Saturday, August 15, 2020

கொத்தமல்லி

கொத்தமல்லி (சிறுகதைகள் சீ2 – 49)
#ganeshamarkalam

கணேஷ் கல்யாணாம்! திண்ணையில் கதை எழுதரார். “கருகப்பிலை”ன்னு ஒரு கதை. போட்டியா நாமும் ஒண்ணு எழுதலாம்கரச்சே இந்த தலைப்புத்தான் தோணித்து. 1 வாரம் ஆச்சு, நகரவேயில்லை ஒன் லைனோ, கதைக்கான முகாந்திரமோ சிக்கலை. 

ரைட்டர்ஸ் பிளாக்காமே? அதுவோ?. நிறைய எழுதினப்புரம் வந்தாத்தான் பிளாக். ஆரம்பத்துலேயே வந்தால் ஸ்டார்ட்டிங்க் ட்ரபிள். இப்போ என்ன பண்றது? எப்படியாவது எழுதி முடிக்கணும். அந்தாள் கதையைவிட இதுதான் நன்னா இருக்குன்னு லைக்ஸும் விமர்சனங்களும் அள்ளணும். ஒரு கை பாத்துடணும். மாமி மாமாக்களெல்லாம் ஹெல்ப் செய்யணும். கணேஷ் கல்யாண் மூஞ்சியில் கரியைப்பூசணும்!

உமக்கு அவர் மேல் என்ன துவேஷம்ன்னு கேக்கரேளா? இருக்கு. நான் யார்னு சொன்னா எல்லாமே புரியும், என்னை ஆதரிப்பேள். உங்கள் சப்போர்ட் வேணும். சொல்ரேன். வேர யாருமில்லை. அவர் மின்னாடி எழுதின கதையில் வந்த காரக்டர்தான் நான். என்னை சின்னாபின்னப்படுத்தி அம்போன்னு நடுத்தெருவில் விட்டுட்டர். பழி வாங்கணுமா கூடாதா? இன்னா செய்தோரை அவர் நாண கதை எழுதிடரதுன்னு. ஒரு யாகம் மாதிரி ஆரம்பிச்சா சனியன் தலைப்புக்கப்புரம் தோணவே மாட்டேங்கிறது.

என்னை மாதிரி இன்னும் இருப்பாளே? சேர்ந்து கூட்டமா போய் அவரை மொத்தினா? எல்லாருமே கதை எழுத ஆரம்பிச்சா? திண்ணை தாங்குமா? 
என்னைப்போல் மனசொடிஞ்சு நிற்கதியா நிக்கரவாளை தேடிப்பிடிச்சு சேர்த்துண்டா? நல்ல யொசனையாப் பட்டது. சீசன் 1 முதல் கதையிலேந்து ஆரம்பிச்சேன். எந்த காரக்டெர் இவர்மேல காண்டோட இருக்கும்னு பார்த்து அதுகளை தேடிப்போலாம்னு. இந்த மனுஷனால் வஞ்சிக்கப்பட்டவா இன்னும் ரெண்டு பேர் கிடெச்சா போதும்.

முதலில் அம்புட்டவன் சுந்தரேஸன். “கிட்டு (எ) ராமகிருஷ்ணன்” கதையில் கடைசீலே TTK சாலையில் உதைபட்டு மானம் போய் அப்படியே பிளாட்பாரத்தில் விட்டுட்டர். அப்படியே உக்காந்திருக்கான். “என்ன ஆச்சு, நீ வீட்டுக்கே போலையா, உன் பொண்டாட்டி அகல்யா, அதான் கிட்டு காதலிச்சவ உனக்காக காத்திண்டிருப்பாளே?. “போகணும்தான் ஆனால் எனக்கு அகல்யாவை பாக்கரத்துக்கு முன்னாடி என் கதையை இப்படி முடிச்ச கதாசிரியனை ஒரு வழி பண்ணணும்.” “நல்லது, நானும் அதுக்குத்தான் கிளம்பினேன், எழுந்திருங்கோ வாங்கோ”. கிளம்பரோம். “எங்கே போகணும், என்ன செய்யப்போரோம்?” “வெயிட், செய்யாப்போர காரியத்துக்கு இன்னொரு ஆள் தேவை.”

