37. பூ மிதி (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam
பேராவூர்னா பூமிதி திருவிழாத்தான் பிரசித்தம். எனக்கு குலதெய்வம் காமாக்ஷி அம்மன் கண் முன்னாடி காட்சி தருவள். பூ மிதிக்கரதுன்னா தீ மிதிக்கறது. ரொம்ப நாளைக்கு அப்புரம்தான் புரிஞ்சது. பக்தியோட வேண்டிண்டு மனசு நிறைய நம்பிக்கையும் வச்சுண்டு மிதிச்சுப் போரவாளுக்கு தீயும் பூ மாதிரி இருக்குமாம்.
திருவிழாவுக்கு போய் ரெண்டு நாளாவது தங்கிப் பாத்துட்டு வரணும்னு ஆசை. ஒண்டிக்கட்டை நினெச்சா கிளம்பிடலாம்தான். ஒழியாது. எப்பப்பாத்தாலும் வேலை வேலைன்னு. அமேரிக்க கம்பேனி சித்தே கூட உக்கார விடலை. பெரீய பதவி தந்து கை நிறையன்னு சொல்லப்பிடாது – பேங்க் அக்கவுன்ட் ததும்ப - சம்பளம் கொடுத்து ஆனா ரத்தத்தை உறிஞ்சிண்டு.
இந்த வருஷம் எல்லாத்தையும் ஓரம் கட்டிட்டு கிளம்பிடறதுன்னு பிளான். ந்யூயார்க்கில் என் மேலதிகாரிக்கு சொல்லியாச்சு 15தேதி வாக்கில் 2வாரம் நான் இருக்கப்போர இடமே தெரியாதுன்னு. எங்கே, பேங்காக் இல்லை பாலியான்னு கேக்க, பேராவூர்னு சொல்லிப் புரியவைக்க 20 நிமிஷம். “வாவ்! ஹாவ் அ க்ரேட் டைம்!”.
கும்மோணத்தில் மதனம் இன்னில் 1 வாரம் ரூம் போட்டாச்சு. அங்கேந்து அரை மணீலே போயிடலாம். கோவிலில் பழனி பூசாரிக்கும் போன் போட்டு “பாத்து நாளாச்சு, திருவிழாக்கு வரேன்”. கடைசீயா போனது 8 வருஷத்துக்கு மின்னாடி. எப்போ கல்யாணம் கட்டிக்குவீங்கன்னு கேட்டார். அப்போ எனக்கு வயசு 25. அவருக்குத் தெரியும் என்னைப் பெத்தவா கூட இருந்து இதெல்லாம் பண்ண இல்லைன்னு. “இன்னும் இல்லை ஐயா, பாக்கலாம்.” மழுப்பினேன். கிராமத்துப் பொண்ணானாலும், பிராமாணாளா கிடெச்சா நல்லது, சைவமா இருக்கணும் – ரெண்டு விதத்துலேயும் – கும்பிடுவதிலும், சாப்பிடுவதிலும். “கிளம்பி வாங்க, உங்களுக்கு காமாக்ஷியே நல்ல பொண்ணாப் பாத்துக் கொடுப்பள். என் வாக்கு பலிக்கும்”.
எனக்கும் இதில் நம்பிக்கை உண்டு. குலதெய்வம் கேட்டதைத் தரும். நான்தான் கேக்கலை. கேக்காமலே 6 வருஷத்தில் உத்யோகத்தில் நல்ல வளர்ச்சி கண்டேனே. அதே மாதிரி வாழ்க்கைத் துணையையும் பிடிச்சுக் கையில் கொடுப்பள்.
ஆத்துப் பக்கத்தில் நாராயணன்னு ஒருத்தர். எப்படியாவது தங்கைப் பொண்ணை எனக்கு முடிச்சுடணும்னு அலைஞ்சர். ஜாடை மாடையா டாபிக்கை எடுப்பர். அங்கேயும் இங்கேயும் ஓடரச்சே திடுதுப்புன்னு “ஒரு வரன் வச்சிருக்கேன், எப்போ உக்காந்து பேசலாம்?” “போன் செய்யரேன் மாமா, இப்போ ஏர்போர்ட்டுக்கு நாழியாச்சு”, இல்லை அடுப்பில் கொதிச்சிண்டிருக்குன்னு, துணி துவைக்கரேன், கான்ஃபெரென்ஸ் கால் போயிண்டிருக்கு - காரணம் சொல்லி தட்டிக் கழிச்சுடுவேன். அவர் மாருமாளை போடோவில் பார்த்திருக்கேன். உயரம் கம்மி. ஹெல்தி உடம்பு. சேர்ந்து போடோ எடுத்துண்டாலே சகிக்காது. வாழ்க்கை பூரா? கபி நஹீ.
