Wednesday, August 12, 2020

ரெண்டு கழுதை வயசு

30. ரெண்டு கழுதை வயசு (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam

எனக்கு எப்படியாவது ஒரு கல்யாணத்தை பண்ணிப் பாத்துடணும்னு என் அம்மாவுக்கு ஆசை. அதுக்கு கூடக்கூட வரிஞ்சுக் கட்டிண்டு ஒத்தாசை செய்யரது அவள் சிநேகிதிகள். 

இதெல்லாம் எல்லாராத்துலேயும் நடப்பதுதானே, இதில் என்ன விசேஷம்னு நீங்க நினெச்சா தப்பில்லை. எனக்கு இந்த செப்டெம்பர் வந்தா 43 வயசு பூர்த்தியாரதே!. அதான் விசேஷம். 

இன்னும் கல்யாண ஆசை விடலையான்னு கேக்கலாம். எனக்கு அத்தனை இல்லைதான். ஆனா அம்மாவோட ஆசையை பூர்த்தி செய்ய முடிஞ்சா புண்யமாச்சேன்னு நானும் அவள் இழுக்கர இழுப்புக்கு போயிண்டு. இத்தனை நாளா ஏன் கல்யாணம் நடக்கலைன்னு கேப்பேளே! ஞாயம்தான். சொல்லிடரேன்.

மின்னெல்லாம் பொண்களுக்கு காலாகாலத்தில் கல்யாணம் நடக்கலைன்னா அவாகிட்டே ஏதோ குறை, மீளாத ஜாதக தோஷம்னு படும். இதை இப்போ அப்படியே பிள்ளைகளுக்கு சொல்ரா. ஆகவே முதல்ல நான் சொலப் போவது என் கல்யாணம் இத்தனை நாள் இழுத்துண்டு வரது ஜாதக தோஷமோ இல்லை சொல்லமுடியாத குறையோ இல்லை. திகையலை அவ்ளோதான்.

இத்தனை பிடிவாதமா எனக்கு ஒரு ஆம்படையாளை பிடிச்சுக் கொடுத்துடணும்னு எங்கம்மா இப்போ அலைவதை அப்போ, நான் 25 வயசானதுலேந்து அலையாம இருந்திருப்பாளா? சித்தே யோசியுங்கோ! அலைஞ்சாளே. ஒண்ணும் நடக்கலை.

நான் பாக்கரத்துக்கு இப்போவும் நன்னாதான் இருக்கேன். அதுவும் ப்ரைம் யூத்தில் இன்னும் நன்னா. இப்போ சித்தே நரை, உச்சி மண்டையில் வட்டமா முடிகொட்டி வழுக்கை எல்லாம். ஜோரா ட்ரெஸ் செஞ்சுப்பேன். புல்லெட் வச்சிருக்கேன். அப்பா வச்சுட்டுப் போன வீடு சிட்லப்பாக்கத்தில். நல்ல வேலை. பேங்கில் பேலன்ஸ். அப்படி இருக்கச்சே லைன் கட்டிண்டுன்னா பொண்கள் ஜாதகம் வரணும். வரலை. 

நங்கநல்லூர் வெங்கட்ராமன் இந்த வருஷத்துக்குள் நடந்துடும்னு சொன்னராம். இதைத்தான் பல தடவை சொன்னர். ஆனா ஒவ்வொரு தடவையும் அம்மா அவர் சொல்ரதை வேதவாக்கா எடுத்துண்டு அவரைப் பாத்துட்டு வரச்சே ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் மைசூர்பா வாங்கிண்டு வந்து தருவள்.
ஒரு விதத்தில் கல்யாணம் மட்டும் இல்லை மைசூர்பாவும் அலுத்துப்போச்சு. ஆனா இந்த விஷயத்தில் எங்கம்மா காட்டர ஆர்வம் அலுக்கவேயில்லை, ஏன்னா ஒவ்வொரு தடவையும் அவள் கையாளுகிர யுத்தி அத்தனை சுவாரஸ்யம்.

