திங்கள் முதல் வெள்ளி வரை (சிறுகதைகள் சீ2 – 34)
#ganeshamarkalam
நான் செய்யர வேலை விசித்திரமானது. மத்தியானம் 1 மணிக்கு ஆரம்பிச்சா ராத்திரி 2 அல்லது விடிகாலை 4 வரைக்கும் போயிண்டிருக்கும்னா பாத்துக்கோங்கோ. 3 சீரியல் பண்ரேன். ஒண்ணுக்கு நானே டைரக்டர். மத்தது ரெண்டுக்கும் அசிஸ்டென்ட் டைரக்டர். அது தவிர நிறைய புது ஸ்க்ரிப்ட் எழுதிண்டு. இண்டஸ்ட்ரீலே நல்ல பேர்.
திரைக்கதை, பாட்டு எழுதலாம்னுதான் வந்தேன். நினெச்சது எங்கே நடக்கறது? எனக்கு மொழி நன்னா தெரியும், உச்சரிப்பில் என்னை அடிச்சுக்கமுடியாது. செய்தி வாசிப்பாளனா அல்லது உரையாடல் நிகழ்ச்சி தொகுத்துப் பண்ணல்லாம்னுதான் வந்தேன். ஆனால் சேனல் உரிமையாளருக்கு வேண்டப்பட்டவான்னு பெண்களைத்தான் அந்த வேலைக்கு வைக்கரா. நன்னா சீவி சிங்காரிச்சுண்டு மானிடரில் வரதை அப்படியே தளுக்கி மினுக்கி படிச்சுட்டு சுளையா வாங்கிண்டு பொயிடரா. திறமைக்கு மதிப்பில்லை. அதிலேயும் பிராம்ணன், முட்டி மோதி வரவேண்டியிருக்கு.
சுயமா திறமையைக் காட்டலாம்னு சீரியலுக்கு வந்தாச்சு. என் வேலை ஸ்க்ரிப்ட் எழுதி படமா எடுத்து கொடுக்கறது. வித்து காசு பண்ண வேண்டியது ப்ரொட்யூசர் வேலை. இருந்தாலும் சேனல்களில் பலரைத் தெரியும். அவா மூலமா என்னுது வித்துடும். ப்ரொட்யுசர் கிடைக்காமப் போனது இல்லை.
இப்போ ரெண்டாவது மெகா சீரியல். முதல்லே “தூங்காத கண்கள்” 600 எபிசோட் ஓடித்து. இப்போ “ஜாதிமல்லி” 500 தாண்டி! இழுத்துண்டே போனால் இன்னும் 500 ஓட்டலாம். நல்ல ரேடிங்க். அதைப் பத்தியெல்லாம் கவலைப் படறதில்லை. மனம் போன போக்கில் கதையை கொண்டு போவேன். ஆட்டோ ஓட்டத் தெரிஞ்சா சீரியல் பண்ணலாம். எப்படீன்னா கேக்கரேள்?
பாசஞ்சர் உக்காந்ததும், காலை உள்ளே இழுத்துண்டாளா இல்லையான்னு கவனிக்காம சர்ருன்னு கிளப்பிடணும். வளைஞ்சு வளைஞ்சு எங்கே காப்பிருக்குன்னு நுழைஞ்சுடணும். வேற வழியே இல்லைன்னா வேகத்தை குறைக்கணும், நிறுத்திக்கலாம். ரைட்லே போக சிக்னல் போட்டுட்டு லெஃப்டில் போகணும். சைடுலே வரவாளை முறைச்சுப்பாத்து வெட்டிடுவேன்னு பயமுறுத்தணும். யூடர்ன் எடுக்கரச்சே 3இல் ஏதாவது ரெண்டு சக்கரம் தரையில் பதிஞ்சா போதும். கூப்பிட்டா வரமாட்டேன்னு சொல்லணும். கிளம்பிட்டா எத்தனை சுத்திப்போக முடியுமோ அப்படி போணம். சீரியல் எடுக்கறதும் அப்படித்தான். கன்யாகுமரிலேந்து விசாகப்பட்டினத்துக்கு போர ஆட்டோ மாதிரி! அவ்ளோதான்.
