47. சொல்லாம விட்ட காதல் கதை
(சிறுகதை சீசன் – 3) #ganeshamarkalam
காதலை சொல்லாம விட்டாளா, இல்லை காதல் கதை எழுதி வச்சுட்டு போடாம விட்டுப் போச்சா? இப்போதைக்கு சொல்லப் போரதில்லை. மேலே பட்டீங்கோ!
இன்னும் ரெண்டுநாளில் சுமங்கலிப் பிரார்த்தனை. மங்கலி பொண்டுகள்னும் சொல்லுவாளே, அதேதான். அடுத்த மாசம் பொண் கல்யாணம். இதை பண்ணிடணும்னு ஆசைப்பட்டா. “அதுக்கென்ன பேஷா”ன்னேன். சாஸ்த்ரிகள் கிட்டே நல்ல தேதி டயம் குறிச்சிண்டு வந்து கொடுத்து, ஆத்துக்கு வேணும்கிர, மளிகை, காய்கறி, புதுத்துணி, பூஜை சாமான் ஏற்பாடு ஆயிண்டிருக்கு. திநகர் போனா சீப்பா வாங்கி அள்ளிண்டு வரலாம். காரை எடுத்துண்டு கிளம்பியாச்சு. கிளம்பரச்சே பவானி “சமையலுக்கு ஒத்தாசைக்கு பிராம்ணாவா ரெண்டு சுமங்கலிகள் கிடெப்பாளா பாருங்கோ”.
“அயோத்யா மண்டபத்தில் விசாரிங்கோ அத்திம்பேர்”னான் மச்சினன். அவனுக்கு இதெல்லாம் அத்துப்படி. விசாரிச்சதில் “பாலகிருஷ்ணன் ஸ்ட்ரீட் எக்ஸ்டென்ஷனில் சாம்பசிவம் சாஸ்த்ரிகள் ஏற்பாடு செஞ்சு தருவர்”னுட்டா. மனுஷரை சுத்தி கூட்டம். என் டர்ன் வர 30 நிமிஷம் ஆச்சு. டிஸ்ட்ரிக்ட் கலெக்டரை ஈஸியா பாத்துடலாம். விவரம் சொன்னேன். “எங்கே அனுப்பணும்?” “அடையார் காந்தி நகர்”. “அட்ரேஸ் தந்துட்டு போங்கோ. கமலான்னு ஒரு மாமி வருவா. உங்க நம்பரில் கூப்பிடச்சொல்ரேன்.
பேசிக்கோங்கோ.”
சென்னை சில்க்ஸில் ரவிக்கை துணி வாங்கிண்டு பில் போடரச்சே கூப்பிடரா. “மொதநா வரணும்னா வந்துடரேன், இல்லைன்னா கார்த்தாலே 6 மணிக்கு ஆத்தில் இருப்பேன். கூடவே கீதான்னு ஒரு அச்சிஸ்டென்ட் வருவா. என்ன சமையல், என்ன வேலைன்னு மாமியை சொல்லச் சொல்லுங்கோ.” வச்சுட்டா.
அடுத்த கால் வந்துடுத்து. மாமி அத்தனை பிஸி. “பவானி! கூப்பிட்டு பேசி புக் செஞ்சுடு, இல்லைன்னா ஓடிப்போயிடுவா!” சொல்லிட்டு வந்த வேலையை கவனிச்சேன். ஆத்துக்கு வரத்துக்குள் எப்போ வருவா, என்ன செய்வா, எங்காத்து பொண்கள் என்ன செய்யணும், சம்பளம் எல்லாம் செட்டில்ட். நான் பட்டுக்கலை. லேடீஸ் மேட்டர். பெண்டுகள் அன்னைக்கு நம்மை யாரும் சீண்டவும் மாட்டா. லேட்டா இலை போடுவா.
