Wednesday, August 12, 2020

மழை

84. மழை (சிசீ6) #ganeshamarkalam

எனக்கு மழைன்னாலே மனசு கனத்துப் போகும். மயில் மாதிரி தோகை விரிச்சுண்டு சந்தோஷமா ஆடத் தோணாது. கதவச் சாத்திண்டு உள்ளே போய் உக்காந்துப்பேன். மழை எப்பவுமே அப்படிப்பட்ட துக்கமான அனுபவமாப் போச்சு. அதுக்கு பின்னணி இருக்கு. சொன்னா நீங்களும் துத்ஸு கொட்டுவேள்.

SSLC பரீக்ஷை எழுதணும், அடுத்த வாரம் மொத எக்ஸாம். அதுவும் கணக்கு. நன்னா படிச்சுட்டேன். என்ன கேட்டாலும் சென்டம் வாங்கிடலாம்னு நம்பிக்கை இருந்தது. அப்பா “நீ ஸ்டேட் லெவலில் ரேங்க் வாங்கிக் காட்டு, உனக்கு நல்ல காலேஜில் நல்ல சப்ஜெக்ட் எடுத்துப் படிக்க என்னெல்லாம் செய்யணுமோ அத்தனையும் செய்யரேன்”. “அவனுக்கென்ன? ஜோரா மார்க் வாங்கிண்டு வந்து காட்டுவான்.” அம்மா. அவளுக்கு என்னை விட்டுக் கொடுக்கத் தெரியாது. வசதி கிடையாது. படிப்பே மூலதனம்னு வாழ்ந்த குடும்பம்.

பரீக்ஷைக்கு 3 நா இருகப்போ மதுரையில் நல்ல மழை. வைகை ஆத்தில் சின்னப் பாலம் மூழ்கி அதுக்குமேலே நீர் சுழிச்சிண்டு ஓடித்து. பெரீய பாலத்தில் நின்னுண்டு பாத்தா கண்கொள்ளாக் காட்சி. வைகையில் நீர் நிரம்பி ஓடினாலே மதுரைக்கராளுக்கு சந்தொஷம் பொங்கும். பாலத்தில் நின்னிண்டிருக்கப்போ எங்காத்து பக்கத்தாத்து பையன் ஓடி வந்து “கணேசு, உங்கப்பா தவறிப் போயிட்டார்டா”. அதெப்படி? இப்பத்தான் காலேஜில் சேருவதைப் பத்தி பெசிட்டு குடை எடுத்துக் கொடுத்து போய் வெள்ளத்தைப் பாத்துட்டு வான்னு அவரே அனுப்பிச்சர். செத்துப்போரேன்னு சொல்லலையே! ஓடி வரேன்.

எப்படியோ படிப்பு வீணாப் போயிடப் பிடாதுன்னு பரீக்ஷை எழுதிண்டே காரியங்களை செஞ்சு முடிச்சேன். அதுக்கப்பரம் மழை தூரினாக்கூட அப்பா ஞாபகம் வரும். அப்பாவுக்காக சொன்ன மார்க்கை வாங்கிக் காட்டினேன். ஸ்டேட் லெவலில் 3ஆவது. சென் மேரீஸில் ஃபர்ஸ்ட். Rev. Fr. அருளாநந்தம்.sj “நானிருக்கேன், காலேஜ் சீட் வாங்குவது ஒரு மேட்டரே இல்லை!” அமேரிகன் காலேஜில் கெமிஸ்ட்ரி. காமராஜ் நகர்லேந்து நடந்தே போலாம். அம்மாகூட நிறைய டைம் ஸ்பெண்ட் செய்யலாம்.

அப்பா வருஷாப்திகத்துக்கு தில்லிலேந்து சகுந்தலா அத்தை வந்திருந்தா. அப்போ வர முடியலையாம். கிளம்பரச்சே அம்மாகிட்டே “கணெசுக்கு என் பொண்ணத் தரேன். சுகன்யாவும் நன்னா படிக்கரா. கவலைப்படாதே மன்னி.” அவர் போனதும் அம்மா மெதுவா சொல்ரா, “அத்தை அத்தனை தூரம் வாக்கப்பட்டுப் போயிட்டதால் அண்ணாவுக்கு தீபாவளி பொங்கல் கார்ட் அனுப்பரதோட உறவு மட்டுப்பட்டுப் போச்சு”. அப்பெல்லாம் சட்டுன்னு கிளம்பி வந்து சீராடிட்டு போக முடியாது. அப்பா அம்மா இல்லாத காரணத்தால் அத்தைக்கு அப்பாதான் கைக்காசப் போட்டு கல்யாணம் பண்ணி வச்சர். அப்பரம் ஒண்ணும் செய்ய வசதியில்லை. அத்திம்பேராத்தில் சித்தே மனஸ்தாபம் அதனால். அப்பாவும் தங்கைக் கிட்டே “என்னால் முடிஞ்சது உன் மன்னியோட நகையயும் அவ தயங்காம தந்துட்டான்னு உனக்குப் போட்டு பண்ணியாச்சு. இனிமேல் எதிர்பாக்கேண்டாம்.” கண்டிச்சு அனுப்பி வச்சராம்.

