில் பிரஸாதங்களை இவளுக்கு பவ்யமா கொண்டு வந்து தந்து இவள் மனசை ஓரளவுக்கு கவ்விட்டர்னு பட்டது. இவளே “இன்னும் ரெண்டுநா இருந்துட்டுப் போங்கோ, திருவாரூர், திருநள்ளார், தஞ்சாவூர் எல்லாம் பாக்கலாமே!”ன்னு சொல்ல அவர் “அடுத்த வருஷம் குடும்பத்தோட வரேன்.”
இவளுக்கு அச்சச்சோ பெரீய குடும்பமாச்சே நிறைய காப்பிப்பொடி போட்டு டிகாக்ஷண் வைக்கணுமேன்னு தோணித்து. தெரியும், அவர் மனைவி, 4 குழந்தைகள்னு. இவள் மைண்ட் வாயிஸ் கேட்டுதோ என்னமோ, “நானும் என் மனைவியும் மட்டும் வருவம், நீங்க கோவிச்சுக்கப் பிடாது.” இவள் ஏன் கோவிச்சுக்கப் போரா? எல்லாம் இனிதா முடிஞ்சது.
கிளம்பர அன்னைக்கு ஒண்ணு சொன்னர். “உங்காத்து பையன் அடுத்த வருஷம் MSc படிப்பு முடிச்சதும் எனக்கு லெட்டர் போடுங்கோ, உடனே வேலை போட்டுத் தரேன்.” அசந்து போயிட்டேன். ஒரு சாதாரண வெத்தக்குழம்பு இத்தனை வேலை செய்யுமான்னு பட்டது. மனுஷர் உண்மையிலேயே உதவலாம்னு பிரியப்பட்டர்னு புரிஞ்சது.
ஏன்னா சரியா 11 மாசம் கழிச்சு அவர் கிட்டேந்து என் சிநேகிதன் மூலம் தகவல். “ஏண்டா உன் புள்ளை விஷயமா கேக்கரர், நீ சரீன்னா கோடாவில் கை நிறைய சம்பளத்தோட வேலை காத்திண்டிருக்கு, அப்ளை செஞ்சு அனுப்பி வை”.
பர்வதம் அப்போத்தான் நர்த்தனம் ஆட ஆரம்பிச்சா. மஹிஷாசுர நர்த்தனம். “என் ஒரே பிள்ளையை 2000 கிமீ தள்ளீ கண்காணாத இடத்துக்கெல்லாம் அனுப்ப மாட்டேன். அவ்வளவேதான்”. தன் பிள்ளைக்கு வந்த மிக நல்ல வாய்ப்பை, அமோகமான வாய்ப்பை தெரிஞ்சுக்காம தன் பைசாவுக்கு பிரயோஜனமில்லாத நினைப்புகளால், அதன் மேல் இருந்த பைத்தியக்காரத் தனமான பிணைப்பால் தடுத்துட்டா. என்ன சொல்லியும் கேக்கலை. என் பிள்ளையும் ஆனமுட்டும் மன்றாடிப் பார்த்தான். முடியலை. என்னத்தை சொல்ரது.
என் சிநேகிதனுக்கு சொல்லிட்டேன், என் சார்பில் எங்காத்துக்கு வந்து உறவு பாராட்டின மஹானுபாவருக்கு நன்றியைச் சொல்லிட்டு அவர் எங்க மடீலே போட்ட அந்த எதிர்பாராத பரிசை ஏத்துக்க முடியாத இயலாமையை சொல்லச் சொல்லி. நானே கூப்பிட்டு பேஸியிருக்கணும், அதுக்கு தைரியம் இல்லை.
அப்போதான் என் சிநேகிதன் சொல்ரான், உன் பிள்ளை பேரில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் டைப் அடிச்சு வச்சிண்டு டேட் மட்டும் அப்புரம் போடுவேன்னு காமிச்சர்டா. மாசம் 23ஆயிரம் சம்பளம். 1977இல் இது எவ்வளவு பெரீசு? விவரங்கள் கேட்டதும் இன்னும் வருத்தமானதுதான் மிச்சம்.
என் சீமந்திர புத்திரனுக்கு முதல்ல அத்தனை வருத்தமில்லைன்னாலும் – அப்புரம் 4 வருஷம் போல் வேலை கிடைக்காம, தஞ்சாவூர் காலேஜில் கெமிஸ்ட்ரி லேபில் இன்ஸ்ட்ரக்டரா ஒரு வேலை கிடைக்க வேற வழியில்லாம அதை ஏத்துண்டு, தினம் ஆத்துக்கு வரச்சே கடு கடுன்னு மூஞ்சியை வச்சிண்டு எல்லார் மேலேயும் எரிஞ்சு விழுவன். அவனை சமாதானப்படுத்தி ரசஞ்சாதம் போடுவள் இவள்.
