Sunday, July 19, 2020

எதிரொலி (2 of 2)

62. எதிரொலி (2 of 2) (சிசீ6) #ganeshamarkalam

எங்கே விட்டேன் நேத்திக்கி? பூவுக்குள் பூகம்பம் போல் ஓலாக்குள் சயின்டிஸ்டா ஃபீல் ஆச்சுன்னு. ஆமாம் பின்னே இருக்காதா? ஹேண்ட் பேகுக்குள்ளே அந்த சோழி அதுலேந்து லேசா ஒரு கம்பி நீட்டிண்டு அது டேமேஜ் ஆப்பிடாதுன்னு அதை ஒரு டப்பீலே ஸ்பாஞ்ச் வச்சு தந்திருக்கான் பேரன். நல்ல இடமா பாத்து வச்சூட்டு எந்த பட்டனை அமுக்கணும்னும் சொல்லித் தந்தான்.

குரோம்பேட்டை போரத்துக்கு நாழி ஆச்சு. கத்திப்பரா தாண்டினதும் ஆலந்தூர் திருப்பத்துக்கு கிட்டே ட்ரேஃபிக் அடசல். அதே போல் பல்லாவரம் ஜங்க்ஷண்கிட்டேயும். எப்படியோ வந்தாச்சு. ந்யூ காலனி ஆத்து வாசலில் இறங்கப்போ காசைக் கொடுத்துட்டு நிமுந்து பாக்கரேன், பழைய வீடு “ஈ”ன்னு இளிச்சுண்டு. இவர் சரியாத்தான் சொன்னர். சொந்தவீடு இருக்கச்சே புதுசு ஏன் வாங்கணும்? புள்ளையும் தனியாப் போய்ட்டன் நாம ரெண்டுபேர்தானேனு தங்கியிருந்தம்னா நன்னாவா இருந்திருக்கும்? அந்த சீப்ராஸ் அப்பார்ட்மென்ட் என்ட்ரன்ஸும், லான்ஸும், சுத்தி வர பூச்செடிகளும், 4 பால்க்னி வித் வ்யூ, ஜிம் ஸ்விம்மிங்க் பூல் நினைச்சுப் பாக்க முடியுமா? அக்கம் பக்கத்திலும் மனுஷா எப்படி? எல்லாரும் பெரீய பதவீலே இருந்துண்டோ இல்லை அதுலேந்து ரிடயர் ஆனவாளோத்தான். எல்லாராத்துலேயும் யாராவது வெளி நாட்டில். இவாளும் அடிக்கடி பறந்துண்டு.

இங்கே? அக்கம் பக்கத்தில் டப்பா டக்கர் ஃபேமிலி. லோவர் மிடில் கிளாஸ். ரோட்டைப் பாருங்கோ! குறுகலா, ஓரமா ஸ்டார்ம் வாடர் ட்ரைனேஜ் தொறந்து கிடக்கு. அதுலேயே பல வீட்டுக்காரா அவாத்து கழிவு நீரை விட்டிருக்கா. அங்கேயும் இங்கேயும் தண்ணீ சரியா ஓடாம. கொசு அப்பிடும். வாசல்ல வந்து நிப்பம்னா பகல்லேயே கடிச்சுக் குதறிடும். ஒரு பேச்சு வார்த்தைக்குன்னு மனுஷா இருப்பான்னாலும் என்னென்னு பேச? அவா இன்டரஸ்டும் நமக்கு பிடிச்சதும் ஒத்துப் போணமே! எல்லாம் மடிசஞ்சீகள். நல்லவேளை ஆரம்பத்தில் நாம குழந்தையா, இளம் பருவத்தில் வளர்ந்த வீடுன்னு சென்டிமென்ட் பாத்து இங்கேயே தங்கிக்கலை. வருத்தப் பட்ருப்பேன்.

