Tuesday, December 19, 2023

வசந்தகாலம் வருமோ?-46

 வசந்தகாலம் வருமோ?-46

By N Krishnamurthy 

நாட்கள் ஓடின. அடுத்த வருடம் ஜனவரி இருபத்தைந்தாம் தேதி வசுமதி கல்யாணம் நிச்சயமாகியிருந்தது.

நடுவில் ஒருமுறை மதுரையிலிருந்து மூவரும் வந்திருந்து பத்திரிக்கை கொடுத்து சக்ரவர்த்தி,கோமளா,சாரங்கன், மைதிலி, ம்ருதுளாவை அழைத்து விட்டு போனார்கள். 

டிசம்பர் மூன்றாம் தேதியே சக்ரவர்த்தியும், கோமளாவும் மதுரைக்கு போனார்கள். பொங்கலுக்கு முன் சாரங்கன், தானும்  மைதிலி, ம்ருதுளாவும், வசுமதி  கல்யாணத்திற்கு மதுரை செல்ல ஏற்பாடு பண்ணியிருந்தான். 

டிசம்பரில் சங்கீத சீசன் களை கட்ட தொடங்கியது. ம்யூசிக் அகேடமியில், ம்ருதுளாவை சப் - சீனியர் லெவலுக்கு உயர்த்தி ,ஒரு சனிக்கிழமை 1:30-3 மணி ஸ்லாட் தந்திருந்தார்கள்.

இதைத்தவிர மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ்,R.R சபா,பார்த்தசாரதி கான சபா, க்ருஷ்ண கான சாபாவிலும் பாட அழைத்து, தேதியும் பிக்ஸ் செய்திருந்தார்கள்.

ம்யூசிக் அகேடமிகச்சேரி தான் ம்ருதுளாவின்  அந்த சீசனின் முதல் கச்சேரியாக அமைந்தது.  குத்தாலம் ராமனாத ஐயர் ம்ருதங்கமும், வயலினில் அப்போது விரைவாக வளர்ந்து கொண்டிருக்கும் இளம் வித்வான் விக்னேஷும் பக்கவாத்யம் வாசிக்க ஏற்பாடாகியிருந்தது.

சனிக்கிழமை காலை வசுமதி, ம்ருதுளாவை போனில் கூப்பிட்டு 'ஆல் தி பெஸ்ட்' சொன்னாள்.

சாரங்கன், ம்ருதுளா மற்றும் மைதிலி மியூசிக் அகாடமிக்கு டாக்ஸி வைத்துக் கொண்டு ஒரு மணிக்கு போய் இறங்கினார்கள்.

சுப்புலக்ஷ்மியும்,ராதிகாவும் ஏற்கனவே வந்திருந்தார்கள். ஸ்டேஜ் அடுத்துள்ள ரூமுக்கு செல்ல எத்தனிக்கையில், எதிர் புறத்திலிருந்து ராஜேஸ்வரியும், சங்கர க்ருஷ்ணனும் வந்தார்கள். ராஜேஸ்வரி சாரங்கனையும், மைதிலியையும் பார்த்து "என்ன, சௌக்கியமா இருக்கேளா" என்று கேட்டாள். பின்பு ம்ருதுளாவிடம் "இதான் நோக்கு இந்த சீசனில் முதல் கச்சேரி போல இருக்கு" என்றாள். "ஆமாம், மாமி" என்றாள்  ம்ருதுளா. " நீங்க எப்போ அமெரிக்காவிலேந்து வந்தேள்"  என்று கேட்டாள்  மைதிலி .

" நாங்க வந்து மூணு நாள் ஆச்சு" என்றாள் ராஜேஸ்வரி." உங்க பையன் எங்கெல்லாம் பாட  போறார்"  என்று கேட்டாள் மைதிலி. "மியூசிக் அகேடமி,அப்றம்  இன்னும் இரண்டு சபாவுல ஃபிக்ஸ் ஆயிருக்கு. மீதி இரண்டு சபாவுல பாத்துட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கா" என்றாள் ராஜேஸ்வரி.

