பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 5
By (sujatha&venkatesan)6381369319…
நவ பாஷாணம் என்கிற தேவிப்பட்டணம்
பொங்குமாகடலில் இந்த இடத்தில் எப்போதும் அலையடிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்!' எனப் பெருமாளிடம் வேண்டுகிறார் இராமன். அந்த வேண்டுகோளை ஏற்று அலையை நிறுத்தி வைக்கிறார் ஆதி ஜகந்நாதப் பெருமாள். அந்த் திருத்தலம்தான் தேவிப்பட்டினம். இராமநாதபுரத்திலிருந்து பதினைந்து கி.மீ. தூரம்.
அது சரி. அங்கு ஏன் அலையை நிறுத்த வேண்டும்? இராமர், உப்பூரில் வெயில் உகுந்த பிள்ளையாரை பூஜை செய்துவிட்டு தேவிப்பட்டினம் வருகிறார். அங்கு வந்ததும் அசரீரியாக ஒரு செய்தி அவருக்குச் சொல்லப்படுகிறது. சீதாபிராட்டியை இராவணன் தூக்கிச் செல்வதற்கு உமக்கு நவக்கிரக தோஷம்தான் காரணம். அதனை நீக்க, கடல் நடுவே மணலால் நவக்கிரகம் உருவாக்கி வழிபட வேண்டும்!' என்றது அசரீரி.
இராமரும் மணலால் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்குகிறார். அப்போதுதான் பெருமாளிடம் வேண்டிக் கொள்கிறார். மணலால் பிடித்த நவக்கிரகங்கள் கல்லாக மாறிப் போகிறது. கடல் அலைகளும் அந்த இடத்தில் ஓய்ந்து நின்று போகின்றன. தேவிப்பட்டினம் நவபாஷனம் என்பதும், கடலுக்குள் நவக்கிரக சன்னிதி என்பதும் இதுவே.
பல்லாயிரம் ஆண்டுகள் கடல் நீரில் இருந்தாலும் இன்றும் அந்த நவகிரகங்கள் நல்ல நிலையில் இருக்கின்றன.
திரும்ப லாட்ஜ் வந்து காலி பண்ணின்டு கிளம்பறோம். அடுத்த திவ்ய தேசம் திருக்கோஷ்டியூர் போக மேப் பார்த்து எதோ ப்ளான் பண்ணி நேரே காரைக்குடி போய் ராத்திரி ஹால்ட் பண்ணுவோம். பக்கத்துல செட்டி நாடுங்கறதால அழகான செட்டியார் வீடுங்கள லாட்ஜுங்களாக்கியிருக்காங்களாம் போலாம்கறார். பஸ் ஏறி போறோம். காரைக்குடி பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல ஒருலாட்ஜ்ல 1000/- வாடகை ஆனா கேஷ்தான் தரணும்கறான். இவர் கார்ட் எடுத்துண்டு ஏடிஎம் தேடி அலையறார். கிடைக்காம டிபன் சாப்ட்டுட்டு பிள்ளையார் பட்டி போகலாம்கறார். நல்ல பசி. இட்லி வெந்துண்டு இருக்கு. லேட்டாகும்கறான். காபி மட்டும் சாப்ட்டுட்டு பிள்ளையார் பட்டி போறோம்.
ராத்திரி மணி 8.30. லக்கேஜை ஒரு கடைல வச்சுட்டு ரூம் கிடைக்குமான்னு பார்க்க போறோம். முகூர்த்த நாள்ங்கறதால அங்கையும் கூட்டம் ஒவ்வொரு லாட்ஜ் பேரா சொல்லி அலைய விடறா..எல்லா லாட்ஜும் ஃபுல். அதுக்குள்ள கோயில் சாத்தற நேரம் தரிசனம் பண்ணிடலாம்னு தரிசன க்யூல நிக்கறோம். எங்கள பாத்து யாரோ ஒருத்தர் குறுக்கு வழில அழைச்சிண்டு போய் குருக்கள்கிட்ட எதோ சொல்லி பிள்ளையார் எதிர்லயே உக்கார வைக்கறார். பிள்ளையாருக்கு அன்றைய கடைசி தீபாராதனை காட்டிட்டு பிள்ளையார் மேல இருந்த பெரிய ரோஜாப்பூ மாலைய ஆளுக்கு ஒரு மாலை கழுத்துல போடறார். (யார் அவர் ஏன் இந்த மரியாதை. இத்தனைக்கும் இவர் வழக்கமா தட்டில் போடற 20/- ரூபாய்தான்)பிள்ளையாரையே பார்த்து கேக்கறோம்.
மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 மீட்டர் உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திருவுருவம் வடக்குத் திசை பார்த்து நின்னுண்டு எங்களையே பார்க்கறார்.
மாலையோட ப்ராகாரத்த வலம் வரோம். பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோயில்களை அமைத்த பெருமை முற்கால பாண்டியர்களுக்கு உண்டு. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும், சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வின்படி மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும் முன்பு இரண்டு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயில் என்பதை அறியலாம். 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது.இங்கு திருமணம் நடைபெற வைக்கும் "கார்த்தியாயினி" அம்மன் சன்னதியும், பிள்ளை வரமளிக்கும் "நாகலிங்கம்" சுவாமி சன்னதியும், அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் "பசுபதீசுவரர்" சன்னதியும் உள்ளது.
இக் குகைக்கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர்...மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மனின் திருஉருவம் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது.
ராத்திரி தங்கறதுக்கு எடம் கேட்டா மாலை தரயே இது என்ன திருவிளையாடல்னு கேட்டு அந்த மாலையை தூக்க முடியாம தூக்கிண்டு லக்கேஜ் வச்ச எடத்துக்கு வரோம்.
இப்ப ஏற்கனவே கையில லக்கேஜோட இந்த மாலை லக்கேஜ் வேற ஆகி ரூம் தேடனுமேன்னு கவலை. இவர் இருட்டுல மேப் பார்த்துட்டு திருக்கோஷ்டியூர் 21 கிமீதான் ஆனால் ராத்திரி தங்க இடம் இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனா வழில திருப்பத்தூர்னு ஒரு ஊர் போட்டிருக்கு. அங்க முயற்சி பண்ணலாம்கிறார். மாலையை என்ன செய்யறதுன்னு அங்க இருக்கறவாள கேட்டதுக்கு திருக்குளத்து க்ரில் கேட்ல கட்டி வச்சுடுங்கோங்கறா...மனசு வராம ப்ரசாதமா ரெண்டு ரோஜாப்பூவ பிச்சுன்டு ரோடுக்கு வரோம்.
கரேல்னு இருட்டுல நிக்கும்போது வயத்த சொரேர்ங்கறது. இப்படி ப்ளான் இல்லாம இவரோட இனிமே போகக்கூடாதுன்னு நெனச்சுக்கறேன். தூரத்துல ரெண்டு கொள்ளிக்கண்கள் தெரியறது. எதோ லாரி. எந்த பக்கம் திருப்பத்தூர்னு தெரியாம எதிரே போற பஸ்ஸ விட்டுடறோம். டீக்கடைல ஓடிப்போய்கேட்டதில் இனிமே ரூட் பஸ்தான் இங்க நிக்காதாம். உங்க அதிர்ஷ்டம் கறான். சர்சர்னு லாரியும் வேனும் காரும் போறதே தவிர பஸ்ஸ காணும்.
திருக்கோஷ்டியூர்ல மந்திரம் உபதேசித்த இராமானுஜரை மனசில நெனச்சுக்கறேன். சட்னு ஒரு பஸ் யாரையோ எறக்கி விட நிக்கறது. ஏறி உக்காரறோம். பத்து நிமிஷத்துல திருப்பத்தார் பஸ் ஸடாண்ட்ல விடறான். பக்கத்திலேயே கார்த்திக்னு ஒரு லாட்ஜ்ல எடமும் கெடைக்கறது. எதிரே மாதுளையும் வாழைப்பழமும் சாப்பிட்டு டின்னர் முடிச்சிக்கறோம்.
தொடரும். (படங்கள் நவ பாஷாணம்,பிள்ளையார் பட்டி)




No comments:
Post a Comment