இன்னைக்கு வெள்ளிக்கிழமை, இந்த வாரத்துக்கு கடைசீ ஷூட்.
எல்லோரும் இருக்கா, ஓர்படி காரக்டர் சுகன்யா மட்டும் காணலை. தன் மச்சினன் கல்யாணம் செஞ்சுண்டு வந்த புது மாட்டுப்பொண்ணுக்கு மலைமாதிரி துணி மூட்டையை கொடுத்து துவைக்கச்சொல்லணும். அவள் அழுதுண்டே துவைக்கறப்போ ஏழை அப்பா வருவார், “புகுந்த வீட்டில் நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்”னு சொல்லுவா, அவர் அழுதுண்டே கிளம்பிப் போவர். இதுதான் பிளான்.
முகத்தை குளோஸப்பில், அப்புரம் துணியை ஸ்லோமோஷனில் பீரோலேந்து ஒவ்வொண்ணா எடுத்து கொல்லைப்பக்கம் போடறது, அழுகை சீன், ஓர்படி ட்ரெஸ்ஸிங்க் டேபிள் முன்னாடி நகை மாட்டிக்கறது, பக்கெட்லே தண்ணி ரொம்பன்னு எடுத்தா 25 நிமிஷம் ஓடும். எடுக்க 3 மணி நேரம். ஏற்கனவே லேட். என்ன பண்ண? பக்கத்து ஸ்டூடியோவில் இதே கதையில் மாமியாரா நடிக்கற காதம்பரி வேர ஒரு சீரியலுக்காக வந்திருக்காளாம். அங்கே ஷாட் ரெடியாகலை. அவளை அழைச்சுண்டு வந்து துணிமூட்டையை மாட்டுப்பொண் மேலே எறியச்சொல்லி ஷூட் முடிச்சேன்.
புது மாட்டுப்பொண்ணை அழவைக்கணும். யார் செஞ்சா என்ன?
நினெச்சா அழுகை வராமாதிரி, சிரிச்ச முகமா, சிக்குன்னு லீட் ரோலுக்கு லாவண்யான்னு புதுமுகம் கிடெச்சா. இதுவரைக்கும் செஞ்ச 500இல் முதல் 65இல் இவள் ராஜேஷை கால்சென்டரில் டாவடிச்சு கல்யாணம் செஞ்சுக்கரா. கல்யாண சீன் 10 அப்புரம் ஹனிமூன் 25 ஓடித்து. ஏன்னா மாமியார் ஹனிமூன் நடக்கவே விடலை. மிச்ச 410இல் இவளை புக்காத்தில் வதைச்சு எடுக்கரா. கிட்டத்தட்ட 1 வருஷத்துக்கு மேல. நிஜ வாழ்க்கையில் மருமகள் கொடுமை வருஷக்கணக்கில் ஓடுமே? அப்படியே தத்ரூபமா.
இந்த ப்ரொஃபெஷனில் விதவிதமா யோசிக்கணும். மருமகளை நடத்த நமக்கு தெரியாதா என்னா? அதை குளோஸப்பில். மாமியார் மட்டும் கொடுமை செஞ்சா எல்லாராத்துலேயும் நடக்கறதுன்னு சுவாரஸ்யம் இருக்காது. வீட்டில் எல்லோரையும், தூரத்து சொந்தக்காராளையும் வரவழைச்சு படுத்தி எடுக்கணும். வீட்டு வாசலில் உக்காந்துண்டிருக்கற கூர்க்காகூட ஓங்கி அவளை அறையராமாதிரி வைக்கலாம். எல்லாம் என் இஷ்டம்தான். வீட்டு நாய் கூட இவளை பாத்தா குலைக்கரா மாதிரி. ஓர்படிக்கு பொறந்த 6 மாசக்குழந்தை மட்டும் இவளைபாத்து சிரிக்கும்.
