94. மைசூர் பம்பரம் (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam
ரொம்பநாளாச்சு பம்பரம் விளையாடி. சினிமாவில் ஹீரோயின் தொப்புளில் விடுவா. அதுவும் நின்னு போச்சு. தொப்புளில் விடறதையே பேன் செஞ்சுட்டாளா? தெரியலை. ”பரண்லே ட்ரங்க்குப் பொட்டியில் சுத்தி இருக்கும் ஏறி எடுத்துக் கொடு” அம்மா சொல்ல ரொம்ப நாளைக்கு மின்னாடி அப்பா வாங்கிக் தந்த பம்பரம் அதில் பாத்தேன்.
சுத்தியை கேட்டது மாமா. குடும்பத்தோடா வந்திருக்கர். குடும்பம்னா அவர், மாமி, பொண் மகதி. வருஷா வருஷம் வருவர். வந்தவர் கூட மாட ஒத்தாசை செய்யரேன், ஒழுங்கு பண்ரேன் பேர்வழீன்னு சாமான் செட்டெல்லாத்தையும் கலைச்சுப் பொடுவர். “அக்கா! இந்த கஜேந்திர மோக்ஷம் படத்தை ஃப்ரேம் செஞ்சு இங்கே மாட்டினா என்ன? ஃப்ரேம் போட்டு சாயங்காலம் வந்துடும், புதுசா ஆணி அடிக்க சுத்தி இருக்கா?” அங்கே ஆரம்பிச்சது கதை.
திருவையாறு பஸ் ஸ்டேண்ட் எதுக்கே அப்பா வருஷாந்திர மளிகை வாங்குவர். 1990இல் அவன் தந்த காலெண்டர். கஜேந்திரன் காலை முதலை கொடூரமா கவ்விண்டிருக்கும். அதன் கழுத்துக் கிட்டே பெருமாளோட சக்ராயுதம் பள பளன்னு சுத்தரா மாதிரி. அதே மாதிரி பல்வச்ச சக்கரம் திருப்பழணம் டிம்பர் ஷாப்பில் இருக்கு. அவனுக்கு எப்படி கிடெச்சதுன்னு அறியாத வயசில் கேள்விகள் வரும். பொறுமையா அப்பா பதில் சொல்லுவர். மனசில் எழும் அசட்டுக் கேள்விகளுக்கு பதில் சொல்ல அப்பா இல்லை. மாமாவை நோண்டலாமே, எப்படி சமாளிக்கரர்னு பாக்கலாம்னு.
“வேணு மாமா! பழைய காலெண்டரை கண்ணாடி போட்டு மாட்ட அவசியம் என்ன?” ஸ்டூலில் ஏறி ஒரு கையால் ஆணி பிடிச்சிண்டிருக்கர். கொஞ்சூண்டுதான் சுவத்தில் இறங்கியிருக்கு, இன்னொரு கையில் சுத்தி. கழுத்தை வளைச்சு என்னைப் பாக்கரர். “பாலு, இந்த மாதிரி ஆர்ட்வொர்க் பெயின்டிங்க் இப்போ கிடைக்காது. சிவகாசி ப்ரின்ட். அருமை தெரிஞ்சவா தூக்கிப் போட மாட்டா. இங்கே மாட்டினா கம்பீரமா இருக்கும். அந்தக் காலத்தில் இந்த மாதிரி படங்களைக் காட்டித்தான் குழந்தைகளுக்கு புராணம், இதிகாசமெல்லாம் சொல்லித் தருவா”.
“இப்போ கூகிள், கிண்டில், நெட்டில் எல்லா இதிகாசமும் விரல் நுணியில் இருக்கே இதை யாரு பாப்பா?” “யாரும் பாக்க மாட்டா, நீயும் பாக்காதே!” சொல்லிண்டே அம்மா உள்ளேந்து வந்தா. அவளுக்குத் தெரியும் விட்டா நான் மாமாவை அவருக்கு தெரியாம கலாய்ச்சு ரெண்டு பேரில் ஒருத்தர் களைச்சுப் போனதும் விட்டுட்டு போயிடுவேன்னு. நேக்கா தன் கூடப் பிறந்த தம்பியை காப்பாத்தராளாம்.