மூணாவதா கிடெச்சார் கண்ணன். காஞ்சீபுரத்து கதை. “கேட்டுச் சத்தம்” இவரைத்தான் தன் அத்தை பொண் சுப்பியை கல்யாணம் பண்ணிக்கணும்னு கதை ஆரம்பிச்சதுலேந்து உசுப்பேத்திவிட்டுட்டு, அப்புரம் சுப்பி யாரையோ இழுத்துண்டு ஓடிட்டான்னு கதையை முடிச்சுட்டு இவரை நட்டாத்தில் விட்டுட்டு போயிட்டர் அந்த மாஹானுபாவன்! ஆத்து கேட்டை யார் தொரந்தாலும் கேக்கர கீச்சு சத்தத்தில் சுப்பிதான் வரான்னு ஓடி வந்து பாத்துண்டுண்டு மனுஷர் பாவம். காஞ்சீபுரம் வைகுண்டபெருமாள் கோவில் சன்னிதி தெருவில் கல்யாணமே செஞ்சுக்காமல் கைச்சமையல் செஞ்சு சாப்ப்டுண்டு உடம்பு இளைச்சுப்போய். “நானும் வரேன், என் வாழ்க்கையையே நிர்மூலமா ஆக்கின ஆளை விடப்பிடாது”.

ஒரு இடத்தில் உக்காந்துண்டு எல்லார் கஷ்டத்தையும் ஷேர் செஞ்சுண்டோம், என் கதையையும் சொன்னேன்.

நான் வளர்மதி. ராயல் கிளினிக்கில் வேலை பாத்தேன். BP செக்கப்புக்காக ஒரு தாத்தா பத்துநாளைக்கு ஒருக்கா வருவர். பிரியமா பேசுவர், பழகுவர், அனால் அவர் என்மேல் பிரியமா இருப்பது அவர் மாட்டுப்பொண்ணுக்கு பிடிக்கலை. என்னைபத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என் வேலைக்கே உலை வச்சுட்டா. அப்போலேந்து நான் வேலை இல்லாம கல்யாணமும் ஆகாம சுத்திண்டிருக்கேன். இப்படி நடக்கணும்னு எழுதி கதையை போஸ்ட் செஞ்ச அந்த ஆளை பிடிச்சு நாக்கை பிடிங்கிக்கரா மாதிரி கேக்கணும். 

சரிதான், நாம எல்லோருமே பாதிக்கப் பட்டவா, இப்போ என்ன செய்யலாம்? யோசிக்க ஆரம்பிச்சோம். ஆனா ஒரு மண்ணும் ஐடியவே வரலை. மூணு மூளை சேர்ந்தும் ஒண்ணும் உருப்படியா தோணலை. அவரை விட்டுடப்பிடாதுன்னு மட்டும் மூணுபேர் மனசும் சொல்லிண்டே இருந்தது. கையில் ஆம்பிட்டார்னா வச்சு செய்யணும்னு மட்டும் வைராக்கியமா இருந்தோம்

அப்பா அம்மா பாத்துவச்சு மனசுக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் செஞ்சுண்டும் அவளோட முன்னாள் காதலன் (ஓருதலை கேஸ்) இவர்மேல் கடுப்பில், அதாவது என்கிட்டே இல்லாததை இவன்கிட்டே என்னத்தை கண்டாள்னு அடிபட்டு கீழே களைப்பா உக்காந்திருக்கரச்சே குச்சியை எடுத்து விளாசிட்டுப்போரா மாதிரி கதையை முடிச்சா? சுந்தரேஸனுக்கு உடம்பில் வலி போயிருந்தாலும் மனசு இன்னும் வலிக்கறதே! கண்ணணுக்கோ ஒரு முழுக்கதை பூரா ஆரம்பத்துலேந்தே உன் அத்தை பொண் உனக்குத்தான்னு ஆசை காட்டிண்டே வந்துட்டு டபக்குன்னு யாரோடையோ அவள் ஓடிட்டான்னு இவன் கதையை ஒண்ணுமில்லாம முடிச்சு பைத்தியமா வாச கேட்டையே பாத்துண்டு பிரம்மச்சாரியா வாழர வலி. எனக்கு நான் செய்யாத தப்புக்கு என் வேலையை பறிச்சிண்டு நடுத்தெருவுலே விட்டுட்டார்னு கோவம்.

