86. பாட்டி (சிசீ6) #ganeshamarkalam
ராஜேஸ்வரி பாட்டியை பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன். எட்டு வயசு வரைக்கும். அதை அவரே சொல்லுவர். “என் பேரையே உனக்கு வச்சிருக்காடீ. அதுனால் நீ என்னை ராஜீன்னு கூப்பிடரப்போ சந்தோஷமாத்தான் இருக்கு”. அப்பாதான் “அடி கழுதை”ன்னு தொறத்திண்டு வருவர். பாட்டி தடுத்துடுவா. “சும்மா கிட கணேசு, அவள் குழந்தை.”
அப்பரம் எல்லாராத்துலேயும் நடக்கும் சம்பாஷணை கேக்கலாம். “நீ ரெம்பத்தான் செல்லம் தந்து எம்பொண்ணை குட்டிச் சுவரா ஆக்கிட்டாய்.” “உனக்கும்தான் இப்படி செல்லம் கொடுத்தேன். நீ நன்னா வளரலையா என்ன?” “எம்பொண்ணை என் இஷ்டப்படி வளர்த்துக்கரேன், அதில் நீ தலையிடாதே.” “அப்ப சரி. அவ சரியா படிக்கலை சித்தே கண்டிச்சு வை, நீ சொன்னாத்தான் கேக்கரான்னு என்னண்டை வராதே.” இப்படிப் போகும். அன்னைக்கு இப்படித்தான் டயலாக் போச்சு. “ராஜீ நான் குளிக்கப் போரேன். ஸ்கூல் யூனிஃபார்ம், ஷூ, சாக்ஸெல்லாம் எடுத்து வை” சொல்லீட்டு உள்ளே போயாச்சு. அம்மாதான் எடுத்து வைப்பா. அது வேற மேட்டர்.
இந்த மாதிரி காரியங்களுக்கு “ராஜீ”. சித்தே பெரீய காரியத்தை சாதிச்சுக்கணும்னா ஆசையா “ராஜீ பாட்டி”. சொன்ன பேச்சை கேக்கலைன்னா “ஏய் ராஜலக்ஷ்மீ!” அம்மாவுக்கு தன் மாமியாரை தன் பொண்ணே இப்படி சுவாதீனமா விரட்டரான்னும் அதை இவர் பொருட்படுத்தாம சந்தோஷமா ஏத்துக்கரார் என்பதில் பொறாமை. அம்மாவையே பாட்டி எப்பவும் பேர் சொல்லி கூப்பிட்டதேயில்லை. “குழந்தே, அம்மாடீ”ன்னுதான். அப்பாவ “டேய் கணேசா!” ஆச்சர்யமா இருக்கும். என்னை வாய் நிறைய “ராஜேஸ்வரி”ன்னு கூப்பிடுவர். ஆத்தில் அம்மாவும் சில ரூல்ஸ் வச்சிருக்கா. “அம்மா”ன்னா அது ராஜிப் பாட்டியக் கூப்பிடரான்னு. என்னை ராஜீன்னு. ஒவ்வொரு சமையம் “ராஜி செல்லம்மா”ன்னு என்னைக் கூப்பிட கொஞ்சன்னு வாயில் வந்துடும்,. அப்போ பாட்டி சித்தே நேளிவா. பாக்கலாம்.
இதென்ன இத்தனை பெரீய பாட்டி புராணம்னு படும். பாட்டீன்னு ஒருத்தர் ஆத்தில் இருந்தா அவாளோட அருமை தெரியும். எனக்கு கொடுப்பினை, அப்படி ஒருத்தர் இன்னும் எங்கூட இருப்பது அதிர்ஷ்டம்னு நினைக்கரேன். எத்தனை பேருக்கு அப்படி அமையும்? நான் இன்னைக்கு இப்படி வளர்ந்து வந்திருப்பதுக்கு என் ராஜேஸ்வரி பாட்டிதான் காரணம்னு சொன்னா மிகையாகாது. என் வாழ்க்கையில் அம்மாவை விட பாட்டி அத்தனை உன்னதமான ஒரு ரோல் ப்ளே செஞ்சிருக்கான்னு சொல்லலாம். சிலது விவரிக்க முடியும், சிலதை உணர்ந்துதான் பாக்கணும். உங்களை மாதிரி மனுஷாளுக்கு இத்துனூண்டு கதையில் நான் என்னத்தை சொல்லிட முடியும்? இருந்தாலும் ட்ரை செய்யரேன்.
