Wednesday, August 12, 2020

ஊருக்குபதேசம்

ஊருக்குபதேசம் (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam

என் வாழ்க்கை மத்தவாளது போல அமையலையாக்கும். எப்பவும் ஏதாவது ஒண்ணு மனசை வருத்தும். நிராசை ரொம்பி வழியும். நெஞ்சு கனத்துப் போகும். மார்பில் இடது பக்கமா கொழுந்து விட்டு எரியரா மாதிரி ஃபீல் ஆகும்.

அதனாலேயோ என்னமோ, எப்போவாவது ஏதாவது சந்தோஷப்பட்ரா மாதிரி நடந்தா என்னை நானே நம்பமுடியாம கிள்ளிப்பாத்துப்பேன். என் பொண் வத்சலா கேப்பா “என்னப்பா? இடது கை, முழங்கைக்கு மேலே சிவப்பா கன்னிப்போயிருக்கு?” கிள்ளிண்டது!

என் சிநேகிதன் தியாகராஜன் சொன்னான், “நீ அனாவசியத்துக்கு எந்த விஷயத்தையும் உன்னை பாதிக்க விட்டுடராய். பல விஷயங்களில் நாம விட்டேத்தியா இருக்கக் கத்துக்கணும்.” “அது எப்படி?” “இதுக்கெல்லாம் கிளாஸ் எடுக்க முடியாது, நீயா உன் போக்கை மாத்திக்கோ. இல்லைன்னா ஸ்ட்ரெஸ் ஏற்பட்டு பலவிதமான உடல் உபாதைகள் வரும், ஸ்ட்ரோக் வரும். கோமாவில் விழுவாய், பாரு நீதான் உன் பொண்ணை கரை சேர்க்கணும், அவளுக்கும் பாரமா ஆகிடாதே.” இப்படி நல்ல அட்வைஸ் நிறைய தருவான். நான் சட்டை செய்யறதில்லை. ஆனால் பிர்ச்சனைன்னா அவனுக்குத்தான் போன் போட்டு சொல்லுவேன். பொறுமையா கேட்டுப்பன்.

என்னைப்போல் ஒருத்தனுக்கு அப்படி ஒரு நண்பன் இருப்பது நல்லது.

நான் சுந்தரேஸன், என் பொண்ணு (வேலைக்குப் போரா, சுவாதி, துலாராசி, வர சித்திரைக்கு 25 ஆரது) வலசர்வாக்கத்தில் ஜாகை. சொந்த வீடு. 

தியாகராஜன் GN செட்டித் தெருவில். நான் அடுத்த வருஷம் ரிடயர் ஆகப்போரேன். அவன் என்னைவிட ரெண்டு வயசு சீனியர். என்கூடத்தான் வேலை பார்த்தான். ஜாலியா பையனை கல்யாணம் செஞ்சு வச்சுட்டு அப்பப்போ அவனைப் பாக்க போரேன்னுட்டு சிங்கப்பூர் போவன். வரச்சே என பொண்ணுக்குன்னு சாக்லேட் வாங்கிண்டு வருவன். “என் பொண்ணு கிட்டே இத்தனை ஆசையா இருக்காயே, உன் பிள்ளைக்கு பண்ணிண்டிருக்கலாமே?” ஒரு தடவை கேட்டேன். “எனக்கு ஆசைதாண்டா சுந்தா, ஆன என் பையன் அவனோட சிங்கப்பூரில் வேலை பாக்கர ஒருத்தி போடோவை காமிச்சு இவளைத்தான்னு சொல்லிட்டான். சண்டை பிடிக்க முடியலை. எல்லாத்துக்கும் பிராப்த்தம் வேணும்.”

சரி, இந்த தீ மூண்டுக்கறதுன்னும் கொழுந்து விட்டு எரியறதுன்னு பேசினோமே அதுக்கு வருவம்.