இப்படி இருகச்சே எனக்கு ரிடயர்மென்ட்டுக்கு வேளை வந்தது. எதுக்கெல்லாம் வேளை வரணமோ வராது, இது மட்டும் சொல்லி வச்சாப்போல. என்னையும் ஆத்துக்கு போய் அங்கேயே இரு, வெளீலே வராதேன்னு சொல்லிட்டா. பணக்கஷ்டம்னு ஒண்ணூம் இல்லை. நாங்க மூணுபேர்தான். அரசு மகளிர் கல்லூரிகிட்டே வட்டிக்குருக்கள் தெருவில் அப்பாவோட இருந்த எங்கள் சொந்த ஆத்தில். வாடகை கிடையாது. கப்பு பேங்கில் வந்த சேமிப்பை ஃபிக்ஸடில் வச்சாச்சு. இப்போ புள்ளைக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வச்சுட்டா கிருஷ்ணா ராமான்னு இருந்துடலாம்.
இதையே ரொம்ப நாளா யோசிச்சிண்டிருந்த பர்வதம் வாங்கோ இவன் ஜாதகத்தை கும்பேஸ்வரர் கோவிலில் வச்சு எடுத்துண்டு வந்துடாலாம்னு ஜிவ்வுன்னு கிளம்பினா.
அவள் ஜாதகத்தை எடுத்த முஹூர்த்தமா இல்லை ஈஸ்வரன் அருளா, இல்லை ரெண்டுமான்னு ஆச்சர்யப்படற மாதிரி நிறைய பொண் ஜாதகமா வந்து குமிஞ்சது. இது 1985இல். இவனுக்கு சாதாரண வேலைதான் இருந்தாலும் பொண் கொடுக்க லைன். உள்ளூரிலேயே மாப்பிள்ளை இருந்தாப் போதும் பொண்ணை வெளியூருக்கு அனுப்ப முடியாதுன்னு நினைக்கிர அப்பாக்களும் நிறைய. அவாளுக்கு பர்வதம் மாதிரி ஒரு ஆத்தோட பிள்ளையை வச்சுக்கணும்னு நினைக்கரவளொட பையன்தான் வேண்டியிருக்கு போலேருக்கு. யார் கண்டா?
இவளும் உள்ளூர் வரனா பாத்து அதுலேந்து செலெக்ட் செஞ்சு ஒரு 5 தேர்ந்தெடுத்து வச்சிண்டு, இன்னைக்கு புள்ளை வந்ததும் அவனோட பேசி, அவனுக்குப் பிடிச்ச 3ஐ ஷார்ட் லிஸ்ட் பண்ணி பொண் பாக்க கிளம்பிடலாம்னு பிளான்.
வந்தவன் கை கால் அலம்பிண்டு சாப்பிட உக்காரலை கல்யாணப் பேச்சை எடுத்தாச்சு. இவனுக்கோ நல்ல வேலையாப் போணம், அப்புரமா கல்யாணம்னு யோசனை. வயசோ 29 ஆச்சு. அதுவும் மனசு கனத்தது. அவனோட படிச்சவாளில் பலர் வெளிநாடும், இல்லை அட்லீஸ்ட் சென்னை, இல்லைன்னா கல்கத்தா, தில்லீன்னு. பர்வதம் என்னமோ மாயம் செஞ்சு அவனை பொண் பாக்க சம்மதிக்க வச்சா.
இந்தக் கதையை முதல்லேந்து படிச்சிண்டு வரவா நான் எப்படிப்பட்டவன்னு புரிஞ்சு வச்சிண்டிருப்பேள். இவாளா பாத்து இதான் பொண்ணு நிச்சயம் பண்ணியிருக்கேன் கல்யாணத்துக்கு வந்துடுங்கோன்னு கூப்பிட்டாலும் ஓகே, இல்லை நீங்களே சம்பந்திப் பேர்கிட்டே பேசுங்கோன்னு கேட்டுண்டாலூம் சரீன்னு இருக்கரவன். அநேகமா என்னையும் பொண் பாக்கரப்போ அழைச்சிண்டு போவள்னு பட்டது. பொண் பாக்கிர ஆத்தில் பையனோட அப்பன் எங்கே, வரலையான்னு கேட்டுட மாட்டாளா?
