Friday, August 14, 2020

திருப்பவள வண்ணம் (காஞ்சி)

🙏 நமஸ்காரம்    

55.  திருப்பவள வண்ணம் (காஞ்சி)

மூலவர் - பவள வண்ணர் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்
தாயார் - பவள வல்லி தனிக்கோவில் நாச்சியார்
உற்சவர் - ஸ்ரீநிவாசர்
விமானம் - ப்ரவாள விமானம்
தீர்த்தம் - சக்ர தீர்த்தம்
நாமாவளி - ஸ்ரீ பவளவல்லீ ஸமேத ஸ்ரீ பவளவண்ண ஸ்வாமிநே நமஹ

வழித்தடம்:

இந்தப் பவளவண்ணர் கோவில் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள காலாண்டார் தெருவில் உள்ளது. காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 பர்லாங் தொலைவு. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது. நடந்து சென்றே திருக்கோவிலை அடையலாம்

பாசுரம்:

வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய், பேராய்
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பணி வரையினுச் சியாய் பவள வண்ணா
எங்குற்றா யெம்பெருமான் உன்னை நாடி யேழையே னிங்ஙணமே யுழிதருகேனே
- திருநெடுந்தாண்டகம் 9 (2060)

திருமங்கையாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.

பாசுரம் பதவுரை:

வங்கத்தால் - கப்பல்களினால்
மா மணி - சிறந்த ரத்னங்களை
வந்து - கொண்டு வந்து
உந்து - தள்ளுமிடமான
முந்நீர் - கடற்கரையிலுள்ள
மல்லையாய் - திருக்கடன் மல்லையில் வாழ்பவனே!
மதிள் கச்சி ஊராய் - மதிள்களையுடைய திருக்கச்சிப்பதியில் (திருவெஃகாவில்) உறைபவனே!
பேராய் - திருப்பேர்நதராளனே!
கொங்குஆர் - தேன்நிறைந்ததும்
வளம் - செவ்விபெற்றதுமான
கொன்றை அலங்கல் - கொன்றை மாலையை
மார்வன் - மார்விலே யுடையனும்
குலம் வரையின் மடப்பாவை இடப்பால் கொண்டான் - பர்வதராஜபுத்ரியான பார்வதியை இடது பக்கமாகக் கொண்டவனுமான சிவபிரானை
பங்கத்தாய் - (வலது) பக்கத்திலுடையவனே!
பால் கடலாய் - திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருள்பவனே!
பாரின் மேலாய் - ராமக்ருஷ்ணாதிருபேண அவதரித்து) பூமியில் ஸஞ்சரித்தவனே!
பனி வரையின் உச்சியாய் - குளிர்ச்சியே வடிவான திருமலையினுச்சியில் நிற்பவனே
எங்கு உற்றாய் - எங்கிருக்கிறாய்?
பவளவண்ணா - திருப்பவளவண்ணனே!
எம்பெருமான் - எம்பிரானே!
ஏழையேன் - மிகவும் சபலனாகிய அடியேன்
     உன்னை நாடி உன்னைத் தேடிக்கொண்டு
இங்ஙனமே - இவ்வண்ணமாகவே
உழிதருகேன் - அலைச்சல்படாநின்றேன்.
பாசுரம் விளக்க உரை:

எம்பெருமானே! நீ திருப்பதிகளில் கோயில் கொண்டிருக்குமழகையும் அஹங்காரிகளுக்கும் திருமேனியிலே இடங்கொடுத்திருக்கும் சீலத்தையும் வாய்வெருவிக் கொண்டு திரிவேன் நான் என்கிறார்.

(வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிட்கச்சியூராய்) பரவாஸுதேவனாகிய ஒரு சிறந்த விலையுயர்ந்த ரத்னத்தை அவனது வாத்ஸல்யமென்கிற ஒரு கப்பலானது (த்வீபாந்தரத்தில் நின்றும் த்வீபாந்தரத்திற்குச் சரக்குகளைக் கொண்டு தள்ளுவது போல) திருக்கடல் மல்லை யென்கிற ஒரு தீவிலே கொணர்ந்து தள்ளிற்றாம்; “கானத்தின் கடல் மல்லை“ என்றபடி காட்டுநிலமாகிய அவ்விடத்திலே அந்த ரத்னத்தைப் பேணுவார் இல்லாமையாலும் ரத்னம் விலைபோவது மஹா நகரங்களிலாகையாலும் அந்தக்கப்பலானது அந்த ரத்னத்தை அங்கிருந்து கொணர்ந்து காஞ்சீபுரத்திலலே திருவெஃகாத்துறையிலே தள்ளிற் றாம்- என்றிப்படி சமத்காரமாகச் சொல்லும் விசேஷார்த்தம் உணரத்தக்கது. ஆழ்வார் தாமும் இவ்வர்த்தத்தைத் திருவுள்ளம்பற்றியே பெரியதிருமொழியில் திருக்கடல்மல்லைப் பதிகத்திலும் ”கச்சிக்கிடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்” என்றருளிச் செய்தது.

