Wednesday, August 12, 2020

ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 23

ஶ்ரீ மஹா பெரியவாளின் திவ்யமங்கள சரித்ரம் – 23

[காற்றினிலே வரும் கீதம், ராஸபஞ்சாத்யாயி]


1966-ல் பெரியவாளின் அனுக்ரஹத்தோடு கல்கி வார இதழில், ‘பூர்ணகும்பம்’ என்ற தலைப்பில், நம்ம பெரியவாளின் திவ்யமங்களமான சரித்ரத்தை தொடராக எழுத ஆரம்பித்தார்…. ஶ்ரீ ரா.கணபதி. பிள்ளையார் சுழியாக முன்னுரை மட்டும்தான் ஆரம்பித்திருந்தது.

இனி ஶ்ரீ ரா.கணபதியின் வாக்கிலேயே, பெரியவா தன்னுடைய மஹா சரித்ரம் பற்றிக் கூறியதை கேட்போம்.

” பெரியவாளின் பூர்வாஶ்ரம இளைய ஸஹோதரர் ப்ரஹ்மஸ்ரீ ஸாம்பமூர்த்தி ஶாஸ்த்ரிகள் ஸ்ரீமடத்திலிருந்து வந்தார். தேவாம்ருதம் போல் தொடங்கி, அவர் கூறிய செய்தி விஷம் போல் முடிந்தது!

இந்த்ர ஸரஸ்வதியார், வஜ்ராயுதம் ப்ரயோஹம் செய்ததாகவே எனக்குத் தோன்றியது!

“கொழந்த… பூர்ணகும்பம் குடுத்தான்….. வாங்கிண்டேன்… அதுவே பூரணமா ரொம்பிடுத்து. மேக்கொண்டு தொடர்… வரவேண்டான்னு” உத்தரவாயிருக்கு!

எனக்குப் பேச்சே எழவில்லை. கலங்கிப் போன, அந்நாள் கல்கி அதிபர் திரு ஸதாஶிவம், ரொம்ப பவ்யமாக கேட்டார்….

“ஆஸிர்வாதம் வாங்கிண்டுதானே ஆரம்பிச்சோம்? இப்போ வேண்டாங்கறதுக்கு என்னவாவது காரணம் சொன்னாளா ? மறுபடி வேணா கேட்டுப் பாக்கலாமா?…”

ஶாஸ்த்ரிகள்… பெரியவா கூறியதை திரும்ப எழுத்து மாறாமல் கூறினார்.

“இவ்ளோவ்தான் சொன்னா…..!காரணம் ஒண்ணும் சொல்லல… ஆனா, தீர்மானமா… இப்போ, இந்தத் தொடர் வேணாங்கற அபிப்ராயத்லதான் இருக்கான்னு மட்டும் தெரியறது. என்னை அவ்ளோவ் அவஸரப்படுத்தி, “அடுத்த issue வேலைய… இப்போவே ஆரம்பிச்சிருப்பா…ஒடன்னே போய்ட்டு வா”..ன்னு அனுப்பிச்சா…”

வேறு வழியின்றி தொடர் நிறுத்தப்பட்டது. ஏமாற்றத்துடன், உண்மையை சொல்லணும்னா கோபத்துடனேயே, அப்போது காளஹஸ்தியில் இருந்த பெரியவாளிடம் சென்றேன். அவரது வரவேற்பு கேள்வி விசித்தரமாக இருந்தது….

“சரித்ரம் எழுதிண்டிருக்கியா?…”

என்னத்தை எழுதறது? அதான் நிறுத்தச் சொல்லி உத்தரவு போட்டுட்டாரே! புண்படுத்தினது போறாதுன்னு, புண்ணைக் குத்தியும் பாக்கறாரா?….

சீ!…. இப்டி நெனைக்கறது மஹா பாவமில்லியோ? ஆனாலும், ஏன் இப்டி கேக்கறார்?…

“சரித்ரம் எழுதிண்டிருக்கியா…ன்னேன். பதிலைக் காணுமே? காது கேக்கலியா?…” என்றவர் சற்று நிறுத்தி, “கோவமா!…” என்றார்.

வெட்கம் பிடுங்கித் தின்றது!

“வேண்டான்னுதான் உத்தரவாயிடுத்தே! அதுனால எழுதறதை நிறுத்திட்டேன்”

அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும்! என்ற படுபாதகமான எண்ணத்துடன் வந்தவன், ஏனென்று தெரியாமல், நானே அதில் ஏறிக்கொண்டவனாக சொன்னேன்.

“யார் உத்தரவு போட்டா?…”

விசித்ரம் to the ‘nth degree’ யான கேள்வி!

எங்கோ, ஏதோ பெரிய… எஸகு-பிஸகு நடந்திருக்கோ? என்ற குழப்பத்துடன்,

“பெரியவா அப்டி சொன்னதாத்தானே… ஶாம்பமூர்த்தி ஶாஸ்த்ரிகள் சொன்னார்?..”

“நீ எழுதவேண்டான்னு… நா…. சொன்னேன்னா, அவர் சொன்னார்? அப்டீன்னா, நா… அவரக் கூப்டு விஜாரிக்கறேன். ஆனா, அவர் ஸெரியா சொல்லப்பட்டவர்தான். என்னோட ‘கொனஷ்டை’ ஓரளவுக்கு நன்னாவே தெரிஞ்சவரானதால, நா.. சொல்றதை அப்டியே….. carbon copy-யா சொல்றவர்தான்! அதுனால, அவரை நா… விஜாரிக்கறதுக்கு முந்தி, நீயே… ஸெரியா ஞாபகப்படுத்திண்டு சொல்லு……! கல்கில, தொடரை நிறுத்தணும்-னு உத்தரவு-ன்னு சொன்னாரா? இல்லாட்டா…..நீ சரித்ரம் எழுதறதை நிறுத்தணும்..ன்னாரா?”

ஆஹா! ஆஹா! அப்டியொரு பாகுபாடா? உற்சாகம் உள்ளிருந்து புறப்பட, ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தேன் “ஆமா! தொடரை நிறுத்தணும் என்றுதான் உத்தரவு. நான் எழுதுவது பற்றியில்லை” என்பதைப் புரிந்து கொண்டேன்.

நான் எழுதத் தடையில்லை என்றாலும், பெரியவா சரித்ரம் எழுதினால், அதைக் கல்கியில் போடாமல் வேறென்ன செய்வது?

இதையெல்லாம் அவரிடம் கேட்க வாய் வரவில்லை. மீண்டும் ஏமாற்றம், கோபதாபம் அபஸ்ருதி கூட்டியது. ஆனால், மேற்கொண்டு பெரியவாளுடைய உரையாடலில் எல்லாக் கேள்விக்கும் பதில் கிடைத்தது.

“தொடரை நிறுத்தணும்னுதான் உத்தரவுன்னு, ஶாஸ்த்ரிகள் சொன்னார்”

“பூர்ணகும்பம் பூர்ணமாவே நீ குடுத்து…. நானும் வாங்கிண்டு ரொம்பியாச்சு. இப்போதிக்கி, இதுவே பூர்ணம்னு கொறைப்படாம இரு...” என்று பெரியவா பேச ஆரம்பித்ததும், என் கோபம் அழுகையாக மாறியது. ஆனால், உண்மையாகவே ஒரு நிறைவும் உண்டானது.

‘இப்போதிக்கி“த்தானே! அவர் சொன்னதில் அர்த்தமுள்ள, ஆறுதல் என்னுள் உண்டானது.

“படிக்கறவா, பத்ரிகை வித்துக் குடுக்கறவால்லாம், இந்த மாதிரி ஆனதுல, ஒன்னைப் பைத்யக்காரன்-றாளா? ஸதாஶிவத்தை [கல்கி அதிபர்] பைத்யக்காரன்-றாளா? இல்லாட்டா…..என்னைப் பைத்யக்காரன்-றாளா?…”

முகமெல்லாம் சிரிப்பு வழிய வழியக் கேட்டார்.