அத்தைய பொறுத்த மட்டில் அண்ணாகிட்டே கோபம் இல்லைதான். அதான் பொண்ணைத் தரேன்னுட்டு போரா. அத்திம்பேர் என்ன நினைக்கரர்னு யார் கண்டா? அவர் வரலை. இந்த மாதிரி விஷயங்களில் ஒர்மனதா எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்தா நல்லது. கல்யாணம் மல்டிபார்டி அக்ரீமென்ட். சுகன்யாவுக்கே இந்த ஆஃப்ர் பத்தி தெரியுமான்னு தெரியலை. ஆனா அம்மாவுக்கு ரெம்ப சந்தோஷம். அடிக்கடி சொல்லிண்டிருப்பா, “சீக்கிரம் காலேஜ் முடி, என்ன படிக்கணமோ சீக்கிரம் படிச்சு முடி, நல்ல வேலை கிடெச்சதும் உன்னத்தையோட எல்லாம் பேசி உனக்கு கல்யாணம் செஞ்சுடணும்”. அதுக்காக நான் MSc முடிக்காம எப்படி?

BSc முடிச்சுட்டான்னு அம்மா கேக்க சுகன்யா போடோ அனுப்பினா அத்தை. “என் மாட்டுப்பொண் லட்டு மாதிரி இருக்காடா. உனக்கு பாந்தமா இருப்பா”. அப்பத்தான் கேள்விப் படரேன் அந்த வார்த்தையை. “பாந்தம்னா?” “ரெண்டு பேருக்கும் பொருத்தம் பாக்கரத்துக்கு மத்தவா கண்ணுக்கு நன்னா படும். உங்களுக்குள் இருக்கும் இணக்கம் வெளிப்படையா தெரியும்”. ஆஹான்னு பட்டது. “இது என்ன லேங்குவேஜ்?” “பிராம்ணா தமிழ்டா”. “அதெப்படி சுகன்யாவ பாக்காம சொல்ராய்?” “அதெல்லாம் எனக்கு தெரியும், இவள் உனக்கு சரியா வருவா”. எனக்கென்னமோ சுகன்யாவ பாத்துப் பெசி பழகினாத்தான் கன்ஃபெர் செஞ்சுக்க முடியும்னு பட்டது. போடோ அனுப்பிச்சாளே தவிர அத்திம்பேர் அபிப்ராயம், சுகன்யா விருப்பமென்னன்னு கேட்டெழுதினதுக்கு அத்தை ஒண்ணும் கோர்வையா பதில் பொடலை.

“விருப்பமில்லைன்னா போடோ ஏன் அனுப்பணும்?” அம்மா பாயின்டில் பிடிச்சாப்போல ஃபீல் விட்டா. இப்படித்தான் வெகுளியா ஊரப் புரிஞ்சுக்காம இருப்பம்.

MSc முடிக்கரேன். கோல்ட் மெடலோட. அம்மா நாளக் கடத்தாம நாத்தனாருக்கு லெட்டர் “ஃபைனலா சொல்லு”. அப்பத்தான் மொதுவா அத்தை எழுதரா “சுகன்யா அமேரிக்கா கிளம்பிப் போயாச்சு. ந்யூயாக் பர்னார்ட் காலேஜில் இடம் கிடெச்சு சைகாலஜி படிக்கரா. வர 3 வருஷம் ஆகும்.” அம்மாவுக்கு அசாத்திய கோபம். லெட்டர் வந்தன்னைக்கு மழைவேற கொட்டோ கொட்டூன்னு. நான் அப்பாவை நினைச்சுண்டு மாடி ரூமில் ஒடுங்கிண்டு. மேல ஏறி வந்து “அவளுக்கு எங்கப்பா போட்ட நகையெல்லாம் கழட்டித் தந்தேன், இப்ப இப்படி செஞ்சுபுட்டாடா.” “யார்?” உன் அத்தை!” லெட்டரை நீட்டரா. மனசை என்னவோ பண்ணினது வாஸ்த்தவம்.

