89. மூணு காக்கா (சிசீ6) #ganeshamarkalam
அந்த டீக்கடைக்கு ஏன் போரீங்க? என்ன விசேஷம்? கேக்கலாம். அங்க சாப்பாடு கொடுக்கராங்களா? டீக்கடைன்னா பிராம்ணா வர மாட்டாளே, உங்களை யாரு “கா-கா”ன்னு கூவி பித்ருக்கள்னு பாவிச்சு டயத்துக்கு கொடுக்கப்பான்னு தோணும். வாஸ்தவம்.
ரெம்பப் போனா காய்ஞ்சு போன, இனிமேல் சாரெடுக்க முடியவே முடியாதுன்னு ஆனப்பரம் தூக்கிப் போட்ட டீத்தூள். இல்லை யாராவது வாங்கி ஆசையா கடிச்சுட்டு ‘அய்யே இதெல்லாம் ஒரு பிஸ்கட்டா, நாய் கூட தின்னாது’னு வீசினது. அபூர்வமா வடை பீஸ், போண்டாக்குள்ள வச்ச உருளை மசாலா. இங்கேந்து கண்ணில் படும். எடுத்துப்பம். இதுக்காக தினம் கார்த்தால 8 லேந்து 10 வரைக்கும் இங்கே வருவது சரியா? அதுக்கு பதில் சொல்லியே ஆணம்.
நாங்க மூணு பேரும் இங்கே வரத்துக்கு ஒரே காரணம் அந்த டயத்தில் இந்த டீக்கடையில் நடக்கும் தமாஷுக்குத்தான். ராமசாமி, கோவிந்தசாமி அடிக்கும் கூத்துக்கு. கிட்டத்தட்ட பட்டிமன்றம் ரேஞ்சுக்கு போகும். சுவாரஸ்யமா இருக்கும். நாங்க மட்டுமா, ஒரு சின்ன ரசிகப் பட்டாளமே வந்திடும். டீக்கடை தயாளனுக்கும் நல்ல வியாபாரம். நாங்க யாரு?
படத்தை உன்னிப்பா பாருங்கோ! டீக்கடைக்கு மேலே தகரக் கூரையில், செகண்ட் லெவெல், உக்காந்திருக்கம். தலைப்பில் சொன்ன மூணு காக்கா நாங்கதான். கதை சொன்ன நான் ராமசுப்பன், பக்கத்துலே விசாலாக்ஷி (வேற யாருக்கோ ஆத்துக்காரியா இருந்தவர்), அப்பரம் மகாதேவன். மின்னாடி வெவ்வேற ஊரில் இருந்தம். இப்ப அன்னலக்ரஹாரம். அரசலாத்தங்கரையில் புளியமர வாசம். லிவிங்க் டுகெதர் மாதிரி. 3சம். டீக்கடை இருப்பதோ திருநாகேஸ்வரத்துக்கும் உப்பிலியப்பன் கோவிலுக்கும் நட்ட நடூலே.
எப்படி இங்கே வருவேள்னா? பறந்துதான்! அப்பப்போ லாரிமேல் மூட்டையில் உக்காந்திண்டு கொஞ்சம் வந்துட்டு நாகேஸ்வரம் போக திருப்பம் வருமே, ஆர்ச் இருக்கு, அதில் தவ்விண்டுடுவம். அப்பரம் சொல்ப தூரமே, பறந்துடலாம். தமாஷ் முடிஞ்சி உப்பிலியப்பன் குளத்தங்கரைக்குப் போனா புளியோதரையை ஆசையா வாங்கிட்டு உப்பில்லைன்னு வச்சுட்டு போனது கிடைக்கும். ஒரு வெட்டு வெட்டீட்டு மரத்துக்கு. ஆத்தங்கரையாச்சே நன்னா பொழுது போகும்னு நினைச்சு பொறாமப் படேண்டாம். இந்த வருஷம்தான் சித்தே நீர் ஓடரது. 5 வருஷமா மண்தான்.
