வசந்த காலம் வருமோ? -47
By N Krishnamurthy
அந்த வாரம் கல்கியில் சுப்புடு சாரின் விமர்சனம் வந்திருந்தது. அவர் எழுதியிருந்தார் "மியூசிக் அகாடமியில் போன வருஷம், முதல் முதலாக ம்ருதுளாவின் பாட்டை கேட்டபோது, இந்த முறையும் கேட்க வேண்டும் என்று எனக்கு ஒரு அவிப்ராயம் இருந்தது. அதனால்தான் இந்தக் கச்சேரிக்கு போனேன். இந்தப் பெண் என்னை ஏமாற்றவில்லை. அபாரமான சங்கீத ஞானம் கொண்டவளாக இருக்கிறாள். இந்த கிழம், அதாவது நான் , இந்த பெண்ணை இவ்வளவு உசத்தியாக பேசுகிறது, இந்த பெண் ஒரு வேளை இவருக்கு உறவோ என்று நினைக்க வேண்டாம் .முதல் கச்சேரி செய்யும் வரை இந்த பெண்ணை நான் பார்த்தது கூட இல்லை. காம்போதி ராக ஆலாபனை முடிந்ததும், இறைவா, இந்த குழந்தை நவாவர்ணம் பாடாமல் இருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டேன். வேறொன்றுமில்லை, அபிமன்யு பத்ம வியூகத்தில் மாட்டிக் கொண்டு வெளிய வர முடியாமல் தவித்தது போல், இந்தக் குழந்தை நவாவர்ண கீர்த்தனையை சரியாக பாட முடியாமல் ஆகிவிடுமோ என்று பயம்தான் காரணம். பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் கூட தீக்ஷதரின் கீர்த்தனைகளை பாடும் போது, ஸ்பெஷலி நவாவர்ண கீர்த்தனையை பாடும்போது மிக ஜாக்கிரதையாக பாடுவார்கள். இந்தப் பெண் அதை அனாசயமாக பாடி இருக்கிறாள். காம்போதியில் இவள் போட்ட ஸ்வரம் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும். கடவுள் இந்தப் பெண்ணுக்கு தீர்க்காயுசை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்று முடித்து இருந்தார்.
சுப்புலக்ஷ்மி போன் செய்து மைதிலியிடம் "சுப்புடு சார் கமண்ட்ஸ் படிச்சாச்சா" என கேட்டாள்." ஆச்சு மாமி.மறுபடியும்,மறுபடியும் சொல்றேன். எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் " என்றாள். அதைக்கேட்ட சுப்புலக்ஷ்மி "திருப்பி திருப்பி அதையே சொல்லிண்டிருக்காதேள். சரியான மண் இருந்தாதான் கொயவன் பண்ற மண்பாண்டம் நண்ணாயிருக்கும். எவ்வளவே பேர் எங்கிட்ட கத்திண்டிருக்கா. ஒரு ம்ருதுளாதான் இப்படி பாடறா" என்று சொல்லிவிட்டு " ம்ருதுக்கு அன்னிக்கே சுத்தி போட்டூட்டேளா.இல்லேன்னா இப்பவே பண்ணுங்கோ " என்றாள். மீண்டும் பேசிய சுப்புலக்ஷ்மி ஒரு பிரபல சங்கீத பிரபல பெண் சங்கீத வித்வானின்பேரை சொல்லி " இவாதான் தீக்ஷதரின் நவா வர்ண கீர்த்தனைல இருக்கற சமஸ்கிருத பதங்களை சரியா உச்சரிக்க ம்ருதுவுக்கு கத்து கொடுத்தவா.நான் அவாகிட்ட டைம் பிக்ஸ் பண்ணிக்கறேன். நீங்க,நான்,ம்ருது மூணு பேரும் அவாள பாக்கணம்.ம்ருது அவாளக்கு நமஸ்காரம் பண்ணி அவா கிட்ட ஆசிர்வாதம் வாங்கட்டம் "என்றாள்.