பாட்டிகிட்டேந்துதான் நான் நிறைய கத்துண்டிருக்கேன். அம்மாவும் வேலைக்குப் போவதால் அவளால் என்னோட டயம் ஸ்பெண்ட் செய்ய முடியலை. அம்மா என்னோட ஒட்டி உறவாடலைன்னும் அந்த பொறுப்பை ஒரு பொண் குழந்தைக்கு பாட்டி சொல்லாமலேயே ஏத்துண்டான்னும் புரிஞ்சிக்கரப்போ வயசாகிடுத்து.
பாட்டிக்கு தினம் கோவிலுக்குப் போணம். அதை ஒரு பிடிவாதமா வச்சிண்டிருந்தா. சையான் கோலிவாடா மாரியம்மன் கோவில் போவா. கூட நானும் கிளம்பிடுவேன். அடுத்த நா கணக்குப் பரிக்ஷையா இருந்தாலும். குறிப்பா கணக்குன்னா 3 சுத்து அதிகமா அம்பாள சுத்துவேன். கோவில் வாசல்ல பூ விக்கரவளோட சித்தே வம்பளந்துட்டு பூ வாங்கிப்பது வழக்கம். “மின்னாடி கிராமத்தில் இருந்தப்போ ஆத்தில் பூத்த குண்டு மல்லிகை பறிச்சுத் தொடுத்தா 5 முழம் கிடைக்கும், இத்தனை காசு தந்து வாங்க வேண்டாம்!” பாட்டி அடிக்கடி சொல்லுவா. “எந்த உரில் இருந்தேள்?” வரிசையா பல ஊர்களைச் சொல்லி, கடைசீலே மும்பை வந்து மாட்டிண்டதை சொல்லுவா. எதைப் பத்திக் கேட்டாலும் அது தனக்கு நடந்ததாவும் அதுக்கு ஒரு விவரணை, கதை சொல்லாம விட்டதில்லை. பாட்டியோட பேசிண்டிருப்பது அத்தனை சுவாரஸ்யம். ஸ்கூல் டீச்சர் கிட்டேந்து கூட அத்தனை கத்துண்டதில்லை.
ஏன்னா பாட்டி நடத்தினது வாழ்க்கைப் பாடம். புஸ்தகத்தில் இல்லாத விஷயம். அதில் மேத்ஸ், சோஷியல் ஸ்டடீஸ், ஹிஸ்டரி, பாட்டனி, சைகாலஜின்னு எல்லாம் வரும். மனுஷா மனசும் பிரதானம்.
12 வயசிருக்கும். “பூத்தொடுக்க சொல்லித் தரட்டும்மா?” “கத்துண்டு என்ன பண்ண?” “பூ தொடுக்கலாம்!” “நான் என்ன தோட்டமா வச்சிருக்கேன்? பெரீய படிப்பெல்லாம் படிக்கப் போரேன் பாட்டி. பூக்காரி வேலைக்கா போப் போரேன்?” “அசடு, பூத்தொடுக்க எல்லா பொண்களும் கத்துக்கணும்”. “ஏன்?” “சொல்ரேன் மொதல்ல என்னோட சேர்ந்து பூ தொடு, தானாவே தெரியும் ஏன்னு”. ஆத்து வேலைக்காரிகிட்டே சொல்லி உதிரி மல்லி 2 ஆழாக்கு வாங்கிண்டு வரச் சொன்னா. ஞாயித்துக் கிழமை பால்கனி தரையில் வெளிச்சத்தில் உக்காந்தாச்சு. நூற்கண்டை டம்ப்ளர் நீரில் நனைச்சிண்டு அதை எப்படி கையில் பிடிச்சுக்கன்னு காமிக்கரா. பாக்கரேன். ரெவ்வெண்டு பூவா வலது கையில் எடுத்து இடது கை நூல் மேல் வச்சு “நன்னா பாரு, நூலை அடீப் பூவில் சுத்தி, விரலில் வீ பிடிச்சு அப்படியே குல்லா மாதிரி மேல் பூவில் மாட்டி லேசா இழுக்கணும்.” இழுக்கரா, பூ நூலில் ஒட்டிண்டிடுத்து. அப்பரம் அடுத்த செட் அதுக்கப்பரம் இன்னொண்னு.
