Thursday, August 13, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி10

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி10 
by(sujatha&venkatesan)6381369319

மதுரை...தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி. தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் என்று தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மதுரை நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை, கலை அறிவு, நாகரிக மேன்மை இவற்றின் அழிக்க முடியாத அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.
.பாண்டிய நாட்டுத்தலை நகரம்.  
இக்கட்டுரையில் மதுரை குறித்தும் மீனாட்சி அம்மை குறித்தும் விவரிக்க தொடங்கினால் நம் நோக்கம் திசை மாறும் என்பதால் பின் ஒரு சமயம் தனி பதிவிடுகிறேன்.  
தூங்கா நகரம் மற்றும் மணம் வீசும் மல்லிகை நகரத்தில் தங்குவதற்கு ஏராளமான லாட்ஜ்கள். 500/முதல் 5000/-வரை பட்ஜெட்டுக்கேற்ப. முதலிலேயே கூகுள் பார்த்து ஒரு லாட்ஜ் முடிவு செய்து ஆட்டோவில் செல்வது நல்லது. ஆட்டோக்காரனிடம் சொன்னால் லாட்ஜ் கமிஷன் சேர்த்து அழ வேண்டி வரும். 
இரயில்வே ஸ்டேஷனுக்கும் கோயிலுக்கும் இடையே (ஒரு கிமீ)ஏராளமான லாட்ஜ்களில் ஒன்றை முடிவு செய்து கொண்டால் மீனாட்சி அம்மனை தரிசிக்கவும் திவ்ய தேசங்களையும் மற்ற பெருமாள் கோயில்களையும் தரிசிக்க வசதி….

இனி இவள் பார்வையில்...
ஸ்டேஷன் வாசல்ல என்ன நீக்க வச்சுட்டு லாட்ஜ் பாத்துண்டு வரேன்கறார். நான் ஆட்டோக்காரன் கொண்டு விடுவன் நீங்களும் அலைஞ்சு என்னையும் தனியா நீக்க வைக்காதேள்ங்கறேன். வேண்டா வெறுப்பா ஒரு ஆட்டோகாரன்கிட்ட ஒரு நல்ல லாட்ஜ் 1000/-க்குள்ள ங்கறார் அவன் வேற ஒருத்தன முன்னாடி ஏத்திண்டு கொஞ்ச தூரத்திலேயே நிறுத்தறான். போன தடவை நடத்தியே அழைச்சிண்டு போய் காலேஜ் ஹவுஸ்ல 1000/ ரூம் போட்டுட்டு அதே தெருவுல 600,400க்கு ரூம் உண்டுன்னு போட்டத பாத்து வயிறெரிஞ்சுண்டு வந்தார். ஆனா அது எந்த இடம்னு மறந்துட்டார். இவன் நிறுத்தின இடத்துல 750 க்கு மூணாவது மாடி லிப்ட் உண்டுங்கறான். ஆட்டோக்காரன் போன ஒடனே அடுத்த தடவை  நீங்க நேரா வந்தா 500/ தான் வாடகை ங்கறான். இவர் என்னை மொறைக்கிறார். 

ரூம் எதோ சுமாரா இருக்கு. லிப்ட் பக்கத்துல ரூம். லிஃப்ட் கதவை யாரும் சரியா சாத்தரதில்லை. அது ராத்திரி பூரா க்ளோஸ் த டோர்னு க்ளோஸ் த டோர் னு ரிபீட்டடா கத்திண்டே இருக்கு. ரெஸ்ட் எடுத்துண்டு மீனாட்சி அம்மனை தரிசிக்கறோம். ஃபுல் மீல்ஸ்  ஜிகர்தண்டா சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தூங்கிட்டு சாயத்தரம் கூடலழகர் கோயில் கிளம்பரோம்.  பக்கத்திலேயே பெருமாள் கோயில் என்னன்ன என்று பார்த்து வச்சிருந்தார்.  

முதலில் மதன கோபால சுவாமி கோயில் போறோம். 