எப்படி ஒரு ஆட்டோ எப்போ எங்கே எந்தப் பக்கமா திரும்பும்னு நமக்கு தெரியாதோ அதுமாதிரி ஒவ்வொரு எபிசோடையும் முடிக்கணும். நாளைக்கு கதையில் என்ன வரும்னு இப்போ காமிக்கரா. இருந்தாலும் சஸ்பென்ஸ் வேணும். அடுத்த வார எபிசோடில் காதம்பரி (மாமியார்) மாடிப்படீலே எண்ணையை கொட்டிட்டு, மாடீலே துணி உணத்தப்போன மருமகளை “சீக்கிரம் கீழே வா தலையை வலிக்கறது தைலம் தேச்சுவிடு”ன்னு சொல்லிட்டு படுத்துக்கரா. இவளும் “இதோ வரேன் அம்மா”ன்னு ஓடி வரா. அப்போ தொடரும் போடணும்.
பாக்கரவா என்ன நினெப்பா? அச்சச்சோ இந்த நல்ல மனசுக்காரி வேகமா வந்து வழுக்கி விழப்போராளோன்னு. வெள்ளிக்கிழமையா இருந்தா படபடப்பு ரெண்டு நாளைக்கு எகிரும். திங்கட்கிழமை வரைக்கும் வெயிட் செய்யணுமே!
இதை எல்லா சீரியல்லேயும் பாப்பேளே. அதுனாலே மாமியாரை எண்ணை ஊத்தச்சொல்லிட்டு ஓர்படியை தைலம் வச்ச அலமாரியில் நல்லபாம்பை வைக்கச் சொல்லலாமான்னு!
சில சமயம் திடுதுப்புன்னு தாலி கட்டர சீன், இல்லை ஆக்ஸிடென்ட் ஆகராமாதிரி காட்டணும். ஏன்னா ரொம்பவே வழவழான்னு இழுத்தா எடுக்கரவாளுக்கே அசூயை ஏற்படும். அடடா கதையில் திருப்பம்னு வேர விதமா படபடப்பு ஏற்படுத்தலாம். அடுத்த எபிசோடில் நடந்தது கனவுன்னு காட்டிடணும். வீல்னு கத்திண்டு லாவண்யா படுக்கையிலேந்து எழுந்துக்கரா. எல்லாரும் புரிஞ்சுப்பா. சீரியல் பாக்கரவா முட்டாளில்லையே! கதையை அவா போக்கில் விட்டு நம்ம போக்கில் திருப்பிடணும்
லாவண்யாவுக்கு - கார்த்திக் – இந்தாத்து ஆண்பிள்ளை மேலே “ஒரு இது”ன்னு ப்ரொட்யூசர் சொன்னா. ரெண்டும் மஹாபலிபுரத்தில் சுத்திட்டு இன்ஸ்டாக்ராமில் போட்டொ போட்டாளாம். கிசுகிசு போயிண்டிருக்கு. இவா நிஜத்துலேயும் கல்யாணம் செஞ்சுண்டா என் கதை கந்தல். இவளை தூக்கிட்டு “இனிமேல் இவருக்கு பதில் இவர்”னு கார்ட் பொடவேண்டியதுதான். போன சீரியலில் இப்படித்தான் நடந்தது. மேட்டரை சீக்ரட்டா வச்சு ஒரு 150 எபிசோட் நகத்தினேன். அப்புரம் மெயின் காரக்டர் செஞ்ச பொண் புள்ளையாண்டிருப்பது ஸ்க்ரீன்லேயே தெரிய ஆரம்பிக்கவே வேண்டாம்னு போகச் சொல்லியாச்சு. நம்மூரில் நடிக்கரவா நிஜமாவே ப்ரெக்னென்ட் ஆனா அதை திரையில் யாரும் பாக்க விரும்புவதில்லை. குஷன் வச்சு மேல புடவையை கட்டித்தான் காமிக்கணும். விரும்பிப்பாக்கரா.
நமக்கென்ன போச்சு? எதுக்கு காசோ அதை செஞ்சுட்டு போயிண்டே இருக்கணும்.
