Friday, August 14, 2020

திருநெல்வேலிக்காரனின்_கனவுகள்

#திருநெல்வேலிக்காரனின்_கனவுகள்:

அண்ணாச்சி இந்த ஊரடங்கு அதுபாட்டுக்கு நீடிச்சுட்டேலா போகுது... கோவிலுக்கு போயி சாமிய கும்பிட்டு எவ்ளோ நாளு, ஆவுது.  மொதல்ல இந்த ஊரடங்கை நீக்கின உடன நாம எல்லா கோவிலுக்கும் போவனும்... என்ன அண்ணாச்சி சொல்லுதீய....

ஆமால தம்பி ஊரடங்க நீக்கிட்டாவோனா நாம முதல்ல நம்ம வண்டிய எடுத்துட்டு நேரா நெல்லையப்பர் கோவில் போவனும்ல... அம்மையப்பர பாத்து எவ்ளோ நாளாச்சு.... நெல்லையப்பர்-காந்திமதி, நம்ம முக்கு பூதத்தார கும்பிட்டாச்சுனா, மறுநாள் அப்படி காலங்காத்தாலயே கிளம்பி முத நம்ம காரையார் சொரிமுத்தைய்யன் கோவிலுக்கு போவனும்ல... அங்க போய் தாமிரவரணி ஆத்துல குளிச்சுட்டு, நம்ம மணிமுழுங்கி மரத்தடி புள்ளையாரு, பூதத்தாரு, தளவாய் மாடனலாம் கும்பிட்டுட்டு, நம்ம மகாலிங்க சாமி, சொரிமுத்தையன நின்னு நிதானமா கும்பிடனும். அப்புறம் நம்ம சங்கிலிபூதத்தார கும்பிட்டுட்டு அங்க சங்கிலி அடிக்க சத்தத்தை காதால கேக்கனும்ல... அந்த சத்தத்தை காதால கேட்டு எத்தன நாளாச்சு.... அப்புறம் மறக்காம அங்க வடை மாலை பிரசாதம் வாங்கனும்ல...

ஆமா அண்ணாச்சி வடை மாலை பிரசாதம் வாங்காமையா... மேல சொல்லுங்க...

அப்புறம் பிலாவடி சாஸ்தா, பிலாவடி பேச்சி, மேலவாசல் பூதத்தாரு கும்பிட்டுட்டு அப்படி வடக்கு பக்கம் போயி பெரிய தளவாய் மாடன், தூசி மாடன், கசமாடன் அவங்களையும் கும்புட்டு அடுத்து மேற்க பாத்த பட்டவராயரையும் கும்பிட்டு, மறுபடியும் தெற்க வந்து பேச்சி, பிரம்மராட்சசி, சுடலைமாடன் சாமி அப்புறம் கரடிமாடசாமியையும் கும்பிட்டுட்டு அங்க இருந்து கிளம்பி வர்ற பாதையில நம்ம வனப்பேச்சியம்மை கோவிலுக்கும் போவனும்.

அண்ணாச்சி அப்படி வர்ற பாதைக்கு நாம இறக்கத்துல திரும்பி அகத்தியர் அருவிக்கு போய் ஒரு குளியல போடனும்...

சரிலே அங்கையும் போய் குளிச்சுட்டு முடிஞ்சா அப்படி மேல படியேறி போய் கல்யாணத்தீர்த்தம் கோடிலிங்கேஸ்வரரையும் கும்பிட்டிருவோம். அப்படி கீழ இறங்கி வந்து நம்ம பாபநாசம் கோவிலுக்கும் போய் பாபநாசசாமி-உலகம்மைய கும்பிட்டுட்டு கிளம்பினா, அங்க டானா முக்குல திரும்பி கருத்தபிள்ளையூர் வழியா நம்ம சிவசைலம் போயி நம்ம மேற்கு பாத்த சிவசைலநாதர்-பரமகல்யாணியம்மைய கும்பிட்டுட்டு, அங்க இருந்து ஆழ்வார்குறிச்சி ஊருக்குள்ள வந்து நம்ம நரசிங்கநாதர், வன்னியப்பர் கோவிலையும் கும்பிட்டுருவோம்ல...