புண்டரீகர் என்கிற ஒரு பரம பக்தர், கடலின் இக்கரையிலே ஒரு பெரியதோட்டம் ஏற்படுத்தி அதில் சிறந்த புஷ்பங்களையுண்டாக்கி அவற்றைத் தொடுத்தெடுத்துக் கொண்டு போய் எம்பெருமானுக்கு ஸமர்க்கிக்கவேணுமென்று பாரித்தார்; கடலைக்கடந்து செல்ல வேண்டியிருந்தமையால் இக்கடலைக் கையாலிறைத்துவிட்டு வெறுந்தரையாக்கி நடந்தே செல்லுவோமென்று துணிந்து கடலை இறைக்கத் தொடங்கவே, எம்பெருமான் அவருடைய ஆதராதிசயத்தைக் கண்டு வியந்து உவந்து, தானே கடற்கரையிலே ஓடி வந்து அவரது தோப்பிலே தலைக்கிடை கிடந்து அவருடைய வழிபாடுகளை ஸ்வீகரித்தருளினன் என்பது திருக்கடல்மல்லைத் தலசாயிப் பெருமாளைப் பற்றின புராண வரலாறு.

பேராய்!=பேரில் உள்ளவன் பேரான்; பேராய் என்பது விளி; திருப்பேர் நகரிலுள்ளவனே! என்றபடி.

(கொங்கத்தார் இத்யாதி) கொன்றை மாலையை யணிந்த மார்வையுடையவனும் பார்வதியைத் தனக்கு மனைவியாகக் கொண்டவனுமான ருத்ரனைத் தனது திருமேனியின் ஒரு புறத்திலே இடங்கொடுத்து இருத்தியிருக்குமவனே! என்றபடி.

“கொங்கத்தார்“ என்ற பாடத்தில் ‘கொங்கு அத்து ஆர்‘ என்று பிரித்து ‘அத்து‘ என்பதைச் சாரியையாகக் கொள்ளவேணும். ‘கொங்குத்தார்‘ என்ற பாடத்தில், கொங்கு- தேனையும், தார்-பூக்களையும், வளம்-அழகையுமுடைத்தான, கொன்றையலங்கல்- என்றுரைத்துக்கொள்க. பங்கத்தாய்=‘பங்கு‘ என்று பார்ச்வத்திற்குப் பெயர்; திருமேனியின் கூறு. பங்கில் உடையவன்-பங்கத்தான்; அதன் விளி்.

பாற்கடலாய்=அஹங்காரியான ருத்ரனுக்குத் திருமேனியில் இடங்கொடுத்தவளவேயோ? பிரமன் முதலானோர்க்கு ஓர் ஆபத்து வந்தபோது ரக்ஷகரான நாம் நெடுந்தூரத்திலிருக்க வொண்ணாதென்று பரமபதத்தில் நின்றும் திருப்பாற்கடலிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறவனே!.

பாரின்மேலாய்=அஸுரர்களாலும் ராக்ஷஸர்களாலும் குடியிருப்பிழந்து ஸகலதேவதைகளும் வந்து சரணம் புக, ராமக்ருஷ்ணாதி ரூபத்தாலே தன்னை அழியமாறிவந்தவதரித்து இப்பூமண்டலத்தின்கண் உலாவினவனே! என்கை.

பனிவரையினுச்சியாய்!=ஸம்ஸாரதாபத்தை ஆற்றும்படியான குளிர்ச்சி பொருந்திய திருவேங்கட மலையினுச்சியிலே வாழ்பவனே!.

