தனேச்வரம் ஶ்ரீகாமாக்ஷி மஹிமை:
"நீலா!! அன்னதானத்திற்கு எல்லாம் தயாரா!! ஜனங்களெல்லாம் வந்துண்டே இருக்கா பாரு!! நேரமாயிடுத்தே!!" அச்சுதர் தன் மனைவி நீலாக்ஷியிடம் கூறிக்கொண்டிருந்தார்.
"எல்லாம் தயார் ஸ்வாமி!!" என்று கூறியபடியே பதார்த்தங்களை அன்னதானப் பந்தலில் கொண்டு வைத்துக்கொண்டிருந்தாள் நீலா.
வழக்கத்தை விட அன்று ஏக கூட்டம்!! உள்ளூர் மட்டுமல்லாது வெளியூரிலிருந்தும் கூட்டம் அனேகம் வந்து அன்று சாப்பிட்டார்கள். நித்யமும் செய்யும் தர்ம கார்யம் தான் என்றாலும் அன்று அச்சுதருக்கு ரொம்ப ஸந்தோஷம்!! நிறைய பேர் சாப்பிடுகிறார்களே என்று!!
அத்தனை பேரும் ஸந்தோஷமாக வாழ்த்தினார்கள்!!
"ஹூம்!! செல்வத்தை இவ்வளவு கொடுத்த காமாட்சிக்கு ஒரு குழந்தையை இவங்களுக்கு குடுக்கனுமின்னு தோனல்லியே!!" போகிற போக்கில் ஒரு குரல் நீலாட்சி காதிலும், அச்சுதர் காதிலும் விழுந்தது!!
இரு கண்களிலும் கண்ணீர் பொங்க நீலா உள்ளே சென்று படுத்துவிட்டாள். அச்சுதரும் துக்கத்துடன் "அம்மா காமாக்ஷி!! உனக்கு ஏதும் அவச்சொல் நேராதபடி எங்களுக்கு குழந்தையை கொடுத்துவிடு தாயே!! உன்னை ஒருவர் பழிக்கும்படி நேர்வதை என்னால் தாங்கிக்கொள்ள இயலாது!!" என்று அரற்றினார்!!
அன்றிரவு சொப்பனத்தில் ஓங்கார வடிவினளான ராஜராஜேச்வரி அசரீரியாக "அச்சுதா!! இவ்வூரைக் காக்கும் தனேச்வரியான எனக்கு கோவிலெழுப்பி காமாக்ஷி என பெயரிட்டாய்!! உனக்கு குறை நேருமா!! செய்த கர்மங்கள் அனுபவித்தாலன்றி தீராது!! கவலை கொள்ளாதே!! உனக்கு ஞானமே வடிவாயுள்ள குழந்தை பிறப்பாள்!! "ஞானம்" என்றே பெயரிடு!!" என்றுரைத்தாள்.
திடுக்கிட்டெழுந்து அச்சுதர் "அம்பிகே!! உன் கருணையே கருணையம்மா!!" என்று கண்களின் பாஷ்பம் பெருக அம்பாளை நமஸ்கரித்தார்.
விரைவிலேயே நீலா கர்ப்பம் தரித்தாள். அழகிய பெண் மகவும் பத்து மாதம் கழித்து பிறந்தது. ஶ்ரீகாமாக்ஷியின் உத்தரவின்படி "ஞானாம்பா" என்றே பெயரிட்டனர்!!
சிறிது காலத்திற்கெல்லாம் அச்சுதரின் செல்வம் குறையத் தொடங்கியது!! ஆனாலும் தினமும் ஒருவருக்காவது அன்னமிடுவது என்ற கொள்கையை விட்டாரில்லை. ஆனால் காலம் செல்லச்செல்ல ஒருவேளை அன்னம் கூட தனக்கேயில்லாதபடி குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது.
அந்த சமயத்தில் கூட "அம்மா காமாக்ஷி!! உன்னையே நம்பின எங்களை இப்படி சோதிக்கறியே" என்று ஒரு தடவை கூட அம்பிகையிடம் கோபித்ததில்லை. "செய்த கர்மாவை அனுபவித்தே கழிக்க வேண்டும்!!" என்ற ராஜராஜேச்வரியின் அசரீரி அவ்வப்பொழுது அச்சுதர் காதில் ஒலிக்கும். "எல்லாம் அம்பாள் பார்த்துப்பா!!" என்று அமைதியாகி விடுவார்.
சேர்ந்தார்ப்போல மூன்று நாட்கள் உணவில்லாமல் அச்சுதர் குடும்பம் தவித்தது. "ஸ்வாமி!! நாம் பெரியவர்கள் பசி பொறுக்கலாம்!! குழந்தைக்கு ஐந்து வயது தான் ஆகிறது!! அவள் பாவம்!! பசிக்கிறது என்று சொன்னால் நாம் கவலைப்படுவோமே என்று சொல்லாமல் பசியை பொறுத்துக்கொண்டு தூங்குகிறாள்!! குழந்தைக்காவது ஏதாவது ஆகாரம் ஏற்பாடு செய்யுங்களேன்!!" என்றாள் நீலாக்ஷி.
