Wednesday, August 12, 2020

திரு ஊரகம்

🙏  நமஸ்காரம்    

50. திரு ஊரகம்

மூலவர் - உலகளந்த பெருமாள், திருவிக்கிரமன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
தாயார் - அமுதவல்லி நாச்சியார்
உற்சவர் - பேரகத்தான்
விமானம் - ஸார ஸ்ரீகர விமானம்
தீர்த்தம் - நாக தீர்த்தம்
நாமாவளி - ஸ்ரீஅமுதவல்லீ ஸமேத ஸ்ரீ உலகளந்தான் ஸ்வாமிநே நமஹ

வழித்தடம்:

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலேயே உள்ளது. இத்தலத்திற்கு நடந்தே சென்று இறைவனைத் தரிசிக்கலாம். 

பாசுரம்:

கல்லெடுத்து கல்மாரி காத்தாயென்றும் காமரு பூங் கச்சி யூரகத்தா யென்றும்
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாயென்றும் வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே யென்றும்
மல்லடர்த்து மல்லரை யன்றட்டா யென்றும் மாகீண்ட கைத்தலத்தென் மைந்தாவென்றும்
சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே யென்று துணைமுலை மேல் துளிசோரச் சோர்கின்றாளே. (2064)
திருநெடுந்தாண்டகம் - 13 (2064)

திருமங்கையாழ்வார் பிராட்டியின் வார்த்தையாக இப்பாசுரத்தை மொழிந்துள்ளார். அதாவது பிராட்டி ஒரு கிளி வளர்க்கிறாள். அக்கிளியை எடுத்து தன் நெஞ்சோடு ஒட்ட வைத்துக்கொண்டு தான் சொல்லிக் கொடுத்த எம்பெருமானின் பெயர்களை எல்லாம் சொல்லச் சொல்லி கொஞ்சி மகிழ்கிறாள்.

திருமழிசையாழ்வாராலும், திருமங்கையாழ்வாராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசம்

பாசுரம் பதவுரை:

    (இப்பெண்பிள்ளை)
கல் மாரி - (இந்திரன் பெய்வித்த) கல் மழையை
கல் எடுத்து - ஒருமலையை யெடுத்துப் பிடித்து
காத்தாய் என்றும் - தடுத்தவனே! என்றும்,
நாமரு பூகச்சி ஊரகத்தாய் என்றும் - விரும்பத்தக்கதாய் அழகிய தான காஞ்சீபுரத்தில் திருவூரகத்தில் நின்றருளினவனே! என்றும்,
அட்டாய் என்றும் - ஒழித்தவனே! என்றும்
மாகீண்ட - குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியை கீண்டொழித்த
கைத்தலத்து - திருக்கைகளையுடைய
என் மைந்தா என்றும் - எனது மைந்தனே! என்றும்
தன் கிளியை - தன்னுடைய கிளியை நோக்கி
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் - வில்லைமுறித்துப் பிராட்டியைக் கைப்பிடித்தவனே! என்றும்,
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்றும் - திருவெஃகாவில் பள்ளி கொண்டருளும் பிரபுவே! என்றும்,
அன்று - முன்பொருகாலத்தில்
மல்லரை - மல்லர்களை
மல் அடர்த்து - வலிமையடக்கி
சொல் எடுத்து - திருநாமத்தின் முதற்சொல்லையெடுத்துக் கொடுத்து
சொல் என்று - (மேலுள்ளதை நீயே) சொல் என்று சொல்லி,
          (அது சொல்லத் தொடங்கினவாறே) -
துணை முலை மேல் - உபயஸ்தரங்களிலும்
துளி சோர - கண்ணீர் பெருகப் பெற்று
சோர்நின்றாள் - துவளாநின்றாள்.

