Wednesday, August 12, 2020

எனக்கு பிடித்ததில் ஒன்று மழை

எனக்கு பிடித்ததில் ஒன்று

மழை
#ganeshamarkalam

எனக்கு கல்யாணமாகி ஒரு வருஷத்லே என் பொண் பிறந்தா. சீமந்தம் முடிஞ்ச கையோட லக்ஷ்மி அவாத்துக்கு போயாச்சு. அப்போல்லாம் இப்போ மாதிரி கிடையாது. மதுரையிலேந்து விசாகப்பட்டினத்துக்கு லெட்டர் வந்து சேர 2 நாள் ஆகும். குழந்தை பிறந்ததும் தந்தி இல்லை பக்கத்தாத்து போனில் கூப்பிடணும்னு பேச்சு. தகவல் வந்தது, கிளம்பிட்டேன்.

ரயிலடிக்கு வந்த மச்சினன் “அத்திம்பேர், ஆத்துக்கு வந்து குளிச்சு சாப்டுட்டு ரெஸ்ட் எடுத்துண்டு ஆஸ்பத்திரிக்கு போலாம்னு அப்பா சொன்னார்”னான். போரச்சே அவளுக்கும் சாப்பாடு எடுத்துண்டு போலாமாம். “நாளைக்கு ஆத்துக்கு அனுப்பிச்சுடுவா.” 

குளிச்சேன், சாப்பிட்டேன் ஆனா இருப்பு கொள்ளலை. சீக்கிரம் சமைக்கிற வழியா தெரியலை. பத்திய சமையலாம். அங்கே போரச்சே மத்தியானம் 1 ஆயிடுத்து. லக்ஷ்மி தூங்கிண்டிருந்தா. குழந்தையை பாத்ததும் சந்தோஷம் பிடிபடலை. இவ கண் தொறக்கச்சே நான் உடம்பை ரெண்டா மடிச்சு தலையை தொட்டில்குள்ளே விட்டு தூங்கற குழந்தையை கொஞ்சிண்டிருந்ததை பாத்ததும் இவளுக்கு “பக்”குன்னுதாம்.

இதுவரைக்கும் யாரும் வைக்காத, பெயர் என் பெண்ணுக்கு வைக்கணும்னு முன்னாடியே சொல்லிவச்சிருந்தேன். ஒரே பேர், வச்சது, கூப்பிட. ஆத்திலும் ஸ்கூலிலும். ரெண்டு எழுத்தில், தமிழில்தான்னு. அன்னைக்கு ஆஸ்பத்திரிலேயே தர்க்கம் பண்ணி என் செல்லத்துக்கு “மழை”ன்னு வச்சோம்.

 ஏன் வர்ஷான்னு வச்சிருக்கலாமே? உஹூம். பேர் வச்ச முஹூர்த்தமா, அவளொட ராசியா தெரியலை, எங்கள் வாழ்க்கை அன்னிலேந்து மழை பெஞ்ச பயிர் போல தழைக்க ஆரம்பிச்சது.

லக்ஷ்மி விசாகப்பட்டினம் வரப்போ மழைக்கு 6 மாசம். ரயில் நிக்கறத்துக்கு முன்னாடியே என்னை ஜன்னல்லேந்து பாத்துட்டு லக்ஷ்மி “இங்கே இருக்கோம்”னு கையை ஆட்ட மழையும் என்ன புரிஞ்சிண்டாளோ வேகமா கையை ஆட்டி சிரிச்சா. 

அப்போதான் பெண் குழந்தைக்கு அப்பாவாரது பெரீய பாக்கியம்னு பட்டது.

 ஆபீசுலேந்து களைச்சுப்போய் வந்து அக்கடான்னு ஹாலில் உக்காருவேன். பிராஜெக்ட் சைட்டில் களேபரம், வேலை நின்னு ரெண்டு நாளாச்சு. “எப்படி எல்லாத்தையும் டயத்துக்கு முடிச்சு கஸ்டமருக்கு கொடுக்க போரேனோ”ன்னு மனசில் பாரம் அழுத்தும். நாளைக்கு சீக்கிரம் எழுந்து போகணும், ராத்திரி சைட்டிலேயே படுத்துண்டு சொச்ச வேலையை முடிக்கணும்னு யோசிக்கரச்சே 3 வயசுக்குழந்தை பின்னாடிலேந்து வந்து “அப்பா”ன்னு கழுத்தை கட்டிக்கும். அப்போ வாடிக்கிடக்கும் மனசு பூரா விதவிதமா பூக்கள் பூத்து வாசம் வீசும்.