கமலம் + கீதா ஜோடி 530க்கு வந்தாச்சு. ஓலாவில் வந்தவா வாசலில் என்னை பாத்துட்டு, “மாமா! டேக்ஸி செட்டில் பண்ணிடுங்கோ”. காசை எண்ணி ட்ரைவருக்குத் தரச்சே சடேர்னு மண்டையில் அடிச்சாமாதிரி பட்டது. கீதாவை நான் மின்னாடி பாத்திருக்கேன். பரிச்சயமான முகம். மதுரை விசாலம்மா பொண் கீதாவா? அமாம்தான்! எப்படி கேக்கறது? அவளுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சிருக்குமா? பாத்து 30 வருஷம் ஆச்சே!
காரியம் மும்முரமா ஆரம்பிக்க “துணியெல்லாம் பீழிஞ்சு மாடீலே உணத்து!” பவானி என் பொண் சுதாகிட்டே “போம்மா வேற வேலையில்லை!” பாத்துண்டிருந்த கீதா “கல்யாணப் பொண்ணை வேலை வாங்க வேண்டாம், நான் உணத்திட்டு வரேன்.” பக்கெட்டை எடுத்துண்டு கிளம்பரா. “ஏன்னா! அந்த மாடிக்குப் போர கதவை தொறந்து விடுங்கோ!” இதான் சமையம்னு சாவியை எடுத்துண்டு படியேறிப் போக கீதா பின்னாடி. தொறந்து விட்டுட்டு நகந்து நிக்கரேன் “ஏண்டா சுந்தரேஸா என்னைத் தெரியலையா? மதுரையில் உங்காத்துக்கு எதுத்தாப்புலே விசாலம் மாமி பொண் கீதா!”
“நீ எப்படி இங்கே, சமையல் வேலை செஞ்சிண்டு? எங்காத்தில்!. எதிர்பாக்கலை. எத்தனை வருஷங்கள்? அம்மா அப்பாவெல்லாம் எங்கே இப்போ? நீ எப்படி இருக்காய், ஆத்துக்காரர் என்ன செய்யரார்?” அடிச்சு மோதிண்டு வந்த கேள்விகளை அணை போட்டு நிறுத்தரேன். இவள் அண்ணா ஜெயகுமார், என் கிளாஸ். 3 வயசு சின்னவள். “இன்னைக்குப் பேசவேண்டாம் ஆத்தில் விசேஷம். பின்னாடி ஒருக்கா சந்திச்சு பெசலாம். நீ நன்னா இருக்காயா? உன் பொண் நல்ல அழகுடா. மதுரை மீனாக்ஷி நிறைஞ்ச சந்தோஷத்தை கொடுக்க பிரார்த்தனை செய்யரேன்.” சொல்லிட்டு, “இப்போ வந்த இடத்தில் தெரிஞ்சிண்டதா காட்டிக்க விரும்பலை. செல் நம்பர் மாமிகிட்டே தந்துட்டுப் போரேன். நேரம் கிடைக்கரச்சே போன் அடீ.” நிமிஷமா துணியை உலர்த்திட்டு கீழே போனா.
என்ன செய்ய? அன்னைக்கு பூரா மனஸில் நமநமன்னு கீதாதான், அவளையே கண்கள் வட்டமடிச்சது, அவளுக்கு ஏதோ மீளாத துக்கமோ கஷ்டமோ அதான் இப்போதைக்கு பெசலையாக்கும்னு நினெச்சிண்டேன்.
கல்யாணத்துக்கு 4 வாரம் இருக்கச்சே எல்லாருக்கும் பத்திரிகை தர ஆரம்பிச்சதும் பவானிகிட்ட “சுமங்கலி பூஜைக்கு வந்தாளே அவா நம்பரையும் கொடு வாட்ஸப்பில் பத்திரிகை அனுப்பலாம்.” கேட்டு வாங்கிண்டேன். கீதாவை நேரில் அழைச்சுட்டு வரணும்னு தோணித்து. பவானியும் வரவே, மத்த டிஸ்ட்ரிப்யூஷனோட வெஸ்ட் மாம்பலம் வந்ததும் கீதாவுக்கு போன் செஞ்சு அட்ரெஸ் வாங்கிண்டு போனோம். “அப்பளம் இட்டுண்டிருக்கேன் பேஷா வா”ன்னா. கீதாவை எப்படித் தெரியும்னு இவகிட்டே மின்னாடியே சொல்லிட்டேன்.