போன 4 வருஷமா இந்தத்துறையில் கொடிகட்டி பறக்க எத்தனை குடும்பக்கதை எழுதி எத்தனை பேரை பாடாய் படுத்தி எடுத்திருப்பேன்? திங்கள் முதல் வெள்ளி வரை 5 எபிசோடை ஸ்க்ரிப்ட் எழுதி ப்ரொட்யூசர் சரின்னதும் இந்த உலகத்தை படைச்ச பிரம்மா மாதிரி ஃபீல் கிடைக்கும். சமயத்துக்கு தகுந்தார்போல், யாராவது ஷூட்டுக்கு வரலை இல்லைன்னா வேர தடங்கல், அப்போ கதையின் போக்கை மாத்தி, வளைச்சு, நீட்டி, திடுக்கிடும்படி மாத்தி, இல்லை ஆள்மாராட்டம் செஞ்சு போகும்போது பிரம்மா என்ன, சிவா, விஷ்ணு ஃபீலிங்க்லாம் கிடைக்கும்.
கதையில் திருப்பம் வேணுமா? ரொம்பநாளைக்கு முன்னாடி வெளிநாட்டுக்கு போய் செட்டிலான ஓர்படிக்கு அத்தை பையனை வரவழைக்கலாம். 500 எபிசோடுக்கு அப்புரமும் கதைலே ட்விஸ்ட் வேணும்னா அப்படி செஞ்சாத்தான் உண்டு.
அவன் வந்து என்ன செய்வான்? அவன் சிங்கிள். அவனை ஓர்படியையே டாவடிக்க வைக்கலாம். மாமா பொண்ணுதானே! இல்லைன்னா இளகிய மனசா காட்டி, மாட்டுப்பொண் பக்கம் ஆதரவா பலம் சேர்க்கலாம். 50 எபிசோட் ஓடும். எங்கேந்தோ வந்தவன் தன் மனைவிமேல் கரிசனம் காட்டறதை சந்தேகக்கண்ணோட லாவன்யா ஹஸ்பெண்ட் பாக்கரான்னு வச்சு அவன் தூக்கத்தையும் பாக்கிரவா தூக்கத்தையும் கெடுக்கலாம்.
வந்தவன் நடுராத்திரி எழுந்து தண்ணிகுடிக்க சமையலரைக்கு போரச்சே அங்கேயே தரையில் படுத்து தூங்கர லாவண்யாவை பாத்து பாரிதாபப்படலாம், அப்போ பாத்து உச்சா போலாம்னு வந்த காதம்பரி இவாளை பாத்து கத்தி கூப்பாடு பொட்டு வீட்டையே ரெண்டு பண்ராமாதிரி வச்சா இன்னும் 50 போகுமே! இதெல்லாம் செய்யரத்துக்கு உனக்கு கூச்சமே வராதான்னு நீங்க கேக்கலாம். ட்ராஃபிக்குக்கு பயந்தா ஆட்டோ ஓட்ட முடியுமா? கூச்சம் வராம கதை எழுதினா ஒரு வாரத்தில் முடிஞ்சுடும். அது எப்படி மெகா சீரியல் ஆகும்?
“தூங்காத கண்கள்” முடிஞ்சதும் ஒரு விழா. அதை படம் பிடிச்சு ஞாயித்துக்கிழமை காட்டினா. ஏன் முடிச்சேன்னு எல்லாரும் என்னை திட்டினா. நான் எங்கே முடிச்சேன், ப்ரொட்யூசர்தான் முடிச்சுடுன்னு சொல்லிட்டார்னு உண்மையை போட்டு உடெச்சேன். உடனெ அதே கேள்வியை அவரைக்கேட்டா. சொன்னர். “கதாநாயகியை இதுக்கு புக் செஞ்சப்போ அவளுக்கு 22 வயசு. சீரியல் முடியரச்சே 30. மேக்கப் சிலவு கூடிண்டே போனதில் நஷ்டமாகிடுமோன்னு எதையாவது பண்ணி சந்தோஷமா முடின்னு சொல்லிட்டேன்”னர்.
