பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி 7
By (sujatha&venkatesan)6381369319…
திருக்கோட்டியூர் நம்பி பிறந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இவருடைய இயற்பெயர் திருக்குருகைப்பிரான். குருகேசர் என்றும் அழைப்பர். திருவரங்கம் பெரிய நம்பியின் உபதேசத்தின்படி இராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியைக் காண வருகிறார். சௌம்ய நாராயணப் பெருமாளை வணங்கிவிட்டு, நம்பியின் வீடு எங்கே என்று வினவி அவர் வீட்டையும் அடைகிறார். வீட்டிற்குள் இருந்தபடியே யார் எனக் கேட்க, நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் எனச் சொல்ல, நம்பி "நான் செத்து வா!" என்கிறார். திருவரங்கம் திரும்பிய ராமானுஜர் மீண்டும் வர அதே பதில் கிடைக்கிறது.
இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொல்லி அத்தனை முறையும் நம்பி அவருக்கு உபதேசிக்க மறுத்துவிட்டார். கடைசியாக பதினெட்டாவது முறை சென்ற ராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்' என்கிறார். உள்ளே அழைத்த நம்பி இராமானுஜருக்கு "ஓம் நமோநாராயணாய" என்ற மந்திரத்தை உபதேசிக்கிறார்.
“இந்த ரகசியம் தெரிந்தவன் வைகுந்தம் செல்வான். நான் இப்போது உனக்கு உபதேசிக்கிறேன். நீ யாருக்கும் உபதேசிக்க கூடாது மீறினால் நரகம் புகுவாய்!”
என்ற சத்தியம் வாங்கிக்கொண்டு இராமானுஜருக்கு உபதேசிக்கிறார்.
ஆச்சாரியரிடமிருந்து உபதேசத்தைப் பெற்ற இராமானுஜர் திருவரங்கத்துக்குப் புறப்பட்டார். புறப்படுமுன் திருக்கோட்டியூர் கோயிலின் போபுரத்தின் மீது ஏறி கீழே இருக்கும் எல்லோரையும் கூப்பிட்டு உரத்த குரலில் கூட்டத்தை நோக்கி,
“நீங்கள் இந்த உலகத்துத் துயரங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் நிரந்தரமாக விடுபட்டு மோட்சம் பெற விரும்பினால், நான் கூறும் இந்த மந்திரத்தை என்னுடன் சேர்ந்து மூன்று முறை உச்சரியுங்கள்!”
என்று “ஓம் நமோ நாராயணாய” என்று கூட்டதை பார்த்து மூன்று முறை சொல்ல, கூட்டமும் மொத்தமாக அந்த மந்திரத்தை உச்சரித்தது.
இராமானுஜர் செய்ததை அறிந்த திருக்கோட்டியூர் நம்பி மிகுந்த கோபம் கொண்டவராக
“உனக்கு நரகம் கிட்டும் என்று தெரிந்தும் ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று கேட்க
“தங்கள் வாக்கை மீறினால் நரகம் கிட்டும் என்பதை நான் அறிவேன். நான் ஒருவன் நரகம் போனாலும், மற்றவர்களுக்கு உங்களுடைய உபதேசத்தால் மோட்சம் கிடைக்குமே”
என்று இராமானுஜர் பதில் கூற, இராமானுஜரின் இந்தப் பரந்த நோக்கத்தை எண்ணி “எம்பெருமானாரே!” என்று இராமானுஜரை அணைத்துக்கொண்டார் நம்பி. எம்பெருமானாரே என்றால் எனக்கே பெருமான் ஆனீர் என்று பொருள்.
