Sunday, July 19, 2020

ரகஸிய சினேகிதன்

ரகஸிய சினேகிதன் (மனதை தொட்டுவிடும் கதை – 56)    #ganeshamarkalam

மணிரத்தினத்துக்கு என்ன? காதல் கதையா எடுத்துண்டே போரார். அவருக்கு தோதா அந்த வைரமுத்துவும் பாட்டு எழுதிக்கொடுத்துடுவாராம். அவா சினிமாவில் சொல்ராப்புலே எல்லாம் வாழ்க்கை அமைவதில்லை. நிறைய எடிட் ஆகி, சென்சார் ஆனப்புரம் கிடைக்கரதுதான் நிஜ வாழ்க்கையா அமையரது.

சில விஷயங்களில் என் சினேகிதன் மாதிரி மணிரத்தினமே கற்பனை பண்ணியிருக்கமாட்டார். அவ்வளவு சமத்து. என்ன, அப்பப்போ அவர் அம்மா குணம் தூக்கலா மேல ஏறி வரும். பால் பொங்கராப்புலெ. கொஞ்சம் தண்ணி கையில் எடுத்து தெளிச்சிடுவேன். காஸ் அடுப்பை அணச்சுட்டு கீழே இறக்கி வச்சுட்டா உறைகுத்தரவரைக்கும் அப்படியே தேமென்னு மெள்ள ஆறிப்போயிடும். 

பொடி வச்சு பேசரேன்னு நினைக்கபிடாது. எங்கம்மா சொல்லிக்கொடுத்ததை நான் செய்யரேன். இது நடந்தா இதைப்பண்ணு, அதைப்பண்ணினா இப்படி நடக்கும்னு துல்லியமா கணிச்சு சொல்லிட்டு போயிருக்கா மகராசி. என் மானஸீக குரு.

எனக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள். ஆசைக்கு ஒரு பொண்ணும், ஆஸ்திக்கு ஒரு ஆணும். இவரை, என் சினேகிதனை முதல்ல சந்திச்சப்போ இவரோட கம்பீரமான குரல்தான் என்னை வசீகரிச்சது. அவர் குரலை கேட்டப்போ முழங்காலுக்கு கீழே அப்படியே குழைஞ்சு போனாப்புலே உடம்பு நடுங்கித்து. அவர்தான் கிட்டக்க வந்து, “உனக்கு என்ன பிடிக்கும், ஹாபீஸ் என்ன”ன்னு விசாரிச்சார். சொல்லிட்டு “இதையெல்லாம் எதுக்கு கேக்கரேள்”னும் கேட்டுட்டேன். சிரிச்சுட்டு ஒண்ணும் சொல்லலை. 

“உங்களுக்கு என்ன ஹாபி, என்னை மாதிரி புஸ்தகம் படிக்க பிடிக்குமா”ன்னு கேட்டதுக்கு, “அய்ய, அதுக்கெல்லாம் எங்கே டயம் இருக்கு”ன்னு புசுக்குன்னு முடிச்சுட்டார். இன்னும் கொஞ்சம் பேசியிருந்திருக்கலாமேன்னு அவர் போனப்புரம் தோணித்து. 

இப்போ, நான் என் விருப்பப்படி சுஜாதா சிறுகதைகள்னு (கிரி டிரேடர்ஸ்லெ சொல்லிவச்சு வாங்கினது) எடுத்து சாஞ்சு படுத்துண்டா, இவர், ஆபீஸ் வேலை செஞ்சுண்டு கம்ப்யூடரை நோண்டிண்டிருந்தவர் திடீர்னு அதுகளை மூடி வச்சுட்டு கிட்டெக்க வந்து ஒரு பக்கம் கூட படிக்கவிடாம சில்மிஷத்தை ஆரம்பிப்பர்.
சில்மிஷம்கிரது நிறைய நடக்கும். 

அப்போவும் சரி, இப்போ பல வருஷம் ஆனப்புரமும். படிக்க எடுத்ததோ சிறுகதை. என் காதுக்கிட்டே அவர் வந்து உதட்டசைவிலேயே சொல்ல கேட்கக்கிடைத்ததோ 300 பக்க குறுநாவல். என்னைப்பத்தி அவர் எழுதியது. அவர் இருந்த ஆங்கிள்லே நான் அவ்வளவு அழகா இருக்கேனாம். நேத்தும் இதேதான், அப்போ வேர ஆங்கிள். இப்படி ஒரு வாரம் கூட்டிப்பாத்தா எல்லா ஆங்கிள்லேயும்னு நான் அழகுதான்னு ஆகிடும். அப்புரம் என்ன மெழுகா உருகிப்போய் என்னையே கொடுத்துடுவேன். 