அச்சுதரும் வயல்வெளிகளுக்குச் சென்று வெடித்துச் சிதறி கிடக்கும் நெல்மணிகளை பொறுக்கிக்கொண்டு வந்து "நீலா!! ஓரளவு நமக்கு இன்னிக்கு ஆகாரத்துக்கு ஏற்பாடு செய்திருக்கேன்!! சாதத்தை வடிச்சு உப்பும் ஜலமும் சேர்த்து பிசைஞ்சு வை!! ஓரெட்டு ஓடிப்போய் காமாக்ஷியை பாத்துட்டு வந்துடறேன்!!" என்றபடி கோவிலுக்கு விரைந்தார் அச்சுதர்.
கோவிலுக்குச் சென்ற அச்சுதர் தனேச்வரியான காமாக்ஷியை கண்களில் கண்ணீர் பெருக தர்சித்தார். வறுமையினால் அல்ல!! எப்பொழுதும் போல் தேவியைக் கண்டதும் அவருள்ளம் உருகி விட்டது!! அம்பாளை கண்குளிர தர்சித்து கோவிலுக்கு வெளியில் வந்தார் அச்சுதர்.
"அப்பா!!" என்றபடி ஞானம் ஓடி வந்தாள் அச்சுதரிடம்!! "அம்மாடி!! என்னடா இது!! இந்த வெயில்ல இப்படி ஓடி வர்றே!! அப்பா ஆத்துக்கு தானே வந்துண்ட்ருக்கேன்!!" என்றபடி குழந்தையை தூக்கிக்கொண்டு கோவில் மண்டபத்தில் உட்கார்ந்தார் அச்சுதர்.
"அப்பா!! எனக்கு பசிக்கறது!! நீங்க வந்ததுக்கு அப்பறம் தான் சாதம் போடுவேன்னு அம்மா சொல்லிட்டா!! அதான் உங்களை அழைச்சிண்டு போலாம்ன்னு ஓடி வந்தேன்!!" கண்கள் விரிய ஞானாம்பாள் கூறியதைக் கண்டு இமைக்காமல் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தார் அச்சுதர்.
"சரிடா தங்கம்!! வா போகலாம்!!"
"அப்பா!! எனக்கு கால் ரொம்ப வலிக்கறது!! நான் வரலை!! நீங்க போய் சாதம் எடுத்துண்டு வாங்கோ!! நான் இங்கேயே இருக்கேன்!! சாப்டுட்டு சேர்ந்து போகலாம்!!" என்றாள் பெண்.
"சரிம்மா!!" என்றபடி கிளம்பினார் அச்சுதர். "நீலா!! நீலா!" என்றபடி வீட்டிற்குள் வந்தார் அச்சுதர். நீலா அசந்து தூங்கிக்கொண்டிருந்தாள்! "பாவம்!! பசி மயக்கம்!! தூங்கறா!!" என்றபடி பெருமூச்சு விட்டு அடுக்களைக்குச்சென்று நீலா வடித்திருந்த சாதத்தில் உப்பும் ஜலமும் கலந்து எடுத்துக்கொண்டு கோவிலுக்கு ஓடினார்.
குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. முகத்தில் தண்ணீரால் துடைத்து, எழுப்பி மடி மேல் உட்கார்த்தி வைத்து அந்த குழந்தைக்கு அன்னத்தை ஊட்டினார். "அப்பா!! அம்ருதமா இருக்கு!!" என்றது குழந்தை. "பாவம்!! அவ்வளவு பசி!!" என்று நினைத்தபடி அவ்வளவு சாதத்தையும் ஊட்டிவிட்டார்.
சாதம் தீர்ந்த பிறகும் கூட "அப்பா!! அம்மா இன்னொரு குவளைல சாதம் வடிச்சுருக்கா!! போய் எடுத்துண்டு வாங்கோ!! எனக்கு இன்னும் பசிக்கறது!!" என்றாள் ஞானாம்பிகை.
"தங்கம்!! ஏதுடி வேற சாதம்!! அம்மா வடிச்சுருக்காளா!!"
"ஆமா!! அப்பா!! அம்மா இன்னோரு அடுக்கு நிறைய வச்சுருக்கா!! போய் எடுத்துண்டு வாங்கோ!! பசிக்கறது!!" என்றது குழந்தை!
வீட்டிற்கு மறுபடி ஓடினார் அச்சுதர். "நீலா!! நீலா!! ஞானம் கோவில் மண்டபத்துல இருக்கா!! ஏற்கெனவே ஒரு அடுக்குல சாதத்தை வைச்சுருந்தயே நீ, அதை ஊட்டி விட்டேன்!! இன்னொரு அடுக்கு நீ வைச்சுருக்கியா என்ன!!" என்றார் அச்சுதர்.