உண்மைதான். இந்தாத்தில் நிறைய சென்டிமென்ட்ஸ் மண்டிக் கிடக்கு. சின்ன குழந்தைலேந்து, வளர்ந்து வயசுக்கு வந்து, காலேஜ் படிப்பெல்லாம் முடிச்சு இங்கேதானே எல்லாம் ஆச்சு? அப்பா அம்மாவொட கழிச்ச காலங்கள் அத்தனை சுகமானவை. எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும். இல்லைன்னு சொல்லலை. அப்பெல்லாம் ஆத்தில் ஒரு பூச்செடி வச்சு அதில் பூ பூத்துதுன்னா அத்தனை மகிழ்ச்சி வரும். நான்தான் கார்த்தாலே பறிப்பேன், வேற யாரும் தொடப் பிடாது, பறிச்சதை பிள்ளையாருக்கு நானே வைப்பேன்னு அடம் பிடிச்சது ஞாபகம். மோட்டார் போடரத்துக்கு மின்னாடி கிணத்தடீலே துண்டச் சுத்திண்டு உக்காந்துக்க அப்பா கிணத்துலேந்து இறைச்சு வாளீயை உசக்கப் பிடிச்சிண்டு அருவி மாதிரி ஊத்தரச்சே குத்தாலத்தில் இருக்காப்ல படும். “நிஜக் குத்தாலத்துக்கே அழைச்சிண்டு போரேன்.” ஆனா சொன்ன அப்பாவுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்கலை.

எங்காமவர் என்னை பொண் பாக்க வந்து அவரை நான் ஓகே செஞ்சது இந்தாத்தில்தான். வசதியான கணவர் அமைய வழி செஞ்சு தந்ததில் இந்தாத்துக்கு நிறைய பங்கு. பிரசவத்துக்குன்னு வந்து என் பிள்ளை பிறந்தது தொட்டில் போட்டதும் இங்கேயே. அத்தனை என் இதயத்தொட ஒன்றிப்போன வீட்டை எங்கப்பா இன்னும் பெரீசா பாஷா கட்டியிருக்கலாம். இன்னைக்கு வாச கேட்டைக்கூட தொறக்காம நின்னிண்டு இதெல்லாத்தையும் நினைச்சுப் பாத்துண்டு. நாஸ்டால்ஜியாவா ஃபீல் ஆச்சு. அதே சமயத்தில் கழுத்தை நேரிக்கராப் போல. சஃபோகேடிங்க்! வந்த வேலையை சட்டுன்னு முடிச்சிண்டு கிளம்பிடணும். பூட்டை தொறந்துண்டு நுழைஞ்சாச்சு.

பக்கத்தாத்து மாமா, என்னொத்த வயசுதான் “மாமி! ரெம்ப நாளாச்சு!” காம்பவுண்ட் வாலுக்கு அந்தண்டைலெந்து எம்பரர். “அமாம் மாமா. அடிக்கடி வர தோதுப்படலை. கொஞ்சம் வேலை. அதுக்காக வந்தென். போரச்சே பெசரேன்.” சட்டுன்னு கட் செஞ்சுட்டு உள்ளே வந்துட்டேன். இல்லைன்னா வழவழன்னு பிடிச்சு வச்சுண்டுடுவர். அவருக்கும் பெச்சுத் துணைக்கு இந்தப் பக்கம் யாருமில்லையே! என்ன பண்ணுவர் பாவம்? டாக்ஸி சத்தம் கேட்டதும் ஓடோடி வந்திருக்கர். அவரை மீறி ரோட்டில் ஏதும் நடமாடிப் பிடாதாம்.

உள்ளே அத்தனை தூசி இல்லை. 6 மாசத்துக்கு மின்னாடி ஆள்கிட்டே சாவி தந்து க்ளீன் செஞ்சதுது ஞாபகம். திடீர்னு குடி விடரேளான்னு வந்து கேட்டா காமிச்சுக் கொடுக்கணுமா வேண்டாமா? அப்ப சுத்தமா இருந்தாத்தானே பிடிக்கும். ஹாலுக்கு வரேன். பேரன் 5 வருஷத்துக்கு ஒருக்கா 10 நிமிஷம் ரெகார்ட் செஞ்சுக்கராப் போல் செட் பண்ணி வச்சிருக்கான். சோழிய அதோட டப்பாவுலேந்து எடுத்து டீப்பாய் மேலே வச்சுட்டு பொத்தானை அமுக்கரேன். ஆன் ஆனதுக்கு ஓரமா ஒரு நீல க்ளோ தெரியவே சரி இது வேலை செய்யட்டும் நாம விட்டைச் சுத்தி வருவம்னு.

