24. சென்னை மெட்ரோ (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam
“இவனை சித்தே என்னன்னு கேளுப்பா. சாப்பிட மாட்டானாம்!” சரியா ராத்திரி எட்டரைக்கு பொண் போன் செய்யரா. என் பேரன் இஸ் த்ரோயிங்க் டேன்ட்ரம்ஸ். ஒண்ணும் புதுசில்லை. எதுக்குன்னு தெரிஞ்சுக்க ஆசையா, “போனைக் கொடு”ன்னேன். தாத்தாவரைக்கும் விஷயம் போகும்னு அவன் எதிர்பாக்கலை. முதல்லே பெசவேயில்லை. அப்புரம் கொஞ்சிக் கூத்தாடி, எதுவானாலும் தாத்தா பாத்துப்பேன்னதும் மொள்ள விஷயத்தை சொல்ரான்.
ரிக் ரியர்டனோட பெர்ஸி ஜாக்ஸன் புஸ்தகம் வேணுமாம். அம்மாகிட்டே ஒரு மாசமா கேட்டானாம், “வாங்கித் தந்தா சாப்பிடலாம்னு இருக்கேன்.”. “இப்போ எந்தக் கடைடா தொறந்திருக்கும்?” “நான் கார்த்தாலே ஸ்கூலுக்குப் போரச்சேயே சொல்லிட்டுத்தான் போனேன்.” “சரி, இப்போதானே தாத்தாவுக்குத் தெரியும், நாளைக்கு வாங்கிண்டு வரேன். இப்போ சமுத்தா சாப்பிடு.”
சாபிடரான்னு மெசேஜ் வந்தது. குழந்தைகளுக்கு ப்ராமிஸ் செய்ய்யப் பிடாது செஞ்சா கீப் பண்ணணும்.
கார்த்தாலே எழுந்து ஒரு சொம்பு விட்டுண்டு நெத்திக்கு இட்டுண்டு 930க்கு கிளம்பியாச்சு. மவுன்ட் ரோடில் ஹிக்கின் பாதம்ஸ். கேட்ட புஸ்தகம் நிச்சயம் இருக்கும். நானோ தனிக்கட்டை. ஊரப்பாக்கத்தில் ஜாகை. கைச்சமயல். இன்னைக்கு ஏகாதசி. சாப்பாடுன்னு மெனெக்கெட வேண்டாம். போயிட்டு வந்தா அவனும் சந்தோஷம், எனக்கும் நேரம் போகும்.
LICக்கு நேர பஸ் உண்டு. ஆனா ட்ராஃபிக் மாளலை. பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், கதீபரா, கிண்டி நந்தனம்னு ஒவ்வொண்ணாத் தாண்டி இறங்கரச்சே 1145.
வாங்கிண்டேன். அமேஜானில் 70ரூ சீப்பு. ஆனா 3 நாளாகும். இவனை சாப்பிட வைக்கணுமே! அதான். பொண் ஆத்தில்தான் இருப்பா. தந்துட்டுப் போலாம். ஒரே பொண், அவளும் குழந்தைகளுமே என் உலகம். மயிலாப்பூருக்குப் போணம். யோசிச்சேன். வாஷர்மேன்பேட்டையிலேந்து நேர ஆலந்தூர் வரை மெட்ரோ ஓடறதே! கடைக்கெதிரிலேயே ஸ்டேஷன். நானும் அதில் இன்னும் போகலை. அதில் போய் தேனாம்பேட்டையில் இறங்கி, ஷேர் ஆட்டோலே போலாம்.
புஸ்தகத்தை பார்த்ததும்தான் போண்ணுக்கே மூச்சு வந்தது. “உன் பேரனை சமாளிக்க முடியலை”. அங்கேயே சித்தே உக்காந்து வம்பளத்துட்டு குறிப்பா குழந்தைகளை சமாளிப்பது எப்படீன்னு கிளாஸ் எடுத்துட்டு, “அவன் வந்ததும் பேசச் சொல்லு, பேசினப்புரம் புஸ்தகத்தை காமீ!” கிளம்பினேன்.
மெட்ரோவில் வந்த சுகானுபவம்! அதனா ஏர்போர்ட் போயிட்டு அங்கேந்து ஊரப்பாக்கம் சாதாரண ட்ரைனில் போயிடலாம், பஸ் வேண்டாம்.