அத்தோட நின்னுடாம இன்னூம் சீசன் 2ன்னு கதை எழுதிண்டு போரர். இன்னும் எத்தனை பேரோட வாழ்க்கையை பறிக்கப்போரர்? இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வச்சுட்டாத்தான் மனசு ஆறும். யோசிக்கரோம். இங்கே உக்காந்து யோசிச்சா தேராதுன்னு நேரே பீச்சுக்குப்போய் அங்கே மணலில் உக்காத்து யோசிச்சா ஒருவேளை ஐடியா வரலாம்னு பெசன்ட் நகர் பீச்சுக்கு வந்தாச்சு. 

நான் நடுவுலே உக்காந்துக்க, ரெண்டுபேரும் ஆளுக்கு ஒரு பக்கமா உக்காந்துக்க அலைகளை வெறிச்சுப்பாத்துண்டு என்ன செய்யரதுன்னு விளங்காம பொழுது நகர்ந்தது.

எங்க இடத்துலேந்து சித்தே தள்ளி ஒரு மாமி இன்னொரு வயசான மாமியோட உக்காந்திருக்கா. சின்ன மாமி கையிலே ஒரு ஸ்மார்ட் போன். அதுலேந்து எதையோ நிதானமா இன்னொரு மாமிகிட்டே படிச்சு சொல்லிண்டிருக்கா. இந்த மாமி படிக்கப் படிக்க பெரீய மாமி தலையை ஆட்டரதும் வாய் விட்டு சிரிக்கரதுமா. எனக்கு இவா ரெண்டு பேரும் அப்படி என்னத்தை படிச்சிண்டிருக்கான்னு ஆச்சர்யமா இருந்தது. நாங்க 3 பேர் இங்கே குமைஞ்சிண்டிருக்கோம் இவாளுக்கு கொண்டாட்டம். அதுவும் நாங்க வந்த பீச்சுலேயே, எங்க பக்கத்துலேயே!

நான் பாத்ததை கண்ணன் மாமாவும் பாத்துட்டர். “அவா சிரிப்பைப்பாரு! சரி ரெண்டு பெருக்கும் என்ன உறவுன்னு நீ நினைக்கராய்?” “நிச்சயம் மருமகள் மாமியாரா இருக்காது, ரொம்பத்தான் சிநேகம் வழிஞ்சோடாரது” - சுந்தரேஸன் “என்னமோ அவா ரெண்டு பெரும் அம்மா பொண் போல இருக்கு!” - கண்ணன். எனக்கு படிச்சவா மாதிரி இருக்கேன்னு பட்டது

நம்ம பிர்ச்சனையை சொன்னா அவா ஏதாவது தீர்வு சொல்லுவாளா? கேட்டுட்டா போச்சுன்னு நான் எழுந்துக்கரேன். “வளர்மதி நீ போய் பேச்சுக் கொடுத்துப்பாரு, அப்புரமா நாங்களும் வந்துடரோம்”. மெல்ல எழுந்து குர்த்தீலே ஒட்டிண்ட மண்ணைத்தட்டி விட்டுண்டு போரேன். 