தென்னையில் காய் குலைகுலையா. போனில் தெரிஞ்சவனை கூப்பிட்டா வந்து பறிச்சுப் பொடரேன்னான். 40 காய் மட்டையோட கிடெச்சது. இப்ப எடுத்துக்கலைன்னா எல்லாம் முத்திப்போய் விழும். பக்கத்தாத்து மனுஷணுக்கு அடிக்கும் யோகம். போரச்சே ஓலாவுலே போட்டுண்டு போயிடலாம். பின்னாடி ப்ளாட்டில் புதுசா வீடு கட்டிண்டு ஒரு ஃபேமிலி நெய்வேலீலேந்து வந்திருக்கா. என்னைப் பாத்துட்டு வரா. அவாளொட சித்தே பேசிண்டிருந்தாச்சு. அப்பரம் வெளீலே வந்து பக்கத்தாத்து மாமாவாத்துக்குள் நுழையரேன்.

பாத்துட்டு “வாங்கோ!”. அவாத்து மாமியும். எல்லாரும் சௌக்கியமா? விசாரிச்சாரது. “தேங்காய் பறிச்சேள் போலேருக்கு?” எல்லாத்தையும் கவனிச்சுண்டுதான் இருக்கர். எனக்கு 4 தாங்கோன்னு கேப்பரோ, இல்லை கேக்காமலேயே இவள் தந்துட்டு போவள்னு நம்பிக்கையோ? நான் இல்லாதப்போ விழறதை எடுத்துண்டியே அப்ப ஏதாவது சொன்னேனா? கேக்கத் தோணித்து. “என்ன விஷயமா வந்தேள்? குடிக்கு ஆள் கிடெச்சுட்டாளா?” “இல்லை, சும்மாத்தான், வந்து ஜென்னலை தொறந்து வச்சிண்டு சித்த நாழி நின்னா காத்தோட்டமாகுமே! அதுக்குத்தான். பூச்சிபொட்டு அண்டிடும்”. “ஆத்துலே அழைச்சிண்டு வரலையா?” “அவர் எதுக்கு? எங்காத்து மாமா எப்பவும் பிஸி. எங்கேயோ ஃபாரீன் ட்ரிப்புன்னு மும்முரமா இருக்கர்”. சும்மாத்துக்கும் சொல்லி வச்சேன். அப்பத்தான் இவா ஸ்டேண்டர்ட் வேறன்னு புரியும்.

“காபி சாப்டரேளா?” வேண்டாம்னு நாஸுக்கா சொன்னேன். நாஸுக்கான்ன எப்படி? “இப்பெல்லாம் காபிய விட்டாச்சு. ஃப்ரெஷ் ஃப்ரூட் ஜ்யூஸ்தான்”. இவாத்தில் அதுக்கெல்லாம் வசதி இருக்காதுன்னு தெரியும். வாயடைச்சுப் போவா. திரும்ப ஆத்துக்குள் வந்து கையில் வாட்ச்சை பாக்கரேன். 45 நிமிஷம் ஆகியிருக்கு. இன்னும் கால்மணிநேரம். உள்ளே போய் சும்மாவானுக்கும் கேஸ் அடுப்பை மூட்டி சிலண்டரில் கேஸ் இருக்கான்னும் அடுப்பு எரியரதான்னும் செக் பண்ணிட்டு அணைச்சுடரேன். கூடவே கொண்டு வந்த பிஸ்லேரி ஒரு சிப். ரெண்டு முடக்கு குடிக்கரதுதானேன்னா இல்லை. சிப் தான். சட்டுன்னு மூடியத் திருகி டைட்டா மூடியாச்சு. இது என் பெர்சொனல் வாட்டர் பாட்டில். பாண்டி பஜாரில் வாங்கி அதில் பிஸ்லேரி ரொப்பி. ஃப்ளாஸ்க் மாதிரி இருக்கும், உள்ளே என்னத்தை வச்சிண்டு சிப் செய்யரேன்னு யாருக்கும் தெரியாது. எல்லாத்தையும் விட ஜம்பமா இருக்கும்.

