Wednesday, August 12, 2020

பிடிச்சடுத்துன்னா போட்டுடணும்

பிடிச்சடுத்துன்னா போட்டுடணும்

அஸ்தினாபுரம் பஸ் நிலையம்
#ganeshamarkalam

இந்தூருக்கு குடிவந்த புதுசில் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடக்கும். ஒரு நாளைக்கு 4 ட்ரிப்தான். இங்கொண்ணும் அங்கோண்ணுமா வீடுகள், இடையிலே வயல், பஸ்ஸில் யார் போவா?

ப்ராட்வேக்கு ஒண்ணு. திநகருக்கும். குரோம்பேட்டை ஸ்டேஷனில் இறங்கி பொடி நடையா வரப்பில் ஏறி வந்துடுவா. 

இப்போ பஸ் ஸ்டேண்டை சுத்தி அத்தனை ஆயிப்போச்சு. ரெண்டு ரெஸ்டுரன்ட், 4 மொபைல் கடை, 8 சூபெர் மார்கெட், கல்யாண மண்டபம், இடுக்கு விடாம மருந்துக் கடைகளும், இருக்கிர பேங்குக்கெல்லாம் ஒரு ATM, கையேந்தி பவன், தோல் டாக்டர், பல் டாக்டர்னு. ஒருநாளைக்கு இங்கேந்து 60 பஸ் கிளம்பறதும் போரதும். சென்னையில் எங்கேயும் போலாம், ஷேர் ஆட்டோ, மினிபஸ், சரவணா ஸ்டோர்ஸ் சிற்றூந்துனு களைகட்டி. யாருக்கு சௌகர்யமோ இல்லையோ, எங்க மூணுபேருக்கு நிச்சயமா.

எந்த மூணுபேர்? நான் சேது, என் நண்பர்கள் சிவராமன், அப்புரம் நரசிம்மன் ஐயங்கார். பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் வெங்கட்ராமன் நகரில் இருக்கோம். சீனியர் சிடிசென்னா கோவம் வரும். ரிடயர் ஆகி 2 வருஷம்தான் ஆச்சு. நரசிம்மன் சித்தே சீனியர். சிவராமன் யங்கெஸ்ட். 

ஒரு வெத்திலைபாக்குக் கடை, பல வருஷங்களா இருக்கு, ந்யூஸ் பேப்பர், விகடன் குமுதம் துக்ளக் வச்சிருப்பான். ஏரியாவில் ஆரம்பத்தில் எல்லாரத்துக்கும் பேப்பர் போடுவன். பக்கத்தில் பென்ச் போட்டிருக்கும். தினம் சாயங்காலம் நாங்க மூணுபேரும் அதில் உக்காந்து பொழுதைப்போக்குவோம்.

இது 4 வருஷமா நடந்திண்டிருக்கு. எங்களுக்கு காலைக்கடன் மாதிரி மாலைக்கடன். எங்களில் யாராவது அபூர்வமா வரலைன்னா, மத்தவா மீட் செய்வோம், பாக்கி நேரங்களில் இந்த பென்ச்சில் யார் வேணும்னாலும் உக்காரலாம், படுத்துக்கலாம். மணி 430 ஆச்சுன்னா கடைக்காரன் “சேதுசார் வர டயம்”னு எழுப்பி விரட்டிடுவான். அங்கே படுத்துண்ட குச்சி நாய்கூட எழுந்து போயிடும். இருட்டினப்புரம் 7 மணிக்கு கிளம்பிடுவோம்.

உக்காந்துண்டு என்ன பண்ணுவம்? ஊர் வம்பெல்லாம் பேசவேண்டியது. போரவா வரவாளை ஹலோ சொல்லி போயிட்டு வாங்கோன்னு சொல்லுவம். நாட்டு நடப்பு, அன்னைக்கு பேப்பர் ஹெட்லைன்ஸ், முக்கியமா கண் முன்னாடி நடக்கும் கூத்தை கமென்ட் பண்ணுவது. 