என் செல்லத்துக்கு குறையில்லாத வாழ்க்கை தரணும்னே உழைப்பேன். பாதி வேலையில் பாக்கணும்போல இருக்கும். ஓடி வந்துடுவேன். அப்படியே எல்லாத்தையும் போட்டுட்டு. MD திட்டுவான், அவ்வளவுதானே! பாத்துக்கலாம். இவளுக்கு சாதாரண காய்ச்சல் வந்தால் பதபதைக்கும். எல்லா அப்பா மாதிரி. ஆனா எனக்கு கண்கள் குளமாகி பார்வையை மறைக்கும். பாக்க வந்த டாக்டர், “முதல்ல இவரை வெளீலெ போய் உக்காந்துக்க சொல்லுங்கோ”ம்பர். மழைக்கு ஊசி போட்டா எனக்கு வலிக்கும். அதுக்காகவே ஊசிபோடாத சிரப் மட்டும் எழுத தகுந்த டாக்டாரா தேடி அழைச்சிண்டு வரச்சொல்வேன். எல்லோரும் சிரிப்பா.

ஸ்கூலில் இவள் பெயர் சிலருக்கு ஹாஸ்யமா பட்டது. “இன்னைக்கு மழை வரலையா”ன்னு டீச்சர் கேப்பா. கேட்டுட்டு நமுட்டு சிரிப்பு. பசங்களோ “மழை வராடா”ன்னும் “அச்சச்சோ, கொடை கொண்டுவரலையே”ன்னு கேலி பேசுவா.

 என் போண்ணு படிப்புலேயும், விளையாட்டுலேயும் சுட்டி. கல்சுரல்ஸில் ஸ்கூலுக்கு பேர் வாங்கித் தந்தா. எல்லாம் லக்ஷ்மி ட்ரைனிங்க். ஸ்கூலே மழையைப் பாத்து வியந்தது. பேரன்ட்ஸ் டீச்சர் சந்திப்பில் போரச்சே எல்லோரும் “நீங்கதான் மழையின் அப்பாவா”ன்னு கேக்கரச்சே அந்த திருக்குறள் ஞாபகம் வரும்.

என் கண் முன்னாடி மழை கிடுகிடுன்னு வளர்ந்தா. மழை என்ற வார்த்தையை கேட்டா நமக்கு என்ன தோணும்? ரிம் ஜிம் சத்தம், பளிச்சுன்னு மின்னல், இடி, கொட்டர மழையில் ஆத்து பால்கனிலேந்து விழும் நீர்த்திரை, மழையைக் கொண்டு வந்த மேகம், கொட்டிமுடிச்சு கலைஞ்சப்புரம் தெரியும் நீல வானம், அதைக் கீறிண்டு வரும் சூரிய ஒளிக்கற்றை. கண்ணைப் பறிக்கும் வானவில். என் குழந்தை மழை இது எல்லாமும். இன்னும் கூட!

அவள் தன் விருப்பு வெறுப்புகளையும், ஆசைகளையும், கோப தாபங்களையும் வெளிப்படுத்தரச்சே மேலே சொன்ன எல்லாமே கண்முன் வந்து ஜாலம் காட்டும். மழை, மின்னல் இடி எல்லாமே ஒண்ணு பின்னாடி ஒண்ணா. “அப்பா என்னை எங்கேயாவது அழைச்சிண்டு போ!” “எங்கேடி”ன்னா “குத்தாலம், அல்லது கோவா”ம்பா. “கிட்டக்கேயா இருக்கு லீவு விட்டதும் போலாம்”னு சொன்னா கண்ணில் நீர் தளும்பும். ஒரு லீவுக்கு கோவா போனோம். அங்கே பெஸ்ட் டயம் மழைக்காலம். அத்தனை குதூகலம். அவளோட சேர்ந்து நாங்களும்.