கீழே கொட்டின பூவை என்னை ஜோடி சேர்த்து வைக்கச் சொல்ரா. டக்குன்னு எடுக்க லகுவாப் போகுமாம். ஒரு முழம் பாட்டி தொடுத்து காமிச்சுட்டு “இப்ப உன் டெர்ன்”. என் கையில் எதுவும் நிக்கலை. ரெம்ப கஷ்டமான அசைன்மென்ட் மாதிரி பட்டது. அன்னைக்கு கோவில் வாசல்ல பூக்காரி அத்தனை ஸ்பீடா செஞ்சது பாத்தேன். அவ படிக்காதவ. படிச்சவ என்னால் முடியாதா? செய்ய ஆரம்பிக்க பூலேந்து காம்பு பிஞ்சு வீணாப் போச்சு. முடிச்சு போட்ட நூல் மட்டும் கையில். அப்ப பாட்டி சிலது சொன்னது இப்பவும் நெஞ்சில் செதுக்கிட்டாப் போல்
“செடீலெந்து பரிச்சுண்டு வந்து மாலையா பூ தொடுப்பது ஒரு தவம் மாதிரி. மனசை ஸ்திரப்படுத்தி நம்ப கவலைகளை மறக்கச் செய்யும் ஒரு கலை. பூ மென்மையான வஸ்து. கொஞ்சநாழி கையில் இருந்தா உடம்புச் சூட்டில் மலர்ந்துடும். வாடிடும் அதை நம் வசப்படுத்தி, நூலில் கட்டி, ரெம்பவே மெதுவா விழுந்துடாம இறுக்கி ஆனா வெட்டுப் பட்டுடாம, ஒண்ணுக்கு பக்கத்தில் இன்னொண்ணை வச்சு, ‘நீங்கெல்லாரும் ஒரே செடீல பூத்தவா, ஒரே மாலையில் ஒரே சுவாமியின் கழுத்தை அலங்கரிக்க போரேள்’னு பெசிண்டே தொடுக்கணும்”. இன்னும் சொல்ரா
“கத்துண்டதும், கை அது பாட்டுக்கு தொடுக்குமே! நம் மனசு, எண்ணங்கள் எல்லாம் பூவை மறந்துட்டு இந்த மாலை போய்ச் சேரவேண்டிய இடத்தை பத்தியே தியானிக்கும். நம்மை சுத்தி நடக்கும் அக்ரமங்கள், நம்பளை கஷ்டப்படுத்தும் விஷயங்கள் எல்லாமும் நம்மை விட்டு தூர விலகிப் போயிடும். அடுத்து செய்ய வேண்டிய காரியங்களைப் பத்தி பாஸிடிவ்வா யோசிப்பம். பெண்களுக்கு ஒரு முழுக் குடும்பத்தோட பொறுப்பு இருக்கே! அதான் பூத்தொடுக்க தெரியணும். அதாவது இப்படி ஒரு தவத்தில் ஈடுபாடு ஏற்படுத்தி வச்சிண்டா பீஸ்ஃபுலா லைஃபை கடந்து போலாம்”. எல்லாத்தையும் கேட்டுண்டேன். தவம், கஷ்டம், தியானம், எதுவும் விளங்கலை. ஆனா 12 வயசில் ராஜேஸ்வரி பாட்டி சொல்லித் தந்தது இன்னைக்கு புரிஞ்சி உதவரதே! கடைசீயா ஒண்ணு சொன்னா.