ட்ரைவர் கண்டக்டரெல்லாம் ஸ்நேகம். பேர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு ஃப்ரெண்டா பழகறது வெத்திலைபாக்குக் கடை முனியன், சித்தே தள்ளி செருப்பு தைக்கர கற்பகம், பூக்காரி காந்தம்மா, ஜிகே ரெஸ்டுரான்ட் ஓனர் பன்னீர்செல்வம், ATM கூர்க்கா கந்தசாமி, பூர்விகா கடையில் ரிசார்ஜ் செய்யும் மஹா, வண்டீலே பழம் விக்கும் ராஜேந்திரன், ஆடோ சங்கத் தலைவன் மணி.

மணிக்கும் மஹாவுக்கும் இடையெ ஏதோ ஓடிண்டிருக்கு. நிச்சயமா இழுத்துண்டு ஓட மாட்டான், ஆட்டோவில் அழைச்சிண்டு போவான்னு சிவராமன் ஜோக் அடிச்சான். இந்த மாதிரி மேட்டர் பெச ஆரம்பிச்சா பொழுது போறதே தெரியாது. நாள் பூரா ஆத்துலேயே அடைஞ்சு கிடந்துட்டு, அப்பப்போ கடை கண்ணிக்குன்னு போயிண்டு, இல்லை பாஸ் புக்கில் என்ட்ரி, ஃபிக்ஸட் ரின்யூன்னும், போரடிச்ச வாழ்க்கையில் சுவாரஸ்யம் சேர்க்க இந்த சாயங்கால மீட்டிங்க்.

பஸ் ஸ்டாண்டில் இன்னைக்கு புது வரவு. எல்லார் கவனமும் அது மேலே.

ஒரு 15 வயசிருக்கும் பொண். நைட்டீயா, மேக்ஸீயான்னு தெரியாம, நைஞ்சு போன உடை, அதுக்கு மேலே அழுக்கா போத்திண்ட ஷாலுக்குள்ளே வனப்பான ஒரு தேகம் ஒளிஞ்சிண்டு, அந்த வயசுக்குரிய ஈர்ப்போட, அப்பப்போ ஒழுக்கு வாயை துடெச்சுக்க தெரியாம ஒரு ஜீவன். என்னைக்கும் இல்லாம அன்னைக்கு பார்த்தோம். மனநலம் குன்றிய ஜீவன்னு பார்த்ததும் தெரிஞ்சது. நாங்க உக்காந்திருப்பதை பாத்துட்டு எங்க கிட்டே வந்து நின்னுட்டா. 

இப்படீன்னா உடனே “சீ அந்தண்டை போ”ன்னு சொல்வோம், இல்லை நாம எழுந்துண்டு பொயிடுவோம். எங்களுக்கு என்ன செயன்னு தெரியலை. முனியன் அவள் கையில் ஒரு வாழைப்பழத்தை தந்து அந்தண்டை போன்னு கையால் விரட்டினான். பழத்தை உரிக்காம கடிச்சு சாப்டிண்டே போனா. மனசை என்னவோ செஞ்சது.

சலனமில்லாம ஓடிண்டிருந்த எங்க சாயங்கால வாழ்க்கை சித்தே நிலை தடுமாறினாப்புலே. சுதாரிச்சிண்டு அடிச்சிண்டிருந்த வம்பை தொடர்ந்தோம்.

