91. கல்லிடைக்குறிச்சி (1 of 2) (சிசீ6) #ganeshamarkalam
தலைப்பைப் பாத்ததும் தெரியணுமே தாமிரபரணி ஆத்தங்கரைக்கு வந்துட்டம்னு. உளுந்தூர்பேட்டைக்கு பக்கத்தில் கள்ளக்குறிச்சீன்னு ஒண்ணு. அதில்லை. ரெம்பவே போரடிக்கர இடம் அது. பிராம்ணாளுக்கு கதை சொல்ல அங்கேல்லாம் எதுக்குப் போணம்? அப்ப இது பிராம்ணா கதைன்னு தோணும். ஆனா பிராம்ணாளுக்கு மிகவும் பிடிச்ச ஒண்ணைப் பத்தின கதை.
அம்பாசமுத்திரமும், கல்லிடைக்குறிச்சியும் ட்வின் நகரங்கள்னு சொல்லலாம். ஹைதராபாதும் செகந்தராபாதும் போல். ஹங்கேரியில் புடாவும் பெஸ்டும் மாதிரி. அங்கே டென்யூப் நதி, இங்கே ரெண்டு ஊருக்கும் நடூலே தாமிரபரணி. அவ்ளவ்தான்.
“ககு” ரெண்டு விஷயத்துக்கு ஃபேமஸ். சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் 500 வருஷத்துக்கு மின்னாடி கட்டின குலசேகரமுடையார் கோவில், இன்னொண்ணு அப்பளம். காட்டேஜ் இண்டஸ்ட்ரீ. இப்பத்தான் என்னத்தையோ புதுசா பண்ரதை ‘ஸ்டார்டப்’னு சொல்லி பீத்திக்கரா. அந்த காலத்தில் ஆத்துக்கு வேண்டியதை அவாவா பண்ணிச் சாப்டுண்டதை ஸ்டார்டப்பா மொத்தமா, அதே பவ்யத்தோட ஹைஜீன் குறையாம செய்ய ஆரம்பிச்சது என்னோட எள்ளுத்தாத்தா. ஊரில் அப்ப அந்தக் காலத்தில் அவர்தான் ஸ்டார்டப்புக்கெல்லாம் தாத்தா, பயனீர். நான் அவர் வழீலே, இன்னும் தொழில் நலிஞ்சுடாம அப்பளம் மேனுஃபேக்சர் செய்யரேன். எக்ஸ்போர்டெல்லாம் ஆகிண்டிருக்கு. டிமாண்ட் எகிறித்தான் போச்சு. நிறைய பேர் செய்யரா, எனக்குன்னு “லக்ஷ்மி ப்ரேண்ட்”. அதுக்கு அப்பரம் வருவம். கதைக்குள் போரத்துக்குள்ளே குலச்சேகரமுடையார் பாத்துடலாம்.
இங்கேந்து 1982வில் திருடி எடுத்துண்டு ஆஸ்த்ரேலியாவில் வித்துட்ட பஞ்சலோக நடராஜர் சிலையைத்தான் பொன் மாணிக்கவேல் மீட்டுண்டு வந்தார்னு சொன்னா எங்கூர் ஞாபகத்துக்கு வந்திடும். சின்னக் கோவில்தான், அறம்வளர்த்த நாயகியோட குலசேகரர் எங்களையெல்லாம் அருள் பாலிச்சிண்டு. இப்பவும் ஆடிப் பூரத்துக்கு எங்காத்து மண்டகப்படி உண்டு. பரிவட்டம் கட்டிக்க போவேன். பிஸினெஸ் தரும் வரும்படீலே 5% வருஷா வருஷம் கோவிலுக்கு தந்துடரது வழக்கம். சொச்ச 95 நீயே வச்சுப்பயான்னா இல்லை. நிறையபேருக்கு வேலை கொடுத்து அவா நன்னா இருக்க என்னெல்லாம் செய்யணுமோ எல்லாம் செய்தாரது. அதுவும் தர்மந்தானே. அதுக்கு கையில் பணம் வேணுமே!
அடுத்ததாக அப்பளம். இங்கே மட்டும் பல பேர் அப்பளம் செய்யர தொழிலில். எங்களை மாதிரி ரெம்ப நாளா ஈடுபட்டுண்டு இன்னும் அந்த சுவை சுத்தம் மாறாம செய்யரவான்னு ஒரு 20 பேரச் சொல்லலாம். கைமணம், முக்கியமா ட்ரெடிஷணல் முறையில் செய்வது அதை விட இந்தூர் தண்ணீர் எல்லாமும் அந்த அப்பளத்துக்கு ஜீவன். மெஷின் வாங்கி வச்சுக்கலை, எல்லாம் கைதான். நல்ல அப்ளம்னா பாக்கேட்டை தொறக்கப்போ வாசனை வரணும். பொரிக்காம சுட்டு சாப்பிட்டுப் பாக்கணும். அப்பத்தான் அப்பளத்தொட அருமை பெருமை தெரியவரும். பலபேர் பொரிச்சா பெரீசா விரிஞ்சு வந்தாத்தான் நல்ல அப்ளம்னு நினைப்பா. அதெல்லாம் விக்ரவன் செய்யர தீசத்தனமான பிரசாரம். அப்பளம் சுத்தமானதா இருந்தா 30%தான் விரிஞ்சு தரும். புதுசா இருந்தா கொப்பளமா பொரியும். ரெம்பவே அகண்டு போனா என்னமோ கலந்துட்டான்னு அர்த்தம், பொரிச்செடுத்ததும் எண்ணை கலர் மாறாம் இருக்கான்னு கவனிக்கணும். இதெல்லாம் அப்பளத்தின்மேல் உண்மையான ப்ரீதி வச்சுண்டிருக்கும் மனுஷா புரிஞ்சிப்பா.