ராமசாமி பெரியவன். உசரமா இருப்பான். உரக்கடை வச்சிருக்கான். சட்டை போட மாட்டான். தோள் துண்டும் இடுப்பு வேஷ்டியும் ஒண்ணா பழுத்துப் போயிருக்கும். பொங்கல் அன்னைக்கு மாத்துவான். செருப்புப் போடாம வெளீல போவதில்லை. கோவிந்தசாமி சித்தாள். பொதுவா வேலையிருக்காது. தயாளன் கிட்டே கணக்கு, ரெம்ப நாளாத் தீக்கலை. லுங்கிதான் உடுத்திப்பது. ரெண்டு சட்டை வச்சிருக்கான். லைட் பச்ச, இல்லை நீலம். சிவப்பு மலையாளந் துண்டு. அந்த துண்டு அவனுக்கு எப்படி கிடெச்சதுன்னு பெரீய கதை சொல்லுவான்.
அன்னைக்கு சீக்கிரமே வந்துட்டம். திருநீலக்குடி, ஆடுதுறை வழியா மாயவரம் போர அரசுப் பேரூந்து வரவே. அதில் ஏறி வந்தாச்சு. கந்தசாமி மட்டும் உக்காந்திண்டு டீக் குடிக்கரான். ராமசாமியக் காணமே! வந்தான்னா பொழுது போகும்? ரெண்டுபேரும் உக்காந்து பேசிட்டேயிருபதப் பாத்தேள்னா வீட்டில் குடும்பம் காட்சின்னு ஒண்ணும் இல்லையோ இவா ஆத்துக்குப் போலைனா யாரும் தேடிண்டு வரமாட்டாளோன்னு படும்.
விசாலம் கேட்டா: “ராமசுப்பன். ஏன் இவா இப்படி வெட்டியா பொழுதப் போக்கரா?” உடனே மஹாதேவன் “ஒரு தடவை வெட்டியா உக்காந்திருந்தா அதன் அருமை புரிஞ்சி பிடிச்சுப் போயிடும், அப்பரம் விடத் தோணாது”. “நீங்களும் இப்படித்தான் இருந்தேளா?” “ஆமாம். ஸ்டேட் கவர்ன்மென்ட். வேலைக்கு போரதே ரெஸ்ட் எடுத்துக்கத்தான். எத்தனைக் கத்தனை வெட்டியா இருக்கமோ அத்தனக் கத்தனை நல்லது. நாம ஏக்டிவ்வா இருப்பம்னு காட்டிக்க எதையாவது ஃபைல படிச்சு நகத்தினா எல்லாரும் திட்டுவா. குறிப்பா என் பாஸ்! ஃபைல அவன் ரூமுக்கு அனுப்பிச்சாலே வெய்வன். அரசாங்க அலுவலகமும் டீக்கடை மாதிரித்தான். டயத்துக்கு வந்துடும். அதைக் குடிச்சுட்டு இப்படியும் அப்படியுமா சீட்டத் தேய்ச்சா லன்ச் டயம் வரும். எங்காபீஸ் திருவல்லிக்கேணீலே. கொண்டு வந்தத சாப்டூட்டு காலார வெளீலே போய்டு மூணரைக்கு வந்தா 4க்கு ஷார்ட் லீவ் கேட்டுட்டு ஆத்துக்கு வந்துடலாம்”.
விசாலம் ஒரு மாதிரியா பாத்தா. மஹாதேவன் சொன்னதுக்கு என்னை அந்த லுக் விடணுமா? அவள் “நீங்க என்ன செஞ்சேள்னு என்னக் கேக்கரத்துக்கு மின்னாடி ராமசாமி வந்துட்டான்.