குளூகுளு அட்மாஸ்ஃபியர், அதுவும் சென்னையில்! நிலத்துக்கடீலே பெரீய வளாகமா! ஆனா ஆளையே காணொம். பிளாட்பாரத்தில் 5 பேர், ட்ரைனுக்குள் 20. ட்ரைவர் பாவம், இருட்டில், பூமிக்கடீலே தன்னந்தனியா வண்டியை ஓட்டிண்டு, மேலே வந்தாத்தான் சூரியன். ஆனா இங்கே மட்டும் ஒரு இனம் புரியாத வெத்து உலகம். டிக்கெட் கவுன்டரில் சிரிச்சிண்டு ரெண்டு இளம் பெண்கள் ட்யூடியில். சமுத்தா காசை வாங்கிண்டு டோக்கன் தந்தா. தந்துட்டு இப்படி போங்கோன்னா. பாதுகாப்பு சோதனை. டோக்கனை வச்சாத்தான் கதவு தொறக்கும். பிளாட்ஃபாரம் லெவெலுக்கு வந்தா ட்ரைன் எப்போ வரும்னு ஒரு மாமி மைக்கில் சொல்லிண்டிருந்தா.
கரெக்டா அவள் வரதூன்னதும் வந்து நின்னதே! அதுவும் எங்கே நிக்கணுமோ அங்கே. எப்படி ஏறணும், இறங்கணும்னு கோடு போட்டிருக்கு. வண்டிக்குள் இன்னொரு மாமி எங்கே போரோம்னு நமக்கு மறந்துட்டாலும் ஞாபகப் படுத்திண்டு. “இஸ்ஸூம்”னு ஒரு சத்தம் உடனே அடுத்த ஸ்டேஷன்.
அடடா! இப்படி இருக்கும்னா இன்னும் கட்டலாமே. ஊர் பூரா குறுக்கேயும் நேடுக்கேயும் போக வர சௌகர்யமா. இதெல்லாம் பாக்க அப்பா அம்மாவுக்கு, என் ஆத்துக்காரிக்கு கொடுத்து வைக்கலை.
தேனாம்பேட்டை மெட்ரோ வந்தவனுக்கு மத்தியான நேரத்தில் நான் மட்டும்தான் ட்ரைவரோடப் போணம்னு நினெச்சுண்டு வரச்சே டிக்கெட் வாங்கர இடத்தில் தூரக்க பென்சில் ஒரு தம்பதி. மாமாவுக்கு 70 இருக்கும், மாமி சித்தே தாட்டியா, இந்த வயசில் முகம் எப்படி வாடியிருக்கணுமோ அதைவிட ஜாஸ்தியா சோகம் கப்பி. மாமா கையில் பை உள்ளே நிறைய அடெச்சு வச்சா மாதிரி. மாமி மாமா மேல் நன்னா சாஞ்சுண்டு, உடம்பு முடியலையோ? இங்கே உக்கார வேண்டிய நிர்பந்தம்? 5 நிமிஷத்துக்கு ஒரு ரயில் வருமே!
கையைக் காமிச்சு கிட்டக்க கூப்பிடரர். போனேன். நானும் அவாளை கூர்ந்து பாத்தது தப்போ? திட்டப்போராரோ! போனதும் “உங்ககிட்டே குடிக்க தண்ணீ இருக்கா?” வச்சிருந்த தண்ணி பாட்டிலைத் தரேன். மாமாவும் மாமியும் குடிச்சு காலி செஞ்சா. “நீங்க எங்கே போணம்? கீழே தனியாப் போக பயமாயிருந்தா நான் அழைச்சிண்டு போரேன். ஏதோ புரிபடாத இடமா பூமிக்கடீலே இருக்கேன்னே நிறையபேர் வரலைன்னு தெரியும்”.
“இல்லை நாங்க எங்க்கேயும் போகலை.” “இங்கே ரொம்ப நாழி உக்கார விடமாட்டாளே?” “ஆமாம் கார்த்தாலேந்தே மூணுதடவை வந்து திட்டிட்டுப் போனான். கொஞ்ச நாழி கழிச்சுப் போயிடுவம்னு ஒவ்வொரு தடவையும் சொன்னேன். அடுத்த தடவை வென்னீரை மூஞ்சீலே கொட்டிடுவான்.”