எல்லாம் முடிஞ்சு சோழியை ஆஃப் செஞ்சு பத்திரமா வச்சிண்டேன். ஜன்னலை சாத்திட்டு வாசக் கதவையும் பூட்டிண்டு ஓலா கூப்டாச்சு. தேங்காய எடுத்து டிக்கீலே போட்டுண்டு அண்ணா நகர் வந்தாச்சு. சல்லுன்னு ஏஸியப் போட்டுண்டு சித்தே படுத்துக் கிடந்துட்டு சாவகாசமா லேப்டாப்பை எடுத்து ரெகார்ட் செஞ்சதை ட்ரேன்ஸ்ஃபர் செஞ்சாரது. பேராண்டி சொல்லித் தந்திருக்கான்! நன்னா சாஞ்சிண்டு ப்ளே பட்டனை அமுக்கிட்டு காதில் மாட்டிண்டேன்.

மொதல்ல ஹிஸ் சத்தம், சாவிய டைனிங்க் டேபிளில் வச்சது, சித்தே கழிச்சு தேங்காய் பறிக்கரவனுக்கு போன் பேசினது, கொல்லப் பக்கத்தாத்து மாமி குசலம் விசாரிப்பதெல்லாம். அப்பரம் 5வருஷம் பின்னோக்கி போயாச்சு. அப்ப நாராயணன் குடியிருந்தரே! அவாத்தில் என்னமோ பெசிக்கரா. மாமி மாமாவை விளாசிங்ண்டிருக்கா. ஏன்னா மாமி பெசரப்போ சத்தமாவும் மாமா பதில் சொல்ரச்சே சன்னமாவும் ரெகார்ட், அதாவது மாமி அப்போ பேசினது இப்பவும் காட்டமா ரூமுக்குள் எதிரொலிச்சிண்டு. இன்னும் 5 வருஷம் கழிச்சு வந்து ரெகார்ட் செஞ்சாலும் மாமி குரல் மட்டுமாவது கேக்கும், மாமா குரல் மங்கிப் போயிடும். அவாத்து மேட்டர் நமெக்கெதுக்கு?. பேரனிடம் சொல்லி டிலீட் செஞ்சுடலாம்.

அடுத்த 5 இப்படியே சுவாரஸ்யமில்லாம, குடி இருந்த மனுஷாத்தான். யாரோ குழந்தை உக்காந்து மனப்பாடம் பண்ணின்டு, உள்ளேந்து மாமி ஸ்லோகம் படிக்கரா. படிக்கரதை நிறுத்திட்டு “சத்தம் போடாம பூஜை செய்யப் பிடாதா? இவள் கேப்பதும், அதுக்கு உள்ளேந்து “இதையும் ஒரு காதில் வாங்கிண்டே படி! நல்ல மார்க் கிட்டும்.”

அப்படியே இன்னும் 10 வருஷம் பின்னாடி, இன்னித் தேதீலேந்து ரெம்பப் பின்னாடி போயாச்சு.

நிசப்தம். வால்யூமை அதிகப் படுத்திக்கரேன். ஏன்னா அப்ப அம்மா அப்பா உயிரோட இருக்கா. இதைத்தானே கேக்கணும்னு போனது! அவா குரலை திரும்ப ஸ்பரிசிச்சுக்க அபூர்வமா பேரப் பயல் ஏற்பாடு செஞ்சு தந்திருக்கான். காதில் விழுந்தா இவாதாண்டா உன் கொள்ளுப் பேரன்ட்ஸ்னு காமிச்சுத் தரலாம். ஆர்வமா நிமுந்து உக்காந்துக்கரேன். ரெகார்ட் ஆனது எல்லாத்தையும் அக்ஷரம் விடாம கேக்கணும். கூடவே ஓரு பதட்டமும் சேர்ந்துட.

மொதல்ல பெசரது அப்பாதான். “ஏண்டி குழந்தை லெட்டர் போட்ருக்கா பாத்தியா? அதுக்கு அம்மா, “பாத்தேன். பெங்களூரில் இருக்கா, இந்தூருக்கே மாத்தல் வரப்போரதுன்னும் வந்ததும் தங்கிக்க அண்ணா நகரில் ஒரு அப்பார்ட்மென்ட் புக் செஞ்சுட்டாளாம்”. “இப்ப இருக்கும் கேகே நகர் வீட்டில் இருக்கப் பிடாதா? இன்னொண்ணு எதுக்கு? கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஏன் முடக்கணும்? பேங்கில் போட்டா ஆபத்து சம்பத்துக்கு உதவுமே?” “ஏன் நமக்கு உடம்புக்கு வந்தா பயன்படும்னு நினைக்கரேளா?” “போடீ அசடு! எனக்கு உடம்புக்கு வந்தா மாப்பிள்ளை சிலவு செய்யணும்னா நினைப்பேன்? ரெண்டு வீடு ஒரே ஊரில் எதுக்குன்னு பட்டது. போட்டம் அவாவா இஷ்டம்!”

