Wednesday, August 12, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 6

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 6 
By (sujatha&venkatesan)6381369319…

கார்த்தால எதிரே ஓட்டல்ல சுடச்சுட இட்லி வடை செட்டி நாட்டு மணத்தோட…சாப்பிட்டு டவுன் பஸ் ஏறரோம்.  

கோயில் நெருங்கிவிட்டது... தொலைவிலிருந்து பார்க்கும்போது உயரமான மதில் சுவர்களும் தென்னைமரங்களும் அழகாகக் காட்சியளிக்கின்றன. நான்கு புறமும் பெருமதில்கள் சூழ்ந்த, உயர்ந்த இராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கோயில் கட்டட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பெருமாளின் நின்ற, நடந்த, இருந்த என முக்கோலங்களும் அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்பாகும். மூலவர் பெயர் சௌமிய நாராயணன், தாயார் மகாலட்சுமி.

மதுரையிலிருந்து 65 கி. மீ தொலைவிலும், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் திருக்கோஷ்டியூரில் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்...

நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 95-வது தலம், நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலத்தை பெருமாள், தேவர்களுக்கு காட்டியருளிய இடம். இந்திரன் பூஜித்த சவுமியநாராயணர் விக்கிரகம் உற்சவராக இருக்கும் ஆலயம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது சவுமியநாராயணர் கோவில்

.பிரம்மதேவரிடம் வரம் பெற்ற இரண்யகசிபு, தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி மகாவிஷ்ணுவை வேண்டினர் தேவர்கள். இதையடுத்து திருமால், இரண்யகசிபுவை வதம் செய்வது பற்றி ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனால் தேவர்கள், ‘இரண்யகசிபுவின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்றனர்.
அதன்படி இத்தலத்தை தேர்வு செய்தார் திருமால். அதற்கு ஒரு காரணம் இருந்தது. இந்தப் பகுதியில் கதம்ப மகரிஷி என்பவர் விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவம் இருந்து வந்தார். அவர் தன்னுடைய தவத்திற்கு எந்த வித தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார். எனவேதான் இந்த இடத்தை திருமால் தேர்வு செய்தார்.

ஆலோசனை நடந்தபோது, தான் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்யப்போவதாக விஷ்ணு தெரிவித்தார். இதையடுத்து அந்த அவதாரத்தை தங்களுக்கு காட்டியருள வேண்டும் என்று, தேவர்களும், கதம்ப மகரிஷியும் கோரிக்கை வைத்தனர். அதன்படி நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே, இறைவன் இத்தலத்தில் தேவர்களுக்கு தன்னுடைய நரசிம்ம அவதாரத்தை காட்டியருளினார். பின்னர் அவர்களுக்கு நின்ற, நடந்த, இருந்த, கிடந்த என நான்கு கோலங்களைக் காட்டி, இங்கு எழுந்தருளினார்

தேவர்கள் கோஷ்டி அதாவது கூட்டம் சேர்ந்த இடமாக அமைந்தமையால் இத்தலம் திருக்கோஷ்டியூர் என அழைக்கப்பட்டதாக புராணக்கதையில் கூறப்பட்டாலும், திருக்கு + ஓட்டியூர் = திருக்கோட்டியூர் என்பதே பொறுத்தமாகத் தெரிகிறது. திருக்கு என்றால் பாவம் என்றுப் பொருள் எனவே பாவங்களை ஓட்டக்கூடிய ஊர் என்று பொருள் உணர்ந்துக் கொள்ளமுடிகிறது.

இந்த ஆலயத்தின் விமானம் அஷ்டாங்க விமானமாகும். இது ஓரிரு கோவில்களிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இந்த விமானத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் மூன்று தளங்களாக உள்ளது. விமானத்தின் வடபக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது விசேஷமாகும். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

இத்தல இறைவனான சவுமியநாராயணருடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இருக்கிறார்கள். மேலும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, இந்திரன் ஆகியோரும் உள்ளனர். திருமாமகள் என்ற பெயரில் தாயாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் சந்தான கிருஷ்ணன் என்ற பெயரில் கிருஷ்ணன் வீற்றிருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். இத்தல இறைவனை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்து வழிபட்டுள்ளனர்.