சிவராமன் தனிகட்டை. அவன் ஆத்துக்காரி அல்பாயிசுலேயே போயாச்சு. குழந்தைகள் கிடையாது. தனியாத்தான் இருக்கன். அதுக்கு கான்ட்ராஸ்டா நரசிம்மனுக்கு பெரீய குடும்பம். 4 பிள்ளை 2 பொண். ஒருத்தனைத் தவிர எல்லாரும் வெளிநாட்டில். இவனும் எப்போ கிளம்பலாம்னு யொசிச்சிண்டு. மாமிதான் பிடிச்சு வச்சிருக்கா. அவன் பேரில் ஒரு ஃபிளாட் ரெஜிஸ்டர் செஞ்சு. அவனுக்கு கல்யாணம் பண்ணி அதில் குடுத்தனம் வைக்கணும்னு. பெருமாள் இன்னும் கண்ணைத் தொறக்கலைன்னு சொல்லுவான். எல்லாத்துக்கும் பெருமாளை கூப்பிடுவான். எங்காத்தில், நான் என் ஆத்துக்காரி, ஒரு பொண், பையன்னு நிறைவா. 

3 பேரும் எப்படி சேர்ந்தோம்னு ஆரம்பிச்சா? இப்போ வேண்டாம்.

சிவராமனை எப்போவும் ஹிந்து பேப்பரும் கையுமா பாக்கலாம். படிச்சுட்டாலும் எடுத்துண்டு சுத்துவன். சாயங்காலம் கொண்டு வருவான்னு நான் பேப்பர் வாங்குவதில்லை. தான் போட்ட கிராஸ் வொர்ட், சொடுக்கை காமிப்பன். அந்த சாக்கில் பேப்பரை வாங்கிப் படிச்சுடுவேன்.

ஒரு வாரம் கழிச்சு மீண்டும் அந்த பைத்தியம் வந்து கையை நீட்ட, சிவராமன் 10 ரூபாய் தர, கையில் அதை வச்சு பாத்துட்டு நகந்து போச்சு. “ஏண்டா அதுக்கு நீ தந்தது காசுன்னு தெரியுமோ? சாப்பிட தந்திருக்கலாமோ!” காபி சாப்பிடரச்சே பன்னீர்செல்வம் சொன்னர், அங்கேயும் வந்து தினம் கையை நீட்டுவதாயும், சாப்பாடு பொட்டலம் தந்துட்டா போயிடுவாளாம். நல்ல மனுஷர். சிவராமனும் நல்லவன், முனியனும். ஆனால் இப்படி ஒருத்தி ஆதரவில்லாம தன்னை மறந்து அழுக்கா சுத்துவதை சாதாரணமா எடுத்துண்டு இருக்கோம்னு பட்டது.

என்ன செய்யலாம்? பாவப்பட்ட ஜீவன், யாராத்து பொண்ணோ! தொரத்தி விட்டுட்டாளோ? இல்லை ஓடி வந்துடுத்தோ? தேடிண்டிருப்பாளோ? நாம ஒரு போடோ பிடிச்சு முகநூலில் போட்டா, தெரிஞ்சவா பார்த்தவா வந்து அழைச்சிண்டு போவாளா? செஞ்சுட்டா ஆச்சு.

திரும்பவும் அவளைப் பாக்க 3 நாளாச்சு. கையில் ஒரு ப்ரெட் பொட்டலம் தந்துட்டு என் செல் போனில் போடோ எடுத்ததை சிலர் ஆசையாப் பாத்துண்டிருந்தா. போடோவை வச்சு என்ன செய்யப்போரேன்னு சொன்னேன். மத்தாநாள் பொட்டதுக்கு 176 லைக்ஸ் கிடெச்சது. வேர ஒண்ணும் நடக்கலை.

இப்படியே சில மாதங்கள். நாங்க சாயங்காலம் வரதும் உக்காந்து வம்பளக்கரதுமாய். இடையில் நரசிம்மன் புள்ளைக்கு வரன் திகையும்போல இருக்காம். ஆடோ மணி ஹேர்ஸ்டைலை மாத்திண்டுட்டான். மஹா சொன்னான்னு. “எப்போ கல்யாணம்?” கெட்டதுக்கு, “நான் ரெடி சார், ஊரில் 8 ஆட்டோ என்னொடது ஓடிண்டிருக்கு, அவதான் கல்யாணம்லாம் வேண்டாம் சும்மா ஜாலியாப் பழகலாம்கரா”. சரிதான்னு நினெச்சுண்டேன். 