"என்ன சொல்றேள் நீங்க!! ஞானம் கோவில்ல இருக்காளா!! இதோ படுத்துண்ட்ருக்கா பாருங்கோ!! பசி மயக்கத்துல குழந்தை தூங்கறா!! நீங்க கோவில்ல இருக்கான்றேளே!!" என்றபடி ஞானத்தைக் காட்டினாள் நீலா.
"வடிச்சு வெச்ச சாதம் அடுக்குல அப்படியே இங்க இருக்கே!! நீங்க எதை ஊட்டினேள்!!? யாருக்கு ஊட்டினேள்!!?" என்று குழப்பத்துடன் கேட்டாள் நீலா.
சட்டென்று பொறி தட்டியது அச்சுதருக்கு!! "அப்போ குழந்தையா வந்தது!!?"
"அம்மா!! காமாக்ஷி!! தாயே!! காமாக்ஷி!!" என்றபடி கோவிலுக்கு ஓடினார் அச்சுதர். நீலாக்ஷியும் ஞானமும் பின்னாலேயே ஓடினர்.
மண்டபத்தில் ஒருவருமில்லை!!
"அச்சுதா!!" என்றபடி அசரீரி கேட்டது!!
"குழந்தையாக வந்தது யார் என்று யோசிக்கிறாயா!!? தனேச்வரியான நானே தான் வந்தேன்!!"
"அம்மா!! பராசக்தி!! உனக்கா நான் முகத்தை ஜலத்தால துடைச்சு விட்டேன்!! அன்னபூரணியான உனக்கா நான் சாதத்தை ஊட்டி விட்டேன்!! தாயே!! அம்மா!! நான் என்ன பாகயம் செய்தேனடி!!" என்றபடி கதறினார் அச்சுதர்.
"அச்சுதா!! ஆம்!! நானே தான் வந்தேன்!! மூன்று நாட்கள் என் குழந்தைகளான நீங்கள் யாரும் சாப்பிடவில்லை!! நானும் நைவேத்யங்களை ஏற்கவில்லை!! குழந்தைகளான நீங்கள் பசித்திருக்க தாய் நான் உணவு உண்பது நியாயமா!! அதனால் நானும் பட்டினி!! இன்று எனக்கு தாங்க முடியாத பசி!! நீயும் கோவிலுக்கு வந்தாய்!! உன் கையால் சாப்பிடவேண்டும் என்று ஆசை!! என் தந்தை மலையரசன் கரத்தால் சாப்பிட்ட ஞாபகம் வந்துவிட்டது!! அதனால் தான் இந்த நாடகம்!! மூன்று நாட்கள் பசியை போக்கிக்கொள்ள உங்கள் மூன்று பேர் உணவையும் நான் ஒருத்தியே சாப்பிட்டுவிட்டேன்!!" என்று சிரித்தாள் அன்னபூர்ணேச்வரியான ஶ்ரீகாமாக்ஷி.
கண்களில் கண்ணீர் தாரை தாரையாகப்பொழிய மூவரும் பேச்சற்றிருந்தனர்.
"அச்சுதா!! கவலை கொள்ளாதே!! இன்றோடு உன் தரித்திரம் தொலைந்தது!! பல ஜன்மங்களில் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை ஐந்து வருடங்களில் அனுபவித்து ஒழித்துவிட்டீர்கள் நீங்கள் மூவரும்!! இனி உங்கள் இல்லத்தில் ஐச்வர்யம் பெருகும்!! தனேச்வரியான நான் உங்கள் இல்லத்தில் தனத்தை பொழிகிறேன்!! அஷ்ட ஐச்வர்யங்களையும் பெற்று, ஸகல ஸௌபாக்யங்களையும் அடைந்து என்னுடைய பாதாரவிந்தத்தில் ஜன்மாந்த்ரத்தில் ஐக்யமடைவீர்கள்!!" என்றபடி மறைந்தாள் காமாக்ஷி.
அம்பிகையின் கருணையை நினைத்து கண்ணீர் பெருக இல்லத்திற்குத் திரும்பிய அச்சுதர், தேவியின் அருளால் குபேரனாகிப் பின் பரதேவதை ஆலயத்தொண்டுகளையும், தான தர்மங்களையும் செய்து லோகமாதாவான ஶ்ரீகாமாக்ஷியின் திருவடிகளில் தன் மனைவியுடன் கலந்து மறைந்தார்!!
வடதேசத்தில் தனேச்வரம் எனும் க்ஷேத்ரத்தில் நிகழ்ந்த அற்புத சரித்ரம்
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்யமாக அமைதியாயக அமோகமாக அமைய வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment