Wednesday, August 12, 2020

சட்டைநாதர்

சட்டைநாதர் (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam

எனக்கு எங்கூர்லேயே குருக்கள் வேலை வாங்கித் தந்தது என் அப்பாதான். அப்பாவுக்கு சீர்காழியில் நல்ல செல்வாக்கு. இங்கே லுத்தேரன் மிஷன் ஸ்கூலில் ரிடயர் ஆரச்சே ஹெட்மாஸ்டரா இருந்தர். 100 வருஷம் புராதனமான ஸ்கூல். இந்த மாதிரி ஒருக்ஷேத்ரத்தில் பொறந்துட்டு தன் பிள்ளையாவது கோவில் சேவை செய்யணும்னு என்னை தயார் செஞ்சர்.

வேலை கிடெச்சதும் குடும்பத்தோட பிரம்மபுரீஸ்வரரை தரிசனம் செய்யப் போனோம். சட்டைநாதரையும்தான். அவர்தான் ரொம்ப விசேஷமாச்சே. திருஞானசம்பந்தர் ஞானப்பால் பிராப்த்தம் அடைஞ்ச ஸ்தலம். எனக்கும் இங்கே ஈஸ்வரனை தியானிச்சிண்டு வரவாளுக்கு சேவை செய்யப் போரோம்னு குதூகலமா இருந்தது. 

என்னொத்தவா, என்கூடப் படிச்சவா எல்லாரும் ஊரை விட்டுட்டு சென்னை, இல்லை வெளிநாடுன்னு பறந்துட்டாலும், நான் இந்த மாதிரி ஒரு வாழ்க்கைக்கு என்னை தயார் படுத்திண்டு அப்பா சொல்படி இருந்ததை தங்கையே கேலி செஞ்சா. சிநேகிதாள்னா கேக்கவா வேண்டும்? லீவுக்கு வரச்சே கோவிலுக்கு வருவோம், நீதான் அர்ச்சனை பண்ணி வைக்கணும், கவலைப் படாதே, தட்டில் நாங்க காசு போடுவம்னு. பெரீசா எடுத்துக்கலை.

தினம் ரெண்டு வேளையும் போணம். பக்கத்துலேயே இருக்கும் சிதம்பரம், வைதீஸ்வரன் கோவிலுக்கெல்லாம் வர கூட்டம் இதுக்கு வராது. நிறைய கார் மனுஷாளொட அப்படியே சுத்தி அந்தண்டை போயிடும். இங்கே இறங்கலாம்னு வந்தா 1130க்குமேலே சாயங்காலம் 5 வரைக்கும் நடையை சாத்திடுவா. கூட்டம் வரதில்லைன்னுட்டு. விசேஷ நாளில் அப்படியில்லை. ஆனா தினமுமா விசேஷம்! கீழே ஈஸ்வரன், தாயார் சன்னிதியில் வேலை.  யாராவது லீவுன்னா, மேலே சட்டநாதரை கவனிச்சுக்கணும். நாட்கள் திவயமா போச்சு.

ரொம்ப எதிர்பார்ப்பு இல்லை. கிடெச்சதை வச்சு சந்தோஷமா இருந்தேன். தட்டில் பெரீசா ஒண்ணும் விழலை. விழுந்ததை உண்டியலில் சேர்த்துடரது வழக்கம். சம்பளப் பணம் என் சிலவுக்குப் போதும். அப்பாவோட சொந்த வீடு இருக்கு. இப்போதைக்கு தனிக்கட்டை, பார்த்துக்கலாம்னு. அப்பா சொன்னர், “உன் சம்பளத்தை அப்படியே பேங்கில் போட்டுவை, பிற்காலத்தில் உதவும். “நான் இருக்கர வரைக்கும் உன்னை பாத்துப்பேன்! தெய்வ காரியம் எதிர்பார்ப்போட செய்யப்பிடாது. மந்திரங்களை முழுங்காம சொல்லு. யார் வந்தாலும் அழகா தீபம் காட்டி, பிரஸாதம் கொடு”. 