மதனகோபால சுவாமி கோயில், மதுரை நகரத்தின் மேல மாசி வீதி - தெற்கு மாசி வீதி சந்திப்பில், பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. இது கிருஷ்ணன் கோயில் ஆகும். மூலவர் மதனகோபால் சுவாமி என்ற பெயருடன் கையில் புல்லாங்குழவுடன், ச‌‌த்‌தியபாமா‌ – ருக்மணி சமேதராக அருள் புரிகிறார். மதுரவல்லி தாயார் மற்றும் ஆண்டாள் சன்னதிகள் தனியாக உள்ளது. தல விருட்சம் வாழை மரம்.

ஆண்டாளும் பெரியாழ்வாரும் ஒரு முறை திருவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில், மதனகோபால சுவாமியை வழிப்பட்டுச் சென்றதாக இக்கோயில் தல புராணம் கூறுகிறது.

கொஞ்ச தூரத்தில் பிரசன்ன வெங்கடேச  பெருமாள் கோயில். இக்கோயில் மதுரையிலுள்ள சௌராஷ்டிர பிராமணர்களுக்குப் பாத்தியமானது என்று இக்கோயிலிலுள்ள அறிவிப்பு தெரிவிக்கிறது. பிற்காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக இருந்தாலும் இக்கோயிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளும் தூண் மற்றும் கட்டட அமைப்புகளும் மெய் மறந்து கண்டு களிக்கும்படி உள்ளன.

மதன கோபால ஸ்வாமி கோயிலில் சக்கரத்தாழ்வார், துர்க்கை, நவக்கிரக சந்நதியும் அமைந்துள்ள கண்ணன் கோயில்.
கண்ணன் மேல் சௌராஷ்டிர சமூகத்தினர் மிகுந்த பக்தி கொண்டவர்களாதலால் இத்தல மூர்த்திகளுக்கு வேண்டிய ஆடைகளை அவர்களே வழங்கினர். 

கல்வெட்டுகளில் இத்தலத்து இறைவனுக்கு, திருத்துருத்தி மகாதேவர், ஏழுலக் முழுதுடையான், அழகிய மணவாளன் எனும் பெயர்கள் காணப்படுகின்றன. 

அறுபது ஆண்டுகளுக்கும் முன்னர் அதிகப்படியாக, கவனிப்பாரில்லாமல் இருந்த இத்திருக்கோயிலின் 36 பழம்தூண்கள் ஏலம் விடப்பட்டன. அமெரிக்காவின் கிப்சன் என்பவர் அவற்றை ஏலத்தில் எடுத்து அமெரிக்கா கொண்டு சென்றார். அவற்றை பயன்படுத்தி கோயில் மண்டபம் போன்ற அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவ்வமைப்பை 1938 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கண்காட்சிக்கு வழங்கினார்...

சக்கரத்தாழ்வார் சன்னதி கூடலழகருக்கு எதிரே உள்ளது அவரை தரிசனம் செய்த பின் கூடலழகர் கோயிலுக்குள் நுழைகிறோம்.

108 வைணவ திருத்தலங்களில் புகழ் பெற்றது மதுரை கூடலழகர் பெருமாள் கோயில். மதுரையை ஆண்ட வல்லபதேவ பாண்டிய மகாராஜன், பரம்பொருள் யார் என்று கேள்வி எழுப்பி, சரியாக பதில் சொல்பவர்களுக்கு பொற்கிழி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதையறிந்த பெரியாழ்வார், ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள் என்று விளக்கினார். அதற்காக பெரியாழ்வார் பட்டத்து யானை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது பெருமாள் கருட வாகனத்தில் காட்சி அளித்ததாகவும், பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமே என்று எண்ணி பெரியாழ்வார், திருப்பல்லாண்டு பதிகத்தை பாடியதாகவும் புராணம் கூறுகிறது. 47 வது திவ்ய தேசம். 
         தொடரும்.

No comments:

Post a Comment