Tuesday, August 18, 2020

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி15

பாண்டிய நாட்டுத்திருப்பதிகள் பகுதி15
(sujatha&venkatesan)6381369319
அழகர்.....சுந்தரம் என்ற வடமொழி சொல்லின் தமிழ்...
மதுரை நகரத்தில் உள்ள பழைய திருமால் திருத்தலத்தில் எழுந் தருளியுள்ள மூர்த்திக் கும் கூடலழகர் என்னும் பெயர் ஏற்பட்டி ருப்பதும் இதனால் தான். இன்னும் பல திருத்தலங்களிலும் எம் பெருமானுக்கு அழகர் என்றும் சுந்தரராஜன் என்றும் திருநாமங்கள் உண்டு. 108 திவ்ய தேசங்களில் அன்பில் என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் திருநாகை (நாகப்பட்டினம்) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் மற்றும் கூடல் (மதுரை) என்ற திருத்தலத்து எம்பெருமான் சுந்தரராஜன் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பெயருக்கேற்றபடி இன்றெல்லாம் பார்க்கும்படியான தங்க விக்ரகம்…
உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று அழகர் கோவிலில், இன்னொன்று திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவிலில். அழகர் விக்ரகத்துக்கு இப்பகுதி மலைமேல் உள்ள நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் கறுத்து விடக்கூடிய அதிசயம் நிகழும் என்று கூறப்படுகிறது.
சோலைமலைக்கரசர் என்றே திவ்யபிரபந்தம் இந்த உற்சவமூர்த்தியை வர்ணிக்கிறது. புராணம். “ரிஷபாதீஷர்” என்று அழைக்கிறது. மூலவரை விட உற்சவர் பெரும் புகழ் பெற்ற ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று.

அழகர் மலை அழகருக்கு வித்தியாசமான தோசை நெய்வேத்யம் செய்யப்படுகின்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், நெய் கலந்த சிறப்புத் தோசை தயாரிக்கப்படும்.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூலவர் சுந்தரராஜ பெருமாளுக்கு நடத்தப்படும் தைலப் பிரதிஷ்டை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தப் பிரதிஷ்டை உற்சவம் தை அமாவாசை தொடங்கி ஆடி அமாவாசை வரை ஆறுமாத காலத்துக்கு நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் உற்சவரை மட்டும் வழிபட அனுமதி உண்டு..

காலைல சாப்பிட்ட டிபன்தான். கோயில்ல மடப்பள்ளியில தனக்கு தெரிஞ்ச பையன் இருக்கான் னு கோயிந்துவ தேடி அலைஞ்சதுதான் மிச்சம். எதுவும் கெடைக்கல.  சாப்பாடு டோக்கனும் தீந்து போச்சு.  கொடுத்து வச்சது அவ்ளவுதான்னு 
கோயில் தரிசனம் முடிந்து வெளியே வந்து மலை ஏறரோம். கொளுத்ற வெயில்ல பசியோட ஏற முடியல. உன் மருமான் கிட்ட கோச்சுக்க வேண்டாம்னு சொல்லிடுன்னு பெருமாள்கிட்ட சொல்றேன்.  இவர் கூகிள் பார்த்து பழமுதிர் சோலை பத்தி சொல்றார். 

பழமுதிர்சோலை முருகன் கோயில், முருகனின் அறுபடை வீடுகளில், இத்தலம் ஆறாம் படை வீடு ஆகும், மதுரை மாவட்டம், அழகர் கோவில் மலை மீதுள்ள பழமுதிர்சோலையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அடியவர்களுக்கு அருள் செய்கிறார். இங்கு முருகனின் 3 அடி உயர வேலுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவில் முற்காலத்தில் சோலைமலை என அழைக்கப்பட்டது 

மேலும் இந்தத் தலத்திற்கு பெருமை தருவது அவ்வையார் பாட்டிக்கு முருக பெருமான் சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு பழத்தில் எப்படி சுட்டபழம், சுடாத பழம் உண்டு என்பதை அனுபவ பூர்வமாக உணர்த்திக் காட்டிய உன்னதமான தலம் இதுவாகும். இந்த தலத்தின் தல மரமாக இருப்பது நாவல் மரம் ஆகும்.

இத்தலத்தில் முன்னர் முருக வேல் மட்டுமே இங்கு இருந்ததாகவும், பின்னர் முருகன்–வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதி உருவாகியது என்பர்.