மற்றொருமுறை இராமானுஜரை சிலர் விஷம் கலந்த உணவை கொடுத்து கொலை செய்ய முயல, அதிலிருந்து இராமானுஜர் தப்பியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பி புறப்பட்டு திருவரங்கத்துக்கு வந்த சமயம், இராமானுஜர் நம்பி வருகிறார் என்ற செய்தி கேட்டு உடனே அவரை வரவேற்க அங்கே செல்கிறார். நல்ல கொளுத்தும் வெய்யில். சுட்டெரிக்கும் காவிரி மணலில் நடந்துவரும்போது நம்பியைப் பார்த்தவுடன் அந்த வெய்யிலையும் பாராது மணலில் விழுந்து வணங்குகிறார். வைணவ சமயத்தில் வணங்கும்போது, “போதும் எழுந்துரு” என்று சொல்லும் வரை எழுந்திருக்க கூடாது. நம்பி இராமானுஜரை எழுந்திருக்கச் சொல்லாமலிருக்க, கூட வந்தவர்கள் என்ன செய்வது என்று புரியாமலிருக்க, கிடம்பியாச்சான் என்பவர் நம்பியைப் பார்த்து,
“இதென்ன? ஒரு பூமாலையை வெய்யிலிலே போடுவீர்களா? நீங்கள் அவரைக் கொலை செய்யப் பார்க்கிறீர்கள்”
என்று கோபமாக தாமே இராமானுஜரை எழுப்ப, நம்பி சந்தோஷமாக,
“இராமானுஜரின் மேல் அக்கறை வைத்துள்ள ஒருவரைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன். இனிமேல் நீங்கள்தான் இராமானுஜருக்கு உணவு செய்துதர வேண்டும்”
என்றுக் கூறுகிறார்.
திருக்கோஷ்டியூர் நம்பியும் இராமானுஜரும் மிதிச்ச மண்ணை ஒரு பேப்பர்ல பொட்டலம் கட்டிக்கறேன்.
கம்ப மாகளிறு* அஞ்சிக் கலங்க,* ஓர்-
கொம்பு கொண்ட* குரைகழல் கூத்தனை*
கொம்புஉலாம் பொழில்* கோட்டியூர்க் கண்டுபோய்*
நம்பனைச் சென்று காண்டும்* நாவாயுளே.
பெரியாழ்வார் பாசுரத்த சொல்லி கோபுரத்த நமஸ்காரம் பண்றேன்.
இவர் பக்கத்துல இருக்கறவாகிட்ட திருப்பத்தூர் ரிடர்ன் பஸ் பத்தி கேக்கறார். இப்ப பட்ட மங்கலம் பஸ்தான் வரும் அங்கேர்ந்து வேற பஸ் பிடிக்கணும்கறார். பட்டமங்கலம்ன ஒடனே இவர் கூகுள் தடவி அது குரு பகவான் ஷேத்ரம்னு தெரிஞ்சிண்டு அங்கே எறங்கி கோயிலுக்கு அழைச்சிண்டு போறார்.
பட்டைமங்கை என்று இருந்த ஊர் இப்போது பட்டமங்கலம் என்று அழைக்கப்படுகிறதாம் . அங்கு அருள் செய்யும் தட்சிணா மூர்த்தி
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் மட்டுமே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி
வீராசனத்துடன் புன்னகை தவழும் சிவந்த திருவாய் மேனியாய், பிறைமதி, கொன்றை, வலது மேற்கரத்தில் அக்னியும், வலது கீழ்க்கரத்தில் ஞானமுத்திரையும், இடது மேற்கரத்தில் நாகமும், இடது கீழ்கரம் தொடையில் வைத்தும் கிழக்கு நோக்கி தட்சிணாமூர்த்தி அருள்கிறார்.
கருவறை,அர்த்த மண்டபம், மகா மண்டபம், பிரகாரம் மதில் சுவர்களுடன் கூடிய திருக்கோவில்.கோவில் முன்புறம் அம்மன் குளம் என்ற தீர்த்தகுளம் உள்ளது.
அம்பாளுக்கென உள்ள நந்தவனம் ஸ்ரீ மதியாத கண்ட விநாயகர் கோவிலின் முன் உள்ளது.
இங்கு மலரும் பூக்கள் அம்பாளின் பூஜைக்காக பயன்படுத்தப்படுகின்றது.
மறுபடியும் இன்னொரு பஸ் பிடிச்சு திருப்பத்தூர் போறோம்.
ரூம்ல ரெஸ்ட் எடுத்துண்டு திருமயம் போறதுக்கு முன்னாடி செட்டி நாடு வீடுகள் இருக்கற நான் +2 படித்த கோட்டையூர் நினைவு வரது. அங்கு இருந்த செட்டியார் வீடுகள் பத்தி சொல்லிண்டு வரேன்.
