🙏 நமஸ்காரம்
53. திருக்கார் வானம்
மூலவர் - கார்வானர், வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார் - கமலவல்லி, தாமரையாள்
விமானம் - புஷ்கல விமானம்
தீர்த்தம் - கௌரீ தீர்த்தம், தராதர தீர்த்தம்
நாமாவளி - ஸ்ரீ கமலவல்லீ ஸமேத ஸ்ரீ கள்வன் ஸ்ரீவாமிநே நமஹ.
வழித்தடம்:
இத்திவ்ய தேசம் உலகளந்த பெருமாள் சன்னதியாகிய திருவூரகத்தினுள்ளேயே இருக்கிறது.
பாசுரம்:
நீரகத்தாய் நெடுவரையினுச்சி மேலாய் நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்தகச்சி
ஊரகத்தாய் ஒண்துறைநீர் வெஃகாவுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேரா தென் நெஞ்சினுள்ளாய் பெருமானுன் திருவடியே பேணினேனே
- திருநெடுந்தாண்டகம் - 8 (2059)
பாசுரம் பதவுரை:
நீரகத்தாய் - நீரகமென்னுந் திருப்பதியி லுள்ளவனே!
நெடு வரையின் உச்சி மேலாய் - திருவேங்கட மலையினுச் சியிலே நின்றருளினவனே!
நிலாத் திங்கள் துண்டத்தாய் - நிலாத்திங்கள் துண்ட மென்கிற திருப்பதியிலுள்ளவனே!
நிறைந்த கச்சி ஊரகத்தாய் - செழிப்புநிறைந்த காஞ்சீபுரத்தில் திருவூரகமென்னுந் திருவ்வதியிலுள்ளவனே!
ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய் - அழகிய நீர்த்துறையின் கரையிலே திருவெஃகா வில் திருக்கண் வளர்ந்தருளுமவனே!
உள்ளுவார் உள்ளத்தாய் - சிந்திப்பாருடைய நெஞ்சி லுறையபவனே!
உலகம் ஏத்தும் காரகத்தாய் - உலகமெல்லாம் துதிக்கும்படி யான திருக்காரகயத்திலுள்ளவனே;
கார்வானத்து உள் ளாய் - திருக்கார்வான மென்னுந் திருப்பதியிலுறைபவனே!
கள்வா - கள்வனே!
காமரு - விரும்பத்தக்கதாய்
பூ - அழகியதான
காவிரியின் - திருக்காவேரியினது
தென் பால் - தென் புறத்திலே
மன்னு - பொருந்தியிருக்கிற
பேரகத்தாய் - திருப்பேர்நகரில் உறை பவனே!
என் நெஞ்சில் பேராது உள்ளாய் - எனது ஹ்ருதயத்திலே பேராமலிருக்பவனே!
பெருமான் - ஸர்வஸ்வாமியானவனே!
உன் திரு அடியே - உனது திருவடிகளையே
பேணினேன் - ஆசைப்படா நின்றேன்.
பாசுரம் விளக்க உரை:
பல திருப்பதிகளையும் வாயாரச் சொல்லிக் கதறுகிறார்.
நீரகத்தாய் = திருக்கச்சிமாநகரில் திருவூரகமென்று ப்ரஸித்தமான ஸ்ரீ உலகளந்த பெருமாள் ஸந்நிதியிலுள்ள திருநீரமென்கிற திவ்யதேசம்; அவ்விடத் தெம்பெருமானை விளித்தபடி. நீரின் ஸ்வபாவத்தையுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்குந் தலமாதல்பற்றி இத்தலத்திற்கு நீரக மென்று திருநாமமாயிற்றென்பர். நீர்க்கும் எம்பெருமானுக்கும் ஸ்வபாவ ஸாம்யம் பலபடிகளாலுண்டு. அது நமது ஸ்வாதேசார்த்த ஸாக ரத்தில் காணத்தக்கது.
நெடுவரையீனுச்சிமேலாய்=பூமண்டலத்திலுள்ளார் அநுபவிப்பது மாத்திரமன்றியே மேலுலகங்களில் உள்ளாரும் வந்து அநுபவிக்கலாம்படி ஓங்கியுள்ள திருமலையிலே நின்றருள்பவனே! “வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழந் திருவேங்கடம்“ “வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு“ “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்ற அருளிச் செயல்களறிக.