பாசுரம் விளக்க உரை:

உலகிற் பெண்மணிகளெல்லாம் ஒரு பைங்கிளியை வளர்த்துப் போதுபோக்குதல் இயல்பு. அப்படியே இப்பரகால நாயகியும் ஒரு கிளியை வளர்த்திருந்தாள்; அதற்கு எம்பெருமான் திருநாமங்களைக் கற்பித்திருந்தாள். இவள் உல்லாஸமாயிருக்குங் காலங்களிலே அக்கிளி அருகிருந்து இன்சொல் மிழற்றும்; இப்போது இவள் தளர்ந்திருப்பது கண்டு கிளி தானும் தளர்ந்திருந்தமையால் ஒரு மூலையிலே பதுங்கிக் கிடந்தது. தாயானவள் அக்கிளியை மகளின் முன்னே கொணர்ந்து விட்டு இவள் உகக்கும்படியான சில திருநாமங்களைச் சொல்லி மகிழ்விக்குமாறு ஏவினாள்; ஏவினவிடத்தும் அது பரகாலநாயகியின் முகத்திலு பயிர்ப்பைக்கண்டு ஒன்றும் வாய்திறக்க மாட்டிற்றில்லை; அவள் தானே கிளியை நோக்கி ‘நான் கற்பித்த திருநாமங்களைச் சொல்லாய், சொல்லாய்‘ என்ற விடத்தும் அது வாய்திறவாதிருக்க, முன்புதான் கற்பித்த திருநாமங்களின் தலைப்பை எடுத்தெடுத்துக் கொடுத்து ‘இதைச்சொல், இதைச்சொல்‘ என்ன அதுவும் அப்படியே சொல்ல. அதுசொன்ன திருநாமங்களைக் கேட்டுக் கண்ணுங் கண்ணீருமாய் நின்றபடியை எடுத்துறைக்கிறாள் திருத்தாய்.

கண்ணபிரான் * சோலைசூழ்ந்த பெரியகுன்றை யெடுத்து ரக்ஷித்திருக்க இவள் “கல் எடுத்து“ என்று ஒரு சிறிய கல்லையெடுத்தானாகச் சொல்லுவது எங்ஙனேயெனின்; அவ்வளவு அநாயஸமாக எடுத்தமை சொன்னபடி. “கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமுழிந்தில வாடிற்றில, வடிவேறு திருவுகிர் நொந்துமில மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்“ என்ற பெரியாழ்வார் திருமொழியுங் காண்க. வீரபத்நியாகை யாலே “பொல்லாவாக்கனைக் கிள்ளிக்களைந்தானை“ என்றாற்போலே சொல்லுகிறாளென்க.

“நல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்“ என்ற சொல்நயத்தை நோக்கி பட்டர் அருளிச்செய்வாராம்- ‘கல்மழையாகையாலே கல்லையெடுத்து ரக்ஷித்தான், நீர் மழையாகில் கடலை யெடுத்து ரக்ஷிக்குங்காணும்“ என்று. இதனால், இன்னதைக் கொண்டு இன்னகாரியஞ் செய்வதென்கிற நியதி எம்பெருமானுக்கில்லை யென்பதும் ஸர்வசக்தனென்பதும் விளக்கப் பட்டதாம். “பிறரால் வந்த ஆபத்திலோ ரக்ஷிக்கலாவது? உன்னால்வந்த ஆபத்தில் ரக்ஷிக்க லாகாதோ? கல்வர்ஷத்திலகப்பட்டாரையோ ரக்ஷிக்கலாவது? அவ்வூராகப் பட்ட நோவை ஒருத்திபட்டால் ரக்ஷிக்கலாகாதோ? என்னுடைய ரக்ஷணத்துக்கும் ஏதேனும் மலையை யெடுக்கவேணுமோ? மலையை யெடுத்த தோளைக் காட்டவமையாதோ?“ என்ற பரமபோக்யமான வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

காமருபூங்கச்சியூரகத்தாயென்றும்=கல்லெடுத்துக் கல்மாரிகாத்த காலத்தை இழந்து பிற்பட்டவர்களுக்கும் ஸர்வஸ்வதானம் பண்ணுகைக்காகவன்றோ திருவூரகத்திலேவந்து அந்த க்ருஷ்ணாவதாரத்திற்குத் தோள்தீண்டியான த்ரிவிக்ரம் வேஷத்தோடே நி்ன்றருளிற்று; இதுவும் பாவியேனுக்குப் பயன்படாதொழிவதே! என வருத்தந் தோற்றக் கூறுகிறபடி.