சிரிப்புத்தான் வந்தது. மெட்ரோ ஸ்டேஷனில் வென்னீரா? மனுஷர் விளையாடரர்னு தோணித்து. “நீங்க போயிக்கோங்கோ சார். தண்ணிக்கு ரொம்ப தாங்க்ஸ். நாங்க இங்கேந்து வேற எங்கேயாவது போயிப்போம்.” அப்போதான் மாமி முழுசா எழுந்துண்டு இருமக் கிளம்பரா. ரொம்பவே முடியலையோ!
“சார், என் பேர் கோபாலன். உங்களுக்கு உதவி வேணும்னா நான் செய்யரேன், தயங்காம சொல்லுங்கோ. உங்கள் ஆத்துக்காரிக்கு உடம்பு முடியலையோ?” சட்டுன்னு அந்த மாமி பிழியப்பிழிய அழ ஆரம்பிக்கரா. என்ன செய்யரதுன்னு பிடிபடலை. “போரத்துக்கு ஒண்ணும் இடம் இல்லை கோபாலன். ரெண்டு வாரம் மின்னாடி எங்களை என் பிள்ளை ஆத்தை விட்டு தொரத்திட்டன்”.
“என்ன சொல்ரேள். உங்க பிள்ளை உங்களை தொரத்திட்டனா? அது எப்படி சாத்தியம்?” எனக்கு போண்ணாப்போச்சே! அதான் விளங்கலை.
“அவனுக்கும் அவன் ஆத்துக்காரிக்கும் எங்களைக் வச்சுக்கப் பிடிக்கலை. இவள் மருத்துக்கே ரொம்ப சிலவாரதாம். சென்னையில் காமிக்கலாம்னு சேனடோரியம் அழைச்சிண்டு வந்தான். டாக்டர் பாத்திண்டிருகச்சே இதோ வரேன்னுட்டுப் போனான், காணலை. கையில் 1300ரூ இருந்தது. போன் பண்ணி ராத்திரி ஒரு 10 மணிக்கு நீ அங்கேயே இருந்துக்கோ. இன்னும் கொஞ்சம் சிலவுக்கு வேணும்னா பணம் தரேன்னுட்டு போனை வச்சுட்டான்.”
“ரெண்டுநா MIT பாலத்தடீலே இருந்தோம், அப்புரம் ரயில்வே ஸ்டேஷன் இங்கேன்னு மொள்ள நகந்து போயிண்டு. என்னன்னு புரியலை. அதான். கைக்காசு ரெண்டு நாளைக்கு டீக் குடிக்கத்தான் காணும்.”
“பையன் நம்பர் தாங்கோ, நான் கூப்பிட்டுப் பெசரேன்”. வேண்டாம்னு தடுக்கரார் “பலதடவை அடிச்சுட்டேன். எடுக்கலை”. “எங்கே இருக்கான்? உங்காம் எங்கே?” “திண்டிவனம்”. “பையன் என்ன செய்யரான்? அவனுக்கு படிப்பில்லை. அவன் ஆத்துக்காரிதான் சம்பாதிக்கரா. பக்கத்துலே காலேஜில் லெக்சரர்”. “உங்களுக்கு சொந்த வீடிருக்கா?” “இருந்தது, பிள்ளைக்கு வேலையில்லை சங்கடப் படரான்னேன்னு அவன் பேயரில் எழுதிவச்சுடலாம்னு இவள் சொல்ல செஞ்சிருக்கப் பிடாதுதான்”.
“இப்போ என்ன செய்யப் போரேள்? நான் ஏதாவது வீடு பாத்துத் தரட்டுமா?” “வாடகை எப்படி? எனக்கு சம்பாத்தியம் இல்லையே? இந்த வயசில் என்னத்தைன்னு செய்யமுடியும்? 77 ஆச்சு சார். ATMஇல் செக்யூரிடியாக்கூட தரமாட்டான்”.
“சரீ! எங்காத்துக்கு வாங்கோ, அழைச்சிண்டு போரேன். கொஞ்சநா தங்குங்கோ, வழி பிறக்கும்”.
ஊரப்பாக்கத்தில் என் அப்பார்ட்மென்ட் 3 பெட்ரூம். சட்டுன்னு இரக்கப்பட்டு சொல்லிட்டேனே தவிர நல்ல முடிவான்னு தெரியலை. பொண் கிட்டே ஒரு வார்த்தை கேட்டுடணும். இல்லைன்னா கோவிச்சுப்பள். 3நா கழிச்சு வந்தவாளை அனுப்பிடவா முடியும்? பணம் கொடுத்து ஒத்தாசை செஞ்சா போதாதான்னு கேப்பள். என் மைண்ட் வாயிஸ் கேட்டிருக்கும், அந்த மாமி “அதெல்லாம் கூடாது, யாருக்கும் – குறிப்பா இத்தனை கரிசனமா பேசிண்டு உதவ வர ஒருத்தருக்கு பாரமா இருக்கப்பிடாது. வேண்டாம்”.