“எல்லார்க்கும் ரொம்பவே ஏமாத்தம், வருத்தம்”…

“ஸ்வாமிகள்ட்ட பெர்மிஷன் இல்லாமலே எழுதினியா? பொஸ்தகத்ல போட்டியா?ன்னு ஒன்னையும், அவரையும் [ஸதாஶிவம்] திட்டறாளோ?…”

“பெரியவா பெர்மிஷன் இல்லாம, நாங்க இப்டி ஒண்ணுல எறங்கியிருக்க மாட்டோம்னு பொதுவா நல்லெண்ணம் இருக்காப்ல இருக்கு….. அதோட, ஒரு மாஸத்துக்கு முன்னாடிலேந்தே கல்கில announcement பண்ணிண்டிருக்கோம். வெளில advertisement-ம் குடுத்திருக்கோம். அதுனால, முன்கூட்டியே பெரியவாளுக்கு விஷயம் தெரியாம இருந்திருக்காது-ன்னுதான் எல்லாரும் நெனச்சிருக்கக்கூடும்“…

“ஜாக்ரதையா பேசறியே! ……’இருக்காப்ல இருக்கு’; ‘நெனச்சிருக்கக்கூடும்’!….”

மெச்சுவதுபோல் அழகான சிரிப்பு.

“அப்போ,, என் ஒர்த்தனைத்தான்… பைத்யக்காரன்னு சொல்லியிருப்பா! திட்றவாளானா…திட்டியும் இருப்பா..! எனக்கு வேணுந்தானே? நல்ல பேரோட, பெருஸ்ஸா ஒரு பத்ரிகை நடத்தறவா, கதை-கட்டுரை எழுதறவான்னா, அவா.. நா…. இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவாங்கறதுக்காக, நாம்பாட்டுக்கு பொறுப்பில்லாம, க்ஷணச் சித்தம்-க்ஷணப் பித்தம்னு, இன்னிக்கி ஒண்ணு , நாளைக்கி ஒண்ணு சொல்லி, அவா கார்யத்தையும் கெடுத்து, பேரையும் கெடுக்கப் பாத்தேன்னா…. பைத்யப்பட்டம், திட்டு எல்லாத்தையும் வாங்கத்தான… வேணும்?”

முதலில் ஏதோ அறியாக் கோபத்தால், அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிப் பார்க்க எண்ணம் வந்தது. இப்போது அந்த பகவான், தானே குற்றவாளிக் கூண்டில் ஏறிக்கொண்டு, தன் மீதே குற்றப்பத்ரிகையும் தாக்கல் செய்து கொள்ள தயங்கியதில்லை. இப்போது அவரே வக்கீலாகி, அந்தக் குற்றத்துக்கு, ஞாயம் சொல்லவும் செய்தார்.

“மொதல்ல பெர்மிஷன் குடுத்தப்போ…. ஸெரி….பலபேருந்தான் எழுதறா..! என்னமோ அவாளுக்கு ஆசை, பக்தி! வேண்டாம்-னா வருத்தப்படுவா-ன்னு, நானும் தலையாட்டிடறது. பெர்மிஷன்னு கேக்காமயேக்கூட எழுதறவாளும் இருக்கா.! ஸெரி-தப்பு…. நிஸ்சயம் பண்ணிக்காமயே செல பேர் என்னென்னமோவும் எழுதறா ! அப்டியிருக்கச்சே, பொறுப்போட எழுதறவன், பொறுப்பா நடத்தற பத்ரிகைல எழுதணும்னு கேக்கறச்சே, ஏன் வேண்டான்னு சொல்லணும்?னுதான், ஸெரி…ன்னு சொன்னேன்….

….இன்னும் சொல்லணும்னா, நீ எப்டி எழுதறேன்னு பாக்கணும்னு, எனக்கே ஒரு குதூஹலம் கூட இருக்கத்தான் செஞ்சுது. அப்றம் அது ஞாபகத்லேந்தே போய்டுத்து! advertisement வந்து பாத்தாவிட்டு, பழேபடி ஞாபகம் வரத்தான் வந்துது…! அப்பவும் ‘லைட்‘டா விட்டுட்டேன்…! மொதவாரம், நீ மொகவுரையா எழுதியிருக்கறதைப் பாத்தவிட்டுத்தான்……அப்டியே அபிப்ராயம் மாறிடுத்து!……

என்னோட சரித்ரம் வரணும்னு எனக்கு லவலேஸங்கூட இல்ல…! அப்டி ‘சரித்ரம்’ன்னு ஒண்ணு எழுதும்படியா, நா.. ஒண்ணும் பண்ணினதா எனக்குத் தெரியல…! ஆனாலும், அப்டி ஒண்ணு வரணுன்னு இருந்தா… இதது நடக்கணும்னு இருந்து… அப்டியே நடக்கறதே, அதே மாதிரி இதுவும் இருந்தா……. நீ எழுதறது, பூராவா [பூர்ணமா] இருக்கணும்…..

….சரித்ரம்னு எழுதறே…! அதுக்கு “முற்றும்” போடுவியோன்னோ? போட்டுத்தானே ஆகணும்? அப்டீன்னா…. என் சரித்ரத்துக்கு நீ….. “முற்றும்” போட்டுடுவியாக்கும்?…”

பெரிதாகச் சிரித்தார்.

கண்கள் முழுக்க குறுகுறு குறும்பு. முடியக்கூடிய சரித்ரமா?

பெரியவாளுடைய ஜீவிதத்துக்கு பின்பே, அவருடைய சரித்ரம் வெளிவரவேண்டும் என்பதற்காகத்தான், இப்போது தொடரை நிறுத்தச் சொன்னதன் காரணம் என்பது ஸ்பஷ்டமாக விளங்கியது.

“நடக்கணும்–ன்னு இருந்து” என்ற வார்த்தைகளுக்கு பெரியவா குடுத்த நயமான அழுத்தம், எனக்கு உணர்த்திய அர்த்தத்தை என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ‘இன்னது நடக்கவேண்டும்’ என்பது, பராஶக்தியின் ஸங்கல்பத்தில்தான் இருப்பதைத்தான் அவர் குறிப்பிட்டார்.

“அந்த மேலிடத்து ஸங்கல்பம் என்றால், இன்னிக்கி அந்த தொடர் நின்று போனால் என்ன? என்னிக்கோ வரத்தானே செய்யும்?..”

என்னுடைய மனஸ் முழுதும் ஸமாதானமடைந்தது. பெரியவா தொடர்ந்தார்……

“பூராவா வரணுங்கறது ஒண்ணு…! வரது பூராவும் ஸெரியாயிருக்கணுங்கறது ஒண்ணு…! இது ரொம்ப முக்யம் ! பொறத்தியார் சொல்லி, அதக் கேட்டு எழுதறது முழுக்க, அப்டி… இருக்குன்னு சொல்ல முடியாது!…..

…..ஒவ்வொத்தன் ஸமாசாரமும் அந்த, ஒத்தனுக்கு மட்டுந்தானே முழூ…க்க ஸெரியாத் தெரியும்? ‘முழுக்க’ன்னு சொல்ல முடியாட்டாலும், இங்கே close-ஸா இருக்கறவா, கூடிய மட்டும் ஸத்யமா இருக்கறவா எழுதியிருக்கறதும், அந்த மாதிரி இருக்கப்பட்டவாளை நீ கேட்டு…. அவா சொல்றதும், பெரும்பாலும் ஸெரியாவே இருக்கும்……

…..அதையெல்லாம் பாத்து, கேட்டு, அதை…. base பண்ணி எழுதிண்டு போ! ஆனா, final-லா…. எங்கிட்ட காட்டு! என் கண்ணு, புத்தி, ரெண்டும் ஸெரியா இருக்கற மட்டும், எங்கிட்டேயே கொண்டு வா! பாத்து… ஸெரி பண்ணவேண்டி எதாவுது இருந்தா, பண்றேன்”…..

image

எதிர்பாராத இந்த வரத்துடன், இன்னொரு மஹா மஹா வரமும் தந்தார்…..

“….என்னையே எதாவுது கேட்டுக்கணும்னாலும் கேளு! தாராளமாக் கேளு! நீ கேக்காமயே, எனக்கா என்னவாவது சொல்லணும்னு தோணினாலும் சொல்றேன்...”

என்ன இருந்தாலும் இப்டியொரு வராநுக்ரஹத்தை கோட்டை விடக்கூடாதென்று என்னுள் தோன்றிவிட்டது போலும்! [படுத்துகிற, ஆனாலும் ஸமத்தான குழந்தையின் அழகுப் பார்வையுடன்,

“நா….இப்டிச் சொன்னதால, எல்லாம் சொல்லிடுவேன்னு நெனச்சுண்டுடாதே...!”