இதெல்லாம் ராத்திரியொட, மறுநாள் காபியும் ந்யூஸ்பேப்பரும் முடிக்கர வரைக்கும் கிட்டக்கேயே யாரும் போகப்பிடாது. போனால் வள்ளுன்னு ராட்வைலர் மாதிரி எரிஞ்சு விழுவர். அதே வள்ளுக்கு 3 அடி பின்னாலே என்னைப்பாத்து குழையர வால் இருக்கே, நமக்கு அதுமேலே கண் இருந்தா போதும்.

எனக்கு என்ன பிடிக்கும்னு புடவை, நகை எல்லாம் வந்துடும், ஒரு பண்டிகை மிஞ்சாது. அதுவும் கடைக்கு கூட்டிண்டு போனா எனக்கு போட்டியா எல்லாத்தையும் எடுத்துபோடச்சொல்லி, என்னோட தேவைபட்டா 4 கடையாவது ஏறி இறங்குவார். கொஞ்சம்கூட அலுத்துக்கமாட்டர். ஆத்துக்கு வந்ததும் “எனெக்கென்னமோ இதுக்கு பதிலா அந்த பனாரஸ் சில்க், சிவப்பு பார்டர் எடுத்திருக்கணும்னு தோணரதுடி, நான் வேணும்னா போய் மாத்திண்டு வந்துடட்டுமா”ன்னு கேப்பர். ஏர்கனவே கார்த்தால 11க்கு போயிட்டு உஸ்மான் ரோடில் எல்லா கடையும் ஏறிட்டு, இப்போ சாயங்காலம் 7 மணிக்குத்தான் வந்தோம், அவரை கஷ்டப்படுத்த மனசிருக்காது. நான் அடுத்த வாரம் போரச்சே பாத்துக்கலாம்னு சமாதானம் சொல்வேன். அவருக்கு லேசா கண் கலங்கராப்புலே எனக்கு தோணும். அப்புரம் வாங்கிண்டு வந்ததை உடுத்திண்டு வந்து காண்பிப்பேன், “அடீயே! அப்படியே சினேஹா மாதிரி இருக்காய்”னுட்டு நெத்திப்பொட்டில் திரிஷ்டிகழிப்பர். கண்ணாடியில் பாக்கரச்சே அமாம் இவர் சொல்ரது கரெக்ட்தான்னு தோணிடும். 

நகை வாங்கணும்னா அதுக்கும் உடனே ரெடி, வா போகலாம்னு காரை தொடச்சு, சீட்டெல்லாம் க்ளீன் செஞ்சு பெர்ஃப்யூம் போட்டு ரெடியா ஸ்டார்ட் பண்ணிண்டு நிப்பர். கடைக்கு போரச்சே இவருக்கு நான் காரில் பக்கத்துலே உக்காரலைன்னா கோவிச்சுப்பர். ஆனால் பக்கத்துலே முன்னாடி சீட்டில் உக்காந்தாத்தான் இவர் கார் ஒட்டரப்ப செய்யர தப்பையெல்லாம் சொல்லமுடியும். தூரக்க யாராவது ரோடை கிராஸ் செஞ்சா இவருக்கு அலர்ட் செய்வேன். “சிவப்பு சிக்னல் போடப்போரா”ன்னு சொல்லுவேன் வேகமா போயிடலாம்னு போவர், “முன்னாடி போர காஸ் சிலிண்டெர் ஏத்தின லாரி ப்ரேக் போடரான்”னு கத்துவேன். 

இவருக்கு ஒண்ணுண்ணா என்னால தாங்கிக்கமுடியாது. காருக்கு ஒன்ணுண்ணா இவரால தாங்கிக்கமுடியாது. நான் கூடப்போகலைன்னா இவர் எப்படி சேஃபா கார் ஓட்டுவர்? எப்போ கியர் மாத்தணும், ப்ரேக் போடணும்னு யார் ஞாபகப்படுத்துவா?