பின்பு ராஜேஸ்வரி சுப்புலக்ஷ்மியையும், ராதிகாவையும் குசலம் விஜாரித்தாள். சங்கர க்ருஷ்ணன் ம்ருதுளாவை பார்த்து" Hey, very nice to see you after a long gap.Wish you all the best for today's performence" என்று கூறினான்." Thank you so much" என்றாள்  ம்ருதுளா. சங்கர க்ருஷ்ணனை பார்த்ததும்,பேசியதும் தனக்குள் இனந்தெரிய மெல்லிய சந்தோஷத்தை ஏற்படுத்தியதை ம்ருதுளா உணர்ந்தாள்.

சரியாக 1.28 க்கு  , மணி  அடித்ததும் திரை விலகியது. எட்டாவது ரோவின் கடைசி சீட்டில் சுப்புடு உட்கார்ந்து கொண்டு கச்சேரி ஆரம்பிக்கப்போவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார்.

அன்று முதலில் ம்ருதுளா" சகல கலா வாணி"என்ற  ஹிந்தோள ராக வர்ணத்துடன் கச்சேரியை துவக்கினாள். ஆதி தாள  வர்ணம் வழக்கம் போல விறுவிறுப்பாக இருந்தது. அடுத்ததாக "ஜெயந்தி ஸ்ரீ" யில் "மருகேலராவும்"'காப்பி நாராயணி'யில் "சரச சாமதான" வும்பாடினாள்.

பின்னர் ம்ருதுளா பாடிய காம்போ(ஜி)தி தான் அன்றைய கச்சேரியின் சிகரமாக அமைந்தது. பதினைந்து நிமிட ராக ஆலாபனை முடிந்து வயிலின்  காம்போதியின் பல்வேறு பரிமாணங்களை

(Shades) வெளிப்படுத்தியபோது, ரசிகர்கள் ம்ருதுளா பாடப்போவது  தியாகய்யரின் "ஓ.ரங்கசாயி" யா,

"எவரி மாட"வா,

ஊத்துகாடு வெங்கட சுப்பய்யரின்

'குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட" வா அல்லது தீக்ஷதரின் "ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே" வா அல்லது

"மரகத வல்லிம்" பாடலா,

 சிவனின்  "காண கண்கோடி வேண்டும்" பாடலா என்று அருகிலிருந்தவர்களுடன் சிறு குரலில் விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

வயலின் வாசிப்பு  முடிந்து ம்ருதுளா பாட ஆரம்பிக்கும் வரையிலுள்ள ஒரு நிமிட இடைவெளி பலருக்கு சஸ்பென்சாக இருந்தது. 

ம்ருதுளா தீக்ஷதரின் "கண்டஜாதி அட தாளத்தில் " அமைந்த, நவாவர்ண கீர்த்தனையான " கமலாம்பிகாயை நமஸ்தே" பாடலை ஆரம்பித்தவுடன் பல ரசிகர்கள் மனம் மகிழ்ந்தார்கள். சிலர் தீக்ஷதிரின் இந்த கீர்த்தனையை ம்ருதுளா பாடிய விதத்தை கேட்டு உன்மத்தம் பிடித்தவர்களானார்கள். ம்ருதுளா காம்போதியில் கல்பனா ஸ்வரங்களை " இந்தா பிடித்துக்கொள்" என்று அள்ளி அள்ளி  வீசியபோது, அவளது விஸ்தாரமான  ஸ்வரப்பிரஸ்தாரத்தை கண்டு(கேட்டு?) ரசிகர்கள் உணர்ச்சிப்பெருக்கால் உருகினார்கள்.    விக்னேஷும் வயலினில் சரிக்கு சரி பதில் கொடுத்தது கச்சேரியின் அழகை கூட்டியது. பாடல் முடிந்ததும் சபை முழுவதும் எழுந்து நின்று Standing ovation கொடுத்தது கண் கொள்ளா காட்சியாக அமைந்தது. காம்போதியை  தொடர்ந்து சிவனின்

" ஸ்ரீ வள்ளி  தேவ சேனாபதே" வை நடபைரவியிலும், பிருந்தாவன சாரங்காவில் "ரங்கபுர விஹாரா வையும்" பாடி அசத்தினாள் ம்ருதுளா.யாரும் எதிர்பார வண்ணம் தஞ்சாவூர் சங்கர அய்யரின் ராகமாலிகை பாடலான "ரஞ்சனி மாலாவை" பாடினாள் ம்ருதுளா. மணி மூன்றை நெருங்கும் போது "பவமான " வுடன் மங்களம் பாடி முடித்தாள்.