“3 வருஷமெல்லாம் வெயிட் செய்ய முடியாதுன்னு எழுதிப் போடப் போரேன்.” என்னை ஸ்ட்ரைக்கரா வச்சிண்டு இவா கேரம்போர்ட் விளையாடரான்னு புரிஞ்சிண்டும் ஒண்ணும் செய்ய முடியலை. மழை நிக்கட்டும் எங்கேயாவது கிளம்பிப் போய் சாயங்காலமா திரும்பி வந்துக்கலாம்னு நினைச்சுண்டேன். மழைன்னாலே எனக்கு ஏற்படும் இந்த மன உளைச்சலை பத்தியும் பர்னார்ட் காலேஜில் சொல்லித் தருவாளோ!

ஆனா அம்மா சும்மா இல்லை. சட்டுபுட்டுன்னு ஒரு பொண், எங்களைவிட சித்தே ஏழைன்னு வச்சுக்கலாம், சௌந்தர்யமா, PUC வரைக்கும் படிச்சவள், சாஸ்த்ரிகள் பொண். ஜாதகம் பொருந்தவே “பிடிச்சிருக்காடா?” நான் என் அம்மாகிட்டே “ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல், பண்ணிக்கரேன்?” “என்னடா?” “சரஸ்வதீன்னு இப்போ பாத்திருக்காயே இவள் எனக்கு பாந்தமா இருப்பாளா?” சிரிச்சிண்டே, “இருப்பா”.

சரஸ்வதிக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி ரேவதி பொறந்தா. பொறந்தன்னைக்கே தோணிடுத்து இவளை பெரீய படிப்புக்கு எப்படியாவது அமேரிக்கா அனுப்பிச்சுடணும்னு. “அதெல்லாம் கண்காணாத தேசத்துக்கெல்லாம் அனுப்ப மாட்டேன்!” சச்சு. “நாமளும் கூடப் போலாம்டீ”. “அப்படீன்னா சரி”. சரஸ்வதி அத்தனை வெகுளி. ரெம்பப் படிக்கலைன்னெல்லாம் அலட்டிக்க மாட்டா, பல விஷயங்களில் கெட்டிக்காரி. வீட்டு நிர்வாகத்தில் யமன். எகனாமிக்ஸில் நோபெல் வாங்கினவன் கூட இவகிட்டே பிச்சை எடுக்கணும். வர சம்பளத்தில் அமோகமா சிலவைப் பாத்துண்டு மிச்சமும் பிடிச்சு பேங்கில் போடுவள். பாஸ்புக்கை காமிக்கலை. ரேவதி பெரியவளானப்போ காமிச்சா. 1995இல் 8 லக்ஷம் வச்சிருக்கா. ஸ்காலர்ஷிப் கிடைக்கலைன்னாக் கூட ரேவதி படிப்பை மேனேஜ் செஞ்சுக்கலாம்.

இன்னைக்கு எனக்கு 68 ஆச்சு. இப்போ இருப்பது மன்ஹாட்டனில். டைம்ஸ் ஸ்குயர்லேந்து வடக்கே போனா கார்னகீ ஹாலுக்கு மின்னாடியே 3ஆவது லெஃப்ட். W54th. மெர்சிடீஸ் ஹவுஸுக்கு எதுத்தாப்போல் க்ளின்ட்ன் டவர்ஸில் 28ஆவது மாடீலே ரேவதியும் மாப்பிள்ளையும் ஜாகை. அவளுக்கு இப்போ 8 மாசம். நானும் சச்சுவும் வந்திருக்கம். மாப்பிள்ளைக்கு சிடிபேங்கில் அபரிதமான சம்பளத்தோட நல்ல பொஸிஷன். NY யுனிவெர்சிடீலே படிக்க வந்த ரேவதி இங்கேயே செட்டிலான கும்மோணத்துப் பையனா பாத்து பிடிச்சுப் போக தயங்கிண்டே அம்மாகிட்டே சொல்ல அவள் நினைச்சாப்போல் வெடிச்சு கிளம்ப துர்கா டான்ஸ் பாத்தேன். அப்பரம் “பிராம்ணப் பையந்தான், அப்பா அம்மா இங்கேதான் இருக்கா.” அழைச்சிண்டு போய் காமிச்சு இவளை சமாதானம் பண்ணி எல்லாம் நல்லபடியா நடந்தது.