இப்பாட்டில், விபவாவதார சேஷ்டிதங்களைக் கூறுவன சில அடிகளும் அர்ச்சாவதார நிலையைக் கூறுவன சில அடிகளுமுள்ளன; இவை மாறி மாறிக் கோக்கப்பட்டிருக்கின்றன; அவதாரங்களை ஒரு கோர்வையாகவும் திருப்பதிகளை ஒரு கோர்வையாகவும் அநுபவிக்கலாமே, அப்படி அநுபவியாமல் கலசிக்கலசி அநுபவிக்கிறார்; ஏனென்னில் ; பிடிதோறும் நெய்வார்த்து உண்பாரைப்போலே திருப்பதிகளையொழியத் தமக்குச் செல்லாதபடியாலே திருப்பதிகளைப்பேசுகிறார். திருப்பதிகளின் அடிப்பாடு சொல்லவேண்டுகையாலே அவதாரத்திலிழிகிறார். மற்றையாழ்வார்களுக்கும் இவர்க்குமுண்டான வாசி இது காண்மின்; அவர்கள், மேன்மையை அநுபவிக்கவேண்டில் அவதாரங்களைப் பேசுவர்கள்; அந்த நீர்மையை ஸாக்ஷாத்கரிக்கைக்காகத் திருப்பதிகளிலே இழிவர்கள். இவ்வாழ்வார், மேன்மையை யநுபவிப்பதும் திருப்பதிகிறே நீர்மையை திருப்பதிகளிலே, அதை ஸாக்ஷாத்கரிப்பதும் திருப்பதிகளிலே.

வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாயென்றும்=‘இவ்விலை முறித்தார்க்கு இவளை விவாஹம்பண்ணிக் கொடுக்கக்கடவேன்‘ என்று ஜநகன் சொல்லி வைத்திருக்கையாலே இராமபிரான் வில்லை யெடுத்து நாணேற்றி வளைக்கப் புக்கவளவிலே வில் முறிந்தது; அவ்வளவிலே நெடுநாளைய குறைதீரப் பெற்ற ஜநக மஹாராஜன் பொற்கிண்டியைக் கொணர்ந்து தாரை வார்த்துத் தத்தம் பண்ணப்புக, அதுகண்ட இராமபிரான் ‘நான் ஏதேனும் நெடுநாளைய ப்ரஹமசாரியாயிருந்து பெண் கொடுப்பாராருமில்லையே யென்று தடுமாறிப் பெண்தேடி வந்தேனோ; ராஜகுமாரனாகையாலே வீரவாசி கொண்டாட வந்தேனத்தனை; உமக்குப் பெண் விவாஹஞ்செய்ய வேண்டியிருந்தால் அதுவிஷயம் நமக்குத் தெரியாது; வஸிஷ்டாதிகளையும் நமதுஐயரையும் கேட்டுக்கொள்வது‘ என்று கம்பீரமாகச் சீர்மையுங் கண்டு பிராட்டி நீராயுருகினாள்; வில்முறித்த ஆயாஸந்தீர அவளது தோளிலே தோய்ந்தானிராமபிரான்; அதைப் பேசுகிறாள் வில்லிறத்து மெல்லயல்தோள் தோய்ந்தாய்! என்று. இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “.........வில்லைமுறித்த ஆண்பிள்ளைத் தனத்தையும் வார்த்தை சொன்ன சீர்மையையுங் கண்டு நீராடினாள் பிராட்டி“ எனத் திருக்திக்கொள்க. தோய்தல் நீரிலேயாகையாலே இங்குத் ‘தோய்ந்தாய்‘ என்ற சொல் நயத்துக்கு ஏற்ப ‘நீரானாள்‘ என்றது.

வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே! என்றும் = பிராட்டியைப் பாணிக்ரஹணம் பண்ணி வந்து அந்த இளைப்புத்தீரவும் அந்த மணக்கோலம் விளங்கவும் துயிலமர்ந்தவிடத் திருவெஃகா வென்கிறாள். ஒரு ராஜகுமாரன்வந்து கிடக்கிறான் என்னலாம்படி யிருக்கிறதாயிற்று.

(மல்லடர்த்து இத்யாதி.) மஹாபாபிகளான மல்லர்கள் ஏதேனுமொரு வியாஜத்தாலே உன்னுடைய தோளோடே அணையப் பெற்றார்கள், அவ்வளவு பாக்கியமும் எனக்குக் கிடைக்கவில்லையே! என்கிற கிலாய்ப்புத்தோற்றச் சொல்லுகிறபடி. நானும் இத்தன்மை நீங்கிப் பிரதிகூலர் வடிவெடுத்து வந்தேனாகில் உன் தோளோடே அணையப் பெறலாம் போலும் என்கிறாளென்றுங் கொள்க.

மாகீண்ட கைத்தலத்து என்மைந்தா! என்றும் =  திருவாய்ப்பாடியில் ஆய்ச்சிகளுக்கு முற்றூட்டான திருமேனியைப் பாதுகாத்துக் கொண்டாய்; அதை எனக்கு ஒருநாள் காட்டினால் போதுமே, இதுவும் அரிதாயிற்றே! என்று நொந்து பேசுகிறபடி.

சொல்லெடுத்து = ஆக இப்படிப்பட்ட திருநாமங்களின் ஆதியை யெடுத்துக் கொடுத்துக் கிளியைச் சொல்லுவிக்க, அவற்றின் பொருள் நெஞ்சில் உறைக்கவே இப்படி ஆபத்துக்களுக்கு உதவுமவனாகப் புகழ்பெற்றவன் இன்று நம்மளவிலே உதவாதொழிவதே! என்று கண்ணுங் கண்ணீருமாயிருந்து கரைகிறபடியைத் திருத்தாயார் கூறினாளாயிற்று.

ஸ்தல வரலாறு:

வாமன வடிவம் கொண்டு மகாபலியிடம் மூன்றடி மண் வேண்டிய எம்பெருமான் திரு விக்கிரம அவதாரம் எடுத்து மகாபலிச் சக்ரவர்த்தியை பாதாளத்திற்கு அனுப்பினான். பாதாளம் புக்க மஹாபலி, தம்பொருட்டு எம்பெருமான் உலகளந்து நெடிய திருமேனியுடன், திருவிக்ரமனாய் நின்ற திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லையே, எம்பெருமானின் பாதம் பட்டு பாதாள லோகத்தில் புதுந்துவிட்டோமே, நம்பொருட்டு எழுந்த அவதாரத்தின் முழு ரூபத்தை முழுமையாக காணமுடியவில்லையே என்றெண்ணி வருந்தி, திருவிக்ரம அவதாரத்தைக் காட்டியருள வேண்டுமென பாதாள லோகத்திலேயே எம்பெருமானைக் குறித்து தவமிருக்க அந்த தவத்திற்கு மெச்சி இந்த ஸத்யவ்ரத ஷேத்ரமான காஞ்சியில் மகாபலிச் சக்ரவர்த்திக்கு உலகளந்த திருக்கோலத்தை காட்டிக் கொடுத்த ஸ்தலமே ஊரகம் ஆயிற்றென்பர்.

பாதாள லோகத்தில் சாதாரண மனிதனைப் போல இருந்த மகாபலி நெடிதுயர்ந்து உலகளந்த திருக்கோலத்தை மீண்டும் முழுமையாக என்னால் தரிசிக்க இயலவில்லையே என்று பதைபதைத்து எம்பெருமானைத் துதித்து நிற்க எளிய விதத்தில் அவனுக்கு காட்சி தரும்பொருட்டு இந்த இடத்திற்கு அருகிலேயே ஆதி சேடனாக காட்சியளித்தார். இந்த இடம் பேரகம் எனப்படும்.