கல்யாணம் பண்ணிக்கர சிந்தனை கொஞ்சமாவது இருந்து பொண் பாக்க்கரதுன்னு கிளம்பிட்டா ஒருத்தியாவது பிடிக்காமலா போயிடும்? முதல் பொண்ணை ஏனோ தானோன்னு பாத்தான். ஆத்துக்கு வந்து வாயே தொறக்கலை. இவளும் வற்புருத்தலை. ரெண்டாவது பொண்ணை பாக்கரச்சே தனியாப் பெசணும்னு பேசினான். ஆனா தோதுப்படாதுன்னு ஆத்துக்கு வந்து சொல்லிட்டான். “ஏன்னா உங்களுக்கு இந்த ரெண்டு பொண்ணும் பிடிக்கலையா?” இவள் என்னைக் கேக்க, “எனக்கு ரெண்டு பேரும் டபுள் ஓகே!” நான் சொல்ல, அதைத் தப்பா புரிஞ்சிண்டு இவள் என்னை கேவலமா பாக்க எல்லாம் நடந்தது. மூணாவதோட போடோவை அவாத்துக்கு கிளம்பரத்துக்கு முன்னாடியே என் பயல் எடுத்து பர்ஸில் வச்சுக்கரதைப் பாத்துட்டேன். அதே பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சோம்.
ஆத்துக்கு வந்த மாட்டுப்பொண்ணு பாக்கரத்துக்குத்தான் பெட்டிப்பாம்பு. ஆனால் எப்போ சீறுவாள், படமெடுப்பான்னு சொல்லவே முடியலை. ரெண்டு நாள், ஒரு ராத்திரியில் பர்வதத்தின் பிள்ளையை முடிஞ்சு வச்சுண்டுட்டா. ரெண்டு மாசத்தில் அவளுக்கு முன்னாடி இவள் மஹிஷாசுர நர்த்தனம் செல்லுபடி ஆகாதுன்னு எனக்கு கன்ஃபெர்ம்டா தெரிஞ்சுது.
ரெண்டு மித்தத்தோட வீடு எங்களோடது. வேணப்பட்ட இடம். ஆனா தனிக்குடுத்தனம்னு பேச்சு அடி பட்டது. “தஞ்சாவூரில் வேலைன்னா அங்கேன்னா குடியிருக்கணும், தினம் 40கீமீ ஒண்ணரை மணிநேரம் போக வர என் ஆத்துக்காரர் உடம்பு அலண்டு போயிடரது அப்புரம் என்னத்தை பண்ணி என்னத்தை குழந்தை பெத்துக்கரது?” பர்வதத்தை ஒருநா கிணத்தடீலே வச்சு கேட்டுட்டாளாம்.
இவாளுக்குள் கைகலப்பு நடக்கரத்துக்குள் நானே இவனுக்கு தஞ்சாவூரில் ஒரு வீடு பாத்து பால் காய்ச்சி விட்டுட்டு வந்தேன். கூடவே வந்த பர்வதம், உம்முன்னு நின்னுண்டிருந்தா. திரும்பரச்சே ‘வாடீ ஐயாறப்பனை பாத்துட்டு அப்படியே கும்மோணம் போலாம்”னு பஸ் ஏறினோம். பஸ்ஸில் சொல்ரா, “குழந்தை மாசம் ஒருக்கா வாரக் கடைசீயாப் பாத்து கும்மோணம் வந்து ரெண்டு நா தங்கிட்டுப் போவேன்னு சொன்னது நிச்சயமா செய்ய மாட்டான்னு தெரியும்”. “ஆமான்டி, எனக்கும் அப்படீத்தான்னு பட்டது.” இப்போல்லாம் அவள் என்ன சொன்னாலும் அக்ரீ பண்ணிடுவேன்.
கும்மோணம் வரத்துக்கு ராத்திரி 8 ஆகிடுத்து. பசியே இல்லைன்னு டம்ப்ளர் மோரைக் கரைச்சு குடிச்சாச்சு. கதவெல்லாம் சாத்திட்டு, நிசப்தமாப்போன ஆத்தில் லைட்டை அணைக்கரச்சே திடீர்னு தூணீல் சாஞ்சு உக்காந்துண்டு, “பெரீய தப்பு செஞ்சுட்டேன்”கிரா.
கண்ணில் தாரை தாரையா நீர். “அவனை கோடாவுக்கே அனுப்பிச்சிருக்கணும். அவன் வாழ்க்கையையே ஸ்பாயில் செஞ்சுட்டேன்.”
அவள் துக்கத்தை போக்க முடியாத என் இயலாமையை நினைச்சிண்டேன்.
No comments:
Post a Comment