வழக்கமா ஜாதகம் பதிவு பண்ணி, பரிவர்த்தனை, ஜோஸியர் கான்டேக்ட்ஸ் எல்லாம் பண்ணிணது பத்தாதுன்னு, கடைத்தெருவில் யாராவது பொண் நன்னா இருந்து அவளுக்கு பிடிச்சிருந்தா உடனே எனக்கு காமிச்சு “நீ சொல்லு, பிடிச்சா நான் அவளை ஃபாலோ பண்ணிப் போய் அவாத்தில் பெசரேன்! எந்த கோத்ரம், நக்ஷத்திரமானாலும் பரவாயில்லை, பிராம்ணாளா இருந்தாப் போதும்.”. இன்னும் சித்தே போனா புடவை கட்டிண்டா போதும்னு சொல்லுவாளோ. 

பொண்ணை பாக்கவே தேவையில்லைன்னு நான் சொல்ர ஸ்டேஜ் அதிக தூரத்தில் இல்லை. 

பஸ்ஸில் ட்ரைனில் பொண்களுக்கே தெரியாம படலம் முடிஞ்சுடும். கண்ணில் படும் பொண்கள் 35க்கு மேலே இருந்தா தன் ஆத்துக்கு வரப்போர மாட்டுப்பொண்ணா பாவிச்சுத்தான் அணுகுவதுன்னு வச்சிருக்கா. அதில் 98% ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தைகளொட சௌக்கியமா இருப்பா.

ஏதோ துர்கதியில் கணவனைப் பிரிஞ்சுட்டவா, இல்லை இழந்துட்டவாளா இருந்தாலும் பரவாயில்லைன்னு சொன்னேன். அதுக்கு அவள் “இத்தனை நாள் காத்துண்டு லோலோன்னு அலைஞ்சது அதுக்காகவாடா செல்லம்? ஏன் இத்தனை விரக்தியா பேசராய்? நான் உசுரோட இருக்கர வரைக்கும் அதுக்கு ஒத்துக்க மாட்டேன். இன்னொரு தடவை அந்த மாதிரி பேசாதே!.” 

இந்த வயசிலும் நான் அவளுக்கு செல்லம்தான். அப்படி சொல்ரச்சே சித்தே ஓவராப் படும். சைடுலே இவள் தீர்காயுசா இருக்கட்டும், நமக்கு கல்யாணம் ஆகலைன்னாலும் பரவாயில்லைன்னு தோணும்.
இன்னைக்கு இன்னொண்ணும் நடந்ததே! அதைச் சொல்லியே ஆகணும்.

அம்மாவோட ஸ்நேகிதி பரிமளா மாமி வந்திருந்தா. சுங்குவார்சத்திரத்துலேந்து தெரிஞ்ச கோயில்லேந்து பெருமாள் விக்ரஹம் சிட்லப்பாக்கம் வரதாம், ரொம்ப வேண்டப்பட்டவாளாத்தில் மட்டும் பெருமாளை ஏளப்பண்ணலாம்னு இருக்காளாம், உங்காத்தில் வச்சுக்கலாமான்னு கேட்டுண்டு. “மீனாக்ஷி மாமீ, ரொம்ப விசேஷமாக்கும் ஒத்துக்கோங்கோ!” வற்புருத்த, என்ன செய்யணும்னு இவள் கேக்க, விவரம் சொன்னா. 

6000 பணம் கட்டணும். அப்புரம் வரவா, அர்ச்சகா, பல்லக்கு தூக்கரவா இவாளுக்கு சிரம பரிஹாரம். உங்க இஷ்டப்படி – பாதாம் பால், முந்திரி, காய்ஞ்ச திராக்ஷை, அப்புரம் சம்பாவனை உங்க ப்ரீதி எப்படியோ அப்படி. நீளமா பூஜைக்கு லிஸ்ட் தந்தா. “செய்யுங்கோ மாமி, உங்க பிள்ளையாண்டனுக்கு டக்குன்னு வரன் அமையரதா இல்லையா பாருங்கோ.” கடைசீலே அப்படி ஒரு போடு போட்டா? அம்மா க்ளீன் பவுல்ட்.

“பெருமாளொட 20 பேர் வருவாளாம். நீங்க யாரைக் கூப்பிட்டுக்கரேளோ அது உங்க இஷ்டம், அப்புரம் ஆத்து மனுஷா”. புது ட்ரெண்டா இருக்கேன்னு நினெச்சேன். இந்த க்ஷணத்துலேந்து என் கல்யாணம் நடந்துடனும்னு ஆயிரக்கணக்கில் சிலவும் செய்ய என் அம்மா தயார்னு புரிஞ்சது. கரையப் போவது என் பாங்க் பேலன்ஸ்னும்.

அப்பா நான் 8 வயசா இருக்கச்சே போயாச்சு. மஞ்சக்காமாலை. அம்மாதான் எனக்கு எல்லாம், நான்தான் அம்மாவுக்குன்னு ஆகிப்போச்சு. என்னை இத்தனை தூரம் வளர்த்து ஆளாக்கினது சாதாரண விஷயம் இல்லை. ஒருநா, நான் 24 வயசா இருக்கச்சே “கண்ணா, நீ அம்மா சொல்ர பொண்ணைத்தான் கல்யாணம் செஞ்சுக்கணும்”. “நானா ஏன் ஒருத்தியை இழுத்துண்டு வரப்போரேன்?” மானஸீகமா செஞ்சு கொடுத்த வாக்கு. 

அம்மாவே நிறைய பொண் பாத்தா. அவள் மனசில் எப்படிப்பட்ட பொண் வேணும் என்பதில் தெளிவா இருந்தா. ரொம்பவே தெளிவா இருந்ததுனாலே அதுக்கு ஒத்துப் போகும்படி லோகத்தில் பொண்ணே கிடைக்கலை.

முதல்ல சம்பிரதாயமா போய்ப்பாத்த 7 பொண்களை அம்மாவுக்குப் பிடிக்கலை. 2 எனக்கு தோதுப்படலை. அடுத்த 15க்கு என்னைப் பிடிக்கலை. ரெண்டு டஜன் பாத்ததும் எங்களை யாரும் பாக்கவே கூப்பிடலை. அப்போதான் எங்களுக்கும் தெரிஞ்சுது ஆண்பிள்ளைக்கு வரன் தேடுவது கஷ்டம்னு. பொண்களெல்லாம் நன்னா படிச்சு நல்ல உத்யோகத்தில் சுதந்திரமா இருக்கச்சே, அவா எதிர்பார்ப்பு தன் வாழ்க்கைத் துணையைப் பத்தி எகிறிப்போச்சு.

அம்மாவுக்கு இதையெல்லாம் சாதம் போடரச்சே விளக்கினேன். இது நடந்தது 5 வருஷத்துக்கு முன்னாடி. அப்போவே ஆகும்கிற நம்பிக்கை குறைஞ்சாச்சு. “உனக்காக ஒருத்தி எங்கேயோ பொறந்திருக்கா. அவசரப்படாதே. தேடிக் கண்டு பிடிப்போம்”. நிச்சயமா பொறந்தாச்சு ஆனால் வேற ஒருத்தன் லவுட்டிண்டு போயிருப்பான்னு பட்டது. இல்லை சவுத் அமேரிக்காவுலே இருப்பாளோ! அம்மா தேடிண்டிருக்கர இடத்தில் ஏன் பொறக்கலை?