“அப்பா, எல்லோரும் மழை வேணும்னு பிரார்த்தனை செய்யரா. வந்துடுத்துன்னா எப்போ நிக்கும், எல்லா வேலையும் கெட்டுப்போயிடுத்தேன்னு அங்கலாய்கரா, சொட்டு கூட நனஞ்சுடப்பிடாதுன்னு குடையை, ரைன்கோட்டை மாட்டிண்டு கிளம்பரா, வேண்டி வரவழைச்சதை, நாம் உயிர்வாழ அத்தியாவசியமானதை ரெண்டு கையையும் நீட்டி வரவேற்கத் தெரியலை”ன்னு சொல்லுவா. மழையில் நனைஞ்ச மழைக்கு ஜலதோஷம் வந்துடும் அதிசயத்தை பார்த்தோம். நுணி மூக்கு சிவந்து, கருமேகத்தின் ஓரத்தில் சாயங்கால சூரியன் பட்டா மாதிரி.

அன்னைக்கு எங்கேயோ ஃப்ரெண்ட்ஸோட வெளீல போயிட்டு வரச்சே அழுதுண்டே வந்தா. என்னமோ ஏதொன்னு பயந்துட்டோம். வயசுப் பொண்கள் ஊரில் நடமாடறதே ரிஸ்க். கூட எவ்வளவு பேர் இருந்தாலும் நானும் கூடப்போனாத்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. நல்லவேளை அழுதுண்டே வந்ததுக்கு காரணம் வேர. வழியில் வயசான தம்பதி ஒண்ணுமில்லாம இருக்கரதை பாத்திருக்கா. ரெண்டுநாளாய் சாப்பிடலையாம். கையில் இருந்த 500₹ கொடுத்துட்டு வந்தாளாம். அதை வச்சுண்டு என்ன செய்வதுன்னு அவாளுக்கு தெரியலையாம். அவாளை அழைச்சிண்டு போய் உதவணும்னா, இவ கூடப்போனவா “வாடி போலாம்”னு இழுத்துண்டு வந்துட்டான்னு அழுகை.

இவளுக்கு கோபம்னா தள்ளிப்போய் நின்னுடுவேன். பாத்துண்டே இருக்கச்சே முகம் கருக்கும். கண்களில் எண்ணங்கள் அலைமோதத் தெரியும். எதையாவது தூக்கி எறிவா. சத்தம் இடி மாதிரி கேக்கும். 

ஆனா அவ கோச்சுண்டா அதில் ஒரு நியாயம் இருக்கும். கோவத்துக்கு காரணம் ஆத்தில் நடந்ததா இருக்காது. வெளீலே பாத்தது கேட்டதை ஆத்தில் நடந்தது ஞாபகப்படுத்திடும். அவளுக்கு கெட்டவார்த்தை சொன்னா ஆகாது. என் நாக்கு சைட்டில் கூலி ஆளுங்களோட பழகி யோசிக்காம எல்லாப் பக்கமும் புரளும். அது காதில் விழ மாடி ரூமுக்குப் போய் சாமான்களை உருட்டுவா. டிரான்ஸிஸ்டெர் ரேடியோ ஒண்ணு, கிணத்தடீலெ துணி தோய்ச்சிண்டிருக்கும் லக்ஷ்மி கால்கிட்டே வந்து விழுந்தது. “முதல்ல அப்பா பேசுவதை நிறுத்தசொல்லு”ன்னு. 

அப்புரம் நானே போய் மன்னிப்பு கேக்கணும். இல்லைன்னா முகத்தை காமிக்க மாட்டா. அவ முகத்தை பாக்காம நான் எப்படி உயிர்வாழ்வேன்?

ஒரு 18 வயசு பொண்ணு எப்படி இருப்பா? என் மழைகிட்டே வித்யாசம் என்ன? பாலைவனம், மலை, நீர்கழணி, காடு, ஆத்துவெள்ளம்னு பாகுபாடு பாக்கமா மேகம் எப்படி மழை பொழியுமோ அப்படி எல்லோர் கிட்டேயும் அன்பை பொழிவா. சண்டை போட்டு காரியத்தை சாதிச்சாலும் அப்பாமேல் அபூர்வமான ஸ்நேகம். அப்பா மகளுக்கு இடையே சொல்லொண்ணா பிரியம் இருக்கும்தானே. அதே சமயத்தில் தன் அம்மாவோட கூடப்பிறந்தவள் மாதிரி, எனக்கு மச்சினியோன்னு தோணும். 