சரி அண்ணாச்சி, அப்படி அந்த ஆழ்வார்குறிச்சி சரஸ்வதி மெஸ்ல சூடா இட்லியும், பூரியும் சாப்பிடனும்... 😆😆

ஏல நாக்கு ருசி கண்ட பயல.. சரில அங்க சாப்பிட்டுட்டு, அப்படி அங்க இருந்து கிளம்பி ஆம்பூர் தாண்டி மன்னார்கோவில் விலக்குல திரும்பி, மன்னார்கோவில் போயிட்டு, அப்படி பிரம்மதேசம், அயன்திருவாலீஸ்வரம் கோவில்லயும் சாமியை கும்பிட்டுட்டு, அம்பாசமுத்திரம் வந்து நம்ம அகத்தியர் கோவில், திருமூலநாதர் கோவில், காசிபநாதர் கோவில், கிருஷ்ணன் கோவில், வீரமார்த்தாண்டேசுவரர் கோவில், அம்மையப்பர் கோவில் எல்லாத்தையும் கும்பிட்டுட்டு வர்ற பாதையில கல்லிடைக்குறிச்சி ஆதிவராகர் கோவில், அகத்தியர் கோவில், மானேந்தியப்பர் கோவில், குலசேகரநாதர் கோவில் எல்லாத்தையும் கூட கும்பிட்டிருவோம்ல..

ஆமா அண்ணாச்சி அதுக்கு முன்னாடி அம்பாசமுத்திரத்துல இருந்து கிளம்பும் போது நம்ம சண்முகா பவன்ல உளுந்துவடை தின்னு காபி குடிக்கனும். 😆😆. அப்புறம் இந்த கல்லிடைகுறிச்சி குலசேகரநாதர் கோவில்ல தான நம்ம பொன்மாணிக்கவேல் ஐயா மீட்டு கொண்டாந்த நடராசரு சாமி இருக்காரு அவர பாக்கனும்னு எனக்கும் ரொம்ம ஆசை. நீங்க அந்த நடராசரு திரும்ப கல்லிடைகுறிச்சி ஊருக்கு திரும்பி வந்த அன்னைக்கு என்ன கூட்டிட்டு போவாம விட்டுட்டுப் போயிட்டீய... நான் இன்னும் அவர பாக்கவே இல்ல அண்ணாச்சி...

சரில... தின்னிப்பண்டார பயல... சண்முகா பவன்ல காபி குடிச்சிட்டு கல்லிடைகுறிச்சி வருவோம். இப்போ போய் நடராசர கண்குளிர பாத்துருவோம் சரிதான... அப்படி அங்க இருந்து கிளம்பி........

அண்ணாச்சி இருங்க கல்லிடைக்குறிச்சி வர போயிட்டு நாம அப்பளம் வாங்கலனா வீட்டுல அம்மை ஏசிபுடுவா... அதனால ஆளுக்கு ரெண்டு கெட்டு உளுந்து அப்பளமும், ரெண்டு கெட்டு கிழங்கு அப்பளமும் வாங்கிருவோம்.... 

ஏல 😆😆 வாங்கிருவோம்ல.... வாங்கிருவோம். வாங்கிட்டு கிளம்பி வர்ற பாதைக்கு நம்ம வெள்ளங்குளி ஊருக்குள்ள திரும்பி வடக்கே போயி நம்ம திருப்புடைமருதூர் நாறம்பூநாதசாமி-கோமதியம்மைய கும்புட்டுட்டு, திரும்பி தெக்க வர்றப்போ அத்தாளநல்லூர் மூன்றீஸ்வரமுடையார், அப்புறம் நம்ம கஜேந்திரவரதர் கோவிக்கும் போயிட்டு வாய்ப்பிருந்தா அரிகேசவநல்லூர் சிவன் கோவில், வீரவநல்லூரு பூமிநாதர் கோவிலையும் கும்புட்டுட்டு நேரா சேர்மாதேவி வந்துருவோம்...