என்னமோ IT கம்பேனியில் வேலை செஞ்சுட்டு களைச்சு வராப்போலே, “இன்னிக்கு எப்படிப் போச்சு?” விசாரிப்பர். தான் நன்னா படிச்சு ஒரு நல்ல கவுரவமான நிலைமைக்கு வந்தது அந்த பிரம்மபுரீஸ்வரரும் சட்டநாதரும் செஞ்ச அனுக்ரஹம்தான்னு ஆணித்தரமா நம்பரவர். எங்காம் திருமுல்லைவாசல் போர திசையில் கண்ணன் கோவில்கிட்டே. நடந்தே போலாம். மத்தியான சாப்பாடு அம்மா செஞ்சு வச்சிருப்பா. ராத்திரி நடை சாத்தினப்புரம் மொள்ள ஆத்துக்கு வந்து சாப்பிட்டா ஆச்சு. நாட்கள் நகரலை, ஓடித்துன்னு வச்சுக்கலாம்.

என் தங்கைக்கு கல்யாணம் நிச்சயமாச்சு. அவள் நன்னா படிப்பள். டீச்சராப் போணம்னு ஆசை. அதுக்கேத்தாப்போல, சிதம்பரத்துலேயே வாக்கப்பட்டு அடிக்கடி வந்து போயிண்டு பாத்துக்கராப்போல வரன். அங்கேயே ஸ்கூலில் வேலை. அவளும் செட்டில்னதும், எனக்குப் பாக்க ஆரம்பிச்சா. கல்யாணம் செஞ்சுக்கணும்னு கொள்ளை ஆசைதான். 

இருந்தாலும் கோவில் குருக்களை பிரியப்பட்டு இந்தக் காலத்தில் யார் செஞ்சுப்பா? பொண்ணைப் பெத்தவா யோசிப்பாளா மாட்டாளா?

வெளியூர்லேந்து ஜாதகமே வரலை. “மாப்பிள்ளை என்ன செய்யரார்னு நீங்கதான் ஜாதகத்தில் எழுதியிருக்கேளே அதான்” தரகன் கமென்ட்! “உள்ளூருலேயே, இல்லை அக்கம் பக்கத்தில் எத்தனை சிவ க்ஷேத்தரங்கள் இருக்கு, அக்கிரஹாரமாப் போய் தேடி நல்ல வரனாப் பேசி அழைச்சிண்டு வா!” அப்பா விடு விடுன்னு விட்டர்.
போனவன் பல மாசம் திரும்பி வரலை.

“பாத்துக்கலாம்டா, உனக்கு தோடுடைய செவியன் பாத்து கல்யாணம் செஞ்சு வைப்பன்”. அவரத்தனை நம்பிக்கை எனக்கில்லை. இருந்தாலும் தினம் பூஜிக்கும், அபிஷேகம் செய்யும் எனக்கு நல்லது செய்யாமலா போயிடுவன்னு நினெச்சுப்பேன். பெரியநாயகி சன்னிதியில் ட்யூடி பண்ரச்சே அம்பாளை, “நீயே சித்தே உன் ஆத்துக்காரர்கிட்டே ரெகமெண்ட் செய்”னு வேண்டிப்பேன். “நீ பாத்துக்கோ”ன்னு எண்ணை விளக்கை ஏத்துவேன்.

அன்னைக்கு பிரதோஷம். சாயங்காலம் நிறைய பேர் வருவா. சித்தே சீக்கிரம் போலாம்னு சாப்டுத்தூங்கி எழுந்துண்டு விடு விடுன்னு போரச்சே பிடாரித்தெரு முக்கில் எதுத்தாப்புலே சைக்கிளில் வந்த பொண் என் மேலே முட்டரா மாதிரி வந்துட்டு ப்ரேக்கைப் பிடிக்கத் தெரியாமல் என் வலது துடையில் உராசிண்டு இப்படியும் அப்படியுமா வளைஞ்சு நெளிஞ்சு டம்முன்னு கம்பத்தில் மோதி கீழே விழுந்தாள். 

