Monday, December 4, 2023

வசந்த காலம் வருமோ? -32

 வசந்த காலம் வருமோ? -32

By N Krishnamurthy 

சுப்புலக்ஷ்மி, மைதிலி ம்ருதுளா ஆகிய மூவரும் ஒரு ஆட்டோவை பிடித்து,

 டி. நகரில் உள்ள வாணி மகாலுக்கு  பயணித்தார்கள். மூன்றே முக்காலுக்கு வாணி மஹாலை ஆட்டோ  அடைந்தது.

ஆட்டோவிலிருந்து இறங்கும் போது, இவர்களுக்காகவே காத்திருந்த  ராஜேஸ்வரி  இவர்களை அழைத்துக் கொண்டு போய் முதல் வரிசையில் அமர்த்தி விட்டு, தானும் ம்ருதுளாவின்  பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். சரியாக நாலு மணிக்கு திரை விலகி,கச்சேரி ஆரம்பித்தது. சங்கர க்ருஷ்ணன் குரல் அவ்வளவு சன்னமாக இல்லாமல், ஆண்களுக்கே உரிய மாதிரி சிறிது கரகரப்பாக இருந்தது. பேகடாவில் தீக்ஷதரின் "வல்லப நாயகஸ்ய" பாடலுடன் கச்சேரியை ஆரம்பித்தான் சங்கர க்ருஷ்ணன். ம்ருதங்கம் மற்றும் வயலின் வாசித்தவர்கள் அவனுடன் அமெரிக்காவிலிருந்து வந்தவர்களாக இருந்தார்கள்.பின்பு இரண்டு  சிறு கீர்த்தனைகளை பாடியவன் கரகரப்பிரியாவை மெயின் ராகமாக எடுத்துக்கொண்டு, ஆலாபனை செய்த பின், பாபநாசம் சிவன் அவர்களின் "செந்தில் ஆண்டவன் என்ற பாடலை" விஸ்தாரமாக பாடினான்.

"வேலன் வள்ளி தெய்வானை லோலன்" என்ற இடத்தில் நிரவல் செய்து,ஸ்வரம் பாடினான்.

தன் மகன் பாடும் பொழுது, அருகில் அமர்ந்த ம்ருதுளாவின் முகபாவத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி. சங்கர க்ருஷ்ணன் ஸ்வரம் பாடும்போது ஒரிடத்தில், தன்னை மறந்து மெல்லிய குரலில் ம்ருதுளா "சபாஷ்"  என்று  கூறியபோது, ராஜேஸ்வரி உள்ளம் குளிர்ந்து போனது.

தொடர்ந்தது தனியா ஆவர்த்தனம். பின்பு மீண்டும் ஒன்று, இரண்டு கீர்த்தனைகள் பாடி முடித்து, ராக மாலிகையாக "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மாவை" பாடி  கச்சேரியை பூர்த்தி செய்தான். சபையினர் கரகோஷம் செய்தார்கள்.

 பின்பு கீழே இறங்கி வந்த சங்கர க்ருஷ்ணன் ம்ருதுளாவைபார்த்து "தேங்க்ஸ் ஃபார் கம்மிங். ஹவ் வாஸ் மை பெர்ஃபார்மென்ஸ்" என்று கேட்டான்.

 அதற்கு அவள் "வெரி குட்" என்று பதில் அளித்தாள். இதற்கு சங்கர க்ருஷ்ணன்"  ஐ நோ, யூ டோண்ட் வாண்ட் டு டிஸ்ப்ளீஸ் மீ. பட் ஐ திங்க் ஐ திங்க், எனி டே, யூ சிங் மச் மச் பெட்டர்"என்றான்.

இவர்கள் இருவரும் பேசுவதை ராஜேஸ்வரி சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தாள். சுப்புலஷ்மிக்கும் மனதிற்குள் "இந்த சிறு பொறி பெரும் தீயாக மாறுவதற்கு சாத்திய கூறுகள் உண்டு என்று தோன்றியது. ஆனால் மைதிலி இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தான்  தோன்றியது. பின்பு ராஜேஸ்வரி ம்ருதுளாவிடம்" உன் கச்சேரி அடுத்து எங்கே" என்று கேட்டாள். அதற்கு ம்ருதுளா "இன்னும் ஒண்ணும் தெரியல மாமி" என்றாள். பின்பு ராஜேஸ்வரி சுப்புலக்ஷ்மியிடம் நான் தங்கி இருக்கும் சொந்தக்காரர் வீட்டு நம்பரை கொடுத்து, "ம்ருதுளாவின் கச்சேரி அடுத்து எங்கேயாவது இருந்தால் தயவு செய்து எனக்கு சொல்லுங்கள். நாங்கள் இருவரும் வந்து கேட்க ஆவலாக இருக்கிறோம்" என்று கூறினாள். "ஆஹா. அப்படியே செய்கிறேன்" என்றாள்  சுப்பு லக்ஷ்மி. பின்பு ராஜேஸ்வரியிடமும், சங்கர க்ருஷ்ணனிடமும் விடைபெற்று கொண்டு

மூவரும் வீடு திரும்பினார்கள்

No comments:

Post a Comment