“என்ன ஆச்சு இன்னைக்கு?” “அந்த ட்ரம்பு இனிமேல் H1B தர மாட்டாகளாம்”. “ஏன்?” “தினம் ஒண்ணு சொல்லீட்டு. நம்முர் அரசியல்வாதி கணக்கா ந்யூஜில் இருந்திட்டே இருக்கணும்னி.” “நம்மூர் யாரு? கனிமொளியையா சொல்லுதே!” “அதெயெல்லாம் எதுக்கு கொண்டார? நாம இன்டெர்னேஷணல் லெவலுக்கு பேசுவம். யோசிச்சு டாபிக்கை எடு”. “இந்த அராசாங்கம் தர மான்னியமெல்லாம் டெயரெக்ட்டா பேங்க் அக்கவுன்டில் வந்திடுதே அதப் பத்தி என்ன சொல்லுதே?” “நல்லாத்தே இருக்கு. இடையில யாரும் கொள்ளயடிச்சிட முடியாதில்ல.” “அடுத்த எலெக்ஷனில் யார் ஜெயிப்பாகன்னு நினைக்கர?” “எப்ப எலெக்ஷன் வருதாம்?” “தெரியலை”. “வரட்டும் சொல்லுதேன். லேட்டஸ்ட் நிலவரத்தைப் பாத்திட்டு சொல்லோணும். எலக்ஷன் அறிவிச்சு, வோட்டிங்கு ரெண்டுநா மின்னாடி நடப்பது ரிசல்டை மாத்திப்பிடும்”.
இப்படிப் பேசியே 15 நிமிஷம் ஆச்சு. ராமசாமி ரெண்டு டீ ஆர்டர் செய்யரான். சின்னதா 4 பேர், கூட்டம் கூடிச்சு. ரெண்டாவது டீ கந்தனுக்கு. அதுக்கு ராமசாமி காசு கொடுப்பான். சிலசமயம் கந்தன் ஆர்டெர் செஞ்சு அதையும் கணக்கில் போட்டுக்கன்னுவான். அப்படிச் சொல்லப்ப தயாளன் முறைப்பன். ஏற்கனவே ரூ335 பாக்கி. தர்மத்துக்கு போயாச்சுன்னு தெரியும்.
இவா பேச்சு அவா பாஷையில் “இங்கிட்டும் அங்கிட்டுமா” போயிண்டிருக்கும். கோவில், திருவிழா, ராசிபலன், என்வரன்மென்ட், சினிமா எல்லாம் கவர் செய்வா. விசாலத்துக்கு எல்லாத்துக்கும்ம் அவள் அபிப்ராயம் கேக்கலைன்னு வருத்தம். காக்கா எப்படி இந்த சம்பாஷணையில் கலந்துக்க? திரும்பிப் போனதும் மரக்கிளைலே உக்காந்துண்டு அவா பெசின எல்லா விஷயத்தையும் திருப்ப அசை பொட்டு ஒவ்வொண்ணுத்துக்கும் தன் அபிப்ராயத்தைச் சொல்லுவள். “ட்ரம்ப் செய்யரது கரெக்ட், அவாநாட்டு மக்களுக்கே வேலையில்லைன்னா மத்தவாள ஏன் உள்ளே விடணும்?” இல்லை “எட்டில் குரு இருந்திண்டு, சந்திரன் வீட்டை பாக்கப் பிடாதுன்னு ராமசாமி சொல்ரான். அது தப்பு, பாத்தாத்தான் நல்லது நடக்கும், அப்படிப்பட்ட கால கட்டத்துலே பூமி நல்ல விளைச்சலைத் தரும்”. மஹாதேவன் “இதை அவாகிட்டேயே சொல்லு, இங்க வந்து அங்கே கேட்டதையே பேசிண்டிருந்தா காது ஜவ்வு கிழிஞ்சு போயிடும் போல் இருக்கு” கிண்டல் செய்வர்.
2 வாரம் இப்படியே கழிஞ்சது. ஒருநா அவா ரெண்டு பேரும் மூஞ்சியத் தொங்கப் போட்டிண்டே வந்தா. அன்னித்து பேப்பர தங்களுக்குள் பிரிச்சிட்டு படிக்க ஆரம்பிச்சாச்சு. அப்படீன்னா இன்னைக்கு லேடஸ்ட் தகவல் தெரிஞ்சிண்டு அப்பரமா அலசுவாளோ? அப்படித்தான் இருக்கணும். சித்தே கழிச்சு சொல்லி வச்சாப் போல் ரெண்டு பேரும் பேப்பரை கிழே வச்சிட்டு டீயும் ஆளுக்கு ஒரு வடையும் ஆர்டெர் பண்ரா. தயாளன் நேத்து மீந்த வடைய திரும்ப கொதிக்கர எண்ணைலெ சூடாக்கி தாம்பாளத்தில் முன்னாடி வச்சி இன்னைக்கு பண்ணினதை பின்னாடி. இவா கேட்டதும் யார் காசு கொடுப்பீங்கன்னு கூட கேக்காம வலைக் குடைய தூக்கி பழசுலேந்து ரெண்டெத்து பேப்பரில் மடிச்சு நீட்டரான். அவனே “என்ன விசனமா இருக்கீக? எதுநாச்சியும் மேலுக்கு முடியலையா?”