குடுத்தனம் வச்ச புதுசில் சச்சு மட்டும் வந்து இருந்துட்டுப் திரும்பி வந்தா. குடுத்தனம்னு வச்சுத் தர ஒண்ணுமில்லை. எல்லாம் இருந்தது, “பூஜை ரூம் மட்டும் செட் செஞ்சு தாங்கோம்மான்னர் மாப்பிள்ளை! செஞ்சுட்டு வந்தேன்.” அடிக்கடி சொல்லி மாய்ஞ்சு போவா. “மாப்பிள்ள அன்னைக்கு ஆசையா கேட்டது இன்னும் கண்மின்னாடி நிக்கரதுன்னா. நீங்களும் கூட வந்திருக்கணும். ரேவதிய எழுந்துக்க விடரதில்லை. நிறைய காரியங்களை அவரே செஞ்சுக்கரர். எல்லாத்துக்கும் மெஷீன் இருக்கு. ஒரு மெஷீன் பாத்திரம் தேய்ச்சுத் தரது. இன்னொண்ணு துணி துவைக்க, இன்னொண்ணை எடுத்துண்டு மொள்ள நடந்துண்டே போனா விடு பெறுக்கி வைக்கரது. நமெக்கொண்ணு இருந்தா வேலைக்காரி அம்சாவ நின்னுடச் சொல்லலாம்”. 2 வருஷமாச்சு.

அம்மா படுக்கையா கிடக்கரப்போ “ரேவதிய நல்ல இடமா பாத்து பண்ணி வச்சுட்டு போணம்னு ஆசைடா. நீ என்னடான்னா வீம்புக்கு அவளை அமேரிக்கா அனுப்பிச்சுட்டாய்”. சச்சு அந்தண்டை போயிருக்கப்போ “சுகன்யாவை தோக்கடிக்கத்தானே இவளை அனுபிச்சாய்?” இல்லைன்னு பொய் சொல்லத் தோணலை. அம்மா போனதுக்கு சச்சுதான் ரெம்பவே வாடிப் போனா. அதுக்கப்பரம்தான் ரேவதி தனக்கு ஒருத்தனை பிடிச்சிருக்குன்னு சொல்ல அந்த மேட்டரில் மூழ்கி தன் துக்கத்தை மறந்துட்டா.

பெண்கள் எப்படியோ ஒண்ணு பின்னாடி ஒண்ணுன்னு கஷ்டங்களும் வருத்தங்களும் வந்தாலும் சீக்கிரம் கடந்து போயிடரா. ஏன்னா அவா நாம சொல்லாமலேயே நிறைய விஷயங்களுக்கு பொறுப்பேத்துண்டு அதிலுழர்வதுக்கு தயாரா இருப்பதால் இது சாத்தியம். ஆனா ஆம்பளை நான் இன்னிக்கும் மழை பெஞ்சா மனசு கனக்கரது நிக்கலை.

நேத்து பாருங்கோ இவா வேலைக்குப் போயாச்சு 28ஆவது மாடி உசரத்துலே படுத்துண்டு என்னத்த செய்யன்னு கதவ பூட்டிண்டு கிளம்பிட்டேன். சச்சு நடக்க முடியாதுன்னு கூட வரலை. வடக்கே இன்னும் போய் ஹைட் பார்க் நுணீலே சித்தே உக்க்காந்திண்டிருந்துட்டு அந்தண்டை இருக்கும் அண்டெர்கிரவுண்ட் ஏப்பிள் ரீடெயில் ஷாப் பாத்துட்டு அப்படியே 5த் அவென்யூ முழுசா 6கிமீ நடந்தா வாஷிங்டன் ஸ்குயர் வரைக்கும், அங்கேந்து டேக்ஸி வச்சிண்டு ஆத்துக்குப் வந்துடலாம்னு. 5த் அவென்யூ ஏன்னா அதில் நிறைய பாக்கலாம். ட்ரம்ப் டவர், சென் பேட்ரிக்ஸ், ராக்ஃபெல்லர் சென்டர், சாக்ஸ் கடை, பார்ன்ஸ் & நோபிள் புஸ்தகக் கடை, எம்பயர் ஸ்டேட் பில்டிங்க், ந்யூயார்க் லைப்ரெரி எல்லாம் இருக்கு. சென் பேட்ரிக்ஸ் வரப்போ சோன்னு மழை. சர்ச் படிக்கட்டில் உக்காந்தாச்சு. குடை கொண்டு வரலை. ஆனா ரோட்டில் போரவா 90% குடை வச்சிருக்கா. மழை பெய்யும்னு தெரியுமோ? CNN வெதர் பாத்துட்டு கிளம்புவாளோ?