[பெரியவா, பெரியவாதான்! எத்தனை ஸத்யமான வார்த்தைகள்! பெரியவா, அன்றைக்கு சொன்னது, இன்றைக்கு வாஸ்தவத்தில், எத்தனை உண்மையாக நடக்கிறது! Face Book, whatsapp என்று ஸகட்டு மேனிக்கு பெரியவாளை பற்றின ஸம்பவங்களை படிக்கிறோம்.

ஸர்வஶ்ரீ ஸாம்பமூர்த்தி ஶாஸ்த்ரிகள், ரா.கணபதி, பரணீதரன், பாலு ஸ்வாமிகள், லக்ஷ்மிஸுப்ரமண்யன், ரா.வேங்கடஸாமி, கோதண்டராம ஶர்மா, வேதபுரி மாமா, சாருகேஶி போன்ற பக்தர்கள், எத்தனையோ கஷ்டப்பட்டு, எத்தனையோ விஷயங்களைத் திரட்டி, ஒன்றாக்கி நமக்கு தந்து பெரிய ஸேவை செய்திருக்கிறார்கள். பெரியவாளின் பரம க்ருபை ஒன்றாலேயே, நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த மங்கள சரித்ரம், மேற்கூறிய பெரியோர்களின் புஸ்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டது. ஒரு சில விஷயங்கள் பெரியவாளே சில பக்தர்களிடம் கூறியதை, அந்த பக்தர்களே கூறக் கேட்டு, அதோடு, வேறு பெரிய மஹான்களின் சில கருத்துக்களையும், என்னுடைய சிறிய புத்திக்கு நம் பெரியவா தோன்ற வைப்பதையும் சேர்த்து, எழுதிக் கொண்டு வருகிறேன்…

இந்த தெய்வீக லஹரியில் மூழ்கி, அதை நம் மேல் வாரி வாரித் தெளித்த ஶ்ரீ ரா.கணபதியின் ஸேவை, பங்கு..  அபரிமிதமானது! எத்தனை நன்றி சொன்னாலும், நமஸ்காரம் பண்ணினாலும் போறவே போறாது!

தன்னுடைய சரித்ரத்தை எழுத வேண்டாம் என்று ஶ்ரீ ரா.கணபதிக்கு அன்புக்கட்டளை இட்ட நம் பெரியவா, அவரை வேறொரு மஹா மஹாபக்த சரித்ரம் எழுதத் தூண்டிய அழகை பார்ப்போமா?

காற்றினிலே வரும் கீதம்…!

சித்தபரிபாகே ஸந்யாஸிநாம் ஸஹஸ்ரேண ஸமாநாயா:

பாயீ மீராயா: ஸ்ரீ க்ருஷ்ணபக்தி பரிதம் சரிதம்

படந்த: ஸர்வேஜநா: புருஷார்த்தபாஜோ பூயாஸு:

சித்த பரிபக்குவத்தில், ஆயிரம் ஸந்யாஸிகளுக்கு ஸமமான மீராபாயின் ஸ்ரீ க்ருஷ்ணபக்தி ததும்பும் சரித்ரத்தை படித்து, மக்கள் அனைவரும் வாழ்க்கை பயனைப் பெறுவார்களாக!

இந்த அழகான ஸ்ரீமுகம் யாரால், எப்போது, எதற்காக அனுக்ரஹிக்கப்பட்டது?…..

ஸ்வாரஸ்யமானது மட்டுமில்லை, இன்றைக்கு பலர் மனஸில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் விஷ[ய]த்துக்கு முற்றுப்புள்ளியும் வைக்கும்.

இன்றைக்கு நமக்கெல்லாம் பெரியவா என்றால் அடுத்தது தன்னிச்சையாக ஞாபகத்துக்கு வரும் பெயர்…. ஸ்ரீ ரா.கணபதி. அவர் ஆன்மீக உலகத்துக்கு ஆற்றியிருக்கும் ஒரு மஹா மஹா கைங்கர்யம்…. பெரியவாளை, அவருடைய குரல் மூலம், நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் கட்டித் தூக்கிப் போட்டதுதான்! அந்த மஹானுக்கு ஒரு பெரிய நமஸ்காரம்.

அவருடைய சிறு வயஸில் ஸ்ரீமதி எம்.எஸ் நடித்து, ‘ஆஹா! மீரா இப்படித்தான் இருப்பாள்!‘ என்று நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்திய ‘மீரா’ படம் வெளிவரப்போவதான செய்தி வந்தது.

விளையும் பயிர் முளையிலே என்பது ஸ்ரீ கணபதியின் வாழ்வில் தெரிந்தது. ‘மீரா’ என்ற மதுரமான பெயரே, ஏனோ அவருள் ஒரு உறவு ஈர்ப்பினை [attraction] உண்டாக்கியது. ஸ்ரீமதி எம்.எஸ் பாடிய ‘வண்டினம் முரலும்’, அம்பா, நீ இரங்காயெனில்’, ‘ஸாவித்ரி’ படத்தில் நாரதராக வந்து, ‘அக்கினி என்றறியாயோ?’ போன்ற பாடல்கள் தமிழ்நாட்டையே புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த ஸமயம் அது.

மீராவின் அழகான கதையை, கணபதிக்கு அவருடைய அத்தையும், சித்தப்பாவும் கூறியதிலிருந்து, ஏற்கனவே ‘மீரா’ என்ற மதுரநாமம் அவருள் ஏற்றி வைத்திருந்த ஒளி, இன்னும் ப்ரகாஶமாக ஒளிர ஆரம்பித்தது. புராண-இதிஹாஸ கதைகளைக் கேட்டதை விட, மீராவின் சரித்ரம் அந்த சிறு வயஸில் அவரை ஆட்கொண்டது!

“ஆஹா! மீரா மாதிரி பக்தி நமக்கும் வராதா? அவளைப்போல் ஆக மாட்டோமா?..” என்று அந்த பிஞ்சு மனஸில் ஏக்கம் வளர ஆரம்பித்தது.

ஸ்ரீ கல்கி க்ருஷ்ணமூர்த்தியின் அற்புதமான, பக்தி தோய்ந்த எழுத்தில் உருவான ‘மீரா’……. 1945-ல் வெளிவந்தது. ஆழ்ந்த அறிவு ஸார்ந்த ஸ்ரீ ஸதாஶிவம், ஆத்மாவை அசைத்துப் பார்க்கும் எம்.எஸ்ஸின் பக்தியில் மூழ்கிய, கேட்பவர்களையும் பக்தியில் முழுக்காட்டிய ஸங்கீதம், ‘பார்த்திபன் கனவு, மகுடபதி, பொன்னியின் செல்வன்‘ என்று, காவியங்களுக்கு இணையான கதைகளை எழுதி, படிப்பவர்களை பல்லவர், சோழர் காலத்துக்கே அழைத்துக் கொண்டு போய், காஞ்சி மாநகரின் மாடவீதிகளிலும், காவேரிக்கரைகளிலும் நடமாடச் செய்துவிடும் ஸ்ரீ கல்கியின் கைவண்ணம்…. இவற்றோடு ஏற்கனவே கனன்று கொண்டிருந்த ‘மீ…..ரா’ என்னும் மதுரநாமம் எல்லாமாக சேர்ந்து, கணபதியை எங்கோ… ஆழமாக இழுத்துச் சென்றது.

மீரா படம் வெளிவந்ததும், பைத்தியம் போல், அவருடைய அக்காவுடன் சேர்ந்து கொண்டு, வாழ்க்கையின் அத்தனை ஜோலிகளையும் ஓரங்கட்டிவிட்டு, மீராவின் பாடல்களை பாடிப்பாடியே அகமகிழ்ந்தார்.

இனி….. ஸ்ரீ ரா.கணபதியின் வாய்மொழியாகவே படிப்போம்……..

” ஆனாலும், இந்த மீரா ஸினிமா சொல்லாமல் விட்ட விஷயங்களிலும், என் மனதின் ஒரு மூலை முழுகிக்கொண்டேதான் இருந்தது. அந்த சிறிய வயதில் இதை வெளியிட்டால், பச்சிளம் வாழைக்கன்று குலை தள்ளியது போல், விபரீதமாக நினைப்பார்களோ என்று என்னை நானே அடக்கிக் கொண்டேன். ஆனால், அடக்க அடக்க, உள்ளுக்குள் குலைகுலையாக கனி தள்ளியது. க்ருஷ்ணனும், மீராவும் முகமுகமாக பேசியதையும், அவன் அவனோடு ஆடியதையும், பாடியதையும், ஊடியதையும், சாடியதையும், அவனுக்கு அவள் உணவிட்டு உபசரித்ததையும் சித்தப்பா சொல்லியிருந்தார். அதிலேயே இதுவரை மனம் மூழ்கிக் கிடந்தது.