நக்கீரர், அருணகிரி நாதர், அவ்வையார் ஆகியோர் முருகனை துதித்துப் பாடிய பெருமை வாய்ந்த தலமாகும்.

சோலை மலையிலிருந்து சிறிது தொலைவில் ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் உள்ள சுனையில் பெருக்கெடுக்கும் தீர்த்தம் மிகவும் சுவையாக உள்ளது. இதை நூபுர கங்கை என்றும் கூறுகின்றனர்.
கோயிலுக்கு வெளியே...
பதினெட்டாம்படி கருப்பன் பற்றி கூகுளில் தேடி சொல்றார்...

மதுரை அழகர் கோவிலை காவல் காத்துக்கொண்டிருக்கும் மிக சக்தி வாய்ந்த தெய்வமாக இங்கு வீற்றிருப்பது 18ம்படி கருப்பண்ணசாமி கோவில் . இப்பகுதியை சேர்ந்த மக்கள் இந்த கருப்பசாமி மேல் மிகுந்த பக்தி கொண்டு மிகவும் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர். அநியாயங்கள் செய்தால் கருப்பசாமி கேட்பார் என இந்த கருப்பசாமிக்கு பயமும் பக்தியும் அதிகம்.

கோவில் வரலாறு: வளம் மிக்க  கேரள தேசத்தை ஆட்சி செய்து வந்த அரசன் ஒருவன் ,ஒருமுறை  பாண்டிய நாட்டில் உள்ள திருமாலிருஞ்சோலை  என்னும் திவ்விய தேசமான அழகர்கோவில் வந்தான் பள்ளிகொண்ட ,அழகே உருவான கள்ளழகரை தரிசித்தான் . அழகரின் அழகை கண்ட அந்த அரசன் அதை உருவேற்றி சக்தியேற்றி  தம் தேசமான கேரளாவுக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டினான் . நாடு திரும்பிய அரசன் ,மந்திர ,தந்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற 18 கேரள மந்திரவாதிகளை தேர்வு செய்து அழகரின்  சக்தியை எடுத்து அழகரை கேரளம் தூக்கி  வரும்படி கட்டளையிட்டான்.

பதினெட்டு மந்திரவாதிகளும்   மன்னனின் கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை வருவதற்கு ஆயத்தமானார்கள் . பதினெட்டு மந்திரவாதிகளுக்கு காவலாக மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும் வெள்ளை குதிரை மீதேறி அவர்கள் முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே இவர்கள் அழகர்மலை நோக்கி புறப்பட்டனர்.

அனைவரும் அழகர் மலையை  அடைந்தனர்.  அழகர் மலையை அடைந்த காவல் தெய்வம் ,அழகரின் அழகில் மயங்கி தன்னை மறந்து நின்றது . அழகரின் அழகிய  தங்க ஆபரணங்களை கண்ட 18 மந்திரவாதிகளும் தன்னுடன் வந்த காவல் தெய்வத்தை மறந்து ,ஆபரணங்களையும் அழகரையும் தூக்கி செல்லும் எண்ணம் கொண்டு கருவறை நோக்கி சென்றனர்.

இவர்களின் கெட்ட நோக்கத்தை கண்ட அடியார்  ஒருவர் ,ஊரில் உள்ள மக்களிடம் சொல்ல ,மக்கள் அனைவரும் திரண்டு வந்து ,அந்த 18 பேரையும் கொன்று ,களிமண்ணால் படிகள் செய்து ,படிக்கு ஒருவராக பதினெட்டு படிகளிலும் பதினெட்டு பேரையும் புதைத்தனர் .

தன்னிடம்  மயங்கி நின்ற காவல் தெய்வத்திற்கு கருணை புரிய இறைவன் கருணை கொண்டார் . காவல் தெய்வம் கருப்பசாமிக்கு காட்சி தந்து, அருள் புரிந்து ,வரம் தந்து ,"என்னையும் மலையையும் காவல் புரிந்து வருவாய் என அருள் புரிந்தார் ".காவல் தெய்வமான கருப்பசாமி இம்மலையில் தங்கி இருந்து அழகர் மலையை இன்று வரை காத்து வருவதாக நம்பிக்கை உள்ளது.