நிலாத்திங்கள் துண்டத்தாய் = தொண்டை நாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டினுள் ‘நிலாத் திங்கள் துண்டம்‘ என்பது ஒரு திருப்பதி; இது பெரிய காஞ்சீபுரத்தில் தேவதாந்தா ஆலயத்தினுள் உள்ளது.
நிறைந்தகச்சியூரகத்தாய்=ஊரகமென்பது உலகளந்த பெருமாள் ஸந்நிதி. எம்பெருமான் உரகரூபியாக இத்தலத்தில் ஸேவை ஸாதிப்பதனால் ஊரகமென்று திருநாமமாயிற்றென்ப.
(உரகம்-ஆதிசேஷன்) நிறைந்த கச்சி யென்றது திவ்ய தேசங்களால் நிறைந்த காஞ்சீ க்ஷத்ரமென்றபடி. திருவூரகத் தெம்பெருமான் தன் திருமேனியொளியாலே திருக்கச்சிமாநகர் முழுவதையும் நிரப்பியிருக்கும்படியைச் சொல்லிற்றாகவுமாம்.
ஒண்துறை நீர் வெஃகாவுள்ளாய்=இவ்விடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியமான வாக்கியங்களின் பரம போக்யதை காண்மின் ;- “திருவெஃகாவில் அழகிய துறையைப் பற்றிக் கண்வளர்ந்தருளினவனே!. அல்லாத துறைகளைப் போலன்றியே ஆழ்வார் திருமழிசைப்பிரான் இழிந்து தீர்த்தமாடின துறையாகையாலே அழகிய துறை யென்கிறது. தத்ஸம்பந்தத்தாலேயிறே அத்துறையைப்பற்றிக் கிடக்கிறது. (கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா- துணிவுடைய செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன், பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்.”- “கணிகண்ன் போக்கொழிந்தான் காமரூபூங் கச்சி, மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் – நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன், பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.” என்ற விடுதிப் பாசுரங்களைத் திருமழிசைப்பிரான் வைபவத்திற்காண்க. ஆச்ரிதன் போனபோது அவன் பின்னேபோயும் அவன் வந்தவாறே வந்து கால்நடை தலைமாடாக் கிடந்தும் இப்படியிறே அங்குத்தை ஆச்ரித பாரதந்திரிய மிருப்பது. ‘இந்த வூரிலிருக்கும் மானிடர் எத்தவங்கள் செய்தார்கொலோ‘ என்று வைஷ்ணவனிருந்த தேசம் வைஷ்ணவனுக்கு உத்தேச்யமாயிருக்குமாபோலே ஆச்ரித ஸ்பர்சமுள்ளதொருதுறையும் ஈச்வரனுக்கு உத்தேச்யமா யிருக்கிறபடி.
உள்ளுவபருள்ளத்தாய்! – காஞ்சீக்ஷரத்தில் ‘உள்ளுருவாருள்ளம்‘ என்று ஒரு திவ்யதேசம் நிலாத்திங்கள் துண்டம்போலவே தேவதாந்திர ஆலயத்தின் உள்ளிருப்பதாகவும், அத்தலத்து எம்பெருமானையே இங்கு ‘உள்ளுருவாருள்ளத்தாய்!‘ என விளித்திருப்பதாகவும் பலர் சொல்லிப் போருவதுண்டு ; இஃது ஆதாரமற்ற வார்த்தையாகும். பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானம் இங்ஙனே காணவில்லை யென்பதுந்தவிர, பிள்ளைப் பெருமாளையங்கார் இயற்றியருளின நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் உள்ளுவாருள்ள மென் றொரு திருப்பதி பாடல் பெற்றிராமையும் நோக்கத்தக்கது. தன்னைச் சிந்திப்பவர்களின் சிந்தையிலே கோயில் கொண்டிருக்குமவனே! என்றபடி. எம்பெருமானுக்கு, பரமகதத்திலும் திருப்பாற்கடலிலும் கோயில் திருமலை பெருமாள் கோயில் முதலான உகந்தருளின விடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதய கமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்ய மென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகிறானென்றும் நம் ஆசார்யர்கள் நிர்வஹித்தருள்வது இங்கு உணரத்தக்கது.