கிட்டக்கே போனதுமே அவா பேசிக்கறது கேட்டது.
“நேத்தய கதையைவிட இன்னைக்கு கதை ரொம்ப ஜோர் இல்லையா?” பெரீய மாமி கேக்க “அமாம் அம்மா உண்மைதான். நாளைக்கு என்ன எழுதுவாரோன்னு ஆசையா இருக்கு” “நல்லவேளை நாம ரெண்டுபேரும் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குப் போரோம்னு சொல்லிட்டு வந்தோம், சித்தே பிக்கல் பிடுங்கல் இல்லாம திண்ணையில் கதை படிக்க முடிஞ்சது, இல்லேன்னா என் பேரன் கேம்ஸ் விளையாடரேன்னுட்டு படிக்காம நம்ம போனையும் எடுத்துண்டிருப்பான்” பெரீய மாமி சொல்ரா. என்ன கதை, திண்ணைன்னாளே. அவாளும் கணேஷ் கல்யாண் கதையைத்தான் படிக்கராளோ? இருக்காது. “திச் இஸ் டூ மச் ஆஃப் அ கோயின்சிடென்ஸ்.”

“மாமி என் பேர் வளர்மதி, நீங்க இப்போ எதைப்பத்தி பேசிண்டிருக்கேள்?” “பாருடி, இப்ப்போதான் படிச்சோம் அவளே வந்துட்டா, நீ ஏதாவது டயக்னாஸ்டிக் கிளினிக்கில் வேலை செய்யராயா?” ரெண்டுபேரும் கொல்லுன்னு சிரிக்கரா. “ஆமாம், செஞ்சேன் இப்போ இல்லை, உங்களுக்கு எப்படித் தெரியும்?” அவா மூஞ்சியும் என் மூஞ்சியைப்போல பேயரைஞ்சாப்புலே ஆச்சு. “அப்போ நீங்க படிச்சது கணேஷ் கல்யாண் கதைகளா?” அமாம்னு சொன்ன மாமி பெரீய மாமியைப்ப்பாத்து “நான் சொன்னேனே! அவர் நிஜ மனுஷாளைப் பத்திதான் எழுதரர்னு. இப்போ நம்ப படிச்ச வளர்மதியே நேர்லே வந்து நிக்கரா பாருங்கோ!”

“நான் நிஜம் இல்லை. அவர் உருவாக்கின கதாபாத்திரம், உயிரெடுத்து வந்து அவரை கண்டுபிடிச்சு தக்க தண்டனை கொடுக்கலாம்னு வந்திருக்கேன். அவர் எங்கெ இருக்கார்னு தெரிஞ்சா சொல்லுங்கோ”. 

“இதென்ன புதுக்கதையா இருக்கு, நீ வந்தாய் சரி, அவரை ஏன் தண்டிக்கணும்னு சொல்ராய்? உனக்கு என்ன கெடுதல் செஞ்சார்?” “என்ன செஞ்சாரா, சும்மா நான் பாட்டுக்கு தேமேன்னு என் வேலையை பாத்துண்டிருக்க, ஒரு முதியவரோட மாட்டுப்பொண்ணை வச்சு என்மேல் பழி சுமத்தி வேலைலேந்து தூக்கிட்டர். பூவாவுக்கு வழி இல்லாம அலையரேன். இன்னும் ரெண்டுபேர் என்னைப் போலவே, நாங்கள் மூணுபேர்” அதோன்னு கையக்காட்டி சுந்தரேஸனையும் கண்ணன் சாரையும் கிட்டக்க வாங்கோன்னு கூப்பிட்டேன்

கண்ணணை பாத்ததுமே பெரீய மாமி “நீங்க காஞ்சீபுரம் கண்ணந்தானே?”னா பாருங்கோ! அவருக்கும் ஆச்சர்யம் தாங்கலை. “மாமீ, உங்களைப் பார்த்தா எங்கம்மா மாதிரியே இருக்கு, என்னைத் தெரியுமா?” “தெரியாம என்ன, “கேட்டுச்சத்தம்” கண்ணந்தானே? சுப்பி ஓடிப்போயிட்டா என்ன? இன்னொரு நல்ல பொன்ணாப்பாத்து கல்யாணம் செஞ்சுண்டு சந்தோஷமா வாழவேண்டியதுதானே?” கோவிச்சுண்டா. சுந்தரேஸன் கையில் தழும்பைப்பாத்துட்டு, “கிட்டு உங்களை அடிச்சது தப்புத்தான், நீங்க பாக்காதபோது குச்சியை எடுத்து விளாசிட்டான், அது அவன் மனசில் பெரீய பாரத்தை இறக்கிவைக்க உதவியானது, உங்களை அறியாம அவனுக்கு உதவியிருக்கேள். நீங்க பாட்டுக்கு எழுந்து ஆத்துக்கு லாவண்யாகிட்டே போகவேண்டியதுதானே, அவள் உங்களைத்தான் விரும்பரா” நம்ப கந்தலான கதை இவாளுக்கும் தெரிஞ்சிருக்குன்னு சுந்தரேஸன் லேசா சந்தொஷப்பட ஆரம்பிச்சர்.