காபி தந்தா. கீக்கிடம். 2 ரூம் கிட்சென். ஒரு ரூம் சாத்தியே வச்சிருந்தது. விவரம் கேட்டப்போ, “அவர் 12 வருஷமா படுத்த படுக்கை. இருமுவர். இப்போ பாக்க வேண்டாம். அம்மா அப்பாவும் இப்போ இல்லை. ஜெயகுமார் மலேஷியாவில். வரதில்லை. அவசியம் கல்யாணத்துக்கு வரேன்.” சொல்லிண்டே பவானிக்கு கும்குமம் கொடுத்தா. கூடவே சிரிச்சிண்டே ஒண்ணு சொன்னா. “பாவானி மாமி, உங்க கிட்டே சொல்ரதில் தப்பில்லை. சுந்தரேசனை நான் சின்ன வயசில் காதலிச்சது உண்மை. அவனுக்கே தெரியாது. சொல்லவே தோணலை. எங்கப்பா கொன்னுப்புடுவர்னு பயம். இன்னைக்குத்தான் உங்களையும் வச்சிண்டு சொல்லணும்னு இருக்கு. ஆல்திபெஸ்ட்”.
திரும்பரச்சே பவானி உம்முன்னு வந்தா. கீதா அப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுவள்னு யாருக்குத் தெரியும்? இவகிட்டே “உங்காத்துக்காரரை காதலிச்சேன்”னு சொல்லவேண்டிய அவசியம்? பவானி ஆர்ப்பாட்டம் செய்யலை. கல்யாணம் முடியட்டும்னு இருக்காளோ! அப்புரமா ஒரு கும்மு கும்மி எடுப்பாளோ!
அப்பவே கீதா எங்கிட்டே தன் காதலை சொல்லி, ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சிண்டிருந்தா என்ன ஆகியிருக்கும்? தோணித்தே! என்னமோ அடிபிடிச்ச குழம்பை பிடிச்சிருக்குன்னு தெரியாம அழுத்தி கிளறி விட்டுட்டா மாதிரி பட்டது.
சுதா புக்காத்துக்கு போயாச்சு. கல்யாணத்துக்கு வந்த சொந்தங்கள் ஒவ்வொருத்தரா. பவானியோட மாமா பத்ரி இன்னைக்கு ப்ளூமவுன்டனில் கிளம்பரான். கூட மாட ஒத்தாசையா அத்தனை பொருப்பேத்துண்டு எல்லாம் செஞ்சான். என்னைவிட ரெண்டு வயசு சின்னவன். ஆனா அத்தனை எனெர்ஜீ. அவனை பவானிதான் “உடனே கோயம்புத்தூருக்கு ஓடி ஒளிஞ்சுக்காதீங்கோ, ரெண்டுநா தங்கி ரெஸ்ட் எடுத்துண்டு போலாம்”னு நிறுத்திவச்சா. கல கலன்னு இருப்பன்.
போரன்னைக்கு பத்திய சமையல். சாப்டூட்டு பால்கனியில் உக்காந்து பேசிண்டிருந்தோம். எனக்கும் இவன் இன்னும் ரெண்டுநா இருந்தால் நல்லதுன்னு பட்டது. கீதா மேட்டரை பிடிச்சு வச்சு இவள் என்னை கடிச்சுத் துப்பினா? அதான். ரெண்டு சேர் போட்டுண்டு காந்தி நகர் 4ஆவது மெயின் ரோட்டில் பால்கனிலே மரக்கிளைகளுக்கு ஊடே ரோடில் போர காரைப் பாத்துண்டு. இவன் வெத்திலை போடுவன். வாய் நிறைய கொதப்பிண்டு. பவானி உள்ளே ஊஞ்சலில். இவனை சீண்ட எப்போவும் கேக்கர கேள்வியை கேட்டுவச்சேன்.