பவளவண்ணா!= பவளம் போல் விரும்பத்தகுந்த்தான வடிவுபடைத்தவனே! என்பது மாத்திரம் இதற்குப் பொருளன்று; கச்சிமாநகரில் ‘திருப்பவள வண்ணம்‘ என்னுந் திருப்பதியிலுறைபவனே! என்கிறைவரையில் பொருளாகக் கொள்ளத்தக்கது. இது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் விளங்கக் கிடக்கின்ற தில்லையேயென்று சிலர் நினைக்கக்கூடுமேலும் இங்ஙனே பொருள்கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்குவோம்;- பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளிய நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் (86) “கண்டறிந்துங் கேட்டறிந்துந் தொட்டறிந்துங் காதலால், உண்டறிந்து மோந்தறிந்து முய்யனே-பண்டைத்தவளவண்ணா கார்வண்ணா சாமவண்ணா! கச்சிப், பவளவண்ணா! நின்பொற்பதம்‘ என்ற செய்யுளினால் கச்சிமாநகரிலுள்ள திருப்பதிகளுள் திருப்பவள வண்ணம் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளது; பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பட்டர்திருபடிகளிற் பணிந்துய்ந்தவரும் ஆபத்தமருமான அத்திவ்யகவியின் திருவுள்ளத்தைத் தழுவிச்செல்ல வேண்டுவத நமக்கு இன்றியமையாததாம். திருமங்கையாழ்வாருடைய இப்பாசுரத்திலுள்ள ‘பவளவண்ணா!‘ என்கிற விளியைக் கொண்டே ஐயங்கார் அச்செய்யுள் இயற்றியருளின ரென்பது மறுக்கத்தக்கது.

(எங்குற்றாய் இத்யாதி.) அடியார்களுக்காகவே திருப்பதிகளில் ஸந்நிதி பண்ணியிருந்தும் பாவியேனுக்குத் தோற்றா தொழிவது என்னோ; “வருந்திநான் வாசகமாலை கொண்டு, உன்னையே யிருந்திரந்து எத்தனைகாலம் புலம்புவனே” என்றாற்போலே உன்னைக் கூவிக்கூவிக் கதறுவதே எனக்குப் பணியாயிற்றே!, என்படியைக் கண்டாயோ; இன்னமும் இரங்கியருளத் திருவுள்ளமில்லையோ? என்றாராயிற்று.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்

ஸ்தல வரலாறு:

காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு சிறப்பாய் பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தேவி தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள். நொடிப்பொழுதில் அந்த அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்து ரத்தம் தோய நின்றார் பெருமாள். இவ்வாறு ரத்தம் தோய ப்ரவாளேசராக, ப்ரவாளேச வண்ணராக நின்றதால் ப்ரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார்.

சிறப்பு:

திருமங்கையாழ்வார் இந்த ஸ்தலத்திற்கு வந்தார். எம்பெருமானின் நிறம் சற்றே வித்தியாசமாக இருந்தது. ஈதென்ன விந்தை எட்டுக் கைகளுடன் இருந்தவனை யாரிவர் என்று எண்ணி வியந்தோம், அட்ட புயகரத்தோர் என்றார். ஆனால் இங்கு நிற்பவனை யார் என்று கேட்பது. இவனது நிறமல்லவா வித்தியாசமாக தெரிகிறது. ஏற்கனவே நாம் இவன் என்ன வண்ணத்தினன் என்று மயங்கி நின்றோம். இப்போது இந்த வண்ணம் வேறு புது மயக்கம் தருகின்றதே என்று சிந்தனையில் ஆழ்ந்தார். திருமங்கைக்கு அர்ச்சாவதாரத்திலும் அவர் தம் வண்ணங்களிலும்தான் எத்துனை ஈடுபாடு, எவ்வளவு ஆழ்ந்த மயக்கம்.  இப்பெருமான் கொண்ட வண்ணத்தை யோசித்துப் பார்க்கிறார். கடல் மல்லையானின் நிறமாக இருக்குமோ, காஞ்சியூரானின் வண்ணமாக இருக்குமோ, திருப்பேர் நகரானின் நிறமோ, பாற்கடலோன் வண்ணந்தான் இப்படி தோன்றுகிறதோ ஒருவேளை பனிமலையின் உச்சியில் உள்ள திருப்பிரிதியான்  நிறமோ என்றெல்லாம் எண்ணி இவைகள் எல்லாம் அல்லவே என்று யோசித்து நிற்கிறார். ஒருவேளை கலியுகத்தில் எம்பெருமான் கொண்ட வண்ணமோ கலியுகத்தில் எம்பெருமான் வண்ணம் கருநீலமல்லவா இது அதுவுமன்றே என்று எண்ணுகிறார். எம்பெருமானுக்கு நான்கு யுகங்கட்கும் நான்கு வண்ணங்கள் சொல்லப்பட்டுள்ளதால் திருமங்கைக்கு இந்த வண்ண மயக்கு உண்டாகிவிட்டது. எம்பெருமான்

