Friday, July 3, 2020

உத்திரரங்கநாதர்திருக்கோயில், பள்ளிகொண்டா

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் மிகவும் பழமையான தலம் இன்று ஏகாதசி 

#உத்திரரங்கநாதர்திருக்கோயில்

#பள்ளிகொண்டா

மூலவர்: உத்திர ரங்கநாதர் 

தாயார்: ரங்கநாயகி தாயார்

தலவிருக்ஷம்: பாதிரி

தீர்த்தம்: வ்யாச புஷ்கரணி, பாலாறு எனும் வேகவதி நதி

ஊர்: பள்ளிகொண்டா(ன்)

மாவட்டம்: வேலூர்

#தலவரலாறு:

சத்தியவ்ரத க்ஷேத்திரம் எனும் காஞ்சியில் நடைபெறும் பிரமனுடைய வேள்வியைக் குலைத்திட , ஸரஸ்வதி வேகவதியாய் உருமாறி , கடுங்கோபத்துடன் விரைந்து வந்து கொண்டிருந்தாள் ! 

சுக்திகா, கநகா, ஸ்ருப்ரா, கம்பா, பேயா, மஞ்சுளா, சண்டவேகா என்கிற ஏழு ப்ரவாஹங்களுடன் ( பெருக்குகளுடன் ) அந்நதி பாய்ந்து வந்தது ! கங்கையை விட வேகமாகப் பெருகினபடியால் " வேகவதி " என்று இந்நதி பெயர் பெற்றதாம்!

இந்த யாக சாலை , ஊர் , நகரம், மலை , காடு , தேவர்கள், ரிஷிகள் , கந்தர்வர்களுடன் அனைத்தையும் மூழ்கடித்து , கிழக்குக் கடலுக்கு அடித்துச் செல்வேன் என்றபடி வேகவதி பெருகி வந்து கொண்டிருந்தது !! 

அயன் அரியை இறைஞ்சினான் ! பக்தர்களுக்கு இஷ்டத்தை அருளுமவனான எம்பெருமான் வேள்வியைக் காப்பதென்று முடிவெடுத்தான்.. 

ஹஸ்திகிரிக்கு மேற்கே , பீஜகிரிக்குக் கீழே தெற்கு வடக்காய் , இறைவன் துயில் கொண்ட கோலத்தில் நதியைத் தடுத்திட , அணையாய்த் தோன்றினான் ! 

சயனேசன் என்று அவனுக்குத் திருநாமம் ! சயனேசன் = பள்ளி கொண்ட பெருமான் என்று பொருள் ! 

என்ன ஆச்சரியம் ! ஊருக்கும் அதுவே பெயராயிற்று !! ஆம் ! இன்றும் பீஜகிரிக்குக் கீழுள்ள அவ்வூர் " பள்ளி கொண்டா(ன்) " என்றே வழங்கப்படுகின்றது !! 

ஸரஸ்வதியும் சற்றே சீற்றம் தணிந்தாள் ! தன்னைத் தடுக்க அணையாய்க் கிடக்கும் பரமன் அடியிணையை மட்டுமன்று ; அவனை மொத்தமாக தொட்டுவிட வேண்டும் என்று விரும்பி; தன் வேகத்தைக் கூட்டினாள் !

புன்முறுவல் பூத்தபடி அவள் தன்னை நெருங்கிடக் காத்திருந்தான் பள்ளி கொண்டவன் !! 

பள்ளி கொண்டா(ன்) ! 

இன்றும் ஸ்ரீ ரங்கநாதனாய் நமக்கு அவன் காக்ஷி தரும் தலம் !! பாதிரி மரத்தினை ஸ்தல வ்ருக்ஷமாய்க் கொண்டு அவன் அருள்பாலிக்கும் அத்புதத் தலமிது !!

அம்பரீஷனுக்கு , பகவான் ப்ரத்யக்ஷமான க்ஷேத்ரமிது !! வ்யாஸ புஷ்கரிணி என்று இங்குள்ள திருக்குளம் வழங்கப்படுகிறது !!

சாளக்ராமத் திருமேனியுடன் " கிடந்ததோர் கிடக்கை " என்று நாம் மயங்கும்படி சயனித்திருக்கிறான் இறைவன் !! 

#தரிசனநேரம்:
காலை 08 - 12
மாலை 04 - 08

#தொடர்ப்புக்கு:
04171 - 240234
9443309572

#அமைவிடம்:
சென்னைக்கு மேற்கே 154 கி.மீ, வேலூர் குடியாத்தம் வழித்தடத்தில் வேலூருக்கு மேற்கே 24 கி.மீ, ஆம்பூருக்கு கிழக்கே 30 கி.மீ, குடியாத்தத்திற்குத் தென்கிழக்கே 9 கி.மீ. தொலைவில் பள்ளிக்கொண்டான் ஆலயம் உள்ளது.

No comments:

Post a Comment