பாக்கிர பொண் பிடிச்சுப் போரதுன்னு ஒண்ணு இருக்கு. இப்படித்தான் வேணும்னு தேடி அலைவது இன்னொண்ணு. ஆகக்கூடி ஒண்ணும் நடக்கலை. ஒரு விஷயத்தில் உறுதியா நின்னேன். அம்மா பாத்து பண்ணி வைக்கர பொண்தான் என் மனைவின்னு. என்கூட படிச்சவாளுக்கெல்லாம் கல்யாணம் ஆகி, அதுக்கப்புரம் என்னெல்லாம் நடக்கணுமோ அதெல்லாம் இனிதே நடந்தது. அவாளுக்கும் அம்மா அப்பா எல்லாம் இருக்கா. என்னை அறியாம விரக்தி வந்து ஒட்டிண்டது.

சொன்னா நம்பமாட்டேள், ஒரு தடவை தோணித்து “நாமளே ஒரு பொண்ணை பார்த்து அவளொட பேசி சரீன்னு சொல்லவச்சு அம்மா முன்னாடி கொண்டு போய் நிறுத்தினா?” வாக்குத் தந்துட்டேனே! அம்மாகிட்டேயே கேட்டேன். “அப்படி செஞ்சா ஒத்துப்பாயா?” “என்னமோ உன்கிட்டே அப்படி நிறைய இருக்கா மாதிரி சொல்ராய்? காதல் கீதல்னு ஆகிடுத்தா?” கேட்ட தோரணை சரியாப் படலை. “இல்லைம்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்”.

பெருமாளை ஏளப்பண்ணி ரெண்டு மாசம் ஆச்சு. அதுக்கப்புரம் அது இதுன்னு கைக்காசு சிலவழிஞ்சது. அனுக்ரஹம் கிடைக்காதது பெருமாள் குத்தமா எனக்குப் படலை. கடவுளில் பலர் ரெண்டு பொண்டாட்டிக்காரா. அப்போ பிசியான்னா இருப்பா? நம்பளுக்கு அனுக்ரஹம் செய்ய அவகாசம் எங்கே! இந்த ஜன்மத்தில் நான் சிங்கிள். எத்தனை பேர் சிங்கிளா இருக்கா? இருந்தாலும் பிராம்ணா சமூகத்தில் இப்படி இருந்தா சித்தே கவலைப்பட வேண்டிய விஷயமாவும், நெறுங்கிய வட்டத்தில் கேலிக்கும் ஆளாகலாம்னு பட்டது. விசேஷங்களூக்கு இன்வைட் செஞ்சா போயிட்டு தனியா உக்காந்துட்டு சாப்டூட்டு வந்துடரது. அம்மா மண்டபத்தையே ஒரு கலக்கு கலக்கிட்டு வருவா. இதேபோல ஒரு மண்டபத்தில் என் பிள்ளைக்கும் நல்லது நடக்கும்னு உறுதியாச் சொல்லிண்டே.

இவ்வளவு ஆர்வமா உங்கம்மா முயற்சியை கைவிடாம எல்லாம் உன் நன்மைக்கு செஞ்சிண்டிருக்கா, நீ இத்தனை சீக்கிரமா விரக்தீ அது இதுன்னு பேசராய், இது நன்னா இல்லையேன்னு கேக்கலாம். 43 வயசில் கல்யாணம் செஞ்சுண்டு என்னத்தை சாதிக்கப் பொரேன்? வரப்போர பொண் 22ஆ இருக்கப் போரதில்லை. 37க்கு மேல். சரீ. இத்தனை வயசுக்கப்புரம் குழந்தை பெத்துண்டு என்னா ஆகப்போரது? பையன் காலேஜுக்கு போரப்போ நான் ரிடயர் ஆகிடுவேன். அவனுக்கு கல்யாணம் பேசரப்போ நான் 70 வயசு கிழம். இதெல்லாம் தேவையா!