“பத்ரீ, நீ ஏன் இன்னும் கல்யாணமே செஞ்சுக்கலை?” “அப்படியே விட்டுப்போச்சு சுந்தரேஸா, இப்போ டூ லேட். ஏன் கேக்கராய்?” “இல்லை, ஒரு கல்யாணம் நடந்து முடிஞ்சிருக்கு. இப்போ கல்யாணம் பத்தித்தான் பெசணும். பேசி பண்ணிக்காதவாளை பண்ணிக்க வைப்பா. சொல்லேன் ஏன் பண்ணிக்கலை?” “சொன்னா கோவிச்சுக்கப் பிடாது”. “மாட்டேன் கோவிச்சுக்க என்ன இருக்கு?”
“எங்க அக்கா பொண்ணைத்தான் பண்ணிக்க ஆசை. அத்திம்பேர் தெரிஞ்சா ஆத்துக்குள்ளேயே விடமாட்டர். சொல்லவே தைரியம் வரலை. வருஷங்கள் ஓடித்து”. “யார் அந்த அக்கா பொண்?” “நம்ப பவானியைத்தான் சொன்னேன்.”
பக்குன்னுது. ஆமாம் இவன் அக்கா பொண்தான் பவானி. அதனாலேத்தான் இவன் அவளுக்கு மாமா. மறந்தே போச்சு. கேட்டிண்டிருந்த பாவானியும் ஆடின ஊஞ்சலை சட்டுன்னு காலை ஊணி நிறுத்திட்டு எழுந்து வரா. “பத்ரீ என்ன சொல்ராய்?” “ஏதோ மனசில் பூட்டிவச்சிருந்தது வெளியில் தெரிச்சிடுத்து. பெரீசா எடுத்துக்க வேண்டாம். சுந்து கேட்டதுனாலே சொன்னேன். உங்கப்பா குணம்தான் தெரியுமே. அதுவுமில்லாம உன் படிப்புக்கு நான் ஏணி வச்சாக்கூட முடியாது. காலாகாலத்தில் கல்யாணம் நடந்து உன பொண்ணுக்கு முன்னாடி ஒரு பையன் பொறந்திருந்தா சுதாவை கேட்டிருப்பேன்”.
“அது சரி, காபி போட்டுண்டு வரேன்.” சாமர்த்தியமா சமையல் உள்ளில் பூந்துண்டா. நான் பால்கனீலேந்து கீழேவா குதிக்கறது? சாயங்காலம் இவனோட கிளம்பி சென்ட்ரலில் ரயிலேத்திவிட போனேன். ஆத்துக்கு வரச்சே 1015. பவானி தூங்கிட்டா. சுதாவும் இல்லாத வீடு நிசப்தமா. இனிமேல் நாங்க ரெண்டு பேர்தான்னு நினைக்கரச்சே ஒரு மாதிரி பட்டது.
எழுந்து காபி குடிச்சுண்டே பேப்பர் புறட்டரச்சே “ஏன்னா, எனக்கு ஒண்ணு தோணித்து. எங்கேயாவது வெளியூருக்குப் போலாமா? ஒரு வாரம் லீவு போடுங்கோ, கும்மோணம் போலாம்”. மறுநா கிளம்பிட்டோம். கார்த்தாலே 5 மணிக்கு காரை ஃபுல் ஏஸி வச்சிண்டு திருச்சி ஹைவேயில் செங்கல்பட்டு தாண்டினதும் 90+இல். உளுந்தூர்பேட்டை டோல் தாண்டி லெஃப்டில் ஒடிச்சு விருத்தாச்சலம் வழியா கும்மோணம். போரச்சேயே ரிவர்சைட் ரிசார்டில் ரூமுக்கு சொல்லியாச்சு. 1130க்குள் போயிடலாம் செக்கின் செய்ய சரியா இருக்கும். சாயங்காலம் வெய்யத்தாழ கோவிலுக்கு போலாம்னு.
“இன்னைக்கு ஹோட்டல்லேயே இருந்துடலாம். நாளைக்கு பாத்துக்கலாம்!” ரூமுக்குள் நுழைஞ்சதுமே கட்டளை. அதைவிட நல்ல ஐடியா எனக்கும் தோணலை. ஆனா பாருங்கோ, காரை ஓட்டிண்டு வந்த எனக்கு இல்லாத அசதி சும்மா உக்காந்திண்டு வாய் ஓயாம பேசிண்டு வந்த அவளுக்கு. படுத்துண்டுட்டா. எல்லாம் ரூம் செர்வீஸ்.