எங்க அப்பளாத்துக்கு விளம்பரம் கிடையாது,. சன்னிதித் தெருவில் எங்களோட எக்ளூஸிவ் அவுட்லெட் இருக்கு. நா சொன்னது, ஆதிவராக பெருமாள் கோவில் சன்னிதி. அதுலேயும், மாட வீதீலேயும் அப்பளம் கிடைக்கும் .அவுட்லெட்டுக்கு வரமுடியலைன்னா சுத்துவட்டாரத்தில் ஏஜென்ட்ஸ் இருக்கா, லக்ஷ்மி அப்பளம்னு கேட்டு வாங்கிப்பா. கமிஷனே வாங்கிக்காம வித்துத் தரவா இருக்கா. எங்க கடைக்கு வரவா 200க்கு மேல் அப்பளம் கேட்டா தரமாட்டம். “ரெண்டு பேக்கட் வாங்கிக்கோங்கோ, தீந்ததும் திரும்ப வாங்கோ, இல்லை போன் செய்யுங்கோ ஃப்ரெஷா டெலிவரி செய்வம்”. எதுக்குன்னா பலபேர் வாங்கிண்டு போய்டு முட்டாத்தனமா அரிசி டப்பாவுலே வச்சு அது காய்ஞ்சு போனப்பரம் பொரிச்சு பாத்து நன்னா பொரியலை, டேஸ்ட் நன்னாயில்லைன்னு அப்பளத்து குவாலிடியை குறைச்சுச் சொல்லிடப் பிடாது பாருங்கோ. அப்பளத்தை வச்சுக்க தெரியணும். இல்லைன்னா வாங்கீண்டு போப் பிடாது.
ஆசையா கெட்டு வாங்கிக்கரவா 75% பிராம்ணாதான். சமையல் கான்ட்ராக்ட் செய்யரவாளும் சுத்து வட்டாரத்தில் 100கிமீக்கு வந்து பல்கா கேட்டு வாங்கிப்பா. வரவா யாருன்னு தெரிஞ்சிண்டு பல்கா தருவம். ஏன்னா ரெண்டு பந்தீலே வாங்கிண்டு போனது தீந்துடும். சாப்பிட்டவா இன்னொண்ணு கேப்பா பரிஜாரகன் தரமாட்டான். டபாய்ச்சிடுவான்.
பிராம்ணா வாங்கிக்கர பொருளாச்சே உங்ககிட்டே வேலை செய்யரவா எல்லாரும் பிராம்ணாளான்னு கேக்கப் பிடாது. இப்படி சில சமையம் அசட்டுத்தனமான கேள்வியோட சிலர் வருவா. ஒருகாலத்தில் கூட்டுக் குடும்பமா இருந்தப்ப எங்க கொள்ளுத்தாத்தா, அப்பரம் எங்க தாத்தா காலங்களில் ஆத்து மனுஷாளே சேர்ந்து செய்யரப்போ அப்படிச் சொல்லிக்கல்லாம்தான். ஆனா அப்பளம் செய்யர ப்ராசஸ் கடுமையான உடலுழைப்பை டிமாண்ட் பண்ணும். எல்லாராலும் செய்ய முடியாது. இப்பெல்லாம் இந்தமாதிரி வேலைக்கு பிராம்ணா எங்கே முன்வரா? படிச்சவன் ITக்கு போயிட்டான். படிக்காதவன் செல் போன் விக்கக் கிளம்பிட்டான். அப்பள மாவு பிசையவோ, இடிச்சு உருட்டவோ இல்லை வட்டமா இடவோ பிராம்ணா யார் தயாரா இருக்கா? பொரிச்சுப் போட்டா 4க்கு குறையாம ஒடிச்சு உள்ளே தள்ளரத்துக்கு மட்டும் ஓடி வருவா. அதுலெயும் 60 வயசாச்சுன்னா வாய் நிறைய அடச்சு மென்னுட்டு கமென்ட் அடிக்காம போரதில்லை.
டப்புன்னு நீங்க உடெச்சு நிமிஷமா தின்னு தீக்கர விஷயத்துக்கு எத்தனை பேர் எவ்வளவு அல்லாடரான்னு தெரியுமா?
இப்பவே சொல்லிக்கரேன் என்னண்டை வேலை பாக்கரவா நான்-ப்ராமின்தான். கிராமத்து சனம், நம்பளை விட சுத்த பத்தமா இருப்பா. மேற்பார்வை எங்காத்து மனுஷா. இந்தக் கதைக்கு குறிப்பா நான் சொல்ல வேண்டியது இவா 6 பேரை. ஏன்னா எங்களோட 25 வருஷமா இருக்கா. சின்ன வயசுலேயே வந்துட்டா. சிலர் எங்கப்பா காலத்துலேந்து. கோமதி, சரளா, மல்லிகா, இருளாயீ, சற்குணம் (ஆம்பளப் பேரோன்னு நினைப்பேள்) காந்தம்மா. எனக்கு இந்த அப்பளப் ப்ராஸச் பத்தி என்னெல்லாம் தெரியுமோ அதெல்லாம் இவாளுக்கும் தெரியும். என்னெல்லாம் செய்வாங்கரேள்? சொல்ரேன் கேளுங்கொ!