முதல் தடவையா என் நெஞ்சை அழுத்திப் பார்த்த சம்பவம் நான் 13 வயசா இருகச்சே நடந்தது. எங்க தாத்தா தவறிப் போனார். எனக்கு அவரை அத்தனை பிடிக்கும். அவர் கூடவே அவர் கையைப் பிடிச்சிண்டே போவேன். இப்போ பிடிச்சுக்க மெல்லிசா, அத்தனை அன்போடு ஆள்காட்டி விரல் எங்கே கிடைக்கும்? கேட்பதையெல்லாம் வாங்கித் தருவர். அம்மா அடிக்க வந்தா தன் பின்னாடி ஒளிச்சுப்பர். அவருக்கு என்ன ஆச்சுன்னு தெரியாமலேயே அவர் கிட்டே உக்காந்துண்டு அவர் தூங்கரச்சே கைவிரல் கால்விரல் ரெண்டையும் ஏன் கட்டி வச்சிருக்கான்னு கேட்டேன்.

அப்புரம் காலேஜ் படிக்கரச்சே ஒருக்கா லீவுக்கு ஹாஸ்டல்லேந்து சேலத்துக்கு போயிருந்தப்போ ஏற்காடு போலாம்னு கிளம்பினவன் பஸ்ஸில் பர்ஸை எவனோ அடிச்சுட இறங்கி திரும்பி வந்துட்டேன். நிறைய லாஸ் ஆகலைன்னாலும், ஏமாந்துட்டது மனசை என்னவோ செஞ்சது. வாழ்க்கையில் நம்பளையும் ஒருத்தன் கேணையன்னு ப்ரூவ் செஞ்சுட்டானேன்னு. எப்படி நடந்தது, தெரியவேயில்லையே, அஜாக்கிரதையா, இல்லை அவன் அத்தனை புத்திசாலியா? வாட்டி எடுத்துடுத்து. பஸ்ஸா நடத்தராய்னு கண்டக்டரை திட்டினேன். ஒரு 6 மாசம் எல்லாரையும் எரிஞ்சு விழுந்தேன்.

எனக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணி 3 மாசம் கழிச்சு கல்யாணம். அப்போ திருச்சியில் இருந்தோம். அவாத்தில் குணசீலம். “ஏண்டா, பக்கத்துலேதானே இருக்கு அடிக்கடிப் போய் பாத்துட்டு வாயேன்.” அம்மாவே சொல்லுவா. “உன் பிள்ளைக்கு எல்லாத்தையும் சொல்லித் தரவேண்டியிருக்கு.” அப்பா அலுத்துப்பர். 

சிலவுக்கு வச்சுக்கோன்னு கொடுத்து சாயங்காலமா வந்தாப் போரும்ன்னு ஒரு ஞாயித்துக்கிழமை அனுப்பி வச்சர். நான் வந்திருக்கேன்னு அவள் அப்பா உள்ளே செய்தி அனுப்ப, வெக்கத்தில் என்னை பாக்க வெளிலேயே வரலை. அவாத்தில் தந்ததை நன்னா சாப்டுட்டு அவளைப் பாக்கமலேயே வந்துட்டேன்.

ரெண்டாம் தடவை என்னோட கோவிலுக்கு அனுப்பி வச்சா.

பாரு அத்தனை அழகு. தொட்டா சிவந்து போராப்புலே நிறம். கண்ணு அத்தனை பெரீசு. என் முகத்தைப் பாத்துட்டு பட்டாம்பூச்சி மாதிரி அடிச்சுண்டு, கீழே தரையைப் பாக்கும். பிரசன்ன வெங்கடாசலபதியை பிரதக்ஷணமா வந்து பிரஸாதம் வாங்கிண்டு சித்தே உக்காந்துட்டு போலாம்னு அவள் கையைப் பிடிச்சு இழுத்தேன். கையைப் பிடிச்சதுக்கே கண்ணில் அத்தனை காதலை காட்டமுடியுமா என்ன? 