ப்ளேட்டெல்லாம் க்ளியர் ஆனதும் மொள்ள பேச்சை ஆரம்பிச்சா. “கீதாவை நீங்க காதலிச்சேளா?” என்னன்னு சொல்ல? “ஆசையாப் பேசுவாடீ, விசாலமும் எங்கம்மாவும் நெறுங்கிய ஸ்நேகிதிகள்”. “பின்னே ஏன் அவளை பண்ணிக்கலை?” “அந்த எண்ணமே எங்காத்தில் யாருக்கும் எழலை?” “அவள் உங்களைக் காதலிச்சாளாமே? என்னை வச்சுண்டேன்னா சொன்னா?”. “ஆமாம், இப்போதானே சொன்னா? எனக்கும் இப்போதான் தெரியும். இப்போ ஏன் அதை நோண்டிக் கேக்கராய்?” “அவள் காதலை சொல்லாமலே போனதுக்கு என்ன காரணம்?” “தெரியலை!”
அப்புரம் ஆல் கொயட். அந்தண்டை திரும்பி படுத்துண்டவள் சட்டுன்னு எழுந்து உகாந்துண்டா.
“நீங்க கேக்க மாட்டேளா?” “என்னத்தை?” “பத்ரி என்னை காதலிச்சான்னு சொன்னதை?” “அதில் கேக்கரத்துக்கு என்ன இருக்கு. அவன்தான் சொல்லிட்டானே உங்கப்பாவுக்கு பயந்துண்டு சொல்லலைன்னு”. “அவன் சொன்னது பொய். என்கிட்டே சொன்னான்”. “அட, இது நன்னா இருக்கே! அதுக்கு நீ என்ன சொன்னாய்?” “கல்யாணம் செஞ்சுக்கலாம் அப்பாகிட்டே பேசுங்கோன்னேன். கடைசீ வரைக்கும் பெசலை. நீங்க பொண் பாக்க வரேள்னு தெரிஞ்சதும் அம்மாகிட்டே பத்ரி பத்தி சொன்னேன். சொந்தத்தில் பண்ணிக்க அப்பா சம்மதிக்க மாட்டார், கம்முனு கடன்னுட்டா”.
“சரி இப்போ அதுக்கென்ன?” “உங்களுக்கு கோவம் வரலை? “இல்லை. கீதா சொன்னது உனக்கு வருத்தமா?” “இல்லை”. “அப்போ விடு”. “அதெப்படி விடமுடியும்?” இன்னும் சொன்னா.
“கல்யாணமாகி கொஞ்சநா மனசு அல்லாடித்து. ஆனா சுதாவை பிள்ளையாண்டதும் உங்களைத்தான் எனக்கு நேசிக்கத் தோணித்து. உங்களுக்கு யார் மேல் காதல்?” “உன்மேல்தான்.” “எப்போலேந்து?” “உன்னோட b&w போடோவை ஜாதகத்தொட பாத்ததுலேந்தே!” “இத்தனை வருஷமா ஏன் சொல்லலை”. “தப்புத்தான்! ஐ லவ் யூ பவானி!” கையைப் பிடிச்சிண்டேன்.
“சரி. கார் ஓட்டிண்டு வந்தது களைப்பா இருக்கும். தூங்குங்கோ. சீக்கிரம் எழுந்து குளிச்சுட்டு சாரங்கபாணி கோவிலுக்கு போணம். இனிமேல் எத்தனை வயசானாலும் எப்போல்லாம் தோண்றதோ அப்போல்லாம் காதலை சத்தமா சொல்லிடணும். இல்லைன்னா இப்படித்தான் போரவா வரவால்லாம் அவாளோட ஆறிப்போன அல்லது நமுத்துப்போன காதலை சொல்லிட்டுப் போயிடுவா”.
No comments:
Post a Comment