சரி அண்ணாச்சி இப்ப மதியான நேரம் ஆயிருமே கோவில் எல்லாம் நடைசாத்திருப்பாவோளா... அதனால நாம என்ன செய்வோம் நம்ம உடுப்பி கபே கடையில மதியான சாப்பாட்ட முடிச்சுருவோம். 😆 எனக்கு அங்க புரோட்டாவ பிச்சு போட்டு சால்னாவ ஊத்தி திங்குறதுல அவ்ளோ சொகம். நீங்க புரோட்டா சாப்பிடமாட்டீய அதனால நீங்க சோறு சாப்பிடுங்க.... 😆😊

ஏல உனக்கு நேரத்துக்கு பானைய நிரப்பலனா திருப்தி வராதல... சரில அங்க சாப்பிட்டுட்டு அப்படி கிளம்பி நம்ம சேரன்மாதேவி தாமிரவரணி ஆத்தங்கரைக்கு போயி மருதமர காட்டுல துண்ட விரிச்சு ஒரு ரெண்டு மந்நேரம் சொகமா காத்து வாங்கிட்டே கண்ணசரனும்ல....

ஆமா அண்ணாச்சி.... உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டுலா... சாப்பிட்ட அப்புறம் தூங்காம எப்படி.... அப்புறம் தூங்கி முழிச்சு நம்ம தாமிரவரணில ஒரு குளியல போட்டுட்டு அப்படி அங்க இருக்க அப்பன்வெங்கடாசலபதி கோவிலு, ஊருக்குள்ள உள்ள ராமசாமி கோவிலு, அம்மநாதர் கோவிலு கும்பிட்டு நேரா பத்தமடை வழியா கரிசூழ்ந்தமங்கலம் போயி கனகசபாபதியையும் கும்பிட்டுரனும் அண்ணாச்சி....

ஏல நீ என்ன திசைய மாத்தி பத்தமடை பக்கம் இழுத்துட்டு போற.... சரி போ உன் ஆசைய ஏன் கெடுப்பான போயிருவோம். எனக்கும் பத்தமடை வில்வவனநாதர் கோவில் போனும்னு ரொம்ப நாள் ஆசை. கனகசபாபதிய கும்பிட்டு, வர்ற பாதைக்கு வில்வவனநாதரையும் கும்புட்டுட்டு, மறுபடியும் சேர்மாதேவி வழியா திரும்பி நம்ம ஊருக்கு வர்ற பாதையில உள்ள  கல்லூர்ல இருந்து கிழக்க திரும்பி கோடகநல்லூர் ஊருக்குள்ள போய் நம்ம மேற்கு பார்த்த சிவன் கோவில், கிழக்கு பாத்த சிவன் கோவில் அப்புறம் பிருகன்மாதவ பெருமாள் கோவில்லயும் சாமி கும்புட்டு அப்படி........

ஏல மூதி.. இருல இன்னும் என்ன அப்படினு இழுக்குற அவ்ளோதான் கருக்கல்லு தாண்டி இருட்டு வந்தாச்சு... இனி எங்கையும் போக முடியாது. காலையில இருந்து அலைஞ்ச அலைச்சலுக்கு வீட்டு வந்து அம்மைட்ட இரண்டு தோசைய சுட சொல்லிட்டு வெந்நீ வைச்சு குளிச்சுட்டு, கொஞ்சம் முளவா பொடியில குழி பறிச்சு நல்ல செக்கு நல்லெண்ணய ஊத்தி குழப்பி, அம்மை சுட்டு வைச்ச தோசைய தின்னுட்டு படுத்து உறங்க வேண்டிதாம்ல.... 😇😇

ஆமா அண்ணாச்சி அதுவும் சரிதான். நாம தூங்கிட்டு மறுநாள் அடுத்த பயணத்தை தொடருவோம்..... 🤗🤗

(ஊரடங்கு முடிந்தவுடன் இங்கெல்லாம் போகனும்னு மனசுல தோணினத வைச்சு ஒரு கற்பனைப்பதிவு)

-பயணம் தொடரும்...

-திருநெல்வேலிக்காரன்.

No comments:

Post a Comment