மலை நாட்டுத்திருப்பதிகள் (கேரள வைணவ திருத்தலங்கள்).(By சுஜாதா&வெங்கடேசன்)பகுதி 11(6381369319)
திருவனந்தபுரம் தந்த பிரமிப்பிலிருந்து ஆன்மீக அனுபவத்திலிருந்து வெளிவர முடியல. மூன்று திவ்யதேசம் முடிஞ்சுடுத்து அடுத்து எங்கேன்னு இவர கேக்கறோம். தன் சின்ன வயசில் எங்க மாமனார் தன்னோட தாத்தாவோட (1920 களில்)ஷேத்ராடனம் போன வர்க்கலா பற்றியும் தாத்தாவுடன் ஊட்டுப்பிறை என்னும் பிராமண இலவச போஜனம் சாப்பிட்டது பற்றியும் 15 ரூபாய் ட்ரெயின் டிக்கட் வாங்கினா இந்தியா பூரா எந்த ட்ரெய்னில் வேண்டுமானாலும் ஏறி இறங்கலாம்னு சொன்னதை நினைவு கூர்ந்து 100 வருஷம் முன்னாடி கொள்ளுத்தாத்தா கஷ்டப்பட்டு போன இடம் போற வழிலதான் நாமும் போகலாம்கிறார்.
வர்க்கலா...திவ்ய தேசம் இல்லை ஆனாலும் புராண ஸ்தலம் 19 ல் ஒன்று. நல்ல வேளையாக ஒரு ஏசி பஸ் வர்றது. அழகான இயற்கை காட்சிய பார்த்து ரசிச்சிண்டே பிரயாணம் பண்றோம்.
திருவனந்தபுரத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கிறது வர்கலா ஸ்ரீஜனார்த்தன சுவாமி கோயில். திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவ பெருமாள்,திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபா சுவாமி, வர்க்கலை ஸ்ரீ ஜனார்த்தன சுவாமி இவர்கள் மூவரும் சகோதரர்கள். ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் பெரிய சகோதரர், இவருடைய தம்பி ஸ்ரீ பத்மநாபசுவாமி. இளையவர்தான் வர்க்கலை ஸ்ரீஜனார்த்தன சுவாமி. சகோதரர்கள் மூவரின் கண்களும் ஒரே அமைப்பில்உள்ளது ..
ஊர்ல எறங்க முடியாம மழை கொட்டோ கொட்டுனு கொட்டறது. பசி வேற. கரண்ட் போய் கும்மிருட்டு ..ஓடிப்போய் ஒரு ஓட்டலுக்கு உள்ளே போறோம். அப்பறம்தான் தெரியறது அங்க அசைவமும் உண்டுன்னு..இவர்போய் எதிர ஒரு லாட்ஜ்ல ரூம் போடறார். எங்கேயோ போய் மழைக்கு சூடா பஜ்ஜி வாங்கிண்டு வரார்.
மழை நிக்கற வரைக்கும் இவர் சொல்ற கோயில் கதைய கேப்போம்.
நாரத முனிவரானவர் பாவ காரியங்களில் ஈடுபட்டு அதிலிருந்து விடுபடுவதற்காக தன்னை வணங்கிய பக்தர்களுக்காக தனது மரவுரியை கழற்றி எறிந்ததாகவும் அது மண்ணுலகில் விழுந்த இடத்தில் பிரார்த்திக்குமாறு சொன்னதாகவும் கூறப்படுகிறது.