“பூவ தொடுத்து மாலை செஞ்சு பாப்பதை விட உன்னதமான ஒரு தவச்செயல் இருக்கு தெரிஞ்சுக்கோடி செல்லம்”. “என்ன ராஜீ. அதையும் இன்னைக்கே சொல்லிடு. சும்மா சும்மா இப்படி உக்காந்து கேக்க முடியாது என்னால்”. பெரீய மனுஷிபோல் பெசரேன். கோவிச்சுக்காம சொல்ரா. “பூத்தொடுத்து முடிச்சதும் எத்தனை முழம் வந்திருக்குன்னு பாக்கத் தோணும். தொடுத்ததில் கொஞ்சம் சுவாமிக்கு வச்சுட்டு சொச்சத்தை தலேல வச்சுக்கலாம், இல்லை ஃப்ரிட்ஜில் வச்சு ரெண்டுநா பயன்படுத்திக்கலாம்னு தோணும். அப்போ அக்கம் பக்கத்துலேந்து யாராவது, உன் கையில் பூ பாத்துட்டு ‘குழந்தை எனக்கு கொஞ்சம்தா’னு கேட்டா அப்படியே எடுத்து கொடுக்கணும். அதான் பெருந்தவம்”
எத்தனை அழகா பல விஷயங்களை ராஜீப் பாட்டி சொல்லித் தந்துட்டான்னு புரிய வருஷங்களாச்சு.
இப்படி நிறைய அனுபவ பூர்வமா விஷயங்களை பாட்டி சொல்லித் தந்தது என் வாழ்க்கையை நெறிப்படுத்திக்க உதவித்துன்னும் இன்னைக்கும் என் குழந்தைகளுக்கு அதயே பெருமையா கடத்தரேன்னு சொன்னா மிகையாகாது.
பெரியவளானதும் அம்மா என்னெல்லாம் ஹைஜீன் பாத்துக்கணும்னு படபடன்னு சொல்லீட்டு ஆபீஸ் கிளம்பிப் போயிட்டா. ரெகுலரா வரதான்னு மட்டும் கவலைப் பட்டா. பாட்டிதான் கூடவே இருந்து என்ன நடக்கரதுன்னு சொல்லி என்னையும் என் உடம்பையும் புரிய வச்சா. 10த் படிக்கரச்சே ஒருத்தன் எப்படி மனசுக்குள் வந்து பூந்திண்டான்னும் அவனைப் பாக்கரச்சே எல்லாம் முழங்கால் நடுங்கரதையும் புரிஞ்சிக்க முடியலை. அப்பார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸில் இருக்கான், காலேஜ் போரான். அவன்தான் இனிமேல் உலகம்னு ஆய்ப்போன தருணத்தில் லிஃப்டில் ஏறீ வரப்ப இழுத்துப் பிடிச்சு கட்டிண்டு முத்தம் தந்துட்டேன். என் ஃப்ளோர் வந்துட கதவு திறக்க எதுக்கால பாட்டி.
பயத்தில் என்ன சொல்லுவாளோன்னு. நாங்க வெளீல வந்துட ஒண்ணும் பேசாம அவர் லிஃப்டில் நுழைஞ்சு தன் காரியத்துக்கு போய்ட்டர். வந்ததும் கூப்பிட்டு கண்டிப்பான்னு பயம். ரெண்டுநா அதைப் பத்தி பெசவேயில்லை. நான்தான் குத்த உணர்வோட தனியா இருக்கப்பொ பாட்டிகிட்டே போய் எல்லாத்தையும் சொல்லி “பாத்தும் ஒரு வார்த்தைகூட அதட்டாம போயிட்டாய்?” “தப்பு செய்யரோம்னு தெரிஞ்சிண்டு ஏன் அப்படி செய்தாய்? அதுதான் தப்பு.” அப்படி ஆரம்பிச்சு மொள்ள எல்லாத்தையும் சொல்லித் தந்து, “இப்ப காதலிக்கர வயசில்ல செல்லம். 25 வயசில் இந்தாளத்தான் பண்ணிப்பேன்னு எவனையாவது காட்டு, அப்ப பாட்டி உசுரோட இருந்தா உன் சார்பில் உன் அப்பனண்டை பெசி நல்லது செய்வேன். இப்போ நீ செஞ்சது தப்பு. இதோட போட்டம்”.