பன்னீர்செல்வம், ஹோட்டலில்  வடக்கத்திக்காராளை சீப்பா வேலைக்கு வச்சு காசு பண்ண ஆரம்பிச்சுட்டர். அவாளுக்கு நம்மூர் காபி போடத் தெரியலை. “நாங்க குடிக்கும் காபியில் கை வச்சியானா வரதை நிருத்திடுவோம், பாத்துக்கோ”ன்னு சொல்லி வச்சோம்.

இப்படி போயிண்டிருக்கச்சே, ரெண்டுநா ஜுரம்னு சிவராமன் வரலை. நானும் நரசிம்மனும்தான். அன்னைக்கு செருப்பு தைக்கும் கற்பகத்தின் மேலே ஒரு புல்லட் மோதிடுத்து. இவ வழக்கம்போல ஓரமா உக்காந்து டீ வாங்கி குடிக்கரச்சே, ரோட்டில் போன பைக்காரன், எதுத்தாப்புலே சட்டுன்னு திரும்பின மேடவாக்கம் மினிபஸ்ஸை அவாய்ட் செய்ய இவள் பக்கமா ஒடிக்க, லேசா முட்டி அவ மேலேயே விழுந்துட்டான். சிலர் இவனை தூக்கி விட்டு, ஆசுவாசப்படுத்தினவா கற்பகமும் மண்ணில் கிடக்கரதை பார்த்திருக்கா. உடனே இவனை சாத்தப்போக, களேபரமாகிடுத்து. 

அடி ஒன்ணும் பலமாயில்லை, ஆனால் அவள் பைக்காரனை காது கூசராமாதிரி திட்டிட்டா. அத்தனை கெட்ட வார்த்தை. ஆத்துக்கு போயிடலாம்னு நாங்க 1 மணி முன்னாடியே கிளம்பிட்டோம்.

சிவராமன் வந்தா “ரெண்டுநா என்னாச்சு”ன்னு கேப்பன். எப்படி விவரமா சொல்ரது? அத்தனை மோசமான வார்த்தைகள்.

மறுநா வந்தவன் என்ன நேத்து ஆக்ஸிடென்டாமேன்னு கேட்டுண்டே வரான். இவனுக்கு எப்படித் தெரியும்? காந்தம்மா சொல்லியிருக்கா. ரொம்ப அசிங்கமா திட்டினாளாமேன்னு வேற கேட்டான். என்ன திட்டினாமான்னு விளையாட்டா நான் கேக்க இவன் விலாவாரியா சொல்ல, நரசிம்மன் காதை மூடிண்டர்.

அப்போதான் அந்த பைத்தியமும் வந்து சேர்ந்தது. 4 நாளாய் ஒன்ணும் தரலை. நேர எங்கிட்டே வது நின்னுட்டா, கையை நீட்டிண்டு. “சித்தே இரு”ன்னு சைகையில் சொல்லிட்டு, ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கித்தரேன். அப்போதான் கவனிக்கரேன், அவள் வயிறு பூசினாப்புலே இருக்கு. நான் கவனிச்சதை பார்த்த நரசிம்மன், “சேது, கவனிச்சேளானு சொல்ல, ஆமாம்னு தலை ஆட்டினேன். எங்களிடையே பெரீய மௌனம் சூழ்ந்திண்டது. இந்த பொண் யார்கிட்டே ஏமாந்து போனதோ? சண்டாளன்? இப்படி ஒரு கஷ்டம் வரணுமா பகவானே!

என்ன நினெச்சாரோ, நரசிம்மன் மாமாதான், வாங்கோ கிளம்புங்கோ, ஆத்துக்கு போயிடலாம்னு எழுந்துண்டுட்டர். வந்ததும் போவதைப் பாத்த காந்தம்மாதான் “என்ன சார்? கிளம்பிட்டீன்ங்களா?”