பொதுவா நகைக்கடைக்கு போனா எல்லாரையும்போல இன்னது வாங்கணும்னு ஒரு தீர்மானத்தோடத்தான் போவேன். ஆனா எங்கூட வர இவர், என்ன வேணுமோ, என்ன விலையானாலும் பரவாயில்லை, வாங்கிக்கோன்னு சொல்ரச்சே கடைக்காரனே மலைச்சுபோய் நிப்பன். எத்தனைபேரை பாத்திருப்பான்? இவர் மாதிரி இருக்காது. அன்னைக்கு GRTயில் சேல்ஸ்கேர்ல் என்னை தனியே கூப்பிட்டு சொல்ரா, “மாமி, ஆத்துக்கு போய் உங்காத்துக்காரருக்கு சுத்திப்போடுங்கோன்னு.” ஏண்டின்னு கேட்டதுக்கு ஒரு நமுட்டு சிரிப்பு. செஞ்சேன். அவ முழியும் பேச்சும் சரியாப்படலை.

கைநிறைய சம்பாத்தியம். ஒரு அமேரிகன் கம்பேனியில் எக்ஸிக்யூடிவ். ஆத்துக்கு வந்தப்புரம் நுணிநாக்கு இங்க்லீஷ் பேசிண்டு, எனக்கே பெருமையா இருக்கும். என்னவோ ஓவர்சீஸ் காலாம், 3 மணிநேரம் போகும். சில சமயம் ராத்திரி 1130 வரைக்கும். அதுக்கப்புரம் சில்மிஷம், தூக்கம், தூக்கம் கலைஞ்சு சில்மிஷம். இப்படி ஒரு சினேகிதனா? எங்கே பிடிச்சாய்னு நீங்க கேக்கலாம். எனக்கும் பிடிச்சுக்கொடுன்னும் கூட. என் சினேகிதன் எனக்குமட்டும்தான். அதில் நான் தெளிவா இருக்கேன். எங்கே பிடிச்சேன்னு சொல்லப்போரதில்லை. அவா அவா தேவைக்கேற்ப நீங்களே தேடிக்கணும்.

ஆத்தில் கொலு வைக்கர வழக்கம் உண்டு. 9 நாளும் சாயங்காலம் 4 மணி ஆச்சுன்னா இவரை மாடிப்போர்ஷன்லே போய் இருங்கோன்னு அனுப்பிடுவேன். இல்லைன்ன எங்கேயாவது நண்பராத்துக்கு போயிட்டு வாங்கோன்னு. போன வருஷம் அப்படித்தான் ஆத்துக்கு வந்த பெண்டுகள் பாட்டுப்பாடிட்டு மஞ்சள் குங்குமம் வாங்கிண்டுட்டு போரப்போ “எங்கேடி அவர்”னு கேக்க, இவரும் “இதோ இருக்கேனே”ங்கிராப்புலே பெட்ரூம்லேந்து வேஷ்டியோட, பனியன் போட்டுக்காம வரார். அப்புரம் எல்லாரும் இவரை கண்கொட்டாம பார்த்தா. வந்தவா பலபேராத்தில் எப்படி சிச்சுவேஷனோ, என்ன கஷ்டமோ? அப்புரம் எனக்கு இவரை அவாள்ளாம் வரச்சே ஆத்தில் வச்சுக்கிரது சரியாப்படலை.

அதுலேந்து சினேகிதன் ரகசிய சினேகிதன் ஆயாச்சு.
பல சமயம் இவர் என்மேல் ஆசையா இருக்காரான்னு சந்தேகம் வரும். சின்னதா ஒரு டவுட் மனசில் தோணிடுத்துனா – அவரைப்பத்தி - உடனே எனக்கு அதை நிவர்த்தி பண்ணிண்டுடணும்.

எப்படி? அது சந்தேகத்தை பொறுத்து. 

குளிச்சுட்டு உடம்பை தொடச்சுண்டு துண்டை என்ன பண்ணினார்? துவைக்கப்போட்டாரான்னு தெரியலைன்னா நேர கேட்டுடலாம். ஆபீசுலேந்து ஒருவாரம் லேட்டா வரார், சாப்டுட்டு வந்துட்டேன்னு சொல்ரார். ஏதோ கான்ஃபரஸ்ஸாம், பல ஊரிலேந்து வரா கலந்துக்க, வந்துட்டு குளிக்கப்போயிருக்கார், இவருக்கு செல்லில் கால் வரது, அழகா ஒரு வடக்கத்திக்காரி முகம் ஸ்க்ரீனில் வரது. அப்போ இவரை ஒரு ரெண்டுநாளாவது கண்காணிப்பில் வச்சு கவனிக்கணும். கடைசீயா கட்டம் கட்டி வளைச்சுக்கேக்கணும். திருப்தியான பதில் வரலையா, மொலு மொலுன்னு ஒரு பிடி பிடிக்கணும். 