மழை படிப்பு முடிக்கட்டும், நல்ல வரன் பாத்து கல்யாணத்தை பண்ணிடணும்னு நாங்க பேசிண்டோம். அப்போதான் இவளோட நெருங்கிய ஸ்னேகிதி கல்யாணம் நிச்சயமாகி வந்து கூப்டுட்டு போனா. உள்ளூர் கல்யாணம்தான், மழையை ஒருநா முன்னாடியே அனுப்பி வைங்கோன்னு, அவளை ஜாக்கிரதையா பாத்துக்கரோம்னு உத்தரவாதம்.

அந்த கல்யாணத்துக்கு போயிட்டு திரும்பினதும்தான் மழைகிட்டே அதீத மாற்றங்கள் ஆரம்பிச்சது. இடியும் மின்னலுமா, ஆத்தில் தினமும் தீபாவளி பண்ணினவ ரெண்டு நாளாய் ரூமிலேயே அடைஞ்சிண்டு, சாப்பிட கூப்பிட்டா தட்டில் எடுத்துண்டு போய் தனியா சாப்பிடுவதும், ஏதாவது கேட்டா ஒத்தை வார்த்தையில் பதில் சொல்லிட்டு மூஞ்சியை திருப்பிண்டு, நம்ம குழந்தையான்னு இப்படீன்னு.

 “எங்கிட்டே ஒன்ணும் சொல்ல மாட்டேங்கரா, நீங்க ஆச்சு உங்கள் பொண்ணாச்சு.” கதவைத்தட்டி “வரட்டுமா”ன்னு கேட்டுண்டு உள்ளே போரேன். சினிமாவில் வராப்புலே குப்புர படுத்துண்டு விசும்பல். கல்யாண வீட்டில் இவள் மனசுக்கு பிடிக்காதது எதாவது நடந்ததா?

நான் வந்துட்டேன்னு தெரிஞ்சதும் எழுந்து அப்பான்னு கட்டிண்டா. ஒரு நிமிஷம் அடிக்கொலையை உலுக்கித்து. 

என் குழந்தைக்கு என்ன ஆச்சு? அவள் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டாளே! தெய்வமேன்னு தொய்ஞ்சு போனேன். “என்னடீ, ஏதுவா இருந்தாலும் அப்பாகிட்டே சொல்லு”ங்கிரேன். 

மூச்சே நின்னுடுத்துன்னு நினைக்கரச்சே சொல்ரா, “அப்பா, நான் கல்யாணமே செஞ்சுக்க போரதில்லை, சொல்லிட்டேன், அவ்ளோதான்.” “ஏண்டி செல்லம், ஏன் அப்படி சொல்ராய்?” என் ஃப்ரெண்ட் கல்யாணம் செஞ்சுண்டு அவா அப்பா அம்மாவை விட்டு பிரிஞ்சு போரதைப்பாத்தேன், என்னால் அப்படி செய்யமுடியாது. கடைசீ வரைக்கும் உங்கூடவே வச்சுக்கோ. முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதே.”

மழையைப்பெத்த அப்பா நான் என்ன சொல்ரது? 

“சரிடா, எங்கூடவே வச்சுக்கரேன், இப்போ அழுகையை நிறுத்து.” சட்டுன்னு மேகம் கலைஞ்ச வானம்போல் அவள் முகம் பிரகாசிக்கறது. அந்த ரூமையே வெளிச்சத்தில் குளிப்பாட்டிட்டு நான் உக்காந்திருப்பதை மறந்து எழுந்து கீழே ஓடரா.

ராத்திரி படுக்கையில் “என்ன மாயம் செஞ்சேள், உங்க பொண் டக்குன்னு மாறிட்டா”ன்னு லக்ஷ்மி வியக்கரா. “அடீயே இப்போதான் புயல் சின்னம் உருவாச்சு”னு விவரத்தை சொன்னேன். “இப்போ என்னன்னா பண்றது”ன்னு ராப்பூரா ரெண்டு பேருக்கும் தூக்கமே வரலை. மழை அவ ரூமில் ஆழ்ந்த உறக்கத்தில். 