மத்தநாள் என் பிஞ்ச செருப்பை தெச்சுண்டுடலாம்னு வரேன், மணி 11 இருக்கும் ஆட்டோ ஸ்டேண்ட் கிட்டே சின்ன கூட்டம். மண்ணில் அந்த பைத்தியம் மயக்கம் போட்டுக் கிடக்கு. காந்தம்மா பூக்காக வச்சிருந்த தண்ணியை எடுத்து தெளிக்க லெசா கண் தொறந்ததை பாத்த நான் “மணி, ஆட்டோவை எடு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு போலாம்.” சிலர் கைத்தாங்கலா அவளை ஆட்டோவில் ஏத்த நான் அவனோட முன்னாடி இடுக்கிண்டு உக்காந்துக்க கிளம்பரோம், “வா ஹிந்துமிஷன் போயிடலாம்”.

“அட்மிட் செஞ்சுடுங்கோ”ன்னுட்டா. 2200ரூ பணம் கட்டிட்டு என் போன் நம்பரை தரேன். மணி “சார் அந்த பொண்ணொடது”ன்னு ஓரு அழுக்குப் பையை தரான். என்ன செய்ய? 

அவள் கிட்டேயே தரணும்ன்னு வாங்கிண்டு உள்ளெ போக, அவளை லேடி டாக்டர் பார்த்துண்டிருக்கா. வெளீலே பென்சில் உக்காந்து மெல்ல பையை ரெண்டு விரலால் தொறக்க ரெண்டு அழுக்குத் துணி, மீந்துபோன ப்ரெட், வாழைப்பழம்னு ஸ்மெல் தாளலை. இதுக்கு நடுவுலே ரெண்டு ஹிந்து பேப்பரும். 4 மாசத்துக்கு மின்னாடி தேதி போட்டது.
கனத்த மனசோட பையை அங்கேயே வார்ட்பாய் கிட்டே தந்துட்டு ஆத்துக்கு வரேன். 

சிவராமனா இப்படி செஞ்சான்? 

அதெப்படி ஹிந்து பேப்பர் இருந்ததுன்னு அவன் மேல் சந்தேகப் படலாம்னு நீங்க கேக்கலாம். சந்தேகம் வரதே? அவன்தான் பல வருஷமா தனிக்கட்டை. ஏன் வேர யாரவதா இருக்கக்கூடாது? எனக்குத் தெரிஞ்ச பஸ் ஸ்டேண்டில் இருக்கும் எல்லார் மேலேயும் சந்தேகம் வரணும். ஆனால் பையில் இருந்தது ஹிந்து பேப்பராச்சே? டைம்ஸ் ஆஃப் இந்தியாவோ, தினகரனோ இல்லையே!
ஆத்துக்கு வந்து அக்கடான்னு உக்காந்துக்கரேன்.

ஹிந்துமிஷன்லேந்து போன். “நீங்க கொண்டு வந்து சேர்த்த பொண்ணுக்கு வயித்தில் பெரீய கட்டி. உடனே ஆபரேஷன் செய்யணும். ஒண்ணரை லக்ஷம் சிலவாகும்”. சில விஷயங்கள் டக்குன்னு புரிஞ்சது. 

“சரி என்னால் அத்தனை செய்யமுடியாது, 50ஆயிரம் உடனே தரேன், மிச்சத்தை ஏதாவது தொண்டு நிறுவனத்தில் ஏற்பாடு செய்ய முடியுமா?” “சரி பார்த்துக்கலாம், நீங்க தர முடிஞ்சதை தாங்கோ”ன்னு சொல்லி, நாளைக்கே ஆபரேஷன்னு சொல்லிட்டா.

நல்லது செய்ய மனசிருந்தாலும், ஏதாவது ஒண்ணுணா பிரத்தியாரை சந்தேகப்படர மனசு இருக்கப் பிடாதுன்னு தோணித்து.

No comments:

Post a Comment