ஆனால், மீரா ஸினிமாவில், பால மீராதான் கண்ணனுடன் நேருக்கு நேர் அன்பு விளையாட்டு விளையாடினாள். பெரிய மீரா, மானஸீகமாக மட்டுமே க்ருஷ்ணப்ரேமையில் ஈடுபட்டிருந்தாள். ஸ்தூலமாக ப்ரேமை விளையாட்டு இல்லை; அதன் மகிழ்ச்சியும் இல்லை; துயரமும் இல்லை; அதன் பேச்சும் இல்லை; மௌனமும் இல்லை.

ஸ்தூலமாக ப்ரேமையை திரையில் காட்டினால், அதில் பக்திப்ரேமை என்றும், பௌதிக ப்ரேமை என்றும் பாகுபாடு தெரியாது. ரிஷிகளுக்குச் ஸமமாக கலாஸித்தி பெற்ற சில சிற்பிகளும், சைத்ரிகர்களும் வரைந்த சிற்ப, சித்திரங்களில் மட்டுமே, பௌதிகம் அடிபட்டுப்போன ஆத்ம காதலை பார்க்க முடியும். மற்றபடி, மேடை மீது இரு மனிதர்கள் ஶ்ருங்கார பக்தியை, தூய்மையாகக் காட்டுவது ரொம்ப ஶ்ரமம். நடைமுறை உலகிலிருந்து நம்மை விடுவிக்கும் தனி தர்மம் கொண்ட நாட்டிய நாடகங்களில், காதலர் இருவரும் ஆண்பால் நடனக் கலைஞர்களாகவோ, அல்லது பெண்பால் கலைஞர்களாகவோ இருக்கும் போதே, ஶ்ருங்கார பக்தியை வெளிப்படுத்துவது, ஓரளவு ஸாத்யமாக இருக்கிறது.

நடிகர்களின் தோஷத்தோடு, பார்ப்பவர்களின் தோஷமும் சேருவதால், ஸினிமாவிலும், நாடகத்திலும் ஶ்ருங்கார பக்தியைக் காட்டுவது அதி ஶ்ரமமான கார்யமே!

இதைக் கருத்தில் கொண்டதாலோ என்னவோ, மீரா படத்துக்கு கதை எழுதிய பேராசிரியர் கல்கியும், ஸ்ரீ ஸதாஶிவமும், மீராவை ஓரளவுக்கு ஒரு வைராக்ய ஸந்யாஸினி போலவே சித்தரித்திருந்தனர். கல்கியின் எழுத்தாற்றலில், அவர் சித்தரிக்க விரும்பிய நாதயோகினி மீராவின் கதையை, ஒளிவீசும் காவியமாகத்தான் உருவாக்கியிருந்தார். ஸ்ரீமதி எம்.எஸ்ஸும், அந்த மீரா என்னும் பாத்திரத்தை கண் காணும் சித்திரமாக்கினார். மீரா ஸினிமா அதனாலேயே தூய்மைக்கு பெயரெடுத்தது.

ஆனாலும், என்னுடைய முழு மீரா…. அதில் இல்லை! ‘என் மீரா’ என்பதற்கு அர்த்தமுண்டு. நான் ஏற்கனவே கேட்டிருந்த கதையோடு, என்னுடைய உணர்வும் சேர்ந்து அவளை எனக்கென்றே-ஆன ஒரு மீராவாக ஆக்கி இருந்தது. ஸினிமாவில் அந்த மீரா இல்லாததால், ஒரு ஏமாற்றம், ஒரு ஆதங்கம் எனக்கு இருக்கத்தான் இருந்தது.

நல்லவேளை! அது லௌகீக ஶ்ருங்காரம் தெரியாத பருவம். கண்ணன் காதலை மட்டும் எப்படியோ ரஸிக்கத் தெரிந்த குழந்தைப் பருவம்! என்றாலும், இந்த ஏமாற்றத்தை மற்றவர்களிடமும் சொல்ல மாட்டாமல், ஏதோ ஒன்று என்னைத் தடுத்தது. இந்த ஏமாற்றத்துக்குள், அப்போதிருந்தே எனக்கென ஒரு மீரா கதையும், குலை தள்ள ஆரம்பித்தது. கதை… என்று சொன்னாலும், கதையைவிட, மீராவே அதில் முக்யம்!

துரதிருஷ்டவஸமாக காலம் மாறியது. ஶ்ருங்காரமா, ஸந்யாஸமா என்ற கேள்விகள் எழும்பாமலே, மீராவின் அன்பில் ஈடுபட்ட குழந்தை நாட்கள் போய்விட்டன; ஶ்ருங்காரமே ஸந்யாஸமாக இருக்கும் நிலையும் உண்டு! என்ற முதிர்ச்சியும் [maturity] வரவில்லை. இந்த ரெண்டுங்கெட்டான் நிலையில், மீராவின் சரித்ரம் குறித்து பல இடைஞ்சலான கேள்விகள் எழுந்தன……

“மீரா, ஏன் காரைக்கால் அம்மையாரைப் போல, ஸினிமா மீராவைப் போல, கண்ணனின் காதலியாக இல்லாமல், பக்தையாக மட்டும் இருந்திருக்கக் கூடாது? கண்ணனிடம்தான் என்றாலும், காதல் எதற்கு? ஆண்டாளும் இப்படித்தான் ப்ரேமை புரிந்தாள். ஆனால், ஆண்டாளை விடவும் அதிகமாக மீராவை ஒப்புக்கொள்ள முடியவில்லையே! ஶாஸ்த்ரோக்தமாக ஒருவனைக் கல்யாணம் செய்துகொண்ட பின்னும், மீரா ஏன் கண்ணனைக் காதலித்தாள்?…

இப்படியெல்லாம் இடைஞ்சல் கேள்விகள் எழுந்தன. இருந்தாலும், இதயத்தின் அடியில், மீரா ஸரியாகத்தான் நடந்துகொண்டிருக்க முடியும் என்ற எண்ணமும் அறுபடாத இழையாக இருந்து கொண்டே இருந்தது. மீராவை நான் விடவே முடியாது என்கிற உறுதியும் இருந்துகொண்டே இருந்தது. என்னால் விட இயலாத மீராவிடம் தோஷமும் இருப்பதாகப் பட்டதால், மிகவும் அவஸ்தைப்பட்டேன்.

[கோபிகைகள், அவர்களில் முக்யமான ராதாராணி இவர்களுடைய க்ருஷ்ணப்ரேமையை மீண்டும் அனுபவிக்கவே மீராவின் அவதாரமும், ஶ்ரீ சைதன்ய மஹாப்ரபுவின் அவதாரமும் நிகழ்ந்தது]

வெளி வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள் நடந்தது. படித்ததும், உத்தியோஹ வேட்டை; பொருத்தமில்லாத உத்யோஹம்; அப்புறம்….. திடீர் யோகம்!

காஞ்சி மஹாபெரியவாளுடைய அருளில் “ஜயஜய ஶங்கர’ தந்த ப்ராபல்யம்! ஏதோ…. நானே ஒரு ஆத்மஞானி என்று உலகம் மயங்குகிற அளவுக்கு ஆகிவிட்டது!

வெளியில் இத்தனை நடக்கும்போதும், உள்ளுக்குள்ளே மீராவைப் பற்றிய உறுத்தல் இருந்துகொண்டேதான் இருந்தது. இந்த உறுத்தல் இருந்த போதிலும், அதே ஸமயத்தில் கண்ணன்-மீரா ஜோடியை நாயக-நாயகியாக்கி, அதே மனம், தனது கதையைக் குலை தள்ளிக்கொண்டுதான் இருந்தது! அதனாலேயே உறுத்தலும் அதிகம் பாதித்தது!

அந்த உறுத்தல் தீர்ந்த கதை………!

இதுவரையில், கலையுலகில் மிகவும் ப்ரஸித்தி பெற்றுள்ள இரு பெண்மணிகள் என்னுடைய மீரா…. ஈடுபாட்டுக்கு மிகுந்த தொடர்பு உள்ளவர்கள்.

ஒருவர்…. ஸ்ரீமதி எம்.எஸ்.ஸுப்புலக்ஷ்மி

மற்றவர்….. ஸ்ரீமதி பாலஸரஸ்வதி!