அவருக்கோ பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம், தனிக்கட்டை, மாமியார், நாத்தனார் கிடையாது, நல்ல வேலைன்னு.
எப்படியாவது ஜாதகம் வாங்கிப்பிடணும்னு. “இன்னும் எழுதலை”. “டீடெயில்ஸ் தாங்கோ நான் குறிச்சிண்டு வரேன்” வேணும்னே டேட், டயமெல்லாம் மாத்தி சொன்னேன். ஒரு வாரம் போச்சு “அமோகமா பொருந்திட்டது, எப்போ பொண் பாக்க வரேள்?” எனக்கென்ன பயம்னா நேரில் பாத்துட்டு எனக்கு கல்யாண ஆசையே சப்புன்னு சுருங்கிட்டா?
திருவிழாக்கு ஒருநா மின்னாடி காரை எடுத்துண்டு கும்மொணம் கிளம்பிட்டேன். ஹோட்டல் பைபாஸில். 6 மணிக்கு கிளம்பினவன், அங்கே 1130க்கு போயாச்சு. ஊருக்குள் போகாம பைபாஸில் லெஃப்டில் போனா மதனம் இன். அங்கே ரூமுக்குள் டைட்டா ஏஸியை வச்சிண்டு ரெண்டு மணி தூங்கியாச்சு. எழுந்து, குளியல் போட்டுட்டு சாப்பாடு ஆர்டெர் செஞ்சேன். கீழே வாங்கோ சார் புஃபேன்னான்.
சாப்டூட்டு எழுந்துக்கரச்சே பார்த்தேன் ராமானுஜம் மாமா. எங்கப்பாவோட சிநேகிதர். ரிடயர் ஆனதும் இங்கேதான் செட்டில் தெரியும். அப்பாவையே பார்த்தா மாதிரி.
“மாமா சௌக்கியமா?” கேட்டுண்டு பக்கத்தில் வந்து நின்ன என்னை பாத்து ஆச்சர்யப்பட்டுப் போனர். “என்னடா சுந்தரேசா இங்கே என்ன பண்ராய்?” சொன்னேன். “ஆத்துக்கு அவசியம் வா. என் ஃப்ரெண்ட் ரங்கராஜன் மாதிரியே இருக்காய்.” என்ன நினெச்சாரோ, “கல்யாணம் ஆகிடுத்தா?” வெக்கத்தோட “இன்னும் பண்ணிக்கலை மாமா.” “சரி, அதையும் முடிச்சுடலாம், கைவசம் நல்ல ஸ்மார்த்தா பொண் இருக்கா. ஈமெயில் ஐடி தா, விவரங்கள் அனுப்பரேன். ஊருக்குப் போரத்துக்கு மின்னாடி ஆத்துக்கு வா பேசணும்.”
மறுநா கார்த்தாலே ஹோட்டலில் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டுட்டு பேராவூர் போயிடணும்னு பிளான். கிளம்பரச்சே மெயிலில் ராமானுஜம் மாமா ஒரு ஜாதகத்தையும், போடோவையும் அனுப்பிச்சிருந்தர். ஷியாமளா. CA முடிச்சுட்டு கும்மோணத்தில் ப்ராக்டீஸ். கல்யாணம் பண்ணிண்டு எந்த ஊரில் செட்டில் ஆனாலும் அங்கே ப்ராக்டீஸ் ஆரம்பிக்க தயார். உயரம், படிப்பு, வயசு 28 செம பொருத்தம்னு மாமா கமென்ட். “பாத்துட்டு போன் பண்ணு. இங்கே வந்திருக்கச்சேயே நானே அழைச்சிண்டு போரேன், அவாத்துக்கு போலாம். எல்லாரையும் மீட் செய்யலாம். உன்னைப் பத்தி சொல்லியிருக்கேன். அப்பா எப்பவோ கொடுத்த உன் ஜாதகம் இருக்கு. பொருத்தம் பாக்கத் தந்துட்டேன். நீ கோவிலுக்கு போயிட்டு சாயங்காலமா பெசு.” மெயிலில் தகவல்.
உங்கெல்லாருக்கும் ஷியாமளா எப்படி இருக்கான்னு கேக்கத் தோணும். கீர்த்தி சுரேஷ் ஜாடை. மத்தது நேரில் பாத்துட்டு சொல்ரேன்.