பாஸிங்க் ஃபேன்சியை யார் கிட்டேயும் சொல்லி அடிவாங்கித் தராம புரிய வச்சா. “எல்லாரும் கடந்து வந்த பாதையிலேயேதான் உன் வாழ்க்கையும் பயணிக்கும் அதுதான் நியதி, ஆனா எங்க காலத்தில் நாங்க செஞ்ச தப்பை நீங்களும் அதாவது இந்த தலைமுறையும் செஞ்சு அவதிப் படப் பிடாதுன்னுதான் நீளமா அறிவுரை சொல்லுவம். காலம் மாறிடுத்து, வி லிவ் இன் மாடெர்ன் டைம்ஸ்னு பினாத்தப் பிடாது. எங்க காலத்தில் அதுதான் மாடெர்ன் டைம்ஸ். நாங்களும் எங்களோட அப்பா அம்மா பினாத்தரான்னு சொல்லுவம். பூத்தொடுக்கச் சொல்லித் தந்தேனே ஞாபகம் இருக்கோ? வா இன்னைக்கும் தொடுக்கலாம், பூ இருக்கு!” உக்காத்தி வச்சா. “நீயே தொடு!” சாஞ்சு உக்காந்திண்டு நான் தொடுப்பதை பாத்துண்டே பேசரா.
“நம் அனுபவங்கள்தான் நாம தொடுக்க எடுத்துண்ட பூ. செடீலே பூத்திருப்பதை ஆசையா பறிச்சிண்டு வந்துடுவம். நமக்கு தேவையானதை விட ஜாஸ்த்தியா, எல்லாம் நமக்கே வேணும்னு அனுபவங்கள் மேல் உள்ள பெராசையால். பூ மாதிரி நமக்குக் கிடைச்ச அனுபவங்களும் நாசுக்கானது. சரியா கையாளனைன்னா மாலை தொடுக்க வராது. இல்லை தொடுத்தது நன்னா இருக்காது. கடவுளுக்கு சாத்தும்படி மணமா அமையாது. எவர்க்கும் பிரயோஜனப் படாத மாதிரி வேஸ்டாகும் மாலைபோல் வாழ்க்கையும் அமைஞ்சுடும். மாலைக்கு பூ அவசியம். வாழ்க்கைக்கு நல்ல அனுபவங்கள்.. எதைப் பறிக்கணும், எதை தொடுப்பம், தொடுப்பது தவமா, நாமளே வச்சுப்பமா, பயன்படுமா, நம் வாழ்க்கையையும் கடவுளுக்கு அல்லது அதுபோல் பெரீய ஒரு பர்பஸுக்கு உகந்ததா பண்ணிப்பமான்னு தீர்மானம் செய்வது நம் கையில்தான் செல்லம்”.
காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கலை. அம்மா அப்பா பாத்து வச்சான்னும் சொல்ல மாட்டேன். அப்பா கொண்டு வந்த வரனில் பாட்டி தேர்ந்தெடுத்த பையனை சம்மதிச்சேன். என் கல்யாணத்தின் போது ராஜேஸ்வரிக்கு 75. செமக் கூட்டம். மூஹூர்த்தம் ஆகி ஆசீர்வாதப் படலம். “பொண்ணும் மாப்பிள்ளையும் அக்ஷதை கொடுத்து ஆத்துப் பெரியவவா கிட்டே ஆசீர்வாதம் வாங்கிண்டு வாங்கோ!” சாஸ்த்ரிகள். மொதல்ல எங்காத்துக்காரரோட அப்பா அம்மாவுக்கு நமஸ்காரமாம்.
இவர் அப்பாகிட்டே தெகிரியத்தை வரவழைச்சிண்டு சொல்ரேன். “தப்பா எடுத்துக்கலைன்னா அப்பா, என் பாட்டிக்குதான் மொத நமஸ்காரம் செய்ய விருப்பப் படரேன்”. “அதுக்கென்னடி குழந்தை உன் விருப்பப்படியே செய். எங்கே உன் பாட்டி? நானும் உன் மாமியாரும் கூட அவரை நமஸ்காரம் செய்யரோம்.” எங்களை மாலையும் கழுத்துமா பாட்டிகிட்ட அழைச்சிண்டு அவர் போன அழகு இன்னும் என் கண் முன்னாடி.
ராஜீப் பாட்டிக்கு எல்லாரும் தன்னை நோக்கி ஏன் வரான்னு புரியலை. ரெம்ப நாளைக்கப்பரம் பேரைச் சொல்லி “ராஜேஸ்வரி, எழுந்து நின்னுக்கோ, நமஸ்காரம் பண்ரம், ஆசீர்வாதம் செய்!” அவர் கண் அத்தனை பளபளன்னு ஆனது அன்னைக்குத்தான்
No comments:
Post a Comment