“ஏன்தான் இத்தனை சீக்கிரமா நிச்சயம் பண்ணிட்டான்னு தெரியலை.” பக்குன்னுது. “ஏன் அப்படி சொல்ராய்?” “அச்சச்சோ தப்பா சொல்லிட்டேன். ஏன் நிச்சயத்தை செஞ்சுட்டு இத்தனை கேப் வச்சு கல்யாணத்தேதி வச்சுருக்கான்னு சொல்ல வந்தேன்.” வழிஞ்சா. அன்னைக்கு திருச்சிக்கு வரச்சே நெஞ்சில் அத்தனை மகிழ்ச்சி. ஆசை கொழுந்து விட்டு எரிஞ்சுது. உடம்பெல்லாம் பரவித்து. பஸ்ஸில் டிக்கெட் வாங்கவே மறந்துட்டேன். மாட்டிண்டு ஃபைன் கட்டினேன்.

பார்வதி அவளை அப்படியே உரிச்சு வச்சாப்போல ஒரு பொண்ணை பெத்துக் கொடுத்தா. “என்னை பிடிச்சதா, இதோ என்னோட நகல் இந்தா வச்சுக்கோ”ன்னு. பொண் வத்ஸலா காலேஜுக்குன்னு போக ஆரம்பிச்சதும் இவள் 1 மாசம் ஹெபாடிடிஸ் வந்து முத்திப்போய் போய்ட்டா. துரும்பா ஆஸ்பத்திரி படுக்கையில் அவளைப் பாத்து, இனிமேல் ஒண்ணும் பாசிபிள் இல்லைன்னு மனசுக்குத் தெரிஞ்சப்போ நம்பவே முடியாம நெஞ்சில் எழும்பின தீ மூளை வரைக்கும் தகிச்சது.

இப்படி சொல்லிண்டே போலாம். சொந்த, தனிப்பட்ட வாழ்க்கையில் அதிர்வுகள் பல பேர் அனுபவிச்சிருப்பா. கஷ்டம் இதே மாதிரியோ, இல்லை வேர ரூபத்திலோ வந்து வாட்டியிருக்கும். இவன் மட்டும் அப்படி என்னத்தை பெரீசா பட்டுட்டான்னு இப்படி அலட்டிக்கரான்னு படும். வெளியுலகில் நடப்பதும் என்னை பல சமயம் நெகிழ வைக்கும் இல்லை கொதிச்சிண்டு எழுந்துக்க குதிக்க வைக்கும். 

தெருவில் குப்பைத்தொட்டி நிரம்பி வழிஞ்சு கிடந்தா என்ன ஊர் இப்படி நாசமாப் போய் கிடக்குன்னு ப்ரைம் மினிஸ்டர் வரைக்கும் திட்டித்தீப்பேன். ஏதாவது ஊழல் நடந்து அதைப்பத்தி செய்திகள் டிவீயில் காமிச்சா உலகமே நம் நாட்டை அசிங்கப் படுத்திட்டா மாதிரி நெஞ்சு பதபதைக்கும். சொல்லிண்டே போலாம். அடிக்கடி தியாகுவுக்கு போன் செஞ்சு அவன் உயிரை எடுத்திண்டிருந்தேன். நெஞ்சில் எப்போவும் ஒரு தணல் மாதிரி தகிச்சிண்டு. இப்படியே போனால்? அவனோட பேசினா சித்தே நன்னா இருந்தது. 

ஒருநாள் என் நண்பன் தியாகு கிட்டேந்து போன். வழக்கமா நான்தான் கூப்பிடுவேன், அன்னைக்கு அவனே ஆச்சர்யமா. அவன் சிங்கப்பூரிலேயே செட்டில் ஆகப் போரதாயும், அடிக்கடி பேசிக்க முடியாதுன்னும், முடிஞ்சா வந்து ஒரு நடை பாத்துட்டுப் போன்னும் அழைச்சான். போனேன். நிறைய அட்வைஸ் செஞ்சான். சின்ன உபாயங்களா சொன்னான். பிர்ச்சனைகளை எப்படி நம்மை பாதிக்காத மாதிரி யோசிக்கணும்னு சொன்னான். புரிஞ்சா மாதிரி இருந்தது.

