Wednesday, August 12, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 8

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 8 
by (sujatha&venkatesan)6381369319…

திருப்பத்தூர்லேர்ந்து திருச்சி பஸ் ஏறி திருமயம் டிக்கட் வாங்கறோம்.  வழி யெல்லாம் வானம் பார்த்த பூமிதான்.  பக்கத்து மாவட்டங்களில் பாயற காவிரி இங்கு இல்லாமையால் வெள்ளாமைக்கு மழையை நம்பி இருக்கும் ஜனங்கள் ..ஆனாலும் வெளி நாட்டில் சென்று வியாபாரத்தில் சம்பாதித்து அதில் தங்கள் வீடுகளை மட்டுமின்றி ஆலயங்களையும் கலை நயத்துடன் அமைத்துக்கொண்ட அழகு …

பஸ் திருமயம் பஸ்ஸ்டாப்  வரச்சே மணி 3.00. தூரத்துல திருமயம் கோட்டை தெரியறது.  அதை பார்த்துட்டு தோ சந்து திரும்பினா கோயில் கோபுரம் தெரியறது பார். லக்கேஜ தூக்கிண்டு நடந்தே போலாம்கறார்.ஒரு பர்லாங் போனதும் அவரே முடியாம ஆட்டோ பேசறார். கோயில்கிட்ட ஆட்டோ கொண்டு விடறது. ஆர்க்கியலாஜிக்கல் கன்ரோல் கோயில் என்றாலும் உள்ள சன்னதி திறக்க 5.00 மணி ஆகுமாம். 

அங்க ஒரு ஆத்து வாசல்ல டீ போட்டுத்தரா. எக்கச்சக்க வானரங்கள் எங்க லக்கேஜ்ல இருந்த திருக்கோஷ்டியூர் ப்ரசாதத்த மோப்பம் பிடிச்சி சூழ்ந்துக்கறது. உள்ள போய் டீயும் வடையும் சாப்ட்டுட்டு லக்கேஜ பாத்துக்க சொல்லிட்டு வானரத்த விரட்ட ரெண்டு கொம்பு வாடகைக்கு வாங்கிண்டு கோட்டை பார்க்க கிளம்பறோம். 
இனி இவர் பேசுவார் ….

திருமயம்’ தீரர் சத்திய மூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊர். இங்குள்ள சத்தியகிரீசுவர் ஆலயமும், சத்திய மூர்த்திப் பெருமாள் ஆலயமும் மிகவும் புகழ் பெற்றவை. இரண்டுமே பல்லவர் காலத்தில் மலையைக் குடைந்து பாறைகளைச் செதுக்கி குடைவரையாய் உருவாக்கப்பட்டவை. பல்வேறு அற்புதங்களையும், சுரங்கப் பாதைகளையும் உடைய ஆலயம் இது. உலகத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளி கொண்ட பெருமாள் இங்கு தான் வீற்றிருக்கிறார். திருமுகத்தை ஒரு சாளரம் வழியாகவும், திருப்பாதத்தை மற்றொரு சாளரம் வழியாகவும் காணும் அளவிற்கு நீளமான, ஒரே கல்லால், பாறையைக் குடைந்து உருவாக்கிய சிற்பம். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஸ்ரீரங்கத்திற்கு முன்பாகவே இந்த திருத்தலம் தோன்றியதாக ஐதீகம்.
இங்குள்ள மலைக் கோட்டையைக் காவல் காக்கும் பைரவர் தான் கோட்டை பைரவர் என அழைக்கப்படுகின்றார்.  கோட்டை முனீசுவரர் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆயினும் நின்ற திருக்கோலம், நாக சூல பாசங்களை ஏந்தியுள்ளது போன்றவற்றைப் பார்க்கும் பொழுது பைரவர் என்பதே சரியானதாக இருக்கும் என்று தோன்றுகின்றது.

மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படும் இவர், இந்த மலையையும், ஆலயத்தையும், இந்த ஊரையும் காப்பதாக ஐதீகம். கோட்டையின் வடக்கு வாசலில், வட புறத்தைப் பார்த்தவாறு காட்சி அளிக்கின்றார். அவர் தம் கண்ணுக்கு முன்னால் பரந்து விரிந்து காணப்படுகின்து பாம்பாறு. பாம்பு போல வளைந்து, நெளிந்து காணப்படுவதால் இப்பெயர்.

சேதுபதி மன்னர்களின் வட திசை எல்லையாக இருந்த இடம் இது. எதிரிகளின் வரவை இங்கேயே முடித்துவிட, அவர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க அமைத்ததுதான் இந்தக் கோட்டை. கி.பி.1676-ல் ராமநாதபுரம் மன்னர் ரகுநாத சேதுபதி கட்டியது. காவலுக்கு கட்டிய கோட்டை இன்று காதலர்கள் இளைப்பாறும் இடமாக மாறியிருக்கிறது
வட்ட வடிவிலான இந்த கோட்டை மற்ற பல கோட்டைகளைப் போலவே பல அடுக்குப் பாதுகாப்பு கொண்டதாக இருந்திருக்கிறது. எதிரிகளை தடுக்க முதலில் ஒரு அகழி கோட்டையைச் சுற்றி அமைத்துள்ளார்கள். அந்த அகழி முற்றிலும் சிதைந்து விட்டது. சில எச்சங்கள் மட்டும் அதன் அடையாளங்களை சுமந்து நிற்கின்றன. 

அதற்கடுத்த சுற்றுச் சுவரும் சிதைந்து போயுள்ளது. ஆனால் உட்புற சுவர்கள் நல்ல நிலையில் இருக்கின்றன. மொத்தம் இப்படி ஏழு சுற்றுச்சுவர் இருந்ததாக தொல்லியல் துறை கூறுகிறது. ஆனால், அந்த சுவர்களெல்லாம் இப்போது இல்லை. நான்கு மதில் சுவர்கள் மட்டுமே இருக்கின்றன. 
நாற்பது ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்தக் கோட்டைக்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன.   மலைக்கோட்டையின் உச்சியில் உள்ள கொத்தளத்தின் மீது ஆங்கிலேயர்கள் காலத்து பீரங்கி ஒன்று  வைக்கப்பட்டுள்ளது
வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை இங்கு சிறைவைக்கப்பட்டு புதுக்கோட்டை தொண்டைமானால் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அதனால் இந்தக் கோட்டைக்கு ஊமையன் கோட்டை என்று மற்றொரு பெயரும் உண்டு.
வரலாற்றுச் சிறப்பு மிகு புதுக்கோட்டைப் பகுதியின் சங்ககாலப் பெயர் பன்றிநாடு. “ராஜராஜ வளநாட்டு பன்றியூர் அழும்பில்” என்று பிற்காலச் சோழர் கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியது. இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. சங்க காலத்தில் சோழநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் எல்லையாகப் புதுக்கோட்டைப் பகுதி தமிழகத்தை ஆண்ட அனைத்து வம்ச மன்னர்களுக்கும் போர்க்களமாக விளங்கியுள்ளது....

கோட்டையை சுற்றி முடிப்பதற்கும் கோயில் திறந்து மணி ஓசை கேட்பதற்கும் சரியாக…..
     ்தொடரும் திருமயம்        திவ்யதேசம்




No comments:

Post a Comment