எனக்கு விரக்தி சூழ்ந்திண்டா மாதிரி அம்மாவுக்கு எப்போ? என்ன நடந்தா இனிமேல் இவனை கரை சேர்க்க முடியாதுன்னு அவளும் புரிஞ்சிண்டு என்னை கைவிடுவா? இப்ப்படியெல்லாம் எனக்கு யோசனைகள் வரும். இவளொட என்தூசியாஸம் எப்போ உடெஞ்சு சிதறும்? அதுவும் நடக்காம போகாது, அதையும் பாத்துடணும்னு காத்திருக்க ஆரம்பிச்சேன்.

அன்னைக்கு ஞாயித்துக்கிழமை. லயோலா காலேஜ் போர வழீலே மாஹாலிங்கேஸ்வரர் கோவிலில் சீனிவாச ஜோஸியர் ஜாதக பரிவர்த்தனை கேம்ப் வச்சிருக்கர்னு என்னையும் கூட்டிண்டு போயிட்டா. பொண்கள் வந்தா நீயும் நேரில் பாத்து ஒரு முடிவெடுக்கலாம்னு. வழக்கம் போல என் ஜாதகத்தை கையில் வச்சிண்டு நிதானமா பாத்துட்டு அதில் ஒட்டியிருந்த போடோவையும் சித்தே தள்ளி தூணில் சாஞ்சிண்டு உக்காந்திண்டிருந்த என்னைய்யும் மாத்தி மாத்தி பாத்துட்டு அம்மாகிட்டே பட்டீஸ்வரம் போய் 30 ஏழைகளுக்கு தானம் செய்யுங்கோ, அப்புரம் திருமணஞ்சேரி போய் கல்யாணசுந்தரேஸ்வரரை தரிசனம் செஞ்சுட்டு வாங்கோன்னு சொன்னர். 

இந்த ரெண்டு இடத்துக்கும் ஏர்கனவே ரெண்டு தடவை போயிட்டு வந்தாச்சு.

ட்ரைனில் ஆத்துக்கு திரும்பி வரச்சே, “சித்தே நெஞ்சு வலிக்கரா மாதிரி இருக்கு கண்ணா”ன்னா. சட்டுன்னு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி பக்கத்துலே இருக்கர நல்ல ஆஸ்பத்திரிக்கு போயாச்சு. செக் பண்ணின டாக்டர் மைல்ட் அட்டாக், ரெண்டு நா ரெஸ்டுலே இருக்கட்டும், இங்கேயே இருந்தா நல்லது, இல்லைன்னா நான் தர மாத்திரையெல்லாம் கவனமா கொடுத்து ஆத்திலேயே பாத்துக்கோங்கோ. அலைச்சல் வேண்டாம். அடுக்களை வேலையும் வேண்டாம்
என்னம்மா இங்கேயே படுத்துப்பாயான்னா, “வேண்டாம் என்னை ஆத்துக்கு அழைச்சிண்டு போயிடு”.

ஆத்துக்கு வந்ததும் மருந்தை சாப்டுட்டு நன்னா தூங்கினா. எழுந்துண்டு போனில் ஏதோ மெசேஜ் தட்டிண்டு. 

மறுநாள் கார்த்தாலேயே பரிமளாவும் ஜானகியும் ஆஜர். “என்னால் இன்னும் ஒரு மாசத்துக்கு வெளீலே போக முடியாதுடீ. இவனுக்கு வரன் எப்படி? அதான் யோசனையா இருக்கு. ஒண்ணுமே விவரம் தெரியாம இவனை வளர்த்துட்டேன். வெகுளி. மார்கெட்டுக்குப் போய் பிஞ்சா பீன்ஸ் வாங்கிண்டு வரக்கூட தெரியாது. முத்தலா கொண்டுவருவன். இவனை வச்சுண்டு என்னத்தை பண்ண? நான் இன்னும் எத்தனை நாள் உயிரோட இருக்கப்போரேன்.”

“ரெண்டு கழுதை வயசாச்சு இன்னும் தனக்கு ஒரு துணையைத் தேடிக்கத் தெரியலை.” பல்லைக் கடிச்சிண்டு சொல்ரா. ஸரிதான்!

No comments:

Post a Comment