ஆதிசேடனாக காட்சியளித்த அந்த இடமே தற்போது பேரகம் என்ற பெயரில் இத்தலத்திற்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது. இங்கு எம்பெருமான் சரப ரூபமாகக் காட்சியளிக்கிறார். பார்ப்பதற்குப் பேரெழில் பொருந்தியவர் இந்தப் பெருமாளுக்கு ஊரகத்தான் என்று பெயர். உரகம் என்பது பாம்பைக் குறிக்கும். எனவேதான் ஆதிசேடன் ரூபத்தில் உள்ள பெருமான் உரகத்தான் என்று அழைக்கப்பட்டு ஊரகத்தான் ஆயிற்றார் போலும்.

கச்சி ஊரகத்தாய் என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த “ஊரகம்” என்னும் திவ்யதேசம் காஞ்சி நகரத்திற்குள்ளேயே அமைந்துள்ளது. தொண்டை மண்டலத்து இருபத்தியிரண்டு திவ்ய தேசங்களுள் இதுவும் ஒன்று. இந்த ஊரகம் என்னும் திவ்ய தேசத்திற்குள்ளேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய மூன்று திவ்ய தேசங்கள் அமைந்துள்ளன. அதாவது இந்த மூன்று திவ்ய தேசத்து எம்பெருமாள்களும் இந்த ஊரகம் ஸ்தலத்திற்குள்ளேயே எழுந்தருளியிருக்கின்றனர். 

இந்த மூன்று திவ்ய தேசங்களும் தொண்டை நாட்டிற்குள் எங்கிருந்தனவென்று அறியமுடியவில்லை. எவ்விதம் மூவரும் இங்கு வந்து புகுந்தனர் என்பதும் அறியுமாறில்லை. நிச்சயமாக இத்தலங்கள் காஞ்சி நகருக்கு வெளியே உள்ள திவ்யதேசங்களைப் போன்று எங்காவது தனித்திருந்திருக்க வேண்டும். மதம் அல்லது அரசியல் சார்ந்த யாதாயினுமோர் காரணத்தால் உண்டான விளைவுகளால் இத்தலங்கள் மூன்றும் இடம் பெயர்ந்து அல்லது இப்பெருமான்கள் மூவரும் இடம் பெயர்ந்து இங்கு வந்து சேர்ந்தனர் எனலாம். இம்மூன்றும் காஞ்சிக்கு வெளியில் மிகத் தொலைவிலோ அல்லது காஞ்சிக்கு அருகாமையிலோ ஒன்றுக்கொன்று சமீப தூரத்தினதாகவோ இருந்திருக்க வேண்டும். அதனாற்றான் ஏதோவொரு காரணத்தால் இடம் பெயர வேண்டிய சூழல் உருவானவிடத்து மூவரும் ஒருங்கே பெயர்ந்துள்ளனர். காஞ்சிக்கு வெளியே உள்ள ஊர்களில் இத்தலத்துப் பெயர்களின் சாயல்களை கொண்ட ஊர்களையோ, வரலாற்று ரீதியாக அழிந்துபட்ட அல்லது இன்றைய வரலாற்றுப் போக்கோடு வர இயலாதவாறு மண்டிக் கிடந்து விட்ட ஏதாவது சில தொல்லியல் கோவில்களையோ ஆய்வு செய்யும்போது அல்லது ஆய்வு செய்தால் உண்மை வரலாம். இவைகள் நிச்சயமாக காஞ்சிக்குள்ளே இருந்திருக்க முடியாது. அவ்வாறு இருந்திருப்பின் ஊரகத்தை மங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார் கச்சி ஊரகத்தாய் என்று விளிப்பதைப் போல மற்ற தலங்களையும் கச்சி நீரகத்தாய், கச்சி காரகத்தாய் என்று விளித்திருப்பார். ஊரகம் தவிர மற்ற இந்த மூன்று திவ்ய தேசங்கட்கு காஞ்சியின் சம்பந்தத்தை திருமங்கை அருளவில்லை. மேலும் நீரகத்தை மங்களாசாசனம் செய்யும்போது 
நீரகத்தாய் நெடு வரயினுச்சி மேலாய் (2059) 
என்று நீரகத்தானுக்கு நெடுவரை வேங்கடத்தானோடு சம்பந்தங் காட்டுகிறார். அதே சமயம், அதே பாடலில் ஊரகத்தானை மங்களாசாசனம் செய்யும் போது 
“நிறைந்த கச்சி ஊரகத்தாய்”
என்று ஊரகத்திற்கும் காஞ்சிக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துகிறார்.