திரேதா யுகத்தில் ஸ்வேத வர்ணனாக வெண்ணிறம்
கிரேதா யுகத்தில் ப்ரவேளச வர்ணனாக பவள நிறம்
துவாபார யுகத்தில் மரகத வர்ணனாக பச்சை (மரகதம்) நிறம்
கலியுகத்தில் ச்யாமள வர்ணனாக கருநீலம் -(மேகவர்ணம்)

இந்த நான்கு வண்ணங்களுள் ஒன்றாகத்தானே இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார். இங்கு என்ன நடந்தது. எவ்விதம் இவ்வண்ணம் வந்துற்றது என்று எண்ணிப்பார்க்கும் போது பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி கொடிய அரக்கர் கூட்டத்தை யனுப்பினாளே, அந்த அரக்கர்களை எல்லாம் கொன்று குவித்து ரத்தக்களரியாக இவ்விடத்து நின்றாரே அந்த செம்மை சேர்ந்த பவள வண்ணமல்லவா இதில் ஊடாடுகிறது என்று எண்ணி பவளவண்ணர் என்று தலைக்கட்டி நின்றார். கடல்மல்லையிலும், கச்சியூரிலும், திருப்பேர் நகரிலும் திருஇடவெந்தையிலும் பாற்கடலிலும், திருப்பதியிலும் உள்ள வண்ணங்களிலிருந்து வேறுபட்ட பவளவண்ணர் என்று முடிவு கட்டி பவள வண்ணர் என்று மங்களாசாசித்தார். 

இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே பச்சை வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் அமைந்துள்ளது. காலாண்டார் கோவிலில் பவள வண்ணரும் அதற்கெதிரில் அமைந்துள்ள பெரிய கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர் கோவிலும் அமைந்துள்ளது. இவ்விரண்டு பெருமாள்களையும் கூர்ந்து நோக்கினால் வண்ண வேறுபாடுகளை உணரலாம்.

ஒருமுறை மகாவிஷ்ணு, மகாலட்சுமியுடன் இருக்கும் போது பிருகு மகிரிஷி விஷ்ணுவைக் காண வைகுண்டத்திற்குச் சென்றார். பிருகு வந்ததும் மகாவிஷ்ணு பிருகுவைக் கவனித்தும், கவனிக்காதது போல மகாலட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்தார். தன்னை விஷ்ணு அவமதிப்பதாகக் கூறி மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். விஷ்ணுவோ தன்னை மிதித்த பாதம் புண்பட்டதோ என அவரது காலை வருடிக் கொடுத்தார். தவறை உணர்ந்த பிருகு, பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று விமோசனம் தேடிச் சென்றார். இதனிடையே காஞ்சியில் உள்ள சத்யசேத்ரத்திற்குச் சென்று வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்றார் நாரதர். அதன்படி பிருகு மகிரிஷி இத்தலத்திற்கு வந்து சக்ர தீர்த்தத்தில் நீராடி தவம் செய்து விஷ்ணுவை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த விஷ்ணு விமோசனம் அளித்தார். எனவே, பிருகு முனிவர் கருவறையில் விஷ்ணுவை வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.

இங்குள்ள பிரவாளவல்லித் தாயார் சன்னிதியின் முன்மண்டப மேற்கூரையில் எட்டு திசை அதிபர்களின் சிற்பங்கள் உள்ளன. இவர்களை வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். வீடு, மனையில் உள்ள தோசங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

கோவிலுக்கு முன்பகுதியில் சக்கரதீர்த்தம் உள்ளது. வட்ட வடிவில் சக்கரம் போலவே உள்ள இந்த தீர்த்தத்தின் மத்தியில் தான் சுவாமி சக்கராயுதம் கொண்டு அசுரர்களை வதம் செய்தார் என்கிறார்கள்.

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/2pmL53Wz5rI

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

https://www.facebook.com/102047988262304/posts/123003089500127/?sfnsn=wiwspmo&extid=u9zuq3XndOv3kasa

No comments:

Post a Comment