ஒரு 10நாள் ஆனப்புரம் மழையின் தோழி, இப்போ கல்யாணம் ஆச்சே, அவள். தேநிலவு போயிட்டு அப்பா அம்மாவை பாக்க வந்தாளாம், கடைதெருவில் பாத்தேன். அவள் தான் விவரம் சொன்னா. 

கல்யாணத்துக்கு வந்த அவளின் நெருங்கிய சொந்தத்தில் ஒரு மாமி தன் பிள்ளையோட வந்திருந்தாளாம். தூரத்து சொந்தமும் கூட. மழையைப்பத்தி விசாரிச்சு தன் பிள்ளைக்கு கேக்கலாமான்னு விவரம் சேகரிச்சிருக்கா. பிள்ளையாண்டனும் கூட இருக்கவே, “இந்தப்பொண் உனக்கு பிடிச்சிருக்கா பாரு, எல்லாம் திகைஞ்சு வந்தால் அவாத்துக்குப்போய் பேசலாம்”னு சொல்லியிருக்கா. அவன் மழைகிட்டே பேச்சுக்கொடுத்து, விஷயத்தை போட்டு உடைச்சிருக்கான். “ஐ லவ் யூ”னு வேர சொல்லி! “சீக்கிரமே வந்து கல்யாணம் செஞ்சு அழைச்சிண்டு போரேன்”னு சவால் வேர. 

“மழை எப்படி இருக்கா, உங்ககிட்டே நடந்ததை சொன்னாளா?”சரியாப்போச்சு.

விசாரித்ததில் நல்ல குடும்பம், சுந்தருக்கு நல்ல வேலை,  ஹாண்ட்ஸம். இந்தக்காலத்து பையன். என் மழையை அவள் ஓட்டத்தில் பிடிச்சு நிறுத்தியிருக்கான்னுதான் சொல்லணும். இவளை அவன் ரொம்பவே கவர்ந்திருக்கான். அதுதான் மழையை பாதிச்சிருக்கு. எல்லாம் திடீர்னு நடந்தது அவளால் ஏத்துக்க முடியலை. சீக்கிரம் நாமும் நம்மாத்தைவிட்டு பிரியணுமோன்னு அவளுக்கு தோணியிருக்கு.

“மேகத்தின், மழையின் தன்மை அது ஒரே இடத்தில் பொழியக்கூடாது. அது எங்கே உருவாகி எங்கே போகணும்னு  காற்று சொல்லிக்கொடுக்கும். மழை இப்போ தனக்குன்னு ஒரு வீட்டைத்தேடி போகும் தறுணம் வந்துடுத்து. இன்னொரு குடும்பத்தில் மழைபொழிந்து அங்கே புது விதை முளைவிட, அங்கே இருக்கும் செடிகளை தழைக்கச் செய்யணும். மழை பிறந்ததும் எப்படி எங்கள் வாழ்க்கை தழைத்ததோ அதுபோல இப்போ இதுதான் விதி.” சொல்லிப்புரிய வச்சேன். 

“அப்போ நீ, அம்மா?” “நாங்கள் எங்கள் வழி. ஆனா செல்லம், நீ உலாத்தும் வானத்தில் உன்னைப் பாத்துண்டே நாங்கள் கண் எட்டும் தூரத்தில் வருவோம். நீ நீயா இருப்பதை பாத்து நாங்கள் இங்கேயே சந்தோஷமா.” 

“நான் கல்யாணம் பண்ணிண்டு எங்காத்துக்குன்னு நீ சொன்ன அந்தாத்துக்கு போனப்புரம் நீ சந்தோஷமா இருப்பியாப்பா”ன்னு கேட்டா.

 “தெரியலைடீ”ன்னேன். நிஜமாவே தெரியலை. 

புரிஞ்சுட்டாமாதிரி எழுந்து போன மழை என் கண்ணுக்குள் வந்து பூந்துண்டா. தோளில் போட்டிண்டிருந்த முழுத்துண்டும் ஈரமாச்சு.

No comments:

Post a Comment