அந்த சனிக்கிழமை மைதில, ம்ருதுளா சுப்புலக்ஷ்மி ஆகிய மூவரும் அந்தப் பிரபல பெண் சங்கீத வித்வான் வசித்து வந்த அவளது நுங்கம்பாக்கம் வீட்டிற்கு சென்றார்கள். அவர்கள் உள்ளே எழுந்ததும், அவர்கள் வீட்டில் இருந்த பணிப்பெண் அவர்களை உட்கார சொல்லிவிட்டு "அம்மா சாப்பிட்டுட்டு இருக்காங்க. சாப்பிட்டு முடிஞ்ச உடனே வந்துடுவாங்க" என்றாள். ஐந்து நிமிடம் கழித்து அந்த சங்கீத மாமேதை ஹாலில் நுழைந்தார். ம்ருதுளாவை பார்த்து "என்னம்மா குழந்தை, சௌக்கியமா?" என்றாள். பின்பு சுப்புலக்ஷ்மி மைதிலியை, அந்தப் பெண் வித்வானிடம் அறிமுகப்படுத்தினாள். பின்பு ம்ருதுளாவை பார்த்து அந்த சங்கீத மாமேதை" கச்சேரி அட்டகாசமாக இருந்ததுன்னு கேள்விப்பட்டேன்"என்று கூறி விட்டு" எனக்கு எப்படி இது தெரியும்னு கேக்கறாயா" என்று சொல்லி, அங்கிருந்த கல்கியை எடுத்து காண்பித்து" சுப்புடு சார் விமர்சனத்தை படிச்சேன். சுப்புடு சார் சொன்னதக்கப்புறம் அப்பீலே இல்ல. எங்கள போல எக்ஸ்பீரியன்ஸ்ட் வித்வான்களெல்லாமே அவர் நன்னா எழுதணுமேன்னு யோசிச்சுண்டு இருப்போம்"என்று கூறினாள். பின்பு அந்த சங்கீத மேதை " நல்ல பாடகியா முன்னுக்கு வரணம்னா , சங்கீத ஞானம் ஒண்டி இருந்தா போறாது.பயபக்தி இருக்கணும் பெரியவித்துவானா ஆனதுக்கப்புறம் கூட ஒவ்வொரு கச்சேரிக்கும் முன்னாடி "இன்னைக்கு நண்ணா போடணும்னு" பயம் இருக்கணம். பாட்டு மேல ஒரு பக்தி இருக்கணம்.ரெண்டும் இல்லேன்னா கச்சேரி சோபிக்காது' என்று கூறினாள். மீண்டும் அவள் " தீக்ஷதர் கிருதியை இனிமே நீ நிறைய பாடணும்னு தீர்மானம் பண்ணயானா, முதல் வேலையா ஒரு சமஸ்கிருத பண்டிதர பார்த்து சமஸ்கிருதம் கத்துக்கோ. சமஸ்கிருத வார்த்தை உச்சரிப்பு ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு தீக்ஷதர் வாளுடைய கல்யாணி ராக கீர்த்தனையான' பஜரே ரே ஆர்சித்த பாலாம்பிகா வில்" பாவ, ராக, தாள மோதினீ"ன்னு வறது. அந்த "பாவ"த்தை நம்ப தமிழில் சொல்றாப்போல 'பாவ"ம்ன்னு சொன்னா அந்தப் பாவம் நம்மளை தான் வந்து சேரும்" என்று கூறினாள். பின்பு மைதிலி தன்னுடைய பையில் இருந்து ஒரு தட்டை எடுத்து அதில் வாங்கிக் கொண்டு வந்திருந்த புடவை, ரவிக்கை துண்டு, குங்குமம், மஞ்சள், வெற்றிலை,பாக்கு தேங்காய் ஆகியவற்றை வைத்து ம்ருதுளாவிடம் கொடுத்து அந்த சங்கீத வித்துவனுக்கு அதை கொடுத்து நமஸ்காரம் செய்யச்சொன்னாள்.
ம்ருதுளா அவ்விதமே செய்தாள். ம்ருதுளாவின் தோளை தொட்டு தூக்கி அவளை நிறுத்திய அந்த சங்கீத மேதை "ஸ்ரேயஸா இருக்கணும். நிறைய கச்சேரி பாடணும். உன்ன போலவா இருக்கறதால தான் சங்கீதம் நிலைத்து நிக்கறது"என்றாள். பின்பு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்ட மூவரும் வீடு திரும்பினார்கள்.
No comments:
Post a Comment