குளிச்சுட்டு போயிண்டிருந்தவன் ஆபத்துக்கு பாவமில்லைன்னு ஓடிப்போய் தூக்கி விட்டேன். முழங்கையில் சிராய்ப்பு. சைக்கிள் சக்கரம் நெளிஞ்சு போச்சு. வயசு என்னைவிட 3 அல்லது 4 கம்மி இருக்கும். பாக்க லக்ஷணமா, திருதிருன்னு முழிச்ச கண்கள் சைக்கிள் போன போக்கை பாத்துட்டு அழ ஆரம்பிச்சது. “பயப்படாதே, அந்த மூலைக் கடையில் தந்தியானா 25ரூக்கு நிமித்தித் தருவான். அப்புரம் ஓட்டிண்டு போயிடலாம்.” சமாதானம் சொல்லி அனுப்பிச்சேன்.

அப்புரம்தான் தெரிஞ்சது இவள் சமாளிக்க முடியாம வந்த வேகத்துக்கு படாத இடத்தில் பட்டிருந்தா? கல்யாண ஆசையேன்னா சிதைஞ்சு போயிருக்கும்? அம்பாள் காப்பாத்திட்டான்னு பட்டது. இந்த மாதிரி பொண்கள் கிட்டேந்து தூர இருக்கணும்னு நினெச்சிண்டேன். கணுக்காலுக்கு மேலே பஞ்சகச்சம். உள்ளே பட்டாபட்டிதான். வேர ப்ரொடெக்ஷன் இல்லை. க்ரிக்கெட் விளையாடரச்சே போட்டுப்பாளே அப்படி ஒண்ணை மாட்டிண்டா கோவிலுக்குப் போக முடியும்?

பிரதோஷ பூஜையிலும் அவளைப் பாத்ததும் திக்குன்னுது. இவன் பூஜை முடிஞ்சு வெளீலே வருவன் சரியா குறிபாத்து முட்டலாம்னு வந்தாளோ! அப்படி இருக்காதுன்னு மனசை சமாதானப் படுத்திண்டேன். ஆனால் கூட்டம் கறைந்து போர வரைக்கும் நின்னிண்டிருந்தா.

கிட்டக்கே வந்து “என்னை மன்னிச்சுடுங்கோ, தெரியாம இடிச்சுட்டேன். புது சைக்கிள், நேத்துதான் அப்பா வாங்கித் தந்தர். வேகமா போரது”. “பரவாயில்லை”. அப்படீன்னு சொல்லீட்டு பிரஸாதம் தந்துட்டு நான் பாட்டுக்கு போயிருக்கணுமா வேண்டாமா? அதான் செய்யலை.
என் பேர் சுவாமிநாதன். லூதரன் ஸ்கூல் முன்னாள் ஹெட்மாஸ்டர் பையன். இந்தூர்தான்னு சொல்லி அவள் தில்லைநாயகி, பிஎஸ்ஸி முடிச்சுட்டு ஆத்தில் சும்மாத்தான் இருக்கான்னும், அப்பா தாசில்தார், தென்பாதி சிவன் கோவில்கிட்டே வீடுன்னும் கண்டுபிடிச்சாச்சு. 

அப்படீன்னா இத்தனை தூரம் எம்மேல் இடிக்கன்னு சைக்கிள்லே வந்தியான்னு கேட்டு அவள் சிரிக்க முத்துப்போல அவள் பல் டாலடிச்சதை பாக்க முடிஞ்சது. சிரிக்கரச்சே சுருங்கின கண் இமைகள் என் மனசைசுண்டி இழுத்தது. அவள் பிரஹாரம் சுத்தி வந்து அப்புரம் தூரக்கே நந்திகேஸ்வரரைத் தாண்டி கொடிமரத்துக்கிட்டே போர வரைக்கும் பாத்திண்டிருந்தேன்.

அன்னைக்கு ராத்திரி சரியாத் தூங்கினேன்னு நான் சொன்னா நீங்க நம்பவா போரேள்!