இந்த மூடை கலைச்சு, ஆகவேண்டியதை செய்யணும்னு “கணேஷ் கல்யாண் எங்க மூவருக்கும் இழைச்சது அநீதிதான் அதுக்கு அவர் பதில் சொல்லியே ஆகணும்” நான் ஞாபகப்படுத்த அந்த மாமி “முட்டாள்”னு சத்தமா சொன்னா. எங்களை ஏன் திட்டரேள்னு சுந்தரேஸன் கேக்க. மாமி நான் சொல்ரதை பொருமையாக் கேளுங்கோன்னு சொல்ல ஆரம்பிச்சா

கணேஷ் கல்யாண் கதைகளில் நிறைய மனுஷா வரா. பல விஷயங்கள் சம்பவங்கள் புனையப்படறது. ஆனா நாங்கெல்லாம் படிச்சு முடிச்சதும் சில பாத்திரங்கள்தான் மனசில் அழியாம நின்னுட்டதை உணர்வோம். அதில் நீங்க 3 பேரும் முக்கியமான மனுஷா. மெயின் கதையில் இருந்தாலும் இல்லைன்னாலும் கதையைப்படிச்ச எங்களுக்குள் உங்க மேலேதான் பரிதாபம் வந்தது. ஏன்னா நீங்க ஏதுமே தப்பு செய்யாம இருந்தாலும் நீங்க எதிர்பார்க்காத தண்டனை கிடெச்சுது. அதான் எங்கள் மனசை உலுக்கி எடுத்தது. மனதை தொட்டுவிடும் கதைகளில் எங்கள் மனதில் புகுந்து ஆட்டிப்படைத்த பாத்திரங்கள் நீங்க 3 பேர்தான். அதுக்காக நீங்க கதை எழுதினவருக்கு நன்றி சொல்லணுமே தவிர இப்படி வன்மத்தை மனசில் ஏத்திண்டு அவரை தேடித் திரியப்பிடாது.”

“சுவையான சமையல் செஞ்சு முடிஞ்சதும் மேலே தூவப்ப்பட்ட அழகா கிள்ளிப்போட்ட கொத்தமல்லி மாதிரி நீங்கெல்லாம், சுவையும் நல்லுணர்வையும் சாபிட்டவாளுக்கு தரப்போர ஔஷதம். நீங்க இல்லைன்னா சமையலில் வாசனை இல்லை. அதைப் புரிஞ்சுக்கோங்கோ”

எங்களுக்கு சுரீர்னு புரிஞ்சது. பெரீய தப்பு செய்ய இருந்தோம்னு பட்டது. ரெண்டு மாமிக்கும் நன்றி சொல்லிட்டு சுந்தரேஸன் முதல்ல கிளம்பினான். அகல்யாவை பாக்க. நானும் இன்னொரு ஜாப் இன்டர்வ்யூ இருக்கு அதுக்கு தயார் செய்யலாம்னு ஹாஸ்டலுக்கு கிளம்பினேன். கண்ணன் மட்டும் மாமி ஏதோ சொல்ல இவர் கேட்டுட்டு கிளம்பினார்.
பின்னாடியே மனலில் நடந்து வந்தவரை, “மாமி அப்படி என்ன உங்ககிட்டே மட்டும் சொன்னா?”ன்னு கேட்டேன். 

“காஞ்சீபுரம் போனதும் ஆத்தில் யாராவது கேட்டைத் தொறந்தா சத்தம் வாராத மாதிரி என்ணை விடச்சொன்னா.”

No comments:

Post a Comment