இத்தனை தூரம் கண்டம் விட்டு கண்டம் வந்தும் மழை என்ன படுத்தாமல் விடலை. அப்பா எதுத்த சாரீலே நடந்து போராப்போல் பட்டது. கண்ணை மூடிண்டா கண்ணுக்குள் வந்து நிக்கரர். மழை பெஞ்சன்னைக்கெல்லாம் என் வாழ்க்கையில் என்னெல்லாம் துக்கம் நடந்ததுன்னு என்னை அறியாம மனசு அசைபோட ஆரம்பிச்சது. மழை நின்னதும் முன் வச்ச காலை பின் வைகேண்டாம்னு சொச்ச தூரத்தை நடக்க ஆரம்பிச்சேன். லேசாத்தான் தூரல். எம்பயர் ஸ்டேட் கட்டடம் வந்ததும் அண்ணாந்து பாக்காம ஒருத்தரும் போலை. பாக்கரச்சேயே உசக்கேலேந்து ஒரு பெரீய நீர் துளி வேகமா வந்து என் மூக்கு நுணீல பட்டுத் தெரிச்சு ஜாலம் காட்டித்து. நடைய எட்டிப் போடரேன். யூஎஸ் வந்து 3 வாரம்தான். என்னமோ பார்ன் அண்ட் ப்ராட்டப் இங்கேதான் மாதிரி நடந்து போரேன்.

அடுத்த வாரம் கிளம்பிடுவேன். சச்சு இருப்பள். ஆனா அவளே இருக்கும் ஹெல்த் கண்டிஷணில் ரேவதியை என்னன்னு பாத்துப்பா? பெரியவாளா கூட ஒருத்தர் மாரல் சப்போர்ட்டுன்னு வச்சுக்கணும். நினைச்சிண்டே திரும்பி டேக்ஸீலே வரப்போ போரப்போ சச்சுவையும் கூட அழைச்சிண்டு பொயிடலாமான்னு ஆசை வந்தது. கேப்பம்.

ரேவதியும் மாப்பிள்ளையும் வந்ததும் மொள்ல பேச்செடுத்தாரது. மழை மட்டும் நின்ன பாடில்லை. “ஏம்மா ரேவதி, அம்மா எங்கூட வந்துட்டா உனக்கு ஆபத்து சம்பத்துக்கு உதவ யாரானும் நம்படவா இருக்காளா? ஏன்னா பக்கத்துலேயே 4 பிளாக் தள்ளித்தான் நீ போகிர கிளீனிக் காமிச்சாய்”. “இருக்காப்பா, நம்மூர்க்காரா இங்கேயே செட்டில் ஆனவா ஒரு குடும்பம் இருக்கு. சுகன்யா மாமீன்னு. பிரியமா பழகரா. கூப்பிட்டா வருவா. நம்மம்மா வயசுதான், நாளைக்கு அவாத்துக்கு அழைச்சிண்டு போரேன்.”

ஏன்னு தெரியலை. “அதெல்லாம் வேண்டாம் உங்கம்மாவே இருப்பள்!” பட்டுன்னு பதில். உங்கழுத்தில் தொங்க வேண்டிய, உன் கையில் மாட்டி அழகு பாக்க வேண்டிய நகைகள் அந்த சுகன்யா மாட்டிண்டிருப்பான்னு வாய் வரைக்கும் வந்தது. எழுந்து போய் பால்கனீலே நின்னுக்கரேன். எதுக்காப்போல ஹட்ஸனில் க்ரூயிஸ் டெர்மினல் மழையில் மழுங்கினாப்போல் கண்ணுக்கு.

இனிமேல் மழைன்னா ஓடி ஒளியப் பிடாது. நனைஞ்சிண்டே பழசை மறக்கக் கத்துக்கணும். சுகன்யாவ மட்டுமில்லை. அப்பாவையும் மறக்கணும்.

No comments:

Post a Comment