"கடவுளின் குரல்" - தொகுப்பு: வெ. ஐஸ்வர்யா
29 /04 /2020 குமுதம் இதழிலிருந்து..
""பிரார்த்தனையை நினைவுபடுத்திய மகாபெரியவா!""
மகாபெரியவர் சின்னஞ்சிறு கிராமம் ஒன்றில் முகாமிட்டு இருந்த காலகட்டம் அது.
கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கே முகாமிட்டிருந்ததால், சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம் நிறைய பக்தர்கள் வந்து மகானை தரிசித்துச் சென்றார்கள். அந்த சமயத்தில் ஒருநாள் மாலை முடிந்து இரவு நெருங்கும் வேளை.
ஆசார்யாளை தரிசிக்க அப்போதும் நிறைய கூட்டம் இருந்தது. வந்திருந்தவர்களில் நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவரும் இருந்தார். சுமார் இரண்டு வயதுள்ள பெண் குழந்தையுடன் வந்திருந்தார் அந்தப் பெண்மணி. குழந்தை ரொம்பவே சமத்தாக இருந்தது.
வரிசையும் நேரமும் நகர்ந்து கொண்டே இருக்க, திடீரென்று ஒரு வீறிட்ட அழுகுரல் கூட்டத்தில் இருந்து. என்ன ஏதென்று எல்லோரும் பார்க்க, அதுவரை அமைதியாக இருந்த அந்தப் பெண் குழந்தைதான் அடித்தொண்டையில் இருந்து சத்தம் வர, கதறி அழுது கொண்டு இருந்தது.
இன்னும் பத்துப் பதினைந்து பேர் நகர்ந்தால், மகானை தரிசித்துவிடலாம் என்கிற அளவுக்கு அருகில் வந்த நிலையில், குழந்தை இப்படிக் கதறவே பதறிப்போனார், அந்தப் பெண்மணி. தோளில் சாய்த்துக் கொண்டும், மார்பில் அனைத்துத் தட்டிக் கொடுத்தும் எவ்வளவோ முயற்சித்தார். ஊஹூம்....குழந்தையின் அழுகை அதிகரித்ததே தவிர நிற்கவே இல்லை.
அடுத்த இரண்டு மூன்று நிமிடத்தில், குழந்தைக்கு மூச்சு இரைக்கவும் ஆரம்பித்துவிடவே நடுங்கிப்போனார் அந்தத் தாய்.
மகான் முன்னிலையில் வந்து இப்படி ஆகிவிட்டதே என்று அவர் தவிக்க, கூட்டத்தில் இருந்த சிலர் குழந்தையை சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போக, சிலர் 'உச்' கொட்டி அனுதாபம் காட்ட, அந்த சமயத்தில் அங்கே அதிர் வேட்டுபோல் எழுந்தது ஒரு சொடக்கு சத்தம்!
மகாபெரியவாளின் தொண்டர்கள் அத்தனை பேருக்கும் பரிச்சயமானது மகானின் அந்தக் கை சொடுக்கு ஓசை.
கணீரென்ற அந்த சத்தம் கேட்டதும் எல்லோரும் திரும்பிப் பார்க்க, விரலசைத்து அந்தக் குழந்தையின் தாயை அருகே அழைத்தார் மகான்.
குழந்தை கதறிக் கதறி ஓய்ந்ததோ என்னவோ மெதுவாகத் தளர்ந்துப் போயிருந்தது. பதற்றத்தோடு வந்து நின்ற தாயை ஏற இறங்கப் பார்த்தார், மகான்.
"குழந்தை காலுல கொலுசு போட்டிருக்கியே, அதுல எல்லா முத்தும் சரியா இருக்கான்னு பாரு!" சொன்னார், மகான்.
அவசர அவசரமாகக் குழந்தையின் காலை உயர்த்தி, கொலுசைப் பார்த்தாள் குழந்தையின் தாய். "வலது காலில் எல்லாம் சரியாக இருக்கிறது!" என்றவள் இடது காலைப் பார்க்க, அதில் இருந்த முத்துக்களில் ஒன்று எங்கேயோ விழுந்திருந்தது!
"பெரியவா ஒரு முத்து காணோம்..!" பரபரப்பாய் அந்தப் பெண்மணி சொல்ல, "பதட்டப்படாதே..குழந்தையை இதோ இப்படிப் படுக்க வை..!" மகானின் உத்தரவுப்படி குழந்தையை அவர் முன்னிலையில் படுக்க வைத்தாள் அந்தப் பெண்மணி.
தன்னருகே இருந்த தொண்டரைப் பார்த்தார், பெரியவா. "அதோ அந்த மயில் பிலியை எடுத்து குழந்தை முகத்துல லேசா தடவு!" சொன்னார்.
அணுக்கத் தொண்டர் அப்படியே செய்ய, மூன்றாவது முறை அவர் அப்படித் தடவியபோது பெரிதாக ஒரு தும்மல் போட்டது குழந்தை. அதேசமயம், அதன் மூக்கு துவாரத்தில் இருந்து வெளியே வந்து விழுந்தது கொலுசின் முத்து.
நடப்பதை நம்ப முடியாமல் அந்தப் பெண்மணி திகைத்து நிற்க, எல்லோரும் ஆச்சரியமாகப் பார்க்க, அடுத்து நடந்ததுதான் பேராச்சரியம்!
"என்ன காமாட்சிக்கு மூக்குத்தி வாங்கித் தர்றதா நீ வேண்டிண்டு இருந்தது உன் குழந்தைக்குத் தெரிஞ்சுடுத்துப் போல இருக்கு. அதான், தன் காலுல இருந்த கொலுசு முத்தை எடுத்து மூக்குத்தியா வைக்கப் பார்த்திருக்கா!" மெல்லிய புன்னகை தவழ மகான் சொல்ல, அப்படியே அதிர்ந்துபோய் நின்றார், அந்தத் தாய்.
கண்களில் கண்ணீர் பெருகி நனைய, சிணுங்கிய குழந்தையையும் தூக்க மறந்தவளாய், "சுவாமி, மன்னிக்கணும். இவ பிறந்த சமயத்துல, குழந்தைக்கு மூக்குல ஏதோ சதை வளர்ச்சி இருக்கு..அதனால ஆபரேஷன் பண்ணனும்னு சொன்னார், டாக்டர். என் மாமியார், "எங்கள் குல தெய்வமான காமாட்சி அம்மனுக்கு மூக்குத்தி வாங்கித் தருவதாக வேண்டிக் கொள், பிரச்னை எதுவும் வராது" என்று சொன்னார். நானும் வேண்டிக் கொண்டேன். அதன் பிறகு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர், 'பிரச்னை எதுவும் இல்லை. வளரவளர அதுவே சரியாகிவிடும்' என்று சொல்லிவிட்டார்.
"இதோ குழந்தைக்கு இரண்டு வயது பூர்த்தியாகிவிட்டது. நாட்கள் நகர்ந்ததில், நான் செய்துகொண்ட பிரார்த்தனையை மறந்துவிட்டேன்...! அம்பாள்தான் உங்கள் முன்னிலையில் ஒரு நாடகம் நடத்தி, உங்கள் மூலமாகவே என் பிரார்த்தனையை நினைவு படுத்தியிருக்கிறாள்!" சொல்லித் தழுதழுத்தாள்.
"ஒண்ணும் கவலைப்படாதே...காமாட்சி எல்லாம் பார்த்துக் கொள்வாள்!" என்று சொல்லி தாயையும் சேயையும் ஆசிர்வதித்தார் மகாபெரியவர்.
ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🙏
No comments:
Post a Comment