அவர் வந்த நோக்கம் அப்பட்டம். அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க எப்படியாவது என்னை சம்மதிக்க வச்சுடணும்னு. இந்த படம் மாட்டறது, அம்மாவுக்கு உதவி செய்யறது எல்லாம் ஒரு கவர் - மாயை. 10நா இருப்பர், 4 நாள் ஓடிடுத்து, இன்னும் காரியத்தை சாதிச்சுக்கலை.
நானும் லீவில் வந்திருக்கேன். பெங்களூருவில் வேலை. கூட வந்துடுன்னு கேட்டா அம்மா முடியாதுன்னுட்டா. “அப்பாவோட 35 வருஷம் வாழ்ந்த வீடு. இங்கேயே இருந்துட்டு போரேன்”. ஒத்தாசைக்கு ஒரு தாயில்லாப் பொண்ணை வச்சிண்டிருக்கா. இங்கேயே தங்கிண்டு ஒத்தாசையா. பீராம்ணப் பொண்தான். பூர்வீகம் மராட்டி. தஞ்சாவூரில் அவா மூதாதையர் குடியேறி நாலு தலைமுறை ஆச்சாம். அழகா தமிழ் பெசுவா. உன் பேர் என்னன்னா, “சுமதி, ஹவுஸ் # 5/17, சிவன் கோவில் ஸ்ட்ரீட், துலாஜாபுரம், தஞ்சாவூர்.” 9ஆவது வரைக்கும் படிச்சிருக்கா. மேலே படிக்க வசதியில்லை. அப்பா மட்டும்தான். “நம்பிக்கையான குடும்பமா இருக்கேள், உங்க பொண்ணா கூடவே வச்சுக்கோங்கோ, உங்களை கண்ணும் கருத்துமா பாத்துப்பா!” விட்டுட்டுப் போனர்.
மகதி வயசுதான். வசதி இருந்தா இவளும் BBA படிச்சு இப்போ எங்கேயாவது பேங்கில். மகதிக்கு இன்னும் படிக்கணுமாம். மாமாவும் மாமியும் இழுத்த இழுப்புக்கு வந்திருக்கா. திருவாரூர்லேந்து பெங்களூர் வாசத்துக்கு ஆசைப்பட்டு. கூடவே அத்தனை புஸ்தகங்கள். திருவையாத்தில் பொழுதை போக்க வேற என்னத்தை பண்றது? எல்லாம் நாவல். ஹொரால்ட் ராபின்ஸ், சிட்னீ ஷெல்டன் வகையரா. அதெல்லாத்தையும் பாத்து சுமதி மாலைச்சுப் போய் ஒண்ணு ரெண்டை எடுத்து புரட்டினா அவளுக்கு ஆகாது. “புரியாது, வச்சுடூ!” சுமதிக்குன்னு அம்மா குங்குமம், ஆனந்த விகடன் வாங்குவா.
மாமி இப்போத்தான் குளிச்சுட்டு பாத்ரூம்லேந்து வெளீலே வரா. தலையில் சிவப்பு மலையாளத் துண்டை முடிஞ்சிண்டு புடவையை தட்டுச் சுத்தா சுத்திண்டு திவ்யமா காட்சி தரா. தேங்காய் உள்ளில் போய் ரவிக்கை போட்டுண்டு புடவையை சீராக்கிண்டு இவள் வரத்துக்குள் அம்மாவும் சுமதியும் சமையல் முடிச்சுடுவா.