‘வல்கலம்' எனும் சொல்லுக்கு மரவுரி என்பது பொருளாகும், எனவே நாரத முனிவரின் மரவுரி வந்து விழுந்த இந்த இடம் வர்கலா என்று அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
பாண்டிய மன்னரின் பிரம்ஹத்தி தோஷம் நீங்கிய இடம் பாண்டிய மன்னர் ஒருவருக்கு பல பிரச்சினைகள் உண்டானது. எதனால் தனக்கு இத்தனை இன்னல்கள் என்று பிரசனம் பார்த்த போது, “உங்களை பிரம்ஹத்தி தோஷம் பிடித்திருக்கிறது. பொதுவாக அரசர்கள், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கும்போது அந்த அரசர்களுக்கு இப்படி ஒரு தோஷம் ஏற்படும். அதனால் நீங்கள் பல திருதலங்களுக்கு திருப்பணி செய்தும் யாத்திரை சென்றும் உங்கள் பாவத்தை போக்கிக் கொள்ளுங்கள்” என்று பிரசனத்தில் கூறப்பட்டது. பாண்டிய மன்னரும் பல ஆலயங்களுக்கு தன் பரிவாரங்களுடன் சென்றார். திருப்பணிகளை செய்து வந்தார். வர்கலா கடற்கரை பகுதிக்கு வந்த போது, அவர் மனதில் ஏதோ ஒரு புத்துணர்ச்சியும், அமைதியும் மகிழ்ச்சியும் உண்டானது. மன்னரின் மனதில் இருந்த பாரம் விலகியது போல் இருந்தது. இந்த இடத்திற்கு ஏதோ ஒரு தெய்வசக்தி இருப்பதை உணர்ந்தார் அரசர். அதனால் அன்றைய பொழுதை அங்கேயே கழித்தார். அன்றிரவு பாண்டிய மன்னரின் கனவில் ஸ்ரீஜனார்த்தன சுவாமி தோன்றி, “கடலின் மேல் பூக்கள் மிதக்கும். அந்த இடத்தில் என் விக்கிரகம் இருக்கிறது. அந்த விக்கிரகத்தை எடுத்து, எனக்கு இந்த ஊரில் ஆலயத்தை கட்டு.” என்றார் ஸ்ரீஜனார்த்தன சுவாமி. கனவில் இறைவன் சொன்னது போல தன்னுடன் இருந்த பணியாளர்களிடம் கூறி மறுநாளே கடலை நோக்கி சென்று பார்த்தார். கனவில் இறைவன் கூறியது போல் கடலில் ஒரு பகுதியில் மலர்கள் மிதந்தது. அந்த இடத்தில் நீச்சல் வீரர்களை அனுப்பி விக்கிரகம் ஏதேனும் இருக்கிறதா என்று தேட சொன்னார் மன்னர். இறைவன் கூறியது போல் ஸ்ரீஜனார்த்தன சுவாமியின சிலை கிடைத்தது. அந்த சிலையை எடுத்து கரைக்கு வந்து வர்கலா என்கிற அந்த இடத்தில் அழகிய ஆலயம் கட்டினார் பாண்டியமன்னர்.
ஒருநாள் அரபிக்கடலில் சிக்கிக் கொண்டு நகர முடியாமல் கப்பல் ஒன்று திணறியது. “புயலும் இல்லை மழையும் இல்லை. ஆனால் கப்பல் நகர மறுக்கிறதே.. இனி என்ன செய்வது.?” என்று தெரியாமல் பதறினார் அந்த கப்பலின் டச்சுக் கேப்டன். அப்போது அந்த கப்பலில் பயணம் செய்த ஒருவர், “இந்த கடற்கரையின் அருகில்தான் ஸ்ரீஜனார்தன சுவாமி கோயில் இருக்கிறது. நாம் ஸ்ரீஜனார்த்தன சுவாமியை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. நிச்சயம் அவர் நம்மை காப்பாற்றுவார்” என்றார். “ஆபத்தில் இருக்கும் போது தவளை கத்துவதும் பல்லியின் குரலும் இந்தியர்களாகிய உங்களுக்கு அருள்வாக்காகதான் இருக்கும்.” என்று கிண்டல் செய்தான் அந்த கப்பலில் இருந்த ஒருவன். ஆனாலும் இந்த ஆபத்தில் இருந்து தப்பினால் போதும் என்று அந்த டச்சுக்காரரான கப்பல் கேப்டன், ஸ்ரீஜனாதர்தன சுவாமியை நம்பினார். நம்பிக்கையுடன் வேண்டினார். ஆச்சரியம் நிகழ்ந்தது. நகர முடியாமல் அரபிக்கடலில் சிக்கி கொண்டு போராடிய கப்பல், அடுத்த நிமிடமே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இயல்பு நிலைக்கு வந்தது. ஆச்சரியப்பட்டார் கேப்டன். பாதுகாப்பாக துறைமுகம் வந்து சேர்ந்ததும், ஸ்ரீஜனார்த்தன சுவாமியை தரிசித்து, இந்த கோயிலுக்கு ஒரு பெரியமணியை காணிக்கையாக தந்தார். அந்த கேப்டன் தந்த பெரியமணி மூலஸ்தானத்தின் அருகில் கட்டி பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் உள்ள ஜனார்தனசுவாமி சிலை கிழக்கு திசை நோக்கி இருக்கிறது.இச்சிலையின் வலது கை வாயை நோக்கிச் செல்லும் படி அமைக்கப்பட்டிருக்கிறது. வலக்கையானது வாயைச் சென்று அடையும் போது கலியுகம் முடிவுக்கு வரும் என்பது ஐதீகம்
இங்குள்ள மூலவருக்கு ஆண்டுதோறும் கிருஷ்ணாஷ்டமி நாளில், தங்கத்தாலான அங்கி சார்த்தப்படுகிறது
இந்தக் கோவிலின் எதிர்புறத்தில் விஷ்ணு சக்கரத்தைக் கொண்டு உருவாக்கியதாகக் கருதப்படும் ‘சக்கர தீர்த்தம்’ எனும் பெரிய குளம் ஒன்று இருக்கிறது.அங்கு கோயில் உள்ள மலையில் உண்டாகும் சுனை நீர் சிங்கத்தின் (சிற்பம்)வாயிலிருந்து கொட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளது.