கீழே இறங்கி வந்ததும், முதலில் சங்கர க்ருஷ்ணன் அவளிடம் வந்து," Hey,that kambodi was divine. I wish i could learn that song from you. Your rendering was as beautiful as you are" என்றான்.

இந்த புகழுரையை கேட்ட ம்ருதுளா கன்னம் சிவந்தாள்.

----------------------------------------------------------

கர்நாடக சங்கீதத்தை மேம்படுத்த, அந்த லோகமாதா நமக்கெல்லாம் கொடுத்த அருட்கொடை முத்துசாமி தீக்ஷதர்வாள். அவரின் எல்லா கீர்த்தைனைகளும் மிக அருமையாக இருந்தாலும், Best among the Best என்றால் அவை அவரது நவாவர்ண கீர்த்தனைகள் தாம். ஸ்ரீவித்யா உபாசகரான தீக்ஷதர்வாள் இந்த  கீர்த்தனைகளால் அந்த பரமேஸ்வரியை பற்றி நாமெல்லாம் அறிந்து கொள்ள உதவியுள்ளார்.

மேலே குறிப்பிட்ட பாடல் நான்காவது ஆவர்ணம்.

ஆவர்ணங்கள் சக்கர விவரங்களை தருகின்றன.நான்காவது ஆவர்ணம் துரியாவர்ணம் மற்றும் சதுர்தசரம் என்று அழைக்கப்படுகிறது.

சக்கரம் "சர்வ சௌபாக்ய தாயக

சக்ரமாகும்". இதில் பதினான்கு முக்கோணங்கள் உள்ளன. இவற்றுள் ஐந்து கீழ் நோக்கிய முக்கோணங்கள் சக்தியையும், நான்கு  மேல் நோக்கிய முக்கோணங்கள் சிவனையும் குறிக்கின்றன. இதை காக்கும் யோகினி "சம்ப்ரதாய யோகினி" ஆவாள். இவள் அம்பாளை உபாசிக்கும் அனைவருக்கும் சகல சௌபாக்யங்களையும் தருகிறாள். கண்ட ஜாதி அடதாளத்திலும் பதினான்கு நோட்ஸ்கள்(சதுர் தசம்) உள்ளது கவனிக்கத்தக்கது.

தீக்ஷதர்வாள் எழுதிய இப்பாடலின் தமிழாக்கத்தை ஏதோ நான் அறிந்த வரையில்  கொடுத்துள்ளேன்.ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்கவும்.

"ஒ கமலாம்பா. மீண்டும் உனக்கு என் நமஸ்காரம். பொன் அங்கியை (கன ஆசுகாயை) தரித்துக்கொண்டிருக்கிறாய். கற்பூரம் கலந்த வெற்றிலையை மெல்பவள் நீ.   

மலைமகளான நீ யாருக்கும் ஜனித்தவள் இல்லை.ஹரியின் தங்கை நீ. ஹ்ரீம் என்ற ஒலியுடன் வழிபடப்படுகிறாய்.

கமலா நகரில் (திருவாரூரில்)வாசம் செய்கிறாய்.நேர்மையற்றவர்களை நீ அழிக்கிறாய்.

ரத்ன மாலை அணிந்தவளே.எங்கள் பாவங்களையெல்லாம் போக்குபவளே. காமேஸ்வரியே. உன் தாமரை பாதங்கள் சகல சௌபாக்யங்களையும் அளிக்கிறது. பதினான்கு லோகங்களை ஆளும் நீ *அபர்ணா* என்று அழைக்கப்படுகிறாய். கையில் வில், அம்புடன் உள்ள நீ பதினான்கு சக்ரத்தில் உள்ளாய். அசையும் மற்றும் அசையாத எல்லா நிகழ்வுகளும் நடப்பது உன்னாலே"

தீக்ஷதர் அம்பாளை *அபர்ணா* என்று அழைக்கிறார்.

சிவனைப் பிரியப்படுத்தி அவன் மனதில் இடம்பிடிக்க தேவி   ஆழ்ந்த தவம் மற்றும் தியானத்தில், எல்லா உணவையும்,

ஏன்  உதிர்ந்த இலை ("பர்ணா") யை கூட மறுத்துவிட்டாள். அதனால் அவள் "அபர்ணா".

உதிர்ந்த இலை ("பர்ணா")களால் அமைக்கப்படுவதே பர்ணசாலை.

No comments:

Post a Comment