இந்த ஆலயத்தில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் வைத்து மூடி வீட்டின் பூஜை அறையில் வைக்கிறார்கள். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், மாசி தெப்ப திருவிழாவின் போது, இந்த விளக்குடன், மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக் கரையில் ஏற்றிவைத்து வழிபடுகின்றனர். அந்த நேரத்தில் புதியதாக வேண்டுதல் செய்ய வரும் பக்தர்கள், இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

ஓம் நமோ நாராயணாய' எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ்தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது தளத்தில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாவது தளத்தில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருள் வழங்கிக்கொண்டிருக்கிறார்.

பிரகாரத்தில் ஒரு கிணறு காணப்படுகிறது, இந்த கிணறை "மகாமக கிணறு' என்று அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.

இத்தலத்தில் திருவருட்பாலிக்கும் பெருமாள் பேரழகு கொண்டவர் என்பதால் செளம்ய நாராயணர் என்பது திருநாமம். பொதுவாக ஆலயங்களில் உற்சவ விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது.

இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம். திருமால் இரண்யனை வதம் செய்யும்வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த செளம்ய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது.

கோயிலுக்குள் நுழையும்போது பலிபீடம், துவஜஸ்தம்பத்தைப் பார்க்கும் நாம், பின்னால் நந்தியையும் காணும்போது மெல்லிய வியப்பு மேலிடுவதைத் தவிர்க்க முடியாது. ஆமாம், இங்கே ஒரு சிவ சந்நதியும் இருக்கிறது. இந்தத் தலத்தில் இரண்ய வதம் பற்றிய திட்டத்தைத் தீட்டும்போது ஈசனும் அதில் பங்கேற்றதன் சாட்சி! இவரை ‘சரபேஸ்வர லிங்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

தனிச் சந்நதிக்கு முன்னால் ஈசனைப் பார்த்தபடி நந்தி அமர்ந்திருக்க, சந்நதிக்குள் சிறு உருவில் இந்த லிங்கம் அருட்பாலித்துக் கொண்டிருக்கிறது. இவருக்கு முன்னால், சந்நதிக்குள் வேல் தாங்கிய முருகன், சனகாதி முனிவர்கள், நாகர் சிலைகளும் தரிசனமளிக்கின்றன. அடுத்து, சக்கரத்தாழ்வார் தரிசனம் நல்குகிறார்.

சுற்றுப் பக்கத்தில் ருக்மிணி-சத்யபாமா சமேத நர்த்தன கிருஷ்ணன் அழகே வடிவாய் காட்சியளிக்கிறார். இதே திருத் தோற்றத்தையும், கண்ணனின் இன்னும் பல வான அழகுத் தோற்றங்களையும், இந்தத் தலத்தில் தரிசித்து மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அப்போது மதுரையை ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய குரு, செல்வநம்பி என்பவர்.

திருக்கோஷ்டியூரைச் சேர்ந்தவரான செல்வநம்பி வருடந் தவறாமல் கிருஷ்ணனின் அவதார விழாவை இந்த ஊரில் சிறப்பாக நடத்துவார். ஒருமுறை அவர் பெரியாழ்வாரை இந்த விழாவைக் காணவருமாறு அழைப்பு விடுத்திருந்தார். வந்த பெரியாழ்வார் அப்படியே பிரமித்துப் போய் நின்றுவிட்டார்.

அவருக்கு திருக்கோஷ்டியூர், ஆயர்பாடியாகவே தெரிந்தது. அங்கே கண்ணனின் குறும்புத்தனங்களைக் கண்டு மனம் விம்மினார். ‘வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தனில்’ என்று பாடி சிறப்பித்தார்.

அவர் கண்டு களித்த காட்சிகளில் ஒன்றுதான் இந்த (காளிங்க) நர்த்தன கண்ணன் வடிவம். இந்த திவ்ய தேசத்தில் எம்பெருமான் நின்றும், கிடந்தும், அமர்ந்தும், நடந்தும் தனது பலவகை திவ்ய சொரூபங்களைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறார். இந்த நர்த்தன கிருஷ்ணன் உருவம் நடந்த திருக்கோலத்தைக் காட்டுகிறது.