காடு வீடெல்லாம்  முன்னோடியாய் காவல் புரிந்து  மக்களை காப்பாய் என இறைவன் கட்டளையிட்டார் . 18 பேருடன் வந்த தெய்வமாதலால் ,பதினெட்டு படிகளின் மீது  நின்று காவல் தெய்வமாய் காட்சி தந்தார் .  ஒருநாள்  கோவில் பட்டர் கனவில் தோன்றிய கருப்பசாமி ,திருமால் பள்ளிகொண்ட திருவாயிலையும் மலையையும் காப்பேன் ,திருமாலின் அர்த்த ஜாம  பூஜை பிரசாதங்களை தனக்கு படைக்குமாறு வேண்ட அன்று முதல் அழகருக்கு படைக்கப்படும் அர்த்த ஜாம பூஜை பிரசாதங்கள் பதினெட்டாம் படி கருப்பசாமிக்கு படைக்கப் படுகிறது .

ஒருசமயம் பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு விஜயம் செய்த ஆண்டாள்   பதினெட்டு படிகளை கண்டு வியந்ததாக கர்ண பரம்பரை செய்தியாக கூறப்படும் கதை தெரிவிக்கிறது. ஒவ்வொரு நாளும் அழகர்மலை கோவில் பூட்டபட்டதும் ,கதவின் சாவி பதினெட்டாம் படி கருப்பசாமியின்  முன்பு வைத்துவிட்டு செல்வர். மறுநாள் காலை கோவில் திறக்கும் முன் ,பட்டர் கருப்பசாமியிடம் பெற்று  கதவை திறக்கும் சம்பிரதாயம் இன்று வரை நடைபெற்று வருகிறது .

சித்திரை திருவிழாவிற்கு அழகர் ,மதுரைக்கு புறப்படும்போதும் ,மதுரையிலிருந்து கோவிலுக்கு திரும்பும்போதும் அழகர் அணிந்த நகைகள் எண்ணப்பட்டு ,அந்த பட்டியல்  பதினெட்டாம் படி கருப்பசாமி முன்பு படித்து காட்டப்படும் .கோவில் நகைகளை காவல் தெய்வம் கருப்பசாமியே பாதுகாத்து வருகிறார் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் நம்பிக்கை.

இன்று வரை இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது . கள்ளழகருக்கு காவல் புரியும் கருப்பணசாமியை மக்கள் தங்கள் குல தெய்வமாக கொண்டு வழிபட்டு வருகின்றனர் .இன்றும் பதினெட்டாம் படி கருப்பசாமி முன் பல வழக்குகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. கருப்பசாமியிடம் முறையிட்டால் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்பது  மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை.

அழகர் கோவிலில் காவல் தெய்வமாக நின்ற கருப்பசாமி ,பின்னாளில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கு காவல் தெய்வமாக இருந்து வந்தார்….

மரங்களடர்ந்த காடுகள், எங்கும் பசுமையான சூழல். ஓங்கி உயர்ந்த கோபுரம், அழகிய சிற்பங்கள் நிறைந்த மண்டபத்தூண்கள், இன்றும் அழகுறக் காட்சியளிக்கும் ஓவியங்கள், பதினெட்டாம்படிக்கருப்புக்கு பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தும் கிராமத்து மனிதர்கள், திவ்யதேச பெருமாளை சேவிக்கும் வைணவர்கள், ஜில்லென்று தண்ணீருடன் நூபுரகங்கை தீர்த்தத் தொட்டி, மாதவி மண்டபத்தின் ராக்காயி அம்மன், சலலக்கும் சிலம்பாறு, வேல்வணக்கத்தில் தொடங்கிய பழமுதிர்ச்சோலை முருக வழிபாடு இவை எல்லாம் அழகர்கோயிலின் சிறப்பு அம்சங்கள். சங்க இலக்கியங்கள் இக்கோயில் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆறு ஆழ்வார்கள் பெருமாளை சுந்தரத் தமிழில் பாடியுள்ளார்கள்

சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ
என்ற பெரியாழ்வார் பாசுரத்தைப்பாடி பிரியாவிடை பெறுகிறோம்….படங்கள்1-6 அழகர் கோயில்7)பதினெட்டாம்படி கருப்பசாமி கதவு  பூஜை...
                   தொடர்வது ஶ்ரீவில்லிப்புத்தூர்..







No comments:

Post a Comment