அதுக்கப்புரம் சில வாரங்கள், ஒருநா விட்டு ஒருநா எங்கள் காதல் ஈஸ்வரன் முன்னாடியே மொட்டு வச்சு மலர்ந்து மணம் வீசத் துவங்கித்து. ஒருநா வந்தவள் என்னைக் காணோம்னு ரொம்பவே விசனப்பட்டிருக்கா. அப்புரம் கோபுரத்தில் ஏறிப்போய் பாக்க டிக்கட் கொடுக்கரவன் சுவாமிநாத குருக்கள் இன்னைக்கு சட்டநாதர் சன்னிதியில் இருப்பர்னு சொன்னதும்தான் இவளுக்கு மூச்சு வந்ததாம். படியேறி வந்து பேசிண்டிருந்துட்டுப் போனா. 

“அப்பாவுக்கு மாத்தலாகும் போல இருக்கு. எந்தூருக்குன்னு இன்னும் ஒரு வாரத்தில் தெரியும். சீக்கிரம் வந்து எங்காத்தில் பேசி என்னை சிர்காழியில் உங்காத்துலேயே கொண்டு போய் வச்சுக்கோங்கோ!” சொல்லிட்டுப் போனா.

ஆத்துக்கு வந்ததும் அப்பாகிட்டேயும் அம்மா கிட்டேயும் சொல்லிட்டேன். தில்லைநாயகியைப் பிடிச்சிருக்குன்னு. “அப்பா தாசில்தார்னு சொல்ராய், உனக்கு தன் பொண்ணைத் தருவாரா?” டவுட் எழுப்பினா. தரகனை வரவழைச்சு அவன் மூலமா அப்ரோச் செய்யலாம்னு அம்மா யோசனை. அப்படியே தரகருக்கு சொல்லியாச்சு. 

ஒரு வாரத்தில் திரும்பி வந்தவன் “அவாத்தில் சொந்தத்துலேயே பையன் (மாமா பிள்ளை) இருப்பதாயும் வெளீலே வரன் பாக்கர உத்தேசம் இல்லைன்னு சொல்ரா. என்ன பண்ணரதுன்னு தெரியலை. பையனைப் பத்தி விவரங்கள் ஏதும் சொல்ரத்துக்குள் அவாத்து மாமீ உள்ளே எழுந்து போயிட்டா”. “தாசில்தாரைப் பாக்கலையா?” “ஊரில் இல்லை, ௳அமியே இப்படி சொல்ரப்போ, அவரை பாத்து என்ன ஆகப்போரது?”

எனக்கு என்னவோ போல அகிடுத்து. ரெண்டுநா உடம்பு சரியில்லைன்னு லீவு போட்டுட்டு ஆத்திலேயே முடங்கிக் கிடந்தேன். தில்லைநாயகி கோவிலுக்கு வந்திருப்பா, திரும்பிப் போயிருப்பா. இப்படி ஆனதும் எப்படி போனில் பெசரது? அவளுக்கு என் மேல் ஆசைன்னு தெளிவா சொல்லிட்டுப் போனாளே? இப்படி தன் அம்மாகிட்டேந்து ஒரு எதிர்ப்பு இருக்குன்னு சொல்லலையே? பாவம், அவளுக்கே தெரிஞ்சுருக்குமோ தெரிஞ்சிருக்காதோ! இல்லை இப்படி ஒரு பேச்சு ஆத்தில் ஓடரதுன்னுதான் என்னை ஏதாவது சீக்கிரம் உபாயம் செய்யுங்கோன்னு சொன்னாளோ!

எதுக்கும் இருக்கட்டும்னு போனைப் போட்டு பேசிடலாம்னு அடிச்சேன். இதுவரைக்கும் கேக்காத பெண் குரல், அம்மாவோ! அம்மாடீன்னு டக்குன்னு வச்சுட்டேன்.