பலவிதமான அப்ளம் வொர்கார்டர் படி செய்து கொடுப்பா. உளுந்து, அரிசி, ரெட்டை அப்ளம், மிளகு, கிழங்கு அப்ளம், கார அப்ளம், அதைத் தவிற அப்ள சிப்ஸ், வடகம் வகைகள்னு எங்காம் களை கட்டும். மூணு அடுக்கு மித்தத்தோட எங்காத்தில்தான் எல்லாம் செய்தாரது. 60% நாங்க உற்பத்தி செய்யரது உளுந்து அப்பளம்தான். சொச்சமெல்லாம் அப்பரத்துக்கு அப்பரம். நீங்கெல்லாம் உளுந்துன்னு சட்டுன்னு சொல்லிட்டுப் போவது உந்தூழ் அல்லது உழுந்துன்னு சங்க இலக்கியத்தில் பாடப்பெற்ற தானியமாகும். உழுத்தங்களி சாப்பிட்டா இடுப்பு எலும்பு பலம் பெறும். உளுந்து அப்பளம் அத்தனை நல்லது. பிராம்ணா சமையலில் இதுக்கு அதிமுக்கிய இடம் அதுனாலே.
நன்னா காயவச்சு தோல் நீக்கிய உளுந்தை கல்லியந்திரத்தில் நைஸா மாவா பண்ணுவள் காந்தம்மா. அதை எங்கூர் நீர் ஊத்தி நன்றாக பிசையணும். மெஷீன் வச்சுக்கலைன்னு சொன்னேன், கையால்தான், ரெண்டுபேரா சற்குணமும், இருளாயியும் இதில் எக்ஸ்பெர்ட்ஸ். பிசைஞ்சிண்டே இருப்பா. என்ன அப்பளமானாலும் ஜீரகம், பிரண்டைச் சாறு, உப்பு, பெருங்காயம் கரைச்சு போட்டு சித்தே விளக்கெண்ணை சேர்த்து பாட்டுப் பாடிண்டே இவா பிசையறது பாக்கவே அழகு. அப்பரம் பெரீய அம்மிக் கல்லில் பிசைஞ்ச மாவ வச்சு இரும்புலக்கையால் இடிச்சு பரப்பி மீண்டும் மடிச்சு வச்சு பிசைஞ்சிண்டே இடிச்சு ஒரு பதம் வர வரைக்கும். பதம்னா? அவாளுக்குத் தெரியும்.
பிசைஞ்ச மாவை பெரீய பந்துபோல் உருட்டி இட்லி பாத்திரத்தில் வச்சு சித்தே வேக வைப்பம். அதை மல்லிகா பாத்துப்பள். அதுக்கப்பரம், கோமதியும் சரளாவும் பந்த பாம்புபோல் உருட்டி சின்ன ஈலுமிச்சை சைஜுக்கு பிச்சு அப்பளமா இடுவதற்கு தயாரா வச்சுடுவா. இப்படி ஒரு ஆயிரம் உருண்டை தயார்னா வட்டமா உக்காந்து இட ஆரம்பிப்பா. அதாவது மொதநா அரைச்சு வச்ச உழுந்து பச்சை மாவை மறுநா கார்த்தாலே 9க்கு நீர்விட்டு பிசைய ஆரம்பிச்சா 12க்கு இட உக்காந்துடலாம். பரபரன்னு செய்வான்னா பாத்துக் கோங்கோ. இடரத்துக்கு அகலமா கல், பெரீய அப்ளக்கட்டை. மேல்மாவு வச்சுக்காமலேயே ரெண்டு விதமான அப்பள சைஜுக்கு 5000 அப்பளம் 4 மணிக்குள் இட்டூட்டு எழுந்துண்டுடுவா. மாவு வெந்துட்டதால் ஃபேன் காத்தில் காய்ஞ்சா போதும் எங்காத்து மாமியும், மாட்டுப்பொண்ணும் ஆத்துவேலை ஆகிடுத்தே அதனால் எண்ணி அடுக்கி பேக்கிங்க் செஞ்சுடுவா. என் பிள்லை அப்பரமா வந்து கணக்கு வழக்கெல்லாம்.
5000 அப்பளமா சட்டுன்னு 50 கட்டு வித்துட்டா தீர்ந்து போகுமேன்னா ஆமாம். இவாளப் போல 2 க்ரூப் செய்யரதுனாலே ஒருநாளைக்கு 100 கட்டு மட்டுமே சன்னிதி தெருக்கு வரும். இடையில் இன்ன பிற ப்ராடக்ட்ஸும் அது பாட்டுக்கு.
மாவு பிசையரப்போ மட்டும் நான் நின்னு பாத்துப்பேன். குழவியால் அடிக்கரச்சே தின் லேயரா ஆகி டப்புன்னு பட்டாஸ் மாதிரி கேக்கும். அதுவரைக்கும் சளைக்காம பிசைஞ்சுட்டா அப்பளம் சக்ஸஸ்னு வச்சுக்கலாம். மத்தபடி நம்மாத்து பொருட்கள்தான், ஏதும் கலப்படமில்லை, எல்லா சாமானும் இவாளுக்கு தேவையான சுத்தமான தண்ணீர வச்சுடரது. எல்லாம் ஆனதும் இவா எல்லாத்தையும் சுத்தப் படுத்தி பங்கிடு செஞ்சுட்டுத்தான் போவா.