வேலையெல்லாம் ஆச்சுன்னு நன்னா தெரிஞ்சிண்டு “ஏதாவது கூட மாட ஒத்தாசையா இருக்கவா?” “உன் ஆத்துக்காரரையும், பொண்ணரசியையும் சீக்கிரம் குளிச்சுட்டு கட்டிண்டதை போடச் சொல்லி துவைச்சு காயப்போடு”. துணி துவைக்காம எப்படி தப்பிக்கலாம்னு அந்த குண்டு மூஞ்சி சீரியஸா திட்டம் தீட்டும். இவள் பெத்த பொண்ணை நான் பண்ணிக்கணுமாம்.
மகதியை தாஜா செஞ்சு குளிக்க அனுப்புவா. வெள்ளிக்கிழமை. எண்ணைக் குளியல் வேற. எங்கம்மாவும் சுமதியும் இந்த விஷயத்தை கார்த்தாலே 6க்குள் முடிச்சிண்டு பளிச்சுன்னு இருக்கா. மகதி அரைக் கிலோ சீயக்காய்ப் பொடியை கரைச்சு விட்டுட்டு, எண்ணைக் கிண்ணியை காலால் இடறி அடுத்து யார் போனாலும் வழுக்கி விழுந்து துடை எலும்பு முறிவதென்னமோ கன்ஃபெர்ம். மாமாதான் நெக்ஸ்ட் இன் க்யூ. வாசத் திண்ணையில் உக்காந்திண்டேன்.
வாசல்ல எதுத்தாத்து தாத்தா, ஆஞ்சநேயர் கோவிலை வலம் வந்தவர் என்னை பாத்துட்டு கழியை ஊணிண்டு வந்து திண்ணையில் உக்காந்துக்கரர். “என்னடா பாலு எப்போ வந்தாய்? உத்யோகம் எப்படிப் போறது?” இவர்கிட்டே ஆசீர்வாதம் வாங்கிண்டுதான் வேலையில் சேர்ந்தேன். பெங்களூரு நிலவரம் சொன்னேன். மனுஷர் P&Tயில் இருந்து ரிடயர் ஆனவர். சென்னை CTOவில் சீஃப் சுப்பரன்டென்டா. பீச் ஸ்டேஷன் எதுத்தாப்போலே இருக்கே அங்கே. அப்பாக்கு நல்ல ஸ்நேகம். “உனக்கு கல்யாணத்துக்கு பாக்கராளா?” கேட்டுட்டர். யாரும் தனியா நிம்மதியா இருந்துடப் பிடாது.
மாமா வந்திருப்பதையும், எதுக்குன்னும் சொன்னேன். “சொந்தத்துக்குள் பண்ணி வைப்பாளா? நல்லதில்லையே!” அப்படிப் பண்ணினா என்னெல்லாம் தப்பா நடக்கும்னும் விவரிச்சர். “தெரியும் தாத்தா, எனக்கு இப்போ கல்யாணமே தேவையில்லை, இவாளை எப்படி தட்டிக் கழிப்பதுன்னு யோசிக்கரேன்.” “கல்யாணம்னு பண்ணிண்டா எப்போ செஞ்சுக்கறதா உத்தேசம்?” “இன்னும் 2 வருஷம் கழிச்சு”. “அதுனாலென்ன, அப்படியே பண்ணு, மனசுக்கு பிடிச்சவா யாராவது இருந்தால் விழுந்து விழுந்து காதலி. லைஃபில் இதெல்லாம் அவசியம்.”
“ஏதாவது ஐடியா சொல்லுங்கோ?” “எதுக்குடா? தட்டிக் கழிக்கவா?” “ஆமாம்!” “அப்படியெல்லாம் சொல்லித் தரமாட்டேன். நீ சில பொண்களை அழைச்சிண்டு வந்து இவாளுக்குள் யாரை பண்ணிக்கலாம்னு கேட்டியானா, அதுக்கு முடிவெடுக்க ஐடியா தரலாம்” எழுந்து போனர். இவர் வேஸ்ட்டுன்னு பட்டது.