மேலே சில படிகள் ஏறிச் சென்றால் பெருமாள் சயன கோலத்தில் அற்புத வடிவில் தரிசனம் அளிக்கிறார். இவரது கருவறைக்குள் தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள். வழக்கம்போல ஸ்ரீதேவி-பூதேவி பிரதானமாக அங்கம் வகிக்க, வழக்கம்போல இல்லாமல் பிரம்மா இடம் பெற்றிருக்கிறார். பிரம்மாவுடன் அவரது பத்தினிகளான சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி மூவரும் உடன் அமைந்திருக்கிறார்கள்! இம்மூவரும் வீணாகானம் இசைத்து திருமாலை மகிழ்விக்கிறார்கள். 

இந்தத் தலத்தில் பெருமாள் உறையக் காரணமாக இருந்த கதம்ப மகரிஷியும் இருக்கிறார். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்று பெயர். மழலை பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், விரைவில் அவர்களுக்கு மழலை வரம் கிடைப்பதாக நம்பிக்கை.

 பெருமாளின் திருவடியருகே அடங்கிப்போன மது-கைடப அரக்கர்கள், தேவேந்திரன், காசி மகாராஜா மற்றும் சந்திரனின் பேரனான அதாவது புதனின் மகனான புரூரவ சக்கரவர்த்தி என்று ஒரு திருமாலடியார் பெருங்கூட்டமே காட்சி தருகிறது. இவ்வாறு தேவர்கள் நடுவே தோன்றியமையால் ‘ஸ்தித நாராயணன்’ என்றும் திருமால் பெயர் கொள்கிறார். 

பாற்கடல் காட்சிபோல இங்கும் ஆதிசேஷன்மேல் பள்ளிகொண்டதால், ‘உரக மெல்லணையான்’. உரகம் என்றால் பாம்பு. மெல்லணை என்பது அதன் மிருதுவான உடல் படுக்கை. உரக மெல்லணையான் கொலுவீற்றிருக்கும் கருவறை விமானம், அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது. 108 திவ்ய தேசங்களிலேயே இங்கும், அருகே, மதுரையைச் சேர்ந்த திருக்கூடல் தலத்திலும்தான் இத்தகைய, ஆகம விதிகளுக்குட்பட்ட அஷ்டாங்க விமானத்தைக் காண முடியும்!

இராமானுஜர், கோபுரம் மீது ஏறி நின்று உபதேசம் செய்த இடத்தை, இன்றும் கோயிலுக்குள், குறுகிய பாதை வழியாக கோபுரத்தின் மேல்தளம் சென்றுப் பார்க்கலாம்.

ஆபீஸ்ல பணம் கட்டிட்டு பூஜை முடிந்து அழைத்துப்போக ஒருத்தர் வருவார். பத்து பேர் சேர்ந்தாதான் கோபுரத்தில் ஏறலாம்னு சொல்றா. இவரா டைம் ஆறது திருமயம் போகனும்கறார். 

ராமானுஜர் பாதம் பட்ட மந்திர உபதேசம் பண்ண இடத்தை பார்க்காம வரமாட்டேனுடறேன். எங்களை மாதிரி இன்னும் ரெண்ட பேர் நிக்கறா..திருப்பணிங்கறதால பாலாலயம்... உற்சவரை வாகன மண்டபத்த சிற்பங்களை மறுபடியும் ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்தபோது ஐந்து பேர் வெய்ட்டிங். இவர் போய் வாட்ச்மேனை கூட்டிண்டு வரார். இருட்டான குறுகலான கருங்கல் படிகளில் வாட்ச்மேன் டார்ச் வெளிச்சத்தில் தலை இடித்துக்கொள்ளாமல் மெல்ல ஏற்றோம். 

அடுத்து, இரண்டாவது தளத்தில் பெருமாள் தேவி-பூதேவியுடன் நின்ற நாராயணனாக சேவை சாதிக்கிறார். மூன்றாவதான பரமபதநாதன் கொலுவிருக்கும் தளத்திற்கு செல்ல குறுகலாக மேலேறும் படிகள் உள்ளன. ஒரு கட்டத்தில் மேல் விதானம் தலையில் இடிக்க, சற்றே குனிந்து, உடலைக் குறுக்கிக் கொண்டுதான் போக முடியும்.