கைநிறைய சம்பளம் தந்துடுவேன், அதைத் தவிற ஆபத்து சம்பத்துக்கு தேவைன்னா கொடுத்துடரது. இவாளை ஆத்து மனுஷாப்போல்தான் நடத்துவேன். அடிக்கடி பிள்ளையான்டன்தான் மத்த அப்பளக்கார என்ன செய்யரானு பாத்திட்டு “இந்த ப்ராசஸை அப்படியே மெகனைஜ் செஞ்சுடலாம்ப்பா.”. “செஞ்சுடலாம்தான். செஞ்சுட்டா 4 ஆள் போதும். இப்போ வருவதுபோல் 3 மடங்கு ப்ரொட்யூஸ் செய்யலாம். ரெட்டிப்பு லாபம் பாக்கலாம். எல்லாரும் அதை செய்யரதுனாலே அது சரியாகிடுமா என்ன?”
“லக்ஷ்மீ அப்பளம்னா கை அப்பளம்தான். அத மாத்திட்டா, அப்பரம் அது அதில்லாமப் போயிடுமே”. புரிஞ்சிக்க மாட்டேன்னா! கோயமுத்துரில் இல்லை லூதியானாவில் அப்பளம் பிராசஸ் செய்யன்னு நிறைய மெஷீன்ஸ் வந்தாச்சுன்னு எனக்கும் தெரியும். அதில் உடன்பாடில்லை. அப்பாவொட வேலை பாத்தவா அவாளாவே விட்டூட்டுப் போரேன்னாலும் அனுமதிக்க மாட்டேன். “சாமி, ஒரு ஈடுபாட்டோட நாம செய்யர பொருள் இன்னொருத்தர் வயித்துக்குள் போவதால் நாமதான் சுத்த பத்தமா டேஸ்டியா செஞ்சு கொடுக்கணும்.” காந்தம்மாவே சொல்வள். “என் காலத்துக்கு அப்பரம் நீ எப்படி வேணும்னாலும் இந்த தொழில செஞ்சுக்கோ”. கட் ஏண்ட் ரைட்டா சொன்னேன். அவனுக்கு அதில் கோவம்னு தெரியும்.
இப்படிப் போயிண்டிருக்கச்சே ஒருநா இடிபோல அந்த ந்யூஸ் வந்து சேர்ந்தது. கடையில் உகாந்திருக்கேன், திருநெல்வேலி ஃபூட் இன்ஸ்பெக்டராம் ஒருத்தர் அரசாங்க ஜீப்பில் கூட ஒரு ஆளோட வந்து நேர சன்னிதித் தெருவில் இறங்கினர். நேர என் கடைக்கு வந்து “சாம்பசிவன் நீங்கதானே? லக்ஷ்மி அப்பளம் உங்களொட பிரான்ட் தானே?” “ஆமாம் சார்! என்ன விஷயம்?” நிச்சயம் அப்பளம் வாங்க வந்தவர் இப்படியெல்லாம் கேக்க மாட்டர். கையோட கொண்டு வந்த பைக்குள் கையவிட்டு ஒரு அப்பளக்கட்ட எடுத்து காட்டி “இது உங்க ப்ராடக்ட் தானே?” கையில் வாங்கிப் பாக்கரேன்.
பேக்கட் பிரிச்சிருக்கு, அஞ்சாறு அப்பளம் எடுத்து யூஸ் செஞ்சுட்டாப்போல். லேபல், கைக்கு பிடிமானம், முன்னாடி பின்னாடி மடிச்சு ஒட்டின விதம் எல்லாத்தையும் விட மடிப்பில் லேசா ஒரு இனிஷியல் என் மாட்டுப்பொண் போடுவா அதுவும் அப்படியெ இருக்கவே “என்னுதுதான்! சொல்லுங்கோ” “உங்க அப்பளத்தில் கலப்படம் இருக்குன்னு டெஸ்ட்டில் தெரிய வந்திருக்கு. கலக்கப் பட்ட பொருட்கள் ஃபூட் அண்ட் ட்ரக் கன்ட்ரோல் ஆர்டர் படி ஆபத்தானதுன்னு வகைப்படுத்தப் பட்டவை. உங்கள் ஸ்டாக்கை சீஸ் பண்ணி, விசாரனை முடியரவரைக்கும் உங்கள் ஃபேக்டரிய சீல் வைக்கணும். கோஆப்ரேட் செய்யணும்னு கெட்டுக்கரேன்”.
நான் என்ன செய்வேன்? 4 தலைமுறையா இப்படி நடந்ததில்லையே. பெருமாளே, ஈஸ்வரா இது என சோதனை? கடைலெந்து இறங்கி பிள்ளைக்கு போன் போடரேன். வெளியூர் பொயிருக்கான். என்ன செஞ்சிண்டிருக்கானோ? ....
92. கல்லிடைக்குறிச்சி (2 of 2) (சிசீ6) #ganeshamarkalam
பிள்ளையாண்டன் ரீச்சில் இல்லை. ஆத்துக்கு போனில் விவரம் சொல்லி, “வந்திண்டிருக்கென்”. பக்கம்தான் 10 நிமிஷம் ஆதிகாரி சுதாகரனாம். கடைலேந்து உளுந்து, அப்பளங்களை டப்பாவில் கட்டி ஜீப்பில் ஏத்திண்டர். அக்கம் பக்கத்தில் அச்சர்யமா பாக்கரா. என்ன இவனுக்கு பல்கா வியாபாரம்னு. வதந்தி பரவ நாழியாகும்.