எம்.எஸ்ஸால்…. மீராவிடம் எனக்கு பற்றுதல் வலுத்ததை இதுவரை சொல்லிவிட்டேன். ஆனால், பற்றுதல் வைத்து ப்ரயோஜனம் என்ன? கடைஸியில் இந்தப் பற்றுதல், உறுத்தலில் அல்லவா முடிந்துவிட்டது?

நீண்ட காலத்துக்குப்பின், இந்த உறுத்தலை நீக்க உதவியர் ஸ்ரீமதி பாலஸரஸ்வதியே!

சிலருக்கு, ரத்த ஓட்டத்துடன் ஒரு முள் ஓடுவதுண்டாம்! மிக நுட்பமான ஆபரேஷன் செய்து, அந்த முள்ளை எடுப்பார்களாம்! எனக்குள் ஓடிக் கொண்டிருந்த முள்ளை எடுத்த ஸ்ரீமதி பாலஸரஸ்வதிக்கு எப்படி நன்றி சொல்வேன்?

ஐந்தாறு வருஷங்களுக்கு முன் [1969-ல் எழுதப்பட்டது] ஸ்ரீமதி பாலாவின் நடனக்கச்சேரிக்கு சென்றிருந்தேன். அவர் ஆடிய ஶப்தமும், வர்ணமும் ஶ்ருங்கார ரஸம் சொட்டுபவை.

ஆனால், இது என்ன அற்புதம்?…

அந்த ஶ்ருங்காரத்துக்கும், உடம்புக்கும் துளிகூட ஸம்பந்தமே இல்லையே! ஶ்ரீமதி பாலஸரஸ்வதி தனது உடலால்தான் அபிநயம் செய்கிறார். ஆனால், ஜீவாத்மாவே பரமாத்மா ஆவதைவிடப் பெரிய அதிஸயமாக, ஆடுபவரின் உடம்பே, ஆத்மாவுக்கு சின்னமாகி இருக்கிறது!

ஶ்ருங்காரமும், ஸந்யாஸமும் ஒன்றுபடுகிற நிலை இன்னதுதான்…. என்று, அன்றைக்கு அழுத்தமாக உணர்ந்துவிட்டேன்! அது எனக்கு மஹத்தான தினம்!

தெய்வீகக் காதல் என்றால் என்ன? மண்ணுலக காதலுக்கும், அதற்கும் என்ன ஸம்பந்தம்; அல்லது ஸம்பந்தமின்மை… என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது! அதுவரை என் உள்ளுணர்ச்சி மீராவிடம் வைத்த அன்பு, அப்போது வெளிப்பட ஞாயமாகிவிட்டது!

அன்றைய நடன நிகழ்ச்சியில் இன்னொரு முக்யமான விஷயமும் நடந்துவிட்டது. அம்பாள், ஶிவன், முருகன்… இவர்களிடம் எனக்கிருந்த பக்தி, நடுவிலே பல வருஷங்களாக, கண்ணனிடம் இருந்ததில்லை. இந்த நாட்டிய நிகழ்ச்சியின் கடைஸியில், அனுக்ரஹம் செறிந்த ஒரு முகூர்த்தம் பிறந்தது.

ஸ்ரீமதி பாலஸரஸ்வதியின் பக்குவமான குரல், யமுனாகல்யாணியை சித்தரித்து, யமுனையின் அலை வரிஸைகளை, சுழிகளையும் காட்டியது. சலனமில்லாத அதன் கர்ப்ப ஓட்டத்தையும் காட்டியது.

“க்ருஷ்ணா நீ பேகனே பாரோ‘வுக்கு அபிநயம் செய்தார். என்னிடம், யமுனாதீரவிஹாரியான க்ருஷ்ணன் வேகமாக வரவேண்டும் என்றே செய்தாரோ, என்னமோ? அந்தப்பாட்டில், ‘ஜகதோத்தாரக னம்ம, உடுப்பி ஸ்ரீ க்ருஷ்ணா’வில், க்ருஷ்ண லீலைகள் அவ்வளவும் விரிந்தன!

நான், பாகவத ப்ரவசனங்கள் கேட்டபோதும், க்ருஷ்ணலீலா தரங்கிணி படித்தபோதும், உண்டாகாத கண்ணன் அன்பு [க்ருஷ்ணப்ரேமை] அன்று எனக்கு உண்டானது!

ஸங்கீதத்துக்கும், பக்திக்கும் உள்ள ஆழ்ந்த உறவை, அன்று நான் ப்ரத்யக்ஷமாக அனுபவித்தேன். அதுவே ஸங்கீத பக்தையான மீராவிடம் நான், மேலும் ஈடுபட வழி செய்தது.

உறுத்தல் போச்சா? தெய்வீகக்காதல் புரிந்துவிட்டதா? க்ருஷ்ணப்ரேமை மொட்டிட்டு விட்டதா? அப்புறம் என்ன? என்னுள் பிறந்த மீராக் கதைக்குலை, தடுப்பும், தயக்கமும் இல்லாமல், வள்ளிசாக முழு உருவம் பெற்றது. ஆனால், எண்ணமாகத்தான், எழுத்தாக இல்லை!

மீராவை, நம்முடைய உலக தர்மத்தால் அளப்பது பாபம்! ஈஶ்வரனைத் தவிர, மற்ற எதையும்…. வேதம், ஶாஸ்த்ரம், லோகதர்மம் உள்பட எதையும் நினைக்காத பக்தி வாழ்க்கை அது! அதை, நம்முடைய தர்மத்தால் எப்படி அறிய முடியும்?

“மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு” என்றாள் ஆண்டாள்!

அவனைத் தவிர, மற்ற எதையும் நினைப்பவர்களால், அவனுடைய அன்பை, ஶ்ருங்காரத்தை அறிய முடியாது. அவனைத் தவிர மீராவுக்கு எதுவுமில்லை! எனவே தர்ம ஶாஸ்த்ரங்களை கடந்தாள்.

தங்கள் கணவன்மார்களை மறந்து, கண்ணனின் காதலில் ஈடுபட்ட கோபியரிடம் உத்தவரை தூது அனுப்பும்போது…. “யே த்யக்தலோகதர்மாஸ்ச மதர்த்தே தான் பிபர்ம்யஹம்“……

‘லோக தர்மங்களை எனக்காக விட்டவர்களையே நான் தாங்குகிறேன்...’ என்கிறான் பகவான்.

“உத்தவரும், கோபிகைகளை உலக நடைமுறை எல்லாவற்றையும் விட்டவர்களாகவே [த்யக்த லௌகிகா:] கண்டார்…” என்று கூறுகிறார் ஸ்ரீ ஶுகப்ரஹ்மம்.

உலகுக்கு வழிகாட்டவே வந்த பெரியோர்களின் பலர், உலக தர்மங்களை அனுஷ்டிப்பவர்கள். அந்த தர்மங்களையும் கடந்த பெரியவர்களும் அபூர்வமாக தோன்றுவதுண்டு! அவர்களை தர்ம ஶாஸ்த்ரத்தால் அளப்பது முறையில்லை!

மீரா… தாலி கட்டிய கணவனை ஒதுக்கி, கண்ணனை காந்தனாகக் கொண்டது, தர்மம் கடந்த பெருநிலை! லோக தர்மத்தை மீறியவள், பெண் தர்மத்தை மீறினாள். ராஜதர்மத்தை மீறினாள். மஹாராணியாகிய மீரா, ஆண்டி பரதேஸிகளுடன் ஆடிப்பாடினாள். பெண்களுக்குரிய நாணத்தை நீத்து, பகிரங்கமாக நாட்டியமாடி கண்ணனைப் பாடினாள்.

ஆனால், அவள்….. ‘தர்மத்தை முறிக்கிறேன்’ என்று புரட்சிக்காரியின் ஸங்கல்பத்துடன் இதை செய்யவில்லை! தர்மத்தை கடப்பதே, அவளுக்கு இயற்கையான தர்மமாக இருந்தது.

சந்த்ரமண்டலத்துக்கு போக வேண்டுமென்றால், பூமியின் ஆகர்ஷணத்தை கடந்துதான், சந்த்ரனின் ஆகர்ஷணத்துக்கு ஆட்படவேண்டும். லௌகீக ஆகர்ஷணத்தை மீறி, க்ருஷ்ணசந்திரனால் இழுக்கப்படுவது, மீராவுக்கு இயல்பாக இருந்தது. அவள் ஒருக்காலும் புரட்சிக்காரி அல்ல! நாணத்தையும், லௌகீக கற்பை விட்டாலும், அவள் நூறு ஸதவிஹிதம் பெண், பெண், பெண்ணேதான்! அன்பும், இசையும் அவளை, பெண்களில் எல்லாம்… உத்தமமான பெண்ணாக வைத்திருந்தன.

“நாணி இனி ஒரு கருமம் இல்லை” என்று ஆண்டாள் சொன்ன நிலையில், ‘நாணத்தை விட்ட என் சித்தம்’ [சித்தமபத்ரம் மே] என்று ருக்மிணி க்ருஷ்ணனுக்கு லிகிதம் அனுப்பி சொன்ன நிலையில் இருந்தவள்…. மீரா! நாணத்தை விட்டதால், அவளது தூய்மை குறைந்துவிடவில்லை! மாறாக, பக்தியும், ஸங்கீதமும், நாட்டியமும் அந்த நாணமற்ற நிலையிலேயே வெளிப்பட்டு, உலகையெல்லாம் தூய்மையாக்கின.

“என்னிடம் பக்தி வைத்து, வெட்கத்தை விட்டுப் பாடி ஆடுபவர்கள், ப்ரபஞ்சத்தையே புனிதமாக்குகிறார்கள்” என்று பகவானே சொன்னபிறகு, மதிப்பீடு செய்ய நாம் யார்?

விலஜ்ஜம் உத்காயதி ந்ருத்யதே ச
மத்பக்தியுக்தோ புவனம் புநாதி |

கட்டுப்பாடில்லாத மீராவிடம், ஸங்கீதம் தானாகப் பிறந்தது. ஆனால், அந்த ஸங்கீதத்துக்குள்தான் எத்தனை கட்டுப்பாடு! ஸ்வரஸ்தானமும், தாள மாத்திரையும் அணுவும் பிசக கூடாதே! லோகதர்மத்தை விட்டவளிடம், கண்டிப்பான கலாதர்மம் இயல்பாக வந்து மேவியது!

பரம ஸ்வதந்த்ரத்துடன் விளங்கும் ஸங்கீதத்துக்கு உள்ள தர்மவிதிகளையாவது நாம் ஓரளவு ஶாஸ்த்ரமாக்கி புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். ஆனால், பக்தி என்ற, அன்பு என்ற, கண்ணன் காதல் என்ற ஸ்வாதந்த்ரியத்தின் தர்மத்தை, புத்தியால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? பக்தியிடம், புத்தியின் சாதுர்யம் செல்லாது!

அன்பு மீராவிடம், நம் அற்ப புத்தியைத் தூக்கிச் செல்லவேண்டாம்.

[நாஸ்திகவாதிகளின் ஒரு வாசகம்…… ‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும்!’ என்பது. உண்மைதான். எல்லாமே இறைவன்தான்! என்ற ஸத்யம், இப்பேர்ப்பட்ட நையாண்டி வாசகத்திலும், நீக்கமற நிறைந்துள்ள அழகை என்னவென்பது?]

மீராவின் சரிதத்தில், நம் காஞ்சி மஹா பெரியவாளின் ஆசியைப் பற்றி எழுதாமல் இருக்க முடியவில்லை. 1966-ல் கல்கி-யில் நான் தொடங்கிய பெரியவாளின் வரலாற்றை, அவர் மேற்கொண்டு எழுதவேண்டாம் என்று உத்தரவானதும், அதற்கு பதிலாகவே மீராவின் சரித்ரத்தை எழுதினேன். நானாகவே எழுத ஆசைப்பட்ட ஒரே ஒரு சரிதம் இதுதான்!

அரூபமான பொருளை உணர்த்துவதற்கு ஒரு உருவம் எழுப்புவது போல, சரிதம் கடந்த மீராவை உணர்த்தவே, ஒரு சரிதம் எழுத விரும்பினேன். தயக்கமோ, தடுப்போ இன்றி, எண்ணமாக, உள்ளே… அந்த சரிதம் குலை தள்ளியதையொட்டி, அதை எழுத்தாக்கி எல்லோருக்கும் படைக்கவேண்டும் என்ற, விருப்பமும் முனைப்பாக ஏற்பட்டுவிட்டது. ஆயினும், இதை எழுதி பிரசுரிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

ஏனென்றால், பேராசிரியர் கல்கி எழுதிய மீராவிலிருந்து, பல அம்ஸங்களில் மாறுபாட்டுடன் நான் புனர் ப்ரவேஸம் செய்ய அநுமதி கிடைக்கும் என்று எண்ணவில்லை. கல்கி ஆசிரியர் குழுவில் நான் பணிபுரிந்து வந்ததால், கல்கி தவிர, தனிப்பட்ட புஸ்தகத்தை நான் எழுத தயங்கினேன்.

நான் இதை எழுத, ஒருவிதத்தில் ‘மறக்கருணை‘ காட்டுவதற்காகவே பெரியவா, தன்னுடைய வரலாற்றை நிறுத்தினார் போலிருக்கிறது! ஏனென்றால், தொடர் நின்றவுடன், அதற்கு பதில், நான் ஏதேனும் செய்தாகவேண்டிய நிலை ஏற்பட்டது. என் மனதில் ஆழ்ந்து கிடந்த மீராவைப் பற்றி, அந்த வேகத்தில் ஸ்ரீ ஸதாஶிவத்திடம் கூறினேன்.

கல்கியும், தானும் சேர்ந்து எழுதிய திரைக்கதை பற்றி இம்மியும் எண்ணாமல், பெரிய மனதோடு அவர் இதனை எழுத அநுமதித்தார். உடனே, எண்ணத்தில் வண்ணம் காட்டிய கதையை, எழுத்தில் உரியபடி படைக்க இயலுமா என்றும், பெரியவாளுடன் ஒருவித ஸொந்தமே கொண்ட பெரும்பாலான வாசகர்கள், ஆர்வத்துடன் எதிர்பார்த்த அவரது வரலாற்றுக்கு பதிலாக, என்றோ, எங்கோ வாழ்ந்த மீராபாயின் வரலாறு வெளிவந்தால், அது அவர்களை ஈர்த்துப் பிடித்து நிறைவு தருமா என்றும், அச்சமும் தயக்கமும் என்னுள் எழுந்தன.

அப்போது மஹா பெரியவா….. அறக்கருணையையும் அருள்பாலித்தார்.

அப்போது பெரியவா ஸ்ரீ காளஹஸ்தியில் முகாமிட்டிருந்தார். அங்கு சென்று, அவரிடம் மீரா தொடர்கதை பற்றி விஞ்ஞாபிக்கவும், அவருடைய பொன்னான மனது நிரம்பிக் கூறிய ஆசீர்வாத பலத்திலேயே, என் எண்ணம் திருப்திகரமாக எழுத்துவடிவம் கொண்டது. அதுமட்டுமில்லாமல், வாசகர்களும் பரம திருப்தியுடன் பாராட்டுமாறு அவர்களை ஆகர்ஷிக்கவும் செய்தது!

ஆஹா! மஹாபெரியவாதான் எவ்வளவு அன்பொழுக மீராவின் சரிதத்தை ஆசீர்வதித்து தெம்பூட்டினார்!

[ஶ்ரீமதி பாலஸரஸ்வதி மூலமாக, மீராவைப் பற்றிய ஶ்ரீ ரா.கணபதியின் உறுத்தலை அடியோடு கெல்லி எறிந்த ஶ்ரீ காஞ்சீ மஹாஸரஸ்வதியின் அனுக்ரஹத்தை அயனான இந்த க்ஷணத்தில் ரஸிக்க, நாமும் மானஸீகமாக ஸ்ரீகாளஹஸ்தி செல்வோம்.]

பெரியவாளுடைய சரித்ர தொடரை ஆரம்பித்தவுடனேயே நிறுத்திவிட்டாரே… என்ற தாபம், இன்னமும் முழுவதுமாக தணியாமலே, அதற்கு பதிலாக உத்தேஸித்துள்ள மீராவின் சரித்ர தொடருக்காவது, அவருடைய பரிபூர்ண அநுக்ரஹம் பெறவேண்டும், என்ற துடிப்புடன் காளஹஸ்தி சென்றேன்.

அது, காலையில் அவர் ஸ்நான அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, பூஜைக்கு செல்லும் ஸமயம். அந்த இடைப்பட்ட நேரத்தில், அவர் பேசமாட்டார். ரொம்ப அத்யாவஶ்யம் நேர்ந்தால், ஸம்ஸ்க்ருதத்தில் மட்டும் பேசுவார். நான் வந்திருப்பது தெரிந்ததும், காருண்யப்ரபு அந்த வேளையிலாக்கும் என்னை கூப்பிட்டனுப்பினார்!