இந்த வீடுகள் வசீகரிக்கும் வண்ணங்களான பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்களைக் கூடுதலாகப் பயன்படுத்தி வண்ணம் தீட்டியிருப்பார்கள். வீடுகளில் குறைந்தது முப்பது அறைகள் வரை இருக்கும். கானாடுகாத்தான் அரண்மனை போன்ற சில வீடுகளில் அதைவிட கூடுதலாக அறைகள் இருக்கும். இந்த செட்டிநாட்டு வீடுகள் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளன. வீட்டுக்கு முன்புற வாசல் ஒரு தெருவிலும் பின்புற வாசல் இன்னொரு தெருவிலும் இருக்குமாறு மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளன. வீடுகளின் தரைப்பகுதி தெருவைவிட ஐந்து அடி உயரம்வரை கொண்டதாக கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் நடுவே பெரிய வானவெளி முற்ற அமைப்பு உள்ளது. வீட்டுக்குள் காற்றையும் வெளிச்சத்தையும் இந்த வானவெளி கொண்டு வருகிறது. வீட்டின் முன்வாசலும் பின்வாசலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளும் இந்த வானவெளியில் வந்து சேர்வதாக இருக்கும். பின்வாசலில் இருந்து பார்த்தால் முன்வாசலில் யார் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும் வகையில். இரு வாசல்களும் நேர்க் கோட்டில் உள்ளன. வீடு முழுதும் பல தூண்கள் உள்ளன இந்தத் தூண்கள் பர்மா தேக்கைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நீளமான தேக்குமரங்களை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பர்மாவில் இருந்தகாலத்தில் சங்கிலியால் கப்பல்களில் கட்டி கடலில் மிதக்கவிட்டு நாகப்பட்டிணம் துறைமுகம் வழியாக கொண்டு வந்ததாக கூறுகின்றனர். வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் கலையம்சத்துடன் அமைந்திருக்கும். வீட்டின் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலானமான திண்ணை இருக்கும். அதில் கம்பீரமான மரத் தூண்கள் இருக்கும். முன் வாசல் கதவும் நிலையும் நுட்பமான மர வேலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கும். இந்த நிலை ஒரு பண்பாட்டு அடையாளமாகவே மாறியுள்ளது. தெய்வச் சிலைகளை நிலையின் மேல்புறத்தில் செதுக்கியிருப்பார்கள். வீட்டின் முகப்பு பட்டாலை (திண்ணை) என அழைக்கப்படுகின்றது. பட்டாலையைத் தாண்டினால் வருவது வளவு (முற்றம்) ஆகும். வீட்டில் தேக்குமரத்தால் ஆன பெரிய பெரிய கதவுகள், மர பீரோக்கள், ஊஞ்சல் என மரவேலைப்பாடு நிறைந்த பொருள்கள் கொண்டதாக உள்ளது. ஆங்காங்கு உள்ள நிலைகளில், இராமாயண, மகாபாரதக் காட்சிகளை வரிசையாகச் செதுக்கி உள்ளனர். தற்காலத்தில் சில வீடுகளை சற்று மாற்றியமைத்து நட்சத்திர விடுதிகளாக பயன்படுத்துகின்றனர். குடும்பத்தினர் பாகப்பிரிவினைப் பிரச்சினைகள உறவினர்களைக் கொண்டு பேசி தீர்த்துக் கொள்ளப்படுகின்றன. பத்திர அலுவலகங்களுக்குச் சென்று பத்திரம் பதிவது இல்லை. அவர்களுக்குள் உள்பத்திரம்ங்களை எழுதி வைத்துக் கொள்ளப்படுகின்றன. அதன்படி, ஒரு வீட்டின் தரைத்தளத்தில் உள்ள ஒரு அறை ஒருவருக்கும். அதற்கு நேராக மேலே மாடியில் உள்ள அறையை வேருவர் என உடன்பிறந்தோர் பிரித்துக்கொள்கின்றனர். அறைகள், சமையல் அறைகளில் மட்டும்தான் இந்தப் பிரிவினை. நடுமுற்றம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும்.வீடுகள் பார்க்கப்பார்க்க அங்கேயே தங்கிடலாம் போல இருக்கும்.
அத்தையாத்துல தங்கி படிச்ச போது இது போல பெரிய வீட்டில் இரண்டு ரூம் மட்டும் வாடகைக்கு இருந்தோம். மத்த ரூமெல்லாம் பூட்டி இருக்கும்.
பக்கத்துல சிவன் கோயில் தினம் அத்தையுடன் போய் விளக்கு போட்டு வந்தது நினைவுக்கு வர்ரது.
செட்டி நாட்டு நினைவுகளோட திருமயம் பஸ் ஏறரோம். படம் 1)சிவன் கோயில்2,3,4)செட்டி நாட்டு வீடுகள்
கோட்டையூர் கோபுரம் ,செட்டி நாடு அரண்மனை




No comments:
Post a Comment