அவா ஜீப்புலேயே ஏறிக்க சொன்னா. நாந்தான் கடையை பூட்டிட்டு “என் ஸ்கூட்டரில் வரேன்”. “நீ மின்னாடி போ.” 10அடி பின்னாடி அவா. குறுகலான சந்துக்களில் ஊர்வலமா போய் எங்காத்து வாசலில் நிக்க ஆத்துக்காரி, மாட்டுப்பொண், வேலை செய்யரவா எல்லாரும் வந்து பாக்கரா. என் கையில் விலங்கில்லைன்னு பாத்த ஆச்சர்யம். வேஷ்டிய அவுத்து அதால கைய பின்னாடி கட்டி, அன்ட்ராயரோட இழுத்து வரப்படுவேன்னு நினைச்சாளா? ஏமாத்திட்டேனோ?
செருப்பைக் கழட்டாம உள்ளே வந்த சுதாகரன் நடுக்கூடத்தில் நின்னுண்டு என்னெல்லாம் ப்ராசஸ் ஆயிண்டிருந்ததுன்னு நோட்டம் விடரார். எல்லாத்தையும் படம் எடுத்துக்கரர். எல்லாரையும் நிக்கவச்சு நடந்த விபரீதத்தை சொல்லி, “அப்படியே கிடக்கட்டும். இந்த இடத்தை பூட்டிடுவம். பின்கட்டுக்கு சுத்திப் போலாம். 1 வாரம் விசாரணை முடியர வரைக்கும் எதுவும் இங்கே தாயாரிக்க கூடாது.” “ஸ்டொர் ரூமில் வச்சிருந்ததில் எல்லாத்துலேயும் கொஞ்சம் சேம்பிள் எடுத்து சீல் செஞ்சுக்கரர். பேப்பரில் கையெழுத்து வாங்கிண்டு திங்கட்கிழமை அவா அபீஸ் திருநெல்வேலிக்கு வர ஒரு சம்மன்னையும் செர்வ் செஞ்சுட்டு போயிட்டர்.
அப்படியே வாசத் திண்ணையில் உக்காந்துக்கரேன். வேலைக்காரா அடுத்து என்னன்னு புரியாம சுத்தி. தெருவில் ஜனம். மாட்டுப்பொண் “ஒண்ணுமில்லை உடம்பு அசதியா இருக்குன்னர், நீங்கெல்லாம் கலைஞ்சு போங்கோ.” நானும் சரிஞ்சு படுத்துக்கரேன். தலை சுத்தினது என்னமோ வாஸ்தவம். சித்தே கழிச்சு “நீங்கெல்லாம் வீட்டுக்குப் போங்கோ, ஃபேக்டரி திரும்ப ஆரம்பிக்கரச்சே தகவல் அனுப்பரேன்”. ஒவ்வொருத்தரா கிளம்பரா. சற்குணம் மட்டும் “என்ன ஆச்சி? விவரமா சொல்லுங்க சாமி”. பக்கத்தில் உக்காந்து கையை வாஞ்சையா பிடிக்க, எல்லாத்தையும் சொல்ரேன். கேட்டுட்டு ஆறுதலா 2 வார்த்தை சொல்லீட்டு அவளும் கிளம்பிப் போரா. தெருக்கோடீலே இவளுக்காக நின்னுண்டிருந்த கோமதி, சரளா, மல்லிகா, இருளாயீ, காந்தம்மா, இவ வந்ததும் சேர்ந்து நடந்து போரா.
சமையலுள்ளுக்கு போக வீட்டச் சுத்திண்டு போணம். கொஞ்சநா பின் வாசலை உபயோகப் படுத்திக்கலாம். வாசக் கதவை சாத்திண்டு போரம். சூடா ஒரு காபி போட்டுக் குடிச்சா தேவலைன்னு பட்டது. அதுக்குள் மாட்டுப்பொண் என் பிள்ளய தேடிப் பேசிட்டா. “சாயங்காலத்துக்குள் வந்துடரேன். சுதாகரன் சொல்படி செய்யுங்கோ, அப்பத்தான் பின்னாடி பிர்ச்சனை வராதுன்னு அவர் சொல்ரர்”. அவன் சொன்னதை இவள் என்னிடம் சொல்ல சித்தே நிம்மதி. இந்த மாதிரி சமயங்களில் பிள்ளை இருப்பது அசாத்திய தெகிரியம் தந்தது.
வெள்ளிக்கிழமையும் அதுவுமா இப்படி ஆகிடுத்தே ஈஸ்வரா! உடெஞ்சு போயிட்டா எங்காத்து மாமி. “இப்ப என்னாகும்?” “தெரியலை. நட்டு வரட்டும், சேர்ந்து பெசி என்ன செய்யலாம்னு முடிவெடுப்பம்”. நடராஜன் என் பையன்.
அவன் வர ராத்திரி 11 ஆச்சு. அசதியா இருப்பன் இப்ப கஷ்டப்படுத்த வேண்டாம்னு தூங்கிட்டம். கார்த்தாலே காபியோட உக்காந்துண்டு “என்னடா இப்படி ஆகிடுத்து? என்ன செய்யலாம்? லாயர் வச்சு வாதாடணுமா?” “செய்யலாம், அதுக்கு சிலவாகும். தெரிஞ்சவா கிட்டே பெசிப் பாக்கரேன். மொதல்ல வாங்கின சாமானெல்லாம், நம்ப பங்குக்கு சரி பாத்து எனக்குத் தெரிஞ்ச இடத்தில் டெஸ்ட் செஞ்சு செர்டிஃபிகேட் வாங்கிடலாம். நாளைக்கு உதவும். ஏதாவது தப்பு நடந்திருக்குமான்னு வேலை செய்யரவாளையும் ஒவ்வொருத்தரா கூப்பிட்டு விசாரிக்கணும். ஒவ்வொண்ணா செய்யரேன். நீங்க கவலைப் பட்டு உடம்பை கெடுத்துக்க வேண்டாப்பா”.