கதை ஆரம்பிச்சு நகத்திண்டே போய் 3 பேரை கொன்னு, 4 கல்யாணம் 3 சீமந்தம், 2 மாப்பிள்ளை ஜெயிலில், ரெண்டு கோர்ட் கேஸ் நடந்திண்டிருக்கு, வில்லன் அரிவாளோட 10 பேரை அழைச்சிண்டு வாசலில் நிக்க, அதுலேயும் போன வாரம்தான் 3 புது காரக்டர் அறிமுகம் இப்படி போயிண்டிருக்கச்சே திடீர்னு சுபமா எப்படி முடிக்கறது? முடிச்சேனே! அதான் என் சாமர்த்தியம். அதே ப்ரொட்யூசருக்கு இப்போ “ஜாதிமல்லி” பண்ரேன்.
எப்படியோ துணி துவைச்சு உணத்திட்டு நெத்தி வியர்வையை தொடச்சுண்டு லாவண்யா வர அதை கொஞ்சநாழி முன்னாடி வந்த அவள் அப்பா பாத்துட்டு கைத்துண்டால் தன் கண்ணீரை துடைக்க, இவள் அவரைப்பாத்து வசனம் பெச, கட் சொல்லிட்டு எல்லாத்தையும் பாககப்புன்னுட்டு திங்கட்கிழமை பாத்துக்கலாம்னு கிளம்பரேன்.
எங்கேன்னு கேக்கப்பிடாது. ஆத்துக்குத்தான். திங்கள் முதல் வெள்ளிவரைன்னு பிரம்ம ஆட்டமா ஆடிட்டு சாயங்காலம் சேலத்துக்கு பஸ் பிடிச்சேன்னா எங்காத்துக்கு போலாம். ரெண்டுநாள் என் குடும்பத்தோட. ஞாயித்துக்கிழமை ராத்திரி பஸ் பிடிக்கணும்.
நுழயரச்சேயே “ராகவி, அம்மா எப்படி இருக்கான்”னு கேட்டுண்டே உள்ளே போரேன். அம்மா வாதம் வந்து படுத்த படுக்கையாகி 5 வருஷம் ஆச்சு. ஒருபக்கம் வேலை செய்யாது, இனிமேல் இப்படித்தான்னு டாக்டர் சொல்லிட்டார். உள்ளெந்து ராகவி “உங்கம்மாவை பாத்தது போதும், உங்க புள்ளையையும் வந்து பாருங்கோ திரும்பவும் சட்டையில் பண்ணிண்டுட்டான்”.
என் பையன் கோபாலனுக்கு 13 வயசு. இன்னும் 2 வயசு குழந்தை மாதிரி மூளை வளர்ச்சியில்லை. நிஜாரெல்லாம் ஈரம் பண்ணிண்டு. “வாடா செல்லம், அப்பா வந்திருக்கேன் பாரு”ன்னு பக்கத்தில் உக்காந்துண்டு மெல்ல அவன் நிஜாரை அவுக்கரேன்.
லாவண்யா அத்தனை நல்ல ஆர்டிஸ்ட். அவளை நான் நிறைய அழவச்சிருக்கேன். சில சமயம் அத்தை நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுப்பா செட்டில் இருக்கர எல்லொருக்கும், என்னையும் சேர்த்து அழுகை வரும். ஆனால் கோபாலனுக்கு இப்படீன்னு 8 வருஷத்துக்கு முன்னாடி தெரிய வந்து அப்புரம் அழ ஆரம்பிச்சு, இப்போ கண்ணில் நீர் வத்திடுத்து. என்னால் எதுவும் செய்ய முடியாம.
சீரியலில்தான் என் இஷ்டப்படி அதில் நடிக்கறவா வாழ்க்கையை நான் எழுதமுடியும். மாத்தமுடியும். சந்தொஷமா எண்ட் வைக்கலாம்.
என் வாழ்க்கைக்கு டைரக்டர் வேர. அவருக்கு கருணை பிறந்தாத்தான் உண்டு.
No comments:
Post a Comment