தூரத்தில் நாம் வரும்போதே அரபிக்கடல் பாடும் சத்தம் கேட்கும். அமைதியான கடலிலிருந்து மெல்ல எழுந்து வந்து வெண்நுரைகளுடன் கரையைத் தழுவிச் செல்லும் அலைகள், கடற்கரையை ஒட்டி மலைகளின் பின்னணியில் செம்மண் நிறத்தில் சாய்ந்த குன்றுகள், கடலுக்குப் போட்டியாக நீலநிற வானம் என்று இயற்கை வரப்பிரசாதங்க ஏராளம்.
வர்கலா கடற்கரையில் பாராசூட் குதிப்பு, படகுப் பாராசூட் சவாரி போன்ற சாகச பொழுதுபோக்கு அம்சங்களிலும் பயணிகள் ஈடுபடலாம்.
கேரளாவில் கடலுக்கு வெகு அருகிலேயே மலைகள் காட்சியளிக்கும் ஒரே இடம் இது. அரபிக்கடலுக்கு அருகிலேயே உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள் இந்நகரின் தனித்தன்மையான அடையாளமாக பிரசித்தி பெற்றுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் இந்த வித்தியாசமான புவியியல் அமைப்புக்கு வர்கலா அமைப்பு என்றே பெயரிட்டுள்ளது. பத்து அழகான கடற்கரைகளுள் ஒன்றாக இந்த வர்கலா கடற்கரையை டிஸ்கவரி சானல் தொலைக்காட்சி மதிப்பிட்டுள்ளது.
ஏராளமான கேரள ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள் பொழுது போக்கு பூங்காக்கள் என நிறைந்து கோயில் பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளது.
மருத்துவ குணம் கொண்ட இந்தக் கடற்கரையில் முழுக்குப் போடுவது உடலின் அசுத்தங்களையும் ஆன்மாவின் அனைத்துப் பாவங்களையும் தீர்ப்பதாக நம்பப்ப்படுகிறது.
ஆனாலும் இன்று இது உல்லாச பொருது போக்கு திறந்த விடுதியாக மாறி கோவாவுக்கு நிகராக வெளிநாட்டவர்களும் காதலர்களும் குவிந்து பாவங்களின் கூடாரமாக மாறி வருவது வேதனையே!
தரிசனம் முடிந்து அடுத்த ஊர் பற்றி திட்டம் போடறார். எதோ மேப்பை பார்த்துட்டு இங்க தங்க வேண்டாம்..ராத்திரி வர்க்கலா ஸ்டேஷன்ல ட்ரெய்ன் ஏறி குட்டீபுரம் போகலாம்கிறார்.ஓபன் டிக்கட் வாங்கிண்டு வெய்ட் பண்றோம்.. ட்ரெய்ன் வரது. பயங்கர கூட்டம். வயசான அப்பாவை அழைச்சிண்டு இப்படி பிளான் பண்ணாம போலாமான்னு கத்தறேன்.
அதெல்லாம் அப்புறம் ட்ரெய்னல ஏறுன்னு கூட்டத்துல ஏத்தி விடறார். அப்பாவோட ஒரு செருப்பு தண்டவாளத்துல விழுந்துடுறது.ஏறின அப்பா மறுபடியும் எறங்க பார்க்கறார். இவரோ கோபத்துல என்னை முறைக்கிறார்
படங்கள் (கோயில் காட்சிகள் மற்றும் வர்க்கலா பீச்)
தொடர்வது
திருநாவாய் திவ்ய தேசம்






No comments:
Post a Comment