“சரி ஏதோ பாத்துப் பண்ணு. நான் கோவிலுக்குப் போயிட்டு வரேன். கடையும் 2நாளைக்கு தொறக்கேண்டாம்”. ஓண்ணும் நடக்கலைன்னாலும் அடுத்த வாரம் சம்பளப் பட்டுவாடா இருக்கு. வீடு தேடிப் போய் தந்துட்டு வரணும், அதை நான் பாத்துக்கரேன்”. அவனும் வெளீலே கிளம்பிப் போனான், நான் கோவில்க்கு அங்கேந்து பேங்குக்கு போரேன்.
பணம் எடுத்துண்டு ஆத்துக்கு வந்தா வீடு எப்பவும் போல இல்லைன்னு புரிஞ்சிண்டேன். வாசக் கதவு எப்பவும் தொறந்தே இருக்கும். தெரிஞ்சவா ஆத்துக்கே வந்து அப்பளம் வாங்கிப்பா. மூடி வச்சா என்னமோ ஏதோன்னு சந்தேகம் வரும். எப்படியோ இந்த வாரக் கடைசீய ஓட்டிபிட்டு திங்கட்கிழமை திருநெல்வேலி போய் இந்த விவகாரத்தை பைசல் செஞ்சுண்டு வந்துடணும். நாளைக்கு லாயர் வரார்னும் நட்டு கிட்டேந்து போன்.
ஆத்துக்காரி முகம் வாடிப் போயிருந்தது. மாட்டுப்பொண்தான் எல்லாத்தையும் பாத்துண்டா. முதக் கட்டில் எட்டிப் பாக்கரேன். போட்டது போட்டபடி அப்படியே. மாவெல்லாம் தொறந்து கிடந்தா வீணாப் போயிடும். மூடக்கூடப் பிடாதா என்ன? போடோ எடுத்துண்டு போயிருக்கானே! சாப்பிட வாங்கோன்னு கூப்பிட ஏதோ நாம்பளும் உயிர்வாழ மூச்சுவிடன்னு சாப்பிட்டு வச்சேன். பின்கட்டு ஊஞ்சலில் படுத்துண்டு சங்கிலி முனையை வெறிச்சுப் பாத்துண்டே 2 மணிநேரம். ஒண்ணும் ஓடலை. இன்னைக்கு எங்கேயும் போவேண்டாம். நாளைக்கு கார்த்தாலே வக்கீல். மத்தியானம் சம்பளப் பணத்தை எடுத்துண்டு 15 வீட்டுக்கும் போணம்.
ராகவன், நம்படவா. வக்கீல். அம்பாசமுத்திரமாம். “ஹைகோர்ட் வரைக்கும் போலாம் சார், கவலைப் படாதீங்கோ!” பக்கத்துலே நட்டு தலை ஆட்டரான். நான் இடைமறிச்சு “இங்கே அப்பளம் செய்யரதில் ஓண்ணும் தப்பு நடக்கலை அதைப்பத்தி இங்கே வெலை பாக்கரவாளுக்கும் தெரியும், அந்த அறம்வளர்த நாயகிக்கும் தெரியும். செவ்வாய்கிழமை திரும்பவும் எல்லாம் நார்மலா ஆகணும். அதுக்கு என்ன செய்யணும் சொல்லுங்கோ. ஹைகோர்ட்டுக்கெல்லாம் நீங்க அப்பரமா உங்க செலவில் சாவகாசமா போய்க்கோங்கோ”. இப்படி சொன்னது அவரை ரெம்பவே சங்கடப் படுத்தித்து.
“மாமா! ஃபுட் கன்ட்ரோல் எண்ட் சேஃப்டி ஆர்டரில் சுதாகர் மாதிரி ஆசாமிகளுக்கு நிறைய அதிகாரம் தந்திருக்கா. அவன் கையில் என்ன ரிப்போர்ட் வச்சிண்டு இப்படி ஆட்டம் ஆடரான்னு கண்டு பிடிக்கணும். தெரிஞ்சவா கிட்டே சொல்லி வச்சிருக்கேன். நாம போரத்துக்குள் விவரம் கிடைக்கும். அப்படியே இருந்தாலும் லிமிடெட் பேட்சில் தப்புன்னு சொல்லி ஃபைன் கட்டீட்டு வித்ததை திருப்பி வாங்கி சரி கட்டரோம்னு எழுதித் தந்துட்டு அடுத்த 6 மாசத்துக்கு அவாளையே ஆடிட் செய்ய கூப்பிடரா மாதிரி பண்ணிட்டு உற்பத்திய ஆரம்பிச்சுடலாம், கவலை வேண்டாம்.” போனர். இந்த டாக்டார்லாம் வந்தா வாசவரைக்கும் அவர் பையத் தூக்கிண்டே வழியனுப்பிட்டு வரப் போவமே அதுபோல் நட்டு அவர் கூடவே போரான். வந்து, “இன்னும் என்னெல்லாம் ஆர்டர் போடராளோ, இனிமேல் இப்படித்தான் அப்பளம் செய்யணும்னு அவா சொன்னாலும் அதை அப்படியெ செய்யரம்னு தயங்காம வாக்கு தந்துடணும்னு ராகவன் சொன்னர்ப்பா”. “செஞ்சுடலாம், இனிமேல் சுதாகரே வந்து மாவு பிசையட்டும் எனெக்கொண்ணுமில்லை”.