உலகமேத்துங் காரகத்தாய் = காரகமென்கிற திவ்யதேசமும் திருக்கச்சிமாநகரில் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கியது. மேகத்தின் ஸ்வபாவம் போன்ற ஸ்வபாவமுடைய எம்பெருமான் வாழுமிடமாதல் பற்றி இத்தலத்திற்குக் காரக மென்று திருநாமமாயிற்றென்பர். எம்பெருமானுக்கு மேகத்தோடு ஸாம்யம் பலபடிகளால் உய்த்துணரத்தக்கது. (இதுவும் நமது ஸ்வாபதேசார்த்த ஸாகரத்தில் விசதம்.)
கார்வானத்துள்ளாய்! = கார்வானமென்பதும் தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று; இதுவும் உலகளந்த பெருமாள் ஸந்நிதியினுள்ளடங்கிய திவ்யதேசங்கள் நான்கிலொன்று. கள்வா! = ‘திருக்கள்வனூர்‘ என்கிற திவ்ய தேசத்திலுறைபவனே : பிறர் அறியாதபடி காரியஞ் செய்பவனைக் கள்வனென்பது; எம்பெருமானும் ‘இராமடமூட்டு வாரைப்போலே உள்ள பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரு‘ மவனாகையாலே கள்வனென்ப்படுகிறான்.
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய்! = ‘திருப்பேர் நகர்‘ என்கிற அப்பக்குடத்தான் ஸந்நிதியில் பள்ளிகொண்டருள்பவனை விளிக்கிறபடி.
- ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்
ஸ்தல வரலாறு:
திருக்கார் வானம் எவ்விடத்து இருந்தது என்பதை அறியுமாறில்லை. இதுவும் ஆய்வுக்குரிய விஷயமாகும். அதே போன்று திருக்கார்வானம் என்னும் சொல்லும் புதிதாகும். கார்மேகத்தான் என்று எம்பெருமானுக்குப் பெயருண்டு. ஆனால் கார்வானத்தான் என்றுண்டோ உண்டு. நம் தெய்வத் தீந்தமிழில் அவனுக்கு கார்வானத்தான் என்றும் திருப்பெயர், ஆழ்வாரின் அமுதவாக்கிலிருந்து வந்திருக்கிறது. கார்வானத்துள்ளாய் கள்வா என்று இத்தலத்து எம்பெருமானின் பெயரையும் சேர்த்தே ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார். திருவூரகத்திற்குள்ளே இருக்கும் திவ்யதேசத்து எம்பெருமான்கள் மற்ற இருவருக்குமில்லா தனிச் சிறப்பாகும் இது .
நீரகத்தாய் என்றும், காரகத்தாய் என்றும் மற்ற திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்த திருமங்கை இந்த திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்யும்போது மட்டும் எம்பெருமானின் பெயரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார். திருக்கள்வனூர் என்ற ஒரு திவ்யதேசம் காஞ்சியில் உண்டு. ஆனால் அந்த திவ்ய தேச எம்பெருமானுக்கு ஆதிவராகன் என்பது திருநாமம். இந்தக் கார்வானத்து எம்பெருமானுக்குத்தான் கள்வர் என்றும் திருநாமமாகும். கார்வானத்துள்ளாய் கள்வா என்னும் மங்களாசாசனத்தால் கார்வானம் என்னும் திவ்யதேசத்தில் உள்ள எம்பெருமானாகிய கள்வனைத்தான் மங்களாசாசனம் செய்ததாகக் கொள்ள வேண்டும். இதில் உள்ள கள்வர் என்னும் சொல் காஞ்சியில் காமாட்சியம்மன் கோவிலுக்குள் உள்ள ஆதிவராகப் பெருமாளை மங்களாசாசனம் செய்ததாகக் கொண்டு அத்தலத்திற்கும் தலைப்பிட்ட இப்பாடலையே மங்களாசாசனப் பாடலாக நம் முன்னோர்கள் எடுத்தாண்டுள்ளனர். அவ்வாறாயின் ஆழ்வார் கார்வானத்துள்ளாய் கள்வா என்று குறிப்பிட்டு சொல்லியிருக்க வேண்டியதில்லை. காரகத்தாய், நீரகத்தாய் என்பதைப் போன்ற கார்வானத்தாய் என்று மட்டும் மொழிந்திருப்பார். கார்வானத்துள்ளாய் கள்வா என்று தனிமைப்படுத்தி தெளிவுபடுத்திக் காட்டுவதால் ‘கள்வர்’ என்னும் சொல் திருக்கார் வானத்து எம்பெருமானுக்கே