சிலசமையம் அதீத ஆசையா இருக்காப்புலே நடந்துப்பார். குழைவார். அப்போ நிச்சயம் ஏதோ நடந்திருக்கு, சந்தேகமேயில்லை. யோசிச்சிண்டிருக்கப்பிடாது, டைரெக்ட் ஆக்ஷன்.

ரிடையர் ஆனதுலேந்து மனுஷன் சும்மா இருக்கர். சும்மான்னா சும்மா. உத்யோகம் புருஷ லக்ஷணம், ஆனா புருஷா ரெடைர்மென்ட்டுக்கு அப்புரம் உத்யோகம் இல்லைன்னாலும் ரொம்பவே லக்ஷணமா ஆகிடரா. எனெக்கென்னமோ இப்போதான் என் கன்ட்ரோல்ல அவர் முழுசா வந்துட்டா மாதிரி இருக்கு. கண் முன்னாடியே இருக்கிரத்துனாலேயோ என்னமோ. ஆனா என்ன குணம் மட்டும் அப்படியே, சில விஷயங்களில் எனக்கு பிடிக்காத அதே குணம் முத்திப்போயிட்டாப்புலே. வெள்ளை சட்டையில் ஈஷிண்ட கறை மாதிரி. பிடிச்ச எல்லா குணங்களும் அப்படியே திராக்ஷை ரசம் மாதிரி மெச்சியூர் ஆகி பாக்கிரவாளை, பழகரவாளை கிரங்கடிச்சிண்டு. சில ஆங்கிள்லெ பாக்கிரச்சே அன்னைக்கு “உனக்கு என்ன பிடிக்கும், ஹாபீஸ் என்ன”ன்னு கேட்ட அதே சினேகிதன் தெரியரான். சில ஆங்கிள்லெ இவரோடையா இத்தனைநாள் சினேகிதமா இருந்தோம்னு தோணும். அப்படி தோணினா ரெண்டுநாளைக்கு பட்டினிபோட்டா சரியாயிடும்.

இன்னைக்கு, அவர் மாமாவாத்துக் காரியத்துக்கு போனாரேன்னு, சாவகாசமா படுத்துண்டு இப்படியாக என் சினேகிதனை பத்தி யோசிண்டிருக்கச்சே என் பொண்ணு மாடீலேந்து கூப்பிட்டு என் கனவைக் கலைச்சுட்டா. திடுக்குன்னு ஆச்சு. “என்னம்மா, என்ன பண்ராய், ஃபோன்லே சித்தி மும்பைலேந்து கூப்பிடரா. உங்கிட்டேதான் பேசணுமாம், முக்கியமான மேட்டராம்”கிரா. நான் எழுந்து போனை எடுக்கரேன். அப்படி என்ன தலைபோர விஷயம், ஏதாவது புதுப்புடவை வாங்கிட்டாளா என்ன? 

“என்னடி என்ன பிசியா, உம்பொண்ணு உன்னை போனை எடுக்க வைக்க ரொம்பவே கஷ்டப்பட்ரா? அத்திம்பேரோட பகல்லேயே பல்லாங்குழியா?”. “அதெல்லாம் இப்போ எங்கேடி, மறந்தே போச்சு, நீ சொல்லவந்த விஷயத்தை சொல்லுடி.” “ஓண்ணுமில்லை நேத்து இங்கே மராத்தா மந்திரில் சினிமாபாக்க போயிருந்தோம். அப்படியே இவர் கடைக்கு அழைச்சிண்டு போய் எனக்கு புதுப்புடவை எடுத்துக்கொடுத்தார், உடுத்திண்டு வாட்ஸப்பில் போடோ அனுப்பிருக்கேன். பாத்துட்டு சொல்லுடீ”ங்கிரா.

பாத்தேன் சகிக்கலை. ஏன்னா பொராமையா இருந்தது. இந்த மனுஷணும் இருக்காரே, கடைக்கு கூப்பிட்டா வரவே மாட்டேங்கிரார். மெட்ரோ ரயில் பாலம் கட்டரானாம், ட்ராஃபிக் ஜாஸ்தியாம். காரை எடுக்கமுடியாதாம். இந்த எரிச்சலில் இருக்கச்சே இவ போடோவேர. “நன்னா இருக்கு”ன்னு மெசேஜ் போட்டுட்டு போனை ஸ்விட்ச்-ஆஃப் செய்யரேன். திருப்ப கூப்பிட்டாலும் கூப்பிடுவா. 

கனவு காண்பதற்கு இன்னும் நிறைய இருக்கு. அவர் திரும்ப வரத்துக்குள்ள.

No comments:

Post a Comment