காசெடுத்துண்டு கம்பேனி ரிகார்ட்ஸில் இருந்த விலாசங்களுக்கு போரேன். பைக்தான். அதுதான் மண் ரோட்டில் சந்திலேல்லாம் சுளுவாப் போகும். மொதல்ல இருளாயி விட்டுக்கு. மானேத்தியப்பர் கோவில்கிட்டே. பக்கத்துலேதான் சற்குணமும் மல்லிகாவும். இவாளை முதல்ல பாக்கப் போனதுக்கு இவா ஆறுதலா பெசுவா என்பதுவும் காரணம். பைக் சத்தம் கேட்டதும் ஓடி வந்த இருளாயீ, “ஐயா சாமீ நீங்க என்ன இந்தப் பக்கம்?” “சம்பளப் பணம் தந்துட்டுப் போலாம்னு வந்தேன். திரும்ப எப்ப வேலை ஆரம்பிக்கன்னு தெரியலை, வக்கீல் வச்சிருக்கம்”. “அட போங்க சாமி, மொதத் தேதிக்கே இன்னும் 1 வாரம் இருக்கி. எடுத்திட்டு போங்க. ஒண்ணும் அவசரமில்லை. நாங்க ஒண்ணும் கஷ்டத்தில் இல்ல. நீங்கதான் காசப் போட்டு பொருள வாங்கி கடைலேயும் வியாபாரம் ஆவாம”.
நாங்க பேசிட்டே இருக்கம் மல்லிகா வந்தா. “நீயாவது வாங்கிக்கம்மா, சின்ன புள்ளைங்க இருக்கு வீட்டில்”. அப்பத்தான் சற்குணமும் வரா. “வாங்கய்யா எங்க வீட்டுக்கு வாங்க, மோர் குடிச்சிட்டுப் போங்க”. சம்பளப் பணம் தர வந்தேன்னதும் “அதெல்லாம் எப்படி எப்போ வாங்கிக்கிடணும்னு எங்களுக்கு தெரியும், பெசாம எடுத்திட்டுப் போங்க. நாங்க கேட்டமா? ஏன் இப்படி செய்யரீங்க? கவலைப் படாம போங்க, சீக்கிரமே அப்பளம் செய்ய ஆரம்பிச்சுடலாம். அதுக்கு நாங்க கியாரன்டி”. இவுங்க அப்படிச் சொல்லவே நான் பணத்தை எடுத்து வச்சிட்டு வந்திட்டன். அடுத்த வாரமும் சால்வ் ஆலைன்னா குடுத்திடலாம்னு.
திங்கட்கிழமை ராகவன் காரில் நானும் நடராஜனும் ட்ரைவர்ஸ் காலனி, பெருமாள்புரம், திருநெல்வேலிக்கு போரம். 8க்கு கிளம்பி 930க்கு போயிடுவதுன்னு பிளான். வழீலே நிப்பாட்டி ராகவன் ப்ரேக்ஃபாஸ்ட் வேணும்கவே அதுக்கு சித்தே நேரமாகித்து. போய்ச்சேர 10 ஆச்சு. ஆனா சுதாகர் சாவகாசமா 1030க்கு வரான். வந்ததும் எங்களை ரூமில் உக்காத்தி வச்சுட்டு 20நிமிஷம் கழிச்சு சகாக்களுடம் ரெகார்ட்ஸ் எல்லாம் எடுத்துண்டு வந்து விசாரணை ஆரம்பம். எங்க குடும்ப பிசினெஸ் பத்தி விலாவாரியா எல்லா பூர்வீகத்தையும் கேட்டுக்கரான். அப்பளம் எப்படி செய்யரோம்னும் நுணுக்கமா. இவனே ஒண்ணு ஆரம்பிப்பானோங்கிர பயத்தில் சிலதை சொல்லலை. சொல்லாததை நட்டு எடுத்துக் கொடுக்க சங்கடமாப் பொச்சு. “சும்மா இருடா”ன்னு கண்ணால் அதட்டினப்பரம் அடங்கினான்.
அவா சீஸ் செஞ்ச அப்பளத்தை டெஸ்ட் செஞ்ச ரிப்போர்டைக் கொடுத்து என்னெல்லாம் கலப்படம்னு காமிக்கரா. “நாங்களே டெஸ்ட் செஞ்சு அதெல்லாம் ஒண்ணும் இல்லைன்னு வந்த ரிப்போர்டை பாருங்க.” ராகவன் எடுத்துக் காமிக்கரார். “ரிசல்ட்டை கன்டஸேட் செய்வம். கோர்ட்டுக்குப் போலாம்.” இப்படிப் போனா இன்னும் 6 மாசத்துக்கு அப்பளம் இடமுடியாது. என்ன மனுஷர்? அவன் “உங்க டெஸ்ட்டல்லாம் கோர்ட் ஏத்துக்காது.” ஒரு வார்த்தையில் சொல்ல கம்முன்னு அடங்கிட்டர். நான்தான் “எங்களுக்கு எப்பவும்போல் எல்லாம் இருக்கணும், உற்பத்தி நிக்கப் பிடாது, கடைய தொறக்கணும் அதுக்கு வழி இருந்தா சொல்லுங்கோ”.