ஒரு மாசம் கழிச்சு வத்ஸலாவுக்கு வரன் பாக்கலாம்னு போனில் ஜோஸியர்கிட்டே பேசரச்சே கேட்டிண்டிருந்தவள் “அப்பா சித்தே உன்னோட பெசணும்”னா. “என்னடா செல்லம்”னு கூப்பிட்டு பக்கத்தில் உக்காரச் சொன்னேன். ஆபீஸில் ஒருத்தனை விரும்பராளாம். அவரைத்தான் பண்ணிப்பேன். உனக்கும் அவரைப் பிடிக்கும். பிடிக்கலைன்னாலும் பரவாயில்லைன்னுட்டா. கேட்டுட்டு நெஞ்சு தகிக்க ஆரம்பிச்சது. இருப்பது ஒரே சொந்தம், இவள் இப்படி சொல்ராளே? 

“எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும் அப்பா. அத்தனை புத்திசாலி, சமத்து, என்மேல் ஆசையா இருப்பர். அம்மா மட்டும்தான். அடிக்கடி என்னோட கோவிலுக்கு வருவர்!” என்னமோ தெரியலை குணசீலத்தில் பாருவோட போனது கண்முன்னாடி வந்து ஆடித்து. ஏன் இந்தக் குழந்தை மனசை தகிக்க வைக்கணும், சந்தோஷமா கல்யாணம் செஞ்சுக்கட்டும்னு, “கூட்டிண்டு வா பையனைப் பாப்போம்”னு சொல்லிட்டேன்.

நிச்சயதார்த்தம் ஜாம் ஜாம்னு நடந்தது. கல்யாணத்துக்கு ரெண்டு மாசம் இருந்தது. ஆனால் இவளை வீக்கெண்டில் டயத்தை வேஸ்ட் செய்யாம அவனோட சேர்ந்து ஜாலியா சுத்திட்டு வான்னு அனுப்பி வச்சேன். லைஃப் இஸ் ஷார்ட், ஹாப்பினெஸ் இன் லைஃப் குட் பி ஷார்டர். எனக்குத் தெரியாததா? இதில் மடத்தனாமான ஈகோ, மூட நம்பிக்கை, ஜாதி மதமெல்லாம் எதுக்குன்னு தெரிஞ்சிண்டேன்.

அன்னைக்கு பஸ்ஸில் கூடவே ஏறின கனபாடிகள் ஒருத்தர் பர்ஸை தவர விட்டுட்டர். குய்யோ முய்யோன்னு கத்தரர். வண்டியை போலீஸ் ஸ்டேஷணுக்கு விடுன்னு கண்டக்டரை கெட்ட வார்த்தையில் ஏசிண்டு. இதெல்லாம் இந்தக் காலத்தில் சாத்தியமா? இவரை ந்யூசன்ஸ் கேசில் முதலில் பிடிச்சு வச்சுண்டுவா. சித்தே சும்மா இருங்கோன்னு அவருக்கும் சேர்த்து நானே டிக்கெட் வாங்கி சமாதானப்படுத்தி அனுப்பிச்சேன். “பர்ஸில் எத்தனை வச்சிருந்தேள்?” கேட்டதுக்கு 50 ரூபாயும் சில்லரையுமாம். “சே”ன்னு ஆச்சு.

அக்கம் பக்கத்தில் தெரிஞ்சவா தெரியாதவான்னு துக்கம்னா உடனே செய்தி கேள்விப்பட்டதும் போய் ஒத்தாசையா இருந்துட்டு வந்துடறது. சாவின் துக்கம் பழகப் பழக அது இயல்பான ஒரு சம்பவமா ஆக ஆரம்பிச்சதே! அதுக்காகத்தான் எதுக்குப் போலேன்னாலும் சாவுக்கு அழைக்காம போயிடணும்னு சொன்னாளோ! எல்லாம் காலம் கடந்துதான் புரியறது. இப்படி செய்யரச்சே பார்வதி போன துக்கம் கணிசமா குறைஞ்சது போல பட்டது.

ரயிலில் யாராவது குப்பை போட்டா, அதை நானே எடுத்து ஸ்டேஷனில் இறங்கினதும் டஸ்ட் பின்னில் போட்டுடறதுன்னு வச்சிண்டிருக்கேன். ரோட்டில் தொட்டி நிரம்பிக் கிடந்தா முனிசிபாலிடிக்கு போன் போட்டு சொல்லிடறது. இன்னைக்கில்லாத போனாலும் நாளைக்கு வந்து சுத்தம் செஞ்சுடரான். கையில் போன் இருக்கச்சே ப்ரைம் மினிஸ்டரை ஏன் வெய்யணும்? 

ஆத்தில் தனியாத்தான் சமைச்சு சாப்டாறது.

வத்ஸலா புருஷன் பெங்களூரில் வேலையா இருந்தவன் சிங்கப்பூரில் அசைன்மென்டுன்னு 3 வருஷம் ஆன்சைட்டுன்னு கிளம்ப இவளும் தன் வேலையை லீவ் ஆஃப் ஏப்சென்ஸ் வாங்கிண்டுட்டு கிளம்பினா. “அப்பா, நாங்க போய் செட்டிலானதும் சொல்ரேன், கிளம்பி வந்து எங்களொட ஒரு மாசம் தங்கு.” கராரா சொல்லிட்டுப் போனா. எனக்கும் தியாகுவையும் பாக்கலாம்னு ஆசையில் சரீன்னுட்டேன். சொன்னா மாதிரி போயாச்சு. மாப்பிள்ளை வந்து ஏர்போர்டுலேந்து அழைச்சிண்டு போனர். போய்ச் சேர்ந்த அன்னைக்கே தியாகு இருக்கும் இடத்துக்கு போணம்னு அவனுக்கு போன் போட்டேன். ஞாயித்துக்கிழமை ஆத்துக்கு வான்னு வழி சொன்னான்.

போனதும் ரொம்பநாள் கழிச்சு தன் கூடப்பொறந்த தம்பியை மீட் செய்யராப்புலே கட்டிண்டுட்டு உள்ளே அழைச்சிண்டு போனான். உடம்பு நன்னாவே மெலிஞ்சு, சித்தே முடியாம இருக்கா மாதிரி பட்டது. இதையும் அதையும் பேசிண்டிருந்துட்டு தனியா பால்கனிக்கு வந்து “என்னடா, உடம்பு படுத்தறதா? ஏன் இப்படி மெலிஞ்சு கிடக்காய்?” 

இந்தண்டையும் அந்தண்டையும் பாத்துட்டு “நானும் என் ஆத்துக்காரியும் இங்கே இருப்பது என் பிள்ளைக்கும் மாட்டுப்பொண்ணுக்கும் அத்தனை பிடிக்கலை. கிளம்பிடலாமான்னு யோசிச்சிண்டிருக்கேன். தினம் ஒரு வாக்குவாதம். மரியாதையே இல்லை. சென்னைக்கு வந்துட்டால் நிம்மதி. ஆனால் தனிமை வாட்டும். என்ன செய்யரதுன்னு தெரியலை, நினெச்சா நெஞ்சு பத்திண்டு எரியறது! என்ன பண்ணணும்னு தெரியலை.”

“இதெல்லாம் சகஜம். வீட்டுக்கு வீடு வாஸப்படி. எதுலேயும் அளவுக்கதிகமா பிரியம் வச்சுட்டு இப்போ இப்படி நடக்கரச்சே அப்படித்தான். எல்லாத்தையும் மனசில் ஏத்திண்டாயான்னா கஷ்டப்படுவாய். ஹெல்த் கெட்டுப் போயிடும். அப்பப்போ பல விஷயங்களில் விட்டேத்தியா இருக்கக் கத்துக்கணும். என்னைப் பாரு”.
“ஆமாண்டா, நீ சொல்ரதுதான் சரீ!” “ஏண்டா இதெல்லாம் நீதானே எனக்கு சொல்லித் தந்தாய்? மறந்து போச்சா?” 

“ஊருக்கு உபதேசம் மாதிரி சொல்லுவேன். இப்போ எனக்குன்னு வந்தது என் நெஞ்சையே சுட்டெரிக்கறதே! என்ன பண்ணணும்னு தெரியலை.” கண்ணைத் தொடச்சுண்டான்.

No comments:

Post a Comment