“சித்தே இருங்கோன்னு, போன் போட்டேன். சிவாநந்த குருகுலத்தில் தெரிஞ்சவர்தான் அட்மின் பாத்துக்கரர். “ரெண்டு பேரை அட்மிட் செய்யணும்னு வரேன்.” “ஒரு குருகுலத்துக்கு உங்களை அழைச்சிண்டு போரேன், காட்டாங்கொளத்தூரில், உங்களை மாதிரி வரவாளை கவனிச்சுப்பா.” அழைச்சிண்டு கிளம்பினேன். மெட்ரோவில் போயிட்டு ஏர்ர்போர்ட்டில் கால்டாக்ஸி வச்சிண்டேன்.
போய்ச் சேர்ந்ததும் எடுத்துண்டா. அழகா இன்னும் பலர் தங்கியிருக்கும் இடத்தில் அழைச்சிண்டு போய் விட்டுட்டு என்னை தனியா கூட்டிண்டு போய் அட்மின், “இவா பையனை ஒருதடவை வந்து பாத்துட்டுப் போகச் சொல்லுங்க சார், கையெழுத்துப் போடணும்”. நான் 10000ரூ நங்கொடை தந்துட்டு, என் நம்பரை தந்தேன்.
அவாளை பாத்துட்டுக் கிளம்பலாம்னு போரேன். உள்ளே ரூமிருக்கச்சே வெளீலே வந்து மரத்தடீலே உக்காந்திண்டிருக்கா. “நல்ல வேளை, நன்றி சொல்லணும்னு தேடினேன் காணலை. எங்கே பாக்காமலேயே கிளம்பிட்டேளோன்னு மனசு அடிச்சிண்டது.”
மாமி ஒரு காகிதத்தை தரா. “பையன் நம்பரும், விலாசமும். உங்க போன்லேந்து கூப்பிட்டு பெசிப் பாருங்கோ”. “சரீ, நிச்சயம் செய்யரேன், இங்கே சகல சௌகர்யங்களும் கிடைக்கும். வைத்தியம் செய்வா. தேமேன்னு இருங்கோ. நான் அப்பபோ வரேன்.” கிளம்பரச்சே மாமா “நானும் உங்களோட கேட் வரைக்கும் வரேன்.”. வந்தவர், “மாமி தந்த தாளை காமிங்கோ சரியா எழுதியிருக்காளான்னு பாக்கரேன்”. கொடுத்தேன்.
வாங்கிண்டு சட்டுன்னு கிழிச்சுப் போட்டுட்டர். “ஏன் இப்படிப் பண்ணினேள்? நான் உங்க பிள்ளையோட பெசவேண்டாமா?” “தப்பா நினெச்சுக்காதீங்கோ. வேண்டாம். அவனோ, அவன் பொண்டாட்டியோ வந்தா இவள் காதில் இன்னும் மாட்டிண்டிருக்கும் தோட்டுக்கும் ஒரு கை வளையளுக்கும் ஆசைப்பட்டுத்தான் வருவா. நான் வாங்கிப்போட்டது. இதுவாவது எங்களொடயே இருக்கட்டும்னு தோணித்து”.
திரும்ப வரச்சே நினெச்சுக்கரேன். சொந்த பந்தங்களோட மாட்டு வண்டி பூட்டிண்டு கோவில் குளம், கல்யாணம் கார்த்தி, திருவிழான்னு போயிண்டிருந்த ஜனம் இப்போ தனிமைப் படுத்தப்பட்டு, அநாதையா மனித நேயம் இழந்து மெட்ரோவில் அதி வேகத்தில் குளு குளு பிரயாணம்.
ஆத்துக்கு வரச்சே மணி சாயங்காலம் மணி 5. என் பிளாட்டை தொறந்துண்டு நானும் தனிமரமாத்தான் நுழைஞ்சேன். ஆனா நான் வாங்கிக் கொடுத்துட்டு வந்த புஸ்தகத்தை பாத்துட்டு பேரன் போன் பண்ணுவன். இன்னும் அரை மணீலே ஸ்கூல்லேந்து வந்துடுவன்.
No comments:
Post a Comment