பரிஶுத்தத்தின் ஸ்வரூபமாக நின்ற பெரியவாளை நமஸ்காரம் செய்து, நான் உடனே ஏதேனும் தொடர் எழுதவேண்டிய அவஶ்யம் உண்டாகியிருப்பதை சொல்லி, நான்…. நல்லபடி மீராவின் வரலாற்றை எழுதி, அது நல்ல வரவேற்பு பெற, வரம் வேண்டினேன்.

image

வர்ணனாதீதமான [வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட] அகமலர்ச்சி கொண்ட பெரியவாளுடைய திருமுகத்திலிருந்து, மதுரமான ஸம்ஸ்க்ருத மொழியில் ஸ்ரீமுகம், தேனைத் தெளித்தது…….

சித்தபரிபாகே ஸந்யாஸிநாம் ஸஹஸ்ரேண ஸமாநாயா:
பாயீ மீராயா: ஸ்ரீ க்ருஷ்ணபக்தி பரிதம் சரிதம்
படந்த: ஸர்வேஜநா: புருஷார்த்தபாஜோ பூயாஸு:

அதோடு, மீராவின் சரிதை அழகாக உருப்பெறவும், வாசகர்களின் பேராதரவைப் பெறவும், திருக்கரம் தூக்கி ஆசீர்வதித்து அருளினார். என் உள்ளத்தை உற்சாகத்தில் துள்ளச் செய்துவிட்டார்!

விநயமே உருவான நம் பெரியவா, தன்னுடைய சரிதத்துக்கு பதிலாக, மீராவின் சரிதம் வருவது ஆயிரம் மடங்கு விஸேஷம் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில்,

“சித்த பரிபக்குவத்தில் ஆயிரம் ஸந்யாஸிகளுக்கு ஸமமான மீராபாயின் ஸ்ரீ க்ருஷ்ணபக்தி ததும்பும் சரித்ரத்தை படித்து மக்கள் அனைவரும் வாழ்க்கை பயனைப் பெறுவார்களாக!...”

என்று அந்த ஸ்ரீமுகத்தில் அனுக்ரஹித்தார்.

அதே ஸமயத்தில், ஶ்ருங்காரமே ஸந்யாஸமாகிற தெய்வீகத்தைப் பற்றியும் எனக்கு அசைக்க உடையாத உறுதிப்பாட்டை அருளிவிட்டார்! அப்புறம் கேட்பானேன்?

எண்ணத்தில் வண்ணம் காட்டிய ‘என் மீரா’ எழுத்திலும், மடைதிறந்த வெள்ளமாக வெளிப்பட்டுவிட்டாள்!

-ரா. கணபதி

ஸம்ஸ்க்ருதமே அழகான, பவித்ரமான தேவபாஷை. அந்த தேவபாஷையில் பகவானே தன் பக்தையைப் பற்றி எடுத்துரைக்கிறான் என்றால்….. மீராவைப் போல பவித்ரமான பக்தஶிரோன்மணி யாருண்டு?

ஆஹா! என்ன அழகு! நம் ஒவ்வொருவருக்குள்ளும் பகவானிடம் காரணமில்லா பக்தியாக, மீராவின் ஒரு சிறு பொறி இருக்கத்தான் இருக்கும். அதை பகவந்நாமம், ப்ரேமை என்னும் விசிறியாலோ, ஊதுகுழலாலோ பெரும் நெருப்பாக கொழுந்துவிட்டெரியச் செய்து, அதில் நான்-எனது என்பதை ஸமர்ப்பித்து, பகவானுடன் ஒன்றாக கலந்துவிடுவோம்.

கண்ணனின் கையில் உள்ள புல்லாங்குழல் மதுரமான இசையையும் இசைக்கும், நம்முடைய ஹ்ருதயத்தில் கனன்று கொண்டிருக்கும் க்ருஷ்ணப்ரேமையை, இசைவாக ஊதிவிட்டு, நம்முள்ளத்தை க்ருஷ்ணபக்தியால் தபிக்கவும் செய்யும்.

ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவாளுக்கு மிகவும் ஈடுபாடு. பாகவதத்தின் ஒவ்வொரு வாக்கியமும் ராதை; அதன் அர்த்தம் ஸ்ரீ க்ருஷ்ணனே அல்லவா? ஶுத்தமான ஸ்படிகம் போன்ற ரூபமில்லாத அன்புதான் ஶிவம் என்றால், அதன் அழகான உருவம்தான் ராதை. இந்த ஶிவப்ரேம ரூபமாக நம்மிடையே நடமாடும் ப்ரத்யக்ஷ பகவான், நம் மஹாபெரியவா!

ஶ்ரீமத் பாகவத உபன்யாஸம் செய்வதில் மிகவும் ப்ராபல்யம் அடைந்தவரான நீடாமங்கலம் ஸ்ரீ க்ருஷ்ணமூர்த்தி ஶாஸ்த்ரிகள் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார். பலபேருக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்கும். பெரியவாளிடம் மிகவும் பக்தி பூண்டவர். அவர் வந்த ஸமயம், ஸ்ரீ ராமமூர்த்தி ஐயர், பாகவதம் படித்துக் கொண்டிருந்தார்; பெரியவா அதை ஶ்ரவணம் செய்து கொண்டிருந்தார்.

“டெல்லில பாகவத உபன்யாஸம் நல்லபடியா நடந்தது……”

டெல்லியில் என்ன, இந்த ப்ரபஞ்சத்தில் எந்த மூலையில் என்ன நடந்தாலும், எல்லாருடைய எண்ணமாக இருக்கும் பெரியவா அறியாததா?

“ஓஹோ!…. வித்வான்கள்ளாம் வந்தாளா?.…..”

“வந்தா…….. ”

“ஒன்னோட மனஸுல இருக்கற சுமையை எறக்கறதுக்குத்தானே இப்டி கொடையறேன்…” என்பது போல, பெரியவா அடுத்த கேள்வி கேட்டார்.

“என்ன சொன்னா?…..”

“வந்து….. சொல்றதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு பெரியவா…… ஒரு வித்வான் சொன்னார்…. “பாகவதத்துல, ‘ராஸபஞ்சாத்யாயி’ மட்டும் இல்லேன்னா…. ஸ்ரீமத் பாகவதம் ரொம்ப ஒஸந்த க்ராந்தம்…”ன்னு சொன்னார் பெரியவா….. மனஸுக்கு ரொம்ப க்லேஸமா இருக்கு..”

குருடனைப் பார்த்து ராஜமுழி முழிக்கச் சொன்னது போலத்தான், பாகவதத்தை பற்றி அந்த வித்வானை பேசச் சொன்னது!

அதே போல், மீரா சரித்ரம் எழுதிய ஸ்ரீ ரா.கணபதி குறிப்பிட்டது போல், ……..

“மீராவை [கோபியரை] நம்முடைய உலக தர்மத்தால் அளப்பது பாபம்! ஈஶ்வரனைத் தவிர, மற்ற எதையும்…. வேதம், ஶாஸ்த்ரம், லோகதர்மம் உள்பட எதையும் நினைக்காத பக்தி வாழ்க்கை அது! அதை, நம்முடைய தர்மத்தால் எப்படி அறிய முடியும்? உலகுக்கு வழிகாட்டவே வந்த பெரியோர்களின் பலர், உலக தர்மங்களை அனுஷ்டிப்பவர்கள். அந்த தர்மங்களையும் கடந்த பெரியவர்களும் அபூர்வமாக தோன்றுவதுண்டு! அவர்களை தர்ம ஶாஸ்த்ரத்தால் அளப்பது முறையில்லை!……”

பெரியவா அழகான புன்னகையால், நீடாமங்கலம் பாகவதரை ஆஸ்வாஸப்படுத்திவிட்டு, இனி, இதைவிட கோபீ ப்ரேமையை, ஶ்ருங்காரமே ஸந்யாஸமாக இருக்கும் உன்னதமான ஒரு நிலையும் உண்டென்பதை, அற்புதமாக முத்துப்போல் ப்ரகடனப்படுத்தினார்……

“ராஸபஞ்சாத்யாயியை எத்தனையோ பிறவியா, படனம் பண்ணி, ஶ்ரவணம் பண்ணி, மனனம் பண்ணினதுனாலதான், எனக்கு இந்த ஸன்யாஸாஶ்ரமம் ஸித்திச்சிருக்கு-ன்னு நா….. தீர்மானமா நெனச்சிண்டிருக்கேன்….”