மாமா குடும்பத்தோட கபிஸ்தலம் போயிருக்கச்சே அம்மா கிட்டே வந்து “பாலு! என்ன? மகதியை பண்ணிக்கரையா?” கேட்டா. “ஏம்மா, இப்படி படுத்தராய்?” “உன் மாமா கேட்டுட்டாண்டா, நீதான் முடிவெடுப்பாய்னு சொன்னேன். நாளைக்கு உன்னை மடக்குவான். தயாரா இரு”. “சொந்தத்துக்குள் பண்ணிக்கப் பிடாதுன்னு சுந்தரேசன் தாத்தா சொன்னர்.” “ஆமாம், சொந்தமும் விட்டுப் போயிடப் பிடாது! மகதி சின்னப்பொண்ணாய் இருகச்சே உன் அப்பாவொட இவன் பேச்செடுத்து அவர் தலையாட்டினராம். சொல்ரான். அதான் சங்கடமா இருக்கு”. “சரி விடு, நான் பாத்துக்கரேன்.” எதுத்தாத்து தாத்தாவை பாக்கலாம்னு போரேன்.
“வாடா, சுயம்வரம் ரெடியா?” என்ன தோணித்தோ “ரெண்டு பொண் கைவசம், சொல்லி தாங்கோ!” “யார் அவா?” “மாமா பொண்ணு மகதி, இன்னொண்ணு சுமதி, ஆத்தில் அம்மாவுக்கு ஒத்தாசையா இருக்கா.” பட படன்னு யோசிக்காம சொல்லிட்டேன். அப்புரமா நக்கைக் கடிச்சிண்டேன். இப்படி சொல்ல எப்படி தோணித்து? மனசில் எங்கேயோ மூலையில் எண்ணம் இருந்ததால்தானே! “நாளைக்கு கார்த்தலே காபீ சாப்டூட்டு உங்காத்துக்கு வரேன், அறிமுகப்படுத்தி வை.”
சொன்னாப்போலே வந்து திண்னையில் உக்காந்துண்டு “பாலூ”ன்னு சவுண்ட் விட்டர். “உள்ளே வாங்கோ.” அழைச்சிண்டு வந்து ஊஞ்சலில் உக்காரவச்சேன். மாமா மாமிக்கு முதலில் அறிமுகம். மாமி ராத்திரி போட்டூண்டு தூங்கின நைட்டீலே வந்து நமஸ்காரம் சொன்னது இவரை என்னமோ செஞ்சது. இவரும் அப்பப்போ திருவையாறு வந்துட்டுப் போரவர்தான், அம்மா அடுக்களைலேந்து வந்து குசலம் விசாரிச்சா.
மாமா பெசிண்டிருகச்சே சுமதியை காட்டி “அம்மாவுக்கு ஒத்தாசையா இங்கேயே தங்கி சிசுருஷை” சொல்ல, “எதுத்தாத்து தாத்தாவா?” ஆச்சர்யமா பாத்த சுமதி டக்குன்னு “என்னை ஆசீர்வாதம் செய்யுங்கோ.” அவர் காலில் விழ எல்லாம் நடந்தது.
கல்லால் அடிச்சே பாக்குக் குலையை வீழ்த்தின பெருமையோட மகதி குதிச்சிண்டு வர, “இங்கே வா.” கூப்பிட்டு தாத்தாவை அறிமுகப் படுத்தினேன். “மாமா போண்ணா? என்னமா குழந்தை, என்ன படிச்சிருக்கே?” அவளும் சொல்ல நேரம் சுமுகமாப் பொச்சு. “எங்காத்து காபி எப்படீன்னு குடிச்சுப் பாத்து சொல்லுங்கோ” சுமதி எடுத்துண்டு வர, மனுஷர் நரசூஸ் காப்பி விளம்பரம் மாதிரி பேஷ் பேஷ்னு சொல்லிண்டே குடிச்சர். போரச்சே ஜாடையா, மத்தியானம் என்னை வந்து தனியா பாருன்னுட்டு போரர்.