“லெட்டரை முழுசா படிச்சேளா?” “முழுசான்னா? 2 பக்கம் இருந்தது.” “இல்லை மூணு இருந்ததே. கவரை சரியா பிரிச்சு எடுக்கலையா?” “ அதில் என்ன எழுதியிருக்கா, காமி”. “இப்ப வாங்கரத்துக்கு ஆனமுட்டும் கையிருப்பை கூட்டிப் பாத்தா ஒரு 23 கம்மியா இருக்காம். நம்பளால் தர முடியுமான்னு கேட்டிருக்கா”. “நாமளா? திரும்பவுமா? அதான் கேகே நகர் அப்பார்ட்மென்டுக்கு 30 தந்தமே. இன்னுமா எதிர்பாக்கரா?” “அப்படித்தான் போலேருக்கு”. மௌனம்.

“அதுசரி, எப்படி சாத்தியம், நமக்குன்னு இருப்பது அந்த ஃபிக்ஸட்தானே, 35 தேறும். ரெம்ப நாளா காசிக்கு போணம்னு ஆசப்பட்டுண்டு. எல்லாரும் எங்கெல்லாமோ போரா உன்னையும் சிங்கப்பூருக்காவது அழைச்சிண்டு போய் ஒரு வெளி நாடாவது காமிச்சுடணும்னு ஆசைடீ. அதுக்கு வச்சிருப்பதை எப்படி தூக்கித் தர?” “என்னமோ குழந்தை கேட்டுட்டா. இன்வெஸ்ட்மென்ட் தானே. இப்ப வாங்கிப் போடலைன்னா ரேட் ஏறிடும்னு பயப்படரா. சென்னைக்கு வந்தா அதில்தான் இருப்பளாம். ரெம்ப நன்னா இருக்காம். போனில் சொன்னா”. “பாரு அப்பாவுக்கு சொல்லாம உன் காத கடிச்சிருக்கா. யோசிப்பம், அவசரப்படேண்டாம்”. “லெட்டர் வந்து 8நா ஆச்சு. இன்னும் 1 வாரத்தில் சொச்ச பணத்தை கட்டணுமாம். குடுக்கரதை டயத்துக்கு கொடுத்தா நல்லதுன்னு படரது” “அப்ப காசி? சிங்கப்பூர்?. ஜீவனம் எப்படி?”

மௌனம். என்னாச்சு ரெகார்ட் ஆலையொ? சட்டுன்னு அப்பா வாயிஸ், “அனுப்பிச்சுடலாம்”.

இது முடிஞ்சு இன்னும் 5 வருஷம் பின்னாடி போய் எங்காத்தில் எதிரொலிக்கும் குரல்கள் காதில். ஆனா மனசு லயிக்கல. எனக்காக என் அப்பா அம்மா எத்தனை விஷயங்களை தியாகம் செஞ்சு, தங்களுக்குன்னு ஆசைப்பட்டதை ஒண்ணுகூட செஞ்சுக்காம என் ஆடம்பர பிரியத்துக்கும் படோடாபமான பையித்திக்கார வாழ்க்கைக்கும் ஜம்பமா பீத்திக்க, மூட்டை மூட்டையா சேர்ந்து வச்சுக்கரத்துக்கும்னே அள்ளித் தந்துட்டு போயிருக்கான்னு நன்னாவே புரிஞ்சது.

என்னை அவா குழந்தைன்னு கூப்பிட்டிருந்தப்போ, நான் அந்த காசு கேட்டு லெட்டர் போட்டப்போ எனக்கே 42 ஆகியிருந்ததும் நினைச்சிண்டப்போ மனசில் ரெம்பவே வலிச்சது.

No comments:

Post a Comment