உரித்ததன்றி, காமாட்சியம்மான் கோவிலுக்குள் உள்ள ஆதிவராகப் பெருமாளுக்கு உரித்ததன்று என்று முடிவு கட்டலாம். அவ்வாறாயின் காமாட்சியம்மன் கோவிலுக்குள் உள்ள கள்வன் யார், யாரிவர் என்று திருமங்கையாழ்வார் வினவியதைப் போன்று வினவத் தோன்றுகிறது. எனவே காமாட்சியம்மன் கோவிலுக்குள் உள்ள எம்பெருமான் மங்களாசாசனம் பெருமாள்தானா, என்ற சந்தேகம் எழுகிறது. எத்தனையோ சிவாலயங்களில் விஷ்ணு அவதார மூர்த்திகள் இருப்பதுபோல காமாட்சியம்மன் கோவிலுக்குள்ளும் இருந்திருக்கலாம். பிற்காலத்தே ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு திருவூரகம் திவ்ய தேசத்திற்குள் 3 எம் பெரும்மான்கள் எழுந்தருளி இடங்கொண்டது போல, ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு ஆதிவராகப் பெருமாள் என்ற திருநாமங்கொண்ட பெருமாள் காமாட்சியம்மன் கோவிலுக்குள் வந்திருக்கலாம். அல்லது ஒரு காலத்தில் வராஹ வழிபாடே இந்தியா முழுவதும் இருந்தபோது காஞ்சியிலும் தற்போது காமாட்சியம்மன் கோவில் உள்ள இடத்தில் வராஹச் சேஷத்ரம சிறிய அளவில் இருந்திருக்கலாம். கால ஓட்டத்தின் பின்னடைவில் வராஹச் சேஷத்ரம் இருந்த இடத்தில் காமாட்சியம்மன் கோவில் உண்டாகியிருக்கலாம். காமாட்சியம்மன் கோவிலுக்குள் வராஹமூர்த்தி இருப்பதும் உகந்ததே என்றெண்ணி, அந்த ஆதிவராக மூர்த்திக்கு வழிபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். இவ்விதமான காரணங்களால் காமாட்சியம்மன் கோவிலுக்குள் உள்ள ஆதிவராக மூர்த்தி கள்வரல்ல என்று தலைக்கட்டலாம். மேலும் கார்வானத்துள்ளாய் கள்வா என்பது ஒரு தனிச் சொல்லாகும். அஃதாவது இடப்பெயரும், பெருமாளின் பெயரும் சேர்ந்த தனிச்சொல்லாகும். திருக்குடந்தை ஆராவமுதன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன், கச்சி வரதராஜன், திருவனந்தபுர பத்மநாபன், திருவேங்கடத்து ஸ்ரீனிவாசன், என்பது போன்று ஊர்ச் சொல்லுடன் பெயர்ச் சொல்லும் சேர்ந்த காரண குறிச்சொல்லேயன்றி தனித்தனி சொற்களாகக் கொள்ளவியலாது. எனவே கார்வானத்துள்ளாய் கள்வா என்ற சொல்லை இரண்டு திவ்ய தேசங்களுக்கான மங்களாசாசனமாகக் கொள்ளாமல் கார்வானமாகிய ஒரே திவ்ய தேசத்திற்கான மங்களாசாசனமாகக் கொள்ள வேண்டும். அவ்வாறாயின் காமாட்சியம்மன் கோவிலின் உள்ளே உள்ள ஆதிவராகப் பெருமானின் மங்களாசாசனத் தொன்மை தீர்த்தம், விமானம், ஸ்தல இருப்பிடம் போன்றன ஆராய்தற்குரியதாகும்.
சிறப்பு:
திருமகள், பூமிதேவியோடு பெருமாள் வடக்கு முகமாகக் காட்சி தந்து அருளும் திருத்தலம்.
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் கூறியுள்ள 108 திருப்பதி அந்தாதியை ஆராய்ந்து பார்க்கையில், விருத்த மாமுனிவர்கள் செய்த தவத்தின் பயனாக கரிய மேகங்களிலிருந்து பெருமாள் தோன்றியதாகத் தெரிகிறது. கரிய மேகங்களிலிருந்து தோன்றிய பெருமாள் என்பதால் இத்தல இறைவனுக்கு "கார்வானர்" என்பது திருநாமம்.
உபன்யாசம் வீடியோ இணைப்பு:
ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.
https://youtu.be/IcRvXQMCnrQ
ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:
அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
https://www.facebook.com/102047988262304/posts/122096752924094/?sfnsn=wiwspmo&extid=KR5zt95kRzzgN2YF
No comments:
Post a Comment