சாப்டூட்டு தாத்தாவை பாக்க கிளம்பலாம்னு யோசிக்கராச்சே மாமா, “பாலு உன்னண்டை சித்தே பேசனும். அம்மா சொன்னாளா?” ஆரம்பிக்கரர். “சொன்னா, மாமா. இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு தோண்ரது”. மொள்ள பண்ணிக்கோ, சின்ன தட்டில் பாக்கு வெத்தில மாத்திக்கலாம்னு உங்கம்மா அபிப்ராயப் படரா.” அட! என்ன கோர்வையா புளுகரர்? எப்படியோ தப்பிச்சிண்டு ரோட்டை கிராஸ் செஞ்சுண்டு வந்துட்டேன்.
என்னை பாத்த தாத்தா பக்கத்துலே உக்காத்தி வச்சு சொல்ரர். “கிட்டத்தட்ட முடிவு பண்ணிட்டேன். அவா ரெண்டு பேருக்குமொரு சின்ன போட்டி வச்சுப் பாத்துட்டா முடிவை சொல்லிடலாம்.” “என்ன போட்டி?” “பம்பரம் விடும் போட்டி. பாலு நீ பம்பரம் விடுவையோ?”
“ஓ விடுவனே, மிந்தாநாதான் பரண்லேந்து மைசூர் பம்பரம் பழசு எடுத்து வச்சேன். சாட்டை கிடைக்கலை.” “ஏங்காத்தில் சாட்டை இருக்கு, கிட்டக்க வா, காதோட சொல்ரேன்.” யாருமே பக்கத்தில் இல்லை. காதில் சொல்வானே? அவருக்கே வெக்கம் பிடிங்கித்தாம். தரையில் வட்டம் போட்டு அதில் இவாளை பம்பரம் விடச் சொல்லணும். கரெக்டா வட்டத்துக்குள் இறக்கி, உள்ளேயே சுத்தி அடங்கணும். யார் விட்டது நிறைய நேரம் சுத்தறதோ அவா ஜெயிச்சான்னு. “இதுகள் ரெண்டுக்கும் விடத் தெரியுமோ என்னமோ?”
“அது மேட்டர் இல்லை. விடத் தெரியலைன்னா, தோத்துட்டதா அர்த்தம், நீ அவா வயித்தில் பம்பரம் விடு.” “அது எதுக்கு?” “வயித்தில் பம்பரம் சுத்தரச்சே யார் அதிக நேரம் சுத்தரா மாதிரி வச்சுக்கரான்னு எங்கிட்டே சொல்லு, அப்புர்மா தீர்ப்பு சொல்ரேன்”
லந்துனு பட்டது. இப்படி பந்தயம் வைப்பது தெரிஞ்சா ஆத்தில் கொன்னேபுடுவா. கிழம் எமகாதமான்னா இருக்கு. நல்லவேளை நீ இதெல்லாம் செய்யரச்சே நானும கூட நின்னு் பாப்பேன்னு ஆரம்பிக்கலை.
எதுக்குன்னு சொல்லாம பம்பர போட்டி வரியான்னு சுமதிகிடே சொன்னப்போ “சீ போ”ன்னு சொல்லாத குறை. மகதியோ, “எனக்கு விடத் தெரியாது, வா மாடிக்குப் போலாம், படுத்துக்கரேன், நீ விடூ”ன்னு கிளம்பினா. இப்போ ஒருத்தியை வச்சு மேட்ச் எப்படி? “தாத்தா!” கூப்டுண்டே போயாச்சு.
“முட்டாள். இன்னுமா முடிவு தெரியலை. சுமதி எல்லா விதத்துலேயும் உனக்கு பொருத்தம்டா. பம்பரத்துக்கே எத்தனை கூச்சப் படரா பாரு. குடும்பப் பாங்கா சமுத்தா இருப்பா. தாம்பாத்யம் இனிக்கும். பண்ணிண்டுடு” அட! நேரே வந்து அம்மாகிட்டே சொல்லிட்டேன். எப்படி தேர்வு நடந்ததுன்னு சொல்லலை.
மாமாகிட்டே என்ன சொல்வது? அது அவள் பிராப்ளம்.
No comments:
Post a Comment