ரெண்டு நா கழிச்சு கோவிலுக்கு வந்தா. குளத்தங்கரையில் உக்காந்துண்டு பூ விக்கரவ கிட்டே சுவாமிநாத குருக்களை வரச் சொல்லுங்கோன்னு அனுப்பியிருக்கா. பூக்காரிக்கு எங்களுக்கிடையே ஒரு மேட்டர் ஓடரது தெரியும் போல இருக்கு. சன்னிதியில் வந்து “ஐயரே உன் ஆள் கூப்பிடுது”ன்னு சொல்ரா. அப்போதான் நடை தொறந்தேன். யாரும் வரலை. ஈஸ்வரன் சன்னிதிதானே நகையா நட்டா? கம்பிக் கதவை சாத்திண்டு வந்தேன். 

அவ உக்காந்திருந்த இடத்துலேந்து தலையைத் திருப்பிப் பார்த்தா உமையவளும் தியாகராஜரும் சம்பந்தரோட அப்பாவுக்கு காட்சி கொடுத்த இடமும் சுவத்தில் பால் கிண்ணத்தை அவர் தூக்கி அடிச்சு தழும்பான இடமும் தெரியும்

என்னைப் பாத்ததும், படியேறி வந்து கையைப் பிடிச்சிண்டு “ஏதாவது செய்யுங்கோ, மசமசன்னு இருந்தேள்னா நான் உங்கள் கையிலேந்து நழுவிப் போயிடுவேன், ரெண்டு பேருமே வாழ்க்கை பூர வருந்துவோம். ஆத்துக்கு வந்து எங்கப்பா கிட்டே பேசுங்கோ!” “ஏண்டி உங்கம்மா தன் தம்பி பிள்ளைக்குத்தான் கொடுப்பான்னு சொன்னதா தரகன் சொன்னானே?” “அதுக்காக அப்படியே விட்டுடப் போரேளா? நான் சொல்ரதை சொல்லிட்டேன், உங்க இஷ்டம்!” கிளம்பி விருட்டுன்னு போனா. 

உண்மையிலேயே இவள் என்னைப் பண்ணிக்கரத்துக்கு தீர்மானமா இருக்கா, நாமதான் காதல் செஞ்சுட்டு கையைப் பிசைஞ்சிண்டு இருக்கப்பிடாதுன்னு பட்டது.

மறுநா நேரே தாசில்தாரை பாத்துடரதுன்னு ஒரு சட்டையை மேலுக்கு மாட்டிண்டு அவர் ஆபீஸுக்கே போயிட்டேன். பெரீய கோவில் குருக்கள் வந்திருக்கார்னு டவாலி போய் சொன்னதும் அவரே வெளீலே வந்தர். என்னைப் பாத்ததும் இங்கே வாங்கோன்னு அந்தண்டை அழைச்சிண்டு போனர். என்ன விஷயம், தனியா மரத்தடிக்கு வான்னு கூட்டிண்டு போரரே, தனியாப்போய் கன்னத்தில் ஒண்ணு கொடுத்து ராஸ்கல்னு சொல்லுவரோன்னு பட்டது.
ஆனா அவர் சொன்னது என்னை ஆச்சர்யப்படுத்திட்டது.

“மாப்பிள்ளை, எனக்கு எங்காத்துக்காரி சொல்ர அவள் தம்பி பையனுக்கு என் பொண்ணை கொடுக்க துளியும் இஷ்டமில்லை. உங்களுக்கு தில்லைநாயகியை பிடிச்சிருந்தா கூட்டிண்டு போய் அம்பாள் சன்னிதியில் வச்சு தாலி கட்டிண்டு உங்காத்துக்கு அழைச்சுக்கோங்கோ. நான் அப்புரமா இவளை சமாதனப் படுத்தி அழைச்சிண்டு வந்து பாத்துட்டுப் போரேன். என்னைக்குன்னு மட்டும் சொல்லுங்கோ, கோவிலுக்கு புதுப்புடவையோட பொண்ணை அனுப்பி வைக்கரேன், நானும் கூடவே வந்து ஆசீர்வாதம் செய்யரேன். காதும் காதும் வச்சா மாதிரி நடக்கணும்.

“எங்காபீஸுலேயே என் ஆத்துக்காரி பேச்சைக் கேக்கரவா இருக்கா. ஜாக்கிரதை!”

No comments:

Post a Comment