திவாகர் யோசிக்கரர். “ஒண்ணு வேணா பண்ணலாம். மொதல்ல வித்ததையெல்லாம் திருப்ப கொண்டு வரணும். டிஸ்ட்ராய் பண்ணனும்”. “அதெப்படி சாத்தியம்? அப்பளம் வாங்கிண்டவா ஆதார் கார்டையா பிடுங்கி வச்சிண்டிருக்கென்? சிலரை தெரியும், பலரைத் தெரியாது, வெளிநாடெல்லாம் போயிருக்கு”. “அதெல்லாம் லெட்டர் போட்டு இன்ஃபாம் செய்யணும். பல்கா வித்ததுக்கு ரிகார்ட் எங்கண்ட சமர்ப்பிக்கணும்.” என்னென்னவோ சொல்ரர். பேரே கெட்டுடும்னு இனிமேல் தலைதூக்கவே முடியாது. சுதாகர் கேக்கரான், “இன்னும் ஏன் கையால் பண்ணிண்டு? மெஷீனெல்லாம் வந்துடுத்தே! அதில் இப்படியெல்லாம் தப்பு நடக்காதே. இன்வெஸ்ட் செய்ய தயக்கமா?”
அப்பன்னு பாத்து நாங்க இருந்த ரூமுக்குள் சற்குணம், மல்லிகா, இருளாயி டமால்னு கதவத் தள்ளீண்டு வரா. பின்னாடியே காந்தம்மா ஒரு ஆளை, கழுத்தில் துண்டச் சுத்தி அதை இறுக்கப் பிடிச்சிண்டு “இவன்தான் தில்லு முல்லு செஞ்சவன். இவனை விசாரிச்சா எல்லாம் விளங்கிடும்.” முன்னாடி தள்ளி விடரா. சுதாகர்: “உங்களை யார் உள்ளே விட்டது?”
சுதாரிச்சிண்டு என்ன நடக்கரதுன்னு யூகிச்சு, நான் “வந்தாச்சு. அவனை விசாரிக்கலாம், இல்லை நான் இவனை இழுத்துண்டு பொலீஸுக்குப் போவேன். போலீஸ் உங்கள அங்கே கூப்பிட்டு விசாரிப்பா, சம்மதமா?” ஒத்துண்டர்.
அன்னைக்கு மத்தியானமே கல்லிடைக்குறிச்சி திரும்பி வந்து ஃபேக்டரியை ஆரம்பிச்சாச்சு. கொஞ்சம் ப்ராசஸ் செஞ்சது வீணாப் போனதே, ஆனா தலைக்கு வந்தது தலைப் பாகையோட போனது ஆதிவராகப் பெருமாள் அனுக்ரஹம்தான்.
சற்குணம் எல்லாத்தையும் சொன்னா. “நம்ப கம்பேனி பேக்கிங்க் பேப்பர் அடுக்கி வச்சிருந்ததில் 50 குறைஞ்சதை கண்டுபிடிச்சு அம்மா சொல்லிச்சு சாமி. அப்பத்தான் சந்தேவம். யாருன்னு கண்டு பிடிச்சம். அதைக் கொண்டு போய் வேற எங்கேயோ செஞ்ச அப்பளத்தை அதில் வச்சு கட்டி அவனே அதிகாரிகள் கிட்டே கலப் படம்னு கம்ப்ளெயின்ட் செஞ்சு நம்பளை மூடவைக்க எல்லாம் செஞ்சிருக்கான். கம்ளெயின்ட் குடுத்தவனை சீக்ரெட்டா வச்சிருப்பாங்கன்னு தெரியும், அதான் அவனை கூடவே இட்டாந்தம்”. “யாரவன்? எங்கவீட்டு கையெழுத்து எப்படி?” “ உளுந்து மூட்டை இறக்க வந்தவன். பேக்கிங்க் போட்டு கட்டி ஒட்டினப்பரம் கையெளுத்து போடணும். இப்பெல்லாம் கையெழுத்துப் போட்டே வச்சிடுதாங்க உங்க மருமக, அப்படி செய்யக்கூடாது சாமி. செஞ்சா இப்படி நடக்க சான்ஸ்.”
இது நடந்து 3 நாளாச்சு. ஒண்ணு மட்டும் விளங்கல! நம்ப பேக்கிங்க் பேப்பரும் லேபலும் வெளீலே எப்படிப் பொச்சு? திண்னையில் மூட்டை இறக்கினவன் உள்ளே பூந்து திருடிட்டானா என்ன?” சாத்தியமில்லை. மொட்டை மாடிக்குப் போய் நின்னுண்டு சற்குணத்தை கூப்பிட்டு கேக்கரேன். “உள்ளேயே இருப்பவங்கதான் எடுத்துக் கொடுத்திருக்காங்க, உனக்குத் தெரிஞ்சா சொல்லிடு. யாரா இருந்தாலும் மன்னிச்சு விட்டுடரேன்”.
“தெரியும் சாமி. என் வாயால வேணாம். எல்லாம் அந்த ஆட்டம் போடுத குலசேகரருக்குத் தெரியும். அவர் பாத்துக்கிடுவாரு. தப்பு செஞ்சவங்க தானா திருந்திக்கிடுவாங்க”.
No comments:
Post a Comment