அம்மாடீ! இதைவிட இன்னும் யார் சொல்ல வேண்டும்? என்ன சொல்ல வேண்டும்?

கண்டவர் விண்டிலை; விண்டவர் கண்டிலை என்பது ராதா-க்ருஷ்ண யுகள ப்ரேமைக்கும் பொருந்தும். அனுபவம் இல்லாமல் பகவத் தத்துவத்தை புரிந்து கொள்வதே முடியாத கார்யம். இதில் தெரிந்தமாதிரி எதையாவது பேசினால், அது உபன்யாஸமாகாது; வெறும் அபத்தம்தான்!

வாஸ்தவத்தில் அனுபவம் வந்துவிட்டால், அந்த அனுபவத்தில் அப்படியே திளைப்பதை விட்டுவிட்டு யாரும் பேச மாட்டார்கள்.

“நடிகர்களின் தோஷத்தோடு, பார்ப்பவர்களின் தோஷமும் சேருவதால், ஸினிமாவிலும், நாடகத்திலும் ஶ்ருங்கார பக்தியைக் காட்டுவது அதி ஶ்ரமமான கார்யமே!..” என்று ஶ்ரீ ரா.கணபதி கூறியது பரம ஸத்யம். அதேபோல், சிலருடைய தோஷங்கள் அவர்களுடைய பேச்சிலும் ஊடுருவி விடும்.

‘ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ’ என்ற பகவானின் திருவாக்கை அப்படியே அணுமாத்ரம் கூட மாற்றாமல், வாழ்ந்து காட்டியவர்கள் கோபியர்கள், ராதை, மீரா, ஆண்டாள், சக்குபாய், ஜனாபாய், அம்மாளு அம்மாள் போன்ற மஹா மஹா பக்தைகள்!

பகவான் இந்த உபதேஸத்தை ஆண்களுக்கு மட்டும் என்று கூறவில்லை! எல்லைமீறிய ப்ரேமபக்தியில், ஆண்-பெண் பேதபாவமே அடிபட்டுப் போய்விடும். ஏனென்றால், பகவான் ஒருவனே பரமபுருஷன்!

மீரா ப்ருந்தாவனம் வந்ததும், மஹா க்ருஷ்ண பக்தரான ஶ்ரீ ரூபகோஸ்வாமியை தர்ஶனம் செய்யும் ஆசையில், அவருடைய ஆஶ்ரமத்துக்கு ஓடுகிறாள்.

“ஏதோ பெரும் அபசாரம் நடந்திருப்பதால், த்வாரகையில் கண்ணன் கோவில் வாஸல் மூடிக் கொண்டுவிட்டது. அதற்குப் பரிஹாரமாக எங்கள் குருநாதர் கடும் நியமநிஷ்டைகளோடு விரதம் அநுஷ்டிக்கிறார்.. முக்யமாக, அவர் பெண்களை அறவே பார்க்கக்கூட மாட்டார்! எனவே உடனே இந்த இடத்தைவிட்டுப் போய்விடு! நிற்காதே!…”

ஆஶ்ரமவாஸிகள், ப்ரேமஸ்வரூபமான மீராவை, விரட்டினார்கள். சிறு தீப்பொறியை ஊதி அணைக்கலாம். அதுவே பெரும் காட்டுத்தீயாக இருந்தால்?….

இதைக்கூட கேட்டதும், மீரா… ரூபகோஸ்வாமிக்கே குருவாக, பேரெழுச்சியுடன் பொலிந்தாள்! ப்ருந்தாவனராணியாக, ராஸவிஹாரியின் ஹ்ருதயராணியாக விஶ்வரூபம் எடுத்தாள்…….

“அது யார் இந்த ப்ருந்தாவன பூமியில், கண்ணன் என்ற பரமபுருஷனுக்கு வேறாக, தன்னையும் ஒரு புருஷனாக எண்ணிக் கொண்டு உரிமை பாராட்டிக் கொள்பவன்? இந்த ப்ருந்தாவனக்ஷேத்ரம், அந்த பரமபுருஷனின் நாயகிகளுக்கு மட்டுமே உரியதான அந்தப்புரம்! இங்கே, ஒரே புருஷனாக அந்த க்ருஷ்ணன் ஒருவனுக்குத்தான் இடமுண்டு! அவனிடம் நிஜ பக்தியுடன் வரும் எவரும், இங்கே அவனுக்கு நாயகியாகத்தான் வஸிப்பார்கள்! அப்படி ஆகாத இந்த அந்நிய புருஷருக்கு, இந்த ஜனானாவில் [அந்தப்புரம்] இடமில்லை! போகச்சொல் அவரை வெளியே!….”

ஆஶ்ரமத்தின் உள்ளிருந்து மீராதாஸியின் உருவில், ராதாதேவியின் கம்பீரமான கட்டளையைக் கேட்டாரோ, இல்லையோ…. ரூபகோஸ்வாமியின் உயிரே குலுங்கிவிட்டது!

“ஆஹா! எப்பேர்ப்பட்ட ஸத்யம்! க்ருஷ்ணன் ஒருவனே புருஷன்! அவனுடன் ஐக்யமாகவேண்டிய அத்தனை ஜீவன்களுமே பெண்தானே? அதுவல்லவோ… பக்திபாவத்தின் உன்னதநிலை! நானே பெண்ணாக இருக்க, ஒரு பெண்ணை பார்க்க மறுத்தேனே! என்னையே பெண்ணாக பார்த்துக் கொண்டிருந்தால், பெண் மேல் உள்ள காமம் என்னைவிட்டு கழன்று போயிருக்குமே? நான் ஆண் என்ற அஹம்பாவ உணர்வில் ஆழ்ந்திருந்ததால்தானே, பெண்ணாசையில் விழுந்திடுவேனோ என்ற பயம் எனக்கு உண்டானது? எத்தனை மடமையான கார்யம்!...”

விரைந்து வெளியே ஓடிவந்த ரூபகோஸ்வாமி, மீராவின் பாதங்களில் விழுந்தார்.

ஸ்ரீ வ்யாஸாச்சார்யாளிலிருந்து, ஶுகப்ரஹ்மம், ஆழ்வார்கள், ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு, ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் என்று பல்லாயிரம் அவதாரபுருஷர்களும், நாம் கண்கூடாக தர்ஶனம் செய்த மஹாபெரியவா மற்றும் இப்போதும் நம்மிடையே நடமாடிக் கொண்டிருக்கும் அவதாரபுருஷர்கள் அத்தனைபேரும் அனுபவித்து அனுபவித்து, அந்த யுகள அன்பிலேயே மக்கனமாகி, பின்னும் நம்மை உத்தாரணம் பண்ணவேண்டி, அந்த உயர்ந்த நிலையிலிருந்து இறங்கி, யுகள ப்ரேமையை பற்றி நமக்கெல்லாம் ஏதோ துளியூண்டு கோடிட்டுக் காட்டுகிறார்கள் என்றால், அது அவர்களுடைய அவ்யாஜ கருணை மட்டுமே!

இப்படி லோக மாயையிலிருந்து நம்மையெல்லாம் மீட்டு, தன் பக்திரஸம் சொட்டும் பாடல்களால் நம்மை ஶ்ரீக்ருஷ்ண மாயையில் மூழ்கித் திளைக்க வைத்த ஶ்ரீ மீரா மாயியின் சரிதம் ஒன்றே நம்மை பரம பாவனமாக்கும் என்பதை ஶ்ரீமுகம் அனுக்ரஹித்து அவளுடைய ப்ரபாவத்தை லோகத்துக்கே ப்ரகடனப்படுத்தினார் நம் பெரியவா….

பிள்ளையார் சுழியாக, முதலில் ஶ்ரீ ரா.கணபதியைப் பற்றிய சில ஸ்வாரஸ்யமான ஸம்பவங்களைப் பார்த்து ரஸித்துவிட்டு, “காந்தண்ணா” என்று பெரியவாளே.. அன்போடும் மர்யாதையோடும் அழைக்கும், பெரியவாளின்  பூர்வாஶ்ரம பெரியம்மா பையனும், பெரியவாளின் ஸன்யாஸ குருவுமான…. ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றிப் பெரியவா சொன்னதை, மற்ற பால லீலைகளோடு பார்ப்போம்]

No comments:

Post a Comment