“இல்லை தயாளா. சொந்தத்தில் சாவு. நேத்து போயிருந்தம்”. ராமசாமி. “மரணத்து கிட்ட யாராலும் தப்பிக்க முடியாது.” துத்ஸு கொட்டிட்டே கந்தனும் பெச ஆரம்பிக்கரான். அவன் வூட்டில் நடந்த சாவெல்லாம் பத்தி சொல்லீட்டு “நமெக்கு எப்பன்னு எளுதியிருக்கோ அப்ப சுளுவா போயிடணும். உப்பிலியப்பந்தான் துணை”. தயாளு கேக்கராரு, “செத்தப்பரம் எங்கே போவம்?” ராமசாமி கைய உசக்க தூக்கி காமிச்சான். நாங்க உக்காந்திண்டிருந்த இடத்தை காமிக்கரானோ? தலைய தூக்கி பாத்த கந்தசாமி “காக்காவா மாறிப் போவமா?” தயாளு அதைப் பிடிச்சிகிட்டு “ஆமாம். அதனாலதான் திவசம் செய்யரேன்னு காக்காய கூப்பிட்டு சாதம் வைக்கராங்க”.
“ஏன் காக்கா? மயிலா ஏன் கூடாது? குருவி, யானை?” “யானைன்னா உங்க கொள்ளுத் தாத்தான்னு சொல்லீட்டு வூட்டு வாசலில் வந்து நின்னா அது வவித்த உன்னால் நிறப்ப முடியுமா?” கேட்டிண்டிருந்த விசாலாக்ஷி “சரியான பதில்!” என்னப் பாத்து சொல்றா. “அப்ப குருவி தேவலையா? ரெம்ப கம்மியா சாப்பிடும்”. மஹாதேவனுக்கு விசாலத்தை நக்கல் செஞ்சேயாணம்.
ராமசாமி ஏதோ சொல்ல ஆரம்பிக்க விசாலம் மஹாதேவனை “கொயட்!” அதட்டரா. தொண்டய கனைச்சிண்டு சொல்ரான். “நேத்து கோவில்ல ஒரு சாமியார் வந்தாரு. கேட்டேன். பொதுவா பறவை, மிருகங்களுக்கு சோறு வச்சா அதை அவுங்க ஆசையா சாப்பிட்டா நம்பள விட்டுப் போயிட்டவங்க சந்தோஷமா இருக்காங்கன்னு அர்த்தமாம். அப்படி சோத்த சாப்டிச்சுன்னா அவுங்க சந்தொஷமா எங்கேயோ வாள்ந்திட்டு இருக்காங்கன்னு அறிகுறியாம்”. “வச்சதை எதுவும் டச் செய்யலைனா?” “அவிங்களுக்கு நம்பமேலே கோவம்.” “காக்கா ஏன்?” “அதுக்குத்தான் கா-கான்னு கூப்பிடுதம். காக்காக்கு மட்டும்தே கூவர சத்தமும், அத்தொட பேரும் ஒண்ணு. குருவி, குருவி, யானை யானைன்னுக் கூப்பிட முடியாது இல்லையா?”
“அட”ன்னு பட்டது. “ஓ! இப்ப எல்லாம் புரியுது.” தாயாளனும் ஊடே. “அது மட்டுமில்லை ராமசாமி. செத்துப் போனவங்கள்லாம் ஒரு இடத்துக்கு போயிடுவாங்க. பித்ருலோகம். நாம இப்ப இருக்கும் இடத்துக்கும் பித்ரு லோகத்துக்கும் போஸ்ட்மேன் கணக்கா போகக் கூடியது காக்கா மட்டும். அதான் அது மூலமா நமக்கு அவிங்ககிட்டேந்து செய்தியும், நாம போடும் சோறும் அவிங்களுக்கும் போய்ச் சேரும்”. “யமதர்ம ராஜாவின் தூதுவங்கதான் இந்த காக்காய்ங்க”. “அட இல்ல. சனிபகவானோட வாகனம்”. “ரெண்டும்தான். ஊரில் ஒரே ஒரு காக்காதான் இருக்கா என்ன. அது வேற காக்கா இது வேற”.