கோபுரத்தின் இந்த உச்சியிலிருந்துதான் ராமானுஜர் உலகோர் அனைவரும் உய்வடைய அஷ்டாக்ஷர (எட்டெழுத்து)  மந்திரத்தையும், அதன் பொருளையும், அதன் பலனையும் பகிரங்கமாக அறிவித்தார். ஊரைப் பார்த்தவண்ணம் 

உலகுய்ய இந்த உபதேச ரஹஸ்யார்த்தங்களைச் சொன்ன இடத்தில் சுவாமி ராமானுஜரின் கல் திருமேனியும், சுதை மேனி ஒன்றும் அமைத்திருக்கிறார்கள். அந்தத் திருமேனியின் பின்னிருந்து நாம் பார்த்தால் ஒரு வீதி அழகாகத் தெரிகிறது. ஸ்வாமி ராமானுஜர் சொன்னதை பயபக்தியுடன் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள் எப்படி இருந்து கேட்டிருப்பார்கள் என்ற கற்பனையை நம் மனத்திரையில் போட்டுக் கொள்ளலாம். அந்தத் தெருவில்தான் நம்பிகளின் இல்லமும் இருந்திருக்கிறது. அதையும் நாம் அஷ்டாங்க விமானத்தின் மேலிருந்து தரிசிக்கலாம்.

இந்த கோபுர உச்சியிலிருந்து பார்த்தால் திருக்கோஷ்டியூர் நம்பிகளும், ராமானுஜரும் வாழ்ந்த வீடுகள் அமைந்திருந்த பகுதியைக் காணலாம். இந்த வீடு ‘கல்திருமாளிகை’ என்றழைக்கப்டுகிறது. நம்பியின் வம்சாவழியினர் இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகிறார்கள். கீழிறங்கி வந்தால் தாயார் திருமாமகள் நாச்சியாரை தரிசனம் செய்யலாம்.

வழிபட்டுவிட்டு வெளியே வந்தபோது ஒரு செய்தி நமக்குச் சட்டென நினைவுக்கு வர, அருகில் இருந்தவர்களிடம் நம்பி அவர்களின் வீடு எங்கேயென வினவ, புதிதாகப் பெயின்ட் அடிக்கப்பட்டிருந்த வீட்டைக் காட்டினார்கள். வீட்டுக்கு மேலேr

“திருக்கோஷ்டியூர் நம்பிகள் கல்திருமாளிகை” என்று எழுதியிருந்தது.
வாயில் முன்பாக சிறிது நேரம் நிற்கிறோம். நினைவுகள் ஆயிரமாண்டுகள் பின்னோக்கி நகர்கின்றன. நம்பி அவர்கள் இங்கு நின்றுக்கொண்டு கோயிலைப் பார்ப்பதுத் தெரிகிறது.

"யாரது?"

உள்ளிருந்துக்கேட்ட பெண் குரல் நம்மை நிகழ்காலத்துக்குக் கொண்டுவர, “நான் திருக்கோட்டியூர் நம்பியின் வீட்டைப் பார்க்க வந்திருக்கிறோம். 

நம் பதிலைக்கேட்டு வீட்டுக்குளிருந்து வந்த பெண்மணி நம்மை அன்பாக உபசரித்து, தனதுபெயர் செண்பகம் எனவும், தாங்கள் நம்பியின் வம்சா வழியினர் எனவும் கூறி வீட்டினுள் அழைத்துச்சென்று வீட்டைச் சுற்றிக்காண்பித்தார். அது பதினாறுகால்களுடன் கூடிய மண்டபம் போன்றிருந்ததை சுவர்களால் பிரித்து பல அறைகளாகப் பிரித்திருக்கின்றனர். அன்று முழுவதும் மின்சாரத்தடையாம் டார்ச் லைட் வெளிச்சத்திலேயே வீடு முழுதும் சுற்றிக்காண்பித்தார்.

நம்பி அவர்களின் படத்துடன்கூடிய பெருமாள் படங்கள் நிறைந்திருந்த ஒரு வழிபாட்டு அறைக் காண்பித்து
"சேவிச்சுக்கோங்கோ"

எனக்கூற நாமும் வணங்கிவிட்டு, அங்கிருந்த நம்பியின் வரையப்பட்டப் படத்தை, அனுமதியோடு படம் எடுத்துக்கொண்டேன்.
அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்்தோம்..
சரி... யார் இந்த திருக்கோட்டியூர் நம்பி எனக்கேட்கிறீர்களா?(படங்கள் 1)திருக்கோஷ்டியூர் கோயில் 
    2)உற்சவர்3)நம்பி இல்லம்4)கோபுரத்தில் இராமானுஜர்
  தொடரும்




No comments:

Post a Comment