சிறப்பு:

இங்கு எழுந்தருளியுள்ள உலகளந்த பெருமாள் மிகப் பிரம்மாண்டமானவர். நெடிதுயர்ந்த இவர் திருமேனி பார்ப்பதற்குப் பேராச்சர்யம் உடைத்து 108 திவ்ய தேசங்களில் மட்டுமல்ல இந்தியாவிலேயே இத்தகைய பிரம்மாண்டமான உலகளந்த பெருமாள் இல்லையென்று சொல்லலாம். பேரகத்தான் என்பது இவர் திருநாமம். இப்பெருமாள் தனது இரண்டு கரங்களை நீட்டி தனது இடது காலை விண்ணோக்கித்தூக்கிய திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். இடதுகரத்தில் இரண்டு விரல்களையும், வலது கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக்காட்டி எழுந்தருளியுள்ளார். இடது திருக்கரத்தின் இரண்டு விரல்களை உயர்த்தியதால் ஈரடியால் மண்ணும் விண்ணும் அளந்ததையும் வலது திருக்கரத்தில் ஒருவிரலை உயர்த்தி ஓரடியை எங்கே வைப்பது என்று மகாபலியிடம் கேட்டதாக இதற்கு ஆன்றோர் பொருள் கூறுவர்.

இதேபோல் பேரகத்தில் எழுந்தருளியுள்ள ஆதிசேட எம்பெருமானும் மிகப் பிரசித்தி வாய்ந்தவர். இவர் போன்ற நாகமூர்த்தியை வேறெங்கும் காண்டலரிது. இவரிடம் தூய மனதுடன் கேட்கும் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறுகிறது. இப்பெருமானுக்கு திருமஞ்சனம் செய்து திருக்கண்ணமுது (பாயாசம்) படைத்துப் புத்திரப்பேறு இல்லாதவர்கள் புத்திரப் பேரடைகின்றனர். இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது. இவ்வெம் பெருமானுக்குத்தான் (ஊரகத்தான்) ஊரகத்தான் என்பது திருநாமம். எனவே காஞ்சிக்கு வெளியே இருந்த இந்த மூன்று திவ்ய தேசத்து எம்பெருமாள்களும் அவர்கள் ஊரைவிடுத்து இந்த ஊரகத்திற்குள் வந்தெழுந்தருளியமை வரலாற்றின் அடிப்படையிலும் சமயஞ் சார்ந்த கருத்துக்களின் அடிப்படையிலும் ஆராயத்தக்கதாகும்.

இந்த ஒரு திவ்ய தேசத்திற்குள்ளாகவே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய திவ்ய தேசத்து எம்பெருமான்களும் திவ்ய தேசங்கள் இருப்பதால் இத்தலத்தை தரிசித்தால் நான்கு திவ்ய தேசங்களைத் தரிசித்ததாகி விடும். 

ஊரகம், நீரகம், காரகம், கார் வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து எம்பெருமான்களையும் சேர்த்து திருமங்கையாழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

இத்திருக்கோவிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயர் அருள்வது மிகச்சிறப்பு.

உபன்யாசம் வீடியோ இணைப்பு:

ஸ்வாமி உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களால் உபன்யாசம் செய்த திவ்யதேச வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.

https://youtu.be/Fe8FCtTK1Ag

ஃபேஸ்புக் பேஜ் இணைப்பு:

அடியேனுடைய ஃபேஸ்புக் பேஜ் இணைப்பை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது

https://www.facebook.com/102047988262304/posts/119996456467457/?sfnsn=wiwspmo&extid=qQhcaN6sh2gyprkJ

No comments:

Post a Comment