“அப்ப கூப்டதும் வர காக்கா நம்ப மூதாதயரா இல்லை அவிங்க சார்பா சாப்ட வந்ததா?” கந்தசாமிக்கு தெரிஞ்சே ஆணம். “அவிங்க சார்பா வந்ததாத்தான் இருக்கணும். இல்லைன்னா நல்ல சிவப்பா அளகா இருக்கும் பொம்பிள்ளைங்க செத்தப்பரம் கருப்பா இப்படி காக்காவா ஆவ சம்மதிப்பாங்களா?” “நல்லாவே பாயின்ட்ல பிடிக்கரான்.” இங்கே கூரை மேலே மஹாதேவன் விசாலத்தைப் பாத்துச் சொல்ல அவளுக்கு வெக்கம், வருத்தம் கோபம் ஒட்டுக்க வந்தத பாக்கரேன். எங்க மூணு பேருக்கும் செத்தப்பரம் என்ன நடந்ததுன்னு முழுக் கதை தெரியும். இவாளுக்கு நாம சொல்ல முடியாது. பெரும் ரகஸியமாச்சே! நம்ப பாஷை அவாளுக்குப் புரியாது, ஆவா அவா பெசரது எங்களுக்கு ஸ்பஷ்டமா.
இப்படியே நாட்கள் நல்லாவே போச்சு.
ஒருநா ராமசாமி செத்துட்டான்னு செய்தி.எல்லாரையும் ஆட்டிப் புடிச்சு. “நேத்து வந்தப்ப நல்லாத்தானே இருந்தாக. யாருக்கு எப்பன்னு உப்பிலியப்பனுக்கு மட்டுமே தெரியும்” கந்தசாமி அழுதான். எங்களாலும் இத தாங்கிக்க முடியலை. கந்தசாமி கூடவே தயாளனும், கடைக்கு வரவாளும் துக்கத்துக்கு போய்ட்டு வந்தா. டீக்கடையில் பேச்சு குறஞ்சு போய் மின்னே இருந்த சுவாரஸ்யம் கிட்டலை. 2 வாரமாச்சு இருந்தாலும் நாங்க 3 காக்காவும் டீக்கடைக்கு வந்திண்டேதான் இருந்தம்.
ஒருநா நாங்க டீக்கடைக்கு வரப்ப எங்களுக்கு மின்னாடியே ஒரு காக்கா வந்து உக்காந்திருக்கு. “அட, இதப் பாருடா!” விசாலாக்ஷி ஆச்சர்யப்பட, 8 மாசமா எங்களோடதுன்னு பட்டா பண்ணிட்ட இடத்தில் இன்னொரு காக்கா. நாங்க போய் உக்காந்ததும் தெரிஞ்சவா போல் சிரிச்சது புதுக் காக்கா. விசாலம் கேக்கரா “நீங்க யாரு, உங்க பேரென்ன?” “ராமசாமி”. “கீழே வந்து பேசிண்டிருப்பேளே அவரா?” “ஆமாம். நண்பன் கந்தசாமிய பாத்திட்டே இருக்க ஆசை”.
அப்பத்தான் எங்கேந்தோ பறந்து வந்த கல் ஒண்ணு, நல்ல கவுட்டீ செஞ்சு அதில் வச்சி வீசியிருக்கணும் இல்லைன்னா அத்தனை ஸ்பீடா ஸ்ட்ரெயிட்டா புல்லெட் மாதிரி வராது, விசாலாக்ஷிய கழுத்தில் “சடார்”ணு பதம் பாக்க, சம்மட்டியால் அடிசாப்போல் அப்படியே தொப்புன்னு டீக்கடை கூரையிலேந்து பின்பக்கம் விளுந்து உயிர விட்டா.
ராமசாமி உடனே கேட்டான், “நாமெல்லாம் செத்துப் போனா யாரா வருவம்?”
No comments:
Post a Comment