ஆடுதுறை போனதும் இடதுபக்கம் வீரசோழன் ஆத்துப்பாலத்தில் திரும்பாம, நேரா மங்கைநல்லூர் ரோட்டில் ஆத்துக்கு பக்கத்துலே ரோடு போரதே, அதில் போணம். ஒரு 8 கீமீ போனால் பஸ் நிறுத்தம் வரும், அங்கே ரைட் ஒடிச்சா எங்கூர், மாரியம்மன் கோவில்னாத்தான் புரியும். நண்டும் சிண்டுமா கார் பின்னாடியே ஓடிவர, ப்ரேக் போட்டா முட்டிண்டுடுவான்னு மொள்ள கோவில் பின்னாடி நிறுத்தினேன். முன்னாடி கூட்டம் நிரம்ப.
அம்மனுக்கு சந்தனக்காப்பு. திருவிழாவுக்கு முதல் நாளாம். காரைப் பாத்துட்டு பழனி பூசாரியோட பையன், அவனும் பூசாரி, “அய்யா வணக்கம்.”
இவாளை பாக்கரச்சே மனசுக்கு ஹிதமா! ஊர் மட்டும் அப்படியே. 8ஆவது படிக்கரச்சே அப்பாவோட வந்திருக்கேன். அப்போ பழனியும் சின்ன ஆள்தான், அப்பா ஒத்த வயசு. வாங்கிண்டு வந்த புடவை, பூ பழம், மாலை, தேங்காய் எல்லாம் தட்டில் வச்சு கொடுத்துட்டு கோவிலுக்குள் ஐக்கியம் ஆனேன். நாளன்னைக்கு தீமிதி, சாமி புறப்பாடு எல்லாம்.
கூட்ட நெரிசலில் ஒரு குணசேகர் அறிமுகம் ஆனர். நல்ல மனிதர். தேரெழுந்தூரில் இருக்காராம். பங்காளி தாயாதி எல்லாம் வெளியூர்களுக்கு போயாச்சாம். மிஞ்சின நிலபுலங்களை இவரை பாத்துக்கோன்னு ஊதியம், தங்கிக்க வீடும் கட்டித் தந்துருக்கான்னு சொன்னர்.
அன்னைக்கு சக்கரைப் பொங்கல் பிரஸாதம். சாப்டுண்டே “உங்களைப் பத்தியும் சொல்லுங்கோ, இந்த மாதிரி கோவில் விழாக்களில்தான் பழைய மனுஷா, ஒருகாலத்தில் இங்கே இருந்தவாளொட சந்ததியனரை மீட் செய்ய முடிகிறது. அங்கே இங்கேன்னு சிதறிப்போன குடும்பங்கள், ஒண்ணா வருஷத்துக்கு ஒருக்கா சேரட்டும். அக்ரஹார வீடுகள் முக்காவாசி சிதிலம் அடெஞ்சு, மத்ததை குடியானவா எடுத்துண்டு பிராம்ணாளை பாக்கவே முடியலைன்னு கவலைப் பட்டர். தேரெழுந்தூரில் இவரும் இன்னொரு பிராம்ணா குடும்பம் தானாம். கண்ணைத் தொடச்சிண்டர்.
“நீங்க எங்காத்துக்கு வந்துட்டு ஒரு காபி சாப்டுட்டு போங்கோ” அங்கேந்து 4 கிமீதான். “சரீ என் காரிலேயே போலாம்.” கிளம்பினேன். “மனைவி சாரதா பொண் ரேவதி 30 வயசு, BSc முடிச்சுட்டு சும்மாத்தான், கல்யாணத்துக்கு பாக்கரோம்.” அறிமுகமாச்சு.
கதை போரப் போக்கைப் பாத்துட்டு இந்தப் போண் எப்படீன்னு கேக்கத் தோணும். அடுக்களைலேந்து வந்து சட்டுன்னு யூடர்ன் அடிச்சு உள்ளே போனவளை அத்தனை ஸ்பஷ்டமா பாக்க கொடுத்து வைக்கலை. அது சரி, நான் என்ன பொண்ணு பாக்கவா வந்திருக்கேன்?
“கல்யாணம் ஆகணும்னு பூமிதிக்கு வேண்டிண்டிருக்கா என் பொண்ணு.”. “அப்படியா?” என்ன சொல்வது?
கிளம்பி ஹோட்டலுக்கு 5 மணிக்கு வந்தாச்சு. ராமானுஜம் மாமாக்கு போன் அடிச்சேன், மாமிதான் எடுத்தா. “ஏண்டா சுந்தரேசா, ஆத்துக்கு வந்து ஒருவா சாப்டூட்டு போகப்பிடாதோ, நானும் உங்கம்மாவும் அத்தனை சிநேகிதிகள்.” பழசையெல்லாம் ஆச்சர்யமா ஞாபகம் வச்சுண்டு ஒண்ணு விடாம சொல்ல, “மாமி கோவிலில் நாளன்னைக்கு தீமிதி முடிஞ்சதும் வரேன். மாமாவுக்கு நேர வரச்சே பேசலாம்னு சொல்லிடுங்கோ”. “அப்போ பொண்ணு பிடிச்சிருக்கோனோ?” “வந்து சொல்ரேன் மாமி, நேரில் பாக்கணும்.”
அடுத்த நாள் முற்பகல் கோவிலில், மத்தியானம் கும்மோணத்திலேயும் சரியா இருந்தது. வந்தா கும்பேஸ்வரரையும், சாரங்கபாணியும் பாத்தே ஆகணும். பூமிதி நாளைக்கு சாயங்காலம். சரீயா 5 மணிக்கு அங்கே இருந்தால் விசேஷம் பாத்துட்டு வந்துடலாம். அடுத்த நாள் இவாத்துக்குப் போலாம்.
ஒரு 80 பேர் பூமிதிக்கன்னு விரதமாம். ஒரே கலரில் புடவை, வேஷ்டி, குணா மாமா பொண்ணை எப்படி தேடறது?
யோசிச்சிண்டிருக்கச்சே, பழனீ வந்து உள்ளே அழைச்சிண்டு போனார். அம்மன் முன்னாடி எனக்கு ஸ்பெஷல் மரியாதை. “வந்துண்டு போயிண்டு இருங்க சாமி, உங்களைப் பாத்தா அப்பாவைப் பாக்கரா மாதிரி இருக்கு. அம்மனை நன்னா வேண்டிக்கங்க, இந்த வருஷம் கல்யாணம் நடக்கும்.”
தீமிதி ஜரூரா நடக்க ஆச்சர்யமா பாத்தேன். உலகத்தில் எங்கே போனாலும் சிலது அங்கே பாக்க முடியாது. அதில் இதுவும் ஒண்ணு. நடந்து வரவா கரையேறும் இடத்தில் நானும் இன்னும் அந்தூர் பெரீய மனுஷாளும் வெள்ளையும் சொள்ளையுமா நின்னுண்டு. திடீர்னு அடுத்ததா வந்த பொண் அழகா நிதானமா கையைக் கூப்பிண்டே வந்து கரையேறி ரெண்டு எட்டு எடுத்து வச்சவள் அப்படியே லேசா துவண்டுப் போனாப்புலே விழ இருக்க, தாவி அவளை பிடிச்சு ஆசுவாசப்படுத்தரேன்.
இந்தண்டை நின்னுண்டிருந்த அவள் அம்மா, சாரதா மாமி அவளை எங்கிட்டேந்து மீட்டுண்டு அழைச்சிண்டு போரா. “விரதம் இருந்தாளோன்னோ!” சொல்லிண்டு.
அப்போதான் ரேவதியை நேருக்குநேர் நன்னா பாக்க முடிஞ்சது. சினிமா ஸ்டார் மாதிரியெல்லாம் இல்லை. ஆனால் அந்தக் கோலத்தில் எனக்குத் தெரிஞ்சது தெய்வீகம், தீர்மானமா ஒண்ணை செஞ்சு முடிக்கணும்னு ஆர்வம், சொல்லொண்ணா நம்பிக்கை இப்படிப் பண்ணினா நமக்கு நல்ல கணவன் கிடைப்பான்னு. அம்மா அப்பாவுக்கு பாரம் இல்லாம சீக்கிரம் தன் வாழ்க்கையை அமைச்சுண்டுடணும்னு கண்ணில் தேக்கம்.
எல்லாத்தையும் ஒரு சேர பாத்தவனுக்கு அவள் யார் மாதிரி இருக்கான்னு கணிக்கத் தோணலை.
திருவிழா முடிஞ்சு ஹோட்டலுக்கு வரச்சே மணி 8. அசதீலே தூங்கியாச்சு. கார்த்தாலேதான் ராமானுஜம் மாமாகிட்டேந்து 5 மிஸ்ட் கால் பாக்கரேன். குளிச்சு சாப்டூட்டு அவருக்கு போன் செய்யரேன்.
“மாமா இன்னைக்கு நீங்களும் மாமியும் ஃப்ரீயா?” “அதுலென்ன சந்தேகம்? இன்னைக்கு உனக்கு பொண் பாக்கப் போணமே! எப்போன்னு சொன்னால் அவாத்தில் சொல்லிடலாம். நாங்க ஃப்ரீ.” “நான் காரை எடுத்துண்டு இப்போ வரேன் மாமா, ஆனா நாம தேரெழுந்தூர் போரம்”. “அங்கே என்ன வேலை